Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-12

 12

“நான் அப்பவே சொன்னேன். இதுங்க இரண்டுபேரும் உண்மையான ஆர்க்கிடெக்ட்ஸா எனக்குத் தெரியலை. மந்திரம், பூஜைன்னு கண்கட்டு வித்தை பண்றாங்க. ஒருவேளை இன்ஸ்பெக்டர் சொன்ன ஆளுங்க இவங்களா இருக்கலாமோ? கைஸ்!! கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க.”

க்ருபா தன் குழுவினரிடம் சீரியஸாக சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் அவன் பக்கத்தில் ஒட்டியபடி நின்றிருந்த கோதையை ஹரிணி குறுகுறுவெனப் பார்த்தாள்.

“க்ருபா! இவ ஏன் என்னை முறைச்சுப் பார்க்குறா?” கோதை கிசுகிசுத்தாள்.

“இது ஒரு டெக்னிக் கோதை! நம்மமேல சந்தேகத்தை ஏற்படுத்தி நம்மைப் பிக்சரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளியேத்தறது! யோசிச்சுப் பாரு! இங்கே பத்ரி மாதிரி சமூக விரோதிகளுக்கு என்ன வேலை? இந்த மஞ்சள் பூக்களில் ஏதாவது அபூர்வ கெமிக்கல் இருக்கலாம், மணலில் யுரேனியம் ஏதாவது இருக்கலாம்! இன்ங்கே வந்திருக்கறவங்கள்ள நாமதான் இந்தச் செடிகளை ஆராய்ச்சி செய்யறவங்க! அதனால தான் சொல்றேன், நாம அஞ்சு பேரும் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். யாரையும் நம்பக் கூடாது. அதைவிட முக்கியம் ஒருத்தரையொருத்தர் விட்டுக் கொடுக்கக் கூடாது. தீபா, கோதை! நீங்க இரண்டுபேரும் கவனமா இருங்க. ஹரிணிகிட்ட அதிகம் பேச்சு வச்சுக்க வேண்டாம். நமக்கு நம்மோட வேலை முக்கியம்.”

க்ருபா பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் ஃபோன் அழைத்தது.

எடுத்து முகமாறியவன் “கோதை உனக்குத் தான்” என்றான்.

“எனக்கா? கடவுளே! அம்மாவாகத்தான் இருக்கும். என் ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆகி கிடக்கு. அம்மா!” என்றவளைப் பேசவிடாமல் கத்தினாள் அம்மா.

“எத்தனை தடவை ஃபோன் பண்றது? முதலில் எடுக்கவே இல்லை, அப்புறம் சுவிட்ச் ஆப்னு வருது. நான் என்னானு நினைக்கிறது? கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? ஊரும் உறவும் சொன்னதை மதிக்காம உன்னை அனுப்பின என்னைச் சொல்லணும். போகவேண்டாம்னு சொன்னேன். இலை கொடி பூவுனு கதையளந்து அடம் பிடிச்சு கிளம்புன. போதும் நீ ஆராய்ச்சி படிப்புன்னு சுத்தினது.உடனே கிளம்பி வா.”

“இல்லைம்மா. இத்தனை நாளும் தினம் ஃபோன் செஞ்சேனே. இன்னைக்கு ஃபோன் சுவிட்ச் ஆயிடுச்சு. ப்ளீஸ் மா…” – அவள் கண்கலங்கிக் கெஞ்ச… அம்மா மேலும் எகிறினாள்.

சட்டென ஃபோனை வாங்கிய க்ருபா “”ஸாரி ஆண்ட்டி. கோதையோட ஃபோன் ரிப்பேர். இதோ அதை சரிசெஞ்சிடறேன். இனி இப்படிப்பட்ட தப்பு நடக்காது. இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க. நான் பொறுப்பு. என்னை நம்புங்க..” என்றான்.

அம்மா சமாதானம் ஆனதும்தான் நிம்மதியானாள் கோதை.  “ரொம்ப தாங்க்ஸ் க்ருபா.”

“நன்றியிருக்கட்டும். இனி தினம் இரண்டு வேளையும் அம்மாட்ட பேசிடு. தேவையில்லாத மன உளைச்சல் வந்தா வேலையை கவனிக்க முடியாது. சரி எல்லோரும் போய்த் தூங்குங்க.”

அவன் நண்பர்களோடு அறைக்குள் போய்விட்டான். கோதை அவனை நினைத்து வியந்து கொண்டிருந்தாள்.

“க்ருபா பேசலைனா உங்கம்மா நேரா இங்கே கிளம்பிவந்து ரகளை அடிச்சிருப்பாங்க” – தீபா பயமுறுத்தினாள்.

