Serial Stories வா எந்தன் வண்ணநிலவே…

வா எந்தன் வண்ண நிலவே-9

 9

அன்று ஏதோ தவறுதல் நடந்துவிட்டது .நித்யன் தெரியாமல் பேசி விட்டான். .இல்லையில்லை நான்தான் தப்பாக கேட்டுவிட்டேன் .என் காதில் தான் ஏதோ கோளாறு .அன்றொருநாள் தன் காதில் விழுந்த நித்யவாணனின் வார்த்தைகளுக்காக விதம் விதமாய் தானே சமாதானம் அடைந்து கொண்டிருந்தாள் எழில்நிலா . 

இல்லை அவள் கணவன் அப்படிபட்டவனில்லை . அவன் உயர்ந்தவன்.பெண்மையை மதிப்பவன்.அவளை உயிராக நினைப்பவன் .இல்லையென்றால் அவளை அவ்வளவு ஆசையோடு அணைப்பானா ? அப்புறம் அந்த முத்தம்.கணவனென்ற கடமைக்கு தந்ததா அது?சிலிர்ந்தெழுந்து நடனமாடிய தன் கை உரோமங்களை தேய்த்து விட்டுக் கொண்டாள்.

 இன்னும் இரண்டே மணி நேரத்தில் கணவனை பற்றிய தன் அபிப்பிராயம் மாறப்போவதை அறியாமல் ,மென்மையாய் கணவனோடு உரசியபடி பயணித்து மண்டபத்தை அடைந்தாள் எழில்நிலா . 

அதன் பின்னர் இளவட்டங்களின் இளமை கேலி வளையத்திற்குள் சிக்கினர் தம்பதிகள். புது மணமக்களுக்கேயுரிய அனைத்து கேலி ,கிண்டல்களை மனமார ரசித்து ஏற்றனர்.  

எழில்நிலாவும் ,நித்யவாணனும் திருமணத்திற்கு முன்பே கொடைக்கானலில் சந்தித்திருக்கிறார்கள் என்ற விசயம்  அஞ்சனா மூலம் சபையில் பரப்பப்பட “ஓஓஓஓ ….!”என்ற உற்சாக கூச்சல்.

 தொடர்ந்து எப்போது சந்தித்தீர்கள் ?எப்படி பார்த்தீர்கள் …?என்ன பேசினீர்கள்?என பல கேள்விகள் .சொல்லாவிட்டால் இந்த இடத்தை விட்டு நகர விடப்போவதில்லையென செல்ல மிரட்டல்கள் .

ஒருவரையொருவர் பார்த்து கொண்ட கணவனும்,மனைவியும் தங்களுக்கான ரகசிய பாசையை விழி வழி பரிமாறிக்கொள்ள ,அதனையும் கண்டு கொண்ட இளவல் கூட்டம் மீண்டும் ஓ…ஓ..ஓ…வென ஆர்ப்பரித்தது.

 “உங்கள் எழிலை நான் முதன் முதலில் பார்த்தது கொடைக்கானலில் ப்ரையண்ட் பூங்காவில்தான் “என  ஆரம்பித்தான் நித்யவாணன். உடன் முகம் கூம்பி போனது எழில்நிலாவுக்கு . இல்லையே முதல் சந்திப்பு அது இல்லையே .அன்று அதிகாலை பனிமூட்டத்திற்கிடையே …. தலையை பலமாக உலுக்கி கொண்டாள் எழில்நிலா .

நான் நித்யவாணனை முதலில் பார்த்ததுதான் அன்று அதிகாலை.ஆனால் நான் மட்டும் தானே பார்த்தேன் .அவன் என்னை பார்க்கவில்லையே, அவன் பாட்டுக்கு தன் வழியில் டக்டக்கென போய் விட்டானே ,என்னை பார்க்காமல் போனானா …அல்லது பார்த்தும் பார்க்காமல் போனானா ? எழில்நிலாவின் முகம் வாடியது.

