Serial Stories கடல் காற்று

கடல் காற்று-44

44

வீட்டிற்குள் நுழையும் போதே செல்வமணியின்  சத்தம் கேட்டது .மேலே போய் உடை மாற்றிவிட்டு வருவோமென்ற சமுத்ராவின் எண்ணத்தை செல்வமணியுடன் இணைந்து ஒலித்த புவனாவின் குரல் மாற்றியது .முன்பும் இருவரது குரலும் சேர்ந்து ஒலித்தது உண்டு …டாம் அன்ட் ஜெர்ரியாய் …ஓட ஓட விரட்டும் குரலாய். ஆனால் இப்போதோ ஒத்த உள்ளம் கொண்ட தோழமை தெரிந்தது அந்த குரல்களில் .

” நீ உள்ளே போ முத்ரா ..எனக்கு வேலை இருக்கிறது ” என அவளை இறக்கி விட்டு விட்டு யோகன் போய்விட்ட எரிச்சலை இந்த பரவசக்குரல்கள் பெரிதும் ஈடு செய்தன. ஏதோ ஒரு சமையல் குறிப்பை செல்வமணிக்கு காட்டியபடி செய்து கொண்டிருந்தாள் புவனா .ஆசையான அம்மாவும் , அக்கறையான மகளுமாய் ..அவர்களது அன்னியோன்னியத்தை சத்தமின்றி  சமையலறை கதவில் சாய்ந்து நின்றபடி ரசித்தாள் சமுத்ரா .

” சமுத்ரா …” ஆவலாய் ஓடிவந்து அவள் கைகளை பற்றிக் கொண்டாள் செல்வமணி.

” நான் வேறு யாருடைய வீட்டிலோ நுழைந்து விட்டோமோ என நினைத்தேன் ,.” அவர்கள் இருவரின் ஒற்றுமையை கிண்டல் செய்தாள் சமுத்ரா .

” வாலு  …கிண்டலா பண்ணுகிறாய் ..? ” அவள் தலையில் செல்லமாய் கொட்டினாள் புவனா .” யோகனை எங்கே ..? ” பின்னால் பார்த்தாள் .

” ஏதோ வேலையிருக்கிறதாம் ..” எவ்வளவோ மறைக்க முயன்றும் சமுத்ராவின் குரலில் எரிச்சல் தெரிந்து விட்டது .

” சமுத்ரா …நம் இரு குப்பங்களுக்குமிடையே நடந்து கொண்டிருக்கும் சண்டை தீர பேச்சு நடக்கிறதம்மா .காலையிலேயே வீட்டிற்கு தகவல் வந்துவிட்டது .யோகன் அதற்குத்தான் போயிருக்கிறான் …” நீ வேறெதுவும் நினைத்துக் கொள்ளாதே ..என சொல்லாமல் சொன்னாள் புவனா .

ம்க்கும்…அங்கிருந்து வந்தபிறகு அந்த குட்டைச்சுவரில் மோத போகப் போகிறான் ..இதை சமாளிக்க ஒரு அம்மா வேறு …என்று எண்ணியபடி தலையாட்டி வைத்தாள் சமுத்ரா .

” சமுத்ரா ..என் வீட்டுக்காரரிடம் அவரையும் ஆஸ்பத்திரியில் போய் செக்அப் பண்ணிக்கொள்ள சொல்லி நீதானே பேசினாயாம் .இன்றுதான் என்னிடம் சொன்னார் .நேற்றோடு மூன்றாவது தடவை அவரும் என னுடன் செக்கப்பிற்கு வந்துவிட்டார் .அவருக்கு ஒரு தொடர்ச்சியான ட்ரீட்மென்ட் டாக்டர் சொல்லியிருக்கிறார் .இருவரும் தவறாமல் சிகிச்சை எடுத்து வருகிறோம் .இப்போது எங்களுக்கென்று ஒரு குழந்தை கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்கு நிறைய வந்துவிட்டது .உனக்குத்தான் நிறைய நன்றி சொல்ல வேண்டும் .” சமுத்ராவின் கைகளை நன்றியுடன் பற்றிக் கொண்டாள் செல்வமணி .

