Athikalai Poongatru Serial Stories

அதிகாலை பூங்காற்று-10

10

 

 

 

“என்னடி சொல்ற உமா..?” கவிதாவிற்கு தோழி என்ன சொல்கிறாளென புரியவில்லை..

“நீ ஏன் எங்கள் கல்யாணத்திற்கு வரலை..? அதை முதலில் சொல்லு..”

“ம்.. எங்கே எங்களைத்தான் இந்த தெருப் பக்கமே வரக் கூடாதென்று ஒதுக்கி வைத்திருக்கிறார்களே..”

“என்ன..? ஏன்..? யார் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்..”

“உன் வீட்டு அய்யாவும், ஆத்தாவும்தான்..”
கவிதா குழம்பினாள்..

“எதற்குடி..?”

“எங்க நிலத்தை இன்னமும் இவர்கள் கொடுக்கவில்லையே.. அதற்காக நாங்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.. அதனால் எங்களை பற்றி ஊருக்குள் தப்பு தப்பாக சொல்லி எங்களை இந்த தெருப்பக்கமே வரக்கூடாதென ஒதுக்கி வைத்துவிட்டனர்..” உமாவின் குரல் கம்மியது..

ஆனால் இப்போது.. இதோ நீ வந்திருக்கிறாயே.. இது எப்படி..? இந்த கேள்வி கவிதாவினுள் எழுந்த போதும் தோழி கண்கலங்கி நிற்கும் இந்நேரத்தில் அதனை கேட்டு அவளை மேலும் கலங்கடிக்க அவள் விரும்பவில்லை.. என்னை பார்க்கும் ஆவலில் எப்படியாவது வந்திருப்பாளாயிருக்கும்.. தன்னைத் தானே சமாதானப்படுத்தியபடி தோழியின் கைகளை பற்றிக் கொண்டாள்..




“உங்கள் நிலப் பிரச்சனை இன்னமும் முடியவில்லையாடி..?”

“உன் புருசனும், மதினியும் எங்களுக்கு அந்த நிலத்தை கொடுத்தால்தான் அந்த பிரச்சனை முடியும்..? இது புரியவில்லையா உனக்கு..?”

“ஓ.. இன்னமும் கொடுக்கவில்லையா..?” கவிதாவினுள் மெல்லிய குற்றவுணர்வு..
அன்றைய பிரச்சனையின் பின் உமா காலேஜிற்கு அடிக்கடி லீவ் எடுக்க, இருவரும் வெவ்வேறு மேஜர்வேறு என்பதால் கவிதாவால் அடிக்கடி அவளை சந்திக்க முடியவில்லை.. அத்தோடு அவள் அன்று அய்யனாரை வந்து பார்த்தது அன்னாசிலிங்கத்திற்கு தெரிந்து விட, அவளை கூப்பிட்டு கண்டித்தார் அவர்..

அதென்ன பொட்டை புள்ள எந்த கவலையும் இல்லாமல் இப்படி ஊர் சுற்றுவது.. அவளை அழைத்து உட்கார வைத்துக் கொண்டு இந்த திட்டுதலை தனது மனைவிக்கு கொடுத்தார்.. அன்னாசிலிங்கம்.. தானே தவறு செய்தது போல் தலை குனிந்து நின்றாள் முருகலெட்சுமி..

“நான் ஒண்ணும் ஊர் சுற்ற போகலைப்பா.. என் ப்ரெண்டுக்காக பேசப் போனேன்..” ரோசமாக தந்தையிடம் பேசினாள்..

“உன் பிரண்டுக்கு அப்பா, அம்மா இல்லையா..? அவர்கள் பார்த்துக் கொள்ள மாட்டார்களா..? நீ என்ன நாட்டாமை அங்கே..?”

“அது.. அவர்களால் முடியலைன்னுதான்.. அந்த ஆள் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களை ஏமாற்றிவிட்டாராம்..”

“உனக்கு ரொம்ப தெரியுமோ..?”

“அது அவள்தான் சொன்னாள்..”

“அவள் ஆயிரம் சொல்வாள் உனக்கு அறிவில்லை ஒரு பொட்டைப்புள்ள இப்படி ஊர் விட்டு ஊர் போய் பஞ்சாயத்து பேசிட்டு வருவியா..?” குரலுயர்த்தி கத்திய தந்தையை மிக வெறுத்தாள் கவிதா..

“ஏன்பா பொம்பளை புள்ளைங்கன்னா வீட்டோடு அடஞ்சியே கிடக்கனுமா..?” துடுக்காய் கேட்டவளை அன்னாசிலிங்கம் முறைக்க, முருகலட்சுமி கையுயர்த்தி அடிக்க வந்தாள்..

“ஏய் என்னடி அப்பாங்கிற மரியாதை இல்லாமல்..”




