Serial Stories

யுகம் யுகமாய்..! -8

8

“அங்கத்! எங்கே நினைவு?” என்றபடி தன் அறைக்குள் நுழைந்த டெய்ஸியை அவன் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அவன் சுதாரிப்பதற்குள் அவன் மொபைல் திரையை எட்டிப் பார்த்த டெய்ஸி “ஐ தாட் ஸோ!” என்றாள். திரையில் வர்ஷா சிரித்துக் கொண்டிருந்தாள்.

“லிஸன், ஐ வாஸ் ஜஸ்ட் கோயிங் டு கால் ஹர். மயங்கி விழுந்துட்டாளேன்னு…” தடுமாறினான் அங்கத்.

“ஷி இஸ் ஃபைன். தாங்க்ஸ் ஃபார் யுவர் கன்சர்ன்” என்ற டெய்ஸி தொடர்ந்து ஆங்கிலத்தில் வேகமாகப் பேசினாள். “அங்கத், நானும் நீயும் ஒரே நேரத்தில் ஜாயின் பண்ணினோம். உன்னை ஆரம்பத்திலிருந்தே கவனித்துக் கொண்டிருக்கிறேன். உனக்குள் திறமை இருக்கிறது, வேகம் இருக்கிறது. மிக இளைய வயதிலேயே இந்தக் கம்பெனியில் பெரிய பதவிகளை அடைந்து, இப்போது கம்பெனிப் பங்குகளை வென்று டைரக்டர்களில் ஒருவராகிவிட்டாய். ஆனால் உன்னிடம் ஒழுக்கம் இல்லை. யூ எஸ்ஸிலும், இந்தியாவிலும், எங்கேயானாலும் பெண்களும் அவர்களின் சாய்ஸ்களும் மதிக்கப்பட வேண்டும்…”

“என்ன சாய்ஸ்? நீ சொன்ன தகுதி, திறமைகளை சட்டென்று மறந்து உருவத்தைப் பார்த்து தேர்வுசெய்வதா? உன் மனதைத் தொட்டுச் சொல், டெய்ஸி! ஆரம்பகாலத்தில் என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்? என்னோடு எவ்வளவு சந்தோஷமாக, வெளிப்படையாகப் பேசுவாய்? அந்த சாலமனுடைய முகத்தைப் பார்த்தவுடன் மயங்கிவிட்டாய், இல்லையா?”

“நான்சென்ஸ்!” – அழகான பாப் கூந்தலை உதறினாள் டெய்ஸி. “சாலமன் இஸ் அ ஜெண்டில்மேன். நீ… நீ யார் என்று எனக்குத் தெரியும். நீதான் உருவத்தைப் பார்த்து உள்ளம் மாறுபவன். அழகிய பெண்கள் அத்தனை பேரும் உனக்கு மயங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவன். அதனால்தான் உன்னிடமிருந்து விலகினேன். இப்போதும் உன்னிடம் பேச எனக்கு இஷ்டமேயில்லை. வர்ஷாவுக்காகத்தான்… அவள் என் தோழி. குழந்தைபோல் அப்பாவி! அதோடு, ஏதோ மன அழுத்தத்தோடு துணிச்சலாகப் போராடிக் கொண்டு தன் திறமையையும் காட்டி ஜெயித்துக் கொண்டிருக்கிறாள். அவளிடம் உன் விளையாட்டுகள் எதையும் நீ காட்டிவிடக் கூடாது என்று எச்சரிக்கவே இப்போது வந்தேன்! நாம் எல்லோரும் இந்தியாவுக்குப் போகப் போகிறோம். எல்லோரும் நண்பர்களாகப் போய், சந்தோஷமாக இருந்து, ப்ராஜக்டையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு வருவோம், சரியா?”