“எங்களைப் பற்றிய எல்லா விஷயங்களும் மானசிக்கு தெரியுமே, அவளிடமே கேளுங்கள்” நித்யவாணன் பேச்சின் திசையை திருப்பிவிட அனைவர் பார்வையும் மானசியிடம்  திரும்பியது.




மைய இருகையில் தம்பதி அமர்ந்திருக்க அவர்களை சுற்றி வட்டமாக அமர்ந்திருந்தனர் எல்லோரும். மானசி கடைசியில் ஓரமாக அமர்ந்திருந்தாள். எழில்நிலா அவளை கண்களால் தேடி பார்த்து அருகே வருமாறு அழைக்க எல்லோருமாக அவளை இழுத்து மையத்தில் அமர்த்தினர்.

” உனக்கு எல்லாம் தெரியுமா? எங்களுக்கு சொல்லவே இல்லை பார்த்தாயா?”

” இப்போது சொல்.அன்று பூங்காவில் என்ன நடந்தது?”மானசி ஒரு மாதிரி திரு திருவென்று விழிக்க “பரவாயில்லை மானசி பக்கத்திலிருந்து எல்லாவற்றையும் பார்த்தவள் நீதானே, நீயே சொல்லு” என்ற நித்யவாணனின் குரலில் என்ன இருந்தது? எழில்நிலா இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

” அன்று பூங்காவில் ஒரு பாம்பு குழந்தையை கொத்த பார்த்தது .எழில் குழந்தையை காப்பாற்ற போனாள். ஆனால் பாம்பு அவள் பக்கம் திரும்பி விட்டது. இவர்தான்…” மானசி தடுமாற 

“உன் அக்காவின் கணவன், அத்தான்…” தனது உறவு முறையை எடுத்துக் கொடுத்தான் நித்யவாணன்.

” அ…அத்தான் எழிலை பிடித்து தள்ளி பாம்பிடமிருந்து காப்பாற்றினார். பிறகு நாங்கள் எல்லோரும் காபி ஷாப் போனோம்.அவ்வளவுதான் எனக்கு தெரிந்தது” மானசி முடிக்க எல்லோரும் கை தட்டினர்.

“ஆஹா! ஹீரோ அப்போதே ஹீரோயினை ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறார்.பிறகு சொல்லுங்கள் அப்புறம் அடுத்த மீட் எப்போது..?” ஆளாளுக்கு கத்த, பேச வாய் திறந்த நித்யவாணனை கை பற்றி அழுத்தினாள் எழில்நிலா.

 இதுவரை சரி, இனி நடந்ததெல்லாம் இவன் பேசினானால்… இளையவர்களின் கலாட்டாக்களை ரசித்தபடி சற்று தள்ளி அமர்ந்திருந்த பெரியவர்களில் தன் தாயை பார்த்தாள் எழில்நிலா. தனிமையில் அவனுடன் பேசியதெல்லாம் அம்மாவிற்கு தெரிந்தது அவ்வளவுதான்.கோபத்தின் போது சிவந்து உருளும் மஞ்சுளாவின் விழிகள் இப்போதும் எழில்நிலாவிற்கும் பதட்டத்தை உண்டாக்கின.

” என்ன நிலா நீயே சொல்கிறாயா..? நான் சொல்லவா?” நித்யவாணன் கிசுகிசுப்பாக கேட்க “வேண்டாம் இனிமேல் எதுவும் சொல்ல வேண்டாம்” என்றாள் வேண்டலாக.

“அடிப்பாவி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க சொல்கிறாயே?எனக்கு சொல்ல நிறைய இருக்கிறதே!”

” நீங்கள் சொல்லச் சொல்ல என் அம்மா எழுந்து வந்து என் தலை முடியை பிடித்து வீட்டிற்குள் இழுத்துப் போய் பூட்டி வைத்து விடுவார்கள்.பரவாயில்லையா?” 

