Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 23

23

பரிதவிக்க வைத்தாய்
அச்சிறு வலியில் மீப்பெரும் நினைவுகள்
இருந்து முன் அக்கோண வாயோர 
புன்னகையில் பெருக தொடங்கி விடுகிறது
பெரு நதியின் கிளையொன்று

 

 

 

 

“என்னடி இவளுக்கு பின்னால் இவ்வளவு பெரிய கதை இருக்குது.. அவளும் விச நாகமாக எச்சை துப்பிக்கிட்டு இருக்கிறாள்.. இவளைப் போய் சின்னப் பொண்ணுன்னு சொல்றியே..?”

“எனக்கென்னவோ சில நேரம் அவள் அப்படித்தான்டி தோணுகிறாள்.. பின் விளைவுகள் அறியாத சிறு குழந்தையாக..”

“முட்டாள் உன்னோட தயாள குணத்தையெல்லாம் படிக்கும் போது நம் காலேஜில் ப்ரெண்ட்ஸ்சுக்களுக்கு இடையில் மட்டும் வைத்துக் கொள்.. இது உன் வாழ்க்கை, இங்கே கொஞ்சம் நழுவ விட்டாலும் உன் எதிர்காலமே போய்விடும்..”

“நான் என்னடி செய்வது..?” தோழிகளின் அதீத கரிசனத்தில் மைதிலி குழம்பிவிட்டாள்.. ஏற்கெனவே அடிச்சகதியாய் தெளிவற்று குமுறிக் கிடந்த அவள் மனம் அடி ஆழ அழுக்கு மேலெழும்பி அவளைக் குழப்பியது..

“அவள் சின்னப் பெண்ணாக உன் கண்ணுக்குத்தான் தெரிகிறாள்.. எங்களுக்கு வளர்ந்த எருமை மாடாகத்தான் தோணுகிறாள்..”

“ஆமாம் முட்டுவதற்கு தயாராக காலை உதைத்துக் கொண்டிருக்கும் எருமை மாடு..”

“தள்ளி தள்ளி நிறுத்தினாலும் அத்தை மகள் உறவு உறவுதான்..”

“அதிலும் இவள் உன் கணவருக்கு முன்பே திருமணம் பேசப்பட்டவள் கூட.. அதனால் நீ அவளிடம் ஜாக்கிரதையாக இரு..”

“எவ்வளவு சீக்கிரம் அவளை இந்த வீட்டை விட்டு அனுப்புகிறாயோ, அவ்வளவு நல்லது உனக்கு..”

மாற்றி மாற்றி தோழிகள் பேசிய பேச்சுக்களை கலக்கத்தோடு கவனித்து வந்த மைதிலி இப்போது புன்னகைத்தாள்..




“என்னுடைய ஐடியா கூட அதுதான்டி.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அவளை இந்த வீட்டை விட்டு அனுப்புவது.. அது பெரிய சிரமமும் இல்லை.. வயதுப் பெண்ணான அவளுக்கு திருமண பேச்சை வீட்டிற்குள் கொண்டு வந்து விட்டால், அவளை மணம் முடித்து கொடுத்து வேறு வீட்டிற்கு அனுப்பித்தானே ஆகவேண்டும்..”

உணர்ச்சிவசப்பட்டு மைதிலி பேசிய பேச்சிற்கு பக்க மேளம் போல் காலிங்பெல் அலறியது.. சாப்பிட்டு முடித்து விட்டு அவர்கள் மூவரும் வீட்டின் முன் ஹாலில் உட்கார்ந்து சிறிய குரலில் பேசியபடி இருந்தனர்..

தங்கள் தோழியின் புத்திசாலித்தனத்தை பாராட்டி சௌமியாவும், சுமதியும் அவளுக்கு சூப்பர்டி, அசத்திட்ட என கை கொடுக்க, பெருமிதமாய் தோழிகளின் பாராட்டுகளை தலை சாய்த்து வாங்கிக் கொண்டு எழுந்து போய் வாசல் கதவை திறந்தாள் மைதிலி..

வர்தா புயல் போல் உள்ளே வந்தான் பரசுராமன்.. வந்த வேகத்தில் பளாரென அவள் கன்னத்தில் அறைந்தான்..

“என்ன சாப்பாடு கொடுத்து விட்டிருந்தாய்..? வாயில் வைக்க விளங்கலை..”

