Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-11

 11

வீட்டுக்கு வந்ததிலிருந்தே சந்தானபாண்டியன் எதுவும் பேசவில்லை. பேயறைந்தாற்போல் உறைந்து அமர்ந்திருந்தார். ஹரிதான் மீனாவிடம் நடந்ததையெல்லாம் சொல்ல வேண்டிருந்தது. ஹரிணி போலீஸுக்குத் தகவல் கொடுத்தாள்.

“ஏதோ கெட்ட காலத்திலும் ஒரு நல்ல காலம், இவருக்கு அம்மன் தரிசனம் கிடைச்சிருக்கு பாருங்க!” என்று மீனா கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

“அம்மன்! அம்மனுடைய தரிசனம் இப்படித்தான் இருக்குமா? மனசுக்குள் ஒரு திகிலும் பயமும் தோணுமா? அவ ஆயிரங்கை பத்ரகாளியா காட்சி தந்தா கூட, மனதில் ஒரு அன்பும் நெகிழ்ச்சியும்தானே தோணணும்?” தனக்குத்தானே பேசிக் கொள்பவனைப் போல் சொன்னான் ஹரி.

“நீங்க ஏதாவது தப்பு செய்தீங்களான்னு யோசிச்சுப் பாருங்க தம்பி! நல்லவங்களுக்குத்தான் அவ அம்மன், கெட்டவங்களுக்கு எமன்!” என்றான் வெளியே வந்த முத்துவேல்.

அடச் சே! இவன் வேறு குறுக்கக் குறுக்க!

“சரியா சொன்னே முத்துவேல்! எனக்குத் தோணினதும் அதேதான்! இனி நான் தப்புச் செய்ய மாட்டேன்! செய்யவே மாட்டேன்!” என்று ஆவேசம் வந்தவர்போல் சொன்னார் சந்தானபாண்டியன்.

“இனிமேல் கதை இருக்கட்டும் சார், இதுக்கு முன்னால் என்ன தப்புப் பண்ணினீங்க? ஏன் அம்மன் உங்களைப் பயமுறுத்தணும்?” என்று கேட்டாள் ஹரிணி.

“அ… அது…” சந்தானபாண்டியன் வெட்கித் தலையைத் தாழ்த்திக் கொண்டார். “வனமோகினி… அந்தப் பெண்ணைப் பிடிச்சு வரச் சொன்னேனே, அது… தப்பு தானே?” என்றார் தடுமாறி.

அவர் எதற்காக வனமோகினியைப் பிடித்துவரச் சொல்லியிருக்க வேண்டும் என்பது இப்போது எல்லோருக்கும் தெளிவாகிவிட்டது. மீனா தலையில் அடித்துக் கொண்டதும் அதை உறுதிப்படுத்தியது.

“அது இருக்கட்டும் சார், உங்களைக் கூட்டிப் போனது மணி தானா?” என்று கேட்டு அவர் ஒப்புக்கொண்டதும், மணி முதல்நாள் காலையிலேயே இறந்துவிட்டதாகச் செய்தி வந்ததை மெதுவாக, யாரும் பயப்படா வண்ணம் மென்மையாக விளக்கினாள் ஹரிணி. என்றாலும் சந்தானபாண்டியன் பெரிதாக அதிர்ச்சியடைந்தார்.

“அது… தெய்வீகப் பொண்ணா இருக்கணும்…” என்று முணுமுணுத்தார் சந்தானபாண்டியன். “என்னைப் பழிவாங்கத்தான் மணியோட ஆவியை வெச்சு என்னை இழுத்திருக்கு. அம்மனும் நீயும்தான் என்னைக் காப்பாத்தினீங்க! தாயே, நீயும் எனக்கு அம்மன் தான்!” என்று ஹரிணியைக் கையெடுத்துக் கும்பிட்டார் சந்தான பாண்டியன்.

“அந்தப் பெண் ஏதோ அமானுஷ்யம். அதில் எனக்கும் சந்தேகமே இல்லை” என்றார் எழில்மாறன். இவர் எப்போது ஹாலுக்கு வந்தார்?

“உங்களுக்கு இதைப் பற்றி என்ன தெரியும் சார்?” ஹரி ஆர்வமாகக் கேட்டான்.

எழில்மாறன் பெரிய கதை சொல்லப் போகிறவரைப் போன்று சோபாவில் அமர்ந்தார். அதற்குள் சந்தானபாண்டியனை அழைத்துக் கொண்டு மீனா அவர்கள் அறைக்குப் போய்விட்டாள்.




