Serial Stories நந்தனின் மீரா

நந்தனின் மீரா-24

24

இன்னதென்ற வரைமுறையற்று
காலையிலிருந்து முறைத்துக்கொண்டு திரிகிறாய்,
சரிதான் போடா ….
முரட்டு சிறகை மூக்கால் கோதி
மடியிறுத்தும் சூட்சுமம்
தெரியாதவளா நான் ????

ம் ..இப்போ சொல்லு ….” மீரா ஊட்டிய இட்லியை வாயில் வாங்கியபடி கேட்டார் பாட்டி .

தன்னுடைய செய்கையை மனைவி பார்த்துவிட்டாளோ …சந்தேகத்தோடு அவளை பார்த்தான் .

” அவள் கவனிக்கவில்லை .நீ சொல்லு …” அதிரடியாக வெடித்தார் பாட்டி .

” பாட்டி …வந்து ….” மேலே பேச முடியாமல் தொண்டையை செருமிவிட்டு மௌனமானான் .

” அம்மாடி மீரா …உன் புருசனுக்கு பேச்சு மறந்துடுச்சு போல , இரண்டு வார்த்தைக்கு மேல் பேச்சு வரலை .எதற்கும் உன் முந்தி நுனியை அவன் கையில் கொடுத்து பாரேன் …'”

” எதற்கு பாட்டி …? ” மீரா புரியாமல் கேட்க …

” பாட்டி ….” பல்லை கடித்தான் நந்தகுமார் .

” நீதான் பேச மாட்டேங்கிறியேடா …அதுதான் அப்படி சொன்னேன் …”

” என்ன பாட்டி அவர் முக்கியமான விசயம் பேச வந்திருக்கிறார் .நீங்கள் அவரை காரணமில்லாமல் கிண்டலடித்து கொண்டிருக்கறீர்கள் ….” மீரா குறைபட்டாள் .

” உன் புருசனை நான் கிண்டலடிக்க முடியுமாம்மா …அதுவும் உன்னை பக்கத்தில் வைத்துக்கொண்டு .இதற்கெல்லாம் பயந்துதானே அவன் உன்னை முன்னால் விட்டு பின்னால் வந்தான் ….”

” போதும் பாட்டி நான் அக்காவை பற்றி பேச வந்தேன் …”

” ம் …சொல்லு ..அந்த பொண்ணை பற்றி விசாரித்து விட்டாயா …? “

கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டார்கள் .நீ சொன்னாயா …என பரஸ்பரம் பார்வையால் விசாரித்து கொண்டார்கள் .

” வெளியே போய் அலைந்து திரிந்து விசாரிக்க வேண்டியதில்லைடா .ஒருத்தர் மொகரைகட்டையை வைத்தே அவங்க மனக்கஷ்டத்தை கண்டுபிடிச்சுடுவேன் …பிரவீணா வாயே திறக்கலைன்னாலும் அவள் கஷ்டம் இதுவாகத்தான் இருக்கனும்னு முதல்லயே ஊகிச்சிட்டேன் ….”




” அதே பிரச்சினைதான் பாட்டி . இப்போ என்ன பண்றது …? “

” பிரச்சினையைத்தான்டா என்னால் கண்டுபிடிக்க முடியும் .தீர்வை ..எல்லோரும் சேர்ந்துதான் கண்டுபிடிக்கனும் .திவ்யா , சசி , மாளுவை விட்டுட்டு வீட்டில் எல்லோரையும் கூட்டுங்க பேசி முடிவெடுப்போம் ….”

” பாட்டி ….அம்மா ….கேட்டதும் ரொம்ப கஷ்டப்படுவாங்க …” நந்தகுமார் தயங்கினான் .

” உன் அக்காவை விட பெரிய வேதனையா …உன் அம்மாவோடது …போடா …போய் எல்லோரையும் கூட்டிட்டு வா .சும்மா …சும்மா அம்மா …” பாட்டி அதட்டினாள் .

