Sprituality நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம்-7

( 7 )

ஆத்திரம் பொங்க நின்ற முகிலினியை பார்த்த வைஷ்ணவி அகப்பட்டுக்கொண்ட திருடனாக விழித்தாள் .உணர்ச்சியற்ற பார்வை ஒன்றை எறிந்தபடி கேள்வியாக அவளை பார்த்தான் யதுநந்தன் .பிடித்திருந்த கைகளை விலக்கி கொண்டதை தவிர பெரியதாக எதுவும் செய்யவில்லை இருவரும் .

ஏன் என்னவும் செய்யப்போகிறார்கள் …அதுதான் அவர்கள் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையையும் கொண்டாடத்தான் நான் இருக்கிறேனே .கொஞ்சம் அன்பை காட்டி இப்படி இருவருமாக என்னை ஏய்த்துவிட்டனரே. நட்பெனும் போர்வையில் இவள் ….காதலெனும் போர்வையில் இவன் .ஆனால் அது காதலா …? நாங்கள காதலிக்கிறோமா ? அப்படி அவன் சொன்னானா …? இல்லை நானாவது நினைத்தேனா ?

சரி அது என்னவாகவும் இருந்து விட்டு போகட்டும். இப்போது எனது வீட்டில் இப்படி நடுவாந்திரமாக உட்கார்ந்து கொண்டு கைகளை பிடித்துக்கொண்டு கொஞ்சு மொழி பேச நான் அனுமதிக்க மாட்டேன் .

முகிலினி உள்ளே நுழைந்து இருவரையும் பார்த்தபடி நின்றது அதிகபட்சம் இரண்டு நிமிடம் கூட இருக்காது .அதறகுள்ளாகவே அவள் மனதில் இத்தனை எண்ணங்களும் ஓடி விட்டன .

முடுக்கி விட்ட பொம்மை போல் வைஷ்ணவி முன் சென்று நின்றவள், “ஏய் எழுந்திரிடி ” என்றாள். அடி வாங்கிய குழந்தை போல் அதிர்ந்து நின்றாள் வைஷ்ணவி

” முகிலினி ….” அதட்டினான யது நந்தன். அதட்டலை பாரேன் மனதிற்குள் பொருமிளா ள் முகிலினி.

” வெளியே போடி” கிட்டதட்ட கத்தினாள்.

” முகி… நான் சொல்றதை கேளு பா” மெல்ல ஏதோ சொல்ல வந்தாள்.

“வைஷ்ணவி நீ வீட்டுக்கு போ. நான் உனக்கு அப்புறம் போன் பண்ணுகிறேன்.”, இடையில் நுழைந்தான் ்யது நந்தன்.

திரும்பி அவனைப் பார்த்து முறைத்தாள்  முகிலினி. போன் பண்ணுகிறானாம் .அந்த வேகத்தை யும் வைஷ்ணவியின் மீது காட்டி “ஏய் உனக்கு … ” என ஆரம்பித்தபோது முகிலினீ…..” யது நந்தன் தான். உரத்த குரல் அல்ல. ஆனால் பயமுறுத்தும் குரல். மீற துணிய முடியாத குரல்.

” உள்ளே போ” அருப்படி பக்கம் கையை காட்டினான். எவ்வளவு கோபம் . அவனை வெறித்து பார்த்தபடி அப்படியே நின்றாள். வேகமாக அவளருகில் வந்தவன் அவள் தோள்கனை அழுத்தமாக பற்றினான். அப்படியே அவளை திருப்பி அடுப்படி பக்கம் தள்ளினான். கிட்டதட்ட கீழே விழ போனவள் கடைசி விநாடியில் சுதாரித்து அடுப்படியினுள் வந்தாள்.

அவமானத்தால் முகம் எரிய அருப்பு மேடையை பிடித்தபடி கண் கலங்க நின்றாள். வெளியே மெல்லிகுரலில் .அவர்களிருவரும் ஏதோ பேசும் சத்தம் .

“நீ எப்போம்மா வந்தாய் ?” சரஸ்வதியின் சத்தம். எல்லோரும் வந்து விட்டார்கள் போல. ஒரு நொடி மெளனம்.

என்ன சொல்லுவாள பார்ப்போம்..் திருட்டுக்கழுதை.. ஒரு குரூர திருப்தியுடன் முகிலினி காத்திருக்க, “என்னிடம் ஒரு நோட்ஸ் வாங்க வந்தாள் “ஆன்ட்டி, பதில் வந்தது யது நந்தனிடம் இருந்து.

