Serial Stories சதி வளையம்

சதி வளையம்-1

1 மோதினார்கள் – மோதிரத்துக்காக!

“என்னடா, புதுமாப்பிள்ளை! எப்படி இருக்கே?” என்று உற்சாகமாய்க் குரல் கொடுத்தவாறு உள்ளே நுழைந்த டாக்டர் திலீப், பாஸ்கரைக் கண்டதும் அதிர்ச்சியில் விழுந்தார்.

தலைக்குக் கைகளை முட்டுக் கொடுத்துக் கொண்டு மேஜைமேல் கவிழ்ந்திருந்த பாஸ்கர் தலைநிமிர்ந்தான். அழுதது போல் கண்கள் சிவந்திருந்தன.

நேற்றைக்கு முந்தின தினம்தான் நிச்சயதார்த்தப் பார்ட்டியில் அவனைப் பார்த்திருக்கிறார். எத்தனை உற்சாகமாக இருந்தான்! கல்யாணப் பெண் பத்மாவோடு டான்ஸ் கூட ஆடினானே!

நேற்று முழுவதும் டாக்டர் ஆஸ்பத்திரியில் பிஸி. இன்று பாஸ்கரின் திடீர் டெலிபோன் அழைப்பிற்கிணங்கி வந்திருக்கிறார்.

“என்ன ஆச்சு பாஸ்கர்? ஏன் இப்படி இருக்கே?” என்று பதறியவாறு கேட்டார்.

“அவன் என்னத்தைச் சொல்லுவான்? நாங்க சொல்றோம்” என்றவாறு உள்ளே நுழைந்தார்கள் பாஸ்கரின் உறவினர்கள்.




“திலீப், பத்மாவுக்கு இந்தக் கல்யாணம் வேண்டாமாம். பொண்ணு வீட்டுல நிறுத்திட்டுப் போயிட்டாங்க” என்று சிதறுகாய் உடைத்த மாதிரி ‘படாரெ’ன்று சொன்னாள் சுஜாதா. குரலில் லேசாய் மலையாளச் சாயல் அடித்தது.

“என்ன சொல்றீங்க அக்கா? எப்படி திடீர்னு?” என்றார் திலீப்.

“ஆமாம், திருட்டுப் பட்டம் கட்டி ஒரேடியாய்க் கேவலப் படுத்தினா, அப்புறம் கல்யாணமா நடக்கும்? என் வாழ்க்கையே போச்சு, திலீப்” தழுதழுத்தான் பாஸ்கர்.

“இவ்விட நோக்கு, யாரும் அவங்களைத் திருடினாங்கன்னு சொல்லல்லை, ஆனா ஒரு சுப சம்பவம் நடக்கும் போது இங்ஙனம் ஆனா, ஏது பறையாம்?” என்று மலையாளம் தூக்கலாய்த் தமிழ் பேசினார் பாஸ்கரின் சித்தப்பா சதானந்த வர்மா.

“ஐயோ, என்ன நடந்ததுன்னு சொல்லுங்களேன்!” என்று கத்தினார் திலீப்.

“பாஸ்கரோட மோதிரத்தைக் காணோம் முந்தாநாளிலிருந்து” என்றாள் சுஜாதா, மீண்டும் சுருக்கமாக.

“அதை எடுத்தது பத்மா வீட்டுக்காரங்கன்னு எல்லாரும் சொல்றாங்க” என்றான் சித்தப்பா மகன் விஜய்.

“காணாமப் போயி என்னு தான் ஞான் சொன்னது” என்றார் சித்தப்பா.

“பத்மா கோபப்பட்டு, மோதிரம் கிடைச்சதும் சொல்லி அனுப்புங்க, கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க” சொல்லி முடித்தான் விஜய்.

“சரியாப் போச்சு. ஒரு மோதிரம் தொலைஞ்சதுக்கா இவ்வளவு கலாட்டா பண்ணிட்டீங்க? பாஸ்கர், நீ கிளம்பு, பத்மா வீட்டிலே பேசலாம்” என்று பாஸ்கரின் முதுகைத் தட்டினார் டாக்டர் திலீப்.

“எந்தா திலீபா! புத்தியோடு தானே பேசறே? அது என்ன மோதிரம்னு அறியாமோ?” கோபமாய்க் கேட்டார் சதானந்த வர்மா.

“சரி மாமா! அது குடும்ப மோதிரம். இராஜவம்ச மோதிரம். எல்லாம் சரிதான். ஆனா அதுக்காக ஒரு கல்யாணத்தை நிறுத்தறது ஓவர் மாமா!” என்று ஆவேசமாய்ச் சொன்னார் திலீப்.




