Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம்-29

( 29 )

முகிலினிக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது .என்ன நடக்கிறது இங்கே ? எப்படி இது நடக்க முடியும் ? தன் கைகளை அழுத்தி கிள்ளி கொண்டாள் .கண்களை நன்கு தேய்த்து விட்டுக் கொண்டாள்.கனவு ஏதேனும் கண்டு தொலைகிறேனோ ?

” அட ..அப்படியா ? வாழ்த்துக்கள் சௌமி …உண்மையிலேயே இது மிக மிக நல்ல செய்திதான் ” அவள் கைகளை பற்றி குலுக்கிக் கொண்டிருந்தான் அவள் அருமை கணவன் .

” நந்து இன்று மதியமே வக்கீலிடம் இருந்து தகவல் வந்து விட்டது .நீ வந்ததும் உன்னிடம் நேரில் சொல்ல வேண்டுமென்றுதான் சௌமி அப்போதிருந்த காத்துக் கொண்டிருக்கிறாள் .” என்று கூறியபடி துழாவியபடி வந்தாள் சந்திரவதனா .

” அப்படியா அத்தை .இந்த செய்தியில்  எனக்கு மிகுந்த சந்தோஷம் ..பார்த்து அத்தை …” என்றபடி அந்த பார்வையற்ற அத்தையின் கையை பிடித்து அருகிலிருந்த சோபாவில் அமரச் செய்தான்.

இப்படி அவர்களுக்குள் மலர்ந்த பாசமலர் , நெருப்பள்ளி கொட்டியது முகிலினியின் நெஞ்சில் .

” அப்போ மற்ற ஏற்பாடுகளெல்லாம பார்க்கலாமா நந்து ? ” மெல்ல சந்திரவதனா கேட்டாள் .

” நிச்சயம் பார்க்கலாம் அத்தை .ஆனால் இது விபரம் நாம் விடிந்ததும் பேசலாமே .இப்போது எல்லாரும் போய் தூங்கலாம் ” என்றான் யதுநந்தன் .

அறையினுள் நுழைந்த யதுந்ந்தனிடம் ” மற்ற ஏற்பாடுகளெல்லாம் பார்க்கலாமென்றீர்களே ? என்ன ஏற்பாடுகள் அவை .? “, ஆத்திரத்துடன் கேட்டாள் முகிலினி .

பதிலே பேசாமல்  தோள்களை குலுக்கியபடி நகர முயன்ற கணவனை இழுத்து பிடித்து நிறுத்தினாள் முகிலினி .” எனக்கு பதில் சொல்லாமல் நீங்கள் நகர முடியாது யது .சொல்லுங்கள் ” என்றாள் .

” என்ன தெரியவேண்டும் உனக்கு ? ” குரலில் கடுமை தொனிக்க கேட்டவன் ” சௌம்யா எங்கள் வீட்டு பெண் .அவள் ஒரு கஷ்டமென்று வந்து நிற்கும் போது அதனை தீர்க்க முயற்சிப்பதில் தவறில்லையே ” என்றான் .

” எப்படி ..எப்படி தீர்க்க முயல்வீர்கள் ? கணவனை கழட்டி விட்டு விட்டு இங்கே வந்தவளுக்கெல்லாம் நீங்கள்தான் தாலி கட்டி மறுவாழ்வு கொடுக்க போகிறீர்களா ? “

” முகிலினி ….” யதுநந்தனின் குரலில் பயந்தே போனாள் முகிலினி .கத்திவிட்டு இரண்டு விநாடிகள் கண் மூடி நின்றான் .பின் …

” சௌம்யாவின் வறண்ட வாழ்வு மலருமென்றால் , நான் அதற்கும் தயாராக இருக்கிறேன் .” அழுத்தம் திருத்தமாக அறிவித்து விட்டு இனி பேசுவதற்கில்லை என்ற பாவனையுடன் போர்வையை மூடிக் கொண்டு படுத்து விட்டான் .

