Serial Stories தீயினில் வளர்சோதியே

தீயினில் வளர்சோதியே-4

 4

பொன்னி.

 என்னோட கடந்த காலத்தை நினைச்சா எனக்கே என்னைப் பிடிக்கலை. ஒரு சினிமாப் படமாட்டம் மடமடன்னு என்னென்னவோ நடந்து போச்சு என் வாழ்க்கையிலே.

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட சொக்கம்பட்டிதான் எங்க கிராமம். நான் கைக்குழந்தையா இருக்கறப்பவே எங்கம்மா இறந்துட்டாங்க. அம்மையும் அப்பனுமா எங்கப்பாருதான் என்னைக் கண்ணுக்கு கண்ணா வளத்தாரு. இப்பல்லாம் ஒரு பொண்ணு கணவனை விட்டுப் பிரிஞ்சு சிங்கிள் பேரன்டா குழந்தைய வளர்க்கிறாங்கற விஷயம் ரொம்ப சாதாரணமா இருக்கு. ஆனா  ஒரு ஆண் மனைவிய இழந்து தன்னோட குழந்தைய வளக்கறது அவ்வளவு பெரிசா வெளியில தெரியறதில்ல. அதுவும் ஒரு பெண் குழந்தையை தனியாளாக வளத்து ஆளாக்கறது ஒரு தகப்பனுக்கு எத்தனை கஷ்டம் தெரியுமா?

எங்கப்பாரு ஒண்ணும் வசதியானவரில்ல. எங்க ஊர்ல முக்கியமான தொழிலே தீப்பெட்டி தொழிற்சாலைகளும்,பட்டாசு தொழிற்சாலைகளும்தானே. அதுல ஒரு தொழிற்சாலைல தினக்கூலி யா சேந்தவரு படிப்படியா முன்னேறி சூப்பர்வைசர் தகுதிக்கு ஒசந்தாரு.

அவுரு வேலை பாக்குற எடத்துல எஞ்சோட்டுப்புள்ளைங்களும் வேலைக்கு வருவாங்க. அதப் பாத்துட்டு வந்து சிலேட்டும் பலப்பமும் இருக்க வேண்டிய  கையில கந்தகமும், பாஸ்பரசும் இருக்குதுன்னு

எங்கிட்ட சொல்லி வேதனைப் படுவாரு. என்னையும் தீப்பெட்டி தொழிற்சாலைல சேத்து விடச் சொல்லி அக்கம்பக்கத்துல அம்புட்டு சனங்களும் எங்கப்பாவ உசுப்பி விட்டாங்க. ம்ஹும் மாட்டவே மாட்டேனுட்டாருல்ல.

“எம்மவள நாலெழுத்து படிக்க வெச்சு அழகு பாக்கணும்”

னுட்டாரு.

“ஆமாமா உம்பொண்ணு படிச்சு கலெக்டராகப் போறாளாக்கும்”னு

எல்லோரும் நக்கலடிச்சாங்க. எதையும் கண்டுக்காம என்னை உள்ளூர் பள்ளிக்கூடத்துல சேத்து படிக்க வெச்சாரு. நானும் நல்லாவே படிச்சு பத்தாவதுல நானூறு மார்க் வாங்கினேன். டவுன் பள்ளிக்கூடத்துல ஹாஸ்டல்ல ப்ளஸ் டூ சேரப் போறேங்கறதால எங்கப்பாருகிட்ட சொல்லி ஒரு  ஃபோன் வாங்கிகிட்டேன். பட்டன் ஃபோன்தான்.




ஹாஸ்டல்ல கொண்டு வந்து சேத்துட்டு எங்கப்பாரு சொன்ன அறிவுரை, அறவுரை அத்தனைக்கும் நல்ல பொண்ணா பூம்பூம் மாடு போலத் தலையாட்டிகிட்டிருந்த என்னை, திமிர் பிடிச்ச ஒரு குதிரையா மாத்துனதே என்னோட ரூம் மேட் ஜோதிதான். அவ பொறந்ததுலருந்தே டவுனுதான். அவளுக்குத் தெரியாத விஷயமே கெடையாது.

