Serial Stories பெண்ணின் மனதை தொட்டு

பெண்ணின் மனதை தொட்டு-21 (நிறைவு)

21

“டாக்டர் உங்களைப் பார்க்க ரூபா மேடம் வந்திருக்கிறார்கள்” சியாமளா சொல்ல குணாளன் சலித்தான். “இந்த பொண்ணுக்கு வேறு வேலையே இல்லையா?”

 “முக்கியமான விஷயமாம் டாக்டர்”

” எனக்கு இப்போது பேச நேரமில்லை. மாலை வர சொல்லுங்கள்” குணாளன் தன் வேலையை தொடர்ந்தான்.

” இதை உங்களிடம் கொடுக்க சொன்னார்கள் டாக்டர்” ஒரு பார்சலை கியாமளா அவன் டேபிளில் வைத்துவிட்டு அடுத்த பேஷண்டை உள்ளே அனுப்பினாள்.

 அடுத்தடுத்து நோயாளிகள் வந்து கொண்டே இருக்க எல்லோரையும் பார்த்து முடித்து குணாளன் நிமிர்ந்த போது மணி மதியம் இரண்டை காட்டியது.அலுப்புடன் கைகளை உயரத்தூக்கி சோம்பல் முறித்தவனின் கண்களில் டேபிளில் இருந்த அட்டைப்பெட்டி பட்டது. என்ன இது பிரித்து பார்த்தவன் பரபரப்பானான்.

 பொறுமையின்றி அடிக்கப்பட்ட காலிங் பெல்லை புன்னகையுடன் பார்த்தாள் ரூபாவதி. “யார் இப்படி பிசாசு போல் பெல்லை அழுத்துவது?” எரிச்சலுடன் அறைக்குள் இருந்து வந்தாள் மகதி.

” உன்னை அள்ளி எடுத்துப்  போக வந்திருக்கும் உன் பிசாசு” ரூபாவதி கண் சிமிட்டி சொல்ல மகதி புரியாமல் நின்றாள்.

 போய் கதவைத் திறந்த ரூபாவதியின் கண் முன்னால் அந்த அட்டைப்பெட்டியை நீட்டினான் குணாளன் “என்ன இது?”

” நீங்கள் டாக்டர் தானே? உங்களுக்கு தெரியாதா? இதற்கும் விளக்கம் கொடுக்க வேண்டுமா?”  புன்னகையுடன் கேட்க சட்டென அவள் தோள் பற்றி தள்ளிவிட்டு அதிரடியாய் உள்ளே நுழைந்தான் குணாளன்.

 அதே வேகத்துடன் நின்றிருந்த மகதியை அணுகியவன் நொடியும் தாமதிக்காமல் “மதி ” என இறுக அணைத்துக் கொண்டான்.தனக்குள்ளேயே புதைத்துக் கொள்பவன் போல் இறுக்கி இருந்த கணவனின் அணைப்பில் தனது மன இறுக்கம் எல்லாம் கரைந்து வடிவதை உணர்ந்தாள் மகதி.

 அவள் உச்சந்தலையை முகர்ந்து நெற்றியில் இதழ் பதித்தவன் “தேங்க்ஸ் மதி” கண் இமைகளிலும் இதழ் பொத்தி எடுத்தான். சிரமப்பட்டு அவனிடமிருந்து சிறிது விலகி இன்னமும் வாசலில் நின்றிருந்த அண்ணியிடம் பார்வையால் என்ன இது என விசாரித்தாள் மகதி.

 நிறைவும் நெகிழ்வுமாக இவர்களை பார்த்து நின்ற ரூபாவதி தன் கையில் வைத்திருந்ததை மகதிக்கு தூக்கி காட்டினாள். அது… அன்று காலையில் மகதி தனக்குத்தானே செய்து கொண்ட கர்ப்ப பரிசோதனை கருவி.மகதி கருவுற்றிருப்பதாக அழுத்தமான கோடுகளால் சொன்னது அது.

” ஏண்டி என்கிட்ட சொல்லல?” குணாளன் மகதியை மென்மையாய் உலுக்க “அவளே இன்று காலையில்தான் கன்ஃபார்ம் செய்து கொண்டாள் டாக்டர் சார்.அவளுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டு வந்து உங்களிடம் கொடுத்தேன்” என்றாள் ரூபாவதி.

” ஒரு வாரமாக தலைசுற்றல் மயக்கம் இருந்தது. கன்ஃபார்ம் செய்து கொண்டு சொல்லலாம் என்று…” மகதி முணுமுணுக்க “முட்டாள் நான், இதைக் கூட கவனிக்காமல்… நானெல்லாம் ஒரு டாக்டர்” குணாளன் தன்னை நொந்து கொண்டான்.

