Serial Stories விநாடி நேர விபரீதங்கள்

விநாடி நேர விபரீதங்கள்-10

வினாடி – 10

=========

மின்னியது.

வெள்ளி என்று பெயர் வாங்கியிருந்தாலும் அது 92% நிக்கல் உலோகம். ஆனாலும் எத்தனை அழகாய் மின்னியது!

ஒரு டிஸைன் இல்லை, வேலைப்பாடு இல்லை. ஒரு சதுரம். அதில் ஒரு முக்கோணம். ஆனால் அது உலகிலேயே மிக அழகிய சித்திரமாகத் தோன்றியது ஜனாவுக்கு.

அந்தப் பட்டயத்தைக் கையில் ஏந்திக் கொண்டு காலேஜ் முழுவதும் வலம் வந்தான். பல பாராட்டுகளும் கைதட்டல்களும் ‘கங்க்ராஜுலேஷன்ஸ்’ சப்தங்களும் அவனைத் தொட்டு மீண்டன.  விக்டோரியாகூட அவனோடு பேசப் பேச வந்தாள். “நன்றி” என்ற ஒரே வார்த்தையில் கத்தரித்துவிட்டான்.

‘இனி என் லெவலே வேற, விக்டோரியா! போவியா!’

“என்ன ஜனா அண்ணா, அவசரமா வரச் சொல்லிக் கால் பண்ணியிருந்தீங்க, காலேஜுக்குள்ளே வாட்ச் மேன் விடமாட்டேன்னுட்டான். ரொம்பக் கஷ்டப்பட்டுட்டோம்”  கார்த்தி குறைப்பட்டுக் கொண்டே அவனை நெருங்கினான். சுற்றிலும் அவன் நண்பர் பட்டாளம்.

“என்னது, என் பெயரைச் சொல்லியும் உள்ள விட மாட்டேன்னு சொன்னானா? யாருடா அந்த வாட்ச் மேன்? இனி இப்படிப் பண்ண மாட்டான், அல்லது இங்கே இருக்க மாட்டான்! ஒரு முக்கியமான விஷயமாத்தான் வரச் சொன்னேன்” என்றான் ஜனா.

“சொல்லுங்க அண்ணா!”

ஜனா தன் கையிலிருந்த பட்டயத்தை உயர்த்திப் பிடித்தான். நால்வர் அணியின் கண்கள் விரிந்தன.

“ஹை! “……..” ஸில்வர் பட்டன்!” என்று கூவி விட்டான் கார்த்திக்.

“நம்ம… நம்ம விவி சேனல்க்கு…” கண்களில் கண்ணீரே வந்துவிட்டது கண்ணனுக்கு.

கோபியும் பார்த்தாவும் நம்ப முடியாமல் பிரமித்து நின்றார்கள்.

“அண்ணா, ஒரு மாசம்! பத்து வீடியோ! மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ்! என் கண்ணையே என்னால் நம்ப முடியல அண்ணா!” என்றான் கோபி.

“சரியான கண்டெண்ட் கொடுத்தா தேனில் விழற ஈ மாதிரி சப்ஸ்க்ரைபர்ஸ் வந்து விழுவாங்க! நாம சுவாரசியமான கண்டெண்ட் கொடுக்கறோம் இல்ல? உன் ஐடியாதானே கோபி?” என்றான் ஜனா.

“ஆமா, ஆனா நம் கஷ்டத்துக்கு நமக்குப் பலன் இல்லையே, அண்ணா! உங்க டீம்ல நாங்க இருக்கோம்னே யாருக்கும் சொல்ல முடியலியே!” – வருத்தப்பட்டான் கார்த்திக்.

“என்ன, என்னமோ நான் குறுக்க விழுந்து மறிக்கற மாதிரிப் பேசறீங்க? வாங்க, நமக்குத் தெரிஞ்சவங்க எல்லாரையும் கூப்பிடுவோம். இன்னும் பிரஸ்ஸை வரச் சொல்வோம். விவி டீம்ல நாம எல்லோருமே இருக்கோம்னு உலகுக்கே அறிவிப்போம்! செய்யலாமா?” என்று கேட்டான் ஜனா.