*****

எழில்மாறன் தான் அரண்மனைக்கு வந்த அன்று கேட்ட வெற்றிச் செல்வன்-அமுதவல்லி கதையை ஏற்ற இறக்கங்களுடன் தெரிவித்தார். நடுநடுவே முத்துவேலும் அவரோடு சேர்ந்துகொண்டான்.

முடிவில் தான் அன்று பார்த்த பெண்ணைப் பற்றியும் சொன்னார். “அவ… முத்துவேலோட கண்ணுக்குத் தெரியலை. அம்மன் தான் எனக்குக் காட்சி கொடுத்ததா முத்துவேல் சொன்னான். ஆனா எனக்கு அப்படித் தோணலை. அவ இந்த வீட்டில் இருக்கறவங்க பார்த்த வனமோகினியாதான் இருக்கணும்.”

கவனமாகக் கேட்டுக் கொண்டுவந்த ஹரி “இந்த அரண்மனைக்கு இப்படி ஒரு வரலாறு இருக்கா? நீங்க இப்போ என்ன சொல்ல வரீங்க, சார்? அந்த அமுதவல்லிதான் வனமோகினியா காட்டில் அலையறான்னு சொல்றீங்களா? அப்படி இருந்தா, அவ இந்த அரண்மனையை இல்ல ஹாண்ட் பண்ணுவா?” என்று கேட்டான்.

“அந்த அளவுக்கெல்லாம் எனக்கு அமானுஷ்ய விஷயங்கள் பரிச்சயமில்லை சார்! என் மனதில் பட்டதைச் சொன்னேன், அவ்வளவுதான்!” என்றார் எழில்மாறன்.

“அவர் சொன்னதில் விசயம் இருக்குங்க! அமுதவல்லிக்கு இந்த அரண்மனையில் என்ன பிடிப்பு இருக்கமுடியும், சொல்லுங்க? அவ உயிரோடு இருக்கும்போதே காடு முளுக்கச் சுற்றித் திரிவான்னு சொல்லுவாங்க! அவ எதிரிகள் இருந்த வீட்டில் அவளைக் கட்டி அடக்கிட்டாங்க, அதான் அவ இப்போ வீரியமா புறப்பட்டிருக்கா” என்றான் முத்துவேல்.

ஹரி அவனைத் திரும்பிப் பார்த்தான். “ஹரிணி! முத்துவேலைப் பற்றித் தெரியுமா உனக்கு? அவனுக்குத் தெரியாத விஷயமே இந்த மஞ்சள் காட்டில் கிடையாது! ஆனா பேசும்போது மட்டும் மாறிமாறிப் பேசறது! இந்தப் பழக்கம் ரொம்பத் தப்பு, தலைவரே!” என்றான் முத்துவேலிடமிருந்து சற்றும் பார்வையை விலக்காமல்.

“இப்ப்போ என்ன சொல்ல வரீங்க?” என்றான் முத்துவேல் ரோஷமாய்.

“இந்த ஆறாங்கட்டில் அடக்கப்பட்டது உக்கிரரூபமான அம்மன்னு சொன்னே! இப்போ நீயே அமுதவல்லி அடக்கப்பட்டான்னு சொல்றே! தெளிவா சொல்லுங்க தலைவரே, இங்கே ஆறாங்கட்டில் இருந்தது அம்மனா, அமுதவல்லியோட ஆத்மாவா?” ஹரி கிடுக்கிப்பிடியாய்க் கேட்க, முத்துவேல் தடுமாறினான். “எனக்கு எப்படிங்க தெரியும்? அம்மனோட உக்கிரத்தைக் கட்டிவெச்சதா தான் அரமணை வீட்டுச் சொந்தக்காரங்க சொன்னாங்க. நாங்களும் அதை நம்பிட்டிருந்தோம். இப்போ ஐயா சொன்னதைக் கேட்டா அது அமுதவல்லியோன்னு தோணுது” என்றான்.

“சரி, நீ உண்மையைச் சொல்லப் போறதில்லை” என்ற ஹரி “இப்போ இங்கே இருக்கறது அம்மனா, ஆவியான்னு நான் சொல்றேன்” என்றான்.

“எப்படி?” என்று வியப்புடன் கேட்டார் எழில்மாறன்.

“இன்னும் அரைமணி நேரத்தில் இங்கே ஒரு பூஜை போடப் போறேன்” என்றான் ஹரி.

*****

அந்த அரைமணி நேரத்திற்குள் ஹரி பூஜை செய்யப் போகிறான் என்ற விஷயம் அரண்மனையில் இருந்த அத்தனை கட்டுகளுக்கும் பரவி எல்லோருமே ஹாலில் கூடிவிட்டார்கள்.

