நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம்-6

( 6 )

அன்று அவர்கள் கல்லூரியில் ஒருவித பரபரப்பு இருந்தது .அன்று பிரின்சிபாலிடம் என்கொயரி நடக்கப்போவதாகவும் அதில் அவர்கள் டிபார்ட்மென்ட் மாணவர்களும் இருப்பதாகவும் பேச்சு நடந்தது .

” யார் மாட்டுனாங்கன்னு தெரியலையே ? என்ன விசயமாக இருக்கும் ” தங்களுக்குள்ளேயே கிசுகிசுத்துக்கொண்டிருந்தனர் அனைவரும் .

” ஏய் உங்களுக்கு தெரியுமா ? …நேற்று லேப்ல யாரோ இரண்டு பேர் ஒரு பையனும் , பொண்ணும் பேசிக்கிட்டு இருந்தாங்களாம் .அதை யாரோ பார்த்துட்டாங்க போல .அவுங்களுக்குத்தான் இன்னைக்கு என்கொயரியாம் ” என்றாள் நளினி .

” ஏன்டி சும்மா பேசிக்கிட்டு இருக்கிறவங்களுக்கெல்லாம் இப்போ நம்ம காலேஜ் ல என்கொயரி போட ஆரம்பிச்சிட்டாங்களா ? ” கிண்டலாக கேட்டாள் முகிலினி .

ணக்கென அவள் தலையில் கொட்டிய செல்வராணி ” மண்டு நீயும் , நானும் பேசினால் ஏன்டி என்கொயரி போடப்போறாங்க .இவுங்க ….” என்றவள் குரலை குறைத்து ரகசியமாக ” லவ்வர்ஸாம் …”, என்றாள் .

அவர்கள் கல்லூரிக்குள் காதல் தடை செய்யப்பட்டது .கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் ஆண்களும் , பெண்களும் தேவையற்று பேசுவதே குற்றம் .கல்லூரி முழுவதும் ஆங்காங்கே கேமரா பொருத்தப்பட்டு இருப்பதால் ஆண்களும் பெண்களும் அநாவசியமாய் பேசிக்கொள்ள பயப்படுவார்கள் .மீறிப்பேசிய யாரோ காமிராவில் சிக்கி விட்டார்கள் போலும் .

” ஐயோ பாவம் , யாருடி அது ? இப்படி மாட்டிக்கொண்டது .இனி பேரண்ட்ஸை கூப்பிட்டு , விசாரணை அது இதுன்னு உயிரை வாங்கிடுவாங்களே .ஒழுங்காக பதில் சொல்லலைன்னா எக்ஸாம் எழுதகூட விட மாட்டாங்களே .
அவுங்க எதிர்காலமே பாழாயிடுமே ” என்று கவலையுடன் கூறினாள் முகிலினி .

” ஏய் இன்னொரு சூடான செய்தி தெரியுமா ? இந்த என்கொயரி
நம்ம நந்தன் சாருக்கும் உண்டாம் ” சத்தமேயில்லாமல் இப்படி தலையில் இடி இறக்க முடியுமா என்ன ? சாதாரணமாக அதை செய்து கொண்டிருந்தாள் நளினி .

” என்னடி சொல்ற ? யார் சொன்னா உனக்கு ? ” உதடுகள் உலர்ந்து வெடித்தன முகிலினிக்கு .

” நம்ம கிளாஸ் ரமேஷ் இல்லை .அவன்தான் சொன்னான் .அவனுக்கு யாரோ …யார் பெயரோ சொன்னானே …? ” தீவிரமாக யோசிக்க தொடங்கினாள் நளினி .

” இப்படி முக்கியமானதெல்லாம் நீ மறந்துடுவியே , யோசித்து கரெக்டா சொல்லு எருமை ” நளினியிடம் வம்புக்கு அலைந்தாள் செல்வராணி .

அனைவரும் பார்வை வட்டத்திற்கு வெளியே சென்றுவிட , தலை சுற்றுவது போன்ற உணர்வில் இருந்தாள் முகிலினி .கை மணிக்கட்டு வலிக்க தொடங்க என்னவென குனிந்து பார்த்தவள் அதிர்ந்தாள் .




அவள் அருகில் அமர்ந்திருந்த வைஷ்ணவிதான் அவள் கைகளை அழுத்தமாக பற்றியிருந்தாள் .மெல்ல அவளை உலுக்கினாள் முகிலினி .ஒரு மாதிரி வெறித்து பார்வையுடன் எதிரே பார்த்திருந்தாள் அவள் .