கொதிநிலைக்கு போனாள்முகிலினி. அப்படி என்ன சப்போர்ட் வேண்டிக் கிடக்கிறது. ஓ வென கத்தி அழ வேண்டும் போல் இருந்தது முகிலினிக்கு .ஆனால் அதற்கு தனிமை வேண்டும்.

இதோ , அப்புக்குட்டி ஒரு புறம் கத்திக்கொண்டிருக்க தனது பயண சோர்வை அக்கா மீது காட்டிக்கொண்டிருந்த மச்சானும் , வீட்டை நிறைத்திருந்த பயண சாமான்களும் , ஒதுங்க வைக்க எங்கிருந்து ஆரம்பிக்க என முழித்துக்கொண்டிருந்த அம்மாவும் அவளது தனிமையை தின்றுகொண்டிருந்தனர் .

வேலை இருப்பதாக அப்பா அலுவலக அறைக்குள் போயாயிற்று .யதுநந்தன் வெளியே சென்றாயிற்று .ஒருவேளை வைஷ்ணவியின் பின்னால்தான் போனானோ ? வெறுப்புடன் நினைத்தாள் முகிலினி .
பெருமூச்சுடன் அம்மாவிற்கு வீட்டை ஒதுக்க உதவி விட்டு , அக்கா அவள் வீட்டிற்கு கிளம்பும் வரை அவள் சிடுசிடுப்புகளை தாங்கியபடி அவளுக்கான தேவைகளை செய்துவிட்டு , தனது பயண அழுக்குகளை நீக்கிவிட்டு முகிலினி திரும்பி பார்த்த போது , இரவு வந்து போர்வை விரித்து விட்டது .

இருள் போர்வையில்  , துணிப்போர்வைக்குள் ஒளிந்தபடிதான் முகிலினி தன் ஆறுதல்களை தேடிக்கொள்ள வேண்டியிருந்தது கண்ணீரில் கரைந்தபடி .

மிக அதிகாலையிலேயே விழிப்பு தட்டிவிட , இரவு அழுகையின் தேம்பல் ஏக்கங்களும் , நனைந்து சேர்ந்த கண்ணிமை மயிர்களும் முந்தின தின நிகழ்வுகளை நினைவுறுத்தியது. உதடு பிடுங்கி மீண்டும் அழுகை வரப்பார்த்தது .

இல்லை படுத்தே இருந்தால் மேலும் , மேலும் அழுகைதான் வரும். எனவே காற்றாட சிறிது தோட்டத்தில் நிற்கலாமென எழுந்தாள் .முந்தைய தின பயண அலுப்பு இன்னமும் சரஸ்வதியையும் , தமிழ்செல்வனையும் உறக்கத்தில் ஆழ்த்தியிருந்தது.

முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு பின் கதவை திறந்து தோட்டத்தில் இறங்கியவள் திகைத்தாள் .உட்காருவதற்காக ஒரு ஓரமாக போடப்பட்டிருந்த கல் ஒன்றின் மேல் அமர்ந்திருந்தான் யதுநந்தன் .இவளை எதிர்பார்த்தாற்போலிருந்தது அவன் பார்வை .




வண்ணம் மங்கிய ஒரு டிராக் சூட்டுடன் , லூசான ஒரு டிசர்ட்டுடன் , கலைந்து கிடந்த தலையுடன் அப்போதுதான் படுக்கையிலிருந்து எழுந்து வந்திருப்பான் போல .வலது கையை கன்னத்தில் தாங்கியபடி அவளை பார்த்திருந்தான் .

” பாவி இந்த எளிமையான நிலையிலும் எவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்து தொலைக்கிறான் .அதுதான் எல்லாவளும் இவன் பின்னால் சுற்றுகிறார்கள்.” என்ன என்பது போல் அவனை ஏறிட்டவள் தொண்டைக்குழியினுள் பனிக்கட்டி நழுவியது போன்ற உணர்வை உணர்ந்தாள் .

யதுநந்தன் அப்படி ஒரு பார்வை பார்த்துக்கொண்டிருந்தான்.கசங்கிய நைட்டியுடன் , கலைந்த கூந்தலுடன் , பொட்டு கூட இல்லாத நெற்றியுடன்
வெகு சாதாரண வீட்டு பெண்ணாக நின்ற அவளை விட்டால் அங்கேயே கடித்து தின்றுவிடுவான் போல் பார்த்துக் கொண்டிருந்தான் .

அவன் தன்னிடம் ஏதோ பேச விரும்பியே அங்கே காத்திருக்கிறான் என முகிலினியால் உணர முடிந்தது .ஆனால் இப்போது அவன் என்ன கூறினாலும் தான் தலையாட்டி விடுவோமென அவளுக்கு வெகுவாக தோன்றிவிட இல்லை இப்போது இவனோடு பேசக்கூடாது என்ற ஒரு அவசர முடிவுக்கு வந்தாள் முகிலினி .