கீழ்வானம் சிவக்கும் வரை இமைகள் ஒட்டாமல் , விழிகள் எரிய , எரிய அழுதபடி விழித்திருந்தாள் முகிலினி .

சொல்ல முடியா வெறுமை ஒன்று
குயிலொன்றின் ஓசை மயிலினதானது
அழகு மயிலாட்டம் வான்கோழி வசம்
சாலையோர அசிங்கங்களை
வாரியிறைக்கிறது காற்று
சாக்கடை அள்ள சட்டுவம் கூடுமா
சாத்திய சன்னல் தட்டுகிறதோர்
சாம்பல் பறவை
திறக்கும் சாத்தியம் குப்பை கூடையில்
வரிசை போடும் எறும்புகளுக்கோர் சேதி
பிறிதொரு நாளில் தீனி சேகரிக்க
வர வேண்டியிருக்கலாம்
சட்டென்று மாறும் வாழ்க்கை வீதியில்
கட்டளையிட்டு கட்டியிழுக்கும்
தாம்புக் கயிறொன்று
கால்களில் சுற்றியிருக்கிறது
கொலுசென்று
சொல்லிக்கொண்டு திரிகிறேன் .

தன் வாழ்க்கை அவலத்தை எழுத்தாய் வடித்தபடி உதிக்கும் சூரியனை வெறித்தபடி இருந்தாள் .




கணவனிடம் அசைவு தெரிய , அவன் முகத்தில் விழிக்க பிடிக்காமல் எழுந்து தோட்டத்திற்கு வந்துவிட்டாள் எப்படியெல்லாம் பேசிவிட்டான் .நாசி விடைக்க மீண்டும் அழுகை வர பார்த்தது .

இந்த அழுகை வேலையாட்கள் யார் கண்ணிலாவது பட்டுத் தொலையுமோ ? என்று பயந்து , அங்கிருந்த அந்த செம்பருத்தி செடியின் பின் இருந்த கற்பெஞ்சில் அமர்ந்து கொண்டாள் .

வீட்டின் பிற்பகுதி வழியாக கோவிலை அடையும் அந்த காட்டுப் பாதையை பார்த்தபடி இருந்தாள் .யதுநந்தனுக்கு தன் மேல் இவ்வளவு கோபம் இருக்குமென்று அவளால்  நம்பமுடியவில்லை .அவனால் தன் மீது அதிக நாட்கள் கோபமாக இருக்க முடியாது என்றே எண்ணினாள் .

முன்தினம் அவளது அருகாமையை ரசித்த அவன் உடல் மொழியை கூட அவளால் உணர முடிந்ததே .உடலும் , மனமும் வேறு …வேறா ? .உறவென்று வந்து விட்டால் மூளை வேலை செய்வதை நிறுத்தி விடுமா ? அன்பும், காதலும் காணாமல் போய்விடுமா ? தனக்குள்ளாகவே புலம்பியபடி இருந்தாள் .அப்போது …

அதோ …அங்கே ……யார் …? அது ….சௌம்யா போல் ….தெரிகிறதே .தன்னை நன்றாக செடியின் பின் மறைத்தபடி எட்டி பார்த்தாள் முகிலினி .அவளேதான் .இவ்வளவு காலையில் வீட்டினர் யாரும் இருக்க மாட்டார்களென நினைத்தாளோ ?

ஏனெனில் அவளது செய்கை அப்படித்தான் யாரும் பார்க்க கூடாது
என்பது போல்தான் சற்று ரகசியமானதாக இருந்தது .

முகிலினி சற்று தாமதித்து அவள் பின்னால் மறைந்து சென்றாள் .அங்கே …ஒரு ஆணுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள் சௌம்யா .இது ரகசிய சந்திப்பு போலும் .இருவரும் நின்றிருந்த நிலை அப்படித்தான் மறைவாக இருந்தது .

மிகவும் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டதால் அவர்கள் பேச்சு காதில் விழ வில்லை .ஆனால் கடுமையான வாக்குவாதமென்று புரிந்தது .

