Serial Stories நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்-5

5

போரும் போர்வையும்

“போர்களம் புகு!” பராந்தகரிடமிருந்து அந்த ஒற்றைச் சொல் அம்பென விரைந்து விழுந்ததைக் கண்ட இராஜாதித்தன் துள்ளி எழுந்தான்.

“தந்தையே! தாங்களா? தாங்களா அனுமதி அளித்தது? யாரேனும் யட்சிணி தங்களுள் புகுந்து களமாடிற்றா? இல்லை பொய்யாய்க் கூறி என்னை ஆழம் பார்க்கிறீர்களா? இதோ குமரனும் நானும் சேர்ந்தால் இராட்டிர கூடமென்ன வடக்கிலும் வென்று வருவோம்.”

கோக்கிழானடிகள் தேவியார் அரசரைக் கூர்ந்து பார்வையுற்றார்.

“நான் என்ன கூறினால் தாங்கள் என்ன வாக்கு அளித்திருக்கிறீர்கள்?” என அப்பார்வை கேள்வி கேட்டது.

“சற்றே பொறு!” அரசரின் விழிகள் பதில் சமிக்ஞை இட்டது.

வெள்ளையங்குமரன் மிகுந்த உற்சாகத்தில் இருந்தான். நண்பனின் வெகுநாள் மனோரதமான  இராட்டிரகூடப் படையெடுப்பு விரைவில் நிகழவிருப்பதும் அதற்கு அரசர் அனுமதி அளித்ததும் அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தந்தது.

வீரனுக்கு அழகே போர்க்களம் தானே. ஒரு சிறு தழும்பு கூட முதுகில் படாத வீரன் தன் நெஞ்சை அனைவர் முன்னும் நிமிர்த்திச் செருக்குடன் செல்வான். அத்தகைய செருக்கும், இறுமாப்பும் குமரனுக்கு உண்டு.

பராந்தகர் தான் முக்கியமான விஷயத்தைச் சொல்லப் போவதற்கு அறிகுறியாக மெல்லத் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். அருகில் வைத்திருந்த பழரசப் பானத்தைப் பருகியவர் முகத்தில் சிந்தனைக் கோடுகள் கோலமிட்டன.

“கூறுங்கள் தந்தையே! என்ன குழப்பம்? தங்கள் நண்பன் பிருதிவீபதியின் துணை கிடைக்காது என வருந்துகிறீர்களா? தாங்கள் மதுரையைக் கைப்பற்றி மதுராந்தகன் ஆனீர்கள். சிங்களத்தை வென்றதால் சிங்களாந்தகன் என்று அழைக்கப் பட்டீர்கள். முன்பு நடந்த இராட்டிரக் கூடப் போரில் கிருஷ்ணனை வென்று வீர சோழன் எனப் பெயர் கொண்டீர்கள். தவிர சோழகுலப் பெருமானார், வீர நாராயணன், சமர கேசரி, விக்கிரம சிங்கன், குஞ்சரமல்லன், சோழ சிகாமணி, சூரசிகாமணி என எத்தனையெத்தனை பெயர்கள் தங்களுக்கு? தங்கள் மகன் நான் தங்களின் வீரத்தில் விளைந்த வீர விதை நான். வீரப் பெயர்கள் தங்களுக்கு மட்டும் தான் சொந்தமாக வேண்டுமா?”

“ஏன் இளவரசே! தாங்களும் தாம்  வீர நாராயண ஏரி கட்டுவித்து வீர நாராயணர் எனப் பெயர் பெற்றீர். தவிர வில் வித்தையில் சிறந்தவனெனத்  தங்கள் தாத்தன் முதலாம் ஆதித்த சோழரின் பெயரான கோதண்டராமர் எனப் பெயர் பெற்றீர். தாங்களும் நம் சக்கரவர்த்தியைப் போல வீரத்திலும் பெற்ற பெயர்களிலும் சற்றும் குறைந்தவரல்ல என்பது என் ஆணித்தரமான கருத்து.” வெள்ளயங்குமரன் வேகமாய் உரைத்தான்.

