Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம் -5

( 5 )

மிக அழகான அமெரிக்க ஆங்கில உச்சரிப்பில் ஆனால் எளிதாக அவர்களுக்கு புரியும் வார்த்தைகளை போட்டு அற்புதமாக பாடம் எடுத்துக்கொண்டிருந்தான் யதுநந்தன் .வகுப்பு முழுவதும் ஒரு வித அமைதி. அத்தோடு ஒருவித ஆவல் .பாடம் கற்கும் ஆர்வம் .யதுநந்தனின் ஒவ்வொரு வகுப்பிலும் ஏற்படும் ஆச்சரியம் தவறாமல் இந்த வகுப்பிலும் முகிலினிக்கு ஏற்பட்டது .

அந்த இன்டெர்னலில் யதுநந்தனின்  பாடத்தில் , பெயிலானவர்கள் மிக மிக குறைவு .விரல் விட்டு எண்ணிவிடலாம் .வரப்போகும் செமஸ்டரில் அனைவரையும் பாஸ் பண்ண  வைத்து விடுவதாக யதுநநதன் கூறியிருந்தான் .இது எப்படி சாத்தியமானதென்று முகிலினிக்கு புரியவேயில்லை .

யதுநந்தனை ரசித்தபடி படித்தார்களோ ? இல்லை அவன் பாடம் நடத்திய விதத்திற்கு படித்தார்களோ ? …..தெரியாது .மாணவர்கள் அனைவரும் படித்தார்கள் .எப்படியது என்று அவள் கண்களை விரித்து கேட்டால் , கண்களை சிமிட்டி அழகாக சிரித்து விட்டு நகர்ந்து விடுவான் யதுநந்தன் .

இவனுக்கு யதுநந்தன் என்று சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள் .சரியான கோகுலகண்ணன்தான் இவன் என்று எண்ணிக்கொண்டாள் முகிலினி .

எண்ணியதையே சொல்லவும் செய்தாள். ” பெரிய கிருஷ்ண பரமாத்மா …கோபிகைகள் சூழ அருள் புரியிறாரு ” என்றாள் முறைத்தபடி .அவளது பொருமலில் நியாயம் இல்லாமலில்லை . கல்லூரியில் எந்த வயது பெண்களானாலும் சரி , யதுநந்தன் ஸ்பெசல் அவர்களுக்கு .தலைக்கு டை அடிக்கும் கனகவல்லி முதல் , முடிக்கு கலர் அடிக்கும் அனிதா வரை எல்லோருக்கும் எப்போதும் எல்லாவற்றிற்கும் நந்தன் சார்தான் .

முதல் நாள் கூட அந்த அனிதா கூட அப்படியென்ன பேச்சு என முகிலினி எரிச்சல்பட்ட போது , ஒரு நிமிடம் கண்கள் சுருங்க அவளை பார்த்தான் .பிறகு பளிச்சென்ற தனது டிரேட் மார்க் சிரிப்புடன் ” அவர்களாகவே வந்து பேசும்போது நான் என்னம்மா செய்யட்டும் ? ” என்றான் .

” இதோ இப்படி சிரிக்கிறாயே , அதைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டாலே போதும் இதுபோல் பிரச்சினைகள் வராது ” என்று எண்ணிக்கொண்டாள் முகிலினி .மனதிற்குள்ளாகத்தான் .ஏனென்றால் இது விசயம் பேசுவதில் யதுநந்தனுக்கு அவ்வளவு விருப்பமில்லாதது போல் தோன்றியது .

தினமும் காலை பூ பறிக்கும் நேரம்தான் இவர்கள் இருவரும் பேசும் நேரம் .முகிலினியோடு சேர்ந்து பூக்களை பறித்தபடியே பேசுவான் யதுநந்தன் .

” நீங்கள்தான் வரப்போகும் புது லெக்சரர் என்று ஏன் முன்பே  சொல்லவில்லை? ” எனக்கேட்டாள் ஒருநாள் .

” அப்போ தலையை சொறிஞ்சிக்கிட்டே அழகா முழிச்சியே , அதைப்பார்த்திருக்க முடியாதே ” கையில் பறித்திருந்த இரண்டு பூக்களால் அவள் கன்னம் வருடியபடி கூறினான் .

அந்தப்பூக்களை பிடுங்கி பூக்கூடையினுள் போட்டு விட்டு ” ம்க்கும் ” என பொய் கோபத்துடன் திரும்பிக்கொண்டாள் .

