Serial Stories ஊரெங்கும் பூ வாசனை

ஊரெங்கும் பூ வாசனை-16

(16)

   கண்களில் ஆச்சரியமும் அதிர்ச்சியும் விரிய அவளைப் பார்த்தான் மௌரியன்.

    இந்த கிழிவி…இந்த வேலைக்காரக் கிழவி தாத்தாவின் காதலியா? தாத்தா இவளைப் போய் காதலிச்சாரா?

       “என்ன பாக்கறே? உன்னால நம்ப முடியலையா? உங்க தாத்தா சுப்பைய்யாவோட வயல்லதான் நான் வேலைப் பாத்தேன். என் பின்னாலயே உங்க தாத்தா சுத்தி சுத்தி வருவார். நானும் வெளையாட்டா ஏதாவது பேசி அவரை வம்புக்கிழுத்தக்கிட்டிருப்பேன். அனா…அவரு மனசுல என்னை கட்டிக்கனும்னு ஆசை இருக்குன்னு எனக்குத் தெரியலை. சாடை மாடையா சொல்லுவாரு. அதையெல்லாம் நான் பெரிய விசயமா எடுத்துக்கிட்டதில்லை. ஆனா…என்னை பொண்ணு பாக்க வந்த என் அத்தை மவன்கிட்ட என்னைப் பத்தி இல்லாதது பொல்லாததையெல்லாம் சொல்லி தொரத்திவிட்டுட்டாருன்னா பாரேன். அவரு அப்பாருக்கிட்ட பேசி எப்படியோ என்னைக் கட்டிக்க சம்மதம் வாங்கிட்டாரு. என்னை பொண்ணு கேட்க என் குடிசையேறி இந்த குடும்பம் வந்தது”

   வாசலில் மேள சத்தம் கேட்க ஊருக்குள் யாருக்கும் கல்யாணம் இல்லையே. யார் ஊர்வலம் போகிறார்கள் என குடிசையின் கதவைத் திறந்துக் கொண்டு எட்டிப் பார்த்த மஞ்சளழகி திகைத்தாள்.

    மேள தாளத்துடன் வரிசை தட்டுக்களை பெண்கள் சுமந்து வர கம்பீரமாக முன்னால் வந்துக் கொண்டிருந்தார் பொக்கிஷம். பக்கத்தில் நகை மூட்டையை திறந்ததைப் போல் அவர் மனைவி. அவருக்குப் பக்கத்தில் பட்டு வேட்டி சரசரக்க சுப்பைய்யா.

    அவளால் நம்பவே முடியவில்லை. சொன்னதைப் போல் செய்துவிட்டானே!

    அதே திகைப்புதான் அவளுடைய அப்பா கந்தசாமிக்கும்.

    வாசலுக்கு ஓடியவர் அவர்கள் எதற்கு வருகிறார்கள் என்பது கூட தெரியாமல் ஸ்தம்பித்து நின்றார்.

படியேறிய பொக்கிஷம்” என்ன கந்தாமி திகைச்சுப் போய் நிக்கறே? வான்னு கூப்பிட மாட்டியா?” என்றார்.




    அப்பொழுதும் அவர்களை வாவென்று கூப்பிடத் தோன்றாமல் “ஐய்யா…என் வூடு தேடி நீங்க…?” என தடுமாறினார்.

    “மோள தாளத்தோட சீரு செனத்தியோட வந்திருக்கறதைப் பார்த்தா உனக்கு புரியலியா? உன் பொண்ணை என் புள்ளைக்கு கேட்டு வந்திருக்கோம்ய்யா”

   தூக்கி மலையிலிருந்து மடுவில் போட்டதைப் போல் அதிர்ந்தார் கந்தசாமி. அவரால் கனவில் கூட நினைத்துப் பாரக்க முடியாத ஒன்று இது.

    பெண் பார்க்க வந்த நீல மேகம் எதுவுமே சொல்லாமல் வேற எடத்துல பாத்து கொடுத்துக்க மாமா என்று சொல்லிவிட்டுப் போன துக்கம் தாளாதவராய் வேலை வெட்டிக்கு எங்கும் போகாமல் குடிசைக்குள்ளேயே சுருண்டுக் கிடந்தார்.

    சொந்தகார பயலே இப்படி சொல்லிவிட்டுப் போன பின் என் மவளை யாருக்கு எப்படி கட்டிக் கொடுப்பேன் என தனிமையில் விசும்புவதும் தன் இஷ்ட தெய்வங்களிடம் முறையிடுவதுமாக இருந்தவருக்கு…

    இப்படி வாசலில் ராசாவே பெண் கேட்டு வந்து நிற்பதைப் பார்த்ததும் அவரால் நம்ப முடியவில்லை.

     “வாங்க…வாங்க…” என அனைவரையும் உள்ளே அழைத்து பாயை விரித்துப் போட்டு உட்கார வைத்தார்.

    அவர்கள் உட்கார்ந்ததும் கைகளைக் கட்டிக் கொண்டு குனிந்து பயபக்தியுடன்,

      “எசமான்…நீங்க…என் வூட்ல பொண்ணு கேட்க…” என இழுக்க பொக்கிஷம் எரிச்சலாக

     “என்ன செய்ய? எல்லாம் என் நேரம்? இதோ இருக்கானே அவன் மஞ்சளழகியைத்தான் கட்டுவேன்னு ஒத்தக் கால்ல நிக்கிறான். கட்டி வைக்காட்டி ஊரைவிட்டு ஓடிடுவானாம். எங்கயிருக்கேன்னு கூட சொல்ல மாட்டானானம். அப்பறம் சொத்து சொகத்தையெல்லாம் ஊருகார பயலுவ

பிரிச்சு எடுத்துக்கற மாதிரி நான் கொள்ளி போட கூட புள்ளையில்லாம சாவனும்னு மெரட்டுறான். என்னை என்னா பண்ண சொல்றே? அதான் உன் வூடு தேடி வந்திருக்கேன் சம்பந்தம் பேச…” என்றார்.

    கந்தசாமிக்கு என்ன பேசுவதென்று ஒன்றும் புரியவில்லை. தான்  கை நீட்டி கூலி வாங்கும் சுப்பையா என் மருமகனா என்ற நினைக்கும் போது சந்தோஷத்திற்கு பதில் உள்ளுக்குள் நடுக்கம்தான் உண்டானது.

    பிரமித்துப் போனவராய் வந்தவர்களை உபசரிக்க கூடத் தோன்றாதவராய் நின்றிருந்தார்.

பொக்கிஷத்துடன் வந்த இன்னொரு ஊர் முக்கியஸ்தர் “வந்தவங்களுக்கு காபி கீபி குடுக்க முடியலைன்னாலும் பச்சத் தண்ணியாவது கொடுக்கலாமில்லே” என்று அவருடைய வறுமையை நக்கல் செய்தார்.

      “பசும்பாலே இருக்கு ஐய்யா. பாப்பாக்கிட்ட கொண்டார சொல்றேன்” என தடுப்பு சுவரை எட்டிப் பார்த்து கிசுகிசுத்தார்.

     “அதான் சம்பந்தியாயிட்டே. அப்பறம் ஏன் கைக்கட்டி நிக்கறே? ஐய்யாவுக்கு சமமா பாயில குந்து” இன்னொரு பெரிசு பொக்கிஷத்தின் நிலமையை அவமானப்படுத்தும் விதமாக சொன்னது.

   கையிலிருந்த துண்டை மடியில் வைத்துக் கொண்டு பொக்கிஷத்தின் எதிரே பயந்து போய் உட்கார்ந்தார் கந்தசாமி;.

   உள்ளே காபி தயாரிக்கும் மணம் மஞ்சளழகியின் வருகையை நினைவுட்டிக் கொண்டேயிருந்தது.

   யாருக்கும் என்ன பேசுவதென்று தெரியாததைப் போல் அங்கொரு அமைதி நிலவியது.

   அந்த குடிசைக்குள் அமர கூசி வந்திருந்த பெண்கள் நெளிந்துக் கொண்டிருந்தனர்.

