Serial Stories vana malai pol oru kathal

வானமழை போல் ஒரு காதல் – 15

15

 

 

 

” ராதாவிடம் போய் என்ன பேசினாய்  ? ” ரௌத்திரமாக வந்து விழுந்தது தேவராஜனின் குரல்.

 

வாசுகி இப்போது இருந்த மனநிலைக்கு தேவராஜன் கேட்ட கேள்வி அவள் மூளையை எட்டவில்லை .இவன் இப்போது யாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறான்  ? அவள் புத்தியில் அப்போது ராதா இல்லவே இல்லை .அவள் எண்ணம் முழுவதும் சற்று முன் தான் உணர்ந்துகொண்ட விஷயத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தது.




 

” ராதாவா அவளிடம் நான் என்ன பேசினேன்நான் உங்களிடம் வேறு ஒன்று சொல்லவேண்டும் ” அவளது பேச்சை அவன் முடிக்க விடவில்லைஇல்லை ஆரம்பிக்கவே விடவில்லை.

 

” என்ன பேசுகிறாய்என்ன செய்கிறாய் என்ற ஸ்மரணை கூட இல்லாமல் போய்விட்டாய் அப்படித்தானே ? ”  எகத்தாளமாக  கேட்டான்.

 

” என்ன கேட்கிறீர்கள் தேவ் ? ” எனக்கு ஒன்றும் புரியவில்லை.

 

” ஐயோ பாரேன் வளர்ந்த ஆண் பிள்ளையை கட்டின புருஷனை எப்படி பேர் சொல்லி கூப்பிடுகிறாள் என்று  ” புதிதாக வந்த அந்தப் பெண் சற்று சத்தமாகவே முணுமுணுத்தாள்.

 

” மூளை குழம்பி பேசுறதுக்கு நாம் என்ன செய்யமுடியும் அக்கா ? ” மங்கையின் பதிலும் சத்தமாகவே இருந்தது .ஆனால் முணுமுணுப்பு என்று தோன்றும் படியாக.

 

இவர்களது வெளிப்படையான முணுமுணுப்பிற்கு வாசுகிக்கு  ஆத்திரம் வர தேவராஜனின் முகம் கன்றியது.

 

” உன் தோழி ராதாவின் வீட்டிற்கு போய் அவளையும் என்னையும் சேர்த்து தப்பாக பேசினாயா  ? இதற்கு மேலும் விளக்கமாக உனக்குச் சொல்ல எனக்கு தெரியவில்லை  ” வார்த்தை வார்த்தையாக தெளிவான விளக்கங்களுடன்

கொத்திக் குதறுவான் போல் நின்று இருந்தான் தேவராஜன்.

 

” அய்யய்யோ …” அந்தப் பெண்மணி பாவனையுடன் வாயை மூட

 

” அடப்பாவமே உள்ளே வரும்போதே இவள் மூஞ்சியே சரி இல்லை. தேவா நான் அப்போதே நினைத்தேன் இவள் ஏதோ ஏழரையை இழுத்துக் கொண்டு வந்திருக்கிறாள் என்று .இப்படி நம் குடும்ப மானத்தை ஏலம் விட்டு விட்டு வந்து இருக்கிறாளேஇந்த லூசை  வைத்துக் கொண்டு எத்தனை நாளைக்கு சமாளிப்பாய் தேவா ? “தாயின் புலம்பலில் தேவராஜனின் முகம் இறுகியது.

 

” அண்ணா எனக்கெல்லாம் நம் வீட்டில் இருப்பதற்கே பயமாக இருக்கிறது. எந்த நேரம் என்ன பேசுவார்களோ என்ன செய்வார்களோ என்று பயந்து பயந்து ஒவ்வொரு நிமிடத்தையும் தள்ளி கொண்டிருக்கிறேன் நான் ”  புகார் சொல்வதில் இணைந்து கொண்டாள் திலகா.

 




சுற்றியிருந்த அத்தனை புகார்களுக்கும் வாசுகி சிறிதும் அஞ்சவில்லை .அவளுக்குத்தான் இப்போது தெளிவு பிறந்து விட்டதே அந்த தைரியத்துடன் மீண்டும் கணவனை அணுகினாள்.”  ராதா விஷயத்தை விடுங்கள் .அது தவறுதலாக நடந்ததாகக் கூட இருக்கலாம் .இப்போது அன்று நீங்கள் கேட்டீர்களே ஆதாரம்அது எனக்கு கிடைத்திருக்கிறது ” 

 

” என்ன கேட்டேன் …? என்ன கிடைத்திருக்கிறது …? ” தேவராஜனின் குரலில் கொஞ்சமும் பொறுமை இல்லை.