சட்டென வீட்டினுள் திரும்பி நடந்தவள் , வேகமாக கதவையும் பூட்டிக்கொண்டாள் .அவன் அழைத்தானோ ? கூப்பிட்டது போல் கேட்கவில்லை ? தன்னை மீறி கதவை திறந்து போய்விடுவாமென தோன்ற ஆரம்பிக்க , அவசரமாக ஒன்றுக்கு இரண்டாக தாழ்பாளையும் போட்டு வைத்தாள் .

ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தவள் நேற்று யதுநந்தன் வைஷ்ணவி முன்னிலையிலேயே தன்னை உள்ளே பிடித்து தள்ளியதை வலுக்கட்டாயமாக நினைவு படுத்திக்கொண்டாள் .

அதன்பின் இரண்டு நாட்கள் அவளிடம் பேச யதுநந்தன் செய்த முயற்சிகளை கண்டு கொள்ளாமல் கடந்தாள் முகிலினி .மூன்றாம் நாள் பூ பறிக்கும் வேலையை அவன் வராத நேரமாக பார்த்து முன் இரு தினங்களைப்போல் பறித்துக்கொண்டிருந்த போது சத்தமின்றி பின்னால் வந்து நின்றான் .

எதிர்பாராத இந்த செய்கையில் திகைத்தவள் , திரும்பி அவசரமாக பின்வாசல் வழியாக அடுப்படிக்குள் நுழைந்தாள் முகிலினி .அடுப்பருகில் நின்று சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டிருந்த சரஸ்வதியிடம் சென்று நின்று கொண்டு திரும்பி பார்த்தவள் அதிர்ந்தாள் .

பின்னாலேயே உள்ளே வந்து டைனிங்டேபிளில் அமர்ந்திருந்தான் யதுநந்தன் .

” ஆன்ட்டி ப்ளீஸ் ஸ்ட்ராங்கா ஒரு காபி “, என சரஸ்வதியிடம் கேட்டவனின் பார்வை என்னவோ முகிலினியிடம்தான் .

மாவு பிணைந்த கையை பார்த்தபடி ” இருங்க சார் …பாப்பா நீ சாருக்கு காபி போட்டு குடுடா ” என்றாள் சரஸ்வதி .

வெட்டும் பார்வையுடன் அவனை பார்த்தபடி காபி கலந்தாள் முகிலினி .நினைவாக அவனுக்கு பிடித்தபடி அரை ஸ்பூன் சீனி போட்டு , ஒரு மடக்கு அதிகமாகவே டிகாசன் சேர்த்து காபி கலந்து விட்டு திரும்பி பார்த்தால் அவனைக்காணவில்லை .

தோட்டத்திற்குள் சென்று விட்டிருந்தான் .மாவு பிணைந்து கொண்டிருந்த அன்னையை பார்த்து விட்டு தானே காபியுடன் சென்றாள் .மாமரத்தினடியில் எங்கோ வெறித்தபடி நின்றிருந்தான் .

பேசாமலேயே அவன் முன் காபி டம்ளரை நீட்டினாள் .திரும்பி அவளை பார்த்தவன் ” நீ முகத்தை திருப்பிக்கொண்டு போனால் நான் உன் பின்னாலேயே வருவேனென்று நினைத்தாயோ ? ” ஏளனமாக கேட்டான் .

” வர வேண்டாம்னுதான் சொல்றேன் …” அலட்சியமாக உதடு சுழித்தாள் .

“, அப்போ …போ ….”, என்றவன் திரும்பி நடந்து விட்டான் .

ஐயோ காபி ..குடிக்காமல் போய் விட்டானே …வருத்தத்துடன் கையிலிருந்த காபியை பார்த்தாள் .தப்பு செய்தது அவன். கோபம் என் மீதா ? ..வெறுப்புடன் உள்ளே வந்தாள் .

அவன் சொன்னதை செய்பவன் போல் அதன் பின் முழுமையாக முகிலினியை தவிர்த்தான் யதுநந்தன் .வீட்டிலும் சரி , கல்லூரியிலும் சரி ..அவள் இருக்கும் திசை பக்கம் கூட பார்வையை லேசாக கூட திருப்புவதில்லை .

போயேன் ..நீ ..இப்படி முகத்தை திருப்பிக்கொண்டு போவதால் எனக்கொன்றும நஷ்டமில்லை இப்படி எண்ணிக்கொண்டாலும் உள்ளுக்குள் மிகவும் தவித்துதான் போனாள் முகிலினி .

