Serial Stories நீரோட்டம்

நீரோட்டம்-2

2

அவள் ப்ளஸ் டூ முடித்து விட்டு லீவில் இருந்த நேரம். எந்த காலேஜ் வீட்டுக்குப் பக்கம்? எந்த க்ரூப் எடுக்க வேண்டும்? என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். 

சுந்தர் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு அக்கா வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது சித்தியின் அம்மா பங்கஜம் பாட்டியும் வந்திருந்தார்கள். இருவருமாக அம்மாவையும், அவளையும் படுத்தின பாட்டை நினைத்தால் இப்போதும் உடம்பு நடுங்கியது நவீனாவுக்கு. 

என்ன சொல்லி, மைதிலியிடம் திட்டு வாங்க வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருப்பாளோ, என்னவோ! சின்னப் பெண் தானே என்று கூட நினைக்காமல் வேலை வாங்குவதும், குறை கூறுவதுமாகவே இருப்பாள். எதுவும் வேலை செய்யச் சொல்லத் தோன்றவில்லை என்றால், கைகாலைப் பிடித்துவிடு என்று சொல்லிவிட்டு படுத்துக் கொண்டு விடுவார். தூங்கும் வரை கைகால்களை அமுக்கி விடவேண்டும். 

அம்மாவே சித்தியிடமும், பாட்டியிடமும் பார்த்துப் பார்த்துப், பயந்து, பயந்து பேசியதில் நவீனாவும் அப்படியே பழகி விட்டாள். 

அவள் தவறு என்று தெரியாமல்,எதாவது வேறு பாடாகப் பேசி விட்டால், கஸ்தூரி அவளைக் கூப்பிட்டுக் கண்டிப்பதுடன், சித்தியிடம் ‘சாரி’சொல்லு என்று விரட்டி விடுவாள். 

தனியாக நவீனாவைக் கூப்பிட்டு, “இதோ பார் நவிக் குட்டி, அப்பா இருந்தா அது வேற மாதிரி! இப்ப நாம அவங்க ஆதரவுல தான் இருக்கோம். வயசு வந்த பொம்பளைப் புள்ள உன்னை வெச்சுகிட்டு, நானும் வேலைக்குப் போயே ஆகணும்கற சூழ்நிலைல நம்மளால தனியா இருக்க முடியாது. அவங்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் எதுத்துப் பேசக் கூடாது. புரிஞ்சுதா?”என்று எச்சரிக்கை செய்திருந்தாள். 

அப்பா இறந்த போது, தன் 13 வயதிலேயே இதைப் புரிந்து கொண்டிருந்தாள் நவீனா. எனவே கூடியவரை நவீனாவும் வாயைத் திறக்காமலே இருந்தாள். அதனால் வீட்டில் சண்டை எதுவுமில்லாமல் இருந்தது. 

சித்தியின் அம்மாவுக்கு அரவை இயந்திரம் போல எதையாவது வாயில் போட்டு மென்று கொண்டே இருக்க வேண்டும். அவளுக்கு நொறுக்குத் தீனி செய்து கொடுத்தே ஓய்ந்து போவாள் கஸ்தூரி. 

கஸ்தூரி வேலை செய்யும் ஏற்றுமதி நிறுவனம் வீட்டிலிருந்து நடந்து போகும் தொலைவில் தான் இருந்தது. அது சில சமயங்களில் வசதியாகவும், பல சமயங்களில் படு தொந்தரவாகவும் இருந்தது. 

இத்தனைக்கும் கஸ்தூரி காலையில் சீக்கிரம் எழுந்துவிடும் பழக்கம் உள்ளவள். மகளையும் அவ்வாறே பழக்கப் படுத்தியிருந்தாள்.

 வேலைக்கு போகுமுன்பு முடிந்தவரை எல்லா வேலைகளையும் செய்து வைத்து விட்டே போகும் பழக்கம் உள்ள கஸ்தூரி, காலை டிபன், மதியம் சாப்பாடு என அனைத்தையும் விரைவாக முடித்து விட்டு ஒன்பது மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் ஒன்பதரை மணிக்கு அலுவலகம் செல்லச் சரியாக இருக்கும். 

