Serial Stories பறக்கும்; பந்து பறக்கும்

பறக்கும்; பந்து பறக்கும்-7

7

“அதுல்யாவா? நீ யாரு?  எங்க விஸ்வா தம்பி கூட வேலை பார்க்கறியாம்மா?”

சியாமளாவைத் தாண்டி சிவநேசன் குரல் பின்னிருந்து கேட்டது. 

“ஆ.. ஆமா சார். இல்லை, நான் மிஸ்டர் விஸ்வாவைப் பார்க்க வந்தேன். அவசரமாய் கேப்டன் பார்க்கச் சொல்லி அனுப்பிச்சாங்க. போன் செஞ்சாங்களாம். அவர் எடுக்கவே இல்லையாம். அதான் நேரயே போய் பார்த்துட்டு வந்துருன்னு என்னை அனுப்பினாங்க!” சொன்ன அதுல்யாவுக்கு தன்மானம் அவமானப்பட்டுக் கிடந்தது. 

தேவை என்று அவள் எங்கும் சென்றவள் அல்ல. இன்றைய சூழ்நிலை அவளைத் தேவைக்காகத் தேடி வருமாறு செய்து விட்டது.  சங்கடத்தில் மௌனமாக நின்றாள்.

சியாமளா சிவநேசனை ஒரு பார்வை பார்த்து விட்டு அதுல்யாவை உள்ளே அழைத்து சோபாவில் அமர வைத்தாள். 

அப்பார்வைக்குப் பொருள் வந்த பெண்ணைக் கேள்வி கேட்டுச் சங்கடப் படுத்தாதீங்கன்னு தான் அர்த்தம். இத்தனை வருட தாம்பத்தியத்தில் அதைக் கூடப் புரிந்து கொள்ளாத ஆளா சிவநேசன்? கையில் அகப்பட்ட நியூஸ் பேப்பரை எடுத்துக் கொண்டு அவளைப் பார்த்துத் தலையாட்டி விட்டு உள்ளே நகர்ந்தார்.

“காபி சாப்பிடுறியாம்மா? விஸ்வா இப்ப வந்துருவான். பட்டாபிஷேகம் பண்ணக் கடைக்குப் போயிருக்கான்” சிரித்தவாறே தலைமுடி வெட்டிக் கொள்வதை ஜாடையாகக் காண்பித்தாள் சியாமளா.

அதுல்யாவுக்கு சியாமளாவின் இயல்பான குணமும் இலகுவான பழகலும் மிகவும் பிடித்து விட்டது. 

“நீங்க??”

“நான் சியாமளாம்மா. விஸ்வாவோட அண்ணி. இப்ப உள்ள போனாரே அவர் என் வீட்டுக்காரர். விஸ்வாவோட இரண்டாவது அண்ணன் .”

பேசிக்கொண்டே உள்ளே சென்றவள் தட்டில் சில பிஸ்கட்டுகளை வைத்துக் கொண்டு வந்தாள். 

“ஏன் மேடம்.. இருக்கட்டும். வேண்டாம்!”

“அக்கான்னு சொல்லும்மா! எங்க விஸ்வா ஃப்ரெண்டு தானே நீ! பின்ன ஏன் மேடம்ன்னு ஆபீஸுல கூப்பிடுற மாதிரி கூப்பிடற? சும்மா சாப்பிடு. நானே பண்ணின பிஸ்கட் இதெல்லாம். வலிய ஒரு எலி வந்து சிக்கி இருக்கே. சாப்பிடாம விடுவேனா?” கண்ணோரம் சுருங்கச் சிரித்த சியாமளாவை அவ்வளவு பிடித்தது அதுல்யாவுக்கு. 

“அக்கா! எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு!” பட்டெனச் சொல்லி விட்டாள்.