ஒருநாள் வைஷ்ணவி அவளருகில் வந்தமர்ந்து ” முகிலினி நம்ம நந்தன் சாரை பற்றி நீ தப்பாக …..”என ஆரம்பிக்க , திரும்பி அவளை ஒரு கண்ணகி பார்வை பார்த்து விட்டு “சை …”, என்ற அருவெறுப்போடு கூறிவிட்டு நகர்ந்தாள் முகிலினி .புரியாமல் நின்றாள் வைஷ்ணவி.

அன்று ஒரு என்கொயரி நடந்ததே .அதுகூட யதுநந்தனையும் வைஷ்ணவியையும் வைத்தே நடந்திருக்கிறது .இருவருமாக லேப்பில் பேசிக்கொண்டிருந்திருக்க வேண்டும் ,அது  கேமெராவில் தென்பட்டு என்கொயரி வரை போயிருக்கிறது .இப்படித்தான்  நினைத்தாள் முகிலினி .

அன்று கல்லூரிக்கு போகவா …வேண்டாமா ? யோசித்தாள் சிறிது நாட்களாக கல்லூரியில் வைஷ்ணவியை தவிர்த்து விட்டாள் .திரும்ப திரும்ப அவள் முகிலினியிடம் பேச முயற்சித்துக்கொண்டுதான் இருந்தாள் .இன்றும் முயற்சிப்பாள் .
அதுவும் இன்று அதற்கான வாய்ப்புகள் அதிகம் .

இன்று காலேஜ்டே ஆதலால் மாணவர்கள் யாரும் வகுப்பறைக்குள் அமர மாட்டார்கள் .வைஷ்ணவி அவளுடன் அட்டையாக ஒட்டிக்கொள்ள போகிறாள் .

கல்லூரி போகாமலும் இருக்க முடியாது .இன்றோடு அவர்கள் கல்லூரி வாழ்க்கை முடிகிறது .அவர்களுக்கு நாளை முதல் ஸ்டடி ஹாலிடே ஆரம்பம் .இனி பரீட்சையின் போதுதான் நண்பர்களை பார்க்க முடியும் .அதன் பிறகு பார்க்க முடியுமோ ….முடியாதோ …?

எனவே இன்று போகாமல் இருக்கவும் மனதில்லை .அரைகுறை மனதுடன் இன்றைய தினத்திற்காய் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த புடவையை அணிந்து கொண்டாள் .பட்டு ரோஸ் கலர் சேலையில் வெள்ளி சரிகை கம்பிகளாய் உடல் முழுவதும் ஓடிய உயர்ரக புடவை .சேலையை ஒத்திருந்த டிசைனர் ஜாக்கெட்டில் வெள்ளி கற்கள் மின்ன பட்டு ரோஜாவுடன் வெள்ளி கயிறு பிணைத்த பூ ஆரத்தை தலை முடியை  சுற்றி வளைத்தவள் முடியை பின்னாமல் நீளமாக ஒழுங்காக வாரி விட்டாள் .

பொருத்தமான அணிகலன்களை அணிந்து கண்ணாடியில் பார்த்த போது , மிக அழகாக இருப்பது போலத்தான் தோன்றியது முகிலினிக்கு .தானாகவே யதுநந்தன் ரசிப்பதை போன்ற தோற்றம்  தோன்ற  , தன் தலையில் தானே கொட்டிக்கொண்டாள் .அவனை நினைக்காதே என அறிவுறுத்திக்கொண்டாள் .

அழகு பதுமையாக தன் முன் வந்து நின்ற மகளை பெருமையாக பார்த்தாள் சரஸ்வதி .தாயின் ரசனை பார்வையை கண்டவள் ” வாங்கம்மா ஒரு போட்டோ ” என அன்னையுடன் தன்னை செல்பி ஒன்று தன் போனில் எடுத்துக் கொண்டாள .

” கண்ணம்மா ரொம்ப அழகாக இருக்கிறாயடா ….” தழுதழுத்தார் தந்தை .”, அப்படியே என் அம்மாவை பார்ப்பது போல் இருக்கிறதடா கண்ணம்மா ” பாசமாக மகள் தலையை வருடினார் .

அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டாரானால் முகிலினி அவருக்கு கண்ணம்மா .” என் கடமையை எனக்கு நினைவு படித்துகிறாயடா “, என்றார் .தொண்டையை மெல்ல செறுமிக்கொண்டார் .

