Serial Stories பெண்ணின் மனதை தொட்டு

பெண்ணின் மனதை தொட்டு-16

16

மதிய உணவு வேளையில் “சாப்பிட வாம்மா” சௌபாக்கியம் அழைக்க அதே நேரத்தில் மகதியின் போன் ஒலித்தது. மீனாட்சி சாப்பிட வரும்படி அழைத்தாள். “அத்தை நான் இங்கே…” மகதி எதிர்பார்ப்போடு நின்றிருந்த அன்னையைப் பார்த்தபடி தடுமாற, எதிர்ப்புறம் மீனாட்சி “சாப்பாடு எடுத்துட்டு போயி குணாவுக்கும் தர்றியாமா?” என கேட்டாள்.

” அவர் சாப்பிட வீட்டிற்கு வர மாட்டாரா அத்தை? “

“இல்லைம்மா ஆஸ்பத்திரியிலேயே ஒரு ரூம் தயார் செய்து வைத்திருக்கிறான். அங்கே பக்கத்தில் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு அங்கேயே கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொள்வான். காலையில் போனால் இரவுதான் திரும்ப வருவான்”

 இவ்வளவு பக்கத்திலிருந்து கொண்டு அங்கேயே இருப்பதென்ன… மகதி கிளம்பி விட்டாள். “அம்மா நான் அவருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அங்கேயே சாப்பிட்டு விடுகிறேன்” தன் பதிலை கூட எதிர்பாராமல் ஓடிய மகளை புன்னகையுடன் பார்த்து நின்றாள் சௌபாக்கியம்.

” சாப்பிடலாம் வாங்க” தன் முன்னால் டிபன் பாக்ஸை வைத்த மகதியை வியப்பாய் நிமிர்ந்து பார்த்தான் குணாளன்.

“ஹேய்  நீ எப்போது வந்தாய்? உன்னுடைய கிளாஸ் என்னாயிற்று?”

” லஞ்ச் டைம் டாக்டர் சார்.மத்தியானம் வீட்டில் சாப்பிட மாட்டீங்கன்னு கேள்விப்பட்டேன். சரி நானே சாப்பாடு கொடுக்கலாம்னு வந்தேன்”

” எதற்காக மகதி அலைகிறாய்? நான் இங்கேயே ஏதாவது சாப்பிட்டுக் கொள்வேனே”

” ராணுவத்தில் இருந்த போதுதான் கொடுப்பதை சாப்பிட வேண்டிய தலையெழுத்து. இங்கே அப்படி இல்லையே” இலையை விரித்து டிபனை பிரித்து பரிமாற தொடங்கினாள்.

” அதெல்லாம் வேண்டாம். நீயும் உட்கார். ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்” வேண்டாம் என்றானே தவிர மகதி இப்படி வருவதை குணாளனும் மிகவுமே விரும்பினான் என்பதனை அவன் முகமே காட்டியது.

 ஒற்றைக் கட்டிலோடு ஒரு சிறிய அறையை அவனது ஓய்வு நேரங்களில் உபயோகிப்பதற்காக தயார் செய்து வைத்திருந்தான். அந்த அறைக்குள் அமர்ந்தபடி கணவனும் மனைவியும் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினாள் மகதி.




” மகிம்மா”  பின்னால் அண்ணனின் குரல் கேட்டு திரும்பிய மகதி மலர்ந்தாள்

” அண்ணா உள்ளே போகும்போது உங்களை கவனிக்கவே இல்லையே” புன்னகை முகத்துடன் மருந்து கடையில் நின்றிருந்த அண்ணன் அருகே சென்றாள்.

” மகாராணி அம்மா பல்லக்கிள்ல  போனீங்க! எப்படி பார்த்திருப்பீங்க?” நொடித்தாள் அருகில் நின்றிருந்த ரூபாவதி.

 “நீ டாக்டர் சாருக்கு சாப்பாடு கொண்டுட்டு போனியேம்மா. அதுதான் கூப்பிடாம விட்டுட்டேன்” 

“நானும்  அவருக்கு பசிக்கும்னு அவசரமா போனதில் உங்களை கவனிக்கவில்லை” தனது குத்தல் பேச்சை கவனிக்காமல் அண்ணனும் தங்கையும் தொடர்ந்து பேசிக்கொண்டே போக ரூபாவதி எரிச்சலின் உச்சத்திற்கு சென்றாள்.

 லேசாக சிவந்த முகத்தில் உற்சாகம் ததும்ப நடமாடிக் கொண்டிருந்த நாத்தனாரை அவளுக்கு துப்புரவாக பிடிக்கவில்லை. அதுவும் சற்று முன் உரிமையுடன் கம்பீரமாக இந்த ஹாஸ்பிடல் படியேறி போனவள் ரூபாவதியினுள் பூகம்பத்தை உருவாக்கி விட்டு சென்றிருந்தாள். 

