Serial Stories

கோகுலம் காலனி-20

20

தடதடவென அடித்த நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டு காலிங்பெல்லின் சத்தத்திற்கு கதவை திறந்தாள் செண்பகம் .இமைக்க மறந்து ப்ரீஸ் ஆன பனி பொம்மையாய் கண்கள் நிலை குத்த அப்படியே நின்றாள் .

” அம்மா …” வாசலில் நின்றிருந்த முரளி இரு கை நீட்டி அலறலாய் குரல் கொடுத்தான் .செண்பகம் நீண்ட மகனின் கைகளை பற்றிக் கொள்ளாமல் அசையா விழிகளுடன் மெல்ல பின் நகர்ந்தாள் .

” அம்மா …” பரிதவிப்பாய்  வந்த முரளியின் அலறல் இன்னும் சிறிது உயர்ந்தது .அருகே நின்றிருந்த சுந்தராம்பாள் முரளியின் சட்டைக் காலரை பற்றி இழுத்து வீட்டினுள் விட்டாள் .

” வாசலில் நின்று என்னடா கூச்சல் …? உள்ளே வந்து தொலை …” முரளியின் பின்னாலேயே நந்தகுமாரும் , ராகவியும் வரவும் கதவை அழுத்தி பூட்டினாள் .எதற்கும் இருக்கட்டுமென வாசல்புறமாக இருந்த இரண்டு சன்னல் கதவுகளையும் பூட்டினாள் .

” கத்தி அழுது வெளியில் தெருவில் கேட்கிற மாதிரி ஏதாவது கலாட்டா செய்தீர்களானால் அம்மாவும் , மகனும் என்னிடம் உதை படுவீர்கள் ” விரலாட்டி எச்சரித்தாள்.

முரளி தன் அம்மாவை பரிதாபமாக பார்த்தபடி நின்றிருக்க செண்பகம் மகனை பார்க்க விரும்பாது சுவர் புறம் முகத்தை திருப்பியிருந்தாள் .

” டேய் முரளி போய் காலில் விழுடா …” நந்தகுமார் கிசுகிசுத்த மறு நொடி முரளி சிறு ஓட்டத்துடனான வேகத்துடன் செண்பகத்தின் கால்களை பற்றியிருந்தான் .

” அம்மா என்னை மன்னிச்சுடுங்கம்மா .நான் தெரியாமல் தப்பு பண்ணிட்டேன் …” 

செண்பகம் வாய் திறக்கவில்லை . முகத்தை திருப்பவில்லை .




” அம்மா சாரிம்மா .புத்தி கெட்டுப் போய் …தப்புத் தப்பாக ஏதேதோ செய்துட்டேன்மா .இனி இப்படி தப்பு வழி போக மாட்டேன்மா …” 

அடித்து வைத்த சிலையாக அசையாமல் நின்றிருந்தாள் அவள் .கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தபடி இருந்தது .

” அம்மா ப்ளீஸ் அழாதீங்கம்மா .என்னை திட்டுங்கம்மா .அடிக்க கூட செய்ங்கம்மா .ஆனால் நான் செய்த தப்புக்கு நீங்க அழாதீங்கம்மா …” செண்பகம் தன் நிலை மாறினாளில்லை .

” ஏய் செண்பா போதும்டி .புள்ளை கால்ல கிடந்து இந்தக் கதறு கதறுது .அசையாமல் நிற்கிறாயே …அத்தனை கல் நெஞ்சக்காரியாடி நீ …? புள்ளையை தூக்குடி …” சுந்தராம்பாள் அதட்ட செண்பகம் பெரிதாக கேவினாள்.

” இவன் மேல் நான் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன் சுந்தரி .இவன் இப்படி பண்ணிட்டானே …” 

” என்ன பெரிதாக பண்ணிட்டான் …? இந்தக் காலத்தில் இந்த கண்றாவியை  செய்யாத பிள்ளை யார் இருக்கிறார்கள் …? நல்லவேளை உன் பிள்ளை சரியான நேரத்தில்  முழிச்சிக்கிட்டு உன்கிட்டேயே திரும்ப வந்துட்டானே …அந்த அளவு புத்தியுள்ள பிள்ளையாக இருக்கிறானேன்னு சந்தோசப்படுடி ….” 