சினிமா, க்ரிக்கெட், அரசியல்னு மட்டுமில்லாம இந்த வயசுக்குத் தேவையில்லாத விஷயங்களையும் பேசி என்னைத் தர்மசங்கடப் படுத்துவாள். போதாக்குறைக்கு ஆண் நண்பர்கள் வேற அவளுக்கு அடிக்கடி ஃபோன் பண்ணுவாங்க.

“எப்பிடிடீ நீ இத்தனை விசயமெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கேன்”னு நான் ஆச்சர்யமா..கேட்டா…எல்லாம்  செல்ஃபோன்லருந்துதான்னு சொல்வா.

“எங்கிட்டயும்தான் செல்ஃபோன் இருக்கு” ன்னு நான் காமிக்க சிரிச்சா பாருங்க ஒரு சிரிப்பு..!

“ஏய்..இது செல்ஃபோனா..இல்ல உங்க ஊர்ல உருவாகுற தீப்பெட்டியா” ன்னு கிண்டல் பண்ணிகிட்டே தன்னோட செல்ஃபோனைக் காமிச்சா அம்மாடியோ! ஒரு செங்கல் கணக்கா அம்மாம் பெரிசு!

“எப்பிடிடீ உங்க வீட்ல இத்தன காஸ்ட்லியா ஃபோன் வாங்கிக் குடுத்தாங்?” கன்னு நான் ஆச்சர்யமாக் கேக்க

“ஆஹா நல்லா வாங்கிக் குடுப்பாங்களே..இது என்னோட ஃப்ரெண்டோடது..அவன் புது ஃபோன் வாங்கிட்டு எனக்கு இதைக் குடுத்துட்டான்”

ஹாஸ்டல்ல வார்டனுக்குத் தெரியாம அவ செல்ஃபோன்ல ஃப்ரெண்ட்ஸோட சாட் பண்றதப் பாத்தா  எனக்குப் பயத்துல உடம்பெல்லாம் நடுங்கும்.

“ஏய்..ஜோதி..மாட்டிக்காதடி..அப்புறம் படிப்பு வீணாப் போயிடும்”னு அவளை எச்சரிப்பேன்.

ஆனா அவளோ

“போடி இவளே! எதுக்கெடுத்தாலும் பயந்து சாகுற ! வாழ்க்கைண்னா அதுல  ஒரு த்ரில் வேணும்டி..எப்பப் பாத்தாலும், வீடு படிப்புன்னு பேசிப் பேசி போரடிக்காதே.. வா உனக்கும் என்னோட ஃப்ரெண்ட்ஸை அறிமுகப் படுத்தி வெக்கிறேன். நீயும் அவங்களோட ஜாலியாப் பேசிப் பழகு. காசா,பணமா?”

ஆரம்பத்துல இந்த விஷயத்துல இருந்து ஒதுங்கியே இருந்த நான் போகப் போக ஜோதியோட ஐக்கியமாகிட்டேன். அவ ஃப்ரெண்ட்ஸ்னு சொன்னவங்க எல்லாமே பாய் ஃப்ரெண்ட்ஸ்தான். அவங்களோட சிரிக்க சிரிக்க சாட் பண்றதுல உண்மையாவே இந்த உலகமே புதுசாத் தெரிஞ்சுது. வெளி ஆண்களோட அதிகமா பேசி பழகாத எனக்கு இந்த அனுபவம் ஒரு பரவசத்தைக் குடுத்துது.

“காலாண்டு விடுமுறைல ஊருக்குப் போன நான் அப்பாருகிட்ட எனக்கு வேற ஸ்மார்ட் ஃபோன் வாங்கிக் குடுங்க” னு அடம் புடிச்சேன்.

“என்னடா குட்டிமா..புதுசா இருக்கே! நீ இப்படி எல்லாம் அடம் புடிக்கற ஆளில்லையே..! இப்போ கைல துட்டு இல்லையேடா”ன்னு அப்பாரு என்னை பரிதாபமாப் பாத்தாரு. அவரோட இயலாமை எனக்குத் தெரிஞ்சதுதான்.