நித்யவாணன் அவசரமாக “மாமியாருக்கு மரியாதை” என்றபடி ஒற்றை விரலை உதடுகள் மேல் வைத்துக் கொண்டான். அந்த பாவனையில் பொங்கிய சிரிப்புடன் திரும்பிய எழில்நிலா மானசியின் குற்றம் சாட்டும் முகத்தை பார்த்தாள்.

 நித்யவாணனுக்கு போன் வர அவன் எழுந்து சற்று தள்ளி போய் பேச ஆரம்பித்தான். எழில்நிலா “மானு” என  அவள் கையைப் பற்றிய உடனே மாறிய மானசியின் முக பாவம் பரிதாபத்தை காட்டியது.

” ஏன் மானு இப்படி பார்க்கிறாய்?” 




“உன்னை பார்த்தால் பாவமாக இருக்கிறது. எனக்கு தூக்க மாத்திரை… உனக்கு மயக்க மருந்தோ அல்லது விஷமோ யார் கண்டது?”

 எழில்நிலா அதிர்ந்தாள் “என்ன சொல்கிறாய் மானு?”

” நேற்று உங்கள் கல்யாணத்திற்கு நான் வரவே இல்லை, அதை கவனித்தாயா இல்லையா?”

” பார்த்தேன். இவரிடம் கூட கேட்டேனே. நீ ரூமில் ஓய்வெடுப்பதாக சித்தப்பா சொன்னார்”

” ஓய்வெடுக்க வைக்கப்பட்டேன். கண்களை திறக்க முடியவில்லை. எத்தனை தூக்க மாத்திரை கலந்தாரோ?” மானசியின் பேச்சை எழில்நிலாவால் நம்ப முடியவில்லை. அவ்வளவு மோசமானவனா நித்யவாணன்!

” எதற்கும் ஜாக்கிரதையாக இருந்து கொள்”மானசி எழுந்து போய்விட்டாள்.

சும்மா அங்க பார்த்தோம் இங்க பார்த்தோம்னுகிட்டு…தாங்கள எதிர்பார்த்த அளவு தகவல்கள் ஏதும் தம்பதியிடமிருந்து பெயராததால் ஏற்கனவே போரடித்து போயிருந்த இளைஞர் கூட்டம் ,”இன்ட்ரெஸ்டா ஒரு விசயம் கூட இல்ல ,வாங்கப்பா அந்த பிரியாணியை என்னன்னு பார்ப்போம்” என கூச்சலுடன் விலகினர் . 

போன் பேசிவிட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தவனிடம் “மானுவுக்கு எத்தனை மாத்திரை கொடுத்தீர்கள்?” என்றாள் அதிரடியாக.

 ஒரு நொடிக்கும் குறைவாக திடுக்கிட்டவன் பிறகு மிக இயல்பாக சொன்னான் “ஒரே ஒரு மாத்திரைதான் கலக்க ஏற்பாடு செய்தேன். அதற்கே நம் திருமணம் முடியும் வரை தூங்கிக் கொண்டிருந்தாள்”

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே என்று சொல்லி விட மாட்டானா என்ற நப்பாசையில் இருந்தவள் இந்த ஒப்புக்கொடுத்தலில் கலங்கினாள். “ஏன் ?”

அவள் குரல் தழுத்தலுக்கு ஆதரவாக கைப்பற்றியவன், “அவளை இங்கிருந்து அப்புறப்படுத்தவில்லை என்றால் எதையாவது சொல்லி உன்னை குழப்பிக் கொண்டே இருப்பாள் நிலா,அதனால் தான்…”வெடுக்கென அவன் கையை உதறினாள்.

” சொல்வதை எல்லாம் நம்பும் கேனச்சி மாதிரி என்னை தெரிகிறதா?”

” உண்மையை சொல்லட்டுமா? ஆமாம்…” அவனது பதிலில் ஆத்திரமானவள்.”புத்தி கெட்டுப் போய் உங்கள் பின்னால் திரிந்தேனே நான் கேனச்சிதான். ஆனால் மானசி என்னை விட இளையவளானாலும் புத்திசாலி, பல நேரங்களில் எனக்கு என் நிலைமை புரிய வைத்தவளே அவள்தான்”

” அப்படி என்ன பெரிய உன் நிலைமை?” நித்யவாணன் எகத்தாளமாக கேட்க எழில்நிலாவினுள் தொண்டை அடைத்தது.