” ஐய்யோ அத்தை …முன்பெல்லாம் இந்த வீட்டில் ஏழு ஊருக்கு கேட்கும்படி வெங்கலத் தொண்டையில் ஒரு அம்மா பேசிக் கொண்டிருந்தாரே  ..அவரை இப்போது எங்கே ..? காணவில்லையே …இங்கே என்னிடம் ஏதோ ஒரு கிளி கொஞ்சிக் கூவிக் கொண்டிருக்கிறதே …” சமுத்ரா செல்வமணியை கிண்டல் பண்ணினாள் .

” ஏய் …என்னடி கிண்டலா ..பண்ணுகிறாய் ..உன்னை ..” அவளை அடிக்க கை ஓங்கினாள் செல்வமணி .

” ம் …இது பரவாயில்லை .இப்படியாவது பேசுங்கள் அண்ணி .முதலில் பேசினீர்களே ..அது கொஞ்சம் கூட உங்களுக்கு பொருந்தவில்லை ” என்றாள் சமுத்ரா .
தொடர்ந்து பெண்கள் மூவருமாக மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தனர் .இரவு சமையலை முடித்து மேஜையில் வைத்தாள் புவனா .

” சாப்பட்டு விட்டுத்தானே போகிறாய் செல்லா …? ” புவனா.

” இல்லைம்மா என்னைக் கூப்பிட அவர் வந்துவிடுவார் .அவருடன் போய் எங்கள் வீட்டில்தான் சாப்பாடு ” செலவமணி.

” அண்ணி ..அத்தையை யோகன் ஏற்றுக் கொண்டதே ஆச்சரியம் .அதையே இன்னமும்  என்னால் நம்ப  முடியவில்லை .இப்போது நீங்களும் எப்படி ..?  …”

” அம்மாவின் மீது எங்களுடைய இந்த பாசம் இப்போது வந்த புதியதில்லையே சமுத்ரா .எங்களுக்கு நினைவு தெரிய எங்களைப் பெற்ற அம்மா படுக்கையில்தான் இருந்தார் .புவனாம்மா ் அப்போது எப்படியெல்லாம் எங்களை பார்த்துக்கொண்டார்கள் தெரியுமா..? ” பாசத்துடன் புவனாவின் கைகளை வருடினாள் செல்வமணி .

” இப்போது யோகன் என்னிடம் அம்மாவின் கதையை கூறினான்.நாம் அம்மா  விசயத்தில் கண்களை மூடிக்கொண்டு இருந்து விட்டோம் போலிருக்கிறது செல்லா …என வருந்தினான்.இதற்கு மேல் எங்கள் அம்மாவை வெறுக்க முடியுமா என ன ..? ” பாசமாக புவனாவின் தோள்களைக் கட்டிக் கொண்டாள் செல்வமணி .

” யோகன் என்னை திரும்பி பார்க்காமல் நீ என் பக்கமாவது பார்த்திருப்பாயா செல்லா  ..? யோகனை திரும்ப வைத்தது சமுத்ராதான் .இதற்கெல்லாம் அவளுக்கு  நன்றி சொல்லக்கூட என்னால் முடியாது .ஆனால அப்படி என் திசைப்பக்கம் கூட மூஞ்சியை திருப்பாமல்  நின்ற யோகனை  மாற்றினாய் சமுத்ரா ..? ” புவனா .

” உங்கள் மகன் எப்போதுமே அதிரடிதானே ..? அதே அதிரடி மூலம்தான் அவரை மாற்றினேன் ..” என்ற சமுத்ராவிற்கு அன்று ‘நான் என்ன செய்யட்டும்’ என்று நெகிழ்ந்து தன் தோள்களில் புதைந்து நின்ற யோகனின் நினைவு வந்தது .

” அம்மா ..யோகன் அதிரடி என்றாள் இவள்
அவனை விட  பெரிய ரௌடி .அப்படி விடாதே விடாதேன்னு விரட்டித்தான் அவனை வழிக்கு கொண்டு வந்திருக்கிறாள் .” செல்வமணி .

” ஆமாம் …என்னுடைய விரட்டலுக்கெல்லாம் பயப்படுகிறவரா உங்கள் தம்பி ..? என்னை எப்படியெல்லாம் மிரட்டி வைத்திருக்கிறார் தெரியுமா ..? “

” அப்படி என்னடி என் தம்பி உன்னை மிரட்டி வைத்திருக்கிறான் ..? ” செல்வமணி வேகமாய் கேட்டாள் .

” எதில் மிரட்டவில்லை ..?எங்கள் திருமணத்தில் ஆரம்பித்து  எல்லாவற்றிலும்தான் ..” அழுத்தமாக கூறினாள் சமுத்ரா .

சிறிது நேரம் மௌனமாயிருந்தார்கள் இருவரும் .




” சென்னையில் செக்கப் செய்து கொண்டாயா ..சமுத்ரா ..? ” புவனா மெல்ல கேட்டாள் .

” இல்லை ..இப்போதைக்கு அந்த எண்ணமில்லை ..” உறுதியாக கூறினாள் சமுத்ரா .

” நீ அநியாயம் பண்ணுகிறாய் சமுத்ரா ” லேசாக அழுகை எட்டிப் பார்த்தது புவனாவின் குரலில் .தோள்களை குலுக்கிக் கொண்டு புவனா கொண்டு வந்து கொடுத்திருந்த பானத்தில் கவனம் செலுத்தினாள் சமுத்ரா .

குலுக்கிய அவள் தோள்களை பற்றி ஆட்டியபடி ” என்னடி உனக்கு அவ்வளவு அலட்சியம் .என் தம்பி  அப்படி என்ன செய்தான் ? முறையாய் கோவிலில் வைத்து தாலி கட்டித்தானே உன்னை மனைவியாக்கினான் .?” என்றாள் .

” தாலி கட்டினால் போதுமா ..? அதனை எந்த நிர்பந்தத்தில் கட்டினார் தெரியுமா ..? “

” அது எதுவாகவும் இருக்கட்டும் ..ஆனால் நிச்சயம் உன் விருப்பமின்றி இல்லை “

” என்ன உளறுகிறீர்கள் ..? என் விருப்பமின்றிதான் ஒவ்வொன்றையும் செய்தார் என்கிறேன் “

” எது ..விருப்பம் ..? நீ யோகனை விரும்பவில்லை ..? ” குத்தீட்டியாய் வந்த்து செல்வமணியின் கேள்வி .

இதற்கு பதில் தெரியாமல்தான் நான்  விழித்துக் கொண்டிருக்கிறேன் ..இதில் இவர்கள் வேறு …

” எங்கே என் முகத்தை பார்த்து இதற்கு பதில் சொல்லு ” சமுத்ராவின் முகத்தை வலுவாக பற்றி தன்புறம் திருப்பி கேட்டாள் .

” அப்போது இல்லை … இப்போது ….எனக்கே தெரியவில்லை .” மெல்ல சொன்னாள் சமுத்ரா .

” அடி கூமுட்டை ..” என்ற செல்வமணியை முறைத்தாள் .சமுத்ரா. இருவருக்குள்ளும் சண்டை வந்துவிடுமோ என பயந்து புவனா ” போதும் செல்லா …இன்னொருநாள் பேசலாம் ” என்றாள் .