   காபி வந்த பிறகு குடித்துவிட்டு தெம்பாக பேசலாம் என்பதைப் போல்  ஆண்கள் தலையை குனிந்தபடி அமர்ந்திருந்தனர்.




   நிமிர்ந்து நாலாபுறமும் சுற்றிப் பார்க்க அங்கு என்ன இருக்கிறது கட்டை சுவற்றைத் தவிர?

   காபி வந்தது. கொஞ்சமும் பதற்றமும் தடுமாற்றமும் இல்லாமல் எல்லோருக்கும் காபி கொடுத்தாள் மஞ்சளழகி.

    சுப்பைய்யாவுக்கு கொடுக்கும் போது மட்டும் அவனுடைய முகத்தில் வெற்றியின் பிரகாசம் தெரிவதைக் கண்டாள். கண்களால் ரகசியமாக அவளைப் பார்த்து சிரித்தான்.

       ‘பார்த்தியா…சொன்னதை செய்துட்டேன்ல?’

    அவள் உள்ளே போய்விட்டாள்.

    காபி குடித்து முடித்தவர்கள் “மஞ்சளு இப்படி வா” என்றனர்.

    மறுபடி வெளியே வந்தாள் மஞ்சளழகி;.

    பொக்கிஷம் பட்டுப் புடவை நகை பூ என இருந்த தாம்பாளத்தைத் தூக்கி அவளுடைய கையில் கொடுத்தார்.

        “போய்….கட்டிக்கிட்டு வா” என்றார்.

கைகளில் வாங்கியத் தட்டை அப்படியே குனிந்து கீழே வைத்தாள் மஞ்சளழகி.

நிமிர்ந்து பேசினாள்.

     “எல்லாரும் என்னை மன்னிக்கனும். எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை”

    பளாரென அனைவரையும் அறைந்ததைப் போலிருந்தது இந்த பதில்.

    தூக்கிவாரிப் போட அவளைப் பார்த்தனர்.

    சுப்பைய்யா துடிதுடித்துப் போனான். அவளை பாவமாக பரிதாபமாகப் பார்த்தான்.

      “சின்ன வயசிலேர்ந்து என் அத்தை மவன் மேலதான் எனக்கு ஆசை. அவனை கட்டிக்கனும்னுதான் நானிருந்தேன். சின்னய்யா மேல எனக்கு மருவாதி நிறைய  உண்டு. ஆனா….சரிக்கு சமமா தாலிக்கட்டிக்கிற ஆசையெல்லாம் எனக்கில்லை. மன்னிச்சுக்கங்க…” சொல்லிவிட்டு உள்ளேப் போய்விட்டாள்.

    இடி விழுந்த நிலையில் இருந்தான் சுப்பைய்யா.

    வீட்டிற்கு வந்ததும் பொக்கிஷம் அடிப்பட்ட நாகத்தின் நிலைக்கு ஆளானார்.

    தன் வயலில் நடவு நடும் ஏழை பெண், அன்னாடங்காய்ச்சி தன் வீட்டு மருமகளா என முகம் சுளித்தவர் மறுத்தவர், கௌரவம் பேசியவர் இப்பொழுது அவள் வேண்டாம் என்றதும் சனியன் விட்டது தன் மகனுக்கு தான் நினைத்ததைப் போலவே கோடீஸ்வர சம்பந்தம் பார்க்கலாம் என்று நினைக்காமல் மஞ்சளழகியின் மேல் வெஞ்சினம் கொண்டார்.