சிலநாட்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிற்றுண்டி செய்ய வேண்டி வந்துவிடும். செய்து முடித்த பிறகு தான் மைதிலி எழுந்து வருவாள். இனிமையான குரலில், “அடடா! அக்கா! இது உங்க மச்சினருக்குப் பிடிக்காதே! மறந்துட்டீங்களா”என்றோ “எனக்கு இன்னிக்கு இது சாப்பிடணும்னு தோணிச்சு. பரவால்லக்கா, உங்களுக்கு வேணுங்கறத செஞ்சு சாப்டுட்டு நீங்க கிளம்புங்க. நவீனாவுக்கு வேணுங்கறதக் குடுத்துட்டீங்களா? “என்று வாழைப்பழத்தில் ஊசியாய் வார்த்தைகளைக் குத்துவாள். 

அவர்கள் இருந்த வீடு சொந்த வீடு. மாடியிலும் கீழுமாக இரு குடும்பங்கள் தனித்தனியாக வசிக்கும்படி கட்டப்பட்ட அந்த வீட்டில் கஸ்தூரியின் கணவன் இருந்தபோது அவர்கள் மாடியில் இருந்தார்கள். 




கஸ்தூரியின் கணவன். இரண்டு நாள் காய்ச்சலில் படுத்தவன் தான். ஆறுமாதம் படுத்த படுக்கையானான். மாறி மாறி மருத்துவமனைக்குப் படையெடுத்துச் சென்றதுதான் மிச்சம். என்ன வியாதி என்று கண்டுபிடிக்கும் முன்பே இறந்தும் போனான். அதற்குப் பிறகு அந்த வியாதிக்கு வாயில் நுழையாத பேரைச் சொன்னார் மருத்துவர். என்ன சொல்லி என்ன? 

கணேசன் இறந்த பிறகு கஸ்தூரியின் நிலைமை மோசமானது. ஆதரிக்கவோ, அரவணைக்கவோ பிறந்த வீட்டு சொந்தமென்று யாரும் இல்லாத நிலையில் கஸ்தூரி தன் பதிமூன்று வயது மகள் நவீனாவுடன் மச்சினன் குடும்பத்திலேயே அடைக்கலமானாள். 

கணேசனுக்கும், முரளிக்கும் மூத்தவர் மூர்த்தி என்று ஒரு அண்ணா இருந்தார் . அவர் மும்பையில் வேலைக்குச் சேர்ந்து அங்கேயே ஒரு வடநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.அது கஸ்தூரியின் மாமனாருக்குப் பிடிக்காததால், அதற்குப் பிறகு அவர் இங்கே வருவதே இல்லை. 

மூர்த்தியுடன் படித்த நண்பன் ஒருவன் வீடு அதே வீதியில் இருந்தது. அவன் சொல்லி அப்பாவின் மரணம் பற்றிக் கேள்விப் பட்டதும், அவரே வந்துவிட்டார். அப்போது தான் கஸ்தூரியும், மைதிலியும் அவரை முதலில் பார்த்தார்கள். 

அவர்கள் இப்போது இருக்கும் வீடு மாமனாருடையது தான். மூர்த்தி அவர் மறைவின் போது வந்ததும் முரளிக்கும், அவன் மனைவி மைதிலிக்கும் அந்த வீட்டுக்கு மூர்த்தியும் பங்குக்கு வருவானோ என்ற பயம் ஏற்பட்டது. 

ஆனால் இதை எதிர்பார்க்க வேண்டிய பொருளாதார நிலையிலோ, மனநிலையிலோ மூர்த்தி இல்லை என்பதால் அவர் இதைப் பொருட்படுத்தவில்லை. 

அவர் தன் மனைவி சுஷ்மாவுடனும்,  நவீனாவை விட ஒரு வயது பெரியவளான மகள் ப்ரீதாவுடனும் வந்திருந்தார். சுஷ்மா பணக்காரவீட்டுப் பெண் என்றாலும், புகுந்த வீட்டின் வசதிக் குறைவுகளை அங்கு இருந்த பதினைந்து நாளும் அவள் பொருட்படுத்தவில்லை. 