ஒருநாள் பஸ்ஸில் வரும்போது தீவிர சிந்தனையில் இருந்த வைஷணவி இவளிடம் திரும்பி ” ஏன்டி நம்ம யதுநந்தன் சாரை பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா ? ” எனக்கேட்டாள் .

” எ..என்ன தெரியனும் உனக்கு ? “, எச்சிலைக்கூட்டி விழுங்கியபடி தவிப்புடன் கேட்டாள் முகிலினி .

” அ..அது வ..வந்து ..சும்மாதான் நம்ம எல்லோரோட பேவரைட் ஆச்சே அவர் .ஆனால் அவரைப்பற்றி நமக்கு ஒண்ணும் தெரியாதே .அதான் கேட்டேன் ” என்றாள் .

” எல்லோருக்கும் பேவரைட்டாமாம்  …இருக்கும் ..இருக்கும் …ஏன் இருக்காது ? இருக்கட்டும் இன்னைக்கு அந்த ஆளை வச்சிக்கிறேன் ” மனதிற்குள் இப்படி பொருமியபடி வெளியே முப்பத்தி இரண்டையும் காட்டினாள் தோழிக்கு .

” நானும் உன் போலத்தானேடி , எனக்கு மட்டும் என்ன தெரியும் சொல்லு ? ” என்றாள் .

உள்ளூர ” உன்கிட்ட என் வீட்டில்தான் இருக்கார்னு சொல்ல எனக்கென்ன கிறுக்கா புடிச்சிருக்கு .அங்கேயும் பின்னாடியே வந்துடுவியே ஜொள்ளு விட ..” என கூறிக்கொண்டாள் .

முகிலினி எண்ணியதுபோல் வைஷ்ணவி  கொஞ்ச நாட்களாகவே சரியில்லை. அவளுடைய பழைய கலகலப்பு வெகுவாக குறைந்து போயிருந்தது .எந்நேரமும் சதா ஏதாவது சிந்தனையிலேயே இருந்தாள் .

எப்போதாவது பேசினாள் என்றால் அந்த பேச்சும் யதுநந்தனை பற்றியதாகவே இருந்தது .அந்த சமயங்களில் மட்டும் முகிலினிக்கு ரத்த அழுத்தம் பரிசோதித்தால் அது உச்சத்தை அடைந்து வெடித்துவிடும் .

இதோ இப்போதுதான்
உன்னைப்பார்த்தேன்
ஆனால் ,
முன்னெப்போதோ பலதடவை
பார்த்த ஞாபகம் ,
என் முன்ஜென்ம கனவு நாயகனாக
உன்னை நேற்றுதான்
சொப்பனம் கண்டேன் ,
கலையக்கூடாதென வேண்டியபடி
கண்மூடுகிறேன் இன்று .

சற்றேறக்குறைய கவிதை போன்ற இவ்வரிகளை ஒருநாள் வைஷ்ணவியின் நோட்டு ஒன்றில் கண்டாள் முகிலினி .தலைசுற்றிப்போக அதனைப்பார்த்தவாறே அமர்ந்துவிட்டாள் சிறிது நேரம் .

அப்போது அதனை எட்டிப்பார்த்த நளினி ” டீ ..வைஷூ என்னடி இது ? கவிதை மாதிரி தெரியுது . முகிலினி ஒருத்திதான் கிறுக்கிட்டு இருந்தான்னு நினைத்தேன் .நீயுமா  ? ” என்றாள் .




” ஏய் என்னடி காதலா ? ” என்றாள் அவளருகிலிருந்த செல்வராணி .

வைஷ்ணவி எப்படி உணர்ந்தாளோ முகிலினிக்கு திக்கென்றது .

தொடர்ந்து ” ஏய்யேய் …யாருடி அது சொல்லுடி …” என இருவருமாக சேர்ந்து வைஷ்ணவியை கிண்டலடிக்க தொடங்கினர் .

” சும்மா இருங்கடி அதெல்லாம் ஒண்ணுமில்லை …” என்ற வைஷ்ணவியின் பலவீன மறுப்பு அங்கு எடுபடவில்லை .

” என்னடி இவள் மறைக்கிறதை பார்த்தாள் ஒருவேளை நம்ம நந்தன் சாரோ ? ” நாடியில் ஒற்றை விரலால் தட்டியபடி செல்வராணி தீவிரமாக யோசித்தாள் .

அமில மழை பொழிந்தது முகிலினி தலையில் . அது தந்த எரிச்சல் தாங்காமல் ” சை என்னடி இந்த பேச்சு பேசுறீங்க ? கவிதை எழுதுறவங்கெல்லாம் காதலிக்கிறாங்கன்னு அர்த்தமா ? நான் கூடத்தான் கவிதை எழுதுவேன் .நானும் காதலிக்கிறதாவா சொல்வீங்க ? போங்கடி போய் வேறு ஏதாவது வேலை இருந்தா பாருங்க ” என படபடத்து முடித்தாள் .

நளினியும் , செல்வராணியும் வாயை மூடிக்கொள்ள , வைஷ்ணவியோடு சேர்ந்து முகிலினியும் நிம்மதி மூச்சு விட்டுக்கொண்டாள் .

அன்று பஸ்ஸில் வீட்டிற்கு வரும்போது முகிலினியின் கைகளை பற்றிக்கொண்ட வைஷணவி ” ரொம்ப நன்றிடி , நீ மட்டும் இன்னைக்கு இடையில் தலையிட்டு பேசலைன்னா , அவளுக இரண்டு பேரும் சேர்ந்து என்னை ஒரு வழி பண்ணியிருப்பாங்க ” என்றாள் .

” பரவாயில்லைடி , இல்லாத ஒன்றை பற்றி அவர்கள் பேசினால் , நான் எப்படி சும்மா இருப்பேன் ? “, ஆறுதல் தனக்கும் சேர்த்தே சொல்லிக்கொண்டாள் முகிலினி.

முகிலினியின் கைகளோடு தன் கைகளை கோர்த்துக்கொண்ட வைஷ்ணவி ” அப்படி ஒண்ணுமில்லைன்னு சொல்லிட முடியாது ” என்றவள் நிறுத்தி ” ஐ ஆம் இன் லவ் ” என்று சிறிது வெட்கத்துடன் கூறிவிட்டு , முகிலினியின் தோள்களில் சாய்ந்து கொண்டாள் .

கீரீய்ச் என்ற சத்தத்துடன் பலமாய் மிதிக்கப்பட்டது பிரேக் .முகிலினி நன்றாக முன் சீட்டில் மோதிக்கொண்டாள் .சிறிது பலமான அடிதான் .முன் நெற்றி புடைத்துவிட்டது .பஸ்ஸில் சிறு பரபரப்பு .

என்ன …என்ன …என அனைவரும் முன்னால் பார்க்க ” ஒண்ணுமில்லை ஒரு நாய் திடீர்னு குறுக்கே வந்திடுச்சு .அதுதான் பிரேக போட்டேன் ” என்ற டிரைவர் பஸ்ஸை திரும்ப ஸ்டார்ட் பண்ணினார் .

அன்றொருநாள் தன் தந்தையின் வண்டியின் முன்னே விழுந்த நாயைப்பற்றி பேசியபடி வைஷ்ணவி வர, அளவற்ற அதிர்ச்சி வாங்கி மரத்து போன உணர்வுடன் பொம்மையாக உடன் வந்தாள் முகிலினி .

வீட்டின் உள்ளே நுழையும்போதே பைக் நிற்பதை பார்த்தாள் .நந்தன் வந்துவிட்டான் .அவனிடம் இன்று பேசிவிட வேண்டும் .அவனைப்பற்றிய விவரங்களை கேட்டு விட வேண்டும் .இப்படி போறவளுக, வாறவளுக எல்லாம் காதல் சொல்றாங்களே ..இதனையும் அவனிடம் தெளிவாக பேசிவிடவேண்டும் .

முகிலினிக்கு வசதியாக அம்மா பின்புற காம்பவுண்ட் சுவரோரம் நின்று பக்கத்து வீட்டு பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்க , முகிலினி மாடியேறிவிட்டாள் .

ஏதேதோ பேசவேண்டும் என்று தனக்குள் வரிசைப்படுத்தியபடியே  மாடியேறினாள் .ஆனால் அங்கே கட்டிலில் அமர்ந்தபடி , தனது சட்டையின் பட்டன் ஒன்றை தைக்க முயற்சித்துக்கொண்டிருந்த யதுநந்தனை கண்டதும் அப்படியே உள்ளம் உருகிப்போனது முகிலினிக்கு .

” சட்டையை கழட்டிக்கொடுங்க நான் தச்சு தர்றேன் ” என கையை நீட்டினாள் .

” ஹேய் வந்தாச்சா ” என நிமிர்ந்த நந்தன் அவள் முகத்தை பார்த்ததும் ” முகி என்னடா என்னாச்சு ? “என்றான் அவள் நெற்றிப்புடைப்பை பார்த்து .




” அது ஒண்ணுமில்லை , பஸ்ஸில் ப்ரேக் போட்டப்போ முன்னால் மோதிக்கிட்டேன் .” என்றாள் அவன் கரிசனையில் மகிழ்ந்தபடி .

” சின்ன பிள்ளையா நீ ? ப்ரேக் போட்டா நல்லா உட்கார தெரியாது ? ” அன்பாக அதட்டியபடி , அலமாரியை திறந்து ஏதோ மருந்தை பிதுக்கினான் .அவள் நாடியை தூக்கி நெற்றியை ஆராய்ந்தவன் மென்மையாக காயத்தில் தடவி விட்டான் .

அவனது கவனிப்பு மிக திருப்தியளித்தாலும் , நந்தனிடம் பேச வேண்டியதை நினைவூட்டியது நெற்றி வலி .

மீண்டும் கேட்கவேண்டிய கேள்விகளை மனதிற்குள் அடுக்கியபடி நிமிர்ந்தவள் முன் , தன் சட்டையை சுழற்றி  தைப்பதற்காக அவளிடம நீட்டியபடி  பனியனுடன் நின்றவனை கண்டதும் அடுக்கி வைத்த கேள்விகளெல்லாம் மறந்து ” சிக்ஸ் பேக்கா ” என்றுமட்டும் தான் கேட்க தோன்றியது.

ஊசி நூலுக்காக அவன் திரும்பிவிட பரந்த அவன் முதுகில் பார்வை பதித்தபடி  எப்படி கேட்பதென முழித்துக்கொண்டிருந்தாள் முகிலினி .பட்டனை தைத்தபடி மெல்ல ” உங்க வீட்டிலெல்லாம் பட்டன் உங்களுக்கு யார் தைத்து  குடுப்பாங்க ? ” என்றாள் .

பதிலே சொல்லாமல் அவள் முகத்தையே பார்த்தபடியிருந்தான் நந்தன் .” உங்க அம்மாவா …? “எனக்கேட்டாள் .

” ம்ஹூம் …” மறுத்தான் .

” உங்கள் அக்கா ?…தங்கை ….? “

உதடு பிதுக்கி மறுப்பை சொன்னான்
” பின்னே …உ…உங்கள் …ம..மனைவியா …? ” மனமேயில்லாமல் இந்தக்கேள்வியை கேட்டபடி தைத்த சட்டையை நீட்டினாள் .

அவளது கேள்வி காதிலேயே விழாதது போல் பாவித்து சட்டையை அவளிடமிருந்து வாங்கி அணிய தொடங்கினான் நந்தன் .

” அட கரெக்டா தச்சிருக்கியே ….” என்ற சிலாகிப்பு வேறு .எப்படி மீண்டும் கேட்பது என்ற தவிப்புடன் முகிலினி கண்ணாடியில் நந்தனை ஏறிட்டாள் .அவன் கண்ணாடியிலேயே அவள் முக பாவங்களை கவனித்துக்கொண்டிருந்தான் ஒரு நமுட்டு சிரிப்படன் .

நந்தன் தன்னை சீண்டுகிறானென உணர்ந்த முகிலினி வெட்டும் பார்வையொன்றை கண்ணாடி வழியாகவே அவன் மீது வீசிவிட்டு அறையை விட்டு வெளியேற முனைந்தாள் .

வாசலை அடைந்த அவள் வெளியேற முடியாதபடி ,அவளுக்கு இருபுறமும் தன் இருகைகளையும் ஊன்றி தடுத்தான் யதுந்நதன் .அவள் விழிகளோடு தன் விழிகளை கலக்க முனைந்தபடி ” என்னடா என்ன சந்தேகம் உனக்கு ? என்னவென்றாலும் என்னிடம் நேரடியாக  கேட்கவேண்டியதுதானே ? ” என்றான் கொஞ்சுகுரலில் .

முகிலினி தலையை திருப்பிக்கொண்டாள் .மெல்ல அவளை நோக்கி குனிந்தவன் தன் மூச்சுக்காற்றால் அவள் கன்னம் சுட்டபடி ” முகில் எனக்கு இன்னமும் கல்யாணம் ஆகலை ” என்றான் .