“இருக்கட்டும்! இருக்கட்டும்! அரசர் சக்கரவர்த்தி தான் ஆனாலும் உன் ஆருயிர் நண்பனை நீ விட்டுக் கொடுக்க மாட்டாயல்லவா குமரா?”

“உண்மை தான் அரசியாரே! எக்காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டேன். உடனிருந்து தோள் கொடுபேன். உதவியெனில் உயிர் கொடுப்பேன்!”

இராஜாதித்தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து தன் தானைத் தளபதி வெள்ளையங்குமரனை ஆரத் தழுவினான். அத்தழுவலில் இவன் இளவரசன் இவன் படைத்தளபதி என்ற பேதமில்லை. இவன் மேல் இவன் கீழ் என்ற வருத்தமில்லை. இவனே நான்! நானே இவன் என்ற தோழமை மட்டுமே தெரிந்தது.

நெகிழ்ந்தனர் பெரியவர்கள்.




“என்றும் எம் தலைமகன் இராஜாதித்தன் பெயர் சொல்லத் துணையிரு குமரா!” கோக்கிழானடிகள் திருவாய் மலர்ந்தார்.

“ஆம். இராஜாதித்தா! நல்லதொரு நண்பனைப் பெற்றிருக்கிறாய். நல்லது. தற்போது படை பலம் நமக்கு நன்றாகவே இருக்கிறது. கூட உன் சுய போர்க்காவல் படைகள் வேறு. அதைத் தயார் செய்யவும்  தான் குமரனை அனுப்பினாய் என எனக்குத் தெரியும்.  தந்தையறியாத போர்முறையா? தாயறியாத கொடும்பசியா? இருக்கட்டும். இப்போது நான் உரைப்பது என்னவென்றால்?”

“கூறுங்கள் தந்தையே! தங்கள் உத்தரவைச் சிரமேற்கொண்டு முடிக்கத் தயாராய் இருக்கிறேன்.”

“உடனே நீ திருமுனைப்பாடி நாட்டின் திருநாவலூரைச் சென்றடை. அங்கு கிராமத்தில் உன் படை பலங்களோடு கூடாரம் அமைத்துத் தங்கி வா. அவ்வெல்லையைப் பலப்படுத்த இதுவே வழி. தவிர இராட்டிரக் கூடர் நம் மீது போர் தொடுக்கும் எல்லையும் அதுதான். பெண்ணையாற்றங்கரையில் இருக்கும் சிவன் கோவிலைக் கற்றளியாகும் பணியில் உன்னை ஈடுபடுத்திக் கொள். காண்பவர் கண்ணுக்கு நீ சிவத்தொண்டு செய்ய வந்ததாகவே இருக்க வேண்டும். போர் என்பதன் போர்வையாய்க் கற்றளி அமைக்கும் பணி இருக்கட்டும்.

எங்கே இரை என்று தேடாமல் எங்கே இறை என்று தேட வேண்டும். நம் இரைப்பின் போது நாம் கொண்ட இரை முன் நிற்காது. இறை தான் முன் நிற்கும்.

என் தந்தை ஆதித்த சோழன் கட்டாது விட்ட பல கோவில்களை என் காலத்தில் கட்டி முடித்தேன். எத்தனைப் போர்க்களம் கண்டாலும் சிவபாதத் தாமரையில் உறையும் வண்டாக நம்மை நாம் உருமாற்றிக் கொள்ள வேண்டும். அதில் மாற்று குறையக் கூடாது.

திருநாவலூருக்கு முன் ஏராய் நீ சென்றால் பின் ஏராக உன் இளவல் அரிஞ்சயச் சோழன் வந்து சேர்ந்து கொள்வான். இராட்டிர கூட மூன்றாம் கிருஷ்ணன் நிச்சயம் