Serial Stories

ஊரெங்கும் பூ வாசனை-5

(5)

ஜானகி அதிர்ச்சியாய் படுக்கையைப் பார்த்தாள்.

மௌரியன் தாறுமாறாக கிடந்தான்.

குளிக்க சென்றவன் குளிக்கவில்லை என்பது அவன் மாற்றாத ஆடையிலிருந்து தெரிந்தது.

உள்ளே சென்றவன் என்ன செய்தான்? இவள் கீழே சென்றதும் திரும்ப வந்து படுத்துத் தூங்குகிறானா?

“மௌரியா…மௌரியா…” அவனை ஆவேசமாக உலுக்கினான்.

“என்னம்மா…விடும்மா தூங்கனும்” முனகிக் கொண்டே தலையணையை இழுத்து கட்டிக் கொண்டான்.

“டேய்…எந்திரிடா” ஜானகி அவனை விடவில்லை.

புரட்டினாள்.

எழுந்து உட்கார்ந்தவனின் முகத்தை அப்பொழுதுதான் பார்த்தாள்.

கண்களை திறக்க முடியாமல் கொண்டு கொண்டு சொருகியது.

“டேய்…தூக்க மாத்திரையை தின்னியாடா? சொல்லுடா…”சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.

“விடும்மா…” அவளை பிடித்து தள்ளிவிட்டு அவன் மறுபடியும் குப்புறப் படுத்துக் கொண்டான்.

“டேய்…சொல்லுடா.”  மீண்டும் மீண்டும் அவள் உலுக்க எழுந்து உட்கார்ந்தான்.

“என்னம்மா…” எண்ணெய் தேய்த்துக் கொள்வதைப் போல் தலை முடியை இருகைகளாலும் பற்றிக் கொண்டு முடியைப் பிடித்து தேய்த்துக் கொண்டான்.

“ஏன்டா இப்படி பைத்தியமாட்டம் பண்றே?”

“பின்னே… மனுஷனை தூங்க விடாமப் பண்ணினா பைத்தியமாட்டம் பண்ணாம வேற எப்படி பண்ணுவாங்களாம்?”

“தூக்க மாத்திரையை தின்னியாடா”




“இ…இல்லியே….”

“பொய் சொன்னே…கொன்னுடுவேன். சொல்லுடா…” முடியைப் பிடித்து உலுக்கினாள்.

“ஆமா…”

“ஏன்டா…ஏன்டா…தூக்க மாதிரிரையை தின்ன?’

“தூக்கம் வரலை; அதான் சாப்பிட்டேன். அதுக்கென்ன இப்ப?”

“தூக்கம் வரலைன்னா தூக்க மாத்திரையை தின்பியா?”

“அம்மா…போம்மா முதல்ல. சும்மா கேள்விக் கேட்டுக்கிட்டு”

மீண்டும் அவன் போர்வைக்குள் முடங்க முயற்சி செய்தான்.

“சரி…நான் எதுவும் கேட்கலை. எழுந்து சாப்பிட்டுட்டு படுத்துக்க”

“எனக்கு வேண்டாம். பசிக்கலை. என்னை தூங்க விடு ப்ளீஸ்”

“காலையிலேயும் சாப்பிடலை. இப்ப மதியானமும் சாப்பாடு வேண்டான்னா என்ன அர்த்தம்?”

“பச்!. ரெண்டு வேளை சாப்பிடலைன்னா ஒண்ணும் செத்துப் போய்ட மாட்டேன். போ…முதல்ல”

இன்னும் உடலை குறுக்கிக் கொண்டான்.

அதன் பிறகும் ஜானகியால் போராட முடியவில்லை.

அலுத்துப் போனவளாய் எழுந்தாள். இனி போராடியும் ஒரு பயனும் இல்லை. அவனுடைய பிடிவாதத்தின் முன் ஜெயிக்க முடியாது என நினைத்தவளாய் அறையை விட்டு வெளியே வந்தாள்.

கீழே வந்தவள் மறுபடியும் முன்பு அமர்ந்திருந்த அதே இடத்தில் வந்து அமர்ந்தாள்.




மனதில் இனம் புரியாத அழுத்தம் உண்டானது. மகனிடம் ஏதோ பிரச்சனை இருப்பதாகத் தோன்றியது.