அத்துடன் தன் ஓரகத்திகளான கஸ்தூரி மற்றும் மைதிலியுடன் சுமுகமாகவே நடந்து கொள்ள முயன்றாள். ஒதுங்கி இருக்காமல் தனக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழில் எதையாவது கேட்டுத் தெரிந்து கொள்வதும், வேலையைப் பகிர்ந்து செய்வதுமாகவே பொழுதைக் கழித்தாள். 

மிருதுவான சப்பாத்தி செய்முறையைச் சொல்லித் தந்து, இட்லியை எப்படி பூப்போல மெத்தென்று செய்வது என்று கற்றுக் கொண்டாள். விதவிதமான சட்னி மற்றும் ஊறுகாய் வகைகளை அவர்கள் முறைப்படி செய்து அசத்தினாள். 

தன் மகள் ப்ரீதாவுடன் நவீனாவையும் கூட்டிச் சென்று விதவிதமான ஆடைகள் வாங்கித் தந்தாள். மைதிலியின் குழந்தை அருணுக்கும் சட்டை, விளையாட்டுச் சாமான்களை வாங்கி வந்தாள். 

ஆனால் மைதிலிக்கு ஒட்டவே இல்லை. அருண் ஐந்து வருடக் குழந்தை.  சம்மந்தியின் இறப்புக்கு வந்திருந்த தன் தாயையும் கூட்டிக் கொண்டு, குழந்தையையும் தூக்கிக் கொண்டு மாடிக்குப் போய்விடுவாள். 

நவீனாவின் தாத்தா….. கஸ்தூரியின் மாமனார் உயிருடன் இருந்த போதே வீட்டைப்  பாகம் பிரித்துவிட்டார். மூர்த்தியின் பேரில் இருந்த கோபத்தில் தனக்குப் பிறகு கணேசனுக்கும், முரளிக்கும் மட்டும் அந்த வீட்டை எழுதி வைத்து விட்டார். மனைவியின் நகைகளையும் இறப்பதற்கு முன் பிரித்துக் கொடுத்து விட்டார். மைதிலியைப் பற்றியும், முரளியைப் பற்றியும் அவருக்குத் தெரிந்தே இருந்தது. 

கஸ்தூரியின் கணவன் கணேசன் தன் பகுதியை விரிவுபடுத்தியும், வசதியாகவும் அமைத்திருந்தான். ஏற்கனவே அதைப் பார்த்து பொறாமையுடன் இருந்தமைதிலி, கணேசன் இறந்த பிறகு அதனை மெதுமெதுவாக ஆக்கிரமிப்பு செய்து கொண்டாள். 

மைதிலியை எதிர்த்துப்பேச துணிவின்றியோ, அல்லது தனக்கும் வசதியாக இருந்ததாலோ முரளியும் ஒன்றும் சொல்லவில்லை. 

அப்பாவின் இறப்புக்கு வந்த மூர்த்திக்கு பதினைந்து நாள் விடுமுறை முடிந்து விட்டது. போகும்போது கணேசனைக் கூப்பிட்டு அந்த வீட்டில் தனக்கு எதுவும் வேண்டாம் என்றும், ஆனால் தம்பியிடம் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லியும் எச்சரிக்கை செய்தார் . பக்கத்திலேயே இருந்ததாலோ என்னவோ கணேசனுக்கு ஒன்றும் வித்தியாசமாகத் தெரியாமல் அசட்டையாகவே இருந்தான். 

தூரத்திலிருந்த வந்த மூர்த்திக்கு சின்னத் தம்பியின் கல்மிஷம் புரிந்தது. அப்பாவின் காரியங்கள் முடியும் முன்பே மூர்த்தியிடம், “மூர்த்தி! இந்த வீட்ல எனக்கெதும் வேணாம்னு எழுதித் தந்துடறயா?” என்று கூசாமல் கேட்டதுடன் அப்பாவின் பெயரில் வங்கியில் இருந்த கணக்கை முடித்து பணத்தை அவசர அவசரமாக எடுத்துக் கொண்டான். எவ்வளவு இருந்தது என்பதையும் மற்றவர்களிடம் தெரிவிக்கவில்லை. 




