Serial Stories

நீ தந்த மாங்கல்யம்-17

(17 )

மனதின் ஓரம் இன்னமும் கசப்பு மண்டிக்கிடந்தாலும் குமுறும் கணவனை சமாதானப்படுத்த தயங்கவில்லை முகிலினி .கணவனின் தலையை வருடியபடி மௌனமாக அமர்ந்திருந்தாள் .

சிறிது நேரத்திலேயே தன்னை சமாளித்துக்கொண்டு எழுந்தவன்
தொண்டையை செருமிக்கொண்டான். மீண்டும் தொடர்ந்தான் .

“விபத்து நடந்த கடைசி நிமிடம் அங்கே சற்று தூரத்தில் ஆளவந்தான் தாத்தாவின் மகன் சதாசிவத்தின் காரை அத்தை பார்த்திருக்கிறார்கள்.

எனவே இது அந்த குடும்பத்தாரின் வேலை என புரிந்து அவர்கள் மேல் போலீசில் கம்ப்ளைன்ட் பண்ணி கேஸ் போட்டோம் .அந்த நேரம் அனைவரும் குடும்பத்தோடு திருப்பதியில் இருந்ததாக நிரூபித்து தப்பி விட்டனர் அந்த குடும்பத்தார் .

அதன் பின் இரண்டு முறை இங்கே என் உயிரை பறிக்க சதி நடக்க பாட்டி மிகவும் பயந்து போனார்கள் .நீ ஒருவன்தான் குடும்ப வாரிசாக இருக்கிறாய் .உன் உயிர் மிக முக்கியம என கூறி அடம் பிடித்து என்னை சிறிது நாட்கள் தலைமறைவாக இருக்கும்படி அனுப்பி வைத்தார் .

உன் அப்பாதான் அப்போது நம் சொத்துக்களின் கணக்கு வழக்குகளை பார்த்துக்கொண்டிருந்தார்.என்னை வற்புறுத்தி தன்னோடு அழைத்துக்கொண்டு வந்தார் .

தலை குனிந்து தரையை உறுத்தபடி அமர்ந்திருந்தாள் முகிலினி .” ஆக உங்கள் குடும்ப சொத்து தகராறுக்கு பலியானது என் அப்பாவா ? ” இந்த கேள்வி அவளது தொண்டை முழுவதும் நிறைந்து வழிந்தது .

ஆனால் தன் கணவனின் நிலையை எண்ணி அக்கேள்வியை வெளியே விடாமல் இதழ்களை இறுக மூடி தடுத்தாள் .

” மனதில் பட்டதை பேசிவிடு முகிலினி .பிற்பாடு பெரிய கசப்பு நேராமல் அது தடுக்கும் “, என்றான் யதுநந்தன் இறுகிய அவள் இதழ்களை பார்த்து .

உதடுகளை உட்புறம் மடித்து கடித்துக்கொண்டாள் முகிலினி .

” உன்னிடம் எல்லா விபரங்களும் சொல்லிவிட வேண்டுமென்றுதான் நினைத்தேன் முகிலினி “,

” எப்போதோ ….? ” ஏளனமாக கேட்டாள் .




“, நம் திருமணத்திற்கு முன்பே சொல்லியிருக்க வேண்டும் .எனக்கு அதற்கான நேரம் கிடைக்கவில்லை .பின்போ ….நேற்று உன்னிடம் எல்லா விபரமும் பேசிவிட எண்ணித்தான் அறைக்கு வந்தேன் .ஆனால் …”

முகிலினிக்கு முகம் கன்றியது .அவனை மட்டுமே அதில் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது ? நேற்று இருவருக்குமேதான் தங்களை தவிர வேறு எண்ணும் எண்ணம் இல்லையே .முகிலினி சிறிது அவமானமாக கூட உணர்ந்தாள் .