இதனை அவள் நளினி பேச ஆரம்பிக்கும்போதே தொடங்கியிருக்க வேண்டும் .அவள் கூற கூற மேலும் மேலும் அவள் பிடி இறுகியிருக்கிறது .இதோ …இப்படி முகிலியின் கை சிவந்து வலிக்கும் அளவு அந்த செய்தியின் தீவிரம் அவளுக்கு இருந்திருக்கிறது .

வைஷ்ணவியின் தோள்களை பற்றி உலுக்கினாள் முகிலினி .ஏதோ பிரமையிலிருந்து மீண்டதுபோல் நிமிர்ந்தவளின் விழிகளில் கண்ணீர கரை கட்டியிருந்தது .

” ரெஸ்ட்ரூம் போயிட்டு வர்றேன் ” முணுமுணுத்து விட்டு வகுப்பை விட்டு வெளியேறினாள் அவள் .அயர்ந்து போய் அமர்ந்திருந்தார் முகிலினி . இதற்கு என்ன அர்த்தம் ? நந்தனுக்கு என்கொயரி என்றால் இவள் ஏன் அதிர வேண்டும் .நேற்று லேப்பில் மாட்டிக்கொண்டது யார் ?

அவர் கூட நேற்று வீட்டிற்கு தாமதமாக வந்தாரே .சே அப்போதே நான் அவரிடம் கேட்டிருக்க வேண்டும் .இல்லையே அப்போதே ஏன் லேட்டுன்னு கேட்டேனே .என்ன சொன்னார் என யோசித்தவளுக்கு
நேற்று யதுநந்தனின் செய்கை நினைவு வந்தது .இப்போதும் கன்னம் சிவந்தது .

கன்னங்களை தேய்த்து விட்டபடி அருகில் பார்த்தாள் .நளினியும் , செல்வராணியும் இன்னமும் அந்த செய்திக்கான ஆதிமூலத்தின் தேடலில் ஆழ்ந்திருந்தனர் .பெஞ்சில் வசதியாக தலை சாய்த்து படுத்துக்கொண்டு முகிலினியின் கண்கள் கலங்கின .

ஆக நேற்று நான் கேட்ட கேள்வியிலிருந்து என்னை திசை திருப்பத்தான் அப்படி என்னிடம் நடந்து கொண்டாரா ? இல்லையில்லை அப்படியில்லை .அவர் அப்படிப்பட்டவரில்லை .தனக்குள்ளேயே அவனுக்காக தானே வாதாடிக்கொண்டாள் .

வீட்டிற்கு லேட்டாக வந்தவன் , கையில் துப்பாக்கியோடு வெளியே போனானே .எங்கே போனான் ? நேற்று இரவு வர வெகு நேரம் ஆயிற்றே ஏன் ? முகிலினிக்கு யோசித்து யோசித்து மண்டை குழம்பியது .

” என்னவாக இருந்தாலும் நேரடியாக என்னிடமே கேட்க வேண்டியதுதானே “, என்ற யதுநந்தனின் பேச்சு நினைவு வர , இன்று அவனிடமே எல்லாவற்றையும் நேரடியாக  பேசி விட வேண்டியதுதான் என முடிவு செய்தாள் .ஆனால் இந்த என்கொயரி ….இதில் நந்தனுக்கு எதுவும் பிரச்சினை வருமோ ? ….கலக்கத்துடன் நகம் கடித்தாள் முகிலினி .

அந்தக்கலக்கத்திற்கு அவசியமில்லை என்பது போல் ,அதன்பிறகு அந்த என்கொயரி பற்றிய பேச்சே வரவில்லை .அப்படி ஒன்று நடந்தது கூட யாருக்கும் தெரியவில்லை .ஆனால் நந்தன் பிரின்ஸியிடம் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தது மட்டும் தெரிந்தது .ஏனெனில் அவர்கள் வகுப்பிற்கு அவன் வரவில்லை .

வைஷ்ணவியின் கண்களில் கலக்கம் சிறிதும் குறையவில்லை .
அவள் உடலில் மெலிதாக ஓடிக்கொண்டிருந்த நடுக்கத்தை அருகிலிருந்ததால் முகிலினியால் உணரமுடிந்தது .என்னவென்று கேட்டால் மனம் வருந்தும்படி எதுவும் சொல்லிவிடுவாளோ என எண்ணி தன் இதழ்களை இறுக்கிக்கொண்டாள் முகிலினி .