நால்வரும் பேசாமல் நின்றார்கள்.

“ஏற்கெனவே நாம எல்லோரும் பேசி முடிவு செய்ததுதானே இது?  இப்போ ப்ளஸ் ஒன்ல இருக்கீங்க. இதோ ப்ளஸ் டூ வந்துடும். நீங்க இந்த ஆக்டிவிட்டில ஈடுபட்டாலும், நல்லா படிச்சுடுவீங்க. மார்க்கும் வாங்கிடுவீங்க. இருந்தாலும் அதுவரைக்கும் இந்த விஷயம் வெளியே தெரியாம இருக்காது நல்லது, ஏன்னா உங்க அம்மா-அப்பா நீங்க நல்லாத்தான் படிக்கறீங்க என்று புரிஞ்சுக்க மாட்டாங்க, ப்ளஸ் டூ முடியறவரை இந்த வேலை எல்லாம் செய்ய விடமாட்டாங்கன்னுதானே இப்படி முடிவெடுத்தோம்? என் பெயரில் இருக்கே தவிர, இதனால் வர பணம் எல்லாமே நான் சரியாத்தானே கணக்கு வெச்சிருக்கேன்? உங்களுக்கும் சரியான முறையில் பிரிச்சுக் கொடுத்திருக்கேன்? நீங்க கேட்ட எக்விப்மெண்ட்ஸும் வாங்கித் தந்தேனே!”




கார்த்திக்கிற்கு அந்த விலையுயர்ந்த, கையடக்கக் காமிரா நினைவுக்கு வந்தது. கோபி அவன் புத்தம்புதிதாக வாங்கியிருந்த ஐபேட், அவன் அறையில் மறைத்து வைத்திருக்கிறானே, அதனை நினைத்துக் கொண்டான். வீடியோ ப்ராஸஸிங் பண்ணுவதற்காக வாங்கிய அந்த ஹை-எண்ட் லேப்டாப் பார்த்தாவின் கண்முன் தோன்றியது. கண்ணனின் பையில் லேட்டஸ்ட் ஐபோன் உறுத்தியது.

“கோச்சுக்கிட்டிங்களா ஜனா அண்ணா? நாங்க உங்களைக் குறை சொல்லல. நம்ம சமூகம் இப்படி இருக்கே, படிப்பு என்ற பெயரில் நம்முடைய சாதனை வானங்களைச் சுருக்கி, மீடியாக்ரிட்டி என்ற சிறையில் நம்மை அடைக்கப் பார்க்குதேன்னு வருத்தப்பட்டோம், அவ்வளவுதான்” என்று பார்த்தா சமாதானமாகக் கூறவே ஜனா அடங்கினான். மீடியாக்ரிட்டி என்ற சொல்லுக்கு அவனுக்கு அர்த்தம் தெரியாததும் காரணமாக இருக்கலாம். 

“இத பாருங்க, நான் உங்களை இந்த ஸில்வர் பட்டனைக் காட்ட மட்டும் கூப்பிடல, அடுத்த வீடியோ பற்றி ப்ளான் பண்ணவும்தான்! அது இதுவரை போட்ட எல்லாத்தையும் தூக்கியடிக்கறதா இருக்கணும்! ஒரே வீடியோவில் இந்த ஒரு மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் ரெண்டு மில்லியனா ஆகணும்!” சொல்லச் சொல்ல, நால்வர் அணியின் கண்கள் கனவில் விரிந்தன.

அவர்கள் மேலும் பேசுவதற்குள் வாட்ச் மேன் அருகில் வந்து நின்றான்.

“என்னய்யா?” என்றான் ஜனா அலட்சியமாக.

“உங்களைப் பார்க்க சகாதேவன்னு ஒருத்தர் வந்திருக்கார் சார்.”

