Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று- 9

9

விளக்கங்கள் தேவைப்படாத
அந்த மாரி மாலைதான் 
இப்போதும் என்னுள் 
பொழிந்து கொண்டிருக்கிறது 
விளக்கி சொல்லிய நீதான் 
கதிர் வெம்மை காலத்திற்குள் 
புகுந்து கொண்டுள்ளாய் .

சண்முகபாண்டியன் கையிலிருந்த ஏதோ ஒர் பைலில்  ஆழ்ந்திருக்க , சௌந்தர்யா சன்னல் கண்ணாடி மேல் சாய்ந்து தூங்கியிருந்தாள் .சுகுமார் காதில் இயர் போனை மாட்டிக் கொண்டு பின்னால் சாய்ந்திருந்தான் .பாட்டு கேட்கிறானோ …? தூங்குகிறானோ …?

சாத்விகா மெல்ல விழிகளை சுழற்றி அந்த விமானத்தினுள் ஆராய்ந்தாள் ்பெரும்பாலும் , தூங்கிக் கொண்டிருந்தனர் .போனை பார்த்துக் கொண்டிருந்தனர் . பாட்டு கேட்டு , புத்தகம் படித்து கொண்டிருந்தனர் .இரண்டு வரிசைகள் தள்ளி அமர்ந்திருந்த வீரேந்தர் மடியில் லேப்டாப்பை வைத்து ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான் .

சாத்விகா மெல்ல எழுந்து போய் அவனருகில் காலியாக இருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டாள் .

” என்ன ….? ” தலையை நிமிராமல் கேட்டான் .

” எனக்கு பதில் சொல்லாமலேயே போய்விட்டீர்களே …? ‘ 
” எதற்கு பதில் …? “

” சுகுமாரை திருமணம் செய்து கொள்ளவா …என்று கேட்டேனே …”

” உன் அப்பாவிடம் கேட்க வேண்டிய கேள்வி …”

” அப்பா சம்மதித்துதானே இந்த கல்யாண ஏற்பாடுகளை செய்திருக்கிறார் .”

” பிறகென்ன …? ஏன் இப்படி கேட்கிறாய் ..? “

” எனக்கென்னவோ …சிறு நெருடல் அவ்வப்போது தலை காட்டுகிறது …”

ஒரு நிமிடம் கீ போர்டில் தயங்கிய அவனது விரல்கள் பிறகு தயக்கமின்றி தொடர்ந்தன.

” அதனால் ….”

” சுகுமார் அப்பாவின் தங்கை மகன் .அந்த பாசத்தில் ஏதாவது குறையிருந்தாலும் அப்பாவிற்கு அது தெரியாமல் இருக்கலாம் அல்லவா …? “

” அதனால் …? “

” அண்ணனிடமோ , அம்மாவிடமோ இதை நான் சொல்ல முடியாது .அவர்களுக்கு அப்பா எது செய்தாலும் சரி …”

” அதனால் …? “

” பாட்டியிடம் மறுத்து ஒரு வார்த்தை கூட என்னால் பேச முடியாது …தலையிலேயே கொட்டுவார்கள் …” தலையை தடவிக் கொண்டாள் .

” அதனால் …? “

” நாலாவது தடவை …இந்த அதனால் .ஏன் சார் இப்படி பண்றீங்க …? இதுக்கு எந்திரிச்சி போடின்னு சொல்லிடுங்க …”




” எந்திரிச்சி போடி ….” லேப்டாப்பை விட்டு கண்களை அகற்றாமல் சொன்னான் .

” என்ன ” டி ” யா ….? ” உயர்ந்து விட்ட அவள் குரலுக்கு நிமிர்ந்து தன் உதட்டின் மேல் விரலை வைத்து ” உஷ் ” என்றான் .

உதட்டை பிதுக்கிக் கொண்டு கோபமாக அவனை பார்த்துக் கொண்டருந்தவளை பார்த்ததும் …” சரி சொல்லு …நான் என்ன செய்ய வேண்டும் …? ” என்றான் .
” அப்பாவின் முடிவு சரிதானா என்று நீங்கள்தான் விசாரித்து ….”

” நோ பேபி …எனக்கும் உன் அப்பா எது செய்தாலும் சரிதான் . அவர் ஒரு முடிவெடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும் ….”

” இருக்கட்டும் .ஆனால் என் திருப்திக்காக நீங்கள் ஒரு முறை சுகுமாரை என் அத்தை குடும்பத்தை விசாரித்து வந்து சொல்லுங்களேன் ….”

பதிலின்றி லேப்டாப்பில் ஆழ்ந்திருந்தான் .

” ப்ளீஸ் ….”

