Serial Stories வா எந்தன் வண்ணநிலவே…

வா எந்தன் வண்ணநிலவே-11

11

இல்லை இல்லை இது பொய் இதோ  ,இப்போதே சும்மா விளையாட்டுக்கு சென்னேன் என இதோ கூறி விட போகிறான் என நப்பாசையுடன் மனதுக்குள் கூறியபடி அங்கேயே நின்றிருந்தாள் எழில்நிலா .

 எதிரிலிருப்பவன் அவன் நண்பன் போலும்.ஏதோ கேட்டான் ,என்ன கேட்டான் என்று எழில்நிலாவுக்கு விளங்கவில்லை . அவள் காதில்தான் நித்யவாணனின் வார்த்தைகள் மாறி மாறி ஒலித்துக்கொண்டிருக்கிறதே . இரண்டு காதுகளையும் நன்கு தேய்த்து விட்டுக்கொண்டு நித்யவாணனை கவனித்தாள். 

 “ஏன்டா உனக்குத்தான் தெரியுமே எனக்கு கறுப்புன்னா சுத்தமா பிடிக்காதுன்னு .பிறகு எப்படிடா இதை நான் ஏற்றுக்கொள்வேன்? .இங்க இருக்கிற வரை வெளியே போக வர பொழுது போக இந்த குட்டியை யூஸ் பண்ணிட்டு ஊருக்கு போறப்ப கழட்டி விட்டுட்டு போயிடுவேன் .வேற எதுவும் தோதா அமையலடா .அதான் இதை கட்டி மேய்ச்சுக்கிட்டு இருக்கேன் ” மாறி மாறி தீ மழை பொழிந்தான்.

 எரிந்து எரிந்து சிறு துகளாகி காற்றில் கரைவதாய் உணர்ந்தாள் எழில்நிலா . என்ன அவமானம் !இதற்கு மேல் அவமானப்பட என்ன இருக்கிறது !.இனிமேலும் தான் வாழத்தான் வேண்டுமா …?ஐயோ ஐயோவென கதறலாம் போலிருந்தது அவளுக்கு . 

எப்படி வெளியே வந்தாள் …எப்படி காரில் ஏறினாள், தெரியவில்லை.எப்படியோ சித்தி வீட்டிற்கே  வந்து சேர்த்திருந்தாள் . சிறிது சுரணை வந்து அவள் பார்த்த போது மாடி அறை கட்டிலில் படுத்து கிடந்தாள். கண்களை தொட்டு பார்த்தாள் கண்ணீரே இல்லை. மிதமிஞ்சிய அதிர்ச்சி காரணமாக இருக்கலாம்.

போன் ஒலித்தது, எடுத்துப் பார்த்தாள். அவன் தான், காலை கட் செய்தாள். மீண்டும் ஒருமுறை முயன்றவன் பிறகு மெசேஜ் அனுப்பினான். “நிலா பார்க்கில் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன்”

 எழில்நிலா பதில் அனுப்பவில்லை. அதன் பிறகு அவனிடம் இருந்து போனோ மெசேஜோ வரவில்லை.

“எழில்..!” மைனாவதி அறைக்குள் வந்தாள்.”கிளம்பும்மா உங்க வீட்டுக்கு போகனும் “




 ஏனென்று கேட்க கூட தோன்றாமல் நித்யவாணன் இருக்கும் ஊரை விட்டு போகப்போகிறோம், உடனே கிளம்பி விடலாம் என்ற ஒன்றையே மனதில் வைத்து வேகமாக பேக் செய்தாள் . 

தன்னுடன் காரில் சித்தியும்,சித்தப்பாவும் ஏறவும் “என்ன சித்தி மதுரையில் உங்களுக்கும் எதுவும் வேலை இருக்கிறதா?” என்றாள். சிறிது தயங்கி ஆமாமென தலையசைத்தாள் மைனாவதி.

கார் கீழே இறங்கும்போது அடுத்த வளைவில் இறங்கி வந்த காரை பார்த்து பட படத்தாள். அது…அவனுடைய கார்தானே?இப்போது எதற்கு பின்னாலேயே விரட்டிக் கொண்டு வருகிறான்? எழில்நிலாவிற்கு அம்மா மஞ்சுளாவின் கண்டிப்பு நினைவு வந்தது. 

மைனாவதி பரவாயில்லை.பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுப்பவள்.மஞ்சுளா மிகுந்த கண்டிப்பும்,கட்டுப்பாடுகளும் பிள்ளைகளுக்கு விதிப்பவள்.

இதோ இப்படி ஒருவன் அவளை பின் தொடர்ந்து வருவது தெரிந்தால்…எழில்நிலா பயந்தபடி அமர்ந்திருந்தாள்.அப்போது சாலையில் மரம் ஒன்று குறுக்கே விழுந்து அப்புறப்படுத்தப் பட்டுக்  கொண்டிருக்க,சாருகேசியும்,மைனாவதியும் நேரமாயிற்றே என்றபடி பதட்டத்துடன் கீழே இறங்கினர்.

