Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம்-28

28

சாப்பிடு .” குழைவான குரலில் உபசரித்துக் கொண்டிருந்தாள் . சௌம்யா

” அப்படியா சௌம்யா .எங்கே பார்க்கலாம் ..” உட்கார்ந்து உண்டு கொண்டிருந்த கணவனின் தோளை லேசாக தொட்டு , குனிந்து அவன் தட்டிலிருந்தே சிறிது எடுத்து ருசி பார்த்தாள் பின்னாலேயே வந்துவிட்டிருந்த முகிலினி .

” அட ஆமப்பா ரொம்ப ருசியாக இருக்கிறது .நீங்களும் சாப்பிட்டு பாருங்கள் யது ” என்றவள் ஒரு கவளம் எடுத்து தானே கணவன் வாயில் திணித்துவிட்டு ” நல்லாயிருக்கில்ல ” என அபிப்பிராயம் வேறு கேட்டாள் .

யதுநந்தன் பல்லை கடித்த ஓசை வாசல் வாட்ச்மேன் வரை கேட்டது .
” சாப்பிடுவதானால் தட்டை போட்டுக் கொண்டு எதிரே உடகார்ந்து சாப்பிடு ” பற்களுக்கிடையே வார்த்தைகள் நெறிபட்டு விழுந்தன .

” இருக்கட்டும்பா …எனக்கு இப்போ அன்று என் அம்மா வீட்டில் வைத்து என் கையில் கடித்துவிட்டு வைத்திருந்த ப்ரட்டோஸ்ட்டை பிடுங்கி தின்றீர்களே .அது ஞாபகம் வருகிறது ” குயில் கூவிக் குழைந்தது முகிலினியின் குரலில் .

போதும் வாயை மூடு எனும் கணவனின் சைகையை கவனிக்காதவள் போல் திரும்பி சௌம்யாவிடம் ” ஏன் சௌமிக்கா ..இது போல் உங்களுக்கு ஏதாவது காதல் அனுபவம் இருக்கிறதா ? நீங்கள் காதல் மணம் புரிந்தவராயிற்றே .அதுவும் பெற்றோர்களை கூட உதறிவிட்டு போகும் அளவு ஆழமானதாயிற்றே உங்கள் காதல் .” கூர்மையான பார்வையால் சௌம்யாவை தைத்தபடி கேட்டாள் .

முகம் வெளுத்து வாயடைத்து நின்றாள் சௌம்யா .தட்டிலேயே கையை கழுவி விட்டு எழுந்துவிட்டான் யதுநந்தன் .

” உட்கார்ந்து கொட்டிக்கோ ” முகிலினியிடம் காய்ந்துவிட்டு கிளம்பியவன் கைகளை பற்றி அவனை நிறுத்தினாள் முகிலினி .

முகம்  இறுகி நின்ற கணவனை பார்த்து பளிச்சென பற்கள் தெரிய கவர்ச்சியாக சிரித்தவள் ” என்ன வாயை கழுவியிருக்கிரீர்கள் .சிறு பிள்ளை போல் ” என்றபடி இடது கையால் அவன் தோளை பற்றி நுனிக்காலில் உயர்ந்து வலதுகையில் தன் புடவை தலைப்பை எடுத்து எட்டி அவன் மீசை மேல் இல்லாத உணவுத் துணுக்கை துடைத்து விட்டாள் .

தொடர்ந்து அவன் கழுத்து டையை சரிசெய்தவள் ” இம் இப்ப சரி. ..நீங்கள் போகலாம் ” என்றாள் .வாசல் வரை தன்னை திரும்பி பார்க்காமலேயே சென்ற கணவனுக்கு இங்கிருந்தே கையாட்டினாள் .

தன்னை முறைத்தபடி நின்றிருந்த சௌம்யாவை திரும்பி பார்த்துவிட்டு ” அக்கா எனக்கு பசிக்கிறது .நான் சாப்பிட போகிறேன் .நீங்கள் பிறகு சாப்பிடுங்களேன் . வைஷு வாடி சாப்பிடலாம் ” என்று அவளை அழைத்தாள் .

இருவருமாக அமர்ந்து சாப்பிட தொடங்கினர் .கலங்கிய கண்களை மறைத்தபடி அங்கிருந்து நகர்ந்தாள் சௌம்யா .” ஏய் என்னடி அழுதுட்டு போறாளா ? ” கிசுகிசுத்தாள் வைஷ்ணவி .

” ஆமான்டி …அவள் பழைய காதல் நினைவுகளை தூண்ட வேண்டுமென்று தான் அப்படி பேசினேன் .கண்டிப்பாக இதற்கு நமக்கு பலன் இருக்கும் ” உறுதியாக கூறினாள் முகிலினி .