” அப்பா ….இன்னும் இரண்டு வருடத்திற்கு எந்த பேச்சும் எடுக்க கூடாது .”, மறைமுகமாக தன் திருமணத்தை பற்றி பேசிய தந்தையை மறைமுகமாகவே எச்சரிக்கை விடுத்தாள் மகள் .
பெற்றோரிடம் விடை பெற்று விட்டு கிளம்பினாள் .

வாசல் வந்ததும் அண்ணாந்து பார்க்க துடித்த கழுத்தை வலுக்கட்டாயமாக குனிய வைத்தபடி நடந்தாள்.வாசலில் பைக்கை காணவில்லை .யதுநந்தன்  முன்பே போய்விட்டான் போலும் .கொஞ்சம் நேரம் காத்திருந்திருக்கலாமே ….சிறு ஏமாற்றம் ஒன்று வந்தது அவளுக்கு .

பஸ்ஸில் முன்னால் அமர்ந்திருந்த வைஷ்ணவியை தவிர்க்க பஸ்ஸின் பின்னால் நாலு சீட் தள்ளி போய் அமர்ந்தாள் முகிலினி .முகத்தை வேறு  சன்னல் வழியாக வெளிப்புறமாக திருப்பிக்கொண்டாள் .முகிலினியின் அருகே ஒரு வயதான பெண் வந்து அமர்ந்தாள் .




ஐந்தே நிமிடங்களில் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து முகிலினி அருகே வந்தாள் வைஷணவி . அவளை முறைத்து விட்டு , சன்னல்புறம திரும்பிக்கொண்டாள் முகிலினி .வைஷ்ணவி குனிந்து முகிலினியின் அருகே அமர்ந்திருத்த பெண்மணியின் காதுக்குள் தன் வாயை நுழைத்தாள் .ஏதோ முணுமுணுத்தாள் .

முகிலினி மிக முயன்றும் அவள் என்ன சொல்கிறாளென எதிர் வரும் காற்றில் கேட்க முடியவில்லை .இப்போது பக்கத்தில் இருக்கும் பெண் நிமிர்ந்து ஒரு மாதிரி பார்த்தாள் .கொஞ்சம் ஒதுங்கி அமர்ந்து கொண்டாள் .அந்த செய்கை முகிலினிக்கு வித்தியாசமாக பட , நன்கு அப்பெண்ணை திரும்பி பார்த்தாள் .

அவ்வளவுதான் அப்பெண் விழுந்தடித்து எழுந்துகொண்டு முன்னே சென்று பஸ் கம்பியை பிடித்தபடி நின்று கொண்டாள் .படக்கென அவளிடத்தில் அமர்ந்து கொண்டாள் வைஷ்ணவி .இவள்தான் அந்த பெண்ணிடம் ஏதோ கூறியிருக்கிறாள் .

” ஏய் என்னடி சொன்ன அந்த பொண்ணுகிட்ட ? “

” ஒண்ணுமில்லையே நீ என் தோழதான .உனக்கு கொஞ்சம் மனநிலை பாதிப்பு உண்டு .கோபம் வந்தால் பக்கத்திலிருக்கிறவங்களை கடித்து வைத்துவிடுவாய்னு சொன்னேன் .அதான் ….” என்றாள்

” ஏய் எவ்வளவு கொழுப்புடி உனக்கு .என்னை பற்றி இப்படி கன்னாபின்னான்னு சொல்லி வச்சிருக்கிற ? உன்னை ….” என்றபடி வைஷ்ணவியின் முதுகில் அடிக்க தொடங்கினாள் .

குனிந்து அவள் அடிகளை வாங்கியபடி , அந்த பெண்ணை பார்த்தாயா ? என்பது போல் பார்த்தாள் வைஷ்ணவி .

முகிலினி அந்த பெண்ணை பார்த்த போது , அவள் சிறிது கலவரத்துடன் நகர்ந்து இன்னும் கொஞ்சம் முன்னால் நகர்ந்து போய் நின்று கொண்டாள் .அடிக்கடி பயத்துடன் முகிலினியை திரும்பி பார்த்துக்கொண்டாள்.

இப்போது முகிலினிக்கே சிரிப்பு வந்தது .வைஷ்ணவி எப்போதுமே இப்படித்தான் .இது போன்ற குறும்புகளை செய்து சுற்றியிருப்போரை மகிழ்வித்துக்கொண்டே இருப்பாள் .ஆனால் இப்போது அவள் செய்த காரியம் …அவளையும் , யதநந்தனையும் அன்று தன் வீட்டில் பார்த்தது  நினைவு வர தன் புன்னகையை தொலைத்துவிட்டு முகம் திருப்பிக்கொண்டாள் முகிலினி .