மைதிலிக்கு ஒன்றும் புரியவில்லை.. அடிவாங்கிய கன்னத்துடன் விழித்தாள், சுமதியும், சௌமியாவும் அதிர்ந்து எழுந்து நின்றனர்..

“சா.. சாப்பாடு நல்லாத்தானே இருந்தது..”

“பதிலுக்கு பதில் பேசுகிறயா.. நாய்களுக்கு சாப்பாடு போட்டு, அதில் மீதியை எனக்கும் கொடுத்து விட்டாயா..?” அடுத்த அடி..

மைதிலியின் மூளை கலங்கி கண்கள் வடிந்தன..

“எக்ஸ்யூஸ் மீ சார்..” சுமதி மிதமிஞ்சிய அதிர்ச்சியில்  வார்த்தை வராமல் நிற்க, சௌமியா மெல்ல வாய் திறந்தாள்..

“ம்..” உறுமலாய் அவர்கள் பக்கம் கைகாட்டினான்.. அந்த ரௌத்ரத்தில் அரண்டு போய் நின்று விட்டனர் இருவரும்..

“வாசலில் நிறுத்தி வைத்த பைக்கை ஒழுங்காக துடைத்து வைக்க மாட்டாயா..? இதைக் கூட செய்யாமல் வீட்டில் என்னதான் வேலை பார்க்கிறாய்..? நல்லா தின்னுட்டு தின்னுட்டு தூங்குவாயா..?” அனல் துண்டுகளாய் வந்து விழுந்த வார்த்தைகளோடு பழுக்க காய்ச்சி இரும்பாய் அவனது கைகளும் அவள் கன்னத்தை மீண்டும் மீண்டும் தீண்டின..

உடல் நடுங்க மைதிலி கீழே சரியப் போக தோழிகள் அவளைத் தாங்க வர, பரசுராமன் அவர்களை நோக்கி விரல் சொடுக்கினான்..

“எங்கள் குடும்ப விசயம்.. உங்களுக்கு தலையிட உரிமை கிடையாது.. நீங்கள் இரண்டு பேரும் தயவுசெய்து..” முடிக்காமல் வாசல் கதவை காட்ட, சுமதி அழவே ஆரம்பித்து விட்டாள்.. சௌமியா அவள் கையை பற்றி இழுத்தபடி வெளியேறினாள்..

நிற்க முடியாமல் சுவரில் சாய்ந்து நின்ற மைதிலியை திரும்பி பார்த்து “உள்ளே போ” உறுமினான்.. நடுங்கிய கால்களுடன் உள்ளே போனவள் பக்கவாட்டில் பார்வை போன போது அங்கிருந்த சன்னலில் சலனத்தை உணர்ந்தாள்.. உள்ளறை சன்னல் அது.. அங்கிருந்து யாரோ.. யாரோ என்ன.. அந்த வந்தனாதான் வேடிக்கை பார்த்திருக்கிறாள்..

இவ்வளவு நேரம் பட்ட அவமானத்தை விட இப்போது அதிக அவமானமாக இருந்தது மைதிலிக்கு.. உடம்பெல்லாம் எரிய கண்கள் சொருகி மயக்கம் வரும் போலிருக்க உள்ளே போய் படுக்கையில் விழுந்தாள்.. முதலில் சிறிது நேரம் நடந்தது எதையுமே அவள் மூளை ஏற்றுக் கொள்ள மறுத்து முரண்ட, எந்த பிரக்ஞையும் இன்றி படுக்கையில் கிடந்தாள்.

சிறிது நேரம் கழித்தே அவளது உணர்வுகள் செயல்பட ஆரம்பிக்க, நடந்த சம்பவங்களை மீண்டும் யோசிக்க ஆரம்பித்தாள்.. முதலில் அவள் மன கவனத்திற்கு வந்தது அவள் பேசிய அதீத பேச்சுக்கள்தான்.. தவறு.. நான் பேசியது மிகவும் தவறு.. தன்னைத் தானே மிகக் கடிந்தாள்… தன் பாரங்களை பகிர்ந்து கொள்ள ஆளில்லாமல் இருந்தவள், ஒத்த மனமுடைய தோழமை பேச்சுக்களை கேட்கவும் தன்னை மறந்து உணர்வுகளை கொட்டிவிட்டாள் போலும்.. எப்படியாவது தான் பேசியது தவறு.. என தனக்கான தீர்ப்பை வழங்கியவள், அடுத்து தன் கணவனிடம் வந்தாள்..

