Serial Stories எனக்கென ஒரு வானம் 

எனக்கென ஒரு வானம்-11

11

“இன்னமும் எதற்காக கண்டவர்கள் வீட்டிற்கு நீ போக வேண்டும்? நமக்கென்று ஒரு கௌரவம் இருக்கிறது” கத்தலாய் சுமலதா பேச வைசாலிக்கு எரிச்சல் வந்தது. இதனை நிதானமாக அக்கா தன்னிடம் கேட்டிருக்கலாம், எதற்காக இப்படி மேடை நாடகமாக்க வேண்டும்?

 காரணம் மிகவும் எளியதுதான். வைசாலி இன்னொரு வீட்டிற்கு போய் குழந்தைக்கு நடனம் சொல்லிக் கொடுப்பதை வீட்டில் உள்ள அனைவரும் அறிய வேண்டும் என்பதுதான் அடிப்படை. சுமலதாவிற்கு தங்கையின் நடன திறமை மேல் மிகுந்த பொறாமை உண்டு ,அது வைசாலிக்கும் தெரியும்.

“எங்கே போகிறாள்?”கந்தவேல் கேட்டார்.

“ஒரு சின்ன பெண்ணிற்கு பரதம் சொல்லித் தர,அவர்கள் வீட்டிற்கே போகிறாள் மாமா.ஏதோ கொஞ்சம் பணம் வந்தது,அம்மா வீட்டில் இருந்த வரை சரி,நம் புகுந்த வீட்டிற்கு இதெல்லாம் சரிப்படாது.பார்ப்பவர்களுக்கு அசிங்கம் என்று இவளுக்கு விளக்கிக் கொண்டிருந்தேன்”.




கை கட்டி வாய் பொத்தாத குறையாக பணிந்து நின்று பேசினாள் சுமலதா.வைசாலி முகம் சுளித்தாள்.எதற்கிந்த போலி பணிவு?

மூத்த மருமகளிடம் இவ்வகை பணிவை அனுபவித்தவர்களுக்கு இயல்பாக இருந்த இரண்டாவது மருமகள் தப்பாக தெரிந்தாளோ? சடாரென அவள் மனம் சித்தார்த்தனின் முதல் மனைவியிடம் ஓடியது.

“பரதம் தெரியுமா உனக்கு?” கந்தவேலின் குரலில் ஆச்சரியம் போல் ஒன்று தெரிந்தது.

“அரங்கேற்றம் செய்திருக்கிறாயா?” அவளது கற்றலின் அளவை தெரிந்து கொள்ள எண்ணி ஆவலுடன் கேட்டாள் பாக்கியலட்சுமி.

“அரங்கேற்றமெல்லாம் செய்யவில்லை அத்தை.ஓரளவு ஆடுவேன்.அம்மா வீட்டிற்கு அருகே கூட நான்கு பிள்ளைகள் வீட்டிற்கு வந்து என்னிடம் நடனம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.”

” சொல்லிக் கொடுக்கும் நிலையளவு இருக்கிறாயே!ஆனால் ஏன் அரங்கேற்றம் செய்யவில்லை.?”

“அப்பாவிற்கு அதிலெல்லாம் அவ்வளவு இன்ட்ரெஸ்ட் இல்லை மாமா.ஏதோ ஆசைப்பட்டாய்…படித்தாய்.

அத்தோடு விடு என்று விட்டார்”

“ஆமாம் மாமா.இதிலெல்லாம் அப்பா ரொம்ப ஸ்ட்டிரிக்ட்.

குடும்ப பெண்கள் மேடையேறினால் நன்றாகவா இருக்கும், நீங்களே சொல்லுங்க?”

கந்தவேல் ஓரக்கண்ணை ஒரு முறை மூத்த மருமகள் பக்கம் நகர்த்தி விட்டு திருப்பிக் கொண்டார்.”யார் வீட்டிற்கு போகிறாய்?”

“நம்ம கிரிதரன் வீட்டிற்குதான்பா. அவருடைய மகள் ப்ரீத்தாவிற்குத்தான் வைஷு டான்ஸ் சொல்லிக் கொடுக்கிறாள்” சித்தார்த்தன் சொன்னான்.