” முகி பேசனும்டி உன்கிட்ட .நிறைய பேசனும் .என்னோட காதலை பேசனும் .முன்பே பேசியிருக்கனும் .ஆனால் ஏதோ ஒரு தடை .காதல் வந்தாலே திருட்டுத்தனம் வந்திடுதே .இப்போ இந்த காதலால் நம்ம நட்பில் விரிசல் வந்துவிடக்கூடாதுடி .இந்த காதலெல்லாம் நம்ம வாழ்க்கையில் இப்போ வந்தது .ஆனால் நட்பு …அது நமக்குள் பதினெட்டு வருடமாக இருப்பது .இதனை நாம் இழந்து விடக்கூடாதுடி ” வைஷ்ணவியின் கண் கலங்கி குரல் தழுதழுத்தது .

அவள் கைகளை இறுக பற்றிக்கொண்டு அவளை ஆமோதித்தாள் முகிலினி .இவள் என் ஐந்தாவது வயதிலிருந்து எனக்கு அறிமுகமானவள் .இவளை  எப்படி என்னால் ஒதுக்க முடியும் ?. இந்த எண்ணம் தோன்றவும் முகிலினி வைஷணவியின் கைகளை பற்றிக்கொண்டாள் .

” வைஷூ …நாம் பேசலாம் ….” என்றாள் .அவர்கள் கல்லூரி வந்துவிட்டது .சிறிதுநாட்கள் கழித்து பழையபடி கைகளை கோர்த்தபடி இறங்கினர் தோழிகள் இருவரும் .

அவர்கள் இருவர் அலங்காரமும் தோழிகளால் வெகுவாக பாராட்டப்பட்டது .பட்டுரோஜா நிற புடவையில் ஒரு ரோஜாவாக முகிலினியும் , அடர்பச்சை டிசைனர் சேலையில் வைஷ்ணவி அந்த மலர் தாங்கும் இலை போல இருப்பதாக வர்ணித்தனர் .

இந்த பாராட்டில் மகிழ்ந்த தோழியர் மிக மகிழ்ச்சியுடன் தங்கள் கல்லூரி தினத்தை கொண்டாட துவங்கினர் .
அவர்கள் மட்டுமின்றி அனைத்து பெண்களும் அன்று மிக நேர்த்தியாக அலங்கரித்து வந்திருந்ததால் அந்த கல்லூரியே வண்ணமலர்கள் பூத்துக்குலுங்கும் சோலைவனமாக காட்சியளித்தது .பூக்கள் ( பூவையர் )அனைத்தும்
சுறுசுறுப்பாக அங்குமிங்குமாக அலைந்தனர் .சிரித்தனர் .பேசினர் .கண்கலங்கினர் .

ஏதேதோ வேலைகளை செய்தபடி அங்குமிங்குமாக அலைந்தபடி இருந்தாலும் , முகிலினியின் பார்வை யதுநந்தனை தேடியபடியே இருந்தது .தனது அலங்காரத்தை அவன் பார்க்கவேயில்லையே என்னும் குறை அவள் உள்ளத்தில் .

அதோ அங்கே , அந்த நீள நடைபாதையின் அந்த கடைசியில் நின்று பேசிக்கொண்டிருக்கிறான்.மெல்ல அதே பாதையில் அவனை நோக்கி ஆனால் அவனை பாராதது போல் நடக்க துவங்கினாள் முகிலினி .அதேநேரம் தனது பேச்சை முடித்துக்கொண்டு எதிர்புறம் நடந்து வர துவங்கினான் யதுநந்தன் .முகத்தை மட்டும் வெளிப்புறம் திருப்பிக்கொண்டான் .




முகிலினியை தவிர்க்க தொடங்கிய நாளிலிருந்து அவன் இப்படித்தான் செய்கிறான் .பக்கத்தில் வர நேரும்போதெல்லாம் பார்க்காதது போல் முகத்தை திருப்பிக்கொள்வது .ஆனால் இன்றும் அது போன்றே செய்தால் தாங்க முடியாதென்று தோன்றியது முகிலினிக்கு . நெருங்கி வர வர வெளிப்புறம் திரும்பியபடியே இருந்த அவன் முகம் முகிலினியினுள் ஏக்கத்தை உண்டாக்க தன்னை மறந்து அவன் முகத்தையே பார்க்க தொடங்கினாள் .
இதோ அருகே வந்துவிட்டானே …இப்…..இப்போது ….இதோ வெளியே திரும்பியிருந்த முகத்தை அவள் புறம் திருப்பி , நடையை வெகுவாக மட்டுப்படுத்தி முகிலினியை  ….அவள் அலங்காரத்தை ….அவள் முகத்தை உறிஞ்சிவிடுவது போன்ற தாகத்துடன் பார்த்தவன் …ஒரே விநாடி நின்று நடையை தொடர்ந்தான் .