“நானே பயந்துகிடக்கேன். நீ வேற ஏண்டி படுத்தறே!”

“இதுவே என் அம்மா-அப்பாவைப் பாரு! நான் எங்கே போனாலும் கேட்கறதில்லை. என்மேல் இருக்கற நம்பிக்கைதான் காரணம்.”

“அதெல்லாம் எங்கம்மாவுக்கும் நம்பிக்கை உண்டு. எல்லாம் எங்க மாமாவும் அத்தையும் பண்ற வேலை.”

“ஆமாண்டி. அவங்க பிள்ளைக்கு உன்னை விட்டா வேற கதியில்லையே. அதான் உன்னை சீக்கிரம் மருமகளாக்கப் பார்க்குறாங்க.”

“அது ஒருநாளும் நடக்காது.”

“அதான் தெரியுமே, யார் மனசில யாருனு!” என்று நீட்டி முழக்கியவளை முறைத்து அன்றைய நினைவுகளை அசைபோட்டபடி உறங்கிப் போனாள் கோதை.

எல்லோரும் உறங்கினாலும் இரவும் நிலவும் உறங்குவதில்லை.

மரங்களும் இலைகளும் பிராணவாயுவை உள்ளிழுத்துக் கரியமிலவாயுவை வெளியிட்டுக் கொண்டிருந்த அந்த அடரிருளில் வேறு சிலரும் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மெல்ல மெல்ல விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த அப்பொழுதில் எங்கோ தூரத்தில் அபஸ்வரமாய் குழலோசை மெலிதாகக் கேட்டது. கூடவே யாரோ எதையோ தட்டும் சத்தமும்…

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கோதை திடுக்கிட்டு எழுந்து டார்ச் லைட்டை  எடுக்க தீபா ஏற்கனவே எழுந்து உட்கார்ந்திருந்தாள்.




“ஏதோ சத்தம் கேட்குது இல்ல?”

“ஆமாண்டி இந்நேரத்தில யாரு புல்லாங்குழல் வாசிக்கிறது? அதுவும் கொடூரமா… தாங்க முடியலைடி. வா,யாருனு பார்த்து கழுத்தை நெறிச்சு கொன்னு போடுவோம்.”

“உன் அலப்பறைக்கு அளவே இல்லையா?”

“சத்தம் போடாதே. அங்கே பார். நம்ம சன்னல் பக்கமா ஏதோ நிழல் தெரியுது.”

இரண்டு பேரும் சுவரோரம் சரிந்து நின்று மெதுவாக எட்டிப் பார்த்தார்கள். தலையிலிருந்து கால்வரை போர்வை போர்த்திய ஓருருவம் பதுங்கிப் பதுங்கிப் போய்க் கொண்டிருந்தது.

“கதவைத் திறடி, போய்ப் பார்ப்போம். இதுதான் அந்தக் கைதியோ?”

தீபா கதவைத் திறக்க முயல,கோதை தடுத்தாள். “இதோ… இன்னோர் உருவம் போகுது பார்.”

அதுவும் போர்வை போர்த்தியிருந்தது. கையில் ஏதோ ஆயுதமிருந்த மாதிரி இருந்தது.

“ஐயோ! இன்னுமொரு கொலை நடக்கப் போகுது. பார்க்காதேடி. நாம ஐ விட்னஸா மாட்டிக்குவோம்.”

தீபா சொல்லிக் கொண்டிருக்கும் போதே 

அது நிகழ்ந்தது.

இரண்டு உருவங்களும் ஒன்றையொன்றைத் துரத்தித் தாக்கிக் கொண்டன. ஆக்ரோஷமான சண்டையின் உச்சக்கட்டமாக ஒரு உருவம் கையிலிருந்த கத்தியால் வேகமாகக் குத்த முற்பட…

தன்னை மறந்து “வீல்” எனக் கத்தினாள் கோதை.

அந்த அலறலில் அரண்மனையின் அத்தனை விளக்குகளும் பளீரிட்டன. அவரவர் கதவுகளைத் திறந்து ஓடி வந்தனர்.

“என்னாச்சு? என்ன சத்தம்?” – க்ருபாவும் நண்பர்களும் பதறினார்கள்.

“அங்கே…  .வெளியே… கொலை!” – கோதை விசும்பலோடு கூற தீபாவோ சிலையாகி இருந்தாள்.

*****

ஆதி உச்சபட்ச டென்ஷனில் இருந்தான். நல்லவேளை ஸ்வேதா எழுந்திருக்கவில்லை.

சந்தான பாண்டியனும் மீனாவும் திகைத்துப் போய் நிற்க..

