Serial Stories மயங்கினேன்_மன்னன்_இங்கே

மயங்கினேன் மன்னன் இங்கே-12

12

 

சஷ்டிக்கு தனக்கு  நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை துளியும் நம்பவே முடியவில்லை . சற்று முன் அவள் சந்திராம்பிகைக்கு சீராக கொடுப்பதற்காக வெள்ளித் தட்டில் அடுக்கி வைத்திருந்த நகைகளும் , புடவையும் இப்போது அவள் முன்னால் சீராக நீட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அவள் கைகள் நடுங்கின. அந்த சீர் தட்டை வாங்க அவள் மனம் ஒப்பவில்லை .இ …இதற்கு நான் தகுதியானவள் தானா …?

 

” ம் …” உறுமலாய் கேட்டது திருமலைராயனின் குரல் .

 

விழிகளும் நடுங்க அவனை ஏறிட்டு நோக்க , சிவந்த கண்களும் உருண்ட விழிகளுமாக அவளை பார்வையிலேயே மிரட்டிக் கொண்டிருந்தான் அவன் .

 

கை நடுங்க சீர் தட்டை வாங்கிக் கொண்டு நிமிர்ந்தவளின் பார்வை  அருகே  குன்றலோடு நின்றிருந்த தன் தாயின் மேல்படிந்தது . பதில் சீர் நான் என்ன கொடுப்பது …? தாயின் தவிப்பு இதுதானென சஷ்டிமலரால் உணர முடிந்தது. இதோ இந்த மேடையில்தான் சற்று முன் , இதே சீர்களை வைத்து கொடுக்க இருந்தவனுக்கு பதிலாக இதே அளவு பெறுமானமுள்ள சொத்துக்களும் , நகைகளும்  மறு சீராக தரப்பட்டன . ஊர் நலனுக்காக   நிமிர்வோடு அவற்றை ஒதுக்கி விட்டு  சீரென சிறு செல்வமும் தர முடியாத தன்னை இவன் மணம் முடிக்க காரணம்….?

 

இவனது திருமணத்தை நிறுத்த நினைத்ததற்கு தன்னை பழி வாங்கவா …? இதனையே செய்ய நினைத்த தன் தாயையும் , சித்தியையும் தண்டிக்கவா …? சஷ்டியின் மனம் தடுமாறியது .கைகள் உதறியது .

 

” இதை கொடு கோமதி …” பாட்டியம்மா ஒரு தட்டை சஷ்டியின் அம்மா கையில் தந்தார். அதில் பட்டு வேட்டி சட்டையும் , செயின் , மோதிரமென சில நகைகளும் இருந்தன .கோமதி கண்கள் கலங்க பாட்டியை பார்க்க ….

 

” திடுமென முடிவான கல்யாணம் .உடனே சீருக்கு நீ எங்கே போவ …? இதை இப்போது கொடு. பிறகு பேசிக் கொள்ளலாம் ” தன் சபை கௌரவத்தை காத்த பாட்டியை நெகிழ்வாய் பார்த்தபடி கோமதி அந்த சீர் தட்டை வாங்கி திருமலைராயனின் கைகளில் கொடுத்தாள் .

 

” முதல் முகூர்த்தம் முடிந்து இரண்டாவது முகூர்த்தம் முடிய இன்னமும் அரை மணி நேரம்தான் இருக்கிறது அத்தை. அதற்குள் உங்கள் பெண்ணை தயாராகி வரச் சொல்லுங்கள்.  சொப்னா உன் அண்ணியை ரெடி பண்ணி கூட்டி வா …” அனைவர் முன்னும் தங்கள் உறவு முறைகளை அழுத்தமாக பதிய வைத்து விட்டு எழுந்து உடை மாற்ற சென்றான் திருமலைராயன்.

 

” இந்த அட்டிகை உனக்கு எடுப்பாக இருக்கிறதுடி …” சொன்னபடி தனக்கு நகையை போட்டு விட்ட சொப்னாவை குற்றவுணர்வுடன் பார்த்தாள் சஷ்டி மலர் .