” ம் …பார்க்கலாம் …உனக்கு எப்படியடி இவள் மேல் சந்தேகம் வந்தது .?” சாப்பிடுவது போல் தலையை குனிந்து கொண்டே முணுமுணுத்து கேட்டாள் வைஷ்ணவி .

சந்திரவதனாவை இனம் கண்டு கொண்ட அந்த நாள் நினைவிலாடியது முகிலினிக்கு .அன்றுதானே நான் என்னவனின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டேன் .கைகள் அநிச்சையாக கன்னம் தடவியது .அப்ப்ப்பா …என்ன அடி …?இருக்கட்டுன்டா இதற்கெல்லாம் நீ எனக்கு பதில் சொல்லியே ஆகனும் ..மனதிற்குள்ளாக கணவனுடன் பேசிக் கொண்டிருந்தவளின் தோளில் இடித்தாள் வைஷ்ணவி .




” ஏய் உன்கிட்டதான்டி பேசிக்கிட்டிருக்கேன்.” என்றாள் .

” ம்…அதை உனக்கு சொல்வதை விட கண்ணால் காண்பிக்கிறேன் வா “

கைகளை கழுவிவிட்டு இருவரும் ஹாலுக்கு வந்தனர் .இங்கு நடந்ததை சௌம்யா தன் அன்னையிடம் ஒப்புவித்து விட்டாள் போலும் .சந்திரவதனா வேகமாக அறையை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தாள் .

ஓரமாக வைத்திருந்த அழகு செடி தொட்டி ஒன்றினுள் கையை விட்டு அதன் மண்ணை தன் கைகளில் தீட்டிக் கொண்டாள் முகிலினி .

” வெளியே கிளம்பி விட்டீர்களா பெரியம்மா ? ” பவ்யமாக சந்திரவதனா அருகில் சென்று கேட்டாள் .

“சௌம்யாவிடம் என்ன சொன்னாய் ? ” அனல் பறந்தது சந்திரவதனா பேச்சில் .

” சௌமிக்காவிடமா ? …நானா …? என்ன கூறினேன் …? ” யோசிப்பது போல் இருந்து விட்டு , “மறந்து விட்டதே பெரியம்மா.அக்கா என்ன கூறினார்கள் ?”

சந்திரவதனாவின் நெஞ்சு ஆத்திரத்தில் ஏறித் தாழ்ந்தது .” அடியேய் …”, என்றபடி பாய்ந்தவள் முன் கைகளை நீட்டியவள் ” கத்தாதீர்கள் பெரியம்மா …” என்றவள் ” ஐயோ இதென்ன ஒரே தூசு உங்கள் சேலையில் …” என்று வேகமாக கைகளை கொண்டு வர சட்டென பிடித்து நிறுத்தப்பட்டது அவள் கை .

” வைஷ்ணவி டிரைவரை காரெடுக்க சொல் போ …” தன் பின்புறம் நின்று கொண்டி ருந்த வைஷ்ணவியை வெளியேற சொன்னாள் சந்திரவதனா .

தோழியின் கண்ணசைவில் வெளியேறி வாசல் கதவின் பின்புறம் மறைந்து நின்று பார்த்தாள் வைஷ்ணவி .அவள் வெளியேறியதும் தன் கைப்பிடிக்குள் இருந்த முகிலினியின் கையை இறுக பற்றி வேகமாக திருப்பி அவள் முதுகின் புறம் கொண்டு சென்று வளைத்து பிடித்தாள் சந்திரவதனா .

” எவ்வளவு திமிர்டி உனக்கு ? என் மேலா மண் பூச வருகிறாய் ? ” உறுமினாள் .

” ஐயோ விடுங்க பெரியம்மா வலிக்குது “, மெல்லிய குரலில் கத்தினாள் முகிலினி .

“, வலிக்குதா…இதற்கேவா …நீ இந்த வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து என் நெஞ்சமெல்லாம் வலிக்கிறதே .அதை நான் தாங்கிக் கொள்ளவில்லை ” மேலும் கைகளை முறுக்கினாள் .

” பெரியவள்  நான் இருக்கிறேன் .கணவனை விட்டு விட்டு வந்து என் மகள் இருக்கிறாள் .கண்டு கொள்ளாமல் புருசனும் , பொண்டாட்டியுமாக நீச்சல்குளத்திலும் , அடுப்படியிலுமாக கொஞ்சிக்கொண்டு திரிகிறீர்களா ? .பெண்ணென்றாலே ஒதுங்கி போகும் எங்கள் நந்துவை இப்படி மாற்றிய உன்னை நான் சும்மா விடுவேனென்றா நினைக்கிறாய் ?