” அட  சும்மா இருங்கம்மா இந்த மாதிரி லூசுக்கெல்லாம் நல்லா உச்சந்தலைல ஆணி அடிக்கிற மாதிரி நச்சுன்னு சொன்னா த்தான் புரியும் .நீங்களும் உங்க பையனும் சேர்ந்து கொஞ்சி கொஞ்சி இவளை கெடுத்து வச்சிருக்கீங்க . இப்போது மட்டுமில்லைடி அப்போதும் உனக்கு தெரியவில்லை . அப்போதிருந்து இப்போது வரை நீ யோகனை விரும்பிக் கொண்டுதான் இருக்கிறாய் ” செல்வமணி சொன்னது போன்றே சமுத்ராவின் உச்சந்தலையில் ஆணி அடித்தே நிறுத்தினாள் .

” ரொம்ப தெரிந்தது போல் எதையாவது உளறாதீர்கள் ” சமுத்ராவின் குரலில் நடுக்கமிருந்தது  .

” ஏன்டி நீயெல்லாம் என்ன படித்து கிழித்தாய் ..? உன்னை உன்னால் தெரிய முடியவில்லை .உங்கள் இருவர் காதலும் அந்த சின்ன பெண் மேகலை வரை உணர்ந்து கொள்ள முடியும்படி எங்களுக்கெல்லாம் தெரிந்தது .உனக்கு தெரியவில்லையா ..? பிறகு எதற்காக நாங்களெல்லாம் சேர்ந்து உன்னை வீட்டை விட்டு விரட்ட அந்த பாடு பட்டோமென்று நினைத்தாய் ..? யோகன் கவனத்தை ஒரு பெண் பெறுகிறாளென்றால் அவளால் நமக்கு எந்த இடையூறும் வந்து விடுமோ ..? என்ற பயம்தான் .”

” இல்லை சமுத்ரா இங்கிருந்து என்னைப் போல் கஷ்டப்பட்டு விடுவாளோ என றுதான் நான் அவளை விரட்ட முயன்றேன் ” புவனா .

” ஆனால் அவள் இங்கிருந்து விடுவாள் என்பதில் உங்களுக்கும் நம்பிக்கைதானே அம்மா ” என்றாள் செல்வமணி.அன்று நீங்களெல்லாம் சேர்ந்து என்னை விரட்டி விடுவீர்களோ என பய்ந்தேன் .என்ற மேகலா நினைவு வந்தாள் .உடல் முழுவதும் படபடத்து வியர்க்க திருதிருவென விழித்தாள் சமுத்ரா .




” ம் ..நல்லா இப்போ முழி முழின்னு முழி.  ..நன்றாக உன்னை நீயே அலசி ஆராய்ந்து முடிவுக்கு வா. ஏம்மா தம்பி இவளுக்கு பின்னால் கூஜா தூக்க தயாராக நிற்கிறானே .அதை இவள் எப்போது உணர்வாள் ?” கிண்டலாக கேட்டாள் செல்வமணி .அவள் கேட்ட தொனி சிரிப்பினை உண்டாக்க புவனாவும் , செல்வமணியும் சிரிக்க தொடங்கினர் .

அந்த சிரிப்பு ரோசத்தை உண்டாக்க ” போதும் அப்படி எப்போது உங்கள் தம்பி எனக்கு கூஜா தூக்கினாரோ ..? என்றாள் .

” அட …கூஜா தூக்குவதென்றால் நிஜம்மாகவே கூஜா என்று நினைத்து விட்டாயா சமுத்ரா .அந்தக்காலத்தில் கூஜா ..இந்தக் காலத்திற்கேற்ப பெட்டி , பேக் , பை …இப்படி …” நீட்டி முழக்கி செல்வமணி சொல்லிக் கொண்டிருக்கையில் ….

” சமுத்ரா இதையெல்லாம் காரிலேயே வைத்து மறந்துவிட்டு வந்துவிட்டோமே .எங்கே வைக்க இவற்றை …? ” என்ற கேள்வியோடு கைகள் , தோள்கள் முழுவதும் அன்று சமுத்ரா ஷாப்பிங் செய்த பைகளுடன் வந்து நின்றான் யோகேஷ்வரன்.