இதற்கெல்லாம் காரணம் அவன் மனைவிதான் என்பது மைதிலியின் கண்களையும், நடவடிக்கைகளையும் பார்த்து புரிந்து கொண்டார் மூர்த்தி.அவளுக்குத் தூண்டுதல் அவளுடைய அம்மா என்பதும் மூர்த்திக்குச் சுலபமாகப் புரிந்தது. 

அம்மாவின் பாத்திர பண்டங்களும் முரளியின் பகுதியிலேயே இருந்ததைப்  பார்த்திருந்தார் மூர்த்தி. கண்ணுக்குத் தெரியாதனவும், கணக்கில்லாதவையும் எங்கு போயிற்றோ. 

“இப்படி அப்பாவியாய் இருக்கிறானே கணேசன். அவன் தான் அப்படி என்றால் அவன் மனைவி கஸ்தூரி அதற்கு மேல் இருக்கிறாள். எப்படிப் பிழைக்கப் போகிறார்களோ”தனக்குள் நினைத்த மூர்த்தி கணேசனுக்கு அறிவுரை வழங்கி விட்டு ஊருக்குப் புறப்பட்டார். 

மாமியாரின் நகைகளை மாமனார் இருந்த போதே இரு மருமகள்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டதால், தன்னிடமிருந்த நகைகளில் பாதியை கஸ்தூரி சுஷ்மாவிடம் கொடுத்தாள். சுஷ்மா எவ்வளவு மறுத்தும் கஸ்தூரி விடவில்லை. 

“அக்கா, நியாயமா மூணா பிரிச்சிருக்கணும். மாமா கோபத்தால நீங்க இங்க இத்தனை நாள் வராமலே இருந்துட்டீங்க. மைதிலி பங்கை நாம கேக்க முடியாது. நீங்களும் இந்த வீட்டு மருமக தானே! நவீனா போல ப்ரீதாவும்  பேத்தி தானே!  பாட்டியோடது அவளுக்கும் தான். உங்களுக்கு உங்க வீட்ல குடுத்திருப்பாங்க. ஆனா இது பாட்டியோடது. என்னோடது ஒண்ணும் தரலியே, நீங்க வேண்டாம்னு சொல்றதுக்கு”என்று வற்புறுத்தவும், சுஷ்மாவுக்குக் கண்கலங்கி விட்டது. 

“கஸ்தூரி,  இந்த வீட்ல என்னை வேற யாரும் ஏத்துக்கலேன்னாலும் நீயாவது மருமகள்னு ஒத்துகிட்டயே”என்று கஸ்தூரியைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். 

“கஸ்தூரி, நவீனா கல்யாணத்தும் போது நான் எங்கிருந்தாலும் வருவேன். என் மகளுக்கு என்னால் முடிஞ்ச சீரைத் தருவேன். அப்போ நீ மறுக்கக் கூடாது “என்று சொல்லவும் கஸ்தூரி, “உங்க மகளுக்கு நீங்க குடுக்கறதை நான் எப்படிக்கா மறுப்பேன்”என்று கூறி சிரித்தாள். 

அப்போது ஊருக்குப் போனவர்கள் மறுபடி  இரண்டு வருடங்களுக்குப் பிறகு கணேசன் இறப்புக்குத்  துடிதுடித்தபடி வந்து சேர்ந்தார்கள். 

மூர்த்திக்கு எப்போதுமே கணேசனிடம் அன்பு அதிகம். அவனுடைய அகால மரணம் மூர்த்தியை மிகவும் பாதித்தது. “என்னுடனேயே நீயும், நவீனாவும் வந்துடுங்க”என்று மூர்த்தி கஸ்தூரியை மிகவும் வற்புறுத்திக் கூப்பிட்டும், கஸ்தூரி தன்னுடைய வேலையை விட்டு விட்டுப் போக விரும்பவில்லை. 

தன்னுடைய சுமையை அடுத்தவர் மேல் ஏற்ற அவள் விரும்பவில்லை என்பதோடு, புதிதாக ஓரிடத்திற்குப் போய் அந்த மொழியைக் கற்றுக் கொண்டு, வேலைக்குப் போவது என்பது நடக்காத காரியம் என்று அவளுக்குத் தோன்றியது. 