” சரி சரி கிளம்புங்க இதெல்லாம் உங்க வீட்டிற்கு போய்  பேசிக்கோங்க” ரூபாவதி குரல் கொடுத்தாள்.




“நிச்சயம் கிளம்பத்தான் போகிறோம். இனியும் என் மனைவிக்கு இங்கே வேலை இல்லை”

“ஆஹா டாக்டர் சார் அவ்வளவு எளிதாக எங்கள் வீட்டுப் பெண்ணை முழுதாக உங்களுக்கு தூக்கி கொடுத்து விட மாட்டோம். நாங்கள் எல்லோரும் இங்கே பக்கத்தில்தான் இருக்கிறோம். மகதியை சரியாக கவனித்துக் கொள்ளுங்கள்” ரூபாவதியின் மிரட்டலை குணாளன் ஆச்சரியத்துடன் பார்க்க மகதி பெருமையுடன் மோவாய் உயர்த்திக்கொண்டாள்.

 குணாளன் மகதியின் கை பற்றி இழுத்துக் கொண்டு வெளியேறினான். “கடவுளே இவர்கள் இருவரும் காலம் முழுவதும் சந்தோஷமாக வாழ வேண்டும்” சில நாட்கள் முன்புதான் அவர்களுக்கு சாபம் கொடுத்த ரூபாவதி இன்று கடவுள் படத்தில் முன் நின்று மனமாற வேண்டிக் கொண்டாள்.

 மகனும் மருமகளும் கைகோர்த்து உள்ளே நுழைவதை மகிழ்ச்சியாக பார்த்த மீனாட்சி “மகிம்மா வா புள்ள, ஏன் சோர்வாக தெரிகிறாய்?” விசாரிக்க பதில் சொல்ல வாய் திறந்த மகதியின் கைப்பற்றி அழுத்தினான் குணாளன்.

” ஒன்றும் பேசாதே, மேலே வா” கையோடு இழுத்துக்கொண்டு சென்றான். 

” விடுங்க அத்தையிடம் விசயத்தை சொல்லவேண்டும்.சந்தோசப் படுவார்கள்” 

“ம்கூம் நீ உன் கர்ப்ப விஷயத்தை என்னிடம் தான் முதலில் சொல்ல வேண்டும்.ம் …சொல்லு” 

“என்ன.. அதுதான் உங்களுக்கு தெரிந்து விட்டதே”

” அதெல்லாம் கிடையாது. நீ உன் வாயால் நமக்கென்று ஒரு குழந்தை வந்திருப்பதை எனக்கு இப்போது சொல்லியே ஆக வேண்டும்” குழந்தை போல் அடம் பிடிப்பவனை புன்னகைத்து பார்த்தாள் மகதி.

” எனக்கென்று ஒரு வாழ்வு நமக்கென்று ஒரு குழந்தை.. நினைக்கும் போதே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கிறது மகதி. நீ எனக்கு எவ்வளவு பெரிய நன்மை செய்திருக்கிறாய் தெரியுமா? பாலைவனம் போல் கிடந்த என் வாழ்வை சீராக்கி பசுமையை அள்ளித் தெளித்திருக்கிறாய். நம் திருமணம் முடிந்த இந்த நான்கு மாதங்களில் உன்னைப் போய்  தவிர்க்க நினைத்தேனே என்று என்னை நானே பல தடவை உச்சந்தலையில் கொட்டிக் கொள்கிறேன்” உணர்ச்சி பொங்க பேசும் கணவனை கண்கலங்க பார்த்து நின்றாள் மகதி.

” உங்களுக்குத்தான் என்னை எப்போதும் பிடிக்காதே” என்றாள்.

” என்னடி பிடிக்காது? கூடவே இருக்கும் நண்பனின் தங்கை.அழகான குட்டிப் பெண்.என் கண் முன்னாலேயே பெரிய மனுசியானவள். திடீரென்று ஒரு நாள் வந்து கட்டிக்கொண்டு நாம் கல்யாணம் செய்து கொள்வோமா என்றால்  சரி என்று சொல்ல சொல்கிறாயா? பெரிய பாவம் இல்லையா அது? அதுவும் அன்று நான் இருந்த சூழ்நிலையில்…”

