Serial Stories எனை ஆளும் நிரந்தரா

எனை ஆளும் நிரந்தரா-9

 9

அன்று இரவு மானசியின் போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வர யோசனையுடன் எடுத்தாள்.

“ஏண்டி உன்னை கற்பழிக்கவா வந்தேன்? அப்படி ஓடி வருகிறாய்?” எதிர்முனையில் சிடு சிடுத்தான் சிவ நடராஜன். என்னது “டி” யா? என முதலில் வெகுண்டவள் கொஞ்சம் தாமதமாகவே அதை உணர்ந்தாள். என்னது கற்பழிப்பானா…?

“ஓ அதை வேறு செய்வீர்களா?” ஆத்திரமாக கேட்டாள்.

“நிலைமையை புரிந்து கொள்ளாமல் தாம் தூம் என்று குதித்தால் வேறு என்ன செய்வதாம்?”

 ஆக இவன் அந்த மாதிரி செய்வதாக சொன்னதை தவறென்றோ, தவறுதலாக சொல்லிவிட்டதாகவோ ஒப்புக்கு கூட மறுப்பதாக இல்லை.

 “என்ன தைரியம்,என்னை அப்படி செய்வீர்களோ? உங்களை சும்மா விடுவார்களா என் அப்பாவும் அண்ணாவும், எங்கள் குடும்பத்தை தெரியுமா உங்களுக்கு?”

” கடவுளே!” எதிர் முனையில் சலித்தான் அவன்.”அம்மா தாயே உன் பாரம்பரிய பெருமையை ஆரம்பித்து விடாதே, அதென்ன ஒருவர் விடாமல் உங்கள் குடும்பத்தில் எல்லோரும் இப்படி பெருமை பேசிக்கொண்டே திரிகிறீர்கள்? ஒரு சாதாரண கற்பழிப்பிற்கு கூடவா பரம்பரை பெருமை பேசுவீர்கள்?”

” சாதாரண கற்பழிப்பா? உங்களுக்கு இதெல்லாம் அவ்வளவு எளிதாக போய்விட்டதா..”

“சாரி.. சாரி ஏதோ குழப்பத்தில் தப்பு தப்பாக வார்த்தைகளை விடுகிறேன்.  அந்த பேச்சு வேண்டாம். நாம் முக்கியமான விஷயத்தை பேசலாம்”

” உங்களிடம் பேசுவதற்கு எனக்கு எந்த முக்கியமான விஷயமும் இல்லை”

” உன் அண்ணன் விஷயம் கூடவா?”

 “அதை காட்டி என்னை பிளாக்மெயில் செய்ய பார்க்கிறீர்களா?”

” எதற்காகவோ? என் அக்காவின் வாழ்க்கையும் அதில் தான் அடங்கி இருக்கிறது என்று எனக்குத் தெரியாதா?”

“அப்படி ஒரு பணிவு உங்களிடம் இல்லையே”

” கைகட்டி வாய் பொத்தி விட்டேன். இவ்வளவு பணிவு போதுமா?” வாயை அவன் மூடி இருப்பதன் அறிகுறியாக அவன் பேச்சு சத்தம் அமுங்கி கேட்டது.”வீடியோ கால் வந்தாயானால் தோப்புக்கரணம் கூட போட்டு காட்டுகிறேன்”




 இப்போது மானசி கொஞ்சம் திருப்தி ஆகிவிட்டாள். அது… அந்த பயம் இருக்கட்டும், மனதிற்குள் நினைத்தபடி கர்வமாய் தலை உயர்த்திக் கொண்டாள் ” இப்போது சொல்லுங்கள் என்ன வேண்டும் உங்களுக்கு?”

“எண்ணெயும், புண்ணாக்கும்” எதிர்முனையில் அவன் சீண்ட, மானசியன் முகம் சிவந்தது.

“அப்பாவின் தொழிலை கிண்டல் செய்கிறீர்களா?”