ஆக இப்போது இவள் ஆஸ்பத்திரி உரிமையாளினி. நான் இவள் வேலைக்காரியா? அங்கே வீட்டிலும் இடத்தை விடாமல் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். இங்கே வேலை பார்க்கும் இடத்திற்கும் உரிமை காட்டிக் கொண்டு வந்து விட்டாள். ரூபாவதியின் மனம் தணல் மேல் நீராக கொதித்தது.

” பார்த்து பத்திரமா  போம்மா” கரிசனமாய் தங்கையை வழியனுப்பி வைத்த கணவனை கோபமாய் பார்த்தான். “உங்க தங்கை பெரிய டாக்டரம்மா ஆகிட்டாங்க. இனிமே நம்ம வீட்ல பள்ளிக்கூடம் நடத்த அவசியம் இருக்காது. சீக்கிரமே காலி பண்ணிட்டு போகச் சொல்லுங்க”

 மனைவியை ஏற இறங்க பார்த்த தமிழ்ச்செல்வன் “இதை நீயே அப்பாவிடம் சொல்லிவிடு” என்று விட்டு மருந்து சீட்டுக்கு மருந்துகளை எடுத்து வைக்க தொடங்கினான்.

 ரூபாவதிக்கு மாமனாரை பற்றி தெரியும். முதலிலிருந்தே என்னுடைய சொத்துக்கள் என் இரண்டு பிள்ளைகளுக்கும் சரி பாதிதான் என்று சொல்லிக் கொண்டிருப்பவர். மாடியிலும் பாதியை மகனுக்கு வசதியான பெரிய அறையாக கட்டிக் கொடுத்தவர் வெற்றிடத்தை கூரை போட்டு மகளுக்கு ஒதுக்கியிருந்தார். அவரிடம் போய் ஏதாவது பேசினாலே உன் சம்பாத்தியமா என்று நிச்சயம் கேட்பார்.பல திட்டங்களை மனதிற்குள் போட்டுப் போட்டு பார்த்து அழித்துக் கொண்டிருந்தாள் ரூபாவதி. 

“டாக்டர் சார் உள்ள இருக்காங்களா?” மூங்கில் கூடையில் ஈரத் துணியை போட்டு மூடி இடுப்பில் இடுக்கிக் கொண்டு நின்றபடி கேட்டார் அந்த பூக்காரப் பாட்டி. மருத்துவமனை தெரு ஓரமாக பூ விற்றுக் கொண்டிருப்பவர். 

மருந்து விபரங்கள் தமிழ்செல்வனிடம் பேசிக் கொண்டிருந்த சியாமளா திரும்பி பாட்டியை பார்த்து “உள்ளதான் இருக்காரு பாட்டி. என்ன விஷயம்?” என்றாள்.

” புதுசா கல்யாணம் முடிச்சிருக்காருல்ல, என் கையால கெட்டியா மல்லிகை பூ கட்டி கொண்டு வந்திருக்கிறேன். டாக்டர் கிட்ட கொடுக்கப் போறேன்”  பாட்டியின் சுருக்கம் விழுந்த முகத்திலும் அநியாய வெட்கச்சிவப்பு.

” அட நீங்க ஏன் பாட்டி வெக்கப்படுறீங்க ?”

“என் கை ராசியான கை சிஸ்டர். நான் பூக்கட்டி கொடுத்த புருஷன் பொண்டாட்டிக்கு பத்து மாசத்துல குழந்தை பிறந்துடும் தெரியுமா?” பாட்டி கித்தாய்ப்பாய் தலை நிமிர, சியாமளா ரூபாவதியிடம் சீண்டினாள்.




” மல்லிகை பூவால் பிள்ளை பிறக்குமா ரூபா? நாம இந்த மெடிக்கல் ஃபீல்டுலதான் இருக்கிறோம். நமக்கு அப்படி எந்த விபரமும் தெரியாதுதானே?”அப்பாவியாய் கண் சிமிட்டியவளை  பிடிக்காமல் போக  “உள்ளே போங்க பாட்டி” வெடுவெடுத்தாள் ரூபாவதி.

” நல்லா வாங்கி கட்டிக்கிட்டு வரட்டும் கிழவி” முணுமுணுத்தாள் முன்பொரு  முறை சாமி படத்திற்கு பூ வேண்டுமா என்று கேட்டு போய் குணாளனிடம் திட்டு வாங்கி வந்திருக்கிறார் பாட்டி. ஆனாலும் ஒரு நாள் டாக்டர் ஐயாவுக்கு என் கையால பூக்கட்டி கொடுக்கத்தான் போறேன் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்.

 இந்த கரிசனத்தின் காரணம் சிறிய விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட பாட்டியின் கணவருக்கு பைசா வாங்கிக் கொள்ளாமல் இலவசமாக தனது மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து  சரி செய்திருந்தான் குணாளன். அந்த நன்றி உணர்ச்சியை தான் கட்டிய பூக்களின் மூலம் தீர்த்துவிட துடித்திருப்பார் பூக்கார பாட்டி.