அங்கத் அவளை முறைத்தான். ‘இவள்தான் ஏதோ என்னைப் பற்றித் தப்பும் தவறுமாக வர்ஷாவிடம் சொல்லிக் கொடுத்திருக்கிறாள்! அதனால்தான் வர்ஷா என்னை அறைந்திருக்கிறாள்! இதற்கெல்லாம் நான் பயந்தவனல்ல. வர்ஷாவை என் பிடிக்குள் கொண்டுவந்தே தீருவேன்! ஆனால், எனக்கு எதிராக இவள் இருக்கும்வரை… இந்தியாவில் எனக்குச் சாதகமாக யாரையேனும் நான் கண்டுபிடிக்க வேண்டும். நான் உண்மையாக மேகமலைக்கு ஏன் செல்கிறேனோ, அதற்கும் அந்தக் கான்டாக்ட் உதவியாக இருக்கவேண்டும்…’




“என்ன யோசிக்கிறாய், அங்கத்?” அவன் சிந்தனைகளைக் கலைத்தாள் டெய்ஸி.

அங்கத் ஒரு பெருமூச்சுவிட்டான். “டெய்ஸி டியர், நீ எப்போதுமே என் மதிப்பிற்குரிய தோழி. உன் அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிறேன். இந்தியாவுக்குக் கிளம்புவோம் நானும் இங்கே சில முக்கியமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது”என்றான். 

அவன் கண்களில் மின்னிய குரூரத்தைக் கவனிக்காத டெய்ஸி மகிழ்ச்சியுடன் வெளியேறினாள்.

==============

பன்னகப் பிடாதி அடவிக்கரையில் ஆத்திரத்துடன் அலைந்தான். இங்குதான் இளவசரும் அந்தத் திமிர்பிடித்தவளும் சந்தித்தார்கள் என்ற நினைவில் அந்த அடவிக்கரையையே எரித்துவிடுபவன்போல் பார்த்தான்.

சே! கோட்டைக் கதவுகள் சார்த்தப்படுவதற்குமுன் உள்நுழையாததால் இளவரசருக்கு என்மீதே சந்தேகம் வந்துவிட்டது! இன்று கவனமாக இருக்க வேண்டும். இந்தப் பெண் எனக்குப் பயந்து மனம் மாறியிருந்தால் சரி, இல்லையேல் அவளை ஒழிப்பதற்கும் நான் ஏற்பாடு செய்ய வேண்டும். என் மகள் குணமலைக்குன்றின் சக்கரவர்த்தினியாக அமரவேண்டும், நான் அவர்கள் பின்னால் நிழல் சக்கரவர்த்தியாக ஆளவேண்டும் என்பது எத்தனை ஆண்டுக் கனவு? என் மகளுக்குத்தான் என்ன குறைவு? இளவரசியளவு அழகு இல்லாமல் இருக்கலாம். ஆனால் கல்வியிலும் அறிவுக்கூர்மையிலும் நிகரற்றவள் ஆயிற்றே! இப்புறம் மேகமலையையும் அப்புறம் முகலியாற்றையும் தாண்டியறியாத பேதைப்பெண் என் மகளை வென்றுவிடுவாளா? என் கனவைக் குலைத்துவிடுவாளா? அதற்கு நான் தான் விட்டுவிடுவேனா?

உறுமலும் பொறுமலுமாய்த் திரிந்துகொண்டிருந்த பன்னகப் பிடாதி, எங்கோ மோதிக் கொண்டவன்போல் திடுக்கிட்டு நின்றான். சட்டென்று அங்கவஸ்திரத்தால் தழும்பை மறைத்து “நீ… யார் பெண்ணே?” என்று தடுமாறிக் கேட்டான்.

“பிரமாதம்! அயல்நாட்டவர்போல் காணப்படுகிறீர்கள். எங்கள் தேசத்திலேயே வந்து என்னை யார் என்று கேட்கிறீர்களே!” என்றாள் யௌவனகாந்தி. 