” ஆமாம் அன்று நீங்கள் காதல் தோல்வியில் வாழ்க்கையை வெறுத்து நின்றிருந்தீர்கள். கலங்கி போயிருந்த உங்கள் முகத்தை பார்த்ததும் திருமணம் நின்றதால்தானே இந்த கலக்கம் என்று தோன்றியதால் உடனே அந்த துயரத்தை போக்க வேண்டும் என்றே நாம் கல்யாணம் செய்து கொள்வோமா என்று கேட்டேன். அப்போதைய மனநிலையில் அதுதான் சரி என்று எனக்கு தோன்றியது”

” சின்னப்பிள்ளை உளறல்” குணாளன் சொல்ல மகதி சீறினாள் “என் மனதார சொன்னது தான் அது. அன்றிலிருந்து என் மனதில் நீங்கள் மட்டும் தான் இருக்கிறீர்கள் உங்களுக்காகமீதான. நான் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று கூட நினைத்தேன் தெரியுமா?”




” சரிதான் ஒரு ஊசிக்கு ஒன்பது நாள் பயப்படுபவள் டாக்டராக போகிறாயா?”

” என்ன செய்வது உங்களுக்கு டாக்டரைத்தானே பிடிக்கிறது. அதனால்தானே அந்த யாரோ சரண்யாவை கல்யாணம் செய்து கொள்ள போனீர்கள்? இப்போது கூட அவளுடன் தானே சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் தானே என்னை ஒதுக்கி வைத்தீர்கள்”

” மகதி” குணாளன் அதட்டினான். “நம் திருமணத்திற்கு பிறகு பலமுறை உன் மெச்சூரிட்டி பார்த்து சிறு பெண்ணென்று தவறாக கணித்து விட்டோமோ என்ற நினைத்திருக்கிறேன். அதிலும் அம்மா விஷயத்தில் நீ நடந்து கொண்ட விதத்தை எல்லாம் என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியவில்லை.  நான் பார்த்து வளர்ந்த குட்டி 

பெண்தானா இவள் என்று பிரமிப்பாய் உன்னை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, இந்த அளவு கீழே இறங்கி மீண்டும் சிறு பிள்ளை என்று நிரூபிக்காதே”

” அப்போது ஊர் உறவு எல்லாவற்றையும் விட்டுவிட்டு ராணுவத்திற்கு ஓடிப்போன காரணத்தை சொல்லுங்கள்” விடாப்பிடியாக நின்ற மனைவியை புன்னகையோடு பார்த்தான் குணாளன்.

” இல்லை  இப்போதும் உன்னை தவறாகத்தான் கணித்திருக்கிறேன். உன் இந்த கோபம் சிறுபிள்ளைத்தனம் இல்லை. இது என் மீது வைத்திருக்கும் காதல் செய்யும் வேலை, சரிதானா?”சரசமாய் கேட்டான்.

“ப்ச் உங்கள் கணிப்புகளை தள்ளி வைத்துவிட்டு என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்”

 “முக்கியமாக  எடுத்துக்கொண்டு சொல்லும் அளவிற்கு பதில் எதுவும் இல்லை மதி. நான் ராணுவத்திற்கு சென்ற காரணம்… அது ஒரு ஆணின் இடத்தில் இருந்து பார்த்தால்தான் உனக்கு புரியும். சொத்து பத்துக்கள் நிறைந்த, நல்ல படிப்பும், குணமும் உடைய ஒரு ஆணின் திருமணம் மணமேடை வரை வந்து நின்று போனால்… அவன் மனநிலையை  வெளியே சொல்ல முடியாது மதி. நீ நினைப்பது போல் இதன் பின்னால் இருப்பது காதல் அல்ல. நட்பின் துரோகம்”

” சரண்யா என்னுடன் படித்தவள்தான். எனக்கு இரண்டு வருடங்கள் ஜூனியர். ஒரே கல்லூரியில் படித்த போதும் படிக்கின்ற காலத்தில் நாங்கள் அவ்வளவாக பேசிக் கொண்டது கூட கிடையாது. ஆனால் திருமணம் நிச்சயமானதும் எங்களுக்குள் காதல் இருந்ததாக ஒரு பேச்சு ஊருக்குள் பரவியது. திருமணம்தான் முடியப்போகிறதே என்று, அதனை நான் பெரிதாக கண்டு கொள்ளவில்லை”

சரண்யா என்னிடம் எதையும் மனம் திறந்து சொல்லவில்லை. அவள் என்னுடன் படித்த எனது நண்பனை  காதலித்திருக்கிறாள். அவன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பன். கொஞ்சம் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். நிறைய நேரங்களில் அவனுக்கு கல்லூரி பீஸ் கூட நான் கட்டியிருக்கிறேன். இருவரும் அவர்கள் காதலை பற்றி ஒரு வார்த்தை என்னிடம் சொல்லியிருந்தால் நானே முன் நின்று அவர்கள் திருமணத்தை முடித்து வைத்திருப்பேன்”