” ஏன்டி நம்ம நந்தன் சார் எங்கே தங்கியிருக்கிறார்னு உனக்கு தெரியுமா ? ” திடீரென கேட்டாள் வைஷ்ணவி .




வாயை திறந்து பதில் சொல்லக்கூட மனமின்றி ” ம்ஹூம் ” என தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் முகிலினி .

” யாரிடம் கேட்பது ? ” தனக்குள்ளேயே யோசித்துக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.

அன்று மாலையும்  வீட்டிற்கு வந்தபோது யதுநந்தன் வந்திருக்கவில்லை .இப்பொழுதெல்லாம் தொடர்ந்து தாமதமாகவே வருகிறாரே .கையிலிருந்த காபி ஆறிக்கொண்டிருக்க டிவி திரையை வெறித்துக்கொண்டிருந்தாள் முகிலினி .

” ஒரு என்கொயரியால் எல்லாம் இவனை அசைக்க முடியுமா ? , விசாரணை கமிசன் வச்சவங்க அலறப்போறாங்க பாரு ” இப்படி சரஸ்வதியின் குரல் திடீரென ஒலிக்கவும் வெலவெலத்து போனாள் முகிலினி .

” அம்மா …எ…என்ன சொல்றீங்க ? ” தடுமாற்றத்துடன் தாயை ஏறிட்டாள் .

” இந்தக் குமாரை சொன்னேன் .நம்ம ராமுவை மாட்டி விடனும்னு அவன் மேல் என்கொயரி வைக்க போறானாம் .இதெல்லாம் ஒரு மேட்டரா ராமுவுக்கு ” டிவி சீரியல் நடிகர்களுடன் உறவு கொண்டாடிக்கொண்டிருந்தாள் சரஸ்வதி .

நிம்மதி பெருமூச்சு எழுந்தது முகிலினிக்கு .கதவு திறக்கும் சத்தம் கேட்டது .யதுநந்தன் என எண்ணி ஆவலுடன எட்டிப்பார்த்தாள் .எதிர்வீட்டு சுமதி .ஒரு பெரிய சாக்கு பையை தூக்கிக்கொண்டு உள்ளே வந்தாள் .அவள் துணி வியாபாரம் செய்பவள் .சுடிதார் மெட்டீரியல்களை விற்பனைக்காக கொண்டு வந்திருப்பாளாயிருக்கும் .

” வாங்கக்கா “, கதவை திறந்தாள் முகிலினி .” என்னம்மா காலேஜ் முடிந்ததா ? சரசுக்கா சீரியல் பார்க்கிறீங்களா ? அப்புறம் வரவா …? ” சரஸ்வதியிடம் கேட்டாள் சுமதி .

என்ன செய்வதென டிவியை ஒரு பார்வையும் சுமதியை ஒரு பார்வையும் பார்த்தாள் சரஸ்வதி .

” இல்லை நிறைய புது டிசைன் வந்திருக்கு .நம்ம பாப்பாக்கு காட்டலாமேன்னு எடுத்துட்டு வந்தேன் .பெரிய பாப்பா நாளைக்கு வர்றாளா ? அவளுக்கு இரண்டு பாருங்களேன் .” உள்ளே நுழைந்து விட்டால் இரண்டாயிரம் ருபாய்க்காவது பில் போடாமல் வெளியேற மாட்டாள் சுமதி .

புது டிசைன்ஸ் என்று அவள் கொண்டு வருபவைகளெல்லாம் பெரும்பாலும் ஒரு வருடத்திற்கு முந்தைய மாடலாகத்தான் இருக்கும் .இருந்தாலும் கொஞ்சம் கஷ்டப்படும் குடும்பம் என்பதால் அவளிடம வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தாள் சரஸ்வதி .

” இந்த டிசைன் நல்லாயில்லம்மா “என சிணுங்கும் பெண்களிடம் ” பரவாயில்லைம்மா உடுமாற்றுக்கு வைத்துக்கொள்ளுங்கள் ” என்றுவிடுவாள் .

சோபா முழுவதும் கடை பரப்ப ஆரம்பித்தாள் சுமதி .மனதில் எதுவும் பதியாமல் எடுத்ததையே மீண்டும் மீண்டும் பார்த்து விட்டு  வைத்துக்கொண்டிருந்தாள் முகிலினி .