திடுக்கிட்டான் ஜனா. “சரி, நீங்க எல்லாரும் வீட்டுக்குப் போயிருங்க. இன்றைக்குச் சாயங்காலம் நாம் எப்போதும் சந்திக்கிற இடத்தில் பார்க்கலாம்” என்றதும் நால்வரும் ‘ஏதோ நிலைமை சரியில்லை’ என்று உணர்ந்து சிட்டாய்ப் பறந்துவிட்டார்கள்.

“அவனை வரச் சொல்லு” என்றான் ஜனா.

*****

சகாதேவனை ஏறிட்டுப் பார்த்தான் ஜனா. யூனிஃபார்மில் விறைப்பாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் நொறுங்கிப் போயிருக்கிறான் என்று புரிந்தது. அவன் தங்கை… அந்த வனிதை… இப்போ மனத்தளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாளாமே! கவுன்ஸிலிங் எல்லாம் போகிறாளாமே! .

ஜனாவுக்குச் சிரிப்பு வந்தது. இப்போது சகா எதற்கு வந்திருக்கிறான் என்றும் அவனால் ஊகிக்க முடிந்தது. சகாவின் கடிபட்ட பற்களின் கோபமும், இடக்கையில் தெரிந்த விலங்கைப் பற்றியிருந்த உறுதியும் அவனை ஒன்றும் பாதிக்கவில்லை.

“விநாடி விபரீதங்கள்” – நேரடியாக விஷயத்துக்கு வந்தான் சகாதேவன்.

“ம்ஹும்?” என்றான் ஜனா அலட்சியமாக.

“அந்தச் சேனலை நடத்தறது நீதானே?”

“அதில் யூஸர்நேம் இருக்கும், அதிலிருந்து கூகுல் ஐடி, அதிலிருந்து என் போன் நம்பர்… ஐடண்ட்டிட்டி தெரிஞ்சுக்க ஒரு போலீஸ் ஆபீஸருக்கு இவ்வளவு நாளா ஆச்சு? ஹார்ட்லி டென் மினிட்ஸ் போதும்னு இல்ல நான் நினைச்சேன்?” என்றான் ஜனா சிரிப்புடன்.

சகா கோபத்துடன் ஏதோ சொல்லப் போக, அவனை இடைமறித்த ஜனா, “நீங்க இவ்வளவுகூட மெனக்கிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை சார்! என் சேனல் பற்றிச் சீக்கிரமே பத்திரிகைகளில் பேட்டிகள் வரப் போகுது! அப்போ பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டிருக்கலாம்! ஒன் மேன் ஆர்மி அப்படின்னு கேப்ஷன் வரப் போகுதாமே!”   

“மனுஷங்க கீழ விழறதையும் அடிபடறதையும் வீடியோவா எடுத்துப் போடற! உனக்கு இத்தனைப் புகழா? உலகம் எங்கே போயிட்டிருக்கு?” என்றான் சகா.




“சார், உலகம் போயிட்டிருக்கற திசையை நினைச்சு நீங்க வருத்தப்படலாம், ஆனா அதுக்காக என் திசைப்பக்கம் விலங்கை எடுத்துட்டு வர உங்களுக்கு அதிகாரம் கிடையாது” என்றான் ஜனா.

“இந்த விபத்துக்களையே நீதான் செட்டப் பண்ணிருக்கன்னு நான் சொல்றேன், அப்போ கைது பண்ண அதிகாரம் இருக்குல்ல?”

“அப்பவும் கிடையாது, நீங்க நிரூபிக்கணும்!”

சகா சற்றுத் தடுமாறினான்.

“சொல்லுங்க சார், ட்ராஃபிக் பீக்கில் இருந்த ஒரு சாலையில் சர்க்கஸ் பண்ணி, பஸ்ஸின் சக்கரத்தில் மாட்டிக்க இருந்து மயிரிழையில் தப்பிச்ச ஒரு காட்சி எங்க சேனல்ல இருக்கு. அங்கே நான் இருந்தேனா? அல்லது அந்த ரைடரை எனக்குத் தெரியுமா? அவனை செட்டப் செஞ்சேனா? இதுக்கெல்லாம் சாட்சி இருக்கா? 