ஒரு வீட்டின் கலகலப்பே பெண்கள் கையில் தான் இருக்கிறது. ஆண்கள் கை உழைக்கும் கை. பெண்கள் கை உழைப்பதுடன் ஊட்டவும் செய்யும் கை. தன்னை மட்டுமல்ல தன்னைச் சுற்றி இருப்போரையும் தாய்மையின் குணத்தோடு அரவணைத்துச் செல்லும் கை. அதைத் தான் சியாமளா செய்து கொண்டிருந்தாள்.

“நீ என்னம்மா பண்ற அதுல்யா? எங்க இருந்து வர?”

“நான் வேலை பார்க்கறேன்க்கா. விஸ்வாவோட இல்ல. வேற ஆபீஸ். விஸ்வா என்னோட கேம் பார்ட்னர். எங்க வீடு திருவல்லிக்கேணில இருக்கு.”

“ஓ.. திருவல்லிக்கேணியா? பார்த்தசாரதி கோவிலுக்குப் பக்கமா வீடு? நானும் அந்த கோவிலுக்கு அடிக்கடி வருவேன் அதுல்யா.”




“ஆமாக்கா. தேரடிப் பக்கம் தான் வீடு. அடுத்த தடவை வரும்போது அவசியம் வீட்டுக்கு வாங்க! வீட்டில் அம்மா, அப்பா, எங்கக்கா, அக்காவோட குட்டிப் பொண்ணு, என் தங்கை எல்லோரும் இருக்கோம்.”

“ஓ.. குட்டிப் பொண்ணா? எனக்கு குழந்தைகள்ன்னா ரொம்ப இஷ்டம். அதுவும் பெண் குழந்தைகள்ன்னா ரொம்பவே இஷ்டம். என்ன செய்ய விஸ்வா பிள்ளையாப் போயிட்டான். எனக்கு பொறந்ததும் பிள்ளைகளாப் போச்சுது. எல்லாம் சேர்ந்து தான் பட்டாபிஷேகத்துக்கு போகணும்ன்னு ப்ளான். ஆனா அதுங்க விளையாடப் போச்சுங்க. இவன் தான் கிளம்பிப் போயிருக்கான். விஸ்வான்னா  கொள்ளை இஷ்டம் அதுங்களுக்கு.  சித்தப்பான்னு கூட கூப்பிடாம பேரைச் சொல்லிக் கூப்பிடற அளவு பழக்கி வச்சிருக்கான்.”

“ஓ! பசங்க பேரு என்னக்கா?”

“வினய் அண்ட் விஷ்ணு ம்மா!”

“எங்க வீட்டு குட்டிப் பொண்ணு பேரு பைரவி!”

“ஓ.. பைரவி. என்ன அழகான பேரு. கம்பீரமான பேரும் கூட.!”

பேச்சின் ஊடே தன் கணவனின்  பெரிய அண்ணன் உள் அறையிலிருந்து வருவதைக் கவனித்த சியாமளா சட்டென மரியாதையாக எழுந்தாள்.

“பெரிய மாமா! உட்காருங்க. குடிக்க கஞ்சி எடுத்துட்டு வரேன்..ஹான்.. இவங்க அதுல்யா. நம்ம விஸ்வாவைப் பார்க்க வந்திருக்காங்க. அவன் கூட மேட்ச் விளையாடறவங்களாம்.”

சியாமளாவைப் பார்த்துத் தானும் எழுந்து கை கூப்பினாள் அதுல்யா.

“உட்காரும்மா அதுல்யா. இப்ப முடிஞ்ச கலப்பு இரட்டையர் பிரிவுல நீயும் விஸ்வாவும் தானம்மா ஜெயிச்சது? நீயும் ரொம்ப நல்லா ஆடுவன்னு விஸ்வா சொல்வான். உன் அகாடெமி எங்க இருக்கு?”

“எங்க கோச் மேடம் விஜய சந்திரிகா தான் சார். அவங்க விஸ்வாவுக்கும் கோச்சா சிலசமயம் வருவாங்க.”

“ஓஹோ. உங்க வீட்டுல இப்படி விளையாடல்லாம் விடறாங்களா? ஏன் கேட்டேன்னா.. விளையாட்டுன்னா கால நேரம் இல்லாம இருக்குமே. அதனால கேட்டேன். அதுக்குன்னு நான் பெண்களுக்கு எதிரின்னு நினைச்சுக்காத!” சிரித்தார்.

“இல்ல சார். நீங்க கேட்டது தப்பொண்ணும் இல்ல. எங்க அம்மாவும் அப்பாவும் என்னோட பத்திரத்தைத் தான் முதலில் பார்ப்பாங்க. தகுந்த துணையோட எங்கயும் அனுப்புவாங்க!”

பெரியவரின் கண்கள் வாசலைப் பார்த்தது. பின் அவளைப் பார்த்தது. அதுல்யா அதைக் கவனித்து விட்டாள். 

தகுந்த துணையோடு தான் இங்கும் வந்திருக்கிறாயா எனக் கேளாமல் கேட்கிறார். ஐயோ.. இந்த விஸ்வா எங்க போய்த் தொலைஞ்சான். சீக்கிரம் வந்தால் பேசிட்டுக் கிளம்பலாம். இப்படி துளைக்கும் ரேசர் கண்ணுக்கு முன் உட்கார வைச்சிட்டு இந்த சியாமளா அக்காவும் உள்ளாற போயிட்டாங்களே. 




அதுல்யா தவித்தாள்.

“என்ன விஷயமா வந்திருக்கம்மா?” அடுத்த அம்பு பாய்ந்தது.

“அது.. எங்க கேப்டன் அடுத்த மேட்சுக்காக விஸ்வாவைக் கேட்கச் சொல்லி அனுப்பினாங்க!”

“அடுத்த மேட்ச்? அதுக்குள்ளயா? ம்ம்! அப்படியே இருந்தாலும் விஸ்வா கிட்ட போன் இருக்கே. அதில் கேட்டிருக்கலாமே. எதுக்கு பொம்பளப் புள்ளய நேர வீட்டுக்கு அனுப்பி இருக்காங்க உங்க கோச்?” அவரின் கூர்மையான கேள்வியில் அதுல்யா என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள். 

இப்படி வரும் சூழ்நிலை தனக்கு ஏற்பட்டு விட்டதே என மனதுக்குள் அக்கா நித்யாவைத் திட்டித் தீர்த்தாள். 

“இல்ல.. அவர் போனை எடுக்கல!”

“வீட்டுப் போன் இருக்கில்ல?”

“அந்த நம்பர் எனக்குத் தெரியாது சார்.!”

“உங்க கேப்டனுக்குத் தெரியுமேம்மா! தன்னோட காண்டாக்ட் டிடெயில்ஸ்ன்னு எல்லாமே எழுதிக் கொடுத்திருப்பானே!” விடாக் கண்டனாய் இருந்தார் அவர். 

எங்கும் வா வா என்று வரவேற்க வரவேற்புக் கம்பளம் விரித்துக் கிடப்பதில்லை. பார்க்கும் அத்தனை மனிதரும் பரந்த மனம் உடையவரில்லை. சிலபேர் மௌனமாய்க் கடப்பர். சிலபேர் புன்னகையுடன் கடந்து செல்வர். இன்னும் சிலர் நின்று பேசுவர். அதிலும் சிலர் மனம் நோகப் பேசுவர். இவர் கடைசி ரகம் போல. ம்ஹும்! இருக்கட்டும். விஸ்வாவைப் பார்க்காது செல்லக் கூடாது. பொறுமை மனமே! எனத் தனக்குள் சொல்லிக் கொண்டாள் அதுல்யா.