“அண்ணி விடுங்கண்ணி.. சின்னப்புள்ள அவள போயி..” முருகலட்சுமியை தடுத்த தங்கபாண்டியன் அண்ணன் மகளை அழைத்துப் போய் வண்டி வண்டியாய் அட்வைஸ் மழை கொட்ட, கவிதா இனி இந்த வீட்டினில் நான் வாயைத் திறந்தேன்னா பாரு.. என வெறுத்துப் போய் முடிவெடுத்தாள்..

அன்றும் சரளா மட்டுமே “சபாஷ் கவிதா.. ரொம்ப சரியாக பேசியிருக்கிறாய்.. இப்படியே தைரியமாக உன் அப்பாவை எதிர்த்து நில்லு.. நாம் பெண்கள் எப்போதும் நமது உரிமையை விட்டுத் தரக் கூடாது..” என அவளுக்கு ஆதரவு அளித்தாள்..

ஆனாலும் அதன் பிறகு தொடர்ந்து இந்த வேலையை செய்ய, கவிதாவிற்கு கொஞ்சம் சங்கடமாக இருக்க, அதற்கேற்றாற் போல் உமாவையும் சந்திக்க முடியாமல் போக, அவளாகவே மெல்ல மெல்ல இந்த விசயத்தை மறந்தே போனாள்..

“எங்கள் நில விசயத்தில் நீ பேசாமல் இருக்க வேண்டுமென்று தான் உன்னைக் கல்யாணமே செய்து கொண்டாரோ..?” உமா எழுப்பிய சந்தேகம் கவிதாவினுள் திக்கென விழுந்தது..

அப்படியாக இருக்குமோ..? அன்று இங்கே நான் வந்தது அப்பாவிற்கு எப்படி தெரியும்..? இவன்தான் அப்பாவிடம் சொல்லியிருப்பானோ..? சிறு பொட்டாய் விழுந்த சந்தேகம் மளமளவென ஆலமாய் வளர்ந்தது..

“எனக்கு ஒரு தங்கை.. இரண்டு தம்பி.. அவர்கள் படிக்கனும்.. ஏற்கெனவே பணமில்லாமல் என் படிப்பு பாதியில் நின்றுவிட்டது.. இன்னமும் அவர்கள் படிப்பையும் நிறுத்தத்தான் வேணும்.. போல..” உமா அழ ஆரம்பித்து விட்டாள்..
“கொஞ்சம் இருடி..” கவிதா வேகமாக உள்ளே சென்று தனது பர்சை எடுத்து வந்தாள்..
“தம்பி, தங்கைக்கு பீஸ் கட்ட எவ்வளவுடி பணம் வேண்டும்..?”

“அது ஒரு பத்தாயிரம் வரை தேவைப்படும்..”

“ஓ.. அவ்வளவு பணம் இப்போது என்னிடம் இல்லை.. இதில் இரண்டாயிரம் இருக்கிறது.. இப்போது இதை வைத்துக்கொள்.. நாளை கோவிலுக்கு வா.. ஏ.டி.எம் மில் பணம் எடுத்து மீதி ரூபாய் தருகிறேன்..”

“இதெல்லாம் நிரந்தர தீர்வில்லைடி..” சலித்தாலும் கைநீட்டி பணத்தை வாங்கி வைத்துக் கொண்டாள்..

“நிரந்தர தீர்விற்கும் நான் ஏற்பாடு செய்கிறேன்.. என் கணவரிடம் பேசி உன் நிலத்தை உங்களுக்கே தர ஏற்பாடு செய்கிறேன்..” உறுதியளித்தவளின் மனதிற்குள் முன்தினம் இரவு அவளிடம் காதலாய், கனிவாய், ஆசையாய், மோகமாய் நடந்து கொண்ட கணவனின் ஞாபகம் இருந்தது..

“நீ சொன்னால் உன் கணவர் கேட்பாரா..?”

“நிச்சயம் கேட்பார்..”

“யாரு.. எதை கேட்பான்..?” அதிகாரம் சொட்டிய குரலுடன் வீட்டினுள்ளிருந்து வந்தாள் கண்ணாத்தாள்..

“ஏட்டி நீ அந்த மாடசாமி பய மகள்தானே இங்கே என்னடி சோளி உனக்கு..?”

“சு.. சும்மாதானுங்க ஆத்தா.. ஒரு வேலையா இந்தப் பக்கம் வந்தேன்.. இதோ இப்ப கிளம்பிட்டேன்..” உமாவின் கை கால்கள் நடுங்கின..




“இந்த தெருக்குள்ளாற உன் வீட்டாளுக நுழையக்கூடாதுன்னு சொல்லியிருக்கேடி… பின்ன என்னத்துக்கு வந்த..?”

உமா சொன்னது உண்மைதானென புரிந்து கொண்ட கவிதா பேச்சில் இடையிட்டாள்..
“அவள் என் கூடப்படித்த ப்ரெண்ட் என்னை பார்க்க வந்திருக்கிறாள்..”

கண்ணாத்தாள் சரக்கென திரும்பி கவிதாவை ஒரு பார்வை பார்த்தாள்.. விறகு சொருகிய கணப்பென இருந்தது அந்த பார்வை..