அவன் எதனாலேயோ பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றியது,

எந்த கெட்ட பழக்கமும் அவனை தொற்றிவிடாதபடி அவளும் நமச்சிவாயமும் கண்டிப்பும் கவனிப்புமாக வளர்த்தனர்.

இதுவரை எந்த தீய பழக்கமும் அவனிடம் இல்லாததுக் குறித்து பெருமையும் கொண்டனர்.

முதன் முறையாக தூக்க மாத்திரை சாப்பிட்டிருக்கிறான். தூக்கம் வரவில்லை என்றால் என்னிடம் வந்து அம்மா தூக்கம் வரவில்லை. எனக்கு தூக்க மாத்திரை தருகிறாயா என்றுதானே கேட்டிருக்க வேண்டும். என்னுடைய மாத்திரையை என் அனுமதி இன்றி எப்படி எடுத்து சாப்பிடலாம்?’

இன்று தூக்க மாத்திரை சாப்பிடுபவன்…நாளைக்கு வேறு …போதை மாத்திரை சாப்பிட மாட்டான் என்பது என்ன நிச்சயம்?

நினைக்கும் போதே ‘சொரேர’ என்றது.

ஒரு சமயம்…போதை மாத்திரைக்கு பதிலாகத்தான் தூக்க மாத்திரைப் போட்டுக் கொண்டானா?

போதை மாத்திரை பழக்கம் இருக்கிறதா…?

கடவுளே!

அவளுக்கு தலையை சுற்றியது. அதே நேரம் வாசலில் ஹாரன் சத்தம் கேட்டது.

மதிய சாப்பாட்டிற்கு வந்த நமச்சிவாயம் உள்ளே வந்ததும் எங்கோ உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியைக் கண்டுத் திடுக்கிட்டார்.

அவர் வருவதற்கு முன்பே சாப்பாட்டு மேசையில் சமைத்தவற்றை எடுத்து பரப்பி வைத்துக் கொண்டு காத்திருக்கும் ஜானகியா இவள்?

‘என்னாச்சு இவளுக்கு?’

அருகே வந்து அவர் ‘ஜானகி’ என்று அழைத்ததும்தான் அவள் சற்றே அதிர்ந்தவளாய் நிமிர்ந்து எழுந்தாள்.

“வந்துட்டிங்களா?” என்றாள்.

“என்னாச்சு ஜானகி? ஏன் ஒரு மாதிரியாயிருக்கே?”

“ஒண்ணுமில்லை. சும்மாத்தான். நிறைய வேலை செய்தேனா? அதான் களைப்பாயிருந்தது. உட்கார்ந்துட்டேன்”

என்று சமாளித்தாள்.

“சும்மா எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்தா இப்படித்தான். உன்னை யாரு எல்லா வேலைகளையும் செய்ய சொல்றது? அதான் வேலைக்காரி இருக்காள்ல. அவளை செய்ய சொல்ல வேண்டியதுதானே!” என்று திட்டியவராய் உள்ளே வந்தார்.

ஜானகி சாப்பாட்டு மேசைக்கு வந்தவள் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.

கைக் கழுவிக் கொண்டு வந்து உட்கார்ந்தவர் அவள் விதவிதமாக சமைத்திருப்பதைப் பார்த்து சிரித்தார்.

“நினைச்சேன். நீ இன்னைக்கு ரொம்ப ஸ்பெஷலா சமைச்சிருப்பேன்னு. பையன் வீட்ல இருக்கான் இல்லே? ஃபிரண்டு கூட அவன் வீட்ல மிஸஸ் இல்லைன்னு வீட்டுக்குப் போகாம சாப்பிட ஹோட்டலுக்குப் போனான். போகும்போது என்னையும் கம்பெனி கொடுக்க கூப்பிட்டான். நீ இன்னைக்கு விதிவிதமா சமைச்சிருப்பேன்னு நினைச்சு நான் வரலைன்னு சொல்லிட்டேன்” என்று புடலங்காய் கூட்டை எடுத்து ருசித்தார்.

அவள் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகப் பரிமாறினாள்.

“எங்கே அவன்…ஒரு புடி புடிச்சுட்டுப் போய் படுத்துட்டானா?” என்றார்.




மௌரியனைப் பற்றி அவர் கேட்டதுமே ஜானகிக்குள் மறுபடியும் படபடப்புக் கூடியது.