” ஆனால் சரண்யாவின் தந்தைக்கு பயந்து சொல்லாமலேயே மறைத்து கடைசி நேரத்தில் சரண்யாவின் நகை பணத்துடன் வீட்டை விட்டு ஓடி விட்டனர். இந்த துரோகம்தான் அன்று என்னை அடித்துப் போட்டது. கூடவே காதலித்த பெண் ஓடிவிட்டாள் என்ற ஊரின் பேச்சு வேறு,அந்த நேரத்தில் ஊர் உறவு நட்பு என்று எல்லாவற்றின் மீதும் ஒருவகை விரக்தி வர ராணுவத்தில் போய் சேர்ந்து விட்டேன்”

” என்னுடைய வெறுமையான மனத்திற்கு அங்கிருந்த பயிற்சிகளும் வேலைகளும் மிகுந்த ஆறுதல் கொடுத்தன.ஆனால் அம்மா என்னை பேசியே கரைத்து மீண்டும் இங்கேயே வரவைத்து விட்டார்கள். அவர்களுக்காக கல்யாணம் செய்து கொள்ளலாம்… ஏதோ ஒரு பெண் என்று தலையாட்டி வைத்தேன். ஆனால் அன்று உன்னுடைய போட்டோவை காட்டிய போது என்னை அறியாமலேயே உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு. உடனே சம்மதம் சொல் என்று மனதிற்குள் ஒரு குரல்”




” ஆனால் அன்று உன்னை அடித்து விரட்டியது நினைவிற்கு வந்தது. இப்போது மகதிக்கு என்னை பிடிக்க வேண்டுமே என்ற கவலையும் வந்தது. அதனால்தான் அம்மாவிடம் முதலில் அவள் சம்மதத்தை கேளுங்கள் என்றேன். நீ சம்மதித்ததாக தகவல் வந்ததும் நானும் சம்மதம் சொன்னேன். நம் திருமணத்தில் பின் எல்லாவற்றையும் உன்னிடம் மனம் திறந்து பேச ஏதோ தயக்கம். நீயும் கொஞ்சம் விலகி இருப்பது போன்றே மனதில் பட்டதால் நம் திருமணம் சரியா தவறா என்ற குழப்பத்திலேயே இருந்தேன்.”

” ஆனால் நமது குழப்பம் விரைவிலேயே தீர்ந்து நீ என்னுடையவளானதும் நானே இந்த உலகின் சந்தோசமான மனிதன் என்று உணர்ந்தேன். திருமணம் நின்று நான் ஊரை விட்டு போனது எனது பலவீனம் மதி. அன்று அந்த பலவீனத்தை நீ சுட்டிக் காட்டியதால் வந்த கோபத்தில் உன்னை அடித்து விட்டேன். பிறகு சமாதானம் செய்வதற்கு கூட உன் பக்கத்தில் வருவதற்கு அஞ்சி தள்ளியே இருந்தேன் உன்னை தொடும் தகுதி எனக்கு இருக்கிறதா என்ற கேள்வி எனக்குள். இனி உனக்கு என்னை பிடிக்காமல் போய்விடுமோ என்ற பதட்டம் என்னுள்” 

 ” நெடுநாட்கள் கழித்து எனக்கு கிடைத்த பொக்கிஷம் மதி நீ. ஏதோ தவறு செய்து உன்னை தவற விட்டு விடுவேனோ என்ற பயம். நீயும் அன்று என் மேல் நம்பிக்கை இல்லாமல் விட்டுவிட்டு போய்விடுவீர்களா என்று பேசினாயா… மிகவும் நொந்து போனேன். எப்படி உன்னை சமாதானம் செய்து என்னை நிரூபிப்பது என்ற குழப்பம் எனக்கு. அதனால் தான் இனிப்பையும் பூவையும் உனக்கு தூதாக அனுப்பிக்கொண்டே இருந்தேன்”

” நீயோ எதற்கும் மசியவில்லை.இன்றில்லாவிட்டால் நாளை என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டிருந்தபோது நீ உன் அம்மா வீட்டிலேயே தங்கி விட்டாய். எனக்கு  கோபம் வந்தது. உன் பிரிவு கொடுத்த தாபம் அது. எப்படி என்னை விட்டு ஒரு நாளேனும் நீ விலகி இருக்கலாம் என்ற ஆத்திரம். அன்றுதான் கோபித்துக் கொண்டு ஓரமாக