“எங்கம்மா போயிருக்கான் விஸ்வா? இன்னும் காணோம்? வந்த பொண்ணை இத்தனை நேரம் உட்கார வச்சுருக்க? அவனுக்கு ஒரு போனைப் பண்ணிப் பாரு!” கஞ்சி கொண்டு வந்த சியாமளாவிடம் கேட்டார்.

“இல்ல பெரியமாமா. ஹேர்கட் பண்ணிட்டு அப்படியே அவன் போன் ரிப்பேருன்னு அதையும் பார்த்துட்டு வரேன்னு போனான். வர நேரம் தான்.”

சியாமளா சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

“இதோ விஸ்வா வந்துட்டானே! என்னடா போன் சரி பண்ணிட்டியா? இங்க உன் ப்ரெண்ட் வந்திருக்காங்க பாரு!”

“ஓ! யெஸ் அண்ணி! போயும் போயும் என்னைத் தேடி யாரு வந்திருக்கா அண்ணி?” 

உள்ளே வந்தவன் அதுல்யாவைப் பார்த்து அதிர்ந்தான். 

இவளா? ஐயோ நேர வீட்டுக்கே வந்திருக்காளே. அண்ணன் அண்ணிலாம் என்ன நினைப்பாங்க? இதென்ன இவள் இப்படிலாம் வர மாட்டாளே. பேசக் கூட யோசிப்பா. மேட்ச்சின் போது கூட ஒரு வார்த்தை பேச மாட்டா. யாருக்கு வந்த விருந்தோன்னு என்னைப் பார்க்கறவ இப்ப எதுக்கு வீடு தேடி வந்திருக்கா? என்னை பத்தி எதுவும் கோள் மூட்டி இருப்பாளோ? பெரிய அண்ணன் வேற இவ கூட உட்கார்ந்திருக்காரு. போச்சு. ஏதோ வினையை இழுத்து விட்டுருக்கா. அதான் அண்ணன் முகம் இப்படி இறுகிக் கிடக்கு. 

தன்னையே பார்த்துக் கொண்டிருந்த பெரியண்ணனின் முகம் பாறையாய் இறுகிக் கிடப்பதைப் பார்த்த விஸ்வா சட்டென்று அதுல்யாவைப் பார்த்து “யெஸ் அதுல்யா. கேப்டன் வரச் சொன்னாங்களா? நான் மதியம் மூன்று மணிக்குக் க்ரௌண்ட்க்கு வந்தர்றேன்னு சொல்லுங்க. ஸாரி. என் போன் நேத்து தண்ணில விழுந்ததுல வொர்க் செய்யல. அதான் நேரயே உங்களை அனுப்பிட்டாங்க போல. எதுவும் கையெழுத்து வாங்கிட்டு வரச் சொன்னாங்களா?”

அவனின் சொற்குறிப்பைக் கற்பூரமெனப் பற்றிக் கொண்ட அதுல்யா

“யெஸ் விஸ்வா. கம்மிங் சண்டே வர மேட்சுக்கு இன்னிக்கே அப்ளை பண்ணனுமாம். உங்களோட கன்சர்ன் இல்லாம எப்படி நான் உங்க பேரைச் சேர்க்கறது? அகாடெமிக்கு இதோ நீங்க வரும்போது இந்த ஃபார்ம்ல கையெழுத்து போட்டு எடுத்திட்டு வந்திருங்க. இதை அப்படியே ஸ்கேன் எடுத்து இப்ப ஒரு மணிக்குள்ள இந்த மெயில் ஐடிக்கு அனுப்பிடுங்க. “

விஸ்வா தலையாட்டினான். அவன் கண்களைப் படித்த அதுல்யாவுக்குத் தெரிந்தது தான் சொன்னது பொய்யென்று அவன் அறிந்து கொண்டான் என்பது. 

“வரேன் சார்! வரேன் அக்கா!” 

அக்காவா? அதுக்குள்ளயா? விஸ்வா வியந்தான்.

சியாமளா தட்டில் வெத்தலை பாக்குடன் ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்தாள். 

