Entertainment Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம் -3

(3)

முகிலினி கண் விழித்த போது மணி ஏழு காட்டியது .அன்று ஞாயிற்றுகிழமை .அதனால் இந்த அதிக தூக்கம். பக்கத்தில் திரும்பி பார்க்கிறாள் .தமிழினி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள் .அவள் அம்மா வீட்டிற்கு வந்தால் எட்டு மணிக்கு குறைந்து எழுந்திரிப்பதில்லை .

ஏலக்காய் வாசம் நாசி நிறைத்தது. அம்மா ஏதோ இனிப்பு செய்கிறார்கள். இன்று மருமகன் வருவாரே .சாதாரண சமையல் செய்ய முடியுமா ? தமிழினி மாதம் ஒரு முறை சனி , ஞாயிறு கணக்கு பண்ணி வந்து விடுவாள் .அவளை அழைத்து செல்லவென அவள் கணவன் கதிரவன் ஞாயிறு வந்துவிடுவான் .எனவே அன்று அவர்கள் வீட்டில் விருந்து சமையல்தான் .

அம்மாவிற்கு உதவி செய்யலாமே
என வேகமாக எழுந்து குளியலறைக்குள் நுழைந்தாள் முகிலினி .அவள் அடுப்படிக்குள் நுழைந்த போது, அப்புக்குட்டியை  இடுப்பில் வைத்துக்கொண்டு அடுப்புடன் போராடிக்கொண்டுதான் இருந்தாள் சரஸ்வதி .

” அப்புவை என்கிட்ட கொடுங்கம்மா …” கை நீட்டினாள் முகிலினி .

” இல்லம்மா அவளுக்கு சாப்பாடு கொடுக்கனும் , உன்னால் முடியாது .நீ இரண்டு விசில் வந்ததும் குக்கரை அணைச்சிடு .இந்த வெங்காயத்தை வெட்டி வைத்து விட்டு , தேங்காயை துருவி வச்சிடு .நான் குட்டிக்கு சாப்பாடு கொடுத்துட்டு வந்து உனக்கு காபி கலக்குறேன் ” என்று கூறிவிட்டு தட்டில் இரண்டு இட்லிகளுடன் அபர்ணாவை தூக்கிக்கொண்டு பின்புற தோட்டத்திற்கு சென்றாள் .

அம்மா சொன்ன வேலைகளை செய்து முடித்த முகிலினி பின்னால் எட்டிப்பார்த்தாள் .அம்மா ஒரு வாய் திணிக்க அபர்ணாவுடன் போராடிக்கொண்டிருப்பதை பார்த்தாள் .அடுப்படியில் அங்குமிங்கும் இரைந்து கிடந்த பாத்திரங்களை ஒதுக்கி , கழுவ வேண்டியதை ஒரு டப்பினுள் போட்டு பின்பக்கம் வைத்தாள் .வேலைக்காரி பத்து மணிக்கு மேல் வருவாள் .அடுப்பை துடைத்தவள் அம்மா பாப்பாவிற்கு ஊட்டி முடித்து வாயை துடைத்து விட்டுக்கொண்டிருப்பதை பார்த்ததும் , தனக்கும் அம்மாவுக்குமாக காபி கலந்து எடுத்துக்கொண்டு பின்னால் வந்தாள் .

” என்னடா நானே வந்து கலந்திருப்பேனே “, சரஸ்வதி  வாஞ்சையுடன் மகளை பார்த்தபடி காபியை வாங்கிக்கொண்டாள் .

” பரவாயில்லைம்மா இன்றைக்கு உங்களுக்கு வேலை அதிகமாச்சே .அதனால் நானே கலந்தேன் .இன்னும் என்ன வேலைம்மா இருக்கு ?” காபியை உறிஞ்சியபடி பின் வாசல்படியில் அமர்ந்தனர் அம்மாவும் , மகளும் .

அபர்ணா அங்கிருந்த பூச்செடிகளை ஆராய்ந்து கொண்டிருந்தாள் .




” காலை வேலை முடிந்ததுடா .மச்சான் வந்து சாப்பிட்டு முடித்ததும் மதிய வேலை தொடங்கனும் “, என்றாள் சரஸ்வதி .

தமிழினியின் கணவன் காலை உணவுக்கு வந்துவிடுவான் .கணவனும் மனைவியுமாக மாலை டிபனை முடித்தபின்தான் குழந்தையுடன் கிளம்புவார்கள் .