அடுத்த நிமிடமே கார் கதவை திறந்து அவளருகே அமர்ந்தான் நித்யவாணன்.”என்னாச்சு நிலா?”கூர்மையான பார்வையுடன் அவளை பார்த்தான்.

சற்று முன் அவன் பேசிய கொடூரமான வார்த்தைகளே மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலித்திருக்க,ஏன்டா அப்படி பேசினாய் என அவன் தோள்களை கட்டிக் கொண்டே அழத் தோன்றிய தன்னில் விதிர்த்துப் போனாள் அவள்.

கைகளை இறுக மூடி தன்னை கட்டுப்படுத்தினாள் ” எங்கள் ஊருக்கு போகிறேன்”

“ஓ…ஆனால் ஒரு வார்த்தை கூட சொல்லாமல்…”

“உங்களிடம் எதற்கு சொல்ல வேண்டும்? இங்கே இருந்த வரை எனக்கு பொழுது போவதற்காக உங்களை உபயோகப்படுத்திக் கொண்டேன்.அவ்வளவுதான்.இனி என் ஊரில் எனக்கான வேலைகள் நிறைய இருக்கின்றன.குட்பை “

நீ என்னடா என்னை ஒதுக்குவது…இதோ நான் உன்னை ஒதுக்குகிறேன் வீம்பாக தலை நிமிர்ந்து நின்றாள்.

சினத்தில் ஜொலித்த அவன் விழிகள் அவளுள் திருப்தியை தந்தன.காரை விட்டு இறங்கியவன்,வேகத்துடன் கார் கதவை அடித்து சாத்தினான்.குனிந்து “இதற்கு உன்னை பழி வாங்காமல் விட மாட்டேன்டி” சூளுரைத்தான்.புழுதி பறக்க தன் காரை திருப்பிக் கொண்டு போனான்.

சாலையில் கிடந்த மரம் அகற்றப்பட்டிருக்க, அவர்கள் கார் கிளம்பியது. எதையோ சாதித்தது போல் திருப்தி பட்டுக் கொண்டாலும்,எழில்நிலா மனம் முழுவதும் நிறைந்திருந்தது வெறுமையே.




மதுரையில் கார் நின்ற இடம் மருத்துவமனை .எழில்நிலா பதட்டத்துடன் மைனாவதியை பார்க்க “ஒண்ணுமில்லடா உங்க அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை …”

அவள் வார்த்தைகளை முடிக்கும் முன் மருத்துவமனைக்குள் தடதடத்து ஓடினாள் எழில்நிலா . கடவுளே அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது நான் கொஞ்சம் கூட தகுதியில்லாத ஒருவனை நினைத்து மருகியபடி பயணித்து வந்திருக்கிறேனே .முருகா இதற்கான தண்டனையை எனக்கு கொடு .என் அப்பாவை காப்பாற்று !

இதய அறுவை சிகிச்சை முடிந்து மறுநாள் காலை  தந்தை கண் விழித்து அவளை பார்த்து புன்னகைக்கும் வரை இதே பிரார்த்தனைதான் எழில்நிலாவுக்கு.

அதன் பிறகு,படிப்பு முடிந்து இரண்டு வருடங்கள் கழித்துதான் திருமண பேச்சை எடுக்க வேண்டுமென்ற அவளின் முந்தைய பேச்சு தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி தள்ளி போடப் பட்டது . உடனடியாக மாப்பிள்ளை தேடப்பட்டு ஆறே மாதங்களில் அவள் முன் மாப்பிள்ளையாக நிறுத்தப்பட்டான் நித்யவாணன் .

 நான் அவனை மிகவும் விரும்பினேன் …அதனால் திருமணத்திற்கு சம்மதித்தேன் .ஆனால் வேறு வழியில்லாமல் மேய்க்கும் அவன் என்னை மணக்க ஏன் சம்மதித்தான் ? யோசித்து யோசித்து மண்டை உடைந்தது எழில்நிலாவுக்கு

ஏதோ இக்கட்டில் தன்னை மணக்க சம்மதித்து விட்டான் ,எப்பொழுது வேண்டுமானாலும் திருமணத்தை நிறுத்தி விடுவான் என்றே நம்பினாள் அவள் திருமணம் முடியும் வரை .

ஆனால் நித்யவாணன் எழில்நிலாவை மணக்க சம்மதித்த காரணம் விரைவிலேயே அவளுக்கு தெரிய வந்தது .அந்த காரணத்தை உணர்ந்ததும் புழுவை விட கேவலமான பிறவியாய் தன்னை உணர்ந்தாள் எழில்நிலா .




What’s your Reaction?
+1
34
+1
19
+1
0
+1
0
+1
1
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!