விடுதலையுற்ற உணர்வுடன் கூடிய பெருமூச்சுடன் அவன் விழிகளில் கரைந்தாள் முகிலினி .

” பாப்பா ..எங்கே இருக்கிறாய் ?  ” கீழே சரஸ்வதியின் குரல் .

” ஐயோ அம்மா ….”, அவனை தள்ளி விட்டு விட்டு கீழே ஓடிவிட்டாள் முகிலினி .

இந்த சம்பவத்திற்கு பிறகு முகிலினிக்கு யதுநந்தனின் பிரியத்தின் மீது
மனதில் மிகுந்த தைரியம் வந்தது .வைஷ்ணவியின் ” ஏய் அவர் இன்றைக்கு …..” என்பது போன்ற சில காதல் புலம்பல்களை கூட காதில் வாங்கினாளில்லை .அவள் ஏதோ ஒரு காதலை பற்றி என்னிடம் புலம்புகிறாள் என எண்ணிக்கொண்டாள் .

அவள் காதல் நாயகனை பற்றிக்கூட அவளிடம் கேட்கவில்லை .அது யதுநந்தன் இல்லையென்று நம்பினாள் .அப்படியே அவனாகயிருப்பினும்  அது வைஷ்ணவியின் கற்பனைதான் என்றும் நம்பினாள் .ஆனால் அதற்கான தெளிதலை வைஷ்ணவியிடம் பெற வேண்டுமென்று மட்டும் முகிலினிக்கு தோன்றவில்லை .

ஒருவகையில் வைஷ்ணவிக்கும் இது வசதியாக இருந்தது .அவளது காதலை பற்றி துருவாமல் , அவள் காதல்  கேட்கும் முகிலினியை முன்பை விட மிகவும் பிடித்துவிட்டது .

வைஷ்ணவி தன் காதல் கணங்களை ஆலாபிக்க ஆரம்பிக்க , ஒரு காதினை  மட்டும் அவளுக்கு அளித்து விட்டு தன் மனங்கவர் நாயகனுடன் பல்லாக்கில் பவனி வர ஆரம்பித்தாள் முகிலினி .

அணுக முடியாத உயரத்தில்

இருக்கும் நீ

அருகில் இறங்கி வந்தாய்

எனது அதிகாலை நேர கனவு

துரத்தல்களின் நாயகனாய்

உன் இதய துடிப்பின் ஓசையை

என் நெஞ்சம் அறியும் அருகாமையில்

காதலெனும் படியைக் கடந்து

கல்யாணம் வருகையில்

கதிரவனின் வருகையில்

கலைந்தது திருமணம்

என் வீட்டு முற்றத்தில்

சிதறிக் கிடக்கிறது உன் நினைவு

அதிகாலை சூரியனாய்




சூரியனாய்தான் என் வாழ்வில்  வெளிச்சமிட வந்திருக்கிறான் .மனதிற்குள் எண்ணி சிலிர்த்துக்கொண்டாள் முகிலினி .

அதோ அங்கே போவது அவன்தானே …ஆமாம் அவனோட பைக்தான் .இவர்கள் இருந்த பஸ்ஸை கிராஸ் பண்ணி சென்றான் .தன்னை திரும்பி பார்ப்பானா ? என ஆவலுடன் எட்டிப்பார்த்தாள் வைஷ்ணவி .இல்லை யதுநந்தன் கவனிக்கவில்லை .போய்விட் டான் .

இவர் ஏன் எப்பொழுதும் முகம் முழுவதும் மறைக்கும் ஹெல்மெட்டையே அணிகிறார் .யாரென்று கண்டுபிடிக்க மிக சிரமப்பட வேண்டியிருக்கிறதே ..அவரிடமே கேட்க வேண்டும் என நினைத்துக்கொண்டாள் .

முகிலினி வீட்டை அடைந்தபோது
யதுநந்தன் இன்னமும் வந்திருக்கவில்லை .சிறிது ஏமாற்றத்துடன் உள்ளே சென்று முகம் கழுவி உடை மாற்றினாள் .அம்மா தந்த காபியையும் , சாண்ட்விச்சையும் எடுத்துக்கொண்டு வந்து டிவியை ஆன் செய்தாள் .