எப்பவும் இப்பிடி அப்பாவப் பாத்தா எனக்குப் பாவமா இருக்கும். ஆனா இந்த தடவ எனக்கு அவர் மேல கோவம்தான் வந்துச்சு. எப்ப பாத்தாலும் எம்பொண்ணை செல்லமா வளக்கிறேன்னு வாயால வடை சுட்டா சரியாப் போயிடுமா? இது வரைக்கும் நானா ஆசப் பட்டு அவர்கிட்ட எதுவும் கேட்டதில்ல.. அவுரு எத வாங்கி குடுத்தாலும் சந்தோசமா வாங்கிக்குவேன். மொத தடவையா ஃபோன் கேட்டும் வாங்கித் தரலன்னதும் எனக்கு ச்சே..என்னடா வாழ்க்கை இதுன்னு ஆகிப் போச்சு.. வீட்டுக்கு வந்ததுலருந்து ஃப்ரெண்ட்ஸோட சாட் பண்ண முடியலங்கறதுல எனக்கு ஒரே படபடப்பா வேற இருந்துச்சு. எப்படா லீவு முடிஞ்சு ஹாஸ்டலுக்குப் போவோம்னு தினமும் கேலண்டரையே பாத்துகிட்டு இருந்தேன்.




அப்பாடா…ஒரு வழியா லீவு முடிஞ்சு ஹாஸ்டலுக்குப் போனதும் காத்திருந்தது எனக்கொரு இன்ப அதிர்ச்சி. ஊர்லருந்து எனக்கு முன்னாலயே வந்திருந்த ஜோதி..

“இந்தாடி தினேஷ் உனக்கொரு கிஃப்ட் குடுத்தனுப்பி இருக்கா”னு குடுத்தா..?

“கிஃப்ட்டா..?”

நான் வாயைப் பொளந்துகிட்டு கேக்க..

“எதுக்குடீ இப்பிடி ஒரு ரீயாக்ஷன்”னு ஜோதி என்னப் பாத்து கிண்டலடிச்சா!

“இதுவரைக்கும் யாரும் எனக்கு இப்ப்டி கிஃப்ட் குடுத்ததில்ல எனக்கு அப்பிடியே வானத்துல பறக்குற மாதிரி இருக்கு ஜோதி!”

“கிஃப்ட்டைப் பிரிச்சுப் பாரு..மெய்யாலுமே வானத்துல பறப்பே !”

பரபன்னு பிரிச்சுப் பாத்த என்னைப் பாத்துக் கண்ணடிச்சுது ஒரு ஸ்மார்ட் ஃபோன்.. கூடவே. நான் டி.வி. விளம்பரங்களில் மட்டுமே பாத்திருந்த ஒரு பெரிய பார் சாக்லேட்டும்..!

சந்தோஷத்துல என்னையும் மீறி நான் அழுதுட்டேன்.

“சீ..சீ இப்போ எதுக்கு அழுவுற?”

“நான் இது வரைக்கும் பாத்தே இருக்காத தினேஷுக்குத்தான் எம்மேல எத்தனை அன்பு! இத்தன காஸ்ட்லியான ஃபோனை வாங்கிக் குடுத்திருக்கான்” னு நெக்குருகினேன்.

“நீதான் அவனைப் பாத்ததில்ல..அவன் உன்னைப் பாத்திருக்கானே..! நண்பர்களுக்குள்ளே இந்த மாதிரி பரிசுகள் ஈதலும், பெறுதலும் சகஜம்தானே?”

“நிஜம்மா என்னைப் பாத்திருக்கானா..எப்போ?”

“நீ  ஊருக்குப் போறப்ப பஸ் ஸ்டேண்டல வெச்சு நான்தான் உன்னை அவனுக்குக் காட்டினேன். நாங்க ரெண்டு பேரும் ஒரே ஊர்க்காரங்கதானே..ஒண்ணாத்தான் ஊருக்குப் போனோம்.”

“அட..எனக்கும் நீ தினேஷை அறிமுகப்படுத்தி இருக்கலாமே..!”

“இருக்கலாம்தான்..நீ என்ன சொல்லுவியோன்னு பயந்துதான் நான்

பேசாம இருந்துட்டேன்.”

“ஓ..அப்பிடியா..! சரி நான் தினேஷுக்கு நன்றி சொல்லணுமே…

அதுவுமில்லாம..” என் குரலில் சுதி இறங்கியது.

“ம்ம்..சொல்லு ஏன் நிறுத்திட்டே!”

“என்னால தினேஷுக்கு எதுவும் பரிசு தர முடியாதே. எங்கப்பாரு எனக்கு கைல அதிகமா பணம் தர மாட்டாரு. வார்டனுக்குத்தான் அனுப்பி வைப்பாரு. அவங்ககிட்ட காரணம் சொல்லி பணம் வாங்கறதுக்குள்ள போதும்..போதும்னு ஆயிடும். அப்புறம் வாங்கின பொருளைக் காட்டணும்..அதுக்குண்டான பில்லையும் காட்டணும்..ஷ்..ஸ்ப்பா..! இப்பவே கண்ணைக் கட்டுதே..!

இந்தாடி..இதை நீ தினேஷ்கிட்டவே திருப்பிக் குடுத்துடு. என்னால பதிலுக்கு அவனுக்கு ஒண்ணும் தர முடியாது.. அப்புறம் அவன் என்னப் பத்தி என்ன நினைப்பான்.?!”

“ஒண்ணும் நினைக்க மாட்டான்..உன்னைப் பத்தி அவனுக்கு நான் சொல்லி இருக்கேன். அதனால நீ இந்த மொபைல்லயே அவனுக்கு தேங்க்ஸ் சொல்லி மெசேஜ் போட்டுரு.”

“ம்ம்..செரி..என்னோட சிம் கார்டை இதுக்கு மாத்தணுமே!”..நான் பரபரத்தேன்.

“ஒண்ணும் தேவை இல்ல. அவனே புது சிம் போட்டு ஃபோனை ஆக்டிவா செஞ்சு வெச்சிட்டான். உன்னோட தீப்பெட்டி ஃபோனை உங்கப்பாருகிட்ட பேச மட்டும் வெச்சுக்க. நம்ம ஃப்ரெண்ட்ஸோட சாட் பண்ண புது ஃபோனை   வெச்சிக்க. உனக்கு மாசாமாசம் தினேஷே ரீசார்ஜும் செஞ்சுடறேன்னு சொன்னான்.”

அய்யோடா…முன்பின் தெரியாத எங்கிட்ட எப்பிடி இத்தனை பாசம்? எத்தனை முன்னேற்பாடு? தினேஷ் மேல எனக்கு ஒரு மரியாதை கலந்த அன்பு ஏற்பட்டுது.

எப்போ அந்த ஃபோன் எங்கைக்கு வந்துதோ அப்பவே எனக்கு கெட்ட நேரம் ஆரம்பிச்சிருச்சுங்கறது எனக்குத் தெரியாம போயிடுச்சு.

நாட்கள் கடந்து போகப் போக..காமன் ஸ்டடி ஹால்ல படிக்கிற மாதிரி நடிக்கிறதோட சரி. ரூமுக்கு வந்தா சாட்டிங்..சாட்டிங் அதுவும் தினேஷோட மட்டும்தான். இப்பல்லாம் ஜோதியோட பேசறதுக்கு கூட நேரமில்ல.

ஜோதிக்கும் முரளிதான் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட். அவளுக்கும் அவனோட பேசவே நேரம் சரியாப் போயிடுது. படுக்கைல படுத்துகிட்டு ..தலையோட போர்வையப் போத்திகிட்டு ஹெட்ஃபோனை மாட்டிகிட்டு பேசிகிட்டே இருப்பா.

எனக்கு தினேஷை நேர்ல பாத்துப் பேசணும்னு அவ்வளவு ஆசையா இருந்தது. சேட்டிங்லயே இப்பிடி சிரிக்க சிரிக்கப் பேசறவன் நேர்ல எப்பிடிப் பேசுவான்னு பாக்கணுமேன்னு ஜோதியைக் கேட்டேன்.

அவ கொஞ்சம் கூட யோசிக்காம ..




“செரி நாளைக்கு அவனை மீட் பண்ணலாம்”னா.

“நாளைக்கு எப்பிடி வெளிய போக பெர்மிஷன் கிடைக்கும்?”

“அதெல்லாம் கிடைக்கும்.நீ வாயை மூடிகிட்டு வா”

அடுத்த நாள் சாயந்திரம்..என்னையும் கூட்டிகிட்டு வார்டனிடம் போனா ஜோதி.

என்ன” ங்கற மாதிரி சோடாப்புட்டி கண்ணாடிக்குள்ளருந்து மொறைச்சுப் பாத்தாங்க வார்டன்.

“மேடம்..! இன்னைக்குப் பொன்னியோட அம்மாக்கு நினைவு நாள் மேடம். பாவம் காலைல இருந்து அழுதுகிட்டே இருக்கா. அவளைக் கொஞ்சம் வெளியில..கோயிலுக்காவது கூட்டிகிட்டுப் போகட்டுமா மேடம்” னு

மூஞ்சிய சோகமா வெச்சுகிட்டுப் பர்மிஷன் கேட்டா. என்னையும் புறங்கையில ஒரு கிள்ளி கிள்ளினா. நானும் புரிஞ்சிகிட்டு கண்ணைக் கசக்கினேன்.

எங்க ரெண்டு பேரையும் பாத்து வார்டனும் உணர்ச்சி வசப்பட்டு,

“பாத்து பத்திரமா போயிட்டு வாங்க. ஒரு மணி நேரத்துக்குள்ள திரும்பிடணும்” னு சொல்லி அனுப்பினாங்க.

ஆஹா… நான் ஆசைப் படறத எல்லாம் நிறைவேத்தி வெக்கிற ஒரு அன்பான தோழி எனக்குக் கிடைச்சிருக்கானு எம்மனசுல அப்படி ஒரு குதூகலம். இப்பிடி ஒரு பெர்மிஷன் வாங்க என்னோட அம்மா நினைவுநாளை அவ பயன்படுத்திகிட்டது அப்போ எனக்குக் கொஞ்சம் கூடத் தப்பாத் தோணவே இல்லை.

நாங்க போனது ஊருக்கு ஒதுக்குப் புறமா இருந்த ஒரு பார்க்குக்கு. எங்களை எதிர்பார்த்து தினேஷும், முரளியும் காத்திருந்தாங்க. ரெண்டு பேர் கையிலயும் எங்களுக்காக சாக்லேட் பார் வெச்சிருந்தாங்க. அதைக் கையில வாங்கினதும் ஆர்வ மிகுதியில நான் அதை சாப்பிடப் போக..தினேஷ்..

“இப்போ சாப்பிடாத..ராத்திரி தூங்கப் போறப்ப சாப்பிடு. அப்பதான் நான் உன் கனவுல வருவேன்”னு சொல்லி என்னைப் பாத்துக் கண்ணடிச்சு சிரிச்சான். எனக்கு அப்பிடியே உடம்புலயும், மனசுலயும் புதுமாதிரியான உணர்வு. ஒரு வேளை தினேஷ் என்னைக் காதலிக்கறானோன்னு மனசுக்குள்ள ஒரு குறுகுறுப்பு.

முரளியும் ஜோதியும் எங்களைப் பாத்து சத்தம் போட்டு சிரிக்க, அங்க நடைப் பயிற்சியில இருந்த பெரியவங்க எங்களைப் பாத்து மூஞ்சிய சுளிச்சுகிட்டு தலையில அடிச்சுகிட்டாங்க.

அவங்க எங்களை எத்தனைக் கேவலமா எடைபோட்டிருப்பாங்கன்னு இப்ப நினைக்கிறப்ப உடம்பெல்லாம் கூசிப் போகுது.

ஹாஸ்டலுக்கு வந்து ராத்திரி அந்த சாக்லேட்டை சாப்ட்டதும் உடம்பெல்லாம் பஞ்சு மாதிரி மிதக்குது. மனசு கிறங்கிப் போய்த் தன்னால சிரிப்பு சிரிப்பா வருது. ரொம்ப ஒஸ்தியான சாக்லேட்டு போல. ஜோதிகிட்ட சொன்னா.

“அது அப்படித்தான் நீ பேசாம தூங்குனு” அதட்டினா. அப்படியே ஒரு பரவச நிலையில் தூங்கிப் போயிட்டேன். தினம் ஒரு சாக்லேட்…ஒரு வாரம் இப்படியே ஓடி போச்சு. சாக்லேட் தீந்துருச்சு. ஆனா அந்த அனுபவத்துக்காக மனசு ஏங்குது.. சாக்லேட்டுக்கு எங்க போறது?

ஜோதிகிட்ட கேட்ட தினேஷை நீயே கேளுங்கறா. தினேஷோ நீ ஸ்கூலுக்கு லீவ் போட்டுட்டு எங்கூட வெளியில வந்தாதான் தருவேன்னு கறாரா சொல்லிட்டான். எப்படி லீவ் போடறது.? என்ன காரணம் சொல்றது? ஒரு வாரத்துல என்னோட அத்தை மகளுக்குக் கல்யாணம். வருது. அதுக்காக நான் ஊருக்கு வரணும்னு எங்கப்பாருகிட்ட சொல்லி ஒரு வாரம் லீவு கேக்க சொன்னேன். லீவு கிடைச்சது. ஒரு நாள் முழுக்க தினேஷ்கூட ஊர் சுத்திட்டு..சாக்லேட்டை வாங்கிட்டு ஊருக்குப் போயிடலாம்கிறது என்னோட திட்டம். இப்போ தினேஷை சந்திக்கறதை விட சாக்லேட் சாப்பிடறதுலதான் எனக்கு சந்தோஷமே.

திட்டப்படி தினேஷை சந்திச்சு சாக்லேட் வாங்கியாச்சு. இனி ஊருக்குப் போக பஸ் ஏற வேண்டியதுதான். தினேஷ்,

“பொன்னி நீ பஸ்ல போக வேண்டாம். என் ஃப்ரெண்ட் கார் கொண்டு வந்திருக்கான்..அதுல உன்னைக் கொண்டு போய் விடறேன். மனசு முழுக்க அந்த சாக்லேட் மேல இருக்க..அவன் சொன்னதும் சரின்னு சொல்லி கார்ல உக்காந்துட்டேன்.  உக்காந்ததுமே..ஒரு சாக்லேட்டைப் பிரிச்சு வாய்ல .போட்டதுமே..சொர்க்கத்தின் வாசலுக்கே போயிட்டேன்.

“பொன்னி..பொன்னி” னு அவன் கூப்புடறது எங்கயோ பாதாள லோகத்துல இருந்து கூப்புடற மாதிரி இருக்கு.

“ரொம்ப ஸ்ட்ராங்கான சரக்குடா..அதான் நாக்குல பட்டதுமே தூக்கிருச்சு போல” னு தினேஷும் அவன் ஃப்ரெண்டும் பேசி சிரிக்கிறாங்க. எனக்கும் சிரிப்பு..சிரிப்பா வருது.

அதுக்கப்புறம்..நடந்ததுதான் கொடுமை. எனக்கு தினமும் அந்த சாக்லேட்டைக் குடுத்து குடுத்து என்னை மயக்கத்துலயே வெச்சிருந்து என்னை எப்படி எப்படி சீரழிக்கணுமோ அப்படி எல்லாம் சீரழிசிருக்காங்கங்கறதே எனக்குக் கொஞ்சம் சுயநினைவு மீண்டப்பதான் புரிஞ்சுது.நான் சுயநினைவுக்கு வந்தப்ப அந்த ரூம்ல யாருமே இல்ல. தட்டுத் தடுமாறி எழுந்து பாத்தா என்னோட பை மட்டும்தான் இருக்கு. மொபைல் இல்ல. ஒரு பேப்பர்ல,

