Serial Stories யுகம் யுகமாய்..! 

யுகம் யுகமாய்..!-12

12

“”இண்டோ — யூ எஸ் கொலாப்பரேஷன் ரோபாட்ஸ் யூனிட் டுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி “” 

என்ற பெயர் தாங்கிய பலகையொன்று மஞ்சள்நிற பெயிண்டில் சாய்வாக எழுதப் பட்டிருந்த கறுப்பு நிற எழுத்துக்களோடு  யாருடைய கவனத்தையும் கவராத வண்ணம் பேருக்கு  நின்றிருந்தது. 

அங்கத் , டீமுடன் யவனிகாவும் வர்ஷாவுடன் இணைந்திருந்தாள். 

ப்ருத்வி ,டெய்ஸியை ரிசீவ் பண்ண வர்ஷா  புறப்படும் போதே அவளும் ஒட்டிக் கொண்டாள். 

வர்ஷாவுக்கும் அவளை ஒதுக்க மனமில்லை.  அவளையும்  தன்னுடனே வைத்துக் கொண்டாள். ஒத்த வயதும் இளமைப் பருவமும் பேச விஷயங்களா இல்லை. யவனிகா வர்ஷாவின் அசைவுகள்,  பாவனை, நளினம் என்று ஆகச் சிறந்த ரசிகையாகி விட்டாள். 

அங்கத்திடம் யவனிகாவை  அறிமுகம் செய்தாள். அங்கத்தைக் கண்டதும் உள்ளே உண்டாகும்  கோபமும் ஆங்காரமும் இப்போது அடங்கியிருந்தது. வர்ஷா சாதாரணமாகவே அங்கத்தை எதிர் கொண்டாள். 

அங்கத்தின் விழிகள் ரசனையாய் படர்ந்தது யவனிகா மீது..அவளோ எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை.

யவனிகா  வர்ஷாவின் உறவு என்ற ஒன்றே போதுமாயிருந்தது அங்கத்துக்கு . வர்ஷாவை வளைக்க யவனிகா உதவுவாள்  என்று யோசித்ததுமே புன்னகையோடு நட்புக்கரம் நீட்டினான்.

ஒரே பார்வையில் அங்கத் அவளைக் கணித்தும் விட்டான்.

“நீங்க மலையாளியா.”

“ஹைய்யோ எப்படிக் கண்டுபிடிச்ச? பயங்கர ஸ்மார்ட் “

யவனிகா இங்கே தலைகுப்புற விழுந்தாள். 

“உங்க தமிழில் கேரளா  காத்து அடிக்குது.”

“ஆமாம்!  இப்போ நாட்டுலே அதாவது ஊருலே அச்சச்சன் அச்சம்மா மட்டுமே உண்டு. எங்க அச்சன்  அப்போதே அமெரிக்க வாசி.  ஞானும் அங்கியே படிச்சு வேலைக்கும் வந்தாச்சு.”

பெருமூச்சு விட்டான். 

“ஆனாலும் என்னை யாருமே கண்டு பிடிச்சதேயில்லை உங்க வர்ஷா உட்பட..பட்  யூவார் ப்ரில்லியண்ட்”

அவன் கண்ணடித்துப் பாராட்ட ஊர்க்குருவி உயரே பறந்தது.

வர்ஷா மௌனமாக இருந்தாள்.

‘க்கும்  !  உன்னைப் பார்த்தாலே கொல்லணும் போல வெறி வருது. இதுலே……இவன் லாங்வேஜ் ஸ்லாங்க்கை கண்டு பிடிச்சு…’

மனது புலம்பிக் கொண்டிருக்க ப்ருத்வியின் புன்னகை சலம்பிக் கொண்டு மேலே வந்தது. கன்னம் அவளறியாமலே சிவந்தது.

 உள்ளம் ப்ருத்வியின் அருகாமையைத் தேடியது. அவனருகில் இனிமையான பாதுகாப்பான ஓர் உணர்வு முகிழ்த்து வாசம் பரப்புவதை உணரமுடிந்தது.