வாயை மூடி சிரித்த மீராவை முறைத்தபடி போனான் நந்தகுமார் .

” நீங்க சொல்றது சரிதான் பாட்டி .அவர் சரியான அம்மாபிள்ளை …”

” அதில் தப்பில்லை மீரா .அவனது அந்த அம்மா பாசம்தான் அவனை அந்த மிருணாளினியிடமிருந்து காப்பாற்றி உன்னை கல்யாணம் முடிக்க சம்மதிக்க வைத்திருக்கிறது ….”

ஆமாம் அதே அம்மா பாசம்தான் காதலியை நெஞ்சில் வைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு மனைவியுடன் வாழ ஆரம்பிக்கலாமென்ற முடிவையும் எடுக்க வைத்திருக்கிறது …தனக்குள் சொல்லிக்கொண்டாள் மீரா .

” உனக்கு ஒண்ணு தெரியுமா மீரா .எந்த ஆம்பளை அம்மா கோண்டுவா இருக்கானோ , அவனை எளிதாக பொண்டாட்டி அவள் பக்கம் திருப்பிக்கொள்ளலாம் .ஏனென்றால் அம்மாவோ …மனைவியோ ..ஏதோ ஒரு பெண்ணின் வருடல் இல்லாமல் அந்த ஆம்பளையால் வாழ்நாளை தள்ள முடியாது .அம்மாவுக்கு ஆமா சாமி போடுற ஆம்பளைங்கெல்லாம் சீக்கிரமே  பொண்டாட்டிக்கும் தலையாட்ட ஆரம்பிச்சுடுவாங்க ….”

” ம்க்கும் …உங்க பேரன் தலையாட்டிட்டாலும் …ஒரு பொண்ணுக்கு தலையாட்டுறவரா இவர் …? ” மனதிற்குள் சொல்லிக்கொண்டவள் ….

” ஆனால் மாமா இன்னமும் உங்களுக்குத்தான் தலையாட்டிக் கொண்டிருக்கிறார் பாட்டி …” கிண்டல் போல் குத்தினாள் .

” என் மகனா …? எனக்கு தலையாட்டுறானா …? அப்படி ஆட்டினால்தான் பிரச்சினை இல்லையே .சில தலைகள் எந்தப் பக்கமும் ஆடாது .இந்த குரு அப்படி ….” சலித்துக்கொண்ட பாட்டியிடம் நம்பிக்கையில்லை மீராவிற்கு .

பத்தே நிமிடங்களில் வீட்டினர் அனைவரும் கூடிவிட …

” பிரவீணா நீ சொல்கிறாயா …? நான் சொல்லவா …? “பாட்டியின் கேள்விக்கு தலைகுனிந்தாள் பிரவீணா .

” நம்ம பிரவீணா வாழ்க்கையில் இன்னொரு பொண்ணு நுழைஞ்சிருக்கா ….”

” அம்மா …” குருநாதன் அதிர …




” என்னத்தை ….எனக்கு புரியலை …? ” சுந்தரி .

” ம் …உன் மாப்பிள்ளை உன் பொண்ணுக்கு போட்டியா ஒரு பொம்பளையை வச்சிருக்கான் …”

” பாட்டி …இதை அம்மாவிடம் இப்படி கடுமையாகவா சொல்வீர்கள் …? ” நந்தகுமார் ஆதரவாக தாயை அணைத்துக்கொண்டான் .

” உன் அம்மாவுக்கு இப்படி உச்சந்தலையில் அடிச்சாத்தான் புரியும்டா …” பாட்டி இரக்கமின்றி சொல்ல , அலறி திகைத்து அழும் மாமியாரை பார்க்க மீராவிற்கு பாவமாக இருந்தது .

பரிதாபமான மருமகளின் பார்வையில் கூசிய சுந்தரி ” உள்ளே போய் வேலையை பாரேன் இங்கே நின்று ஏன் வாய் பார்க்கிறாய் ..? ” எரிந்து விழுந்தாள் .