எழில்மாறன்  தன் ஆட்களோடு அந்த இடத்தை ஆராயக் கிளம்பினார். அரண்மனையின் வெளித் தாழ்வாரத்தில் எல்லோரும் கூடி நின்று அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“அப்படி எதுவும் நடந்த மாதிரியே தெரியலையே!” என்றார் எழில்மாறன், புல்தரையை டார்ச் விளக்கால் அலசியவாறே.

“இல்லை. நான் என் கண்ணால பார்த்தேன். கத்தியால குத்தினதும் ஒருத்தர் கீழே விழுந்ததையும்…” அலறினாள் கோதை.

“அப்படினா, கொஞ்சமாவது ரத்தம் சிந்தியிருக்கணுமே. எதையும் காணோமே. சரி, யார் யாரைக் குத்தினா?”

“அதெல்லாம் தெரியாது. இரண்டுபேரும் போர்வையால மூடியிருந்தாங்க.”

“மிஸ்டர் ஆதித்யா! உங்க ஆர்க்கிடெக்ட்ஸ் இரண்டுபேரும் எங்கே? இங்கே நடக்கிறது எதுவும் காதில விழலையா என்ன? ஏதாவது ஆவி லோகத்தில் இருக்காங்களா?” எழில்மாறன் கிண்டலாய்க் கேட்டார்.

சரியாக அதே நேரம் “என்ன இங்கே கலாட்டா?” என்றபடி வந்த இரண்டுபேரையும் பார்த்து எல்லோரும் திடுக்கிட்டார்கள்.

ஹரியும் ஹரிணியும் போர்வை போர்த்தியபடி நின்றார்கள்.

“இதோ… இவங்க தான்!!” கோதை அலற…

ஹரிணி அவளருகில் வந்து “என்னாச்சு?” என்றாள்.

“ஏம்மா! போர்வை போர்த்திகிட்டு ஒருத்தரையொருத்தர் குத்திகிட்டீங்களாமே!” எழில்மாறன் இடைவெட்ட…

“நாங்களா? என்ன உளர்றீங்க?” என்றான் ஹரி வியப்பாய்.

“இந்தப் பொண்ணுதான் சொல்லுது. இதோ இந்த ஜன்னலோரமா இரண்டுபேரும் பதுங்கிப் பதுங்கிப் போய் சண்டை போட்டீங்களாம்.”

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள..

சந்தான பாண்டியன் கோபமாகக் கேட்டார். “இரண்டுபேரும் இந்த அதிகாலையில் ஏன் போர்வையை சுத்திகிட்டு அலையறீங்க? யாரா இருந்தாலும் பயமாத்தான் இருக்கும்.”

ஏற்கனவே அவர்கள் மீதிருந்த சந்தேகம் இன்னும் இறுக அவர்களோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிரித்தார்கள். “இங்கே என்ன நடந்ததுன்னு எங்களுக்குத் தெரியாது. நாங்க ராத்திரி வெகுநேரம் தூங்கல. இப்பத்தான் கொஞ்சம் கண்ணசந்தோம். அதுக்குள்ளே கரேபுரேன்னு சத்தம் கேட்கவும் இவ என் அறைக்கு வந்து என்னை எழுப்பி விட்டுட்டா.

“நான் போட்டிருக்கிற நைட் டிரஸ் முன்னபின்ன இருக்கும். கேர்ள்ஸ் இருக்காங்கனு கையில கிடைச்ச போர்வையை சுத்திட்டு வந்தேன். என்னை நம்பலைன்னா…”

ஹரி போர்வையை விலக்க முயற்சிக்க க்ருபா சட்டெனக் கைகளைப் பிடித்துக் கொண்டான். “புரோ! உங்களை நம்புறோம். பேசாம இருங்க.”

“அப்ப கோதை பார்த்தது யாரை?” – மீனா பயத்தோடு கேட்டாள்.

“தெரியலை ஆண்ட்டீ. ஒருவேளை இதுவரை நடந்த விஷயங்களையே நினைச்சிட்டிருந்திருப்பா. அதனால வந்த இல்யூஷனா இருக்கலாமோ என்னவோ! தீபா நீ கூடத்தானே இருந்தே! நீ பார்த்தியா?” க்ருபா தீபாவைப் பார்த்தான்.

“இருட்டில எனக்கு சரியாத் தெரியல க்ருபா. கோதை தான் ஏதோ உருவம் போகுதுன்னு சொன்னா. அப்புறம் எனக்கு பகலிலேயே பசுமாடு தெரியாது. இந்த ராத்திரியில எருமைமாடு தெரியுமா என்ன?”

