Serial Stories காதல் சகுனி

காதல் சகுனி-2

2

மாடி வாசல் கதவு உள்பக்கமாக மேலே கீழே தாழ்பாள்கள் எல்லாம் போட்டு கச்சிதமாக பூட்டப்பட்டிருந்தது. அவசரமாக கீழ்த்தாழ்பாளை திறந்தவள் மேலிருந்த தாழ்பாளை குதித்து எக்கி கீழே இறக்கிய போது பட்டென்று அந்த தாழ்பாள் மீண்டும் போடப்பட்டது.

கை நடுங்க துளசி திரும்பிப் பார்க்க அவன் இப்போது அருகில் நின்றிருந்தான் “சாரி…சாரி…நீ..நீங்க கிருஷ்ணாவா?” குளறலாய் கேட்டான்.

 இவனுக்கு எப்படி என் பெயர் தெரியும் பயமாய் அவனை பார்த்தபடி தலையசைத்தவள் “கதவை திறங்க,நான் ஆன்ட்டி கிட்ட போகணும்” என்றாள்.

” இல்லை ஆன்ட்டி மாத்திரை போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில் நாம் அவர்களை தொல்லை செய்ய வேண்டாம்.இது தெரியாமல் நடந்த குழப்பம். ப்ளீஸ் நீங்க உங்க ரூமுக்கு போங்க” நெற்றிப் பொட்டை அழுத்தி விட்டபடி துண்டு துண்டாய் பேசினான்.

துளசியுமே சுஜாதாவை பாதி தூக்கத்தில் எழுப்ப யோசித்தாள். அப்படியென்றால் ஆன்ட்டி சொல்லிக் கொண்டிருந்த உறவினன் இவன்தானா? ஆனால் ஒரு வாரம் கழித்து வருவான் என்று தானே சொல்லி இருந்தார். இவன் இப்படி திடீரென்று நடுராத்திரி அதுவும் இப்படி போதையில் வந்து நிற்கிறானே!

” இன்னைக்கு ஒரு சின்ன பார்ட்டி சந்தோஷத்துல அதிகமா…” என்று குடிப்பது போல் ஜாடை செய்தவன், “பயப்படாதீங்க கிருஷ்ணா, நீங்க போய் படுங்க. நான் இடம் மாற்றி கதவை தட்டிட்டேன். உங்கள பார்க்கவும் ஆன்ட்டின்னு 

நினைச்சுத்தான்… சாரி” மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டபடி தடுமாறிய பாதங்களுடன் இடது பக்க அறைக்கு போய் கதவை திறந்து உள்ளே போய் பூட்டிக் கொண்டான்.

மகன் மகளுக்கு ஒரே போல் இருக்குமாறு இரண்டு போர்சன்களை மாடியில் பிரித்து கட்டியிருந்தார் சுஜாதா. “உனது எதிர் போர்சனுக்கு எனது சொந்தக்கார பையன் ஒருவன் தங்கிக் கொள்ள வருவதாக சொல்லியிருக்கிறான். கொஞ்ச நாட்கள்தான் இருப்பான். உனக்கொன்றும் ஆட்சேபம் இல்லையே”, என்று இரண்டு நாட்களுக்கு முன்பே சுஜாதா இவளிடம் கேட்டிருந்தார்.

 இவ்வளவு பெரிய இடத்தை குறைந்த வாடகைக்கு தனக்கு விட்டிருப்பதே பெரிய விஷயம் என்பதை உணர்ந்திருந்த துளசிக்கு அவரது கோரிக்கையை மறுக்க இயலவில்லை. மேலும் நல்ல குணமுடைய ஒருவனைத்தான் ஆன்ட்டி வீட்டிற்குள் அனுமதிப்பார் என்பதில் நம்பிக்கை இருந்ததால் “அதற்கென்ன ஆன்ட்டி தாராளமாக இருக்கட்டும்” என்று சொல்லி இருந்தாள்.




 ஆனால் இவன் குணம் ? இப்படி குடித்துவிட்டு…? குழம்பியபடி தனது அறைக்குள் நுழைந்து பத்திரமாக எல்லா தாழ்பாள்களையும் போட்டுக்கொண்டு ஒருவித பயத்துடனே படுக்கையில் சரிந்தாள்.

 ஆன்ட்டி இவனிடம் தன்னை பற்றி நிறைய சொல்லியிருக்க வேண்டும் என்று புரிந்தது.ஏனென்றால் அவனுடைய அழைப்பு… 

கிருஷ்ணதுளசி! என்ற இவளது பெயரை பெரும்பாலும் எல்லோரும் கூப்பிடுவது துளசி என்றுதான்.