“நான் பேச்சு போக்கில் சொல்வதை சொன்னேன்மா. மற்றபடி உன் அப்பாவின் எண்ணெய் தொழிலிலும் புண்ணாக்கு தொழிலிலும் எனக்கு எந்த ஆட்சேபமும் கிடையாது. கல்யாண சீராக லாரி நிறைய அவற்றை கொண்டு வந்து எங்கள் வீட்டில் இறக்காமல் இருக்கும் வரை…”

“வேப்பம் புண்ணாக்கை கொண்டு வந்து உங்கள் வீட்டு வாசலில் மலையாக கொட்டாவிட்டால் ஏனென்று கேளுங்கள்” மானசி கொதித்தாள்.

“அய்யய்யோ வேண்டாம்மா. அப்புறம் இந்த கல்யாணமே வேண்டாம் என்று ஓடிப் போயிடுவேன்”

” தேடி வந்து தலையிலேயே புண்ணாக்கை கொட்டுவேன்” பதிலுக்கு பதில் பேசிக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு நிறுத்தினாள்.

என்ன பேத்திக் கொண்டிருக்கிறாள்?  கல்யாணமா? இவனோடா? அதற்கு சீரா? மானசி பேச்சின்றி அமைதியாகிவிட “புண்ணாக்கு வியாபாரி மகளுக்கு சீராக புண்ணாக்கைதான் தர வேண்டும் என்று என்ன அவசியம் மானு?” மென் குரலில் சிவ நடராஜன் கேட்க திணறினாள்.

” இல்லை… வேண்டாம்” திக்கித் திணறி வந்தன வார்த்தைகள்.

” ஏன்?” மிகச் சுலபமாக இரண்டழுத்து கேள்வியை கேட்டு விட்டான். ஆனால் அதற்கு பதில் அவள் மனதிற்குள் பேரா பேராவாக வந்து கொண்டே இருந்தது. எதை என்று சொல்வாள் அவள்?

“முன்பே நம் இரு குடும்பத்திற்குள் ஒரு திருமணம் நடந்து இன்னமும் பகை அதிகமானது தான் மிச்சம். மீண்டும் ஒரு திருமணம் என்றால்… வேண்டாம்.சரிப்படாது”

” முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் மானு. தோல்வியடைந்த ஒரு திருமணத்தை மற்றொரு திருமணத்தால் தான் சரி செய்ய முடியும்”

“நம் திருமணம் எப்படி இந்த பிரச்சனைக்கு முடிவாகும்?”

“பெண் கொடுத்து பெண் எடுக்கும் குடும்பங்களில் பரஸ்பரம் இரு குடும்பங்களுமே தத்தமது வீட்டு பெண்ணை நினைத்து தழைந்து போய் விடுவார்கள்.இது நம் தமிழர்களிடம் ஆதி காலத்திலிருந்தே இருக்கும் வழமைதான்”

“வேண்டாம் எனக்கு பிடிக்கவில்லை”

“என்ன பிடிக்கவில்லை? என்னையா?” அவன் குரலில் கூர்மை இருந்தது.

“அப்படியும் சொல்லலாம்”

“இந்த பதிலை நான் எந்த வகையில் சேர்க்க ?”பெரும் சலிப்பு தெரிந்தது அவன் குரலில்.

“வேண்டாம் விட்டுவிடுங்கள், அவரவர் பாதையில் அவரவர் செல்லலாம்”

” அப்படி எதையும் விட்டு விடுபவன் இந்த சிவா இல்லை மானு. என் அக்காவின் வாழ்க்கை. இதனை அவ்வளவு சுலபமாக நான் கைநழுவ விடமாட்டேன். நீயும் உன் அண்ணனுக்காக வேணும் நம் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்”

மானசிக்கு அறைக்குள் மூச்சு முட்டுவது போல் இருக்க ஏசியை ஆப் செய்து விட்டு ஜன்னல் கதவுகளை திறந்து விட்டாள். ஜன்னல் அருகே போய் நின்று வெளிக்காற்றை இழுத்து சுவாசிக்க “என்ன இப்போது மூச்சு விட முடிந்ததா?” என்றது அவன் குரல் காதிற்குள்.பாவி காதிற்கும் கண் வைத்திருப்பான் போலவே!

“என் அண்ணன், உங்கள் அக்கா… சரி.நமக்கென்று ஒரு வாழ்வும் இருக்கிறதுதானே?”