விளக்கம் சொல்லாமலேயே நன்கு தெரிந்தது.. அவன் அவர்களது தரமற்ற பேச்சுக்களை கேட்டு விட்டான் என்று.. எந்த ஆண் மகனுக்கும் இந்த நேரம் கோபம் வருவது இயல்புதான்.. ஆனால் அந்த கோபத்தை அடுத்தவர் முன் இப்படி கட்டிய மனைவி மேல் காட்டுவது என்றால், மைதிலிக்கு உறுத்தியது வேறு எதற்கோ சேர்த்து வைத்திருந்த கோபத்தை இப்போது வெறியோடு மேலே இறக்கியது போல் இருந்தது.

இல்லை இது தவறு.. நான் செய்தது எந்த அளவு தவறோ.. அதே அளவு அவன் செய்ததும் தவறுதான்.. ஆனால் இதனை அவனுக்கு விளக்குவது யார்..? வேறு யாரும் வேண்டாம்.. நானே விளக்கம் சொல்கிறேன்.. எனது விளக்கங்களையும், அவனது செயல்பாடுகளையும் இருவருமாகவே பேசி தீர்ப்போம்..

அத்தோடு வந்தனா பற்றிய அவனது கருத்துக்களையும் நான் அவனிடம் தெளிவு பெற வேண்டும்.. திருமணம் முடிந்த உடனேயே பேசித் தெளிந்திருக்க வேண்டிய விசயங்கள்.. சூழல் அமையாததால் முடியவில்லை.. இன்று இருவருமாக நிச்சயம் பேசி  தீர்க்கத்ான் போகிறோம்..




கணவனின் அரக்கத்தனம் கன்னங்களில் தங்கி இருந்தாலும், தனது அநீதியை சுட்டிய மைதிலியின் மனது உடனேயே கணவனுக்கான நீதியையும் கூடவே சுட்டியது.. எனவே கணவனின் அராஜகத்திலிருந்து விரைவிலேயே வெளியே வந்துவிட்ட மைதிலி, சீக்கிரமாக தனது வேலைகளை முடித்துக் கொண்டு தங்கள் படுக்கை அறைக்கே வந்து கணவனுக்காக காத்திருக்க தொடங்கினாள்..

வீட்டை விட்டு வெளியேறிய சுமதியும், சௌமியாவும் எல்லையற்ற ஆத்திரத்தில் இருந்தனர்.. எதிரில் யார் வந்தாலும் குதறும் மனநிலையில் இருந்தவர்களின் முன் வரமாக வந்து மாட்டினான் ரவீந்தர்..

“ஹாய் எங்கே இந்தப் பக்கம்..? அண்ணியை பார்க்க வந்தீர்களா..? எங்கள் வீட்டிலிருந்தா வருகிறீர்கள்..?”

கொஞ்ச நாட்கள் கழித்து சந்தித்த தோழிகளை ஆவலுடன் வரவேற்றான் ரவீந்தர்.

“அண்ணியா..? இப்போது மைதிலி உனக்கு அண்ணியாக மட்டும்தான் இருக்கிறாளா..?” சுமதி சீறினாள்..

“என்ன சொல்ற சுமதி..? புரியலை..”

“உனக்கு புரியாதுடா.. நீயெல்லாம் ஆணாதிக்க சாதி.. பிறக்கும் போதே பொண்ணுங்களை எப்படி வதைக்கலாம்னு திட்டம் போட்டுட்டே பிறக்கிறவர்கள் நீங்கள்.. ஒரு அப்பாவி உங்கள் கையில் மாட்டினால் சின்னா பின்னமாக்கி விடுவீர்கள்..”

“சுமதி சத்தியமாக புரியவில்லை.. எங்கள் வீட்டில் ஏதோ பிரச்சினைன்னு தெரியுது.. என்னவென்று ப்ளீஸ் சௌமியா நீயாவது சொல்லேன்..”