” ஓ “என்றபடி மெல்ல தாடையை தடவியவர் “அந்த கிரிதரன் பேமிலி எங்களுக்கு பிசினஸ் ரீதியாக நல்ல பழக்கம்தான். அவர்கள் வீட்டிற்கு போவதில் ஒன்றும் இல்லை. போய்விட்டு வா” அனுமதி கொடுத்த மாமனாரை நம்ப முடியாமல் பார்த்தாள் சுமலதா.

 என்னை மட்டும் ஆயிரம் நொட்டை பேசுவாரே, இப்பொழுது இவளை… “மாமா நமது குடும்பத்திற்கு என்று ஒரு…”சுமலதாவை  கையை உயர்த்தி நிறுத்தினார்.

 “அந்த கிரிதரன் நம்முடைய பிசினஸ் பிரண்ட். அங்கே போவதில் தவறு ஒன்றும் இல்லை. வைசாலிக்கும் படித்த கலை மறந்து விடக்கூடாது தானே?” சொல்லியபடி நடந்தவர்  வைசாலியை கடக்கும்போது ஒரு நிமிடம் நின்று திரும்பி “அந்த கிரிதரன் நமது கம்பெனிகளில் 20% ஷேர் ஹோல்டர் அவ்வளவுதான்” என்று விட்டு போனார்.

 இதை எதற்கு இப்போது சொல்கிறார் புரியாமல் பார்த்தவளின் காதில் “உன்னை அங்கே கொஞ்சம் கெத்தாக நடந்து கொள்ள சொல்கிறார் அப்பா” என்றான் சித்தார்த்தன்.

 “ஓ.. பந்தா…” இதழ் விரித்து புன்னகைத்தவளை பார்த்தபடி “அதே” என்று சிரித்தான்.

 ஹாலில் அனைவரும் இருக்கும்போதே ஓரமாக ஒதுங்கி நின்று இவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொள்வதை எரிச்சலாக பார்த்தாள் சுமலதா. அந்த வீட்டின் மூத்த மருமகள் அவள், ஆனால் இங்கே ஒரு நாளும் அவளுக்கு இந்த அளவு உரிமையோ சுதந்திரமோ தரப்படவில்லை. வந்த நான்காவது நாளே இவளுக்கு எல்லோரும் தலையாட்டினால் எப்படி?




“சித்தார்த் தம்பி உங்கள் மனைவி மாயா கூட பாலே டான்ஸ் ரொம்பவும் நன்றாக ஆடுவாள்தானே? ஆனால் அது மாமாவிற்கு பிடிக்கவில்லை” கணீர் குரலில் சுமலதா பேச வைசாலியின் உடலில் ஒரு நடுக்கம் ஊடுருவியது.

 மனைவி மாயா என்ற சொற்கள் அவள் மனதை பலமிழக்க வைத்தது. “அண்ணி இப்போது அந்த பேச்சு எதற்கு?” சித்தார்த்தன் எரிச்சலோடு கேட்க, “எனக்கு திடீரென்று ஞாபகம் வந்தது தம்பி. உங்களை ஏதும் புண்படுத்தி இருந்தால் சாரி… மன்னிச்சிடுங்க ப்ளீஸ்” வார்த்தைகளில் மட்டுமல்லாது கைகூப்பியும் மன்னிப்பு கேட்டுவிட்டு நகர்ந்தாள்.

நின்றிருந்த இடத்தில் பாதத்திற்கு கீழ் வியர்வை ஊற்றெடுத்து நச நசக்க தடுமாறி கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்துடன் அருகில் இருந்த சோபாவை பிடித்துக் கொண்டாள் வைசாலி. சோபா மேலிருந்த அவள் கைமீது தனது கை வைத்து அழுத்தினான் சித்தார்த்தன்.

இந்த விபரங்கள் முன்பே சித்தார்த்தன் அவளிடம் சொன்னவைதான்.ஆனாலும் இப்போது வைசாலியின் மனதை என்னவோ நெருடியது..

“பரதம் போல் பாலேவும்  ஒரு கலை தானே? அதனை மட்டும் ஏன் தடுக்க வேண்டும்?” வறண்ட குரலில் கேட்டாலும் நியாயத்தை பேச தயங்கவில்லை வைசாலி. 

