Serial Stories தீயினில் வளர்சோதியே

தீயினில் வளர்சோதியே-5

 5

சிந்து.

 

மும்பைலருந்து வந்ததிலிருந்து சிந்து ரெண்டு, மூணு நாள் விரக்தியா எதுவுமே பேசாம இருந்தா. எங்களோட பாசத்துலயும், கங்கா அக்காவோட அக்கறையான கவனிப்புலயும் கொஞ்சம் கொஞ்சமா இயல்புக்கு வந்தா. அப்பப்ப தன்னுடைய கடந்த கால வாழ்க்கையப் பத்தி எங்கிட்ட சொல்வா. அதை அவளோட சம்மதத்தின் பேருல உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன். ஏன்னா ஒவ்வொரு இளம்பெண்ணுக்கும் அது ஒரு எச்சரிக்கை தரும் வாழ்க்கைப் பாடம்.

சிந்து ஒரு வசதியான வீட்டுக்கு ஒரே பொண்ணு. ரொம்பச் செல்லமா வளந்த பொண்ணாம். மும்பைலயே பொறந்து வளந்ததால ரொம்ப ஃப்ரீயா வெளியில ஃப்ரெண்ட்ஸோட போக வர அவளைப் பெத்தவங்க தடை சொன்னதே இல்லையாம். ஆனா பாய் ஃப்ரெண்ட்ஸ்க்கு அனுமதி கிடையாதாம். ஸ்கூல் டேய்ஸ்லயே தன்னோட ஃப்ரென்ட்ஸ் பசங்களோட சுத்தறாங்க. நாம காலேஜ் ஃபைனல் இயர் வந்தும் கூட நமக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் இல்லையேன்னு ரொம்பவே ஃபீலிங்ல இருந்திருக்கா. அப்பதான் “ரிதீஷ்” னு ஒரு பையன், முதுகலையில முதல் வருஷம் படிக்கிறவனாம்,  கல்லூரி கலைவிழாவுல அறிமுகமாயிருக்கான். பாத்த உடனே கவனத்தை ஈர்க்கிற மாதிரி ரொம்பவே டீசண்டா பெரிய எடத்துப் பையனா தோற்றமளிச்சிருக்கான். சாக்லேட் பாய் போல இருந்திருக்கான். சிந்துவும் பேரழகி.பணக்காரி..!  பாத்ததும் ஒருத்தர் மேல ஒருத்தர் காதலாகிக் கசிந்துருகிட்டாங்க. வீட்ல ஏதாவது ஒரு பொய்யை சொல்லிட்டு அவனோட வெளியில சுத்திட்டு லேட்டாதான் வீட்டுக்கு வருவாளாம்.. வார இறுதி நாட்கள்ல அவனைப் பாக்க முடியாதுங்கறதால தவிச்சுப் போயிடுவாளாம்.

இப்படியே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா அவங்க காதல் வளந்துகிட்டிருக்க., ரிதீஷ் ஃபைனல் இயர்ங்கிறதால எக்ஸாமைக்  காரணம் சொல்லி சிந்துவை சந்திக்கிறதைத் தவிர்த்துகிட்டே இருந்திருக்கான்.

ஆனா சிந்துவுக்கு அவனைச் சந்திக்காத நாளெல்லாம் பிறவாத நாளாவே தோணீயிருக்கு.

உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லை….!
பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி
கோலக் கிளிமொழியும் செவியில்
குத்தலெடுத்ததடி…!

 


அப்படீன்னு, பாரதியார் பாடினது போல அவனோட பிரிவைத் தாங்கவே முடியாம போய் ஒரு நாள் அவனுக்குப் ஃபோன் பண்ணி இருக்கா.

“என்ன சிந்து..இப்படித் தொந்தரவு பண்றே! படிப்புல நான் முழு கவனம் செலுத்தணும்னுதானே உன்னை அவாய்ட் பண்றேன்..இதைக் கூட புரிஞ்சிக்க மாட்டியா..லூஸா நீ? நீயும் ஃபைனல் செமெஸ்டெர்க்கு நல்லா ப்ரிபேர் பண்ணு” ன்னு சத்தம் போட்டிருக்கான்.

இதை கேட்டதும் சிந்துவுக்கு கண்ணுல தண்ணி ரொம்பிப் போய்ட்டுதாம். சமாளிச்சுகிட்டு..