” நாம் இருவரும் மனம் ஒன்றி வாழத்துவங்கி விட்டால் நமக்குள் பிரச்சினைகள் பெரியதாக வராது என எண்ணித்தான் நேற்றே நம் வாழ்வு தொடக்கத்திற்கான ஆயத்த புள்ளி ஒன்றை வைக்க முயன்றேன் .”

ஆக தன் மேல் பைத்தியமாக இருக்கும் இவள் ஒரு முறை அணைத்து விட்டால் சொன்னதை கேட்டு பேசாமல் கிடப்பாள் என எண்ணியிருக்கிறான் .இப்படி நினைத்தாள் முகிலினி .

மெல்ல எழுந்தாள் முகிலினி .”,காலையிலிருந்து கீழே போகவேயில்லை .கொஞ்சம் போய் வருகிறேன் ” என்றாள் .

” முகிலினி ….” கேள்வியுடன் பார்த்தான் .

” எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும் .ஏதோ மணமுடித்தோம் .என்னவோ வாழ்ந்தோம் என ஒரு எந்திர வாழ்வு வாழ என்னால் முடியாது .எனது தந்தையின் மரணத்திற்கு என் கணவர் காரணம் என்ற சிறு உறுத்தல் கூட என் மனதில் வரக்கூடாது .அதுவரை ….”

” நான் காத்திருக்கிறேன் முகிலினி ….” புன்னகையோடு கூறினான் யதுநந்தன் .ஆனால் அந்த முறுவல் அவன் விழிகளை எட்டவில்லை .

பெருமூச்சோடு தங்கள் அறைக்கதவை திறந்த போது எதிரிலிருந்த சோபாவில் அமர்ந்தபடி இருந்த காருண்யாவை கண்டு திகைத்தாள் .

” சார் போனை சுவிட்ச் ஆப் பண்ணிவிட்டார் .ஒரு முக்கிய விபரம் வேண்டும் .
அதனால்தான் ….” தயங்கி நிறுத்தினாள் காருண்யா .

அதற்காக இப்படியா முனீஸ்வரன் மாதிரி வாசலில் நிற்பாய் ? கையில் அரிவாள் ஒன்றுதான் குறை .இப்படி மனதிற்குள்ளாக சொல்லியபடி ” உள்ளேதான் இருக்கிறார் ” என்றுவிட்டு கீழே இறங்கினாள் .

சிறிது நேரம் தோட்டத்தில் உலவியபடி இருந்தாள் .”, அம்மா …உங்களை சந்திராம்மா கூப்பிடுகிறார்கள் “, என்றாள் வேலைக்கார பெண்ணொருத்தி .உள்ளே நடந்தாள் .

” என்ன விசயம் பெரியம்மா ? ” சந்திரவதனாவின் அறைக்கு சென்று கேட்டாள் முகிலினி .

” என்னம்மா ஏதாவது விசயமிருந்தால்தான் உன்னை கூப்பிட வேண்டுமா ? நீயும் நந்துவும் இன்று காலையிலிருந்து ரொம்ப பிஸி போல …” இளம் மனைவி ஒருத்தியை சீண்டும் சாதாரண கேலி .

ஆனால் முகிலினியை குத்தூசியாக குத்தியது இக்கேலி .” அதெல்லாம் ஒன்றுமில்லை பெரியம்மா. கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தோம் ” என்றாள் .

” என்ன …ஓ ..சரி …சரி விடு ….இப்போது வேறு ஒரு நல்ல விசயமாக கூப்பிட்டேன் .கொஞ்சம் என்னோடு வாம்மா ” என சந்திரவதனா முகிலினியை அழைத்து சென்ற இடம் அந்த வீட்டு பூஜையறை .

முன்னால் தடவிப்பார்த்து ” முகிலினி விளக்கு எறிகிறதா ? “, என கேட்டாள் .

” ஆமாம் பெரியம்மா ” எனக்கூறியபடி  திரியை சிறிது தூண்டிவிட்டு எண்ணெய் ஊற்றினாள் முகிலினி .