” அக்கா அந்த சுண்டைக்காய் ஊறுகாய் பதம் எனக்கு வரவேயில்லைக்கா .கொஞ்சம் திரும்ப சொல்றீங்களா ? ” சரஸ்வதியிடம் கேட்டாள் சுமதி .

” ஏன் வரலை ? நான் இன்னைக்குதான் போட்டேன் .வா பதம் காட்டுறேன் ” சுமதியை அடுப்படிக்குள் அழைத்துச் சென்றாள் .

அருகில் ஏதோ சத்தம் கேட்டு நிமிர்ந்தாள் முகிலினி .யதுநந்தன் தான் .” என்ன ஷாப்பிங்கா …?”என்றபடி நின்றிருந்தான் .

” எப்போ வந்தீங்க ? கதவு திறக்கிற சத்தம் கேட்கலையே ?”

” அதுதான் சத்தமில்லாமல் உன் மனதுக்குள் வந்துட்டேனே ..” என சிரித்தான் .

சை இப்படித்தான் ஏதாவது கவிதையாக பேசி ,கவர்ச்சியாக சிரித்து கொஞ்சம் வேலை செய்கிற மூளையையும் செயலிழக்க வைத்து விடுகிறான் .

” என்ன இன்றும் லேட் ?  மெல்ல அவனிடம் கேட்டாள் .அவனோ குனிந்து அவள் முன் கிடந்த உடைகளை ஆராய்ந்து கொண்டிருந்தான் .

அலையலையாய் அவனது கருத்த கேசம் அவளருகில் தெரிந்தது .கைகளை உள்ளே விட்டு அளையத்தோன்றியது .அப்படி எதுவும் செய்து விடுவோமோ என பயந்து தன் இரண்டு கைகளையும் அழுந்த கோர்த்துக்கொண்டாள் முகிலினி .

அந்த துணிகளிலிருந்து இரண்டு  செட் தேர்ந்து எடுத்தவன் , அவளிடம் நீட்டினான் .




” எல்லாமே சுமார் ரகம்தான் .இருக்கிறதில் பெட்டராக செலக்ட் பண்ணேன் .தைத்து போட்டுக்கோ ” என்றுவிட்டு நடக்க தொடங்கினான் .

கையில் அவன் கொடுத்த துணிகளை பார்த்தபடி ஒரு நிமிடம் நின்றவள் அவன் வேகமாக மாடியேற போக ” இன்னைக்கும் வெளியே போறீங்களா ? “, என்றாள் .

” ஆமாம் , ” என்றவன் ஏறியிருந்த இரண்டு படிகள் இறங்கி கீழே அவளருகில் வந்து அவள் இடுப்பு பக்க சுடிதார் பகுதியை இழுத்து காட்டியபடி ” கொஞ்சம் ப்பிட்டாக தைத்து போட்டுக்கோ .இது போல் கிழவி போல் தொளதொளவென தைத்து போடாதே ” என்றுவிட்டு மேலே சென்றுவிட்டான் .

அவசரமாக கண்ணாடி முன் சென்று நின்றாள் முகிலினி .இந்த சுடிதார் கொஞ்சம் லூசாகத்தான் இருந்தது .எல்லாம் இந்த சுமதி அக்காவால்தான் .மெட்டீரியல்னு மட்டமா எதையாவது கொண்டு வந்து தர வேண்டியது .அப்புறமா தைத்து தருகிறேன்னு அப்படின்னு  சாக்குபை மாதிரி தைக்க வேண்டியது .இதில் வெளியே தைப்பதை விட இந்த அக்காவுக்கு நூறு ருபாய் அதிக கூலி வேறு .

இந்த தடவை சுடிதாரை வெளியே கொடுத்துதான் தைக்க வேண்டும் .என்று நினைத்துக்கொண்டாள் .
வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.ஐயோ நந்தன் வெளியே கிளம்பிவிட்டார் போலவே .அவரிடம் பேச நினைத்ததை பேசவேயில்லையே .

வேகமாக வாசலுக்கு சென்று பார்க்க கதவை திறந்து கொண்டு வந்தவள் தமிழினி .”ஓ இன்று வெள்ளிக்கிழமையோ ? இனி சனி , ஞாயிறு நந்தனுடன் பேச முடியாதே ? ..மனதினுள் சிறு தாங்கலுடன் எண்ணியபடி”  வாக்கா ஏன் இன்று லேட் ? “, என விசாரித்தபடி அபர்ணாவை தூக்கிக்கொண்டாள் .