படுத்துக்கொள்வதற்கென்றாலும் நீ என் அருகில் வேண்டும் என்ற என் நிலைமை எனக்கு புரிந்தது. உன் மேல் உள்ள காதலை நான் முழுவதும் உணர்ந்து கொண்டதும் அப்போதுதான்”

” காதலை சொல்லி உன்னை அழைத்துப் போக வந்த போதுதான் நீ ஏதேதோ உளறினாய். நான் கோபத்துடன் திரும்பி போய் விட்டேன்”

 இவ்வளவு நேரமாக கணவனின் காதலை உள்ளம் உருக கேட்டுக் கொண்டிருந்த மகதியின் முகம் இப்போது வாடியது.”அந்த சரண்யாவுடன் உங்களை பார்த்தேன்..” மரத்த குரலில் கூறினாள்.

 குணாளன் உற்சாகத்துடன் அவள் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டான். “ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டன மதி.அந்த சரண்யாவின் முகமே எனக்கு மறந்துவிட்டது. அத்தோடு அவள் முகம் உப்பி ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருந்தாள். அவளாக வந்து அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு தான் எனக்கு தெரிந்தது. ஆனால் ஒரு நிமிட பார்வையில் உன்னால் எப்படி அவளை தெரிந்து கொள்ள முடிந்தது?”

” நிச்சயதார்த்தத்தின் போது உங்களுக்கு மோதிரம் போட்டு விட்டாளே அப்போது பார்த்த முகம் என் மனதில் இன்னமும் ஆழப் பதிந்து கிடக்கிறது” 

குணாளன் கடகடவென சிரித்தான். “அவ்வளவு அவசியம் இல்லை மகி, என் வாழ்வில் அவள் சாலையோரம் போகும் ஒரு பயணி அவ்வளவுதான். வழியில் என்னை பார்த்து வந்து பேசினாள். என்றோ செய்த தவறுக்கு இன்று மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். கணவனுடன் கோயம்புத்தூரில் புதிதாக கிளினிக் தொடங்கி இருக்கிறாளாம். ஒருநாள் வரும்படி கேட்டுக் கொண்டாள். சரி என்று தலை அசைத்து அனுப்பி வைத்தேன். அவ்வளவுதான் அத்தோடு அவளை மறந்தும் போனேன். அதிகபட்சம் ஐந்து நிமிடம் அவளிடம் பேசியிருப்பேன். அந்த நிமிடங்கள் உன் கண்ணில் பட வேண்டுமா?”

 குணாளன் பேசப் பேச மகதியின் மனதுக்கு சிறகுகள் முளைத்து மேலெழுந்து மிதக்க துவங்கியது. கணவனின் கழுத்தை கைகளால் வளைத்துக் கொண்டவள் அவன் முகமெங்கும் தன் இதழ்களால் நிரப்ப துவங்கினாள். பச் பச்சென்று சத்தத்துடன் விழுந்த முத்தங்களை கிறக்கத்துடன் வாங்கிக் கொண்ட குணாளன் இன்னும் இன்னும் என்று அமிர்த பானைக்குள் விழுந்த ஈயை போல் மயங்கி கிடந்தான்.

 “ஹப்பா என்ன முத்தம்டி! இவ்வளவு நாட்களாக இத்தனை ஆசையை எங்கே ஒளித்து வைத்திருந்தாய்? ஒற்றை முத்தத்தை வாங்க எப்படி கெஞ்சி கிடப்பேன்?” 

“என் மனதுக்குள்…”தன் இதயத்தை தொட்டு காட்டியவள் “பொதுவாக ஒரு பெண்ணின் மனதை தொடுவது அவ்வளவு சுலபம் இல்லை டாக்டர் சார், ஆனால் அவள் மனம் கவர்ந்தவனுக்கு அது மிகவும் சுலபம். என்ன ஒன்று மனம் தொடும்  சூட்சுமம் அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவுதான்”

” ஆக என் மனைவியின் மனதைத் தொடும் சூட்சுமத்தை நான் தெரிந்து கொண்டேன் சரிதானே?”

 குணாளன் மோகத்துடன் மனைவியை ஆக்கிரமிக்க துவங்க மகதி எல்லையில்லா காதலுடன் அவனுள் கரைய துவங்கினாள்

– நிறைவு- 




What’s your Reaction?
+1
45
+1
16
+1
2
+1
1
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!