” சௌமி …நீ நன்றாக வசதியாக உன் எண்ணம் போல் வாழட்டும் என்றுதான் நான் நம் பிரிவிற்கு சம்மதித்தேன் .ஆனால் பிரிவென்று உறுதியான பின்தான் நீயில்லாத வாழ்வின் வெறுமை என்னை தாக்கியது .இரவோடிரவாக ஓடி வந்துவிட்டேன் .வா …நம் வாழ்வை வாழ்வோம் ” வசனம் பேசிக் கொண்டிருந்தான் அவன் .

இவன் ..சௌமியின் கணவனா ? முகிலினி சுவாரஸ்யமாக கவனிக்க தொடங்கினாள் .

”  குணா ….இல்லை குணா …அது முடியாது .நம் வாழ்வு முடிந்து விட்டது .இனி அடுத்தொரு ஜென்மம் இருந்தால் நாம் சேர முடியுமா என பார்க்கலாம் ? ” விம்மினாள் சௌம்யா .

” ஏன்…ஏன் சௌமி ..? இல்லை அப்படி சொல்லாதே .இங்கே பார் .என்னை பார் …” சௌம்யாவின் முகத்தை தன் கைகளில் ஏந்தினான் குணா .

” நான் போய்விடவா ? நான் தேவையில்லையா உனக்கு ?” ஏக்கம் வடிந்தது அவன் குரலில் .

அப்படியே அவன் மார்பில் சாய்ந்து விசும்பிய சௌம்யா திடீரென அவனை பிடித்து தள்ளினாள்.

” வேண்டாம் …நீ …எனக்கு வேண்டாம் .போ …போய்விடு ” அவனை பிடித்து தள்ளினாள் .ஓடி போய்விட்டாள் .

கலங்கிய கண்களுடன் திரும்பிய குணாவின் முன் சென்று நின்றாள் முகிலினி .” வணக்கம் .நான் முகிலினி .யதுந்ந்தனின் மனைவி .” கை கூப்பினாள் .

படுக்கையில் குப்புற விழுந்து அழுது கொண்டிருந்த சௌம்யாவின் முதுகை ஆதரவாக தடவிக் கொடுத்தாள் முகிலினி .எழுந்து அவளைப் பார்த்ததும் அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டு ” என்ன விசயம் ? “, சிரிக்க வெகுவாக முயற்சித்தாள் .

” அம்மா ..அப்பாவை விட அன்று உனக்கு காதல் பெரியதாக இருந்ததே .இன்று ஏன் மாறிப்போனது சௌம்யாக்கா .”

திரு திருவென விழித்தாள் சௌம்யா .

” நான் உங்கள் கணவரை இப்போதுதான் பார்த்து விட்டு வருகிறேன் .உங்கள் பாசத்தை பிரிக்கும் வலிமை கேவலம் பணத்திற்கா ? “

” கேவலம் பணமா ? உனக்கு பணமென்றால் கேவலமா ? சொகுசாக காரில் போய் பழகிவிட்டு பஸ்ஸிற்காக காத்திருந்து நெரிசலில் ஏறிப்பார் .அப்போது தெரியும் உனக்கு பணத்தின் அருமை .

” காரா …காதலை  தீர்மானிக்கிறது ? “, கோபமாக கேட்டாள் முகிலினி .




” இல்லையே …பளபள வீடு , ஏஸி , டிசைனர் புடவைகள் , பேசன் ஜுவல்ஸ் , பைவ் ஸ்டார் ஹோட்டல்….இன்னும் …நிறைய .இவையெல்லாம் சேர்ந்துதான் காதலை வளர்க்கும் .”

” சௌம்மிக்கா நீங்கள் புரியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் .உங்களுக்கும் , குணாவுக்கும் இடையிலுள்ளது உண்மைக் காதல் .அதனை இது போல் ஒன்றுக்கும் உதவாத விசயங்களால் இழந்து விடாதீர்கள் “

” என்ன உன் வாழ்க்கைக்கு குறுக்கே வருகிறேனென எனக்கி ஆலோசனைகளை வாரி வழங்குகிறாயா ?” நக்கலாக கேட்டாள் .