யதுநந்தனின் அந்த ஒரு பார்வையிலேயே தனது மனக்கசடுகள் அனைத்தும் நீங்கியது போல் உணர்ந்தாள் முகிலினி .இவன் என்னை விட்டு வேறு நினைப்பானா ? இல்லை …நந்தனிடமோ …வைஷ்ணவியிடமோ தவறில்லை .என்னிடம் …..என் புரிந்து கொள்ளலில் எங்கோ , ஏதோ தவறிருக்கிறது .

முகிலினியின் இந்த எண்ண விதைக்கு  நீர் ஊற்றியது வைஷ்ணவியின் பேச்சு .கல்லூரியில் நிறைய பேச வேண்டுமென நினைத்திருந்தவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பமே வாய்க்கவில்லை .விழா ஏற்பாட்டிற்கான சில முக்கிய பொறுப்புகளை இருவருமே ஏற்றிருந்ததால் அதற்கான வேலைகள் நிறைய இருந்தன .

கல்லூரி விழா முடிந்து கிளம்பும் நேரம் , இரவாகி விட்டதால் பெண்பிள்ளைகளை அழைத்து செல்ல அவரவர் வீட்டிலிருந்து ஆட்கள் வந்துவிட்டனர்.வைஷ்ணவிக்காக அவள் அண்ணனும் , முகிலினிக்காக அவள் அப்பாவும் காத்துக்கொண்டிருக்கையில் இருவராலும் எதுவும் பேச முடியவில்லை .இருந்தும் வைஷ்ணவி முகிலினியின் கைகளை பற்றிக்கொண்டு ” முகில் நாளை உனக்கு என் ஆளை அறிமுகப்படுத்துகிறேன் “, என்று கிசுகிசுத்து விட்டு போனாள் .

ஒருவிதமான பறப்பது போன்ற உணர்வுடன் அப்பாவுடன் காரில் ஏறி அமர்ந்தாள் முகிலினி .

இன்னும் சிறிது நேரத்தில் தன் மனங்கவர்ந்தவனாலேயே தன் சிறகுகள் வெட்டப்பட போவதை அறியாமல் ஆவலுடன் வீட்டை நோக்கி பயணிக்க தொடங்கினாள் .

முகிலினியும் , தமிழ்செல்வனும் வீட்டை அடைந்த போது அவர்கள் ஏரியாவில் கரண்ட் கட் போலும் .இருளில் மூழ்கியிருந்தது தெரு முழுவதும் .வழக்கமாக கரண்ட் போய்விட்டால் அந்த தெருவில் உள்ள சுமதி மற்றும் சிலர் சரஸ்வதியை தேடி வந்துவிடுவார்கள் .அனைவருமாக மொட்டைமாடியில் அமர்ந்து கரண்ட் வரும் வரை பேசிக்கொண்டிருப்பது வழக்கம் .

அப்போது தெரு நிலவரங்கள் எல்லாம் அலசப்படும.சில நேரங்களில் வீட்டு ஆண்கள் கூட இதில் கலந்து கொள்வார்கள் .சில குடும்பங்களின் சில பிரச்சினைகள் இந்த நேரத்து பேச்சினால் தீர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன.

அன்றும் அது போல் ஒரு கூட்டம் மாடியில் நடந்து கொண்டிருப்பது தெரிய நேராக மாடியேறினாள் முகிலினி .அவளைப்பார்த்த்தும் அவளது அலங்காரத்தை மெச்சினர் அங்கிருந்த பெண்கள் .அவர்கள் மெச்சுதலை ஏற்றபடி கைப்பிடி சுவர் மேல் ஏறி அமர்ந்தாள் முகிலினி .

ஏதோ கோளாறு ஏற்பட்டிருப்பதால் கரண்ட் வரும் நேரம் சரியாக தெரியவில்லை என பேசிக்கொண்டிருந்தனர்.அந்த தெரு ஆண்களும் ஒவ்வொருவராக வரத்துவங்கினர் .பெண்கள் அவரவர் வீட்டு உணவுகளை எடுத்துக்கொண்டு வர அனைவருமாக அதை பகிர்ந்துண்ண படி அந்த இடமே களை கட்ட துவங்கியது .

