Serial Stories vana malai pol oru kathal

வானமழை போல் ஒரு காதல் – 13

13

 

 

 

 

தனது தட்டில் இட்லி  வைத்துக் கொண்டிருந்த தாயின் கையில் இருந்து பார்வையை மனைவிக்கு மாற்றினான்  தேவராஜன். வாசுகி ஹால் சோபாவில் அமர்ந்திருந்தாள் .இரு கைகளையும் பிசைந்தபடி இருந்தாள .ஒருவித பதட்ட நிலையிலேயே காணப்பட்டாள் .

 

சாம்பார் ஊற்ற போன அம்மாவை தடுத்தவன் ”  வாசுகி இங்கே வா ” குரல் கொடுத்தான்.

 

அவள் திரும்பிப் பார்க்க ” வா சாப்பிடலாம் ” என அழைத்தான் .உடன் வாசுகியின் முகம் வெளுத்தது.

 




” இல்லை எனக்கு சாப்பாடு வேண்டாம் ” 

 

” ஏன் ? ” 

 

” இந்த வீட்டில் எதையும் சாப்பிடவே எனக்கு பயமாக இருக்கிறது ” வாசுகியின் பதிலில் குமுறிய அழுகையை மங்கை புடவைத் தலைப்பால் வாயை பொத்தி அடக்கிக் ” கொள்ள தேவராஜன் கோபமாக அவளைப் பார்த்தான்.

 

” ஏய் உளராதடி எழுந்து வா ” அதட்டினான்.

 

” மாட்டேன் அதில் விஷம் கலந்திருக்கிறது ” தேவராஜனின் முகம் இறுகியது .

 

.” இப்படித்தான் அண்ணா எங்கள் எல்லோரையும் கொலைகாரர்களை பார்ப்பது போன்றே பார்க்கிறார்கள் .எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது ” சோகமாக பேசினாள் திலகா.

 

” அதெல்லாம் ஒன்றும் இல்லை திலகா .நீ ஒரு தட்டில் இட்லி வைத்துக் கொண்டு போய் உன் அண்ணிக்கு  கொடு “தமயன் சொல் தட்டாத தங்கையாய் பணிந்தால் திலகா.

 

வாசுகியின் கையில் கொடுக்கப்பட்ட தட்டு   அவளால் கீழே விட்டெறியப்பட தேவராஜன் ஆத்திரம் பலமடங்கு பெருகியது .கையை மடக்கி டேபிளில் வேகமாக குத்தியவன் வேகமாக வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.

 

மீண்டும் தேவராஜன் இரவுதான் வீடு திரும்பினான் . ” ஏதாவது சாப்பிட்டாளா ? ” உள்ளே வந்ததும் அவன் கேட்ட முதல் கேள்வி இதுதான்.

 

” இல்லை எதைக் கொடுத்தாலும் அதில் விஷம் இருக்கிறது என்கிறாள் ” மங்கையின் குரல் தழுதழுத்தது

.

 

தேவராஜன் மௌனமாக அடுப்படிக்கு போய் தட்டில் சாப்பாடு போட்டு பிசைந்து  எடுத்துக் கொண்டு வந்தான் .ஹாலில் அமர்ந்திருந்த வாசுகியின் அருகே உட்கார்ந்து கொண்டு சாப்பிடத் தொடங்கினான். இரண்டு வாய் சாப்பிட்டதும் மூன்றாவது  கவளத்தை வாசுகிக்கு நீட்டினான்.

 

” வசு நான் சாப்பிடுகிறேன் இல்லையா …நீயும் சாப்பிடு .” தான் சாப்பிட்டுக் கொண்டே அவளுக்கும் கொடுத்த கணவனை மறுக்கமுடியாமல் வாசகி வாயை திறந்தாள். தேவராஜன் ஊட்ட ஊட்ட  உண்டு முடித்தவள் அயர்வுடன் சோபாவில் சரிந்து கொண்டாள்.

 

” வசு எழுந்திரிடா .நம் ரூமில் போய் படுத்துக் கொள்ளலாம் ” தேவராஜன் அவள் தோள் பற்றி அசைத்தான்

 

” இல்லை நான் இங்கு தான் படுத்துக் கொள்ள போகிறேன் ” வாசுக போர்வையால் தன்னை முழுவதுமாக மூடிக் கொண்டாள் .முகத்தில் அறை வாங்கியது போல் துடித்துப் போனான் தேவராஜன் .அருகில் நின்றிருந்த தாய் தங்கை தம்பி முகம் காண கூசி மாடிக்கு ஏறினான்.