அவள் கையில் ஒரு நகை பெட்டியை வைத்தாள் சந்திரவதனா .”, இதற்கு தீபம் காட்டி பூஜை பண்ணம்மா ” என்றாள் .




அந்த பெட்டிக்கு பூ, பொட்டு வைத்து தீபாராதனை காட்டிவிட்டு அவளிடம் எடுத்து கொடுத்தாள் .

” உனக்குத்தாம்மா …திறந்து போட்டுக்கொள் ” என்றாள் சந்திரவதனா .

உள்ளே பளபளவென புதிதாக மின்னியது தாலிச்செயின் .பதினைந்து பவுன் இருக்கலாம் .

” வெறும் மஞ்சள் கயிற்றுடன் இருக்கிறாய் என சௌமி சொன்னாள் .அது மனதிற்கு கஷ்டமாக இருந்தது .அதனால்தான் இன்று காலை நானும் , சௌமியும் போய் இதை வாங்கி வந்தோம் .மஞ்சள் கயிற்றை சுவாமி பாதத்தில் வைத்துவிட்டு இதனை  போட்டுக்கொள்ளம்மா ” எனறாள் சந்திரவதனா.

கண்கள் கலங்கியது முகிலினிக்கு .எவ்வளவு அன்பு இவர்களுக்கு .”, நன்றி பெரியம்மா ” என்றாள் .

” அட இதற்கு ஏனம்மா கண் கலங்குகிறாய் .உன் அம்மா இருந்திருந்தால் இப்படி யோசித்திருக்க மாட்டார்களா ? உனக்கு நானும் அன்னை போலத்தான் .உன் பிரச்சினை எதுவானாலும் என்னிடம் நீ கூறலாம் ” என்றாள் வாஞ்சையுடன் .

முகிலினியின்  கழுத்தை தடவி தாலி செயினை உணர்ந்து திருப்தி பட்டுக்கொண்டாள் சந்திரவதனா .

இரவு உணவின் போதும் யதுநந்தன் வரவில்லை .உண்பதற்கு வசதியாக தட்டில் சப்பாத்தியுடன் குருமாவையும் ஊற்றி அதனை தன் அம்மாவின் கைகளால் உணர வைத்துவிட்டு தான் சாப்பிட தொடங்கினாள் சௌம்யா .

” சௌமி நந்து இன்னும் வரவில்லையா ? ” எனக்கேட்டாள் சந்திரவதனா .

” இன்று அவர்களது நேரத்தை சற்று அதிகமாகவே முகிலினி எடுத்துக்கொண்டாளே .அதை ஈடு கட்ட வேண்டாம் .காருண்யாவும் , நந்துவும் வெளியே போயிருக்கிறார்கள்.பன்னிரென்டு மணி கூட ஆகலாம் ” சப்பாத்தியை மென்றபடி கூறினாள் சௌம்யா .

” நந்துவுக்கு நிறைய வேலைம்மா .அங்கே உங்கள் வீட்டில் தங்கியிருந்தானில்லையா? அப்போது சேர்ந்து விட்ட வேலைகள் .அதையெல்லாம் இப்போது இப்படி அதிக நேரம் எடுத்து முடிக்க வேண்டியுள்ளது .அதைத்தான் இவள் சொல்கிறாள் ” என்றாள் சந்திரவதனா இடையிட்டு .

சௌமி எனக்கு எதையோ உணர்த்துகிறாளா ?  என யோசித்தபடி தலையாட்டி வைத்தாள் முகிலினி .

அவர்கள் இருவரும் சொன்னது போல் பன்னிரென்டு மணியாகவில்லை என்றாலும் யதுநந்தன் அறைக்கு வரும்போது பத்தை தாண்டிவிட்டது .பால்கனியில் அமர்ந்து நிலவை வெறித்துக்கொண்டிருந்தவளை பார்த்தபடி குளியலறைக்குள் நுழைந்தான் .

கட்டில் இழுபடும் சத்தம் கேட்டு உள்ளே வத்தாள் முகிலினி .யதுநந்தன்தான் கட்டிலை பிரித்து போட்டுக்கொண்டிருந்தான் .