“அந்த நடனத்தின் உடை… அத்தோடு தனியாக ஆடும் நடனமல்ல அது, மாயா டான்ஸ் பார்ட்னர்  ஒருவனையும் சேர்த்துக் கொண்டிருந்தாள். இருவருமாகத்தான் இந்தியா முழுவதும் நடன போட்டிகளில் கலந்து கொண்டார்கள். இவற்றையெல்லாம் அம்மா அப்பாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை”

 தலையசைத்த வைசாலியிடம்  “இன்று நானே உன்னை ட்ராப் செய்கிறேன். கிரிதரிடம் உன்னை அறிமுகப்படுத்திவிடுகிறேன்.வா” உடன் கிளம்பினான். 

 கார் போர்டிகோவில் நின்ற மறு நிமிடமே காரருகே தோன்றியிருந்தான் கிரிதரன். “வாங்க இளவரசரே! எங்கே இந்த ஏழையின் குடிசை பக்கம்? ஏதோ நல்ல விஷயம் கேள்விப்பட்டேனே!  கல்யாணம் எல்லாம் நன்றாக நடந்ததா?”  

“கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க கிரி. என் மனைவியை உங்களுக்கு அறிமுகப்படுத்தத்தான் அழைத்து வந்திருக்கிறேன். இவள் யார் என்று தெரிகிறதா?” சொல்லியபடி காருக்குள் அமர்ந்திருந்த வைசாலியின் கைப்பற்றி வெளியே அழைத்தான். கிரிதரனின்  முகம் வெளுத்தது.




 “இவங்க பெயர் வைசாலி, என்னுடைய மனைவி. என்ன கிரி விழிக்கிறீர்கள்? உங்கள் மகள் ப்ரீத்தாவின் நடன ஆசிரியையேதான்” சித்தார்த்தன் புன்னகையுடன் சொல்ல..

“அடடா உங்கள் சாம்ராஜ்யத்தின் புதிய இளவரசி என்று சொல்லுங்கள் சித்து அண்ணா. எனக்கு முன்பே தெரியும் இவர்கள் பெரிய இடத்து மருமகளாகத்தான் போய் அமர்வார்களென்று. இவரிடம் கூட அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன் என் பேச்சு பலித்து விட்டது பார்த்தீர்களா” என்றபடி  வீட்டு படி இறங்கி வந்து நின்ற ரஞ்சனியின் பேச்சை நம்ப முடியாமல் பார்த்தால் வைசாலி. 

“வாங்க மேடம். நீங்க டான்ஸ் சொல்லிக் கொடுக்க என் குழந்தை கொடுத்து வைத்திருக்க வேண்டும். இனிமேல் உங்களுக்கு ஏன் அலைச்சல்? நாளையிலிருந்து உங்கள் வீட்டிற்கு குழந்தையை கொண்டு வந்து விட்டு கூட்டிக் கொள்கிறோம்”

“பரவாயில்லை வழக்கம்போல் நானே வருகிறேன்”

” ஐயோ கந்தவேல் சாருக்கு நாங்களல்லவா பதில் சொல்ல வேண்டும்? நீங்கள் வந்து ஒரு காபி குடித்துவிட்டு கிளம்புங்கள்” கிரிதரன் விட்டால் குனிந்து அவள் கால்களை தொடுபவன் போல் நின்றிருந்தான்.

 உள்ளே இருந்து ஓடி வந்த பிரீத்தி “மிஸ்” என்று வேகமாக வைசாலியின் கால்களை கட்டிக்கொள்ள, ரஞ்சனி சட்டென்று அவளை பிடித்து இழுத்தாள்.

” ப்ரீத்தி மிஸ் மேல விழுந்து அழுக்காக்காதே, தள்ளி நின்று மரியாதையாக குட் மார்னிங் சொல்லு” அதட்டினாள்.

ப்ரீத்தா விழித்தபடி தள்ளி நிற்க அவள் கைப்பற்றி தன் அருகே இழுத்துக் கொண்டாள் வைசாலி. “குழந்தை மனது தூய்மையானது. அதில் குப்பையை கொட்டாதீர்கள் மிஸஸ்.ரஞ்சனி” என்றபோது அவளது குரலில் தானாகவே கம்பீரம் வந்து சேர்ந்திருந்தது.அந்த நேரத்தில் கந்தவேலின் மருமகளாக சித்தார்த்தனின் மனைவியாக இருப்பதில் பெருமை கொண்டாள்.




What’s your Reaction?
+1
63
+1
27
+1
3
+1
1
+1
3
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!