“, இதோ பார் இனியும் உன்னால் இங்கே இருக்க முடியாது .விரைவிலேயே  , நந்து எங்கள்  குலதெய்வம் கோவிலில் வைத்து சௌம்யாவின் கழுத்தில் எங்கள்  பரம்பரை மங்கலநாண் பூட்டி அவளை தன்  மனைவியாக மாற்றிக் கொள்ள போகிறான் .அதை கண்ணார கண்டுவிட்டுதான் போக வேண்டுமெனில் இங்கேயே இரு “

ஒரே உதறலில் சந்திரவதனாவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்து கொண்டாள் முகிலினி .” அது உங்கள் கனவில்தான் நடக்கும் ” குரலை உயர்த்தினாள் .

” எதடி கனவு ..இது உண்மையில் நடக்க போவது .நீ என்னதான் சௌம்யாவின் மனதை கலைக்க பார்த்தாலும் நீ நினைப்பது நடக்காது ” தலை நிமிர்த்தி கூறினாள் சந்திரவதனா .

” மிகுந்த நன்றி பெரியம்மா .”கேலியாக  குனிந்து அவளுக்கு நன்றி சொன்னாள் முகிலினி .

புரியாமல் பார்த்தவளிடம் ” உங்கள் முயற்சி உங்களுக்கு .என் முயற்சி எனக்கு .பார்க்கலாமா ? ” சவாலாக விரலுயர்த்தி காண்பித்த முகிலினியின் குரல் இரும்பினை ஒத்திருந்தது .

” என்னிடமே சவாலா ..மிஞ்சி ..மிஞ்சி போனால் என்ன செய்வாய் ? உன் புருசனிடம் போய் சொல்வாய் .உடனே அதை செய்தாயானால் ……”

” இல்லை …அப்படி செய்யப்போவதில்லை .கண்டிப்பாக இல்லை…என்னை நானே பார்த்துக் கொள்ள போகிறேன் ” இடையிட்டு கூறினாள் முகிலினி .

” நல்லாதான்டி சமாளிக்கிறாய் .அப்படியே போய் சொன்னாலும் உன் புருசன் நம்பனுமே …” நக்கலடித்தாள் சந்திரவதனா .

” என்ன கிண்டல் பண்ணுகிறீர்களா  ? “, கோபமான குரலில் கேட்ட முகிலினி அவளுக்கு பின் கண்களை ஓட்டி ” யது ..என்ன திடீர்னு …? எதையும் மறந்து விட்டீர்களா ? “,என்றாள்

நேராக முகிலினியை பார்த்து பேசிக் கொண்டிருந்த தன் பார்வையை சட்டென அங்குமிங்குமாக அலையவிட்டபடி ” நந்து என்னப்பா ? ” என திரும்பிய சந்திரலேகா அங்கு யாருமின்றி திகைத்து திரும்பி பார்த்தாள் .

கைகளை குறுக்கே கட்டியபடி அவளை கேலி புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் முகிலினி .” ஏய் …” ஆத்திரத்துடன் அவள் கழுத்தை நெறித்து விடும் நோக்குடன் வந்த சந்திரலேகா கைகளை தன் மண் கரங்களால் தடுத்தவள் ” என் புருசனை எப்படி கைப்ற்றுவதென்று எனக்கு தெரியும் .நீங்கள் இதில் தலையிட்டால் உங்கள் முகத்தில் ….” என்றவள் தன் கரங்களில் படித்திருந்த மண்ணை சந்திரலேகா முகத்தில் அப்பினாள் .

ஒற்றை விரலால் அவளை எச்சரித்துவிட்டு வெளியேற அங்கேயே உறைந்து நின்றாள் சந்திரவதனா .

உறைந்து நின்ற வைஷ்ணவியை உலுக்கினாள் முகிலினி .” என்னடி நடந்ததெல்லாம் பார்த்தாயா ? “

” ஏன்டி இப்படியெல்லாமா ஒரு பொம்பளை பண்ணுவா ? ” ஆற்றாமையுடன் கேட்டாள் வைஷ்ணவி .

” அன்று கரண்ட் இல்லாமல் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தனர் .நான் மேலே நின்று மெழுகுவர்த்தி வெளிச்ச அழகை ரசித்துக் கொண்டு நின்றிருந்தேன் .அப்போது கரண்ட் வந்துவிட எல்லா விளக்கும் எரிந்தது .

சற்று முன் வாரி இறைத்து பரப்பிய உன் வெளிச்சம் இப்போது எங்கே போயிற்று ? “, என மானசீகமாக மெழுகுவர்த்தியுடன் பேசிக்கொண்டு நிற்கிறேன் .