“என்னடா புரியாம பேசறே! நாம எங்கே கல்யாணத்தை நிறுத்தினோம்? அவங்க இல்ல நிறுத்திட்டாங்க! நாங்க எங்கயாவது இவனுக்குக் கெடுதல் நினைப்போமா? என்னிக்கும் இவன் நல்லா இருக்கணும்னு தான் எங்க ஆசை” இது சுஜாதா.

“வேற என்ன பண்ணுவாங்கன்னு நினைக்கறே நீ அக்கா?” வெடித்தான் பாஸ்கர். “உன் மேல நான் குறிப்பா குற்றம் சொல்லலை. ஆனா நீங்க எல்லாருமே நடந்துக்கிட்ட விதம் தப்பு. ஒருத்தர் என்னடான்னா சகுனம் சரியில்லைங்கறார், இன்னொருத்தர் பொண்ணு வீடே சரியில்லைங்கறார் …”

பேச்சு தடிப்பதை உணர்ந்தார் திலீப்.

இதற்கிடையில் “போலீஸ் கிட்ட சொன்னா என்ன?” என்றார் சுஜாதாவின் கணவர் கமல், மெதுவாக.

வெடிகுண்டு ஒன்றைப் போட்டாற்போல் அங்கே அத்தனை பேரும் அதிர்ந்து மௌனமானார்கள்.

“ஒரு மோதிரம் காணாதப் போச்சுன்னு போலீஸைக் கூப்பிடணுமா?” என்றார் சதானந்த வர்மா.

“ஒரு மோதிரம் காணாமப் போச்சுன்னு கல்யாணத்தை மட்டும் நிறுத்தலாமா?” ஆத்திரமாய்க் கேட்டான் பாஸ்கர்.

“இரு, பாஸ்கர். இது போலீஸ்க்குப் போற மேட்டர் இல்லை. நாம பத்மாகிட்ட போய்ப் பேசி …” என்று திலீப் சொல்லுவதற்குள் “பத்மா கிட்டயோ, அவங்க ரிலேடிவ்ஸ் கிட்டயோ பேசறது வேஸ்ட் திலீபண்ணா. அவ்வளவு கோபத்தில் இருக்காங்க அவங்க. கமல் சொல்றது தான் சரி. போலீஸ் வந்து விசாரணை பண்ணட்டும். யார் எடுத்தான்னு கண்டுபிடிச்சுட்டா, ஐஸா பைஸாவா விவகாரம் தீர்ந்து போயிடும். பத்மா வீட்டை அப்பத் தான் கன்வின்ஸ் பண்ண முடியும்” என்றான் பாஸ்கர் தீர்மானமாக.

டாக்டர் தயங்கினார். அதற்குள் “போலீசை விளிக்கு. இந்தக் குடும்பத்தின் பேர் ஊர் சிரிக்கட்டும்” என்றார் சதானந்த வர்மா வெறுப்பாய்.

திலீப் சற்று யோசித்தார். பிறகு, “பாஸ்கர், நாம ஒண்ணு பண்ணலாம். என் ஃப்ரெண்ட் ஒருத்தன் புதுசா டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிச்சிருக்கான். அவனை விட்டு மோதிரத்தைக் கண்டுபிடிக்கச் சொல்லுவோம். இப்போ மோதிரம் கிடைக்கணும், அது தான் நம்ம ப்ரைம் கன்சர்ன். அது ஒண்ணு நடந்தாலே எல்லா பிரச்சனையும் சால்வ் ஆகிடும். என்ன சொல்றே?”

“சரி திலீபண்ணா” என்றான் பாஸ்கர் சற்று யோசனைக்குப் பிறகு. மற்றவர்களும் சற்றுத் தயங்கினாலும் முடிவில் ஒப்புக் கொண்டார்கள்.

தன் செல்போனை வெளியில் எடுத்த திலீப் நினைத்துக் கொண்டார், “தர்மா கெட்டிக்காரன் தான். ஆனா துப்பறியறதிலே கத்துக்குட்டி. அந்த மாதிரி ஆள் தான் நமக்குத் தேவை. இல்லாட்டா நம்மையே துப்பறிஞ்சுடுவான்!”

தன் எண்ணம் வெறும் கனவு தான் என்பதை அப்போது டாக்டர் திலீப் உணரவில்லை, பாவம்!




What’s your Reaction?
+1
9
+1
9
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!