” இல்லையக்கா ..அப்படி ஒரு எண்ணம் முதலில் இருந்தது .ஆனால் இப்போது உங்கள் காதலை பார்த்த பிறகு உங்கள் மேல் பரிதாபம் மட்டுமே வருகிறது .உங்கள் அம்மாவை நம்பி உங்கள் வாழ்க்கையை வீண்டித்து விடாதீர்கள் .”

” நான் முன்பே என் அம்மாவை நோகடித்து விட்டேன் .அதற்கான தண்டனையையும் அனுபவித்து விட்டேன் .இனி அம்மாவை மீறி எதுவும் செய்ய மாட்டேன் .அவர்கள் நிச்சயம் எனக்கு கெடுதல் செய்ய மாட்டார்கள் “

” அப்படி நன்மைகளை வாரி வழங்குமென கூறி உங்களுக்கு உங்கள் அம்மா அளித்த வாழ்வை வாழப் போவது நீங்கள்தான் அக்கா .நன்கு யோசித்து பாருங்கள் என் யதுவுடன் நீங்கள் கணவன் , மனைவியாக வாழவேண்டும் ” தன் குரலில் அழுத்தத்தை கூட்டினாள் முகிலினி .

சிறிது தயங்கிய சௌம்யா ” நம் நாட்டில் யாரென்றே தெரியாத இருவருக்குள்ளும் மணம் முடித்து வைத்து விடுகின்றனர் .அவர்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து விடுகின்றனரே .கேட்டால் மஞ்சள் கயிற்றின் மகிமை என்கின்றனர் .நந்து கைகளால் எங்கள் பரம்பரை மங்கலநாணை கட்டிக்கொண்டால் அந்த மஞ்சள்கயிறு மகிமை எங்களுக்குள்ளும் வேலை செய்துவிட்டு போகிறது “

” காதல் காஸ்ட்லியான தாலிக்கயிற்றில் வருவதில்லை சௌம்யாக்கா .அது அடிமனதிலிருந்து வர வேண்டிய விசயம் .உங்களுக்கு புரியவில்லை .ஆனால் புரியாமையில்  உங்கள் காதல் கருகுவதை என்னால் பார்க்க முடியாது .எனவே நான் பாட்டியிடம் இது விபரம் பேச போகிறேன் “

” அப்படி நீ போனால் நான் பாட்டியிடம் துணிந்து சொல்லுவேன் .நந்துவை காதலிப்பதாக .” சௌம்யா தலை நிமிர்ந்து சொன்னாள் தெளிவாக .

” என்னை வைத்துக் கொண்டே அப்படி சொல்வாயா ? பாட்டி ஒப்புக் கொள்வார்களா? “

” சொல்லித்தான் பாரேன் .பாட்டி என்ன சொல்கிறார்களென பார்ப்போமே “

குழப்பத்துடன் நகர்ந்தாள் முகிலினி .

” ஏய் நேற்று சார் என்னடி சொன்னார் ? “ஆவலாக கேட்டாள் வைஷ்ணவி .

” சௌம்யா அவர்கள் வீட்டு பெண்ணாம் .அவள் நன்றாக வாழ்வதற்காக அவளுக்கு தாலி கட்ட வேண்டியிருந்தாலும் , அவர் அதற்கு தயாராக இருக்கிறாராம் .”,

” என்னடி சொல்கிறாய் ? உண்மையா ? இல்லை உளறுகிறாயா ? ” பதறினாள் வைஷ்ணவி .

” ப்ச் …அதை விடுடி ..இந்த சௌம்யா விசயம் தெரியுமா ?” என்றவள் நடந்தவைகளை விவரித்தாள் .