தமிழினி வீட்டிலிருக்கும் நாட்களில் யதுநந்தனும் , முகிலினியும் பேசிக்கொள்ள சந்தர்ப்பங்கள் அவ்வளவாக வாய்ப்பதில்லை .அதிலும் இந்த ஞாயிற்றுக்கிழமை குலதெய்வம் கோவிலுக்கு போக வேண்டுமென   தமிழ்செல்வன் கூறிக்கொண்டிருந்தார் .

உள்ளே வந்து விட்ட தமிழினியை சரஸ்வதியும் , சுமதியும் வரவேற்று பேசிக்கொண்டிருந்தனர் .சோபா மேல் கிடந்த நந்தன் முகிலினிக்கென தேர்ந்தெடுத்த சுடிதார்களை வேகமாக எடுத்து ஓரமாக மறைவாக வைத்தாள் முகிலினி .

தமிழினிக்கு எப்போதுமே தங்கையின் சுடிதாரே அழகாக தெரியும் .முகிலினி முதலிலேயே தன் செலக்சனை முடித்து விடுவாள் .துணிகளை கலைத்துக்கொண்டே இருக்கும் தமிழினி கடைசியாக முகிலினி கை சுடிதாரைத்தான் தடவி பார்ப்பாள் .

போகிறாளென தூக்கி கொடுத்து விடுவாள் முகிலினி .ஆனால் இன்று அப்படியில்லை .அவளது நந்தன் அவளுக்காக தேர்ந்தெடுத்தது .அதனை அக்காவுக்கு கொடுக்க முகிலினி தயாரில்லை .

மறுநாளே அந்த சுடிதார்களில் ஒன்றை வேறு இடத்தில் கொடுத்து பிட்டாக தைத்து வைத் துக்கொண்டாள் . நந்தன் சாரையும் கோவிலுக்கு அழைத்திருப்பதாக தந்தை கூற மிகவும் மகிழ்ந்தாள் முகிலினி .இங்கேதான் பேச முடியவில்லை .கோவிலில் வைத்தாவது நந்தனிடம் எல்லா விபரங்களும் பேசி விட வேண்டுமென நினைத்துக்கொண்டாள் .

ஞாயிறு காலை அந்த சுடிதாரை அணிந்து , கண்ணாடியில் உடலை திருப்பி பார்த்து பிட்னெஸ் சரி பார்த்து திருப்தி பட்டுக்கொண்டாள் .

காலை எட்டு மணிக்கெல்லாம் கிளம்புவதாக ஏற்பாடு .எனவே தமிழினியின் கணவன் கதிரவன் முதல்நாள் இரவே வந்து தங்கிவிட்டான் .தமிழினியும் , கதிரவனும் , அப்புக்குட்டியுமாக சேர்ந்து கிளம்புவதற்கு முன் வீட்டையே தலைகீழாக புரட்டிப்போட்டுவிட்டனர் .

எலுமிச்சை சாதம் , புளியோதரை என தயாரித்துக்கொண்டிருந்த சரஸ்வதியிடம் வந்து ” அம்மா இவளைக்கொஞ்சம் கிளப்பி விடுங்களேன் ” என அப்புக்குட்டியை தள்ளி விட்டு போனாள் தமிழினி .

இவள் என்ன செய்கிறாளாம் ? குழந்தையை கிளப்புவதை விட என்ன பெரிய வேலை இருக்க போகிறது ? அம்மா எவ்வளவு வேலைதான் பார்ப்பார்கள் என எண்ணியபடி குழந்தையை தான் தூக்கிக்கொண்டாள் முகிலினி .

” நீங்க உங்க வேலையை பாருங்கம்மா.குட்டியை நான் கிளப்புறேன் ” என்றவள் அழகாக குழந்தையை ரெடி பண்ணினாள் .

வாசலில் வேன் வந்து நின்றுவிட்டது .அதே தெருவில் இருக்கும் தமிழ்செல்வனின் ஒன்றுவிட்ட தங்கை குடும்பமும் அவர்களோடு சேர்ந்து வருவதால் கொஞ்சம் பெரிய வேனாகத்தான் பிடித்திருந்தார் அவர் .

நிறையபேர் இருக்கிறோமே நந்தனுக்கு உட்கார இடம் இருக்குமா ? சிறு கவலையோடு வேனை எட்டிப்பார்த்து திருப்தியாக தலையசைத்தபடி திரும்பினாள் முகிலினி .