” அம்மா உங்களுக்கு வேறு என்ன வேலை பார்க்கனும் சொல்லுங்க ” முகிலினி கேட்டாள் .

அன்புடன் மகளை பார்த்த தாய் ” பரவாயில்லைடா நான் பார்த்துக்கொள்கிறேன்.உனக்கு நாளைக்கு பரீட்சை ஆச்சே .நீ போய் படி ” என்றாள் தாய் .

முகிலினிக்கு மறுநாள் செமஸ்டர் இருந்தது .அத்தோடு இது கடைசி வருடமாததலால் ப்ராஜெக்ட் வேலை வேறு இருந்தது .அவளுக்கு வேலை நிறையத்தான் இருந்தது .ஆனாலும் அதற்காக அம்மாவை தனியே திண்டாட விட முடியுமா ?

” பரவாயில்லைம்மா நான் ஏற்கனவே பரீட்சைக்கு தயாராகத்தான் இருக்கிறேன் .அதனால் எனக்கு நீங்கள் வேலையை சொல்லுங்கள் .செய்துவிட்டு படிக்கிறேன் ” என்றாள்.

” சரிம்மா அப்போ கொஞ்சம் பூ பறித்து வைத்து விட்டு , அடுப்படிக்கு வா ..” என எழுந்தாள் சரஸ்வதி .

” பூ பறிக்கவா …அப்பா எங்கேம்மா …? “, ஆச்சரியமாக கேட்டாள் முகிலினி .

இந்த பூ பறிப்பது , செடிக்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பது அவருடைய வேலைதான் .என்ன வேலை இருந்தாலும் கொஞ்சம் அதனை தள்ளி வைத்துவிட்டு விருப்பத்தோடு செய்வார் தோட்டப்பராமரிப்பை .இந்த வேலை பார்ப்பதால் மனது மிகவும் ரிலாக்சாவதாக கூறுவார் .அப்படிப்பட்டவர் அவருடைய பிடித்தமான வேலையை ஒதுக்க காரணம் …?

” அப்பா அவரோட ஆபீஸ் ரூமில் இருக்கிறார் .என்னவோ இப்போ ஒரு வாரமாக அங்கேயேதான் குடியிருக்கிறார் .யார் யாரோ வர்றாங்க .போறாங்க .ரொம்ப பிசியாக இருக்கிறார் .நானும் அவரை எதற்கும் கூப்பிடுவதில்லை .நீ போம்மா ” என்றாள் சரஸ்வதி .

“,  அம்மா பூ சாமிக்குத்தானே .நான் போய் குளித்துவிட்டு வந்து பறிக்கிறேன் ” உள்ளே சென்றாள் முகிலினி .

அவளுக்கென்னவோ அப்பாவின் இந்த திடீர் பிசிக்கு மாடியில் இருக்கும் , அந்த அவன்தான் காரணமென தோன்றியது .யோசித்து பார்த்தால் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகவே தந்தை கொஞ்சம் டென்சனாகவே இருந்தார் போல் இப்போது தோன்றியது .அதுவும் அவன் வீட்டிற்கே வந்த பின்னால் மிக அதிகமாகவே …

ஒரு சிறு கூடையை எடுத்து தங்க அரளிப்பூக்களை அதில் பறித்து சேகரிக்க தொடங்கினாள் .ஒரே கொத்தில் மொத்தமாக மலர்ந்திருந்த அந்த கொத்துப்பூக்கள் ஏனோ அவனை நினைவூட்டியது முகிலினிக்கு .தலைகுனிந்து அவளுக்கு வழிவிட்டு பளிச்சென சிரித்த அவன் சிரிப்பை …

நேற்று அந்த வடை விசயத்தில் நான் அவனிடம் அவ்வளவு கடுமை காட்டியிருக்க கூடாது .தப்பு என் மேல்தான் .யார் சாப்பிடுகிறார்கள் என்ன ஏதென கவனிக்காது அவன் மீது காய்ந்தால் பாவம் அவன் என்ன செய்வான் ?.அதுவும் அப்பா அவனை நம்பி அந்த அளவு வீட்டிற்குள் வரை அனுமதித்திருக்கும் பொழுது , அவனை அவமதிப்பது அப்பாவை அவமதிப்பது போலத்தானே ?

அவனை பார்க்கும்போது நேற்று பேசியதற்கு மன்னிப்பு கேட்டு கொள்ள வேண்டும் .இப்படி எண்ணியபடி அதோ அங்கே மேலேயிருக்கும் கொத்துப்பூக்களுக்காக முயன்றாள் முகிலினி .




எக்கி பார்த்தாள் .குதித்து பார்த்தாள் .ம்ஹூம் …சரி ஸ்டூல் போட்டு ஏற வேண்டியதுதான் என திரும்பிய போது ” நான் உதவட்டுமா ? “, என புன்னகையோடு நின்றான் அவன் .

” உன்னை கூப்பிட்டேனா ? என் வீட்டில் வந்து எனக்கு உதவ நீ யார் ? உனக்காகதானே என் அப்பா கஷ்டப்பட்டுட்டு இருக்கிறார் ? நீ இங்கே ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறாயே ? ” இப்படி பல கேள்விகள் அவள் நா நுனியில் துடித்தது .

ஆனால் அக்கேள்விகளுக்கு வழி விட்டு விட்டு பின் இன்று போல் மீண்டும் மன்னிப்பு கேட்க அவள் தயாராக இல்லை .எனவே இதழ்களை ஒரு கணம் இறுக்க மடித்து கடித்து நின்றாள் .

அவள் இதழ்களையே ஒரு நிமிடம் கூர்ந்து நோக்கிவிட்டு ” பரவாயில்லை கேட்டு விடுங்கள் .அதற்காக உங்கள் உதட்டை ஏன் இந்த பாடு படுத்துகிறீர்கள் …மிஸ் …” என அவன் இழுக்க …

இவனிடம் தன் பெயரை சொல்லிவிடவே கூடாது என்ற வீம்பு முகிலினியினுள் தோன்றி விட்டது .எனவே ” உதவ கேட்டதற்கு நன்றி .இது நானே பார்த்துக்கொள்வேன்.நான் உங்களிடம கொஞ்சம் பேச வேண்டும் .” நாவை அடக்கியபடி மிக பொறுமையாக பதிலளித்தாள் .

” காத்திருக்கிறேன் …” என சிறு இடைவேளை விட்டு ” பாருங்கள் மேடம் நீங்கள் எப்படியும் என்னை விட ஐந்தாறு வயது இளையவராகவே இருப்பீர்கள் .ஆனால் பாருங்கள் உங்கள் பெயர் தெரியாததால் உங்களை ஏதோ வயதானவரை கூப்பிடுவது போல் ..இப்படி மேடம் …கீடமென்று கூப்பிட வேண்டியுள்ளது .அதனால் ….” என இழுத்தான் .

எப்படி சுற்றி வளைக்கிறான் பார் .உன் வயது அதிகமாக தெரிகிறதென்றால் , நான் கலங்கி போய்  உடனே என் பெயரை சொல்லி விடுவேனாம் .இந்த ஏமாற்றுக்கெல்லாம் அவன் வேறு ஆள் பார்க்க வேண்டும் .

மனதிற்குள்ளாக அவனை இகழ்ந்தபடி ” அட பரவாயில்லை சார் .அப்படி தெரிந்தால் தெரிந்து விட்டு போகிறேன் .இப்போது கொஞ்சம் நகர்ந்தீர்களானால் நான் உள்ளே செல்வேன் ” தேனை குரலில் குழைத்து கூறினாள் .

அவள் வீட்டிற்குள் செல்லும் பாதையை அடைத்தபடி நின்றிருந்தான் அவன் .ஆனால் அவள் அவ்வளவு சொல்லியும் நகரும் எண்ணமில்லாமல் அப்படியே நின்றவன் , புருவங்களை சுழித்து சிறு யோசனையுடன் அவளை நோக்கினான் .அத்தோடு விலகாமல் அவளை நோக்கி வரவும் தொடங்கினான் .

முகிலினி பயந்து போனாள் .என்ன இவன் இப்படி முறைத்துக்கொண்டே பக்கத்தில் வேறு வருகிறானே..?  .பயந்து பின்னால் நகர்ந்தாள் .மிகப்பரந்து விரிந்த தோட்டமல்ல அது .வீட்டிற்கு பின்னாலிருந்து சிறிய இடத்தில் நேர்த்தியாக கொஞ்சமாக போடப்பட்டது .அந்த சிறிய இடத்தில் இப்படி உரசுவது போல் வந்தால் எங்கே நகர்வது …?

அவளின் மிக அருகே அவன் வந்ததும் விலகி ஓடிவிட எண்ணி நகர்ந்தவளின் தலை முடி அந்த செடியில் நன்கு சிக்கிக்கொண்டது .இழுக்க முயல வலி உச்சி வரை தாக்கியது .

” ஸ்….” என அவள் வலிக்கு தான் குரல் கொடுத்தவன் மெல்ல அவளின் சிகையை செடியிடமிருந்து விடுவிக்க தொடங்கினான் .

மிக அழகாக , மென்மையாக துளி வலியின்றி முடிகளை விடுவித்தவன் சிக்கலின்றி அவற்றை எடுத்து விட்டு நீவி நிறுத்திவிட்டு ” எவ்வளவு அழகான நீளமான கூந்தல் …?” என வருடினான் .அவன் முடியை தொட்டால் எனக்கு ஏன் இப்படி சிலிர்க்க வேண்டும் ? தன்னையே நொந்துகொண்டாள் முகிலினி .

அந்த தங்க அரளி செடிக்குள்ளேயே புதைந்து விடுபவள் போல் குறுகி நின்றவளின் கைகளை இயல்பாக பற்றி வெளியே இழுத்து ஓரமாக நிறுத்தியவன் “, அட என்னங்க மேடம் , இப்படி நின்னீங்கன்னா மேடம் …நான் எப்படிங்க பூ பறிக்கிறதுங்க மேடம் …” என வேண்டுமென்றே வார்த்தைக்கு வார்த்தை மேடம் போட்டான் .

சற்று முன் அவள் பறிக்க மிகப்பெரிய பிரயத்தனப்பட்டு தோல்வியடைந்த அந்த பூங்கொத்தை எளிதாக எட்டிப்பறித்து அவளிடம் நீட்டினான் .

வலிய , நீண்ட கரங்கள் எளிதாக அந்த பூவை பறிப்பதை “ஆ”, வென பார்த்த முகிலினி , அவன் பூ பறித்து திரும்பும் முன் அவசரமாக தன் வாயை மூடிக்கொண்டாள் .நல்லவேளை அவன் பார்க்கவில்லை .பிறகு கொசு விரட்ட ஆரம்பித்துவிடுவான் என எண்ணி ஆறுதல் மூச்சு விட்டுக்கொண்டான் .

சிறு கேலிப்பார்வையுடன் அவள் பெருமூச்சை பார்த்தவனைக் கண்டதும் , எங்கே அவன் கண்டுபிடித்து விடுவானோ என பயந்து , கேட்க கூடாதென்று எண்ணி வைத்திருந்ததை அவளேயறியாமல் வாயிலிருந்து உதிர்த்தாள் .

“,உங்களுக்கொல்லாம் டியூப்லைட் மாட்ட வேண்டுமென்றால்  கவலையே கிடையாது இல்லை …? ”
நக்கலாக கூறிவிட்டு உள்ளே போய்விட்டாள் .

அவனது மெலிதான சிரிப்பொலி அவளை தொடர்ந்தது.

கதிரவன் காலை பத்து மணிக்கெல்லாம் வந்துவிட்டான் .குளித்துவிட்டு ஹாலில் காற்றாடி அருகே தலையுணர்த்திக்கொண்டிருந்த தமிழினி ” வாங்க …வாங்க ….” உற்சாக குரல் கொடுத்தாள் .முகத்தில் ஆயிரம் வாட்ஸ் ஒளி .” அப்பா …” ஓடியது குழந்தை .

குழந்தையை அள்ளும் சாக்கில் மனைவியையும் லேசாக அணைத்தானோ …? அசூசையுடன் முகம் திருப்பி முகிலினி உள்ளே செல்ல  , சரஸ்வதி காணாதது போல் அடுப்படிக்குள் நுழைந்தாள் .

கதிரவனும் , தமிழினியும் காலை உணவை ஒரு வெட்டு வெட்டிவிட்டு அறையினுள் ஓய்வெடுத்து .கொண்டிருந்தனர் .என்னதான் பேசுவார்களோ ?….இடையில் அதிரடியாக சிரிப்பு வேறு .மனைவி , குழந்தையை அழைக்க வந்த கதிரவனுக்கு மாமியாரோ , கொழுந்தியாளோ கண்ணுக்கு தெரியவில்லை .வரவேற்ற அம்மாவின் பக்கம் திரும்ப கூட இல்லை .பதிலாக வேலையாக இருக்கும் அப்பா வாங்க என அழைக்காததாக மனைவியிடம் உள்ளே குறைபட்டுக்கொண்டான் .

தமிழினி அவனுக்கு எடுத்து சொல்வாளென முகிலினி எதிர்பார்க்க , அவளோ எய்த அம்பு போல் அம்மாவிடம் வந்து நின்றாள் .

” என்னம்மா அப்பா இப்படி பண்றாரு .மருமகனை விட அவருக்கு அவர் வேலை முக்கியமாக போய் விட்டதா ? ” ஒரு உடனடி அழுகைக்கும் தயாரானாள் .

சரஸ்வதி போய் தமிழ்செல்வன் அழைத்து வந்து , அவர் ” வாங்க மாப்பிள்ளை நல்லா இருக்கீங்களா ? ” என்ற பின்னே தமிழினி திருப்தியானாள் .

” ம் ..ம் …என்ற ஒரு உறுமலோடு டிவி பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டான் கதிரவன் .

முகிலினிக்கு ஆத்திரமாக வந்தது .சரஸ்வதி கூட சிறிது குறைபட்ட முகத்தோடுதான் நின்று கொண்டிருந்தாள் .ஆனால் தமிழ்செல்வனோ எதையுமே கண்டுகொள்ளாமல் மீண்டும் தனது அலுவலக அறைக்குள் புகுந்து கொண்டார் .

அவ்வளவுதான் தம்பதிகள் இருவரும் தங்கள் தனி உலகில் புகுந்து கொண்டனர் .டிவி நிகழ்ச்சிகளை இருவருமாக கிண்டல் பண்ணி ரசித்தனர் .இடையிடையே தங்கள் குழந்தையையும் தங்களுடன் சேர்த்து கொண்டனர் .பகல் உணவை தனி குடும்பமாக ஒதுங்கி தாங்களாகவே உண்டனர் .

இதற்கு இங்கே வராவிட்டால் என்ன ?, அவர்கள் வீட்டிலிருந்தே இப்படி தங்களை தாங்களே கொண்டாடிக்கொள்ள வேண்டியதுதானே என்று எண்ணிக்கொண்டாள் முகிலினி .




ஆனால் அவர்கள் வீட்டில் அது முடியாது .தமிழினியின் மாமியார் , கதிரவனின் தாயார் மிகவும் கண்டிப்பு .கதிரவனுக்கு ஒரு தம்பி , தங்கை வேறு உண்டு .எனவே அங்கே கணவனும் , மனைவியும் பேசிக்கொள்ள கூட இரவு வரை காத்திருக்க வேண்டும் .அதனால்தான் அக்காவும் , மச்சானும் மாதமொருமுறை தங்கள் வீட்டிற்கு வந்து சார்ஜ் ஏற்றி விட்டு செல்கிறார்கள் என முகிலினி எண்ணுவதுண்டு .அது உண்மையும் கூட .

சரி நம் அக்காதானே என்ஜாய் பண்ணிவிட்டு போகட்டும் என முகலினி தன்னை வெகுவாக சமாதானப்படுத்திக்கொண்டாள் .

ஆனால் நன்கு சாப்பிட்டு முடித்துவிட்டு , மனைவி மடித்துக்கொடுத்த வெற்றிலையை மென்றபடி ,நடு ஹாலில் உட்கார்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி ” ஆனாலும் மாமாவுக்கு விவரமே பத்தலை  அத்தை .இப்படியா முன்னே பின்னே தெரியாத ஆளை கொண்டு வந்து வயசுப்பொண்ணு இருக்கிற வீட்டுல தங்க வைப்பாரு ? “என்று அலட்டலாய் உரைத்த போது முகிலினியின் சமாதானம் எங்கோ பறந்தது .

என்னவோ இந்த வீட்டின் மேல் நிறைய அக்கறை கொண்டவர் போல் என்ன பேச்சு இது ? அப்பாவையே குறை கூறிக்கொண்டு .சரஸ்வதி பார்வையிலேயே பேசாதே என கூறிக்கொண்டிருக்கும் போதே
” அப்பா அப்படி தெரியாதவங்களை எல்லாம் வீட்டில் கொண்டு வந்து வைக்க மாட்டாங்க மச்சான் ” என்றாள் பட்டென்று .