இலக்கில்லாமல் சேனல்களை மாற்றியபடி காபியை உறிஞ்சி , சாண்ட்விச்சை கடித்தாள் .வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டது .தொடர்ந்து பைக் சத்தம் .யதுநந்தன்தான் .ஆவலுடன் அவனைப்பார்க்க வெளியே வந்தாள் முகிலினி .முன் வராண்டாவிலேயே மாடிப்படிக்கான ஏணிப்படிகள் இருக்கும் .

பைக்கை நிறுத்தி விட்டு வாசல்படியேறி வரும் அவனை வாசல் நிலைப்படியில் சாய்ந்தபடி பார்த்தாள் .முகம் நிறைய குழப்பம் இருந்தது யதுந்நதனுக்கு .ஏதோ ஒரு வெறுமை அவன் கண்களில் இருந்தது .”ஏன் இவ்வளவு டல்லாக இருக்கிறார் ? “, யோசித்தாள் முகிலினி .

முதல் மாடிப்படியில் காலை வைத்தபின்பே அவளைக் கவனித்தான் யதுநந்தன் .சட்டென அவன் கண்களில் வெறுமை மறைந்து துள்ளலும் , குறும்பும்  வந்தது .

ஏன் லேட் என ஜாடை காட்டி கேட்ட முகிலினிக்கு பதில் கூறாமல் அவளருகே வந்தவன் அவள் கையில் பாதி கடித்து வைத்திருந்த சாண்ட்விச்சை பிடுங்கி தன் வாய்க்குள் திணித்துக்கொண்டான் .
தொடர்ந்து அவள் கை காப்பியையும் பிடுங்கிக்கொண்டவன் அதனை குடித்தபடி மாடியேறி போய்விட்டான் .

கன்னங்கள் மருதாணி பூசிக்கொண்டன முகிலினிக்கு .பாரேன் இவர் குறும்பை என தனக்குள் கொஞ்சிக்கொண்டாள் அவனை .சூடாக அவனுக்கு காபி தரும் எண்ணத்தில் உள்ளே சென்று காபி மேக்கரை பார்த்தாள் .டிகாசன் இருந்தது .பாலை சூடு படுத்தினாள் .

உள்ளே வந்த சரஸ்வதி ” யாருக்கு பாப்பா ? “, என்றாள் .சிறிது திணறிவிட்டு ” அ…அது ..சாருக்கும்மா …” என்று மாடியை கை காட்டினாள் முகிலினி .

” இந்த சாண்ட்விச்சையும் சேர்த்து கொண்டு போம்மா ” என அவளிடம் தந்தாள் சரஸ்வதி .யதுநந்தனை தன் வீட்டிலேயே சாப்பிட சொல்லி தமிழ்செல்வன் மிகவும் வற்புறுத்தினார் .ஆனால் அவன் மறுத்து விடவே , முடிந்தவரை தன் வீட்டு உணவுகளை அவனிடம் சேர்க்க முயல்வார் அவர் .சரஸ்வதியிடமும் அதையே கூறியிருந்ததால் அவளும் முடிந்தவரை பலகாரங்களை மாடிக்கு அனுப்பிக்கொண்டிருந்தாள் .

கையில் காபி , டிபனுடன் மாடியேறினாள் முகிலினி .ஒருக்களித்து வைத்திருந்த கதவை மெல்ல தட்டிவிட்டு உள்ளே எட்டிப்பார்த்தாள் .அவளுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டிருந்த யதுநந்தன் எதையோ வேகமாக தன் சட்டைக்குள் மார்புப்பகுதியில் ஒளித்தான் .

திரும்பி முகிலினியை பார்த்தவன் ” ஏய் டிபன் எனக்கா ? இதை விட இனிப்பான டிபன் கொஞ்ச நேரம் முன்பு நான் சாப்பிட்டேனே என்றான் .
டிரேயில் இருந்த சாண்ட்விச்சை பாதி கடித்தவன் , காபியையும் பாதி குடித்துவிட்டு ” இது உன் பங்கு …” என கண் சிமிட்டியவன் ” வர்றேன் …” என கிளம்பினான் .

வாசலில் நின்று திரும்பி ” போகும் போது கதவை பூட்டிட்டு போயிடு ” என்றுவிட்டு கீழே இறங்கினான் .

சன்னல் வழியாக பார்த்த போது , முகம் முழுவதும் மறைத்து ஹெல்மெட்டை அணிந்தபடி வெளியே கிளம்பினான் .

எதற்காக துப்பாக்கியை சட்டைக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு செல்கிறான் ?….




What’s your Reaction?
+1
25
+1
15
+1
4
+1
1
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!