 

மறுநாளும் இதுவே தொடர ,வாசுகி மெல்ல அந்த வீட்டில் பழகத் தொடங்கினாள் .அவளுக்கான உணவை அவளே தயாரித்துக் கொண்டாள் . வீட்டிலுள்ளவர்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினாள் . ஆனால் தேவராஜன் உடன் மட்டும் கொஞ்சம் தள்ளியே இருந்தாள் .முக்கியமாக அவனை தனிமையில் சந்திப்பது இல்லை. அவனது அறைக்கு செல்வதே இல்லை .எதிரெதிர் சந்திக்க நேரும் தருணங்களில் தம்பதிகள் இருவரும் உணர்ச்சியற்ற முகத்துடன் ஒருவரை ஒருவர் அளந்து கொள்வார்கள் .பிறகு விலகிச் சென்று விடுவார்கள்.

 

” இதற்குத்தான் நம் கல்யாணம் வேண்டாம் என்றேன் ” இப்படி அடிக்கடி தேவராஜன் காது பட முனுமுனுத்தாள் .அவன் அதனை கண்டுகொள்ளாமல் நகர்ந்து சென்றான்.

 




அன்று வீட்டிற்குள் நுழையும்போதே ” வாசுகி ”  என்று அழைத்தபடி வந்தான் தேவராஜன் .  அடுப்படி வாசலில் வந்து நின்றவளை ” கிளம்பு .வெளியே போய் வரலாம் ” என்றான்.

 

நகராமல் நின்று ” எங்கே ? ” என்றாள்.

 

” கோவிலுக்கு போய்விட்டு வரலாம் .போய் சேலை மாற்றிக் கொண்டு வா ” 

 

வாசுகி கொஞ்சம் தயங்கி நின்று விட்டு பிறகு உள்ளே போனாள் .அவள் தனது உடைமைகளை மங்கை திலகா அறையில்தான் வைத்திருந்தாள் .அந்த அறைக்குள் சென்று அவள் கதவை மூடி கொண்டதும் மங்கை மகனிடம் குரலை குறைத்து பேசினாள்.

 

“. தேவா இப்போது இவளை எங்கே அழைத்துப் போகப் போகிறாய் ? ” 

 

” கோவிலுக்குத்தான் அம்மா ” 

 

” அண்ணா எனக்கென்னவோ அண்ணியை நீங்கள் ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டிடம் அழைத்துப் போவது நல்லது என்று தோன்றுகிறது ” கௌதம் சொன்னான்.

 

” அவளுக்கு பைத்தியம் என்கிறாயா ?” தேவராஜன் தம்பியை குத்துவது போல் பார்த்தான்.

 

” அப்படிச் சொல்லவில்லை அண்ணா .அப்படியே இருந்தாலும் இது ஆரம்ப நிலைதான் .இப்போது ட்ரீட்மெண்ட் கொடுக்க ஆரம்பித்தால் சீக்கிரமே சரியாகிவிடும் ” 

 

” வேண்டாம் கௌதம் .எனக்கு அவளை தெரியும் .நீ இப்படி பேசாதே…..” 

 

” அப்படி உனக்கு என்ன தெரியும் தேவா ? வாசுகியின் அப்பாவை பார்க்கப்போன இடத்தில் இவளை பார்த்து விட்டு பிடித்திருப்பதாக என்னிடம் வந்து சொன்னாய் .உனக்கு பிடித்த பிறகு வேறு என்ன பேசுவது என்று நானும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தேன். நாம் அவர்கள் குடும்பத்தையோ அவளைப் பற்றியோ கூட  எதுவுமே விசாரிக்கவில்லை .இப்போது இவள் நடந்து கொள்வதைப் பார்த்தால்…” 

 

” போதும் அம்மா மேலே எதுவும் பேசாதீர்கள் .நீங்கள் நினைப்பது போல் நிச்சயம் எதுவும் கிடையாது .நான் வசுவிடம் பொறுமையாகப் பேசி அவள் பிரச்சனையை கேட்கிறேன் ”  தேவராஜன் முடித்துவிட எல்லோரும் கலைந்து சென்றனர்.

 

” வாசகி ரெடியா ? ” அவள் இருந்த அறைக்கதவை தட்ட ”  ம் …” என்ற மெலிதான குரலோடு தாழ்பாளை திறந்து விட்டாள் வாசுகி . தேவராஜன் உள்ளே பார்க்க  மிகப்பெரிய பட்டு சேலை ஒன்றை அரைகுறையாக உடம்பில் சுற்றிக்கொண்டு மடிப்பு வைக்க தெரியாமல் விழித்த படி நின்றிருந்தாள் .

 

” இந்த சேலை கட்டவே வர மாட்டேங்குதுங்க ”  புகார் கூறி மூக்கை சுருக்கினாள் .

 

தேவராஜனின் முகத்தில் இறுக்கம் போய் புன்னகை வந்தது. ”  இப்போது எதற்கு இந்த சேலையை கட்ட  எடுத்தாய் ? ” 

 

” நீங்கள் கோவிலுக்கு கூப்பிட்டீர்கள் . அதுதான் பட்டு கட்டுவோம் என்று… இந்த பிளிட்டை மட்டும் கொஞ்சம் கீழே எடுத்து விடுங்களேன் ப்ளீஸ் ” சேலையின் முன் கொசுவத்தை காட்டினாள்.