சட்டென தலையை வேகமாக திருப்பி அவளை முறைத்தான் கதிரவன் .
” ஏய் என்னடி பேசுற ..? “முகிலினியை அதட்டினாள் தமிழினி .இவர்களுக்கிடையே தவித்தபடி நின்றாள் சரஸ்வதி .

தமிழ்செல்வன் அப்போது உள்ளே வர கதிரவன் சட்டென திரும்பிக்கொண்டான் . .எப்படியானாலும் மாமனாரிடம் நல்ல மருமகனென பெயர் வாங்க வேண்டுமெனதான் அவன் விரும்புவான் .எனவே அன்றைய பிரச்சினை அத்தோடு முடிந்தது .

தமிழினி குடும்பம் மீண்டும் ஓய்வெடுக்க அறையினுள் புகுந்து கொண்டது .வேலைகளை ஒதுக்க முகிலினி அம்மாவிற்கு உதவினாள் .
ஜூஸிற்காக எடுத்த கண்ணாடி டம்ளர்களை கவனமாக கழுவி வைத்தபடி ” என்னம்மா மச்சான் இப்படி பேசுறாரு …? அக்கா கூட ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறா ”  என்றாள் குறையாக .

மாலை டிபனுக்கு உளுந்தை கழுவி கிரைண்டரில் போட்டபடி ” விடும்மா ….உங்க அக்காவுக்கு அவர் ஒரு நல்ல கணவர் .அவளுக்கு அது போதும் .ஏன் நமக்கும்தான அதுவே போதும் .” என்றாள் சரஸ்வதி .

ஏனோ இதனை முகிலினியால் ஒத்துக்கொள்ள முடியவில்லை .நம் இந்திய திருமணங்களில் திருமணம் என்பது கணவன் மனைவி இருவருக்குள் மட்டுமான வாழ்வாக மட்டுமே இருப்பதில்லையே .இரு குடும்பங்களின் இணைப்பாகத்தானே இருக்கிறது.
மனைவி வேண்டும் அவள் குடும்பம் தேவையில்லையா ..? இது என்ன கோட்பாடு தெரியவில்லை குறைபட்டுக்கொண்டாள் முகிலினி .

மாலை அக்காவின் குடும்பம் அவர்கள் வீட்டிற்கு கிளம்பியது .
” அப்பாவை கூப்பிட்டு வந்திடும்மா ” முகிலினியை அனுப்பினாள் சரஸ்வதி .

தமிழ்செல்வனை அலுவலக அறையில் காணவில்லை.எங்கே போயிருப்பார் ? மெல்ல மாடியேறினாள் முகிலினி .மொட்டை மாடியிலிருந்தார் .உடன் அந்த அவனும் .முகிலினிக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தார் தமிழ்செல்வன் .

” இது உங்களுக்கு உடனடி தேவையாக இருக்குமா சார் …நான் இருக்கிறேனே ? ”  கவலையுடன் கேட்டுக்கொண்டிருந்தார் தமிழ்செல்வன் .

” இல்லை சார் , எனக்கு இப்போது பணம் மிக அவசியம் ….” என்று கூறிக்கொண்டிருந்தவன் முகிலினியை பார்த்து விட்டான் .” உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு என்னால் எந்த தொல்லையும் இருக்க கூடாதில்லையா ..? ” என்றான்  தொடர்ந்து ….

முகிலினிக்கு சுரீறென்றது .அன்று தான் பேசிய பேச்சிற்கு மன்னிப்பு கேட்கவேயில்லையே .அதற்காகவா வீட்டை விட்டு செல்கிறேன் என்கிறான் .பாவம் அவனுக்கு பணப்பிரச்சினை வேறு இருக்கும் போலவே .சிறு கவலையோடு அவனை பார்த்தாள் .எதிரிலிருந்தவன் பார்வை பின்னால் பதிவதை கண்டு திரும்பினார் தமிழ்சொல்வன் .

” என்னம்மா …? ” என்றார் .

” அக்கா ஊருக்கு கிளம்புகிறாள்பா…அதுதான் …..” என்றாள் முகிலினி .

” ஓ….என்றவர் திரும்பி ” இதோ வருகிறேன் சார் …” என்றுவிட்டு கீழிறங்கினார் .

முகிலினி நின்று அவனை நோக்கினாள் .” சாரி சார் நான அன்று கொஞ்சம் தவறாக பேசிவிட்டேன் .என் அப்பா நம்பி அழைத்து  வந்த உங்களை தவறாக பேசுவது அவரையே பேசுவது போல்தான் ” கெஞ்சலாக அவனை நோக்கினாள் .