“வெவ்வேறு தெருக்கள்ள இருக்கற வீடுகளில் வேறுவேறு நாட்கள்ள சமைக்கும்போது கையை வெட்டிக்கிட்டாங்க. அப்போல்லாம் நான் கிச்சனில் எட்டிப் பார்த்தேனா?

“ஓரு டீச்சர் கீழ வழுக்கி விழுந்திட்டாங்க. அவங்களை நாந்தான் பிடிச்சுத் தள்ளிவிட்டேன்னு சொல்வீங்க போலிருக்கே? அல்லது அவங்க எனக்காக வேணும்னே வழுக்கி விழுந்தாங்க, அவங்களுக்கு எனக்கும் தொடர்பு இருக்கு…”

சகாதேவன் “டேய்…” என்று அலறி  ஜனாவின் சட்டையைப் பிடித்தான்.

“ஸாரி, அவங்க உங்க தங்கை இல்ல? மறந்திட்டேன்” என்று அமைதியாக ஜனா சொல்லவும், சகா கஷ்டப்பட்டுத் தன்னைச் சமாளித்துக் கொண்டான்.

“அந்த நேரத்தில் நீ கல்ச்சுரல்ஸ் புரோகிராம்ல இருந்த!  விசாரிச்சுட்டேன். சரி, அப்போ அந்த் வீடியோ எப்படி உனக்கு வந்து சேர்ந்தது?”

“ட்ரோன்ஸ். ஆட்டோமாட்டிக் பறக்கும் காமிரா. பல ஆயிரக்கனக்கான வீடியோஸ்லேர்ந்து செலக்ட் பண்றேன்.”

“அப்படியா? வேறு ஆட்களை வெச்சு செட்டப் செய்யறியோன்னு…”

“மறுபடி ‘செட்டப்!’ சார், ப்ளீஸ் யூ ஷட்டப். நான் நல்லவிதமா பேசிட்டிருக்கேன்.நான் எதையும் செட்டப் செய்யலை. எந்த ஆளை வெச்சும் எடுக்கலை. இது உண்மையில்லைன்னா, அதை நிரூபிக்க வேண்டியது நீங்கதான். போயிட்டு வரீங்களா?” கைகளை அறைந்து கும்பிட்டான் ஜனா.

*****

“அண்ணா, உங்களைப் பார்க்க வந்தது போலீஸ் ஆஃபீஸராமே!” என்றான் கண்ணன் நடுங்கி.

“இருக்கட்டும், அதுக்கு நீங்க ஏன் பயப்படறீங்க? என்னை யாராலும் நெருங்க முடியாது. அப்படியே நெருங்கிட்டாலும், உங்களை யாரும் நெருங்க முடியாது! இரும்புக் கோட்டைடா இந்த ஜனா மனசு!”

அவன் வார்த்தைகளில் வழக்கம்போல் மயங்கியவர்களாக, “இப்போ அடுத்த ப்ராஜக்ட் என்ன அண்ணா?” என்று கேட்டார்கள் கார்த்திக்கும் கோபியும்.

“ரெயில்வே ஆக்ஸிடெண்ட்!” 

“என்…னது?” தடுமாறினான் கண்ணன். “பல உயிர்களோட மரணத்துக்கு…”

“உளறாதே கண்ணா. ஒரு ட்ராக்கை உடைக்கப் போறோம். அதில் ட்ரெயின் வரதுக்குள்ள சபாடேஜ்னு ரெயில்வேக்கு இன்ஃபர்மேஷன் கொடுக்கப் போறோம். மக்கள் காப்பாற்றப்படுவாங்க. நமக்கு வீடியோவும் கிடைக்கும்” என்றான் ஜனா.

“நான் இன்னும் பெட்டரா சொல்றேன்” என்றான் கோபி.

( விபரீதங்கள் தொடரும்)




What’s your Reaction?
+1
2
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!