 ஆனால் சுஜாதா “எனக்கு உன்னை கிருஷ்ணானு கூப்பிட பிடிக்குது. அப்படித்தான் கூப்பிடுவேன்” என்று விட்டார்.இதோ இவனும் அப்படித்தானே அழைக்கிறான்! ஆன்ட்டியை போலவே…

அவனது பெயர் அழைப்பு ஒரு வகை அதிர்வலையை உள்ளுக்குள் பரப்ப கண்களை இறுக மூடிக்கொண்ட கிருஷ்ணதுளசியின் கண்களுக்குள் இரு கைகளையும் விரித்தபடி அணைக்க தயாராக இருந்தான் அவன். கூடவே அந்த திரைப்படத்தில் பார்த்த காதல் காட்சிகளும் மனதிற்குள் ஓட படக்கென்று விழிகளை திறந்து கொண்டாள் கிருஷ்ணதுளசி.

 “இந்தப் படம் இப்போ யூத்துக்கு எவ்வளவு பிடிச்சிருக்கு தெரியுமா? கிட்டத்தட்ட பைத்தியம் மாதிரி இந்த படத்தை எல்லோரும் ஐந்தாறு தடவை பார்க்கிறார்கள்” பிரியா சொன்னது நினைவிற்கு வர மனதிற்குள் சலித்துக் கொண்டாள். அவர்கள் சொன்னது உண்மைதான் போலும். அந்த பாடாவதி படத்தை பார்த்துவிட்டு அப்படியே அந்த ஹீரோவை பின்பற்றும் இவனைப் போன்ற பைத்தியங்கள் இருக்கும்போது அந்த மாதிரி படங்கள் எல்லாம் ஓடுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

 ஏதேதோ கலவையான எண்ணங்கள் மனதை அலைக்கழிக்க வெகு நேரம் தூக்கமின்றி புரண்டு கொண்டிருந்தாள் கிருஷ்ணதுளசி.

காலையில் தாமதமாக எழுந்தவள் 

அரக்கப்பரக்க கிளம்பி வெளியே வந்த போது எதிர் போர்சன் பூட்டியிருக்க ஒரு வகை நிம்மதியுடன் படி இறங்கினாள். ஸ்கூட்டியை ஸ்டாண்டை விடுத்து எடுக்கும் போது ஜன்னலில் சுஜாதாவின் முகம் தெரிந்தது.

” கிருஷ்ணா நைட் எப்போ வந்தாய்? நான் நன்றாக தூங்கிட்டேன் போல”

” ஒன்பது மணியாயிற்று ஆன்ட்டி. ஆபீஸ் முடிந்ததும் பிரெண்ட்ஸ் கூட அவங்க ரூமுக்கு போயிட்டு வந்தேன்” ஸ்கூட்டியில் ஏறி ஸ்டார்ட் செய்து நகத்தியவள் நின்று “ஆன்ட்டி உங்க சொந்தக்காரங்க வந்துட்டாங்க, போய் என்னன்னு பாருங்க” என்க சுஜாதா திகைத்தார்.

” யார் அச்சுவா?”

” அது எந்த அச்சுவோ பிச்சுவோ, எனக்கு தெரியாது. ராத்திரி ஃபுல் லோட்ல தடுமாறிட்டு வந்து என் ரூம் கதவை தட்டினாரு. இன்னும் தூங்கி எழலை.என்னன்னு பாருங்க” ஆன்ட்டியிடம் போட்டுக் கொடுத்த திருப்தியுடன் ஸ்கூட்டியை சீற விட்டாள்.

“நாங்கதான் படம் பார்த்து கண்ணெல்லாம் சிவந்திருக்கு. உனக்கு ஏன்டி கண் சிவந்திருக்கு?” ரஞ்சனி அலுவலகத்தில் அவளை சீண்ட,  கிருஷ்ணதுளசி முறைத்தாள்.

” அந்த கண்றாவி படத்தை நினைத்து  எனக்கு தூக்கமே வரலை”

“ஏய் பிரியா பார்த்தியாடி, துளசிக்கு நைட் ஃபுல்லா அந்த படம் நினைப்பாவே இருந்ததாம்”




“ம்…அந்தப் படத்தை மறக்க முடியுமா? என்ன மாதிரி ஒரு படம், இல்ல துளசி!”