     ‘எவ்வளவு கொழுப்பு அவளுக்கு? நம்ம அந்தஸ்தென்ன?  கௌரவம் என்ன? நம்ம மவனுக்கு பொண்ணு தர கோடீஸ்வரனெல்லாம் வரிசையில நிக்கறான் இந்த நாயி என்னா தகுதிபெறும்? அவ வூடு ஏறி போய் பொண்ணுக் கேட்டா நம்ம முகத்துல கரி பூசற மாதிரி முடியாதுன்னுட்டா. அப்படியென்ன பெரிய பேரழகியா? எவனோ அத்த மவனாம். அவனத்தான் கட்டிப்பாளாம். இந்த பயலால எவ்வளவு பெரிய அவமானாம்? கூட கூட்டிக்கிட்டுப் போன ஊரு கார பயலுவ சிரிக்கிறானுவ. நாக்கைப் புடுங்கிட்டு சாவலாம் போலிருக்கு. அவளை நான் சும்மா விட மாட்டேன். எப்படி…எப்படி…இவ்ளோ பெரிய பெரியமனுஷன் வீடேறி வந்து பொண்ணுக் கேட்கும்போது நாயி கால்ல விழுந்து நன்றி சொல்லனும். காலத்துக்கும் அடிமையா நம்ம வீட்ல இருக்கனும். என்னா திமிரா பதில் சொல்றா. உன் புள்ளையெல்லாம் என் கால் தூசுக்கு சமம்ங்கறாளா? அவளோட ஆணவத்தை அடக்கனும்.” கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து மீசையை முறுக்கி முறுக்கி கர்ஜித்தார்.




   ஊஞ்சல் பலகையில் தலைக் குனிந்து அமர்ந்திருந்தான் சுப்பைய்யா.

அப்பாவின் வேகம் நியாயமானதுதான். எந்த அப்பன் சம்மதிப்பான்? ஆனால் அவர் சம்மதித்தார். தன் மதிப்பு மரியாதை எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துவிட்டு பிள்ளை பாசத்திற்காக அவளைப் பெண் கேட்கப் போனார். ஆனால்…அவள்?

   அவனுக்கு அதுதான் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

   அவள் இப்படி ஒரு பதிலை சொல்லுவாள் என்று அவன் சத்தியமாக நினைக்கவே இல்லை.

   தன்னைப் போலவே அவளுக்கும் மனதில் தன் மேல் காதல் இருக்கும் என அவன் நினைத்தது தவறாகப் போய்விட்டது.

   அத்தை மகனைத்தான் விரும்புகிறாளாம்.

   அடி பெரிதாகத்தான் இருந்தது. ஆறுமா என்றுத் தெரியவில்லை. அமைதியாக அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

    அம்மாவிற்கு இதில் எந்த வருத்தமும் இல்லை. மாறாக மகிழ்ச்சிதான். மகனுக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் பேச நினைத்தவளுக்கு ஒரு வேலைக்காரியை மருமகளாக்கிக் கொள்ள மனம் வருமா? மகனுக்காக கணவனிடம் மன்றாடியவள்

இப்பொழுது விட்டது சனியன் என்பதைப் போல் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.

    ஆனால்…பொக்கிஷம்தான் தான் அவமானப்படுத்தப் பட்டதாக நினைத்துக் கொதித்தார்.

      “விட மாட்டேன்! அவளை நான் சும்மா விட மாட்டேன்!” கர்ஜித்தவரை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

     கோபம் நியாயமானதுதான். அசிங்கமாகப் போய்விட்டதுதான். அதற்காக அவளை என்ன செய்யப் போகிறார்.

     இந்த ஊரைவிட்டு துரத்தியடிக்கப் போகிறாரா?

    அப்பாவை நிமிர்ந்துப் பார்த்தான்.

        “டேய்….நம்ம கௌரவத்தை விட்டுட்டு அவ வீடு தேடி போய் பொண்ணு கேட்டா கேவலம் ஒரு பொட்டச்சி எவ்வளவு திமிர் இருந்தா என்னை அவமானப்படுத்தியிருப்பா. அந்த அவமானத்துக்கு… ஊர்காரனுங்க முன்னாடி என்னை தலைக் குனிய வச்சதுக்கு அவளை…அவளை…”

    நறநறவென பற்களைக் கடித்தார்.

        “அவ…அவளை ஆள் வச்சி தூக்கிட்டு வரப் போறேன்”

    திக்கென அதிர்ந்தான் சுப்பைய்யா.