” ஹேய் நான் உன்னை சொல்லலை ….” அழகாய் முறுவலித்தான் .முகிலினியின் பார்வை அவனது பளிச்சிட்ட பல் வரிசையிலிருந்து மனமின்றி கண்களுக்கு தாவியது .தாளாத தாகத்துடன் கண்களிரண்டும் தழுவிக்கொண்டன .

முத்துக்களை சிதற விட்டுவிட்டு
சிரிப்பென்று கூறிக்கொள்கிறாய்
உனக்கென்ன …
எளிதாய் சிரித்து விட்டு
போய்விடுகிறாய்
கோர்க்கும் வகையறியாமல்
நானல்லவோ விழித்துக்கொண்டிருக்கிறேன்

அவசர கவிதை ஒன்றை மனதிற்குள் எழுதிப்பார்த்தாள் .சிலீரென்று மூக்கின் மேல் ஏதோ பட்டது .பொழியட்டுமா என மேகம் வானத்திடம் கேட்டுக்கொண்டிருந்தது.ஏதோ சுழலிருந்து மீண்ட உணர்வுடன் தந்நிலை மீண்டனர் இருவரும் .

“ம் ” என்ன தலையாட்டலுடன் போக திரும்பினாள் முகிலினி .ஆனால் எதுவோ என்னவோ குறைவது போன்றே  தோன்றியது .மெல்ல திரும்பி எட்டெடுத்து வைத்தாள் .

” மேடம் …”….அவன்தான் மேடமாம் ….

என்ன விசயம் என்பது போன்ற கெத்தான பார்வையுடன் திரும்பி அவனை நோக்கினாள் முகிலினி .

கைகளை குவித்தான் வணக்கம் போல .சற்றே பவ்யமாக குனிந்து ” வணக்கம் மேடம் ..என் பெயர் ….” என்றவன் சற்று நிறுத்தி …அவள் இதயத்துடிப்பை சற்று எதிர்பார்ப்போடு எகிற வைத்து விட்டு ” யது நந்தன் ” என்றான் .

என்ன அழகான பெயர் விழிகளை விரித்தாள்  முகிலினி .

” அழகான பெயரில்லை ….? ” புருவம் உயர்த்தி அவளிடம் அபிப்ராயம் கேட்டான் .எங்கே தன்னையறியாமல் தலை சம்மதித்து ஆடிவிடுமோ என பயந்து தலையை அப்படியே ஆட்டாமல் வைத்தபடி ஒரு அலட்சிய பாவனையுடன் திரும்பி செல்ல தொடங்கினாள் .

” மேடம் ….மேடம் …நில்லுங்க மேடம் ….” பின்னாலேயே வந்தான் .சை எத்தனை மேடம் சலிப்புடன் எண்ணியபடி அவனை பார்த்தாள் .

அவள் புறமாக காதை சாய்த்தவன் ” என்ன மேடம் ….என்ன சொன்னீங்க ? ” எனக்கேட்டான் .

புரியாமல் ” என்ன ? “, என்று அவனை பார்த்தாள் .

” அதுதான் ஏதோ பெயர் சொன்னீங்களே ….? ” மீண்டும் அவள் புறம் காதை சாய்த்தான் .இந்த கலாட்டாவில் அவள் பெயரை சொல்லிவிடுவாளாம் .

” ம்ஹூம் …” என்று ஒரு செல்ல சிரிப்புடன் முகிலினி நகர்ந்தாள் .

” ஏய் எந்த காலேஜ் படிக்கிற நீ ….? “,எனக் கேட்டான் யதுநந்தன் .

காலேஜ் பெயரை சொன்னவள் ” ஏன் கேட்குறீங்க …?” என்றாள் .

” சும்மா …” என்று கண் சிமிட்டியவன் ” நாளைக்கு நீயே உன் பெயரை சொல்வாய் பாரேன் ” என்றான் .
பார்க்கலாமென்ற பார்வையுடன் கீழே இறங்கி சென்றாள் முகிலினி .
.நாளை யதுநந்தன் கூறுவது போல் அறுபது பேர் சுற்றி நிற்க தன் பெயரை அவனிடம் கூறப்போவதை அறியாமல் .




What’s your Reaction?
+1
23
+1
15
+1
1
+1
2
+1
0
+1
2
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!