“பொன்னி..! எங்களைப் பத்தி போலீஸ்ல புகார் குடுக்கலாம்னு நினைக்காதே..உன்னை அலங்கோலப் படுத்தி நாங்க எடுத்த ஃபோட்டோ, வீடியோ எல்லாமே இணையவெளியில சுத்திகிட்டிருக்கு. நீ ஒரு ட்ரக் அடிக்ட்டுன்னு ப்ரூவ் பண்ண எங்ககிட்ட நெறய எவிடென்ஸ் இருக்கு.. நீ சாப்ட்ட சாக்லேட் எல்லாமே போதை சாக்லேட்டுகள்தான். உன்னோட இரத்தத்தை பரிசோதிச்சா வெட்டவெளிச்சமாயிடும். அதனால எங்களைக் காட்டிக் குடுக்கணும்னு கனவுல கூட நினைக்காதே!”

 னு கிறுக்கலா எழுதி இருந்தது.

அடப்பாவிகளா! என்னை இப்பிடி சந்தி சிரிக்க வெச்சிட்டீங்களேன்னு கதறிக் கதறி அழுதேன். நான் எங்க இருக்கேன்னே எனக்குத் தெரியல. மெதுவா ரூமை விட்டு வெளிய வந்தப்பதான் அது ஒரு நாலாந்தர லாட்ஜ்ன்னும் நான் இருக்கறது சென்னைலன்னும் தெரிய வந்துச்சு. இம்மாந்தூரம் என்னைக் கொண்டு வந்து இப்படி சீரழிச்சுட்டாங்களே? நான் எந்த மொகத்த வெச்சுகிட்டு ஊருக்குப் போவேன் ? எங்கப்பாரு,ஒறவுசனம் மூஞ்சியில எப்பிடி முழிப்பேன்..? இனிமே உசுரோட இருக்கறதுல எந்த பிரயோசனமும் இல்ல. நேரா கடல்ல போய் சரண்டைஞ்சிர வேண்டியதுதான். நதிகள் கடைசியா கடல்ல போய்க் கலக்கற மாதிரி..நானும் நதியோட பேர் கொண்டவள்தானே. அந்தக் கடலம்மா மடியில போய் படுத்துக்கலாம்கிற முடிவோட, ஒரு ஆட்டோல ஏறிக் கடற்கரைக்குப் போனேன். ஏதோ  நல்ல வேளையா கொஞ்சம் பணம் எம்பையில இருந்தது. இருட்டற வரைக்கும் ஒதுக்குப்புறமா உக்காந்துட்டு கடல்ல இறங்கிடலாம்னு நெனச்சா.. என்னோட அலங்கோலமான உருவத்தைப் பாத்த ஒரு போலீஸ்காரர் எம்மேல சந்தேகப்பட்டு என்னை ஸ்டேஷனுக்கு இழுத்துகிட்டுப் போயிட்டார்.




அங்கே ஏற்கெனவே நாலைஞ்சு பொம்பளைக இருந்தாங்க அவங்களோட என்னையும் உக்கார வெச்சிட்டாங்க. நான் என்ன சொன்னாலும் போலீஸ்காரங்க காதுலயே வாங்கிக்கல. மலங்க மலங்க முழிச்சுகிட்டு உக்காந்திருந்த என்னை..அங்க வேறொரு கேஸ் விஷயமா வந்த ஒரு வக்கீலம்மா கவனிச்சிருக்காங்க. இன்ஸ்பெக்டருகிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு என்னைக் கூப்ட்டு கனிவா விசாரிக்க நான் நடந்ததை எல்லாம் சொன்னேன். அந்த இன்ஸ்பெக்டர் வக்கீலம்மாவோடவோட நண்பராம். அவர்கிட்ட இந்தப் பொண்ணை எம்பொறுப்புல கூட்டிகிட்டுப் போறேன். நீங்க சொல்றப்ப கூட்டிகிட்டு வரேன்னு சொல்லி என்னை அழைச்சுகிட்டுப் போனாங்க.

அவங்கதான் கங்கா அக்கா !