 

” நமது திருமணத்திற்கு முன்பு உங்களிடம் சொன்னேனே அதற்கு …” வாசுகியின் அவசர பேச்சை கையை உயர்த்தி நிறுத்தினான் தேவராஜன்

 

” நம் திருமணத்திற்கு முன்பு நீ வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டிருந்தாய் .அந்த உளறல்களை எல்லாம் திரும்பவும் கேட்க நான் தயாராக இல்லை .இப்போது நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு .ராதாவிடம் ஏன் இப்படி முறைதவறி பேசினாய்பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் அவளை தவறாக நினைக்கும் படி செய்து விட்டு வந்து நின்று கொண்டிருக்கிறாய் ” 

 

” அது நீங்களும் ராதாவும் பேசிக்கொண்டே நடந்து போவதைப் பார்த்தேன் ..அதனால் ” 

 

” ரோட்டோரமாக ஒரு ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டு நடந்தால் அவர்களுக்கு இடையே தவறான தொடர்பு இருப்பதாக அர்த்தமாகி விடுமா சொல்லுடிவாசுகியின் தோள்களைப் பற்றி இறுக்கினான்

 

” இல்லவந்து …” தேவராஜனின் வேகத்தில் முழுதாக ஒரு வார்த்தை வாசுகியின் வாயிலிருந்து வர முடியாமல் தவித்தது.

 

” ப்ளீஸ் என்னை விடுங்கள்.. நான் என்னால் முடியவில்லை…”  வாசுகியின் கண்கள் சொருகிக் கொள்வதை பார்த்தவன் தனது அழுத்தத்தை நிறுத்தினான்.

 

” நாளைய உணவிற்கு என்னஎனும் கஷ்டத்தில் இருக்கும் ஒரு ஏழை குடும்பத்து பெண்ணை நீ காயப்படுத்தி விட்டு வந்திருக்கிறாய் .உன்னை என்ன செய்தால் தகும் ? ” செயலை நிறுத்தினானே தவிர சொல்லை நிறுத்தவில்லை.

 

வாசுகி கண்களில் கெஞ்சலுடன் அவனை பார்த்தாள் ” தப்புதான் ” முணுமுணுத்தாள்.

 

” தப்புதான் .நீ இல்லை ..நான் .நான் செய்தது எல்லாமே தப்பு தான் ” வெறுப்போடு வந்து விழுந்த அவனது வார்த்தைகளுக்கு வாசுகி பதறினாள்.

 

” இல்லை அப்படி இல்லை தேவ் நீங்கள்நாம் இருவருமே எந்த தவறும் செய்துவிடவில்லை .சிறு உணர்தல் பிழை அவ்வளவுதான். இதோ எனது பிழையை நானே இப்போதே சரி செய்து விடுகிறேன்  ” வேண்டலோடு அவன் கைப்பற்றினாள்.

 

” சொல்லித் தொலை. என்ன கண்றாவியாக இருந்தாலும் இப்போதே துப்பிவிடு… ” கடுமையான அவனது பேச்சை விட பற்றிய தனது ஸ்பரிசத்தை அவன் உதறிய விதமே வாசுகியை வேதனைப்படுத்தியது.

 

” நான் அன்று சொன்னேனேஒரு நாள் கோவிலில் வைத்து இரண்டு பேர் பேசுவதைக் கேட்டேன் என்று அன்று சொன்னேனேஅன்று அவர்கள் முகத்தை பார்க்கவில்லை .கோவில் தூண்களுக்கு மறுபுறம் அமர்ந்திருந்தனர். மகனை கடைசிவரை தன் பிடியிலேயே வைத்திருக்க  போவதாக ஒரு அம்மா சொல்லிக் கொண்டிருந்தார் .அப்படியே செய் என்று அதற்கு உரிய ஆலோசனைகளை இன்னொருவர் சொல்லிக் கொண்டிருந்தார். மகளின் திருமணமும் தொடர்ந்து அவளுக்கு உரிய சீர்வரிசை வேலையையும் செய்து முடித்துவிட்டுஇரண்டாவது மகனின் படிப்பையும் திருமணத்தையும் அவனுக்கான வேலையையும் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டுதனக்கென ஒரு நிரந்தர வருமானத்திற்கான ஏற்பாட்டையும் செய்து விட்டே மூத்த மகனின் திருமணத்தை பற்றி யோசிக்க போவதாக அந்த அம்மா சொல்லிக் கொண்டிருந்தார் .இடையிலேயே திருமணம் என்று மூத்த மகன் வந்து விட்டால் என்ன செய்வாய் என்று இன்னொருவர் கேட்க அப்படி என் மகன் வரமாட்டான் என்று உறுதியாக சொல்லி விட்டு இருவரும் எழுந்து போய் விட்டனர் .நான் அன்று சும்மா பொழுது போவதற்காக அவர்களது பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருந்தேன் பிறகு மறந்தும் போனேன்.