அப்பாவின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த முகிலினியின் இதயம் தொண்டைக்குள் வந்து துடித்தது .அப்பா யதுநந்தனை அழைத்து வந்து கொண்டிருந்தார் .எதிர்பக்க கைப்பிடி சுவரின் மேல் ஏறி அமர்ந்த நந்தன் புன்னகையோடு அனைவரையும் வேடிக்கை பார்த்தபடி இருந்தான் .அருகில் அமர்ந்திருந்த சில ஆண்களிடம் இயல்பாக பேசியபடி இருந்தான் .

எல்லோர் வீட்டு பண்டங்களிலும் சிறிது சிறிது ஒரு பேப்பர் பிளேட்டில் வைத்து அனைவரிடமும் தரப்பட்டது .அந்த வேலை செய்து கொண்டிருந்தது முகிலினியும் இன்னும் ஒரு பெண்ணும் .

சுமதி சரஸ்வதியிடம் அவளது உறவுக்காரர் ஒருவரை பற்றி ஏதோ பஞ்சாயத்து வைத்துக்கொண்டிருந்தாள் .

” அதுதான் அவள் நம்பலைன்னு தெரியுதில்லைக்கா .அப்போ அதை தெளிய வைக்க வேண்டியது இவன் கடமைதானேக்கா ? ” யாரைப்பற்றியோ என்னவோ கூறிக்கொண்டிருந்தாள் .

என்ன. விசயமென்று தெரியாவிடினும் இந்த வார்த்தைகள் முகிலினிக்கு சாதகமாக இருக்கவே , ” ஆமாம் சுமதிக்கா , சந்தேகம் வந்தால் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்தானே ” கூறியபடி ஓரக்கண்ணால் யதுநந்தனை நோக்கியபடி ஒரு தட்டை அவனிடம் நீட்டினாள் .

அதனை வாங்கி அருகில் வைத்தவன் ” இதோ வருகிறேன் ” என அருகிலிருந்தவரிடம் கூறிவிட்டு கீழே செல்லும் படிகளில் இறங்கினான் .ஐந்து நிமிடம் சென்ற பிறகும் வரவில்லை .

அவன் வைத்துவிட்டு போன தட்டு அப்படியே கிடக்க , மனம் வாடிப்போனாள் முகிலினி .சாப்பிடாமல் போய்விட்டானே .நான் கொடுத்தேன் என்றா? …அன்று கூட அப்படித்தான் காபியை குடிக்காமல் போய்விட்டான் ….இல்லை இன்று விடக்கூடாது .இதனை நானே கொண்டுபோய் கொடுக்கிறேன் .

எழுந்து அந்த தட்டை எடுத்துக்கொண்டாள் .சுற்றி பார்த்தாள் . அனைவரும் அரட்டையில் ஆழ்ந்திருக்க மெல்ல படியிறங்கினாள் .முதல் படியில் கால் வைத்ததுமே பக்கவாட்டு இருளில் இழுக்க பட்டாள் .

திடீரென நிகழ்ந்த இந்த நிகழ்வில் கத்துவதற்கு வாயை திறக்க எண்ணியபோது உணர்ந்த ஸ்பரிசம் யதுநந்தனை உணர்த்த வாயை மூடிக்கொண் டாள் .இல்லை அவளது வாய் மூடப்பட்டது யதுநந்தனின் வாயினால் .திமிற முயன்றவள் சுவரோடு சேர்த்து அழுத்தப்பட்டாள் அந்த ஆணின் உடலினால் முரட்டுத்தனமாக .

மூச்சு முட்ட தொடங்கியது முகிலினிக்கு .இன்னும் சிறிது நேரத்தில் தன் எலும்புகள் அனைத்தும் நொறுங்கி விடுமென்றே எண்ணினாள் .கைகளால் அவன் தோள்களை பற்றி தள்ள முனைந்து தோற்றாள் .

எவ்வளவு நேரம் …? ஒரு மணி நேரம் போல் தோன்றிய இரண்டு நிமிடங்களுக்கு பின் அவளை விடுவித்தான் யதுநந்தன் .கால்கள் துவள சரிய போனவளை தூக்கி நிறுத்தியவன் அவள் நிற்க தடுமாற அவளை தாங்கி கீழே அமர வைத்தான் .

” தெளிவுபடுத்த சொன்னாயே …அதுதான் படுத்தினேன் …” சொன்னவன் படபடவென கீழே இறங்கி சென்றுவிட்டான் .

அவனுக்காக கொண்டு வந்த பண்டங்கள் சுற்றிலும் சிதறிக்கிடக்க மெல்லிய விசும்பலுடன் அங்கேயே அமர்ந்திருந்தாள் முகிலினி .




What’s your Reaction?
+1
24
+1
15
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!