தாங்கள் பேசிக் கொண்டிருந்த பேச்சிற்கு தோதாக அவன் வந்து நின்ற கோலத்தில் புவனாவும் , செல்வமணியும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர் .சமுத்ராவிறகு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்த்து .

” நீ எப்போது வந்தாய் செல்லா ..? எதற்கு சிரிக்கிறீர்கள் ? என்றபடி இன்னமும் பாரம் சுமந்து நின்றவனிடம் ” முதலில்  எல்லாவற்றையும் கீழே வையுங கள் ” என பல்லைக் கடித்தாள் சமுத்ரா .

” ஏன் ..? மாடியில்தானே வைக்க வேண்டும் ..? நீ எப்படி தூக்குவாய் ..? நானே கொண்டு போகிறேன் ..” என்றபடி மாடியேறினான் .

அம்மா , மகளின் சிரிப்பு சத்தம் அதிகமாகியிருக்க அவர்கள் கேலியை எதிர்நோக்க பயந்து அவசரமாக சமுத்ராவும் மாடியேறினாள் .இப்போது சிரிப்பு சத்தம் மேலும் அதிகரித்தது .

” எதற்கு சமுத்ரா அம்மாவும் , அக்காவும் சிரிக்கின்றனர் ? ” பொருட்களை பத்திரமாக வைத்தபடி கேட்டவனை முறைத்தாள் .

” என்னம்மா ..எதற்கெடுத்தாலும் இப்படி கண்ணகியை துணைக்கழைத்தால் எப்படி ..?” சலித்தபடி நின்றவனின் கையிலிருந த பையை பிடுங்கினாள் .அந்த பை பிரிந்து அதிலிருந்த பொருட்கள் சிதறின .தன் காலடியில் பிரிந்து விழுந்த சிறு பெட்டியை எடுத்த யோகன் அதிலிருந்த மெட்டியை கண்டு விழிவிரித்தான் .

” இது யாருக்கு சமுத்ரா ..? ” என்றான் .

” ம் …யாராவது ரோட்டில் போகிறவர்களுக்கு தானம் வழங்கலாமென்று வாங்கினேன் .” வெடுக்கென்று அவன் கையிலிருந்து பிடுங்கியவள் கட்டிலில் அமர்ந்து கால்களை மேலே தூக்கி வைத்து விரலில் போட முயன்றாள் .புதியதென்பதால் அந்த மெட்டி கம்பி பிரிக்க கடினமாக இருக்க ” கொண்டா நான் பிரித்து தருகிறேன் ” என வாங்கியவன் பிரித்ததோடு அவள் கால்களை தன் மடியில் எடுத்து வைத்து மெட்டியை போட்டு விடத் துவங்கினான் .

மறுக்க நினைத்து மனமில்லாமல் போய்விட  தன் கால்களை பற்றியிருந்த அவனது கதகதப்பான கைகளை உள்ளூர ரசித்தபடி அமர்ந்திருந்தாள் சமுத்ரா . அணிவித்து முடித்து விட்டு இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து அழகு பார்த்தவன் ” நல்ல செலக்சன் சமுத்ரா .அழகாக இருக்கறது ” என்றதோடு குனிந்து அவள் கால்களில் தனது இதழ்களை அழுத்தமாக பதித்தான் .

உடல் சிலிர்க்க கால்களை அவனிடமிருந்து உருவ முயல , விடாமல் பற்றி தன் மடியில் வைத்து அவள் பாதங்களை தழுவியபடி ” ஏன் முத்ரா …இதையும் சேர்த்து சுழற்றி வைத்து விட்டு போவாயா ..? ” என்றான் .

இந்தக் கேள்வியில் திகைத்து அமர்ந்திருந்த சமுத்ராவின் அருகே அப்படியே சாய்ந்து நகர்ந்தவன் அவளது கழுத்து மாங்கல்யத்தை ஒற்றை விரலால் வருடியபடி ” ம் …? ” என்றான் .