‘இவன் ஆர்க்கிடெக்ட்தானே, என்ன பூஜை பண்ணப் போறான்?’ என்று யோசித்தாள் கோதை.

‘என்னவோ புது ட்ராமாவைக் கிளப்பிவிட்டிருக்காங்க?’ என்று எண்ணினான் க்ருபா.

‘இவங்க நாஸ்திகருங்க இல்லையா?’ – குழம்பினார் சந்தானபாண்டியன்.

‘கடவுளாம் ஆவியாம்! சுத்த பேத்தல். டைம் வேஸ்ட்’ என்று எரிச்சல்பட்டார் புரொபஸர்.

‘என்ன டிடெக்டிவ்ஸ் இவங்க? சைண்ட்டிஃபிக்கா ஒரு பிரச்சனையை அணுகத் தெரியாத இவங்களை எம்ப்ளாய் பண்ணினது என் தப்பு’ என்று வருந்தினான் ஆதித்யா.

சரியாக அரைமணி நேரம் கழித்து உள்ளே நுழைந்தான் ஹரி. கூடவே ஹரிணியும். குளித்து உடைமாற்றியிருப்பார்கள் போலும். கருப்பு நிறத்தில் இருந்தன என்பதைத் தவிர உடைகளின் பாணியில் ஒன்றும் மாற்றமில்லை. ஹரி பேண்ட், சர்ட். ஹரிணி சூரிதார்.

ஹாலோடு ஒட்டியிருந்த பூஜையறைக் கதவைத் திறந்து விளக்கேற்றினாள் ஹரிணி. அங்கு ஒரு மாடத்தின்மீது தான் கொண்டுவந்திருந்த சிறிய துர்க்கை படத்தை வைத்து வணங்கினான் ஹரி. பிறகு வெளியே சென்று அங்கிருந்த ஜன்னல்களைத் திறந்துவிட்டான்.

பூஜையறையில் தேடி, பழுப்பேறிப் போயிருந்த ஒரு பித்தளைத் தட்டை எடுத்துத் துடைத்து, ஹால் டீப்பாயின்மீது வைத்தான். ஒரு கவரிலிருந்து ஏதோ தூளை அதில் நிரப்பினாள் ஹரிணி.




“ப்பூ! விபூதி! இதை வெச்சுட்டு என்ன கிழிக்கப் போறாங்க? பூஜைன்னாங்க, அர்ச்சனைக்குப் பூ கூட இல்லை. என்ன பூஜையோ? இந்தக் காலச் சின்னஞ்சிறிசுகளுக்கு வழிபாடு எப்படிப் பண்ணணும்னுகூடத் தெரியாது! இதிலே இங்கே என்ன இருக்குன்னு இவங்க கண்டுபிடிக்கப் போறாங்களாம்” என்று மீனா ஆதித்யாவின் அம்மாவிடம் கிசுகிசுத்தாள்.  

“சரியா சொன்னீங்க! தெய்வபக்தியே குறைஞ்சுட்டு வருதேம்மா, அப்புறம்தான் வழிபாட்டு முறைகளைப் பற்றிப் பேச” என்று பதிலளித்தாள் அவள்.

ஹரி அந்த டீப்பாய்க்கு எதிரில் அமர்ந்து ஏதோ மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தான். எல்லோரும் அவனைக் கிண்டலாகப் பார்த்தார்கள்.

ஹரிணி அவர்களை ஏறிட்டாள். “எல்லோரும் இந்த விபூதியையே பார்த்துட்டிருங்க. இது நிறம் மாறிக் குங்குமமா மாறிச்சுன்னா, இங்கே இருக்கிறது அம்மன். இல்லேன்னா ஆவி! ஒரு இடத்தில் இருக்கறது தெய்வ சக்தியா, துஷ்ட சக்தியான்னு தெரிஞ்சுக்க நாங்க இந்த டெஸ்ட்டைப் பயன்படுத்துவோம். தயவுசெய்து எல்லோரும் அமைதியா இருக்கணும்னு கேட்டுக்கறேன்” என்றாள் பணிவாக.

‘ஆமா, மாறும்! வேற வேலையில்லை! இங்கே தெய்வ சக்தி ஒண்ணும் இல்லேன்னு எல்லாரையும் கன்வின்ஸ் பண்ண இப்படிப் பண்ணறாங்க போலிருக்கு. அது சரி, இங்கே இருக்கறதில் பாதிக்குப் பாதி கிழங்கள் தானே! அதுங்க இதையெல்லாம் நம்பிடும். நமக்கு நல்லதுதான். இவங்களைப் போய்ச் சந்தேகப்பட்டேனே’ என்று ஆதித்யா சந்தோஷமாக எண்ணமிட்டான்.