“டேய் வேண்டாம்.. என் வாயைக் கிளறாதே.. நல்ல வார்த்தை வராது.. கெட்ட கெட்ட வார்த்தையாகத் தான் வரும்.. உனக்கு நாக்கை பிடுங்கிட்டு சாகலாமான்னு இருக்கும்.. எப்போதும் எனக்கு உன் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கும்டா.. அதற்கு காரணம் கேர்ள்ஸ் மேல் நீ காட்டும் அக்கறை, பரிவு.. நம் காலேஜ் கேர்ள்ஸ் எல்லோருமே என்ன பிரச்சனை என்றாலும் உன்னிடம் தானே ஓடி வருவோம்.. நீயும் பெரிய ஹீரோ மாதிரி அதை முன் நின்று தீர்த்து வைப்பாய்.. பிறகு அந்த பொண்ணுங்க எல்லோரும் உன்னை நினைத்தே கலர் கலர் கனவுகளாக கண்டு கொண்டிருப்பார்கள்.. இப்போது தெரிகிறது.. அது எல்லாம் நடிப்பு என்று இப்போது சொல்கிறேன் கேட்டுக் கொள் இந்த உலகத்தில் நான் வெறுக்கும் ஒரே ஆள் இந்த நிமிடம் நீதான்..”

சௌமியா குமுறிக் கொட்டும் வரை இடையிடாமல் மௌனமாக கேட்டு நின்றான் ரவீந்தர்.. பிறகு வாய் திறந்தான்..

“மைதிலிக்கு என்ன பிரச்சினை..?” அவனது முகமும்.. அவர்களின் முகத்திற்கு ஈடாக கலங்கியிருந்தது.

“உன் அண்ணன் அவளை எங்கள் கண் முன்பாகவே மாட்டை அடிப்பது போல் அடிக்கிறார்டா.. சை என்ன மனித ஜென்மங்கள்டா நீயும் உன் குடும்பமும்..” பெண்கள் இருவரும் அவன் முகத்தில் காறி உமிழாத குறை..

ரவீந்தர் கண்களை இறுக மூடி நின்று அவர்கள் சொன்ன செய்தியை மெல்ல தனக்குள் ஜீரணித்தான்.

“அண்ணாவா..? அப்படி..?” அவன் இதழ்கள் முணுமுணுத்தன..

“உன் அண்ணாவிற்குத்தான் நான்கு நண்பர்கள் சேர்ந்து பேசினால் பிடிக்காதே, தாலி கட்டிய ஐந்தாவது நிமிடமே ஒன்றாக சேர்ந்து கூத்தடிக்காதீர்களென வைதவர் ஆயிற்றே.. இன்றும் அதே திமிர்.. தெனாவெட்டுடன் நாங்கள் பார்க்க பார்க்க அவளை அடிக்கிறார்.. திரும்ப.. திரும்ப..” பேச முடியாமல் இருவருமே விசும்ப ஆரம்பித்தனர்..

“இப்படி அடி வாங்குகிற பெண்ணாடா அவள்.. எவ்வளவு மென்மையானவள்.. தேவதை போல் போற்றி வைத்திருக்க வேண்டிய பெண்ணை மனுசியாகக் கூட மதிக்காமல் காலில் போட்டு மிதிக்கிறீர்களே..”

அவர்கள் குற்றச்சாட்டிற்கு ரவீந்தர் மெல்ல தலையசைத்தான்.

“உங்கள் எண்ணம்தான் எனக்கும் தோழிகளே.. மைதிலிக்கேற்ற இடம் எங்கள் வீடு கிடையாது என்ற எண்ணம் எனக்கும் உண்டு.. இந்த திருமணம் நடக்க கூடாது என்று நான் அதிகம் நினைத்திருக்கிறேன்.. ஆனால்.. சரி விடுங்கள்.. விதி வலியது.. இப்போது நீங்கள் சொல்வது போல் அண்ணா மோசமானவர் கிடையாது.. நான் அவரிடம் கேட்கிறேன்.. அவருக்கு ஏதாவது காரணம் இருக்கலாம்..”

“இருக்குமே பொண்டாட்டியை அடிக்க எல்லா ஆம்பளைக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும்.. ஏன்னா அவள்தான் திருப்பி அடிக்க மாட்டாளே.. அதனால் இல்லாத காரணங்களை உண்டாக்கி தாராளமாக கை நீட்டலாம்..”

“சௌமியா ப்ளீஸ் ரிலாக்ஸ்.. எனக்கு உன் நியாயம் புரிகிறது.. இது நடந்திருக்க கூடாது.. நடந்து விட்ட பிறகு அதை சரிப்படுத்துவது என் கடமை.. நிச்சயம் இதனை நான் சரி செய்கிறேன்.. நீங்கள் என்னை நம்புங்கள் ப்ளீஸ்..”

சமாதானமாக நீட்டிய அவன் கையை பட்டென அடித்து தள்ளினாள் சௌமியா..