அதனை உணர்ந்தோ என்னவோ அவரிடம் ஒரு நாளும் பூ வாங்கிக் கொள்ள மாட்டான் குணாளன். இன்றோ…

வெற்றிகரமான நிமிர்ந்த நடையுடன் உள்ளிருந்து வெளிவந்தார் பாட்டி. “டாக்டரய்யா பூ வாங்கிக்கிட்டாரு. பாருங்களேன் பத்தாம் மாசத்துல உங்களுக்கு மருமகன் வந்துடுவான்” தமிழ்ச்செல்வனிடம் கூறிவிட்டு போனார்.

” பாத்தீங்களா தமிழ் சார் இந்த கல்யாணம் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாத்துதுன்னு! இன்னைக்கு என்கிட்ட நம்ம ஊர்ல நல்ல ஸ்வீட் கடை எதுன்னு டாக்டர் சார் கேட்டுட்டு இருந்தாரு. அப்போ இன்னைக்கு ஸ்வீட்டும் பூவும் புது பொண்டாட்டிக்கு. ஆனாலும் நம்ம டாக்டர் சார் இப்படி மாறுவார்று நான் நினைத்தே பார்க்கலை” மகிழ்ச்சியாய் சலித்தபடி போனாள் சியாமளா.

” கண்ணு வைக்காதீங்க சிஸ்டர்” சொன்ன தமிழ்ச்செல்வனின் முகத்தில் மிகுந்த மகிழ்ச்சி.

 சுற்றி நடப்பவை எல்லாமே ரூபாவதிக்கு பிடிக்காததாகவே இருக்க அவள் பொறுமையை சோதிக்கும்படி வந்தது அந்த போன் கால். சௌபாக்கியம் பேசினாள் .ஒரு முக்கிய வேலையாக சொந்தக்காரர்கள் வீட்டிற்கு அவர்கள் செல்ல இருப்பதால் ரூபாவதி கடையிலிருந்து சீக்கிரம் வந்து ராகவை பள்ளியிலிருந்து கூட்டிக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு வைத்தாள்.

” நீ கிளம்பு ரூபா. இங்கே நான் பார்த்துக்கொள்கிறேன்” தமிழ்ச்செல்வன் சொல்ல பொறுமியபடி ஆட்டோ பிடித்தாள். 

“ஏண்டா இப்படி தலை கலைந்திருக்கு?”  காரணமே இல்லாமல் மகனின் முதுகில் இரண்டு வைத்தாள். வியர்க்க விறுவிறுக்க வீட்டிற்கு வந்தவள் அங்கே மடிப்பு கலையாத புடவையுடன் ஒப்பனை கலையாத முகத்துடன் வார்த்தெடுத்த சிலையாய் நின்றபடி பாடம் எடுத்துக் கொண்டிருந்த மகதியை பார்த்ததும் மிகுந்த எரிச்சலுற்றாள்.

” சரி கிளம்புங்க,நாளை பார்க்கலாம்” மாணவர்களை அனுப்பிய மகதி ரூபாவதியை பார்த்து “என்ன அண்ணி ரொம்ப டயர்டா தெரியுறீங்க?” என்க ரூபாவதியின் ஆத்திரம் கூடியது.

” என்னம்மா செய்வது, உன்னை போல் இப்படி தளுக்காக சேலை உடுத்தி குலுக்கி நடந்து பெரிய இடத்தையெல்லாம் வளைத்து போடும் வித்தை எனக்கு தெரியவில்லை பாரேன். வெயிலிலும் வேர்வையிலும் இப்படி கரையனும்னு தலையெழுத்து எனக்கு”

” அண்ணி வார்த்தைகளை யோசித்துப் பேசுங்க”

“எதை யோசிக்கவில்லை நான்? உண்மையைச் சொல் அந்த பக்கத்து வீட்டு டாக்டரை வளைத்து போடுவதற்காக தானே இப்படி விதவிதமாக சேலை கட்டிக்கொண்டு கவர்ச்சியாக அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தாய் நீ?”

” அண்ணி என்ன பேசுகிறீர்கள்?” மகதி கத்திக் கொண்டிருந்தபோதே… “கிளம்பலாமா மதி?” என்று குணாளனின் குரல் கேட்டது.

 இருவரும் திரும்பி பார்க்க முதல் மாடிப்படியில் நின்றிருந்தான் அவன். நிச்சயம் இவர்கள் பேசியதை கேட்டிருப்பான். மகதியின் முகம் அவமானத்தில் சிவந்தது.

 இவனென்ன இப்போதே இங்கு வந்து நிற்கிறான்… அவ்வளவு அவசரம் பொண்டாட்டியை பார்க்க! உள்ளுக்குள் கடுத்தாலும் ரூபாவதி உள்ளதைச் சொன்னேன் என்று திமிராகவே முகத்தை வைத்துக் கொண்டாள்.

 குணாளன் மகதியின் கையை இறுகப்பற்றி “வா நம் வீட்டிற்கு போகலாம்” என்று கிளம்பினான்.

” டாக்டர் சார் எங்க மகி இதெல்லாம் உங்களுக்காக தான் செய்தாள். தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” முத்தாய்ப்பாக பேசி அனுப்பினாள் ரூபாவதி.




What’s your Reaction?
+1
46
+1
23
+1
1
+1
0
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!