“பைரவிக் குட்டிக்கு என் அன்புப் பரிசு இது! மறக்காமக் குடுத்துடு அதுல்யா!” வினய்க்காக வாங்கி வைத்த ஒரு சின்ன டெடிபேரைக் கையில் கொடுத்தாள். 

“அக்கா! இதெல்லாம்!?”

“இருக்கட்டும்மா. குழந்தைக்குத் தானே தரேன்!”

சியாமளாவில் அன்பில் நெகிழ்ந்த அதுல்யா “கட்டாயம் வீட்டுக்கு வாங்க!” என்றபடி விடைபெற்றாள்.




“இன்னும் என்னடா… அவ தான் கிளம்பிட்டாளே. போய் தலைக்கு கொட்டு. முடி வெட்டின கையோட பேசிட்டு நிக்கற. ம்ஹும், முதல் தடவையா ஒரு பொண்ணு உன்னைத் தேடி வீட்டுப் பக்கம் வந்துருக்கு. என்னத்துக்குன்னு தான் தெரியல!” பெரிய அண்ணன் விஸ்வாவைப் பார்த்துச் சொன்னபடி எழுந்து போனார்.

“அண்ணா… அவ தான் சொன்னாளே மேட்ச்.. ஃபார்ம்.. கையெழுத்துன்னு!”

“இதோ பாருடா தம்பி! எனக்குச் சின்ன வயசுலயே காது குத்தி, தோ  பாரு, இத்தனாம் பெரிய ஓட்டை! ஏதோ ஒண்ணு, பார்த்து இருந்துக்க. அம்புட்டுத் தான்!” சொன்னவர் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு படுப்பதற்காக உள்ளே சென்றார்.

இவளை.. அண்ணன் கிட்ட நல்லா மாட்டி விட்டுட்டுப் போயிட்டா. ஏற்கனவே அப்ளை செஞ்ச போட்டிக்குத் திரும்ப அப்ளை பண்ணுன்னு ஒரு பொய்யான காரணத்தைத் தூக்கிக்கிட்டு வந்த இந்த அதுல்யா என்ன விஷயமாய்த் தன்னைத் தேடி வந்து சொல்ல முடியாது போனாளென்று மண்டையைப் பிய்த்துக் கொண்டான். இருந்தாலும் அவனுக்கு அவளின் வருகை பிடித்துத் தானிருந்தது. 

எவ்வளவு இயல்பாய் அண்ணியை அக்கா என்றழைத்து ஒட்டிக் கொண்டாள். 

என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்ன்னு ஒரு பாட்டு வருமே. என் வீட்டைப் பார்த்தாளே. என்னைப் பிடிக்குமா? 

அடேய் கிராதகா! அவளே வெட்டவா குத்தவான்னு உன்னைப் பார்த்துக் கிழிப்பா. ஒரு பொண்ணு வீடு தேடி வந்தறக் கூடாதே. உடனே ஐயா மனசு ரெக்கை கட்டி பறக்க ஆரம்பிச்சுடுமே. அடங்குடா! மனசாட்சி உறுமியது. 

குளித்துத் தலை துவட்டி வந்தவன் அண்ணியின் சமையலை ஒரு பிடி பிடித்து விட்டு கையோடு அதுல்யா கொடுத்த ஃபார்மை எடுத்துக் கொண்டு கிளம்பினான். 

“அண்ணி! அகாடெமிக்குப் போய்ட்டு வரேன் அண்ணி!”

பதிலை எதிர்பார்க்காமல் அதுல்யாவைப் பார்க்க விரைந்தான். 

படபடக்கும் மனதோடு அகாடெமி வாசலிலேயே மரத்தடியில் நின்றிருந்தாள் அதுல்யா ஒரு கோரிக்கையோடு.

“ப்ளீஸ்!” என்றாள் விஸ்வாவைப் பார்த்து.




What’s your Reaction?
+1
8
+1
10
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!