” ஏன் அதற்கென்ன? திருமணம் முடிந்தால் எல்லோரையும் போல வாழ்ந்து விட்டுப் போகிறோம்”

கடனுக்கு திருமணம் கடமைக்கு வாழ்வு என்றா அமைய வேண்டும் அவள் திருமணம்! மானசியின் உள்ளம் அழுதது.

“இல்லை அப்படியெல்லாம் என்னால் வாழ முடியாது”

” ஏன்… உனக்கு.. உன்… மனதில் யாராவது…  வந்து சென்னையில் படிக்கும்போது… அப்படி ஏதாவது…?” சிவ நடராஜனின் குரல் மிகவும் இறங்கி கொஞ்சம் தடுமாற்றத்தோடு ஒலித்தது.




“சீ  அப்படியெல்லாம் எதுவும் இல்லை”

“பிறகென்ன நமது திருமண வேலைகளை ஆரம்பிக்க வேண்டியதுதானே?” அவன் குரலில் உற்சாகம் மீண்டிருந்தது.

“ரொம்ப எளிதாக நமது திருமணத்தை பேசுகிறீர்களே? முதலில் எங்கள் வீட்டு படியேறி வந்து வீட்டு ஆட்களிடம் நான்கு வார்த்தைகள் தைரியமாக பேசிப் பாருங்களேன். பிறகு திருமண விஷயத்தை யோசிக்கலாம்”

“கட்டை விரலை உயர்த்தவில்லை. அறைகூவல் விடுக்கவில்லை. மற்றபடி இது மானசியின் சவால்தான் இல்லையா? சரி சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன்”

 மானசிக்கு தன் காதுகளில் விழுந்ததை நம்ப முடியவில்லை “என்ன எங்கள் வீட்டிற்குள் வரப் போகிறீர்களா?”

அவர்கள் தெருப் பக்கம் அவன் வருவதையே கொஞ்சம் அசூசையும் நிறைய கோபமுமாக பார்ப்பார்கள் அவள் வீட்டினரும் தெருவாசிகளும். இவனானால் வீட்டிற்கே வருவேன் என்கிறானே!

“நான் தரணியாளும் நடராஜன்மா. உன் வீட்டிற்குள்  வர முடியாதா?” எதிர்பக்கம் அவன் காலரை உயர்த்தி விட்டுக் கொள்வது இவள் மனக்கண்ணில் தெரிய திமிர் ஆணவம் கர்வம், கொதித்தாள்.

“நேரடியாக சவாலே விடுகிறேன். வீட்டிற்குள் வந்து எங்கள் வீட்டினருடன் சுமூகமாக பேசிவிட்டு போங்க பார்க்கலாம்” மானசி இப்போது அவன் முகத்திற்கு நேராக சவாலே இட்டாள்.

” சரி நாளையே வருகிறேன்”  போன் கட்டாகிவிட இப்போதுதான் அவளுக்கு அது உரைத்தது.

மீண்டும் அவனுக்கு போன் செய்தவள் “என்னம்மா இப்போதே வந்து விடவா?” என அவன் எடுத்ததும் கேட்க, உதட்டை கடித்து கோபத்தை அடக்கிக் கொண்டு…

” என் ஃபோன் நம்பர் உங்களிடம் கிடையாது என்றீர்களே?” என்றாள்.

 கட கடவென எதிர்பக்கம் சிரித்த சிவ நடராஜன் ” ஸ்வீட் மானு” என்று விட்டு போனை வைத்து விட்டான்.

இப்போது எதற்கு ஸ்வீட் சொல்கிறான் குழம்பியவள், எத்தன் எப்படியோ என் போன் நம்பரை யாரிடமிருந்தோ திருடி இருக்கிறான் பொறுமினாள்.

இருக்கட்டும் நாளையோடு இவனுடனான சகவாசத்திற்கு ஒரு முடிவு வந்துவிடும், வீட்டிற்குள் வந்து எல்லோரிடமும் வாங்கி கட்டிக்கொண்டு  செல்பவன் பிறகு என் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டான் திருப்தியுடன் தனக்குள் சொல்லிக் கொண்டு உறங்க முயன்றாள்.ஆனால் அவள் நினைத்தது எதுவும் மறுநாள் நடக்கவில்லை.




What’s your Reaction?
+1
50
+1
14
+1
4
+1
2
+1
3
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!