        “அப்பா…”

        “உன்னை எப்படி எந்த சிறுக்கி வேண்டாம்னு சொல்லலாம். அப்படி என்ன அவள் பேரழகியா? நம்ம சொத்து சொகம் எல்லாம் அவ அத்தை மவனுக்கு முன்னாடி பத்து பைசாவுக்கு மதிப்புக் கிடையாதுன்னு சொல்லாம சொல்லிட்டாளே. அவளை…அவளை தூக்கிட்டு வந்து கோவில்ல வச்சு நீ தாலிக்கட்டறே. நாயை இந்த வீட்ல ஒரு வேலைக்காரியா வைக்கிறே…”

     “அப்பா….” என ஊஞ்சலைவிட்டு குதித்தான்.




      “என்னப்பா…உனக்கு மூளை குழம்பிட்டா? நான் என்னோட ஆசைக்கு பொண்ணுக்கேட்டுப் போனேன். அவ அவளோட ஆசையை சொன்னா. இதுல அவமானப்பட என்னயிருக்கு? பிடிக்கலைன்னு சொன்ன ஒருத்தியை உன் வரட்டு கௌரவத்துக்காக ஆள் வச்சு தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணிவைப்பியா? இந்த மாதிரி சிந்திக்கறதையெல்லாம் விட்டுட்டு வேலையைப் போய் பாரு. மீறி உன் ஆணவத்தை காட்டனும்னு ஏதாவது செய்தே முன்னாடி சொன்னதுதான். நான் ஊரைவிட்டுப் போயிடுவேன்” என மிரட்டினான்.

       “ஆமாங்க. நீங்க பாட்டுக்கு கோபம் தாபம்னு ஏதாவது செய்திங்கன்னா பெண் பாவம் நம்ம குடும்பத்தை சூழ்ந்திடும். நம்ம வம்சம் தழைக்கனுங்க. அதெல்லாம் வேண்டாங்க” மனைவியும் தன் பங்குக்கு கால் பிடித்தாள்.

    அவர் அமைதியானார்.

    அதன் பிறகு மஞ்சளழகி கல்யாணம் ஆகி  தன் அத்தை மகனின் ஊருக்கே போய்விட்டாள்.

    இவனோ…வாய்க்கால் வரப்பு கோவில் குளம் என சுற்றிக் கொண்டிருந்தானே தவிர வீட்டில் கல்யாணப் பேச்சை எடுக்கும்போதெல்லாம் காதில் வாங்காமல் இருந்தான்.

     மனசெல்லாம் பந்தலிட்டு படர்ந்து பூத்துக் கிடந்தாள் மஞ்சளழகி.

     மஞ்சளழகிக்கு அத்தை மகனுடன் வாழ்ந்த வாழ்க்கையில் அழகாய் இரு பெண் குழந்தைகள் இரட்டைக் குழந்தைகளாக.

    காத்து வாக்கில் வந்த செய்திகள் அவனுக்குள் அவளை நோக்கி ஆசிர்வாத பூக்களை சொரிய வைத்தன.

    இரண்டு குழந்தைகளுக்கும் ஏழைக்காத்த அம்மன் கோவிலில் வைத்து காது குத்தினாள்.

    ஊர் நாட்டாண்மை என்ற முறையில் சீர் வைத்துக் கொடுத்தவனிடம் கண்கலங்கினாள்.

       “ஏன்யா…இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கே?”

    அவளுடைய கேள்விக்கு எந்த பதிலும் சொல்லவில்லை அவன்.

       “நீ கல்யாணம் பண்ணிக்கனும். இல்லாட்டி இந்த ஊர் பக்கமே வரமாட்டேன்” சொல்லிவிட்டுப் போனவள் சொன்ன சொல்லை காப்பாற்றுவதைப் போல் இரண்டு வருடங்கள் ஊர் பக்கமே வராமலிருந்தாள்.

   ஆனால்…

   விதி அவளை தான் சொன்ன சொல்லை மீறி ஊருக்குள் வரவழைத்தது.

வந்தாள். விதவையாக!




What’s your Reaction?
+1
10
+1
11
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!