ஏய் தீபா, என்னடி இப்படி சொல்ற?” பதறிய கோதையின் கைகளை அழுத்தியவள், “ஸாரிங்க, ஏதோ குழப்பத்தில கத்திட்டா. எல்லோரும் மன்னிச்சிடுங்க” என்று சொல்லிவிட்டு, கோதையை அறைக்குள் இழுத்து வந்தாள்.

“இரண்டுபேருந்தானே பார்த்தோம். இப்ப இல்லைனு சொல்றியே. சே…அத்தனை பேர் முன்னாடி என்னை பைத்தியக்காரி ஆக்கிட்டியே” – கோதை பொரிந்தாள்.

“எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு.”

“அப்படியென்ன காரணம்?”

“அதை நான் சொல்றேன்”

க்ருபா உள்ளே வந்தான்.




“இங்கே பாரு கோதை. இங்கே நடக்கிற விஷயங்கள் ரொம்ப மர்மமா இருக்கு. தேவையில்லாம நாம அதில தலையிட வேண்டாம். நீ ஏதாவது சொன்னா நாளைக்கு போலீஸ் கோர்ட்டுனு அலைய வேண்டியிருக்கும். ஏற்கனவே உங்க அம்மா பயந்து கிடக்காங்க. இதில இந்த மாதிரி விஷயங்கள் அவங்க காதுக்குப் போனா என்னாகும்? அதோட… நாம வந்த காரியம் என்ன? அதை நல்லபடியா முடிக்க வேணாமா?”

முதன்முறையாகக் கிருபாவை “சே! நீ இவ்வலவு சுயநலமானவனா?” என்ற பார்வை பார்த்தாள் கோதை.

“அதுக்காக, கண்ணெதிரே ஒரு கொலை நடந்ததைப் பார்த்திட்டு பேசாமப் போறது சரியா? அது மனுஷத் தன்மையா?”

“இருட்டில நீ பார்த்த உருவங்கள் யார்னு உனக்குத் தெரியுமா? அவங்க மனுஷங்க தான்னு உறுதியா சொல்ல முடியுமா?”

கிருபாவின் கேள்வியில் குழம்பிப் போனவளாய்க் கோதை திகைக்க அறைக்கு வெளியே மீண்டும் ஏதோ அசையும் சத்தம் கேட்டது.

மூவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு உருவம் எதையோ இழுத்துக் கொண்டு வேகமாக நடந்து இருட்டில் மறைந்தது.

“இப்ப என்னை நம்பறியா?” – கோதை அழுகையும் ஆத்திரமுமாய்க் கேட்க, க்ருபா பேசாமலிருக்கச் சொல்லி சைகை காட்டியவன் சட்டென கதவைத் திறந்து வெளியில் ஓடினான்.

“எவ்வளவு பேசினான்? கண்ணெதிரே நடந்ததும் ஓடுறான் பாரு. இதேதான் நானும் செஞ்சேன்.”

“விடு கோதை. அவன் ஆம்பிளை. எது நடந்தாலும் சமாளிச்சுக்குவான்.”

“அவனுக்கு ஏதாவதுனா என்னால தாங்க முடியாதுடி.”

“சரி. மெதுவாப் பேசு. போனவனை இன்னும் காணோம். சற்றுப் பொறுத்து நாம போய்ப் பார்ப்போம்.”

க்ருபா அறை ஜன்னலிலிருந்து பார்த்த இடத்தை அனுமானித்து மொபைல் வெளிச்சத் துணையோடு மெதுவாக நடந்தான்.

அறைக்கு வெளியே புல்வெளி ஓரமாய் எதையோ இழுத்துப் போன தடம் தெரிந்தது.

மொபைல் வெளிச்சத்தில் உற்றுப் பார்க்க கருநிறத் திரவமாய் இரத்தத் துளிகள் புல்வெளி ஓரத்தில் பளபளத்தது.

கோதை சொன்ன மாதிரி அடுத்த கொலையா?

ஹரியும் ஹரிணியும் தான் செய்கிறார்களா?

ஆனால் அந்த உருவத்தின் உயர அகலம் அவர்களுக்குப் பொருந்தவில்லையே. அவன் யோசித்தபடி அந்தத் திசையை நோக்கி நகர முற்பட தலையில் ஏதோ பலமாகத் தாக்கியது.

அம்மா…ஆ…ஆ..

தொண்டையிலிருந்து எழுந்த அலறல் வெளியில் வருவதற்குள் அவன் சுயநினைவு கொஞ்சம் கொஞ்சமாய்ப் போக தரையில் சுருண்டு விழுந்தான்.




What’s your Reaction?
+1
8
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!