மீராவின் முகம் வாட ….

“அவளை எங்கே போகச்சொல்கிறாய் ..? அவள்தான் உன் மகளோட வாழ்க்கை அவலத்தை கண்டுபிடிச்சு வந்து சொல்லியிருக்கிறாள் …” பாட்டி அதட்டினாள் .

அப்படியா எனக் கேட்ட தாய்க்கு ஒப்புதலாய் தலையசைத்தான் நந்தகுமார் .

இல்லையென்ற ஒரு சொல்லை தன்னிடம் எதிர்பார்த்து நோக்கும் தாயையும் ,தந்தையையும் ஏமாற்றி  பிரவீணா இறுகி போய் அமர்ந்திருந்தாள் .

” மூன்று வருடங்கள் ….என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன் …”

மகளின் துக்கத்தில் உடைந்த சுந்தரி அவளை அணைத்துக் கொண்டு அழத்துவங்க ,

” ஏன்மா முதலிலேயே சொல்லலை …? ” குருநாதன் பல்லை கடித்தார் .

” இதோ இப்படி பல்லை கடித்து பொங்குகிறாயே , அதற்கு பயந்துதானடா .சரி விடு .இப்போதான் தெரிஞ்சிடுச்சே , இனி என்ன செய்ய போகிறாய் …? “

” இப்போவே போய் அவனை என்னன்னு கேட்கிறேன் …? ” வேகமாக கிளம்பியவரை …

” போய் கேளு .ஆனால் நீ மட்டும் போகாதே .துணைக்கு ஆட்களை கூட்டிட்டு போ .வாயால மட்டும் பேசு …” பாட்டி வழி சொல்லிக் கொடுத்தார் .

” ஆமாம் ..நந்து வாடா நாம் போய் பேசிவிட்டு வரலாம் …”

” நந்துவா …அவன் எதற்கு ..? சின்ன பையன் …யாராவது பெரிய மனுசனை கூட்டிட்டு போய் பேசு …”

” யாரைம்மா சொல்கிறீர்கள் …? ” குருநாதன் குழம்ப …

” இதோ இவள் அண்ணனைத்தான் .அவன்தானே இவளுக்கு தாய்மாமன் .உனக்கடுத்ததாக அவனுக்குத்தான் கேட்கும் உரிமை இருக்கிறது ….”

” என்னது …? இவள் அண்ணனிடமா …? நான் போய் நிற்பதா …? ,”

” நீதான்டா ..உன் மச்சானைத்தான் …” பாட்டி அழுத்தி சொல்ல …

” அதற்கு வேறு ஆளை பாருங்க .அவன் வீட்டில் போய் நான் நிற்கமாட்டேன் ….” துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு குருநாதன் எழுந்து போய்விட்டார் .

பார்த்தாயா …என் மகனை …என் பேச்சை எங்கே கேட்கிறான் …? மீராவிடம் கண்ணால் கேட்டார் பாட்டி .

இதென்ன மகள் வாழ்க்கையை விட மாமனாருக்கு சுயகௌரவமா பெரிது …மீரா வருந்தினாள் .

” நான் கூப்பிட்டால் அண்ணா வருவார் …” சுந்தரி வேகமாக போன் எண்ணை அழுத்தினாள் .

சொன்னது போன்றே தங்கையின் ஒரே போன் அழுகைக்கு ஓடி வந்தார் சண்முகசுந்தரம் .பிரச்சினையை கேட்டு உள்ளம் கொதித்தார் .அறையினுள் முகம் திருப்பி அமர்ந்து கொண்டிருந்த குருநாதனிடம் போய் தானே தாழ்ந்து பேசி அவரையும் அழைத்துக் கொண்டு குமரேசனை பார்க்க கிளம்பினார் .

ஆனால் போன காரியம்தான் நிறைவேறவில்லை .




What’s your Reaction?
+1
23
+1
28
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
12 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!