 

” நா…நான் …எ .. என்னைப் பற்றி உனக்கு முன்பே தெரியுமா சொப்னா …? “

 

” ம் …முழுதாக தெரியாது .ஆனால் உன் மேல் சிறு சந்தேகம் இருந்தது .நீ பொதுவாக யாரிடமும் நெருங்கி பழக மாட்டாய் .திடுமென என்னுடன் ஒட்டுதலாக பழகினாய். எங்கள் ஊரை பார்க்க வேண்டுமென்றாய். எங்கள் வீட்டு கல்யாணத்திற்கு வர ஆசையாக இருக்கிறதென்றாய். இதெல்லாம் உன் மேல் எனக்கு உறுத்தலாகவே இருந்தன. உன்னை இங்கே அழைத்து வந்த அன்றே என் சந்தேகத்தை அண்ணனின் காதில் போட்டு விட்டேன். அவர் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றுவிட்டார். நானும் விட்டு விட்டேன். ஆனால்  நீ அண்ணனின் திருமணத்தை நிறுத்த நினைத்தாய் எனக் கேள்விப்பட்டதும் எனக்கு நிஜமாக சிரிப்புதான் வந்தது. என் அண்ணன் கற்பாறை மலர். அவரோடு மோதுபவர்கள் மண்டைதான் உடையுமே தவிர அவர் என்றும் அப்படியேதான் உறுதியாக நிற்பார் …”

 

” அந்த தாண்டவராயரும் , சந்திராம்பிகையும் அவரை பற்றி தெரிந்தும்  தைரியமாக மோதினார்களே “




 

” அவர்கள் விசயம் முடிந்து விட்டதென்றா நினைத்தாய் …இனித்தான் அவர்கள் நேரம் ஆரம்பமாக போகிறது பார் .அவருடன் விளையாட நினைப்பவர்களை அண்ணன் எளிதாக விட்டு விடமாட்டார் .இனி அவர்கள் கதியை பார் …” சொப்னா உற்சாகத்துடன் அண்ணன் புகழ் பாட சஷ்டி மலருக்கு அடி வயிறு கலங்கியது .

 

எல்லோருக்கும் தண்டனை உறுதியுன்றால் , அவனது திருமணத்தை நிறுத்த முயன்ற தனக்கென்ன தண்டனை …?ஒரு வேளை இந்த திருமணமே அவனது தண்டனைதானோ …? இவ்வளவு பெரிய ராயர். எதற்காக என்னைப் போல் ஒரு சாதாரணமானவளை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வேண்டும் …? ஆனால் இந்த திருமணத்திற்கான காரணங்களை அவனும் , பாட்டியும் சொன்னார்களே …அதுவும் ஊர் ஜனங்கள் அனைவருக்கும் முன்னால் …

 

சஷ்டியின் மனது சற்று முன் அவளது திருமணம் நிச்சயமான நிகழ்வை மீண்டுமொரு முறை மனதால் பார்க்க ஆரம்பித்தது .

 

இருபது வருடத்திற்கு முன் செய்த பாவத்திற்கு பரிகாரமென பாட்டி கண் கலங்க கூறியதும் , அதற்கு ஆட்சேபனையாக சில குரல்கள் கூட்டத்திலிருந்து எழ  பாட்டி கை உயர்த்தி அவர்களை நிறுத்தினார் .

 

” உங்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் மீது எஜமான விசுவாசம் மிக அதிகமாக உண்டு என எனக்கு தெரியும் .ஆனால் நாங்களும் சாதாரண மனித பிறவிகள்தான். நாங்களும் தவறு செய்வோம். அப்படி இருபது வருடத்திறகு முன் நான் செய்த தவறு இதோ இன்று என் கண்ணில் முள்ளாக துருத்திக் கொண்டு நிற்கிறது …” சொன்னபடியே பாட்டி மெல்ல நடந்து போய் மறைவாக நின்றிருந்த சஷ்டியின் தாயின் கையை பிடித்து இழுத்து வந்து கூட்டத்தினர் முன் நிறுத்தினார் .

 

” இவளை உங்களில் நிறைய பேருக்கு தெரிந்திருக்குமே …”

 

சிறிது தடுமாறினாலும் முதலில் ஓரிருவரும் பிறகு நிறைய பேருமாக  அடையாளம் கண்டு கொண்டனர் .