‘சொல்லலாமா இவரிடம்?’ நினைத்தவாறே பின் ‘வேண்டாம் இதைப்போய் பெரிசுப் படுத்த வேண்டாம். இவரிடம் சொன்னால்…நான் நினைத்த மாதிரியே இவரும் தூக்கமாத்திரையோடு நிறுத்தாமல் போதை மாத்திரை கஞ்சா என தொடர்புப்படுத்திக் கொண்டே போய் டென்ஷனாகிவிடுவார் என அமைதியாக இருந்தாள்.

“ம்…அவனுக்குப் பிடிச்ச சாம்பார் சாதம், புடலங்காய் கூட்டு, எண்ணெய் கத்தரிக்கா, காரட் பொரியல், சாலட்…. ஜவ்வரிசி பாயசம்….ம்;; மகனுக்குன்னா விதவிதமா செய்வா”என்றார்.

“வித விதமா சமைச்சு என்ன புண்ணியம்? சாப்பிட வாடான்னு எழுப்புனா…வரமாட்டேங்கறான். காலையிலேயும் சாப்பிடலை, இப்பவும் சாப்பிடலை. எழுப்பி எழுப்பிப் பார்த்துட்டு வந்துட்டேன்.”

“என்ன இன்னுமா தூங்கறான். என்ன தூக்க மாத்திரை ஏதாவது போட்டுக்கிட்டு தூங்கறானா?” அவர விளையாட்டாக அப்படி சொன்னாலும் அவளுக்கு திக்கென்றது.

“நேத்து பங்ஷன்ல ஆடியிருப்பான்ல அதான் ரொம்ப அசதி போலிருக்கு. நானும் எழுப்பி எழுப்பிப் பார்த்துட்டு விட்டுட்டேன். அவனே எழுந்து வந்து சாப்பிடட்டும்னு விட்டுட்டேன்” என்று அப்பளத்தை எடுத்து வைத்தாள்.

“சரி…சரி…வயசுப் புள்ளைக்கு பசியாவது ஒண்ணாவது? ஆமா…டான்ஸ் வீடியோ அனுப்ப சொன்னேனே…சொன்னியா அவன்கிட்ட”

“ஆமா…நான் சொல்றதைக் கேட்கற நிலையிலதான் அவன் இருக்கான்? எழுப்பறது கூட காதில் வாங்காம தூங்கறான். அவன்கிட்ட வீடியோ அனுப்புடான்னா உடனே அனுப்பிடுவான் பாருங்க….”

“சரி..சரி..அவன் எழுந்ததும் முதல் வேலையா டான்ஸ் வீடியோவை அனுப்ப சொல்லு” என்று அதற்கு மேல் எதுவும் பேசினால் சாப்பாடு ருசிக்காது என அமைதியாக சாப்பிட்டு முடித்தார்.

பிறகு அவர் அலுவலகம் சென்றதும் ஜானகிக்கு சாப்பிடவே பிடிக்கவில்லை.

பெயருக்கு எதையோ சாப்பிட்டு முடித்து எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.

சரியாக நான்கு மணிக்கு மௌரியன் தானாகவே எழுந்து குளித்து விட்டு கிழே வந்தான்.

வந்தவன் நேராக கூடத்தில் வந்து அமர்ந்துக் கொண்டு தன் அலைப் பேசியை ஆராய்ந்துக் கொண்டிருந்தான்.

“இந்நேரத்திற்கு அவன் எப்படி சாப்பாடு சாப்பிடுவான் என நினைத்த ஜானகி அவனுக்காக சூடாக ரவா உப்புமா செய்து எடுத்து வந்து கொடுத்து சாப்பிடுப்பா என்றாள்.

எதுவும் சொல்லாமல் அமைதியாக அதை வாங்கி சாப்பிடத் தொடங்கியவனின் அருகில் அமர்நதவள்

“நேத்து நீ ஆடின டான்ஸ் வீடியோவை அப்பாவோட செல்லுக்கு அனுப்பி வை. அப்பா மதியானம் சாப்பிட வந்தப்பக் கூட சொல்லிட்டுப் போனார்” என்றாள்.

“நான் நேத்து டான்ஸ் ஆடலை” என்றான் மௌரியன்.

இதைக் கேட்டு முகம் மாறினாள் ஜானகி.




What’s your Reaction?
+1
17
+1
8
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!