நந்தன் எதிரே நின்றான் .அவளது சுடிதாரை கவனித்தவன் சூப்பர் என சைகை செய்தான் .பிட்டான உடையில் , வடிவான அவள் இடையை அவன் பார்வை வருட , கண் பார்வையில் கை வருடலை உணர்ந்து சிலிர்த்த முகிலினி ஒரு விரலால் அவனுக்கு பத்திரம் காட்டினாள் .




அப்போதுதான் அவனை கவனித்தவள் அவன் இன்னமும் இரவு உடையிலேயே இருப்பது கண்டு கிளம்பலையா என ஜாடையாக கேட்டாள் .

” ம்ஹூம் …” என தலையசைத்தவன் , கொஞ்சம் வேலை இருக்கிறது நீங்கள் போயிட்டு வாங்க என்றான் சைகையிலேயே சொல்லிவிட்டு மாடிக்கு போய்விட்டான் .

திடீரென சுற்றுப்புறம் வெப்பம் கூடியதை போல் உணர்ந்தாள் முகிலினி .தலை வலிப்பது போல் , வயிறு வலிப்பது போல் என்னென்னவோ தோன்றியது அவளுக்கு .பேசாமல் வீட்டிலேயே இருந்து விடுவோமா என யோசித்து விட்டு , அது முடியாதென்பதால் மனமின்றி கிளம்பினாள் .

மாடி சன்னல் வழியாக ” பை ” சொன்ன யதுநந்தனுக்கு கோபம் என சைகை காட்டி விட்டு முகத்தை தூக்கியபடி வேனினுள் ஏறிக்கொண்டாள் .

கோவிலில் இறைவனை தொழக்கூட மனம் கூடவில்லை .அப்படியென்ன பெரிய வேலை வந்துவிட்டது .என்னை விட .இருக்கட்டும் வீட்டிற்கு போய் கவனித்துக்கொள்கிறேன் .அன்றைய பொழுது முழுவதும் இதே பொருமலிலேயே கழித்தாள் .

மாலை திரும்பி வந்ததும் , முதலில் மாலதி குடும்பத்தினர் இறங்குவதற்காக அவர்கள் வீட்டின் முன் வேன் நின்றது .அனைவரும் வரும் முன் நந்தனிடம் நாலு வார்த்தை பேசி விட வேண்டுமென நினைத்தாள் முகிலினி .

“, அம்மா நான் போய் வீடு திறந்திருக்கான்னு பார்த்து விட்டு , இல்லைன்னா திறந்து வைக்கிறேன் ” என முன்னால் வேகமாக நடந்தாள் .

வீட்டு சாவி நந்தனிடம் ஒன்று உண்டு .நந்தனை முதலில் பார்த்து ஏன் வரவில்லையென சண்டை போட வேண்டுமென எண்ணித்தான் முகிலினி முன்னால் வந்ததே .ஆனால் ஏன் அப்படி வந்தோம் ? என அன்று மட்டுமல்ல .அதன் பிறகு பலநாட்கள் நினைத்து நினைத்து நோகும்படியான ஒரு சம்பவம் அன்று நடந்தது .

வீட்டின் அருகே வரும்போதே கதவு திறந்திருப்பதை பார்த்து விட்டு , நந்தனுக்கு திடீர் அதிர்ச்சி தர எண்ணி , காம்பவுண்ட் கேட்டை சத்தமில்லாமல திறந்தபடி பூனை போல் உள்ளே நுழைந்தாள் .

ஏதோ விருப்பமற்ற ஒரு சூழல் அங்கே நிலவுவது போல் ஒரு தோற்றம் எழுந்தது முகிலினியினுள் .கண்ணில் பட்ட காட்சியில் வல்லூறொன்றால் பிய்த்து எறியப்பட்டது போல் துடித்து விழுந்தது அவள் உள்ளம் .

உள்ளே ஷோபாவில் அருகில் அமர்ந்திருந்த நந்தனின் கைகளை பிடித்தபடி  “என் வாழ்க்கையையே உங்கள் கையில் கொடுத்து விட்டேன் .இனி அது உங்கள் பொறுப்புதான் “, என வசனம் பேசிக்கொண்டிருந்தாள் வைஷ்ணவி .




What’s your Reaction?
+1
22
+1
11
+1
0
+1
4
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!