Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம் -32

(32)

” ஏன் பெரியம்மா எப்படி உங்களால் இப்படியெல்லாம் செய்ய முடிந்தது ? இதற்காகவா  என்னை பல முறை கொல்ல முயன்றீர்கள் .?அப்படி என்னை கொன்று உங்கள் மகளுக்கு கொடுக்கும் வாழ்வில் அவள் வாழ்வாளென்றா நினைத்தீர்கள் ? ” உள்ளம் நொந்து கேட்டாள் முகிலினி .

” ஏய் போதும்டி .நிறுத்து .எல்லாவற்றிற்கும் காரணம் நீதான் .நீ மட்டும் எங்கள் நந்து வாழ்வில் வராமல் இருந்தால் இப்போது எங்கள் ஆசையெல்லாம் நிறைவேறியிருக்கும் .” கத்தினாள் சந்திரவதனா .

வருத்தத்தோடு அவளை பார்த்த முகிலினி ” முதலில் யதுவை கொல்ல பார்த்தீர்கள் .பிறகு என்னை .இதில் பெரிய கொடுமை நீங்கள் யதுவிற்கு வைத்த குறியில் தெரியாமல் அகப்பட்டு என் தந்தை இறந்ததுதான் .”என்றாள் .

அவசரமாக இடையிட்டான் யதுநந்தன் .” முகில் விடு. முடிந்தவற்றை பேச வேண்டாம் ” என்றான் .

“என்னது .யதுவிற்கு வைத்த குறியா ? அறிவு கெட்டவளே அது உனக்கு வைத்த குறிதான் .நந்து  வாழ்விலிருந்து உன்னை விலக்க உன்னை தீர்த்து கட்ட ஆளை ஏற்பாடு பண்ணினால் அதில் உங்கப்பன் வந்து மாட்டினான் .உன் அப்பனை கொன்று எங்களுக்கென்ன ஆகப்போகிறது .? நீ மட்டும் காதல் , கீதல்னு இறங்காமல் இறங்காமலிருந்தால் உன் அப்பா உயிருடனேயே இருந்திருப்பார் ” சந்திரவதனா நீட்டி முழக்க அவள் தலையில் இடியாக இறங்கியது ஒரு அடி .

” சீ ..நீயெல்லாம் ஒரு பொண்ணா .? உன்னை என் மகளென்று சொல்லவே என் நா கூசுகிறது .” பாட்டி குமுறிக் கொண்டிருக்க பொடிப்பொடியாக உதிர்ந்து கொண்டிருந்தாள் முகிலினி .

கடவுளே அப்போது என் அப்பாவின் சாவிற்கு காரணம் நான்தானா ? இவ்வளவு நாட்களாக என் யதுவை வதைத்துக் கொண்டிருந்தேனே .அன்று இறுதி தேர்வென்று தந்தையுடன் காரிலேறி சென்று கொண்டிருந்த போது , தந்தைக்கு போன் வர , அவர் அவசர வேலையென்று முகிலினியை பஸ்ஸ்டாப்பில் இறக்கி விட்டு சென்று விட்டார் .

ஆக தான் காரினுள் இருப்பதாக எண்ணி நிகழ்த்தப்பட்டிருக்கிறது அந்த விபத்து .தன்னால் உயிரிழந்திருக்கிறார் தந்தை .இது தெரியாமல் …கண்களால் கணவனை யாசித்தாள்.புரிந்து கொண்டதன் அறிகுறியாய் ஆதரவு பார்வையளித்தான் அவன் .

” பாட்டி இவர்களை என்ன செய்வது ? ” ஈஸ்வரமூர்த்தியையும் , சந்திரவதனாவையையும் சுட்டி யதுநந்தன் பாட்டியிடம் கேட்டான் .அவர் திணறினார் .

மாபெரும் பாதகங்கள் புரிந்துள்ளனர் இருவரும். ஆனால் …அவர் மகளாயிற்றே …அவர் ரத்தமாயிற்றே …தண்டனை தர முடியுமா ? இல்லை மன்னிப்பு வழங்கினால் அது அவர் , மகனுக்கும் பேரனுக்கும் செய்யும் துரோகமல்லவா ?