“சரி..எக்ஸாம் ஆரம்பிக்க இன்னும் ஒரு மாசமிருக்கில்ல. இந்த வீக் எண்ட்ல எங்கயாவது பிக்னிக் போயிட்டு வந்துடலாம். அதுக்கப்புறம் பரிச்சை முடியற வரைக்கும் உன்னைத் தொந்தரவு பண்ண மாட்டேன்”

“ப்ராமிஸ்”

“ப்ராமிஸ்”

அவ குரல்ல இருந்த அபரிமிதமான காதலும், அன்பும் ரிதீஷோட மனசை என்னவோ பண்ண..

“சரி சிந்து இந்த வீகெண்ட் எங்கயாவது ஹைகிங் போலாம்.”

“ஓ.கே ! லவ் யூ ரிதீஷ்!”

“மீ டூ டியர்”

“பை…”

“பை”

அந்த வார இறுதியில் சிந்துவோட விருப்பப்படி மும்பைக்குப் பக்கத்துல இருக்கற  மல்ஷேஜ் காட் போயிருக்காங்க. ரொம்ப அழகான, அமைதியான இடமாம்.மலையேற்றப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாம். இளம் காதலர்களுக்கு சொர்க்க பூமியாம். மலை ஏறி கொஞ்ச தூரம் போனவங்க,நெறய செல்ஃபி எடுத்துகிட்டு, ஆடிப்பாடிகிட்டு ரொம்ப சந்தோஷமா இருந்திருக்காங்க. கொஞ்சம் இருட்டாகவும் கெளம்பலாம்னு மலையிறங்க ஆரம்பிக்க, திடீர்னு புதர் மறைவுலருந்து நாலு தடியனுக வந்து இவங்கள சூழ்ந்துகிட்டிருக்காங்க.

“இத்தனை நேரம் இவனோட ஜாலியா ஆடிப் பாடினதை நாங்க பாத்துகிட்டுதான் இருந்தோம். எங்களோடவும் கொஞ்சம் நேரம் ஜாலியா இருந்தா உங்க ரெண்டு பேரையும் விட்டுடறோம். முரண்டு பிடிச்சா இதோ இங்கேருந்து ஒரே உருட்டுதான். ரெண்டு பேரும் மேலோகத்துல போய் டூயட் பாட வேண்டியதுதான்னு மிரட்டி இருக்காங்க. ரெண்டு பேர் ரிதீஷ் கைய  கெட்டியா பிடிச்சுகிட்டு, மறைவுக்கு இழுத்துட்டுப் போய் நல்லா அடிச்சுப் போட்டுட்டிருக்காங்க. ரெண்டுபேர் சிந்துவை சின்னாபின்னப் படுத்தியிருக்காங்க. அதுக்கப்புறம் மத்த ரெண்டு பேராம். இதை உங்ககிட்ட சொல்றதுக்கே என்னோட உடம்பு நடுங்குது. அந்த சித்திரவதைய அனுபவிச்ச சிந்துவோட நிலைமைய நெனச்சா…?

அதுக்கப்புறமா மயக்கத்துல இருந்த சிந்துவையும், ரிதீஷையும் மலை மேலருந்து தள்ளி விட்டுட்டு ஓடியிருக்காங்க.. சிந்து வீட்டுக்கு வராததால பயந்து போன அவளோட அப்பா போலீசுக்கு கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கார். அதே நேரம் சிந்துவோட ஹேண்ட்பேக் மலைப்பாதை ஓரத்துல விழுந்து கெடக்கறதை மலையிலருந்து இறங்கினவங்க பாத்திருக்காங்க. அதுலருந்த ஃபோன்ல இவங்க எடுத்துகிட்ட செல்ஃபியப் பாத்து, ஏதோ ஒரு காதல் ஜோடி ஹேண்ட்பேகைத் தவற விட்டுட்டாங்க போலனு நெனச்சு அதைக் கண்டெடுத்தவங்க போலீஸ்ல குடுத்திருக்காங்க.

அதுக்கப்புறமா நடந்த தொடர் விசாரணைல மலை மேல தேடி வந்த போலீஸ்,  சிந்து ஒரு மரக்கிளையில தொங்கியபடி உயிருக்கு ஊசலாடிகிட்டு இருந்ததைப் பார்த்து காப்பாத்தி ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்க..! ப்ச்.. ரிதீஷ்தான் பாவம்…!