நித்யவாணனுடன் பழக ஆரம்பித்த நான்காம் நாள் எழில்நிலா உற்சாக பந்தாக மாடியிலிருந்து இறங்கிய போது ,வருண் அவளை கேலியாக நோக்கி “என்னக்கா அப்படியே ஒளிர்கிறாய்..?” என்றான் .

 புரியாமல் “என்னடா ..?”என்றாள். “நானும் மூன்று நாட்களாக உன்னை கவனித்து கொண்டுதான் இருக்கிறேன்.அப்படியே லைட் போட்டது போல் உன் முகம் ஒளிர்கிறதே! என்ன விசயம்?”

 உடன் முகம் சிவக்க எழில்நிலா திரும்பி சுவரில் பதித்திருந்த கண்ணாடியில் தன்னை பார்த்தாள் .ஒளிரும் பிரகாசத்துடன் அவளைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் தெரிந்தாற் போல் இருக்க இதற்கு காரணமானவனை எண்ணியவுடன் நாணியது அவள் உள்ளம்.




“என்னக்கா லவ்வா?” மானசி அவளை நெருங்கி கிசுகிசுப்பாய் கேட்க இன்பமாய் அதிர்ந்தாள். இதுதான் காதலா! அந்தக் கணம் அவளுக்கு மிக உடனே நித்யவாணனை சந்திக்க வேண்டும் போல் இருந்தது.

“யாருக்கா?” மானசி ஆராய்ச்சியுடன் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு கேட்க,எழில்நிலாவின் இதழ்கள் தன்னை அறியாமல் முனுமுணுத்தன “நித்தி..”

“யார் அந்த திமிர் பிடித்தவனா?”மானசியின் குரல் உயர்ந்ததுமே தன்னிலை மீண்டவள் “சித்தி பாருங்க என்னை கிண்டல் பண்றாங்க” தம்பி தங்கை மேல் செல்ல புகார் ஒன்றை சித்தியிடம் வைத்தாள்.

 “டேய் போதும்டா.. போங்க போய் படிங்க ” அவர்களை விரட்டினாள் மைனாவதி .மானசி நின்று “எக்காவ் இந்த பளிச்செல்லாம் உன் பிறப்புன்னு நினைச்சுக்காத …எங்க ஊர் மூலிகை காத்துதான் உன்னை இப்படி மின்ன வச்சிருக்கு .உங்க ஊருக்கு போனதும் நீ பழையபடி டார்க் ஆயிடுவ …”எனக் கூறி கிண்டலாக சிரித்து விட்டு போனாள்.

“ஏய் மானசி என்ன பேச்சுடி இது?” மைனாவதி மகளை அதட்ட, தரைக்கு ஒரடி மேலே மிதந்து கொண்டிருந்த எழில்நிலாவின் பாதங்கள் தரையை தொட ஆரம்பித்தன. 

இப்படி…இப்படி…நித்யனும் நினைப்பானோ…? சே சே அவளுடைய நித்யன் அப்படி நினைக்க மாட்டான்…. தன்னைத் தானே சமாதானப்படுத்துகையிலேயே நித்யனின் பளபளவென்ற வெண்ணை போன்ற நிறம் நினைவில் வந்து தொலைத்தது. 

உடனே நித்யனை பார்க்க வேண்டும் போல் இருந்தது எழில்நிலாவுக்கு. ஆனால் அவனை பார்த்த போதோ…… 

அப்படி இருக்காது ..இருக்காது என உள்ளத்திற்குள் உரு போட்டு வந்தது கண் முன்னே காது கேட்க நடநதும் நம்ப மறுத்தது பேதை உள்ளம்.




What’s your Reaction?
+1
32
+1
22
+1
2
+1
1
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!