” அம்மா நான் இனி தப்பு பண்ண மாட்டேன்மா .உங்களையெல்லாம் விட்டுட்டு போக மாட்டேன்மா .என்னை மன்னிச்சுடுங்கம்மா ” 

” உன்னை மன்னிக்க நான் யாருப்பா …? நீயெல்லாம் இப்போ பெரிய மனுசன் ஆகிட்ட .அம்மா , அப்பா , தங்கையெல்லாம் உனக்கு மூணாம் மனுசங்களாகிட்டோம் .எவளோ ஒருத்திதான் முக்கியமானவளா போயிட்டா …” 

” இல்லை ஆன்ட்டி .நீங்க நினைக்கிறது  தப்பு .முரளி இன்று இங்கே திரும்ப வந்திருப்பதற்கு காரணம் ராகவிதான் .தங்கை மேல் இருக்கிற பாசத்தினால்தான் அவன் போட்ட எதிர்கால   வாழ்க்கை  திட்டத்தையெல்லாம் உதறி விட்டு வந்து இப்போது உங்கள் கால்களில் கிடக்கிறான் ” 

செண்பகம் கலங்கிய கண்களோடு ராகவியை பார்க்க அவள் ஆமோதிப்பாய் தலையசைத்தாள் .” ஆமாம் அம்மா .அண்ணன் என்னைப் பார்த்த உடனே அந்த ரேகாவை தள்ளி விட்டு விட்டான் .என் தங்கை எனக்கு முக்கியமென்று ரேகாவிடமே சொன்னான்மா . நான் கூப்பிட்ட உடன் என்னோடு வந்துவிட்டான் ” 

செண்பகத்தின் முகத்தில் ஒளி வந்த்து . அவள் குனிந்து தன் காலடியில் கிடந்த மகனை பார்த்தாள் .முரளி சிறு பிள்ளை போல் இரு கைகளையும் உயரத் தூக்க  , அந்தக் கைகளை பற்றி தன் மகனை எழுப்பியவள் கதறலோடு அவனை அணைத்துக் கொண்டாள் .தாய் , மகனை திருப்தியாக பார்த்த மற்ற மூவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர் . 

” எல்லோருக்கும் காபி போட்டு வா ராகவி …” நந்தகுமார் சொல்ல ராகவி விழித்தாள் .ஐய்யய்யோ நேற்று காபி போட செல்லித் தந்தானே …அது மறந்துடுச்சே …நகம் கடித்தாள் .

” காபி போடச் சொன்னால் ஏன்டி இந்த முழி முழிக்கிற …? அங்கே பாரு அம்மாவும் , மகனும் மாத்தி மாத்தி அழுது தள்ளுறாங்க .இன்னும் ஐந்து நிமிசத்துல நிச்சயம் தொண்டையில இருந்து கீச்சுன்னு கூட சத்தம் வராது .அப்போ தொண்டையை நனைக்க கொஞ்சம் காபி போடுன்னா , இப்படி  முழிச்சிட்டு நிக்கிற …? ” 

சுந்தராம்பாளின் அதட்டலில் ராகவிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்த்து .” சை …முதலில் இந்த அம்மாவையும் , மகனையும் வீட்டை விட்டு விரட்டனும் .அடுத்தவர் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு அதிகாரத்தை பார் …” முணுமுணுத்தபடி அடுப்படிக்குள் போய் நங்கென்ற சத்தத்துடன் பாத்திரத்தை அடுப்பில் வைத்தாள் .