இந்தம்மா உள்ளேயிருந்து வருகிறார்கள் .சுற்றி சுற்றி பார்த்து விட்டு , “இந்த வேலைக்கார நாய்களெல்லாம் எங்கே போயிற்று .எதுவும் உருப்படி கிடையாது .சௌம்யா கைக்கு மட்டும் வீட்டு அதிகாரம் வரட்டும் .அப்புறம் இதுங்களை கவனிச்சிக்கிறேன் ” சொல்லிட்டு மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து அதே இடத்தில் வைத்துவிட்டு டக்கு  டக்குன்னு நடந்து போய் ஒவ்வொன்னா அணைக்கிறாங்க .

நான் இப்போ நீ நிற்கிறாயே அது போல் உறைந்து போய் நிற்கிறேன் .சௌம்யா கையில் அதிகாரமென்றால் , அவளை யதுவிற்கு திருமணம் முடிக்க நினைக்கிறார்களோ ? என யோசித்து கொண்டிருக்கும் போதுதான் யது வந்து , யார் மேல் சந்தேகமென்று என்னை உலுக்குகிறார் .

இருந்த குழப்பத்தில் சௌம்யா மேல் என்று சொல்லி விட்டு நன்றாக வாங்கி கட்டிக் கொண்டேன் .” என்று தன் கன்னத்தை தடவிக் கொண்டாள் முகிலினி .

தலையை உலுக்கிக் கொண்டாள் வைஷ்ணவி .” சை இதுகெல்லாம் என்ன ஜென்மங்களோ ? “, நீ என்னடி அந்தம்மாவுக்கு நன்றியெல்லாம் வேறு சொல்கிறாய் ? “,எரிச்சலுடன் கேட்டாள் .

“பெரியம்மா அவர்களை அறியாமலேயே நமக்கு ஒரு தகவல் கொடுத்தார்கள் கவனித்தாயா ? …சௌம்யா மனதை கலைக்க நினைத்தாலும் நடக்காது என்று …அப்போது சௌம்யா மனது கலங்கிய குட்டையாக  இருக்கிறது என்றுதானே அர்த்தமாகிறது “

” சூப்பர்டி …அப்போ அதில் எப்போ நாம் மீன் பிடிக்கலாம் ..சொல்லு…சொல்லு …” என பறந்தாள் வைஷ்ணவி .




” சொல்றேன்டி ..அதுக்கு முன்னால் இன்றைக்கு என் கணவருக்கு இருக்கு .காலையில் ஆபீசை சாக்காக வைத்து ஓடி விட்டார் .இரவு வரட்டும் எங்கே ஓடுகிறார்னு பார்க்கிறேன் “

ஓசையின்றி மெல்லியதாக கை தட்டினாள் வைஷ்ணவி .” சூப்பர்டி ..இப்போதான் நீ என் முகிலினி .அதிலும் அந்த பெரியம்மாவின் மு கத்தில் மண் பூசினாயே …அட்டகாசம் போ ..” என்றாள் .

” என்னதான் இருந்தாலும் வயதில்  பெரியவர்கள்டி .இப்படி நடந்து கொள்வது எனக்கே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது “

” வயதிற்கேற்றாற் போல் அவர்கள் நடந்து கொண்டால் நீ ஏன்டி இப்படி நடக்க போகிறாய் ? ” தோழியை சமாதானப் படுத்தினாள் வைஷ்ணவி .

இரவு ஏழு மணியிலிருந்து கணவனுக்காக காத்திருந்தாள் முகிலினி .அவனோ நிதானமாக இரவு பத்து மணிக்கு உள்ளே நுழைந்தான் .

வீட்டிற்கு வரும் நேரத்தை பார் .இருக்கட்டும் பிரச்சினைகள் எல்லாம் முடியட்டும் .உன்னை இதிலெல்லாம் மாற்றுகிறேன் .காலையிலிருந்து வேலை பார்த்த அலுப்பு உடல் முழுவதும் தெரிந்தாலும் , அந்நிலையிலும் கம்பீரம் குறையாமல் மாடியேறும் தன் கணவனை ரசித்தபடி நின்று கொண்டிருந்தாள் முகிலினி .

இப்படியே ஓடிப்போய் இவன் கழுத்தை கட்டிக் கொண்டால் என்ன செய்வான் ? அப்போது கணவனின் முக மாறுதல்களை கற்பனையில் கண்டு கொண்டிருந்த போது , அவள் நினைத்தது அவளின்றியே நடந்தது .

ஓடி வந்து யதுநந்தனின் கழுத்தை கட்டிக்கொண்ட சௌம்யா ” நந்து இந்த நல்ல செய்தியை சொல்வதற்காக ரொம்ப நேரமாக காத்துக் கொண்டிருக்கிறேன் .
எனக்கு விவாகரத்து கிடைத்து விட்டது .” உற்சாக பந்தாக துள்ளினாள் .

மண்துகள்களாக உதிர்ந்து கொண்டிருந்தாள் முகிலினி .




What’s your Reaction?
+1
17
+1
14
+1
4
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!