“ப்ருத்வி”

உள்ளூர தித்திப்பாய் இறங்கியது பெயர். 

விமான நிலையம். ப்ருத்வி கையசைக்க கூடவே டெய்ஸியும். 

அங்கத்தை விட ப்ருத்வி கம்பீரமாய்த் தெரிந்தான். பேசும் போது கண்கள் நேர்ப்பார்வையாய் விழிகளை மட்டுமே சந்தித்தது. சின்னதாடியும் மீசையும் அந்த முகத்தில் பளிச்சென்று நிறைவைத் தந்தது.

அங்கத்தும் உயரம் நிறம் எல்லாமே ப்ருத்வியை ஒத்திருந்தாலும் அவனுடைய முகத்திலிருந்த கறுப்பு பர்த் மார்க் ஆளுமையைக் குறைத்து மிக லேசான அச்சத்தை விதைத்தது.

டெய்ஸி ஒடிசலாய் இருந்தாள். பழுப்பும் ப்ரவுனுமான கூந்தல் போனிடெய்ல் ஆகியிருந்தது. ஜீன்ஸ் பேண்ட் டீ ஷர்ட்  குளிர்க்கண்ணாடியுமாய் கவர்ச்சியாயிருந்தாள்.

மேகமலையில் 

கம்பெனி  தேர்ந்தெடுத்திருந்த இடத்தில் கம்பி வேலியிடப்பட்டு மரங்கள், புதர்கள் என்று எல்லாவற்றையும் பிடுங்கி சுத்தப்படுத்தியிருக்க அந்த இடம் மட்டும் திலகமில்லாத வெற்று நெற்றியாயிருந்தது. சுற்றிலும் பசுமை கொஞ்ச செம்மண்ணும் கூடவே சிறுசிறு பாறைகளுமாய் பார்க்கவே என்னவோ போலிருந்தது. மிகப்பரந்த பரப்பளவை கொண்டிருந்த பூமியில் ஒரே ஒரு கட்டிடம் மட்டுமே தற்காலிகமாய் எழும்பியிருந்தது.

வர்ஷா அந்த மண்ணில் கால் வைக்கும்போதே பலவித உணர்வுகளில் சிக்குண்டாள். ஆனாலும் வழக்கமான மயக்கம் வரவில்லை ஆனால் 

சட்சட்டென்று காட்சிகள் மாறும்  திரைப்படம் போலே ஏதேதோ நிகழ்வுகள்.

நெற்றியில் வியர்வை பூத்தது மேகமலையின் ஈரக் காற்றிலும்.!

யுகம்யுகமானத் தொடர்பு தனக்கும் இந்த இடத்துக்குமிருக்கிறது என்ற உரிமையுணர்வு எழுந்தது.

மணிமாடம், அசைந்தாடும் திரைச்சீலைகள், பூத்துக் குலுங்கும் நந்தவனம், பெரும் கோட்டைக் கொத்தளங்கள், 

அருவி…அருவிப் பாறை!

கழுத்தைத் தடவியது கை அனிச்சையாக 

“அச்சாரமாய் இந்தப் பொன்னாரத்தைப் பூட்டுகிறேன் குழலி”

செவி சிலிர்த்தது.  இந்தக் குரல்! இந்தக்குரல்… வர்ஷா நிகழ்காலத்தினின்றும் நழுவத் தொடங்கினாள். 

“இளவரசி! இப்போது பூபாலரை தொடர்வது கடினம்”

“இன்று அரசியார் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்வார்களே மறந்து விட்டாயா யௌவனகாந்தி “

“நான் பன்னகப் பிடாதி உன்னை அழிக்க வந்த எமன்”

“கிரகணம் முன்பாக சில பரிகாரப்பூஜையை நடத்திவிடலாம் “

“ஆகட்டும் குருவே”

குரல்கள்! விதவிதமான குரல்கள்.! சுற்றிசுற்றி வந்து ஒலிக்க வர்ஷா தன்னை சமன் படுத்திக் கொள்ள ப்ருத்வியின் கையைப் பற்றினாள். 