கலங்கிய கண்களுடன் பேரனை ஏறிட அவனோ சிறிதும் இளக்கம் காட்டாமல் நின்றான் .தண்டிக்க போகிறீர்களா ? இல்லையா ? என்ற பார்வையுடன் .

பாட்டியின் பார்வை அருகிலேயே நொந்த பார்வையுடன் இருக்கும் முகிலினியை அடைந்தது .இந்த பெண் தன் பேரனை காதலித்த குற்றத்திற்காக தன் தந்தையையே இழந்து விட்டாளே .மேலும் இங்கு வந்த நாள் முதல் தலைக்கு மேல் தொங்கும் கத்தியுடன் வேறு வாழ்ந்து வந்திருக்கிறாள் .

லேசாக தொண்டையை செருமி தன்னை சரி செய்து கொண்டவர் ” முகிலினி இவர்களை என்ன செய்வதென்று நீதானம்மா தீர்மானிக்க வேண்டும் .உன் முடிவிற்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுகிறோம் ” என்றார் .

மெல்லிய அதிர்வுடன் யதுநந்தனை நோக்கினாள் முகிலினி .அவன் பாட்டியிடம் மெச்சுதல் பார்வையொன்றை வீசி விட்டு , முகிலினியிடம் தொடரும்படி ஜாடை காட்டினான் .

குற்றவாளிகளை நோக்கினாள் .குரோதத்துடன் அவளை வெறித்தபடியிருந்தனர் அவர்கள் .

சந்தோசமாக குணாவின் கை பிடித்தபடி உள்ளே வந்தாள் சௌம்யா .

” நந்து இவர் சும்மா நடித்தாராம் .என்னைப் பார்க்க இவர் வந்தால் நான் தற்கொலை செய்து கொண்டு விடுவேன் என இவரை மிரட்டி வைத்திருந்தேன் .அதனால் நானாகவே இவரை பார்க்க வர வேண்டுமென்று இப்படி செய்தாராம் .எவ்வளவு திமிர் பாரேன் இவருக்கு .கொஞ்ச நேரத்தில் எனக்கு உயிரே போன மாதிரியாகிவிட்டது ” சில்லறையாக சிதறியபடி சிரித்தாள் .

தன் தந்தையை கண்டதும் அதிர்ந்தாள் .” அப்பா ..நீ…நீங்க …உயிரோடா ….? ” திக்கினாள் .

உன் அப்பாதான் உன் அம்மா பின்னிருந்து இயக்கியவர் .என்னை கொல்ல முயற்சித்தவர் .” யதுநந்தன்

” என்னது …? உன்னையா …? அம்மா நீங்கள் முகிலினியைத்தானே ….அதுவும் கூட உயிர் பயம் காட்டி விரட்டி விடலாமென்றுதானே என்னிடம் கூறினீர்கள் .நந்துவை ஏன் கொல்ல நினைத்தீர்கள் ? ” சௌம்யாவின் பேச்சிலிருந்து இந்த சதியின் பெரும் பகுதியில் அவளது பங்கு இல்லையென தெரிந்தது .

முகிலினியின் அருகே சென்று ” முகிலினி நான் அம்மாவின் பேச்சைக் கேட்டு புத்தியில்லாமல் உன்னிடம் நடந்து கொண்டேன் .என்னை மன்னித்து விடு ” என்றவள் யதுநந்தனின் கைகளை பிடித்து முகிலினியின் கைகளோடு இணைத்து ” உன் கணவன் .உனக்கு மட்டுமே உரிமையானவன் .எனக்கு எப்போதும் நல்ல நண்பன் மட்டுமே ” என்றாள் .




மகிழ்ச்சியோடு அவளை பார்த்த முகிலினிக்கு “, முகில் உனக்கு பாட்டி ஒரு வேலை கொடுத்தார்கள் “, நினைவூட்டினான் யதுநந்தன் .பெருமூச்சுடன் தலையாட்டினாள் முகிலினி .