உதவிக்கு வருவானா …நப்பாசையுடன் எட்டி பார்க்க நந்தகுமார் தீவிரமாக தாயுடன் ஏதோ பேசியபடி இருந்தான் .அவன் வரமாட்டான் …வேண்டுமென்றே இருக்கிறான் .போயேன் எனக்கென்ன …? என்னால் முடியாதா என்ன …? கோபத்தில் கொதித்தபடி காபி கலந்தாள் .

ஞாபகமாக நந்தகுமாரின் காபி கப்பில் கொஞ்சம் கூட சீனி போடாமல் , கலந்து கப்பில் ஊற்றினாள் . கையில் வந்த காபி கப்பை கொஞ்சம் சந்தேகத்துடன் பார்த்தபடி வாங்கினாள் சுந்தராம்பாள். 

” வாய்ல வைக்க முடியும்ல ? ” ஒரு மாதிரி இளித்து அவளது கேள்வியை சமாளித்து விட்டு நந்தகுமாருக்கு கொடுக்க அவன் அவளது சுடிதாரை சுட்டிக்காட்டி கேட்டான் .

” என்னதிது ….? ” 

முதல்நாள் அவன் செய்தது போன்றே நுரை பொங்கும் காபிக்கு ஆசைப்பட்டு காபியை உயர்த்தி ஆற்றி கீழே , மேலே , தன் மேலெல்லாம் சிந்தி வைத்திருந்தாள் .

” போடா …” அம்மா அறியாமல் மகனுக்கு வாயசைத்து விட்டு காபியை அண்ணன் , அம்மாவிற்கு எடுத்து போனாள் .




இவன் எப்படி அந்த ரேகாவை சமாளித்தான் …? ராகவிக்கு மண்டை வெடித்து விடும் போல் இருந்தது. முரளியையும் , நந்தகுமாரையும் மாறி மாறி பார்த்தாள் .முரளிக்குமே அந்த விபரம் தெரியாதுதான் .நந்தகுமார் அறைக்குள் ரேகாவிடம் பேசியது பத்திலிருந்து இருபது நிமிடங்கள் இருக்கும் .முரளியும் , ராகவியும் அது வரை அறைக்கு வெளியே இருந்தனர் .

அறைக்கதவை திறந்து வெளியே வந்த நந்தகுமாரின் கையில் பேக் இருந!தது. அது முரளியின் பேக் .அதை அவன் கையில் கொடுத்தவன் ” கிளம்பலாம்டா ” என்றான் .

” ரேகா…வந்து …அவளிடம் சொல்லிவிட்டு …” முரளி தயக்கத்தோடு அறைக் கதவை பார்க்க ரேகா வெளியே வந்தாள் . கையில் அவளுடைய பேக்கை வைத்திருந்தாள. கொதிக்கும் குழம்பை  உள் வைத்திருந்த மலையை போன்று கடினமாக இருந்தாள் .

” நாளை காலை வரை இந்த ரூமுக்கு வாடகை கொடுத்திருக்கறோம் ரேகா ….அதனை கேன்சல் செய்து விடலாமா …? ” முரளி பவ்யமாக கேட்க …

” வாயை மூடுடா …” கத்தினாள்.” உன் வேலைக் கழுதையை பார்த்துக் கொண்டு போ .என்னை பார்த்துக் கொள்ள எனக்கு தெரியும் .இனி என் கண் முன்னால் வந்து விடாதே …” டக் டக்கென நிமிர்ந்த தலையுடன் நடந்து போய்விட்டாள் .

என்ன பேசியிருப்பான் …? எப்படி சம்மதித்தாள் …? இந்நேரம் அவளும்  வீட்டிற்கு திரும்பியிருப்பாள்தானே …? 

அவனும் கேட்கிற மாதிரி தெரியவில்லை .இவனும் சொல்கிற மாதிரியும் தெரியவில்லை .கல்லுளிமங்கனுங்க மாதிரி இரண்டு பேரும் உட்கார்ந்திருக்காங்களே …

ராகவிக்கு முடியை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்த்து …




What’s your Reaction?
+1
25
+1
15
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!