 

” அட …நம்ம கோமதி “

 

” சடையப்பன் மக …”

 

” பரஞ்சோதி பேத்தி “

 

” நம்ம நாராயணனுக்கு கல்யாணம் பேசுனாகளே. அந்த பொண்ணுதானே …”

 

” திடீர்னு ஊரை விட்டு ஓடிப் போயிட்டாளே …”

 

” இல்லைப்பா அவள் கல்யாணம் நின்னு போச்சு .அதுக்கப்புறம் ஊரை விட்டு போயிட்டா …”

 

”  அந்த நாராயணனை எங்கே …? ” 

 

” அவன்தான்பா முதலில் ஊரை விட்டு போனவன். அதனால்தான் அன்னைக்கு கல்யாணம் நின்னு போச்சு .அவமானம் தாங்க முடியாமல் இந்த பொண்ணும் இவள் அப்பா சடையப்பனும் ஊரை விட்டு போயிட்டாங்க “

 

ஆளாளுக்கு கோமதியை அடையாளம் கண்டு கொண்டதோடு அவளது வாழ்க்கை நிகழ்வுகளையும் கண்டு பிடித்து பேசி ஒரு முடிவுக்கு வந்தனர் .




 

” ஏந் தாயி கோமதி நல்லாயிருக்கியா …? “

 

” உன் அப்பாவை எங்கே …?”

 

” உன் புருசன் , பிள்ளை குட்டியுல்லாம் நல்லாருக்காகளா …? “

 

” எங்க ராயர் கல்யாணத்திற்கு வந்தியா ..? “

 

இதோ இந்த கணம் உங்கள் ராயரின் கல்யாணத்தை நிறுத்த வந்தாள்  என ஒரு வார்த்தை யாராவது சொன்னால் போதும் ,எல்லோரும் சேர்ந்து தன்னை கிழித்து தொங்க விட்டு விடுவார்கள் என உணர்ந்த கோமதி நடுங்கினாள். தனக்கு உதவிய தனது மகளையும் , ஒன்று விட்ட தங்கையையும் அவள் தற்போது காப்பாற்றும் நிலையில் இருந்தாள். கண்களாலேயே அவர்களை தப்பித்து போய் விடும்படி கேட்டுக் கொண்டிருந்தாள். இருவரும் உறுதியாக சாடையிலேயே மறுத்துக் கொண்டிருந்தனர்.

 

” உங்களுக்கு கோமதியை நன்றாக தெரியும்தானே …? இவளது மகள்தான் இந்த பெண். சஷ்டி மலர். இவளைத்தான் என் பேரனுக்கு இப்போது கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறேன் “

 

கூட்டத்தில் அமைதி நிலவியது. அவர்களுக்குள்ளாக முணுமுணுவென பேசினர் .ஒரு வயதான பாட்டி எழுந்து நின்றார் .

 

” ராயரம்மா உங்களுக்கு தெரியாதது இல்லை .இந்த கோமதியை பற்றி நம்ம ஊர்ல நல்ல பேச்சு இல்லை. கல்யாணத்திறகு முன்னாலேயே இவள் மாசமானதும் , அதை தெரிஞ்சுகிட்டுத்தான் அந்த நாராயணன் இவளை விட்டுட்டு ஊரை விட்டு ஓடிப் போனான்னும்  பேச்சிருக்கு. எதற்கும் யோசித்து முடிவெடுங்க ” தெளிவாக பேசினார் .

 

கோமதி சட்டென உடைந்து அழுதாள் .தன் முகத்தை கைகளால் மூடிக் கொண்டு மடிந்து கீழே அமர்ந்து விட்டாள் .சஷ்டி பதற்றமாக ஓடி வந்து தன் தாயை தாங்கினாள் .

 

” இருபது வருடத்திற்கு முன்னால் எரிந்து அடங்கிய நெருப்பை இப்போது மீண்டும் ஊதி கிளப்பி விடுகிறீர்களா பாட்டி …? ” கோபமாக கேட்டாள் .

 

” இல்லைம்மா .நீர் ஊற்றி அந்த நெருப்பை அணைக்கிறேன் ” சொல்லி விட்டு பாட்டி ஊரார் முன் திரும்பினார. .