” பாட்டி நமக்கு திருச்சி அருகே கொஞ்சம் விவசாய நிலம் இருக்கிறதல்லவா ? அது அருகிருந்து கவனிக்க ஆளின்றி தரிசாக மாறிக்கொண்டு வருவதாக யது சொன்னார் .அதை இவர்கள் பெயரில் எழுதி இவர்களை அங்கே அனுப்புங்கள் .அவர்கள் நிலத்தை செம்மை படுத்தி உழைத்து உணவுண்ணட்டும் .இப்போதைக்கு நமது நாட்டிற்கு விவசாயிகள் தான் தேவை .” என்றாள் .

இந்த முடிவில் அனைவருமே ஆச்சரியத்தில் மூழ்கினர் .யதுநந்தன் கண்களில் பாராட்டுடன் மனைவியை நோக்கினான் .பாட்டி நன்றியுடன் அவளை நோக்கினார் .சௌம்யா ஆச்சரியமாக பார்த்தாள் .அடி அறிவு கெட்டவளே பார்வை பார்த்தாள் வைஷ்ணவி .

இவள் தந்தையை கொன்றிருக்கிறோம் .எப்படியும் இவள் தங்களை போலீசில் ஒப்படைக்க சொல்ல போகிறாள் .தங்களை தண்டிக்க துடித்துக் கொண்டிருக்கும் யதுநந்தனும் சாட்சியங்களோடு சந்தோசமாக அதை செய்ய போகிறான் .ஒன்று கழுத்துக்கு சுருக்கு, அல்லது காலம் முழுவதும் சிறைவாசம் என்ற முடிவிற்கு இருவரும் வந்துவிட்ட போது , இந்த தண்டனை அவர்களை ஆச்சரியப்படுத்தியது .

அந்த திருச்சி நிலத்தை அவர்கள் அறிவார்கள் .அருகிருந்து செம்மைப்படுத்தி கவனித்துக் கொண்டால் , அது பொன் விளையும் பூமி .தங்களை மன்னித்ததோடு தங்கள் எதிர்கால வாழ்விற்கும் வழி காட்டி விட்டாளோ இவள் ? சிறு நெகிழ்ச்சி அவர்களிருவருக்கும் .

” உங்கள் உடைகளை மட்டும் எடுத்து கொண்டு உடனே கிளம்புங்கள் .அங்கிள் நீங்கள் காரில் போய் இவர்களை அங்கே இறக்கி விட்டு விட்டு வாருங்கள் ” யதுநந்தன் மோகனரங்கத்தை உடன் அனுப்பினான் .

தன்னை நோக்கிய தாய் , தந்தையிடம் ” நான் குணாவுடன் மும்பை போக போகிறேன் .இந்த குடும்பத்திற்கு நாம் செய்த துரோகத்திற்கு இனி ஒரு நிமிடம் கூட என்னால் இங்கே இருக்க முடியாது ” என்றவள் சுற்றிலும் பார்த்து வணங்கியவள் அனைவரின் முன் தரையில் விழுந்து வணங்கினாள் .

” எல்லோரும் ஒரு நிமிடம் இருந்து விட்டு போங்கள் ” என்ற பாட்டியம்மா கோவிலினுள் சென்றார் .அங்கே அம்மன் கழுத்தில் மீண்டும் போடப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்த அந்த மங்கலநாணை அம்மனை வணங்கி எடுத்தார் .

” நந்தா நம் குலத்திற்கு ஏற்ற விளக்கு , இந்த மங்கலநாணிற்கேற்ற இடத்தை நீ கையோடு அழைத்து வந்துவிட்டாய் .இனி நம் பரம்பரை முகிலினி மூலமாப தழைத்து வளர போகிறது .இதனை அவள் கழுத்தில் கட்டிவிடப்பா ” என்றார் .

அங்கே நிறைந்த மனதுடன் இருந்தது யதுநந்தன் மட்டுமல்ல .அனைவருமே முழுமனதுடன் அந்த திருமணத்தை ஆசீர்வதித்தனர் .




What’s your Reaction?
+1
32
+1
16
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!