சிந்து குணமடைஞ்சதும் கோர்ட்,கேஸ், விசாரணைனு நடந்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுற வரைக்கும் சிந்து பெண்கள் காப்பகத்துலதான் இருந்திருக்கா. பெத்தவங்களுக்குத்  தீராத அவமானத்தைத் தேடித் தந்துட்டமேங்கிற வேதனைலயும் அவமானத்துலயும் பெத்தவங்க மொகத்துலயே முழிக்கப் பிடிக்காம இருந்திருக்கா. அதோட, தன்னோட ஆருயிர்க் காதலன் ரிதீஷ் தன்னாலதானே இறந்தான்..அவனைப் பெத்தவங்களுக்கு ஏற்பட்ட புத்திரசோகத்துக்கும் தான்தானே காரணம்னு, குற்றவுணர்ச்சியில தற்கொலைக்குக் கூடத் துணிஞ்சிட்டாளாம்.

“இதுக்கெல்லாம் விதிதான் காரணம், நீ எங்களோட வீட்டுக்கு வா” ன்னு சிந்துவைப் பெத்தவங்கபலமுறை கெஞ்சிக் கூப்பிட்டும் போக மறுத்துட்டாளாம். ரிதீஷ் தன்னோட இருக்கற மாதிரியே நெனச்சுகிட்டு பேசிகிட்டே இருப்பாளாம். ரொம்பவே மன அழுத்தத்துலயே இருந்திருக்கா. இப்படியே இருந்தா அவளுக்குப் பைத்தியம் பிடிச்சிடும்..அர்தாவது பண்ணுங்க னு, சிந்துவோட அம்மா தங்க குடும்ப டாக்டர், வக்கீல் கிட்ட அழுதிருக்காங்க. டாக்டர் சிந்துவை வேற எங்கயாவது புது இடத்துக்குக் அழைச்சிட்டுப் போங்க..இடமாறுதல் மனமாறுதலுக்கு வழி வகுக்கலாம்னு சொல்லியிருக்காங்க. வக்கீல்லுக்கும் அதுதான் சரீன்னு தோண உடனே கங்கா அக்காவைப் பத்தி நினைவு வந்திருக்கு. அவங்க அக்காவுக்கு மொதல்லயே நல்லா பரிச்சயமானவங்களாம்

அக்கா கான்ஃபெரென்ஸ் போயிருந்தப்ப சிந்துவோட வக்கீலை சந்திச்சிருக்காங்க.

“சிந்துவைக் கொஞ்சநாள் உங்க அரவணைப்புல வெச்சு அவ மனசை மாத்தி, அவளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி, நடந்த தப்புக்கு அவ எந்த விதத்திலயும் பொறுப்பில்லைன்னு அவளை உணர வெச்சு, பெத்தவங்ககிட்ட சேக்கணும்” னு கேட்டுகிட்டாங்களாம் அதனால, சிந்துவை அக்கா கூட்டிகிட்டு வந்திருக்காங்க. சீக்கிரமா சிந்துவோட மனசு மாறி, அவ அவளைப் பெத்தவங்களோட போய் சேரணும் கடவுளே” னு வேண்டிகிட்டேன்.

அட..! இதென்ன அம்முவோட அழுகை சத்தம்! கோமதி அக்கா எங்கே போனாங்க? அம்முவைத் தூக்கிகிட்டு கோமதிக்கா..கோமதிக்கானு தேடிகிட்டே போனேன். அக்கா சமைச்சுகிட்டிருந்திருக்காங்க. குக்கர் சத்தத்துல குழந்தையோட அழுகைச் சத்தம் கேக்கலையாம். கோமதிக்கா ரொம்ப நல்லா சமைப்பாங்க. இன்னும் அவங்களப் பத்தி எந்த விஷயமும் அவங்க சொன்னதில்ல. பல தடவை கேட்டிருக்கேன்..வாயே திறக்க மாட்டாங்க. இன்னைக்கு சொல்ல வெச்சிட வேண்டியதுதான்.

“அக்கா..! இன்னைக்குக் கண்டிப்பா உங்களைப் பத்தி சொல்லியே ஆகணும். ஏதோ ஒரு வகையில நாம எல்லாம் வேற வேற ப்ரச்னைகள்ளருந்து கங்கா அக்காவால காப்பாத்தப்பட்டவங்கதான், இங்கிருக்கற நம்மளைத் தவிர மத்தவங்க அவங்க குடும்பத்தோட சேந்துட்டாங்க. நம்ம ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் மத்தவங்களுக்கு ஒரு பாடம். அதுக்காகத்தான் ஒரு விழிப்புணர்வு மத்தவங்களுக்கும் ஏற்படட்டுமேன்னுதான் கேக்கறேன்.”

அம்முவுக்கு சாதம் ஊட்டித் தூங்க வெச்சிட்டு கோமதி அக்கா தன்னோட கதை




What’s your Reaction?
+1
5
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!