” இது உனக்காகத்தான் .உன் மனம் சமாதானமடையும் வரை இங்கே …நமக்குள் என்னால் எந்த சங்கடமும் உனக்கு வராது ” என கட்டிலை சுட்டிக்காட்டியவனின் கண்கள் முகிலினியின் கழுத்தில் பதிந்தன .

” தாலி செயின் …யார் …கொடுத்தது ? ” என அருகே வந்தான் .

“உங்கள் அத்தைதான் . வெறும் கயிற்றோடு இருக்க வேண்டாமென்று போட்டுக்கொள்ள சொன்னார்கள் “என்றாள் முகிலினி .

” ஓ …எங்கே பார்க்கலாம் ….”, என இயல்பாக கழுத்தை தொட நெருங்கிய கணவனின் கையை பாதியில் பற்றி நிறுத்தினாள் முகிலினி .

சிறு அவமானத்தோடு கையை இறக்கி கொண்ட யதுநந்தன் ” சாரி …” என முணுமுணுத்தான் .

” குட்நைட் ….” என்றுவிட்டு அவனுக்கு முதுகு காட்டியபடி படுத்தாள் முகிலினி .குலுங்கும் தனது முதுகை கணவனுக்கு காட்ட விரும்பாது போர்வையால் போர்த்திக்கொண்டாள் .

பெரும் போர்க்களமாய் முகிலினியின் மனது கொந்தளித்துக் கொண்டிருந்தாலும் அதற்கு சிறிதும் சம்பந்தமில்லாது இனிமையாக அழகாக விடிந்தது காலைப்பொழுது .

மலைகளின் பின்னேயிருந்து கதிரவன் மெல்ல எழுவதை பால்கனியில் நின்று பார்த்த முகிலினியின் மனம் லேசானது .ஏதோ தன் உள்ளத்து இருளையெல்லாம் அக்கதிர்கள் உறிஞ்சியது போல் உணர்ந்தாள் .

காலைக் கதிரவனின் கதிர்களை தன் மேல் பூசிக்கொண்டு பொற்சிலையாய் நின்ற தன் மனைவியை பின்னிருந்து பார்வையாலேயே விழுங்கிக்கொண்டிருந்தான் யதுநந்தன் .

காடாக அடர்ந்திருந்த தோட்டம் அவளை வா வாவென அழைத்தது .குளித்துவிட்டு தோட்டத்தினூடே நடந்து சென்று அம்மனை தரிசித்து வந்தாள் நன்றாக இருக்குமென்று தோன்ற உள்ளே திரும்பினாள் .

அவசரமாக மறுபுறம் திரும்பிக்கொண்ட கணவனின் செயல் இவ்வளவு நேரமாக உன்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான் என கூறியது .தலையை குனிந்தபடி அவனை அவசரமாக கடந்து குளியலறைக்குள் நுழைந்தாள் .

முகிலினி எண்ணியது போன்றே இன்னமும் வெப்பம் ஏறாத அந்த காலை நேர நடை மனதை மிகவும் அமைதிப்படுத்தியது .கோவிலில் இருந்த அம்மனின் அருள் பார்வை கவலைப்படாதே குழந்தாய் என வருடுவது போல் உணர்ந்தாள் .

மன நிறைவுடன் வெளியேறியவள் இயற்கையை ரசித்தபடி மெல்ல நடக்க துவங்கினாள் .ஓரிடத்தில் நின்று அந்த செடிகளை பார்த்தவள் அவை தொட்டாசுருங்கி செடிகள் போல் இருக்க அருகில் சென்று மெல்ல விரல்களால் தடவினாள .

விரிந்த மலர் மீண்டும் சுருங்குவது போல் தன்னை சுருக்கிக்கொண்டு வாடின அவ்விலைகள் .கன்னத்தில் கை வைத்தபடி காத்திருக்க மொட்டு மலர்வது போல் மீண்டும் மலர்ந்தன .ஐய்யா …சிறு குழந்தையாக ஆர்ப்பரித்த முகிலினி மீண்டும் இலைகளை தொட்டாள் .