” ஓஹோ மேடம் இப்படி ஒரு குழப்பத்தில் இருக்காங்களா ? அப்போ நமக்கு வேலை ஈஸிதான் “

” இல்லைடி. வைஷு நாம் நினைக்கிற அளவு வேலை அவ்வளவு சுலபம் கிடையாது .குணாவும் , சௌம்யாவும் ஒருவரையொருவர் ஆழமாகவே விரும்புயிருக்கிறார்கள் .ஆனால் காதல் வாழ்வு வேறு .திருமண வாழ்வு வேறல்லவா ?

பணக்கார வாழ்க்கைக்கு பழகிய சௌம்யாவால் , குணாவின் பட்ஜெட் வாழ்வுக்குள் பொருந்த முடியவில்லை .இன்னும் சிறிது நாட்கள் போயிருந்தால் அவர்களது உண்மைக் காதல் இருவருக்குமிடையே இருந்த சலசலப்பை போக்கி அவர்களை ஆதர்ஷ தம்பதிகளாக்கி இருக்கும் .ஆனால் இந்த பெரியம்மா உள்ளே புகுந்து விட்டார்கள் .

ஏற்கெனவே குழப்பத்தில் இருந்த சௌம்யாவின் மனநிலையை தனக்கு சாதகமாக்கி , இந்த வீட்டின் வசதிகளை அவள் மனதில் பதிய வைத்து , கணவன் மனைவியை வெற்றிகரமாக விவாகரத்து வரை பிரித்து விட்டார்கள் .

சௌம்யாவுடன் விவாகரத்து …இனி அவளை பிரிந்து விடுவோம் , அவளை பார்க்க முடியாது , தன் வாழ்வில் அவள் இனி இல்லை என்ற உண்மை குணாவிற்கு மண்டையில் ஆணி அடித்தது போல் உறைக்க தனது ஈகோவையெல்லாம் தூக்கி போட்டு விட்டு அவளை காண ஓடி வந்துவிட்டார் .

ஆனால் காலம் கடந்துவிட்டது .எனக்கு நீ வேண்டாம் போ என அவரை விரட்டுகிறாள் சௌம்யா .அந்த அளவு பெரியம்மா அவளுக்கு பயிற்சி வகுப்பெடுத்து வைத்திருக்கிறார்கள் .குணா குழம்பி போய் பைத்தியம் போல் நிற்கிறார் . அவளில்லாமல் எப்படி வாழப் போகிறேன்னு கண்ணீர் வடிக்கிறார் ”
” ஓ…ஆனால் நீ சௌம்யாவிடம் பேசிப் பார்க்கலாமேடி “




” பேசிப் பார்த்தேன் .ஒரேடியாக நான் சொல்வதை காதிலேயே போட மறுக்கிறாள் .அம்மா …அம்மா …என்கிறாள் .இந்த அம்மா பைத்தியத்திலிருந்து அவளை எப்படி வெளியேற்றுவதென்று எனக்கு புரியவில்லை .யதுவுடனான அவள் வாழ்வை அவளுக்கு உச்சந்தலையில் ஆணி அடித்தாற்போல் புரிய வைக்க வேண்டும் .குணாவினுடைய இழப்பை அவள் மண்டையில் ஏற்ற வேண்டும் .என்ன செய்வதென்று புரியவில்லை ” குழப்பத்துடன் நெற்றியை பிடித்துக் கொண்டாள் முகிலினி .

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு பின் மெல்ல ” முகிலினி எனக்கென்னவோ  நந்தன் சாரிடம்தான் இதற்கான தீர்வு இருக்குமென்று தோணுகிறது .சௌம்யா  கழுத்தை நீட்ட தயாராக இருந்தாலும் , தாலி கட்டப்போவது நம் சார்தானே .அவரே மறுத்து விட்டால் …நீ எதற்கும் அவரிடமே …”

” பேசிப்பார்த்து விட்டேன் வைஷு .அவர் அத்தையின் மேல் பரிதாபத்தில் இருக்கிறார் .மேலும் என் மீது கோபத்திலும் .இந்த இரண்டும் சேர்ந்துதான் அவரை இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறது .”விரக்தியுடன் கூறினாள் முகிலினி .