பதில் சொல்ல நாக்கு புரளாமல் திகைத்து அமர்ந்திருந்த சமுத்ராவை பார்த்தவன் ” வேண்டாம் முத்ரா என்னை விட்டு போய்விடாதே ” என்றபடி அவள் மார்பில் தலையை சாய்த்துக்கொண்டான் .

குழந்தையாய் தன் மார்பில் கிடந்த கணவனை விலக்க
முயன்ற சமுத்ரா அவனது ” ப்ளீஸ் ..” என்ற வேண்டலில் உதடு கடித்து அமைதியானாள் .

இப்போது யோகனின் போன் ஒலிக்க தொடங்க ” போனை எடுங்க ” அவன் முகத்தை நிமிர்த்த முயன்றாள் .

” ம்ஹூம் …நீயே பேசு …” சிறு குழந்தையாய் சிணுங்கி விட்டு முகத்தை திருப்பி புதைத்துக் கொண்டான் .

பச்சைப் பிள்ளை போலத்தான் …கணவனை சலித்தபடி அவன் பேன்ட் பாக்கெட்டினுள் ஒலித்துக் கொண்டிருந்த போனை எக்கி கஷ்டப்பட்டு எடுத்தாள் .இந்த அசைவை சாக்காக வைத்து மேலும் மனைவியை அணைத்தபடி அவளுள் புதைந்தான் யோகன் .

” இப்படி இறுக்கினால் போனை எப்படி எடுப்பது ? ” போலியாய் சலித்தபடி போனை எடுத்தவள் பேச்சின்றி அப்படியே இருந்தாள் .

” யார் கண்ணம்மா ..? ” மனைவியிடமிருந்து மீள மனதின்றி அப்படியே இருந்தபடி கேட்டான் யோகன் .அவளிடமிருந்து பதிலின்று போகவே டக்கென அவளைவிட்டு பிரிந்தவன் வேகமாய் போனை வாங்கி ஆன் செய்து ” இன்று வந்துவிடுவேன் சாவித்திரி ” என பதிலளித்தான் .தன் மடியிலிருந்த சமுத்ராவின் பாதங்களை கீழே விட்டான் .

தன் கண்களை  நேருக்கு நேர் முறைத்தபடி பார்த்த மனைவியிடம் ” சாவித்திரியை நிச்சயம் என் வாழ்விலிருந்து விலக்க முடியாது சமுத்ரா ” என்றான் .எவ்வளவு உறுதி குரலில் .

ஊழியாய் பொங்கிய அழுகையை அடக்கியபடி ” இந்த கண்றாவியை எல்லாம் பார்த்தபடி உன்னோடு நான் வாழ வேண்டுமோ ..? ” என்றாள் .

பதிலே பேசாமல் அவளை திரும்பியும் பார்க்காமல் வெளியேற போனான் .

சற்று முன் அவனிடம் நெகிழ்ந்த தன நிலைக்காக கோபம் கொண்டு “ இனி என் அருகில் வருவதோ , என்னை தொடுவதோ வேண்டாம் . உங்களை பார்க்கவே என்னக்கு வெறுப்பாக இருக்கிறது “ சமுத்ராவின் கோபத்தை திரும்பி நின்றபடியே கேட்டவன் போய் விட்டான்.

சிறிது நேரம அழுதுவிட்டு அதற்காக தன் மீதே கோபமும் கொண்டுவிட்டு ஒரு தீவிரமான முடிவோடு தன் போனில் மலையரசனின் எண்களை அழுத்தினாள் .

” அண்ணா ..உங்களுக்கு எவ்வளவு வேலையிருந்தாலும் அதனை ஒதுக்கிவிட்டு நீங்கள் என்னைப் பார்க்க கண்டிப்பாக வரவேண்டும் .என் வாழ்வில் மிக முக்கிய முடிவெடுக்கும் நிலையில இருக்கிறேன் .உங்கள் உதவி எனக்கு வேண்டும் ” என்றாள் .




What’s your Reaction?
+1
15
+1
13
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!