“எந்த ஒரு ப்ரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. நீ தீர யோசிக்காம ஒரு பையனை நம்பி வெளியில வந்தது ரொம்பத் தப்பு. உனக்குன்னு ஒரு திடமான கொள்கை, உறுதியான மனசு இருக்கணும்.”

தினமும் எனக்குக் கவுன்சிலிங் குடுத்து, தியானத்துல ஈடுபடுத்தினாங்க. ஆரம்பத்துல எனக்குக் கஷ்டமா இருந்துச்சு. ஆனா தினமும் அக்கா  என்னை, என்னோட சக்தியை உணர வெச்சாங்க. உனக்குள்ள இருக்கற ஆற்றலை நீ உணர்ந்து அதை வெளிப்படுத்துன்னு சொல்லிச் சொல்லி என்னை ஒரு மனுஷியாக்கினாங்க.

“அந்தக் காவாலிப்பசங்க இன்டெர்னெட்டுல என்னோட வீடியோ போட்டுட்டாங்கன்னா நான் என்ன செய்வேன்..! எம்மானம் கப்பலேறிடுமே” ன்னு அழுதேன்.

“அத சைபர் க்ரைம் மூலமா கையாண்டுக்கலாம். இனிமே நீ எந்த செயல்லயும் பலதடவை யோசிச்சுதான் இறங்கணும்.. நீ சுயவுணர்வுல இல்லாதப்ப நடந்த ஒரு விபத்து. இதுல கற்பு, மானம் னு யோசிச்சு உன்னை நீயே பலவீனப் படுத்திக்காதே!

கற்பு நிலையென்று சொல்ல
வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.

Top of Form

 

ன்னு  பாடி எனக்குள்ள ஒரு எழுச்சியை ஏற்படுத்தினாங்க.

சொன்னது போலவே எனக்கு இப்படி ஒரு நிலைமையை ஏற்படுத்தின தினேஷ்க்கும் அவனோட ஃப்ரெண்டுக்கும் தண்டனை வாங்கிக் குடுத்ததோட, ஜோதியையும், அவ தீவிர போதைப் பழக்கத்துக்குப் போயிட்டதால அவளை ஒரு போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்துல சேத்து விட்டிருக்காங்க.

இடைப்பட்ட நாட்கள்ல எங்க ஊருக்குப் போய் என்னோட தவறான செய்கையால மனசு நொந்து உருக்கொலைஞ்சு போயிருந்த என்னோட அப்பாரைப் பாத்துப் பேசி..எம்பக்க நியாயத்தை எடுத்து சொல்லியும் அவுரு நம்பலையாம். இப்ப கொஞ்ச நாளாத்தான் ஃபோன் பேசினா ஆமா, இல்லன்னு ஒத்தை வார்த்தையில பதில் சொல்றாரு. சீக்கிரமா என்னை மன்னிச்சிருவாரு. அதுக்குள்ள நானும் என்னுடைய தகுதிகளை உயர்த்திக்கணும்னு கங்கா அக்கா சொன்னாங்க.

பதின்ம வயசுல, மனம் போன போக்குல படரத் துடிச்ச பசுங்கொடியா இருந்த எனக்கு கொழுகொம்பா இருந்தாங்க கங்கா அக்கா. என்னைத் திரும்பவும் ப்ரைவேட்டா ப்ளஸ்டூ எழுத வெச்சாங்க. இப்போ அஞ்சல் வழியில பட்டப்படிப்பு படிச்சுகிட்டே, அக்காவுக்கு உதவியாளரா இருக்கேன். நர்மதாவைப் பாத்துக்கறதையும், சரயு,பவானிக்குப் பாடம் சொல்லிக் குடுக்கறதையும் என்னோட முக்கியக் கடமைகளா நினைச்சு செய்யறேன். அக்காவோட ஒரு மாபெரும் சமூகப் பணிகள்ல என்னையும் ஒரு சின்ன அணிலா இணைச்சுகிட்டேன்.  இப்போ அக்கா மும்பையிலிருந்து கூட்டிகிட்டு வந்த சிந்துவைக் கவனிச்சுக்குறதும் என்னோட பொறுப்புதான்.




What’s your Reaction?
+1
5
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!