இளவரசி பீதியடித்தவள்போல் காணப்படுவதற்கு என்ன காரணம் என்று தெரிந்துகொள்ளத் துடித்தாள் அவள். ஆனால் குழலியோ அவளிடம் ஒன்றும் சொல்லாமல் பூபாலனுக்கு லிகிதம் அனுப்பினாள். எனவே அடவிக்கரையில் குழவியைப் பயமுறுத்தியது எது என்பதற்கு ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று பார்க்கவே வந்திருந்தாள்.

“நீயே சொல்லிவிட்டாயே அயல்நாட்டவன் என்று! தெரியாததாலேயே கேட்கிறேன். சொல்லம்மா” பவ்யமாகவே கேட்டான் பன்னகப் பிடாதி. இவள் அரண்மனையைச் சேர்ந்தவளோ என்ற எண்ணம் தோன்றியதே காரணம்.

“நான் மேகமலைக்குன்று அரசரின் மெய்க்காப்பாளரின் மகள். இளவரசி சோணைக்குழலியின் அந்தரங்கத் தோழி!” என்றாள் யௌவனகாந்தி பெருமையாக.

“அப்படியானால் நாம் நெருங்கிவிட்டோம்! நான் குணமலைக்குன்று இளவரசருக்கு மிகவும் வேண்டியவன். விரைவில் நம் எஜமானர்களுக்கிடையில் சம்பந்தம் ஏற்படப் போகிறதன்றோ?” என்று தந்திரமாகப் பேசினான் மந்திரி.

“அது தங்களுக்கும் தெரிந்துவிட்டதா?”

“தெரியாமலென்ன? நான் இளவரசருக்கு நெருங்கியவன் என்று சொல்லவில்லையா? சீக்கிரம் திருமணம் பேச எங்கள் நாட்டிலிருந்து வருவார்கள் என்றே எதிர்பார்க்கிறேன். உங்கள் இராஜகுரு நாள் பார்க்க வேண்டியதுதான்! ஒரே மாதத்தில் திருமணம் நடந்துவிடாதா?”

“இராஜகுரு சந்திர கிரஹணத்திற்குப் பிறகுதான் திருமணம் நடைபெற வேண்டும் என்றல்லவா சொல்லியிருக்கிறார்” – வாய்தவறிச் சொல்லிவிட்டாள் யௌவனகாந்தி.

பன்னகப் பிடாதியின் உட்புலன்கள் விழித்துக் கொண்டன. அறிவு கூர்தீட்டப்பட்டது. ‘இதோ! ஒரு சந்தர்ப்பம்!’

ஆனால் அவன் முகம் முன்போலவே சாந்தமாக இருந்தது. “நல்லதம்மா! நாளும் கோளும் பார்த்துத்தானே நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்? நான் போய் வருகிறேன்.”

“நீங்கள் எதற்காக இங்கே வந்தீர்கள் என்று சொல்லவில்லையே!” என்று கேட்டாள் கெட்டிக்காரியான யௌவனகாந்தி.

“ஓ! மன்னித்துவிடு. இளவரசர் இன்று இங்கே வரலாம். அவருக்குப் பாதுகாப்பளிக்கவும் எதிரிகள் யாரும் இல்லையே என்று கண்காணிக்கவுமே வந்தேன்” என்றான் மந்திரி.

“தங்கள் பெயரையும் சொல்லிவிடுங்கள்! உங்கள் இளவரசரைச் சந்தித்தால், இளவரசர் வருவதற்கு முன்பே அவ்விடத்தைக் கண்காணிக்கும் முன்ஜாக்கிரதை முத்தண்ணரைப் பற்றி அவரிடம் புகழ்ந்து கூறுவேன்!”

“இராஜரீக காரியங்கள் அப்படித்தான் பெண்ணே! என் பெயரை இப்போதல்ல, நம் இராஜகுடும்பங்கள் ஒன்றாகப் போகின்றன. அதன்பிறகு சொல்கிறேன்!” என்று குதிரையின் மீதேறிப் பறந்துவிட்டான் மந்திரி.