தொட்டவுடன் சுருங்குகிறாய்
விட்டவுடன் விரிகிறாய்
கைச்சூட்டில் கரைவதற்கு
வராத வரம் பெற்றனை
பெறாத தவம் கற்றனை
உனைப் போலன்றி
தொட்டால் சுருங்கி
விட்டால் விரிந்து
விழியோரம் பாவனை காட்டுகிறேன்

தன்னோடு அந்த செடியை ஒப்புமை படுத்திக்கொள்கிறாள் முகிலினி .யாரோ தன்னை பார்ப்பது போல் ஒரு உள்ளுணர்வு தோன்ற சுற்றும் முற்றும் பார்த்தாள் .யாரும் தெரியவில்லை .மீண்டும் செறிவுடன் தனது விளையாட்டை தொடர்ந்தாள் .

சரசரவென ஏதோ சத்தம் .எங்கிருந்து வருகிறதென தெரியாமல் எழுந்து நின்றபடி சுற்றி சுற்றி பார்க்க , சத்தம் வந்தது மேலிருந்து .அண்ணாந்து பார்த்தவள் அதிர்ந்தாள்

நல்ல தடிமனான மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்து கொண்டிருந்தது .அது மட்டும் முகிலினியின் தலை மேல் விழுந்தால் அவள் தலை பிளந்து மடிவது உறுதி .இதனை உணர்ந்தும் செய்வதறியாது அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டாள் முகிலினி .

அப்போது வலிமையான கரமொன்று அவளை பிடித்து அந்தப்பக்கம் தள்ளி விட்டது .

“, கீழே விழுந்ததும் உருண்டுடுங்க ” என்றது ஆண் குரல் ஒன்று .அதனை ஏற்று தள்ளியதால் கீழே விழுந்த முகிலினி தொடர்ந்து உருள துவங்கினாள் .பெருத்த ஓசையுடன் கீழே விழுந்தது அக்கிளை .

இதனடியில் மாட்டியிருந்தால் நினைக்கவே பயங்கரமாக இருந்தது முகிலினிக்கு .எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறான் .அவன் யாராக இருக்கும் ? கேள்வியுடன் மெல்ல எழுந்து நின்றாள் .

விழுந்த அந்த மரக்கிளையை சுற்றிக்கொண்டு வந்த அவன் இளைஞனாக இருந்தான் .சிவந்தநிறமும் , அடர்த்தியான தலைமுடியுமாக ஒரு அழகான தோற்றம் காட்டினான் .

” என்னம்மா என்ன ஆச்சு ?  உங்களுக்கு எதுவும் பலமாக அடிபட்டு விட்டதா ? ” என பதட்டமாக விசாரித்தான் .

” இல்லை ..லேசான அடிதான் …வெறும் சிராய்ப்புகள் தான் ” என்ற முகிலினியின் குரலில் இன்னமும் நடுக்கம் இருந்தது .

” ஆனால் ஏன் இப்படி நடுங்குகிறீர்கள் ? “, என சிறு கவலையுடன் கேட்டபடி அவள் கைகளை பற்ற முனைந்தான் .

” அது …வெறும் அதிர்ச்சிதான் .நீங்கள் யாரென்று கூறுகிறீர்களா ?” அவன் பிடியிலிருந்து விலகிக்கொண்டு கேட்டாள் முகிலினி .

” ஓ …சாரி என்னை அறிமுகப்படுத்தி கொள்ளவில்லையே .நான் கீர்த்திவாசன் .” என கைகளை குவித்தான் .

ஏனோ இவன் பார்த்த முகமாக தோன்றுகிறானே என யோசிக்க தொடங்கினாள் முகிலினி .




What’s your Reaction?
+1
23
+1
12
+1
2
+1
0
+1
2
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!