” ம் …பார்க்கிறேன் .இப்போது நீ போ …” லேப்டாப்பை சட் டவுன் செய்துவிட்டு பின்னால் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான் .

தன் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு சாத்விகா திரும்பி பார்த்த போது அவன் சன்னல் வழியே மேகங்களை வெறித்து கொண்டிருந்தான் .

————

” அப்பா காலேஜில் என்னை இரண்டு பசங்க கிண்டல் பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள்பா ….,” கொஞ்சல் குரலில் அப்பாவிடம் தெரிவித்தாள் சாத்விகா .

” அப்படியா பேபி .நீயும் பதிலுக்கு கிண்டல் பண்ணிவிடேன் …சாம்பார் ஊற்று சௌந்தரி ….” நிதானமாக அடுத்த இட்லிக்கு போன தந்தையை முறைத்தாள் .

” அப்பா …நான் …உங்கள் மகள்பா …என்னை பசங்க கிண்டல் பண்றாங்கன்னு சொல்றேன் ….” அழுத்தி கூறினாள்.

” காலேஜ் லைப்பில் இதெல்லாம் சாதாரண விசயம் பேபி .பேசாமல் என்ஜாய் பண்ணிவிட்டு போடாம்மா …”

” சை …நீங்களெல்லாம் ஒரு அப்பா …”

” சரிடா …இன்று போகும் போது உன் அண்ணனையும் கூட  கூட்டிட்டு போ .கார்த்திக் பேபியை காலேஜில் கொண்டு போய் விட்டுட்டு வாடா …”

” அப்பா இவள் சொல்றதையெல்லாம் நம்பவா செய்றீங்க …? எவனாவது இவள் பக்கத்தில் வரமுடியுமா …? தி கிரேட் சண்முகபாண்டியனின் மகள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் …இவளாகவே கிட்டே எவனும் நெருங்கும் போதே ஆசிட் ஊத்துவாள் .பசங்க எல்லோரும் இவள் பக்கம் திரும்பவே பயந்து போய் பதுங்கி பதுங்கி நடக்கிறாங்க .நீங்க வேற ….இட்லி போதும்மா .தோசை ”  கார்த்திக் நிதானமாக சாப்பாட்டை தொடர்ந்தான் .

ரங்கநாயகியும் , சண்முகபாண்டியனும் சிரிக்க …சௌந்தர்யா சிரித்து விட்டு மகள் முறைக்கவும் வாயை பொத்திக் கொண்டாள் .

” அண்ணா வேண்டாம் என் விசயத்தில் தலையிடாதே ….”

” ஐய்யோ நிஜம்பா .நீங்கள் வேண்டுமென்றாலும் அவள் ஹேன்ட் பேக்கை செக் செய்து பாருங்கள் . ஆசிட் பாட்டில் இல்லைன்னா என் பெயரை மாற்றி வைத்து கொள்கிறேன் …பொண்ணைத்தான் பொறுக்கிங்க  கிண்டல் பண்ணுவாங்க. பொண்ணே பொறுக்கியா  இருந்தால் அவுங்க எப்படி பின்னால் வருவாங்க …? “




” டேய் அண்ணனாடா நீ …என் முதல் எதிரியே நீதான்டா …” எச்சில் கை என்று பாராமல் எழுந்து அண்ணனின் முதுகில் சப் சப்பென அறைய தொடங்கினாள் சாத்விகா .

” பாருங்க …பாருங்க .நான் சொன்னது சரியாப் போச்சில்லை .பொம்பளை ரவுடி …” தங்கைக்காக முதுகை குனிந்தபடி கார்த்திக் சொல்ல ….

அங்கே நின்றிருந்த வேலைக்காரி கையால் வாயை பொத்தியபடி உள்ளே ஓட …மற்ற அனைவரும் கட்டிப்பாடிழந்து சிரிக்க தொடங்க …

அந்த நேரத்தில்தான் வீரேந்தர் உள்ளே வந்தான் .அங்கே நடந்து கொண்டிருந்த கலாட்டாக்களினால் சிறிதும் பாதிக்கபடாது ” சார் உங்களுக்கு எட்டு முப்பதுக்கு அப்பாயின்மென்ட் ….” நினைவு படுத்தினான் .

அந்த வீடே கலகலத்துக் கொண்டிருந்த அந்த நேரமும் இறுக்கம் குறையாமலிருந்த அவன் முகத்தை பார்த்தபடி ” அப்பா உங்கள் டிரைவரை என்னுடன் இன்று அனுப்பி வையுங்கள் ” என்றாள் சாத்விகா .

What’s your Reaction?
+1
13
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Akal
Akal
1 year ago

Next epi enga kaanam

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!