ஒரே நொடிதான் தன் பார்வையை மாற்றிக் கொண்டாள்..
“அப்படியா புள்ள, உன் தோழியாக்கும் சரி விடு.. இனிமேட்டு இங்குட்டு வர வேணாமுன்னு கண்டீசனா சொல்லிடு புள்ள..” மிகச் சாதாரண குரல்தான்.. அதுவும் முகம் முழுவதும் சிரிப்பையும் நிரப்பிக் கொண்டுதான் சொன்னாள்.. ஆனாலும் அந்த பேச்சு கண் வழியே உள் நுழைந்து நெஞ்சை நடுக்கியது..

ஒரு நிமிடம் அந்த பேச்சில் அயர்ந்து நின்று விட்டு, கவிதா திரும்பி பார்த்தபோது உமா வேகமாக வெளிப்புற வாசல் கேட்டை நோக்கி நடந்து.. இல்லை ஓடிக் கொண்டிருந்தாள்.. திரும்பிக்கூட பார்க்கவில்லை.. சுற்று மதில் மரக்கதவை திறந்து கொண்டு தபதபவென தெருவில் ஓடினாள்..

“எதற்கு அவளை இப்படி மிரட்டுகிறீர்கள்..?”

“நான் எங்கே மிரட்டினேன் புள்ள, சாதாரணமாகத்தானே பேசினேன்.. நீயும் தான் பார்த்தாயா.. அவளுக்கு வூட்டில எதுவும் அவசர சோளி வந்துருக்கும்.. அதான் ஓடுறா நீ வா புள்ள.. நாம் சாப்பிடலாம்..”

கவிதாவிற்கு உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது.. இவர்கள் என்ன இப்படி ராட்சசி மாதிரி இருக்கிறார்கள்..? இதே சிந்தனைதான் அவளுக்கு..
“மத்தியானத்திற்கு கறியை வெட்டி பட்டை சோம்பு அரைச்சி.. என மதிய உணவுக்கான பட்டியலில் கண்ணாத்தாள் இறங்கிய போது..”

“எனக்கு தூக்கம் வருகிறது.. தூங்கப் போகிறேன்..” அறிவித்து விட்டு மாடியேறி வந்துவிட்டாள்..

குழப்பத்துடன் கண் மூடிப் படுத்தாலும், கண்களை மூடிய உடனேயே முதல் நாளிரவு ஏகாந்தமும், கணவனின் ஆளுமையும் நினைவில் வந்து, சுக சொக்கலாய் அவளது உறக்கம் அமைந்தது..

மதிய உணவிற்கும் அய்யனார் வீடு வரவில்லை.. இரவும் நன்கு இருட்டிய பிறகே வீடு திரும்பினான்.. புல்லட்டை நிறுத்தி விட்டு ஏதோ சிந்தனையுடன் வாசல் படி ஏறியவனின் முன் போய் நின்றாள்.. நிமிர்ந்து பார்த்தவன் கண்களில் ஒரு நொடி தெரிந்த பாவனையில் அவன் இப்போது நீ யார் எனக் கேட்கப் போகிறானெனவே நினைத்தாள்..

ஆனால் மறு நொடியே கண்கள் மின்ன கொத்தும் பார்வையோடு அவளை அளந்தான்.. அதெப்படி இவனால் பார்வையாலேயே அணைக்க முடிகிறது.. கவிதா முகம் சிவந்தாள்..




“சாப்டியா கண்ணு..?” கேள்வியோடு அவள்.. இரு கன்னங்களையும் வருடி பற்றிக் கொண்டாள்..

“ம்.. விடுங்க..” அங்குமங்கும் நடமாடிக் கொண்டிருந்த ஆட்களுக்கு கூசி தலை குனிந்து முணுமுணுத்தாள்..

“அதெல்லாம் கரெக்குட்டா சாப்பிட்டுட்டா.. நீ சாப்புட வாய்யா..” கண்ணாத்தாவின் குரல் ஒலிக்க..

“வா.. சாப்பிடலாம்..” இவள் கையை பிடித்து இழுத்தபடி போனான்..
அக்காவின் அழைப்புக்கு இவ்வளவு அவசரமா.. இப்படி நினைக்காமலிருக்க கவிதாவினால் முடியவில்லை..

“இரண்டு பேரும் உட்காருங்க நான் சாப்பாடு போடுறேன்..” அக்கறையாய் அவர்களை அமர வைத்தாள் கண்ணாத்தாள்..

“அந்த பொண்ணுக்கு.. அதான் புள்ள உன் தோழிப் பொண்ணுக்கு எவ்வளவு பணம் கொடுத்து விட்ட புள்ள..?” கறிக்குழம்ப கலக்கி இட்லி மேல் ஊற்றியபடி நிதானமாக கண்ணாத்தாள் கேட்க கவிதா திடுக்கிட்டாள்..

திரும்பி கணவனை பார்க்க அவன் கூர் பார்வையுடன் இவளை பார்த்தபடி இருந்தான்..




What’s your Reaction?
+1
18
+1
18
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!