அவனுடைய கையில் திருமுருகப் பாண்டியன் தாத்தா கட்டியிருந்த ரக்ஷையை ஸ்பரிசித்த வர்ஷா தன் சுயநினைவை அடைந்தாள். பிழிந்து உதறிய சுருக்கமில்லா புடைவையைப்போல நினைவுகளோடு குரல்களும் உதிர்ந்து போயிருந்தன. 

“வர்ஷா! எனி ப்ராப்ளம்”

“நத்திங் ப்ருத்வி”

 டெய்ஸி யவனிகாவுடன் ஏதோ அளந்து கொண்டிருந்த அங்கத்தின் பார்வை இந்த இருவரையும் தொட்டுதொட்டுப் போனது.

வர்ஷா ப்ருத்வியின் கையை பிடித்திருப்பதும் அவனை ஏறிட்டுப் பார்த்து சிரிப்பதும் அவனுக்குள் அமிலம் சுரந்தது

“சூனியக்காரி!  சிரிக்கிறாள்.ஆனாலும் உன்னை விடமாட்டேனடி. என்றைக்கானாலும் உன்னை வீழ்த்துவேன். என்னை அவமானப் படுத்தினாயல்லவா . அன்றைக்கு கன்னத்தில் அறைந்ததற்கு பழிக்குப் பழி வாங்கா விட்டால் நான் அரக்கப் பறம்பில் அங்கத் இல்லையடி “

முகம் அமைதியை தத்தெடுத்திருந்தது.

ஆனால் டெய்ஸியோ, யவனிகாவோ அவன் விழிகளைப் பார்த்திருந்தால் அதில் தெறித்த வன்மத்தைக் கண்டு பயந்து போயிருப்பார்கள். 

அங்கத் அந்த இடத்தை வீடியோ எடுத்து கம்பெனிக்கு மெயில் அனுப்பினான். மேற்கொண்டு செய்ய வேண்டியதை  தேவைகளைப் பட்டியலிட்டான். 

“ஹேய் கைஸ்! நாளை அல்லது மறுநாள் நம்ம டீம் மொத்தமும் வந்துடுமாம்.  கொறச்சு லோக்கல் ஆட்களை பேசி வைக்கணுமாம்.




“வர்ஷா!  எனக்கும் சின்னதா வேலை வாங்கித்தா.  லோக்கல்லே ஆளெடுக்கப் போறிங்க இல்லே.  அதுமாதிரி எனக்கும். ப்ளீஸ்”

வர்ஷா அமைதி காக்க

முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டவளைக் கவனித்த அங்கத்  சமாதானம் செய்து  வேலையை உருவாக்கித் தர டெய்ஸி அவனை நெற்றி சுருக்கி சந்தேகமாய் ஏறிட்டடாள்.

யவனிகாவும் பெற்றோரிடம் வர்ஷா மூலம் பேசி சம்மதம் வாங்கி விட்டாள். ஸ்பாட் லைட்டாய் முகம் ஜொலித்தது. 

“இப்படியே நூல் பிடித்து அமெரிக்காவுக்குமே போய் விடலாமே!”

யவனிகா கனவில் மிதந்தாள். 

அங்கத்  ஸ்நேகமாயிருந்து வர்ஷாவைப் பற்றி கேட்பதே தெரியாமல் விவரங்களை வாங்கிக் கொண்டான். யவனிகாவும் கொடுப்பதே தெரியாமல் கொடுத்துக் கொண்டிருந்தாள்

ஒரு நாள் ப்ரமாண்டமாகத் தோண்டியிருந்த அஸ்திவாரக் குழியருகே நின்று கொண்டிருந்தனர் ப்ருத்வியும் வர்ஷாவும்

‘இன்றோடு நீ தொலைந்தாய் ராஜகுமாரி! “

செவியோரம் கேட்ட கரடுமுரடான குரலில் திரும்பினாள் சோணைக்குழலி.