ஹரியின் ஜபம் தொடர்ந்தது. எல்லோரும் மௌனமாக நின்றார்கள். பதினைந்து நிமிடங்கள் ஓடின. ‘இன்னும் எவ்வளவு நேரம் இப்படி நிற்கணும்’ எண்று எல்லோரும் எரிச்சல்பட்டார்கள்.

ஹாலின் ஜன்னல்கள் வழியே காற்று குமுகுமுத்துக் கொண்டு புகுந்தது. திரைகள் சுழன்று சுழன்று பேயாட்டம் ஆடின. ஹாலில் வைத்திருந்த சிறிய பொருட்கள் எல்லாம் கீழே விழுந்தன. மாட்டியிருந்த படங்கள் ‘சரக், சரக்’ என்ற சப்தத்தோடு அசைந்தாடின. எல்லோருக்குள்ளும் பீதி ஒரு குளிராக உட்புகுந்து ஓடியது.

“அதோ! அங்கே… தட்டைப் பாருங்க” என்று திடீரென்று கூக்குரலிட்டாள் மீனா.

ஆம், தட்டிலிருந்த விபூதி சிவப்பாக மாறியிருந்தது.

‘இது என்ன ட்ரிக்?’ என்று ஆதித்யா யோசித்தான்.

ஹரி மெதுவாகக் கண்னைத் திறந்தான். “ஹரி! இங்கே இருக்கறது அம்மன் தான்ப்பா! அம்மனே தான்” என்று சந்தானபாண்டியன் ஓலமிட்டார். அவரும் மீனா முதலியவர்களும் கன்னத்தில் அடித்துக் கொண்டார்கள்.

ஹரி தட்டை உற்றுப் பார்த்தான். மின்சாரம் தாக்கினாற்போல் அதிர்ந்தான். “எல்லோரும் கிட்டே வந்து பாருங்க” என்றான்.

என்னாயிற்று என்ற குழப்ப முகபாவங்களுடன் அவனைச் சூழ்ந்தார்கள். தட்டைக் குனிந்து பார்த்தார்கள்.

திருநீறு சிவப்பாக மாறியிருந்ததென்னவோ உண்மை. ஆனால் அது குங்குமமாக மாறியிருக்கவில்லை.

“ரத்தம்!” என்று அலறினான் முத்துவேல்.

ஆம், ரத்தம் கலந்து விபூதியைச் சிவப்புச் சேறாக ஆக்கியிருந்தது.

*****

“அப்படின்னா, இங்கே இருக்கறது ஆவியா?” என்று கேட்டார் எழில்மாறன், ஹரியும் ஹரிணியும் ஹாலைவிட்டு ஆறாங்கட்டுக்குப் போனதும்.

“மண்ணாங்கட்டி! இதெல்லாம் சுத்த ஹம்பக்! நம்மை விரட்ட யாரோ முயற்சி செய்யறாங்க” என்றான் கிருபா.

“அதெப்படிச் சொல்ல முடியும்? எப்படிக் காற்றடிச்சது பார்த்தீங்கள்ள?” என்றாள் கோதை. பயந்து போயிருந்தாள் என்று தெரிந்தது.

“டாமிட்! இதைவிடப் பிரமாதமான ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் எல்லாம் இந்தக் காலத்தில் பண்ண முடியும்! இந்த ஆர்க்கிடெக்டுங்க யாரோ எவரோ? என்ன உள்நோக்கத்தோட இப்படியெல்லாம் பண்றாங்களோ? நாம என்னத்தைக் கண்ட்டோம்? ஆனா ஒண்ணு சொல்றேன் கோதை, இங்கே உண்மையிலேயே ஆவி இருந்ததுன்னா கூட, என் ஆராய்ச்சியை முடிக்காம நான் இங்கேர்ந்து கிளம்பப் போறதில்லை! இந்த போலீஸ், மற்றவங்க எல்லோரும் பண்ணின கலாட்டால நம்ம வேலை கெட்டுப் போச்சு! நாலை காலையிலிருந்து நான் மறுபடி ஸ்பெஸிமன் கலெக்ட் பண்ணப் போறேன். தைரியம் இருக்கறவங்க என்னோட வரலாம்!” – கோபமாக உரைத்தான் க்ருபா.