” அப்போ குணாவை நேரடியாக வந்து சௌம்யாவை பார்க்க சொல்லுவோம் .இல்லையென்றால் நந்தன் சாரை பார்க்க சொல்லலாம் “

” கேட்டு பார்த்துவிட்டேன் .மறுத்துவிட்டார் .இனி நீங்களாக இந்த வீட்டினுள் நுழைந்தீர்களானால் நான் தற்கொலை பண்ணிக் கொள்வேனென்று சௌம்யா அவரை மிரட்டி வைத்திருக்கிறாள் “

” அட கடவுளே , இப்போ என்னடி பண்றது ? “

” பிரம்மாஸ்திரம் மாதிரி என் கையில் கடைசியாக இருக்கும் ஆயுதம் பாட்டியம்மா .அவர்கள் நிச்சயமாக இந்த திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் .நான் அவர்களிடம் சென்று பேச போகிறேன் ” கிளம்பினாள் முகிலினி .

” நல்ல யோசனைடி .போய் பேசிவிட்டு வா ” வெற்றி வாழ்த்து கூறினாள் வைஷ்ணவி .

கோவிலில் பூஜை முடித்து வந்த பாட்டியம்மா தனக்காக காத்து நின்ற முகிலினியை கேள்வியாக பார்த்தார் .” என்னம்மா என்ன விசயம் ? ” அன்புடன் கேட்டார் .

அருகிலிருந்த மோகனரங்கத்தை பார்த்து முகிலினி சிறிது தயங்க ” பரவாயில்லை சொல்லம்மா ” என்றார் .

” பாட்டி சௌம்யாவிற்கும் , குணாவிற்கும் ….விவாகரத்து …”

” ம் …தெரியும்மா …நேற்றே சந்திரா சொன்னாள் .பாவம் குழந்தை அவனை நம்பி போய் ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டாள் .இனி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை பார்க்க வேண்டும்.முகில்மா அதுவரை சௌம்யாவை நாம்தான் மனம் கோணாமல் நம் வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும் ” என்றார் .

முகிலினி திகைத்தாள் .இதென்னதிது இப்படி சொல்கிறார்களே .நான் எப்படி இவர்களுக்கு புரியவைப்பேன் ….குழம்பினாள் .அப்போது …பாட்டி  என ஓடி வந்து காலில் விழுந்தாள் சௌம்யா.

” பாட்டி ஏற்கெனவே ஒருமுறை புத்தியில்லாமல் உங்களையெல்லாம் விட்டுவிட்டு ஓடினேன் .அதற்கான பலனையெல்லாம் ஒட்டுமொத்தமாக அனுபவித்து விட்டேன் .மனமும் உடலும் , ரணமாகி  போய் உங்களிடம் வந்திருக்கிறேன் .இனியொருமுறை என்னை இங்கிருந்து விரட்ட பார்க்காதீர்கள் .இனி இந்த வீட்டிலிருந்து வெளியே போவதென்றால் அது என் பிணமாகத்தான் இருக்க வேண்டும் ” ஓவென்று கதறினாள் .

” ஐய்யோ …என்ன பேச்சுடா தங்கம் பேசுகிறாய் ? உன்னை நான் வீட்டை விட்டு வெளியேற்றுவேனா ? நீ எங்கள் வீட்டு மகாலட்சுமிடா .எனக்கு பிறகு நீதானே இங்கு எல்லாம் .அழாதேடா .நீ எங்கும் போக வேண்டாம் .எழுந்திரு .இங்கே வா ….” கதறியபடி காலில் கிடந்த பேத்தியை எழுப்பி அணைத்துக் கொண்டார் பாட்டி .

அவரின் அணைப்பிலிருந்தபடி வெற்றிப் புன்னகை ஒன்றை முகிலினி மேல் வீசினாள் சௌம்யா .

தோல்வியுடன் திரும்பி நடந்தாள் முகிலினி .




What’s your Reaction?
+1
23
+1
13
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!