 




” அதன் பிறகு என் அத்தையின் திருமண வீட்டில் வைத்து மீண்டும் அதே குரல்களை கேட்டேன் .உனது திட்டம் இப்படி பிசுத்து போய்விட்டதே என்று ஒருவர் கேட்க என்ன செய்வது எல்லாம் என் கை மீறி போய்விட்டது என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்தார் அலமு என்பவர் .முதலில் கோவிலில் வைத்து பேச்சுக்களை கேட்டபோது அவர்களின் பெயர் தெரியாது .ஆனால் இப்போது ஒருவர் பெயர் தெரிந்தது .ஆனால் யார் இந்த அலமு என்று நான் குழம்பினேன் . அந்தக் குரல் எனக்கு தெரிந்தும் தெரியாத்து போல் குழப்பியது .அடுத்த அவர்களது திட்டத்தில் பதறினேன்.

 

” திருமணம் முடிவதை தடுக்க முடியாவிட்டாலும் பிள்ளை பெறுவதை என்னால் தடுக்க முடியும் .பிள்ளை என்று ஒன்று பிறந்து விட்டால் தானே தானும் தன் குடும்பமும் என்ற தனித்துவ எண்ணம் உன் மகனுக்கு வரும்அதற்கு என்னிடம் வழி் இருக்கறதுஅந்தப் பெண் தவறான ஆலோசனைகளை அந்த அலமுவுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்.

 

” என் மகனின் வாழ்க்கையை வெளிப்படையாக தடுத்து அவனிடம் கெட்ட பெயர் சம்பாதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை அந்த அலமு

 மறுத்துக் கொண்டிருந்தார்.”

 

” நீ நேரிடையாக எதுவுமே செய்ய வேண்டியதில்லை .என்னிடம் ஒரு மூலிகை இருக்கிறது .அதனை தொடர்ந்து உன் மருமகளுக்கு உணவுப் பண்டம் எதிலாவது கலந்து கொடுத்து விடு .அவளால் கருத்தரிக்க முடியாது .தொடர்ந்து சாப்பிட்டால் கருப்பையே கூட இல்லாமல் போய்விடும். வாரிசுக்கு ஆள் இல்லாவிட்டால் தம்பியும் தங்கையும் தானே உன் மூத்த மகனின் வாரிசாக மாறுவார்கள்இப்படி யோசனை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்” 

 

” ஏய் போதும் நிறுத்து .யாரைப் பற்றியோ இப்போது இங்கே எதற்காக உளறிக் கொண்டு இருக்கிறாய் ? “தேவராஜன் வாசுகியின் பேச்சை நிறுத்தினான்.

 

கோவிலில் கேட்ட பேச்சில் நான் அப்படித்தான் நினைச்சேங்க. ஆனால் கல்யாண மண்டபத்தில் அந்தக் குரல்கள் எனக்கு பழக்கமானது போலிருந்தது .முகம் பார்க்காததால் எதையும் உறுதியாக தெளிய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன் .ஆனாலும் இது எனக்காக விரிக்கப்படும் வலை என்று என் மனதை அரித்துக்கொண்டே இருந்தது .அன்று பேசிக் கொண்டிருந்தவர்கள் யாரோ இல்லைங்க .அவர்கள் உங்கள் அம்மாவும் இதோ இந்த அம்மாவும்தான் .அவர்கள் பேசிக்கொண்டிருந்த மூத்த மகன் நீங்கள்தான் .மூலிகையை தொடர்ந்து சாப்பிட்டு என் கர்ப்பப்பையை நம் குடும்ப  வாரிசைநம் குழந்தையை இழக்க இருந்தவள் நான்தான் ” குமுறலோடு  சொல்லி முடித்து ஆதரவிற்காக  கணவனை ஏக்கத்துடன் அவள் நிமிர்ந்து பார்க்க தேவராஜன் ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தான்.

 

” லூசு பைத்தியம் பிடித்திருக்கிறதடி உனக்குகத்தலோடு அவள் கூந்தலை பிடித்து ஆட்டினான்.

 

” கையை எடுங்கள். அவளை விடுங்கள் ” கர்ஜிப்பாய் வாசல் பக்கம் இருந்து சத்தம் வர திரும்பிப் பார்த்து திகைத்தான். அங்கே ஜெயக்குமார் நின்றிருந்தார்.

 

 

 


What’s your Reaction?
+1
21
+1
20
+1
3
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!