“வெல் ஸெட் தம்பி! இப்படித்தான் இருக்கணும். மூட நம்பிக்கைகளைக் காலால் உதைக்கணும்” என்றார் புரொபஸர். “நானும் நாளையிலிருந்து என் வேலையைத் தொடங்கப் போறேன். இருக்கட்டும், இந்த ஆர்க்கிடெக்ட்ஸ் யாரா இருப்பாங்கன்னு நினைக்கறே?” என்றார்.

“நிச்சயமா ஆர்க்கிடெக்ட்ஸ் இல்லை, அதைமட்டும் சொல்ல முடியும்” என்றான் க்ருபா.

“எக்ஸ்க்யூஸ் மீ” என்று குரல் கேட்டது. எல்லோரும் நிமிர்ந்தார்கள். ஆனந்தனின் மரணத்தைத் துப்புத் துலக்க வந்திருந்த இன்ஸ்பெக்டர் திரும்ப வந்திருந்தார்.

“என்ன சார் விஷயம்? புதுசா ஏதாவது தெரிய வந்திருக்கா?” என்றான் ஆதித்யா, எழுந்தவாறே.

“அந்த ஆனந்தன் தேனீக்களால் தாக்கப்பட்டிருக்கார், ஆனா விஷத்தால் உயிரைவிட்டதா தெரிஞ்சிருக்கு சார். ஆனா நான் வந்தது வேற விஷயம்” என்றார் இன்ஸ்பெக்டர். “பாளை சென்ட்ரல் ஜெயிலிலிருந்து தப்பிச்ச கைதி – பத்ரின்னு ஒருத்தன் – இங்கே மஞ்சள் காட்டில் ஒளிஞ்சிருக்கறதா எங்களுக்குத் தகவல் வந்திருக்கு. நாங்க காட்டை வலை போட்டுத் தேடிட்டோம். அப்போ அங்கே இருந்த பொண்ணு ஒருத்தி ‘இங்கே ஏன் தேடறீங்க? அவன் அரண்மனையில் மறைஞ்சிருக்கான். முடிஞ்சா போய்ப் பிடிச்சுக்கோங்க’ன்னு சொன்னா…”

எல்லோரும் மெய்சிலிர்த்தது.

இது என்ன புதுக் குழப்பம்?

அவர்கள் பதிலுக்காகக் காத்திராமல் இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிள்களை ஏவினார். அவர்கள் அரண்மனையைத் தலைகீழாகப் புரட்டினார்கள். ஹரியையும் ஹரிணியையும் வெளியே வரச் சொல்லி ஆறாங்கட்டையும் சலித்தார்கள்.

பலன் பூஜ்யம். வேறு யாரும் அங்கே இருக்கவில்லை என்பதைவிட, இருப்பதற்கான அறிகுறி கூடத் தெரியவில்லை.

“சாரி சார். நாங்க க்ரவுண்ட்ஸையும் தேடிட்டு, அடிவாரம் பக்கம் பார்க்கறோம். சாரி ஃபார் த ட்ரபிள்” என்றார் இன்ஸ்பெக்டர்.

“பரவாயில்லை இன்ஸ்பெக்டர். அந்தக் கைதி பேரென்ன சொன்னீங்க?” என்று கேட்டான் ஆதித்யா.

“பத்ரி, சார். சின்ன வயசுதான். பார்க்க பெரிய கார்ப்பரேட் எம்ப்ளாயி மாதிரி இருப்பான் – டீசண்ட்டா, டிக்னிஃபைடா தெரிவான். ஆனா விஷப் பாம்பு மாதிரி. ரொம்ப ஆபத்தானவன். எதுக்கும் நீங்க எல்லோரும் எச்சரிக்கையாகவே இருங்க. அவன் எப்போதும் ஒரு பெண்ணோடு சேர்ந்துதான் தன் ஆபரேஷன்களில் ஈடுபடுவான்னு சொல்வாங்க. ஆனா அவ போலீசில் மாட்டவே இல்லை. ஸோ, சந்தேகப்படும்படியா யாராவது புது ஆசாமிங்க, ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி, உள்ளே அனுமதிக்காதீங்க. உடனே எங்களுக்குத் தகவல் கொடுங்க” என்று எச்சரித்துவிட்டு இன்ஸ்பெக்டர் போய்விட்டார்.

எல்லோருடைய பார்வைகளும் ஹரி, ஹரிணியின்மீது விழுந்து துழாவ, அவர்கள் பதட்டமேயில்லாமல் அந்தப் பார்வைகளைச் சந்தித்தார்கள்.




What’s your Reaction?
+1
10
+1
6
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!