“போடா நீயும் உன் சமாதானமும்.. போய் முதலில் உன் வீட்டை சரி பண்ணு.. பிறகு எங்களிடம் வா.. வாடி போகலாம்..” கண்களை துடைத்தபடி ஸ்கூட்டியை 
ஸ்டார்ட் செய்தாள்..

“மைதிலியை உன் அண்ணியாக நினைக்காதே ரவி.. உன்னால் நீதி சொல்ல முடியாது.. உன் சக தோழியாக நினைத்து அவளுக்கான நியாயத்தை சொல்லு..” ஸ்கூட்டியின் பின் சீட்டில் ஏறிக்கொண்டு சுமதி அவனை எச்சரித்தபடி போனாள்..

ரவீந்தர் கொந்தளிக்கும் மனதுடன் தான் வீட்டிற்கு போனான்.. அவனது வீடு மிக அமைதியாக புத்த விகாரம் போல் இருந்தது.. ஏன் இத்தனை அமைதி.. யோசனையுடன் உள்ளே வந்தவனின் கண்களில் மைதிலி பட்டாள்..

அவள் பக்தியுடன் பூஜையறையில் விளக்கேற்றிக் கொண்டிருந்தாள்.. ஞானம் பெற்ற புத்தபிட்சுவின் அமைதி நிலை அவள் முகத்தில் இருந்தது..




“மைதிலி” அவன் அழைப்புக்கு கேள்வியாய் நிமிர்ந்து பார்த்தாள்..

“சுமதியையும், சௌமியாவையும் வழியில் பார்த்தேன்.. அண்ணன் உன்னை அடித்தாரா..? உங்களுக்குள் என்ன பிரச்சினை..?”

மைதிலி நிதானமாக கடவுளுக்கு தீபாராதனை முடித்துவிட்டு அவனுக்கு நீட்டினாள்..

“உங்க அண்ணன் அடித்தாரா..? இல்லையே.. எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.. நாங்கள் நன்றாக இருக்கிறோம்..” தெளிவான வார்த்தைகளோடு மிகத் தெளிவான புன்னகை அவளிடமிருந்து.. ரவீந்தர் உறைந்து நின்றான்.

மேலே அவன் என்ன செய்வது..? அண்ணனிடம் நேரடியாக உன் பொண்டாட்டியை அடித்தாயா.. எனக் கேட்க முடியாது.. அது முறையற்றது.. அப்படியே கேட்டாலும், இந்த மைதிலியே வந்து நின்று அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லையென சூடம் அணைப்பாள் போலவே.. ரவீந்தர் செய்வதறியாது குழம்பி நின்றான்.

மைதிலி தன் அன்றாட வேலைகளை முடித்து விட்டு அன்று வந்தனா அறைக்கு போகாமல் தங்கள் அறையிலேயே பிசகுகளையும், பிணக்குகளையும் பேசித் தீர்க்கும் ஆவலுடன் கணவனுக்காக காத்திருந்தாள்.

What’s your Reaction?
+1
7
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

8 Comments
Inline Feedbacks
View all comments
Deepa lakshmi
Deepa lakshmi
3 years ago

Sollamal thotu selum thendral remaining epsodes and mailadu solailae remaining episodes update pannunga

Kiruthika
Kiruthika
3 years ago

சொல்லாமல் விட்டு சென்ற தென்றல் நாவலின் 24 – பகுதியிலிருந்து மீதி உள்ள கதை தயவு செய்து அப்லோட் செய்ய வேண்டும் please

Rajalakshmi puducherry
Rajalakshmi puducherry
3 years ago

Nice story mam. Plz complete all episode mam Plz Plz Plz

10
1
Priya babu
Priya babu
4 years ago

Super sis.arumaI.nxt ud eppo

3
1
Uma
Uma
4 years ago

some novels r not yet finished….so plz update that novels…..this novel also not finshed…

Mai
Mai
4 years ago

Update plzz

Komathi Rameshkumar
Komathi Rameshkumar
4 years ago

மைதிலியை போல் பெண்கள் தங்கள் பேச்சை ஆராய்வதில்லை .மைதிலி சொன்னால் பரசு கேட்பானா?

Sarojini
Sarojini
4 years ago

என்ன பரசு இப்படி நடந்து கொண்டான்?
மைதிலி நீ நினைத்தது உங்களின் அறையில் நிறைவேற வாய்ப்பு இருக்கிறதா?

அருமையான, மனதினை அசைத்த பதிவு!!!

4
1
8
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!