தனக்குப் பரவாயில்லை என்று தோன்றினாலும், நவீனாவுக்கு அது மிகவும் கஷ்டம் என்றே தோன்றியது. புது இடம், புது மொழி என்றால் குழந்தை மிரண்டு போவாள். 

வேலைக்குப் போகாமல் இருக்கவும் முடியாது. கணேசன் இருந்தவரை ஆடம்பர செலவு எதுவும் செய்யவில்லையே தவிர, சேர்த்தும் வைக்கவில்லை. 

இருந்ததில் வீட்டையும் விரிவாக்கம் செய்தாகி விட்டது. பெண்ணையும் தனியார் பள்ளியில் சேர்த்திருந்தார்கள். இப்படி சின்ன வயதில் போய்விடுவான் என்று யார் எதிர்பார்த்தார்கள். 

நவீனாவைப் படிக்க வைக்க வேண்டும். கேட்டதை வாங்கித் தர வேண்டும் என்றால் அவளிடம் காசு புழக்கம் இருந்தாக வேண்டும் என்று புரிந்ததால், இந்தக் காரணங்களை அன்பாக பழகுபவர்களிடம்  நாசூக்காக சொல்லி மறுத்துவிட்டாள். 

 மூர்த்தியும், சுஷ்மாவும்  நவீனாவின் படிப்புச் செலவையாவது ஏற்றுக் கொள்வதாகச் சொன்னதையும் மறுத்தாள். கல்லூரியில் படிக்கும்போது, தேவைப்பட்டால் கேட்பதாகக் கஸ்தூரி சொன்னாளே தவிர, அந்தச் செலவையும் பின்னர் தானே பார்த்துக் கொண்டாள். . 

 இதுவரை கஸ்தூரியும், நவீனாவும் கௌரவமாகவே வாழ்ந்து வந்தார்கள். பெண்ணை வைத்துக் கொண்டு தனியாக வாழ்வது கடினம் என்பதால் மச்சினன் குடும்பத்துடனே வாழ்ந்து வந்தாள் கஸ்தூரி. 

கணேசன் வைத்தியச் செலவுக்கும், இறப்பின் போது செய்த செலவுக்கும் எதேதோ கணக்கு சொல்லி அந்த வீட்டையும் எழுதி வாங்கிக் கொண்டு விட்டான் முரளி. தனியாக வாழ தைரியமின்றி விட்டுக் கொடுத்து விட்டாள் கஸ்தூரி. 

ஆனால் மூர்த்தியும், சுஷ்மாவும் கஸ்தூரியைக் கடிந்து கொண்டனர். “கணேசன் இந்த வீட்டுக்காக எதுவும் செய்யலியா? அம்மா இறந்த போது நான் இங்க தானே இருந்தேன்! நானும் சுமாரான வேலையில் தான் இருந்தேன். அப்பாக்கு எல்லா விதத்திலும் உதவி செஞ்சது கணேசன் தான்! இவன் மறந்தாலும் நான் மறக்கலே.”என்று மூர்த்தி கஸ்தூரியிடம் கூறினார். ஆனால் அதையெல்லாம் கஸ்தூரியிடம் சொல்லி என்ன பயன்? 




மைதிலியும், முரளியும் ஒப்புக் கொள்ள வேண்டுமே! ஒதுங்க ஒரு இடம் வேண்டும் என்று நினைத்தாளே தவிர, வீடு யார் பெயரில் இருந்தால் தான் என்ன? என்று விட்டுவிட்டாள் கஸ்தூரி. வீட்டை விட்டு போகச் சொல்லமாட்டார்கள் என்று நம்பினாள். 

வீட்டை எழுதித் தர முடியாது என்றால், அதற்குப் பிறகு எந்த உதவியும் அவர்களிடம் எதிர் பார்க்க முடியாது. இருவரின் போர்ஷனும் இணைந்து இருப்பதால் தனியாக விற்கவும் முடியாது. வேறு வழியின்றி தான் விட்டுக் கொடுத்து விட்டாள் கஸ்தூரி. 




What’s your Reaction?
+1
5
+1
15
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!