“பன்னகப் பிடாதி! நீ அதிகம் பேசுகிறாய் “

“ஹா ஹா!  அஞ்சுகிறீர்களா “

“அச்சமா? அச்சத்துக்கே என்னிடம் அச்சமுண்டு. மூடனே”

“மூடனா …ஹா ஹா! இருக்கட்டும் அணையப் போகும் விளக்கல்லவா? “

“என்ன பிதற்றலிது.வழியை விடு”

“செல்லுங்கள் ராஜகுமாரி”

வினயமாக நகர

“இளவரசி”

வேகமாக ஓடிவந்த யவனகாந்தி மூன்றாவது அடியில் பாதாளத்தில் விழ இலைதழைகள் எல்லாம் அவளை மூடிக் கொண்டன.

“யௌவனானா”

சோணைக்குழலியின் அலறல் எதிரொலிக்க வீரர்கள் பாய்ந்துவர தீயைக்கக்கிய விழியோடு பன்னகப்பிடாதியைத் தேட அவன் அங்கிருந்தால்தானே..?

சோணைக்குழலி தத்தளித்தாள். தனக்காக உயிர்த்தியாகம் செய்துவிட்ட தோழியை நினைத்து கதறுவதா? 

புல்லுருவியை எண்ணிக் கொதிப்பதா?

துரோகியெனத் தெரியாமலே பாலூட்டி நாகப்பாம்பை வளர்க்கும் தன்னவனை மீட்டெடுப்பதா..?”

“யௌவனானானா..”

என்று ஓலமிட்டபடியே பள்ளத்துக்குள் விழவிருந்தவளை ப்ருத்வி இறுகப் பிடித்து நகர்த்தினான். 

அதே நேரம்

.அவனுடைய கால் பெருவிரலில் சிக்கிக் கொண்ட பதக்கச் சங்கிலியை கையிலெடுத்த க்ஷணம்  அவனுள்ளும் ஏதேதோ மாற்றங்கள். 

எல்லோருமே தொலைவிலும் கட்டிடத்தினுள்ளும் வேறிடங்களிலும் வேலையில் மூழ்கியிருக்க வர்ஷா அலறியது யார் கவனத்தையுமே எட்டவில்லை

இருவருமே ஓரிடத்தில் அமர்ந்தனர். 

உள்ளங்கையில் வைத்து அந்த பதக்கத்தைத் தேய்த்தான் நீர்விட்டு கழுவ பதக்கம் ஜொலித்தது.

“இது…இது…”

“தம்முடையது தேவி! அன்று உன்னைச் சந்தித்து பிரிந்த பின்தான் இதைப் பார்த்தேன். உன் கழுத்தணி என்று கண்டு கொண்டேன். பின்பு இதைத் திருப்பித்தரவும் மறந்து போனேன். நம் திருமண நாளில் இதைத் தந்து உன்னை மகிழ்விக்க எண்ணினேன்.

ஆனால்…

என்னென்னவோ இடையில் நடந்து முடிந்து விட்டது.”

“ப்ருத்வீ! நீங்க செந்தமிழில் பேசுறீங்க”

ப்ருத்வியின் கவனம் அதிலில்லை

பேசிக் கொண்டே அதைக் கையில் அழுத்தித் திருகிக்கொண்டிருக்க அந்த ரத்தினக்கல் பதக்கம் பட்டென்று திறந்து கொண்டது.

உள்ளே ஒரு ஓலை யுகங்கடந்தும் சீர்கெட்டு போகாது சுருண்டிருந்தது அதை  விடுவித்து விரிக்க அதிலிருந்த எழுத்துக்கள் அவர்களைப் பார்த்து நகைத்தன.

(தொடரும்)




What’s your Reaction?
+1
9
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!