அவன் மனம் குதிரையைவிட வேகமாகப் பறந்தது. ‘குழலியை யாரும் சந்தேகப்படாமல் ஒழிக்க ஒரு வழி கிடைத்திருக்கிறது போலிருக்கிறதே! இராஜகுருவிடம் தந்திரமாக விஷயத்தைக் கறக்க வேண்டும். அதோடு, மேகமலை அரண்மனையில் நமக்குச் சாதகமாய் ஒருவர் வேண்டும். இவள்? இல்லை, இவள் சரிப்பட்டு வரமாட்டாள். மதியூகி,  இராஜவிசுவாசம் உடையவள் என்று பேச்சிலேயே தெரிகிறது. வேறு யாரையாவது பிடிக்கவேண்டும்.’

———————————-

“தாத்தா! மீட் வர்ஷா, என் டீம்-மேட். இது உங்களுக்குத் தெரியும், டெய்ஸி!” என்றான் ப்ருத்வி.

டீம்-மேட்டா, சோல்மேட்டா? தாத்தா வர்ஷாவையே உற்றுப் பார்த்தார். திருப்தியடைந்தவராக 

“வாங்க குழந்தைகளா! முதலில் நீங்க எல்லாரும் டீயும் டோஸ்ட்டும் சாப்பிடுங்க. வர்ஷா, உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு, இன்னிக்கு லஞ்ச்சுக்கு அதையே குக் பண்ணிடறேன்”  என்றார்.

வர்ஷா அவரை அன்புடன் பார்த்தாள். 

என் கிராண்ட் பா வை நான் பார்த்ததே இல்லை. உங்களைப் பார்த்தா என் சொந்தத் தாத்தாவையே பார்த்தமாதிரி… மனசாரச் சொல்றேன், எவ்வளவோ ஆறுதலா இருக்கு” என்றாள்.

“ஹேய், உன் ப்ராப்ளம் சீக்கிரம் ஓடிடும் பாரு! தாத்தா, இவளுக்குத்தான்… நான் சொன்னேனே, மயக்கம் மாதிரி…”

“அம்பாள் காப்பாத்துவாம்மா! உன் டேட்-ஆஃப்-பர்த் என்ன?”

“போச்சுடா! அஸ்ட்ராலஜியா? இன்னிக்குச் சந்திரனுக்கு நாஸாவும் ஐ எஸ் ஆர் ஓவும் மாற்றிமாற்றி ராக்கெட் விட்டுட்டிருக்காங்க தாத்தா!”

“பழங்கால சயின்ஸை மூடநம்பிக்கைன்னு நினைக்காதே ப்ருத்வி!”

“ஓகே! வர்ஷா, டேட்-ஆஃப்-பர்த் சொல்லிட்டு வா, என் ரூம் போய்ப் பேசலாம்” என்றான் ப்ருத்வி.

“உன் ஜன்ம நக்ஷத்திரம் என்ன குழந்தாய்?”

“தாத்தா கேட்கிறாரா, அல்லது கனவுக் காட்சியில் கேட்கும் குரலா?”  என்று குழம்பிய வர்ஷா, கஷ்டப்பட்டுச் சமாளித்துக் கொண்டு, பிறந்ததேதியைச் சொன்னாள்.

ப்ருத்வி, டெய்ஸியோடு மாடிப்படிகளில் ஏறியபோதும் அவளை அந்தக் குரல் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

பங்குனி உத்தரம். அர்ஜுனனின் நக்ஷத்திரம். ஒரு துரியோதனனுக்காய் இவளுக்கு மிக நெருங்கியவர்களே இவள்மேல் நாகாஸ்திரம் எய்வார்கள். கவனம்! கவனம்!

(தொடரும்)




What’s your Reaction?
+1
6
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!