 

தேவராஜன் அவளை நெருங்கி அவள் கையில் இருந்த சேலையை மெல்ல உருவினான் .” இவ்வளவு தொந்தரவு தரும்  இந்த சேலை நமக்கு வேண்டாம். நீ வேறு ஏதாவது உனக்கு உடுத்துவதற்கு இலகுவான உடையைப் போட்டுக் கொள் ” 

 

” நிஜமாகவா அப்போது சுடிதாரே போட்டுக் கொள்ளட்டுமா ? ” 

 

” உன் இஷ்டம் தான்டா ” 

 

” சரி எந்த சுடிதார் போட்டுக் கொள்ளட்டும் ?  செலக்ட் செய்து கொடுங்கள் ” தனது பெட்டியை அவன் பக்கம் திருப்பி திறந்தவள் அப்போது தான் அதனை உணர்ந்தாள் .அவளது சேலை அவன் கையில் இருக்க அவனது பார்வை அவள் மேல் இருந்தது.

 

 

வேகமாக அருகிலிருந்த துண்டினால் தன்னை மறைத்துக் கொண்டவள் ” நீங்க வெளிய போங்க நான் டிரஸ் மாத்திட்டு வருகிறேன் ” என்றாள்.

 

” வசு ”  உணர்ச்சி பொங்கிய குரலில் அழைத்தபடி அவள் தோள் தொட்டான் தேவராஜன். ”  ப்ளீஸ் தேவ் வெளியே போங்க ” சிணுங்கினாள் வாசுகி.

 

” ஏய் எப்படி கூப்பிட்டாய் ? இது இரண்டாவது தடவை என்னை நீ இப்படி அழைப்பது . முதல் தடவை உன் ப்ரெண்டை  பார்க்க போன போது ஆஸ்பத்திரியில் வைத்து …பிறகு இப்போது . இந்த அழைப்பு நமக்குள் ஒரு அந்நியோன்யத்தை தருகிறது  வசு ” 

 

” உங்களது இந்த வசு போலவா ? ” 

 

” ஆமாம் .இனி நாம் இப்படியே கூப்பிட்டுக் கொள்ளலாமா வசு ? ” 

 

” சரி தேவ் ” 

 

இருவருமாக கொஞ்சி கரைந்து பேசியபடி வெளியே கிளம்பினார்கள் .கோவிலுக்கு போய் விட்டு , சினிமாவிற்கும் போய்விட்டு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்ப நள்ளிரவு ஆகி விட்டது .

 

” அம்மா தூங்கிவிட்டார்களானால் எழுந்திருக்க மாட்டார்கள் .திலகாதான் கதவு திறக்க வருவாள் ” இரு முறை பெல் அடித்த பின்னும் திறக்கப்படாத தன் வீட்டுக் கதவை பார்த்தபடி சொன்ன தேவராஜன் வீட்டின் முன் விளக்கு கூட எரியாத இருள் சூழ்நிலையை உபயோகித்து சட்டென வாசுகியை இழுத்து அணைத்தான் .

 

” வசு …இன்று நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். இன்று உன்னை மட்டுமல்ல என்னையே நான் உணர்ந்து கொண்டேன் .நன்றி வசு ..” தேவராஜனின் உதடுகள் வாசுகியின் தோளில் பதிந்தது.

 




” விடுங்க என்ன இது  வெளியிடத்தில் …? ” ஆட்சேபம் காட்டிய வாசுகி கண்களை இறுக மூடி கணவனது அணைப்பை உள்வாங்கிக் கொண்டு இருந்தாள்.

 

பட்டென வீட்டுக் கதவு திறக்கப்பட தொடர்ந்து வாசல் விளக்கும் எரிய ,்அவசரமாக பிரிந்தனர் தம்பதிகள் .திறந்த கதவின் பின்னால் மங்கை நின்றிருந்தாள்.

 

” அம்மா இன்னும் தூங்கவில்லையா நீங்கள் ? நான் திலகாதான் வருவாள் என்று நினைத்திருந்தேன் ” தேவராஜன் இயல்பாக பேச மங்கையின் வெறித்த பார்வைக்கு வாசுகியின் உள்ளங்கைகள் வியர்வையில் கசகசத்தது.

 

” நல்லவேளை நான் வந்தேன் .அவள் வயதுப்பெண் …” தொடர்ந்து இதே ரீதியில் ஏதோ முனகியபடி மங்கை உள்ளே போக தேவராஜன் சமாதானமாக வாசுகியின் தோளை தொட்டான்.

 

சட்டென அவன் கையை உதறியபடி வேகமாக வீட்டிற்குள் சென்று தனது வழக்கமான ஹால் சோபாவில் படுத்துக்கொண்டாள் வாசுகி. அருகில் வந்து நின்று ” வசு ”  என்ற தேவராஜனின் அழைப்பிற்கு சிறிதும் அசையவில்லை அவள்.




 

What’s your Reaction?
+1
21
+1
14
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!