 

” நீங்கள் சொல்லும் நாராயணன் எனது பண்ணையில்தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். கடுமையான உழைப்பாளி. நல்ல விசுவாசி. ஆனால் பயங்கர செலவாளி .கைநிறைய சம்பளம் வாங்குவான். ஒரு பைசா சேமிக்காமல் அன்னைக்கே எல்லாத்தையும் செலவழிச்சுடுவான் .மறுநாள் வேலை செய்தால் போயிற்று என்பான். நான் அவனை கண்டித்துக் கொண்டே இருப்பேன் .என் பேச்சை கேட்க மாட்டான். பந்தாவாக கை பணம் முழுவதையும் செலவழித்து விடுவான். ஒரு நாள் கோமதியை என்னிடம் கூட்டி வந்தான் .ஏதோ தூரத்து உறவுப் பெண். படித்த பெண். இவளைத்தான் கல்யாணம் செய்ய போகிறேன் என்றான். நானும் இரண்டு பேரையும் வாழ்த்தி அனுப்பினேன் “

 

” கோமதியை ஒரு நாள் கூப்பிட்டு நாராயணனை பற்றி சொல்லி கண்டிக்க சொன்னேன். அவள் என்னை டீச்சர் டிரெயினிங் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் பாட்டி .அதனால்தான் அவருக்கு நிறைய செலவாகிறது என்றாள். சரியென விட்டு விட்டேன் .கல்யாணத்திற்கு முன்பே கல்யாணம் பண்ணிக் கொள்ள போகிறவளை செலவு செய்து படிக்க வைக்கும் மனது யாருக்கு வரும் …? எனக்கு நாராயணன் உயர்வானவனாக தெரிந்தான் .கோமதியும் , நாராயணனும் அடிக்கடி என்னை வந்து பார்ப்பார்கள் .எனக்கு உங்களை போல் பெண் குழந்தை வேண்டும் பாட்டி என்பாள் இவள் .ஆமாம் பெண் குழந்தை பெத்து என் பெயரை …ஆயிரம் காளி என்று வை என்பேன் .ம்ஹூம் நான் முருக பக்தை. தவறாமல் சஷ்டி விரதமிருப்பவள். என் மகளுக்கு சஷ்டி என்றுதான் பெயர் வைப்பேன் என்பாள் …அதெப்படி என் பெயரை வைக்காமல் இருக்கிறாய் பார்க்கலாம் என்பேன் நான் …,”

 

” கோமதி படிக்க என்று மெட்ராஸ் போனாள் .நாராயணன் என்னிடம் பணம் நிறைய கடனாக வாங்கினான் .அப்போது நான் மிகக் குறைந்த வட்டிக்கு உங்கள் எல்லோருக்கும் பணம் கொடுத்து வந்தது உங்களுக்கு நினைவிருக்கும் .மேலும் மேலும் கடனாக வாங்கி , வட்டியும் கட்டாமல் அதுவும் சேர்ந்து பெருகி பெரிய தொகையாக நின்றது .நாராயணன் என் கண்ணிலேயே படாமல் ஓடி ஒளிந்தான் . நான் அவன் மேல் மிகவும் கோபமாக இருந்தேன் .அப்போது திடீரென ஒரு நாள் வந்து பாட்டி எனக்கும் கோமதிக்கும் கல்யாணம் .நீங்கள் வந்து ஆசீர்வாதம் செய்ய வேண்டுமென்றான் .பழகிய பழக்கத்திற்காக என் கோபத்தை அடக்கிக் கொண்டு போனேன் “

 

” அங்கே ஊரையே கூட்டி பெரிய வீட்டு திருமணம் போல் அதிகமாக செலவழித்து வைத்திருந்தான். அவன் கையில் அப்போது பணமே கிடையாதென்பது தெரியும். ஆனாலும் இப்படி ஆடம்பரமாக செலவழித்திருக்கிறானே …என்று என் கோபத்தை அடக்க முடியாமல் , எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு அவள் கழுத்தில் தாலி கட்டு என சத்தம் போட்டேன். நாராயணன் என்னை தனியே அழைத்து போய் இந்த திருமணம் இப்போது நடந்தே ஆக வேண்டும் .திருமணம் முடிந்ததும் பணத்தை தந்து விடுகிறேனென உறுதி சொன்னான் .நான் அரை மனதாக சம்மதித்தேன் ..”

 

” அன்று அந்த திருமணம் நிற்க வேண்டுமென நான் நினைக்கவில்லை. இப்படி ஒரு இக்கட்டில் நாராயணனை நிறுத்தினால்தான் அவன் திருந்துவானென்றே அவனுக்கு நெருக்கடி கொடுத்தேன். ஆனால் அன்று அவர்கள் திருமணம் நின்று போனது …”

 

இதனை கூறிய போது பாட்டியின் குரல் மிகவும் கலங்கியது .




 

 

What’s your Reaction?
+1
18
+1
15
+1
2
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!