“ஏய் இனிமேல் அந்த படத்தைப் பற்றி பேசினீர்களானால் நான் மனுசியாகவே இருக்க மாட்டேன். ஒழுங்கா வேலைய பாருங்கடி”

“இப்ப மட்டும் மனுசியாவா இருக்கிற..! ஏதோ காதலே இல்லாம பிறந்த தெய்வப்பிறவி மாதிரி சீன் போட்டுட்டு இருக்கிற!ஏன்டி நான் கேட்கிறேன் உன் அம்மாவும் அப்பாவும் காதல் செய்யாமலேயே நீ பிறந்து விட்டாயா?” 

தனது ரோலிங் சேரை அவள் பக்கம் நகர்த்தி நறுக்கென அவள் தலையில் கொட்டினாள் கிருஷ்ணதுளசி. “ஏய் தப்பா பேசாதடி!ஒழுங்கா வேலைய பாரு. ஹெச்.பி வர்ற நேரமாச்சு”

“வந்தாச்சு” ரஞ்சனி முணுமுணுக்க சட்டென மூன்று பெண்களும் இலகு போய் ஒருவித அட்டென்சனுக்கு மாறினர். கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்குள் பார்வையை பதித்தனர்.

மிதமான பெர்ப்யூம் வாசனையுடன்  அவர்களை கடந்து சென்றவனுக்கு வேலையே நிறுத்தாமலேயே குட் மார்னிங் சொல்ல “ம்” என்றபடி கடந்தான் அந்த ஹெச்.பி.

இது அவன் பெயரோ கம்பெனி பதவிக்கான பெயரோ கிடையாது.ஹெச்.பி  என்றால் ஹை பிரஷர் இப்படி அவனுக்கு பெயர் வைத்திருந்தனர் தோழிகள் மூவரும். சென்னையின் பிரபல ஐடி கம்பெனிகளுக்கு போட்டியாக வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் கம்பெனி இது. அதிக போட்டிகளுக்கு இடையே தனித்து நிற்க முயற்சிக்கும் பெரிய கம்பெனியின் எம்.டி யாக  சுமந்து கொண்டிருக்கும் வேலைப்பளுவின் தாக்கமோ என்னவோ எப்பொழுதும் ஹை பிரசர் வந்ததைப் போன்றே முகபாவத்துடன் இருப்பான் நிரஞ்சன்.

“என்ன நைட் பார்ட்டில ட்ரிங்க்ஸ் கொஞ்சம் அதிகமாயிடுச்சோ?”  வேலை விபரங்களுக்காக அவன் அறைக்கு போன கிருஷ்ணதுளசியிடம் நிரஞ்சன்  கேட்க  திடுக்கிட்டாள்.

 முதல் நாள் அலுவலகம் முடிந்ததும் மாலையில் சாலை ஓரத்தில் தோழிகள் மூவரும் ஸ்கூட்டரை நிறுத்தி கிருஷ்ணதுளசியை தங்கள் அறைக்கு சினிமா பார்க்க அழைத்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இவர்களை கடந்து சென்றது நிரஞ்சனின் கார்.

காருக்குள் இருந்தபடி தங்களை தவறாக கணித்திருக்கிறான் என்று உணர்ந்த கிருஷ்ணதுளசி முகம் சிவக்க படபடப்பாக அவனை பார்த்தாள்.

“என்ன சார் இப்படி இன்டீசண்டாக கேட்கிறீர்கள்?”

 நிரஞ்சன் தோள்களை குலுக்கிக் கொண்டான். ” இப்போது இங்கே இதெல்லாம் ரொம்பவும் சகஜம். நீ மிரளும் அளவிற்கு இதில் ஒன்றும் இல்லை”

“சாரி சார் நான் அந்த மாதிரி அல்ட்ரா மாடல்  பெண்கள் போன்றவள் இல்லை”

“ம் …அது தெரியும்.ஏதோ ஓர் பட்டிதானே உன் ஊர்.முதன் முதலில் இங்கே வேலைக்கு வந்த போது நீ விழித்துக் கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது.ஆனாலும் இந்த இரண்டு வருடங்களில் நீ மாறவேயில்லை என்றால்…சாரி நம்ப முடியவில்லை”

கிருஷ்ணதுளசியின் உள்ளம் கொதித்தது. எங்கேயோ சில பெண்கள் செய்யும் தவறு எல்லா பெண்களும் இப்படித்தான் என்று இவனை போன்ற ஆண்களை  நினைக்க வைக்கிறதே!




What’s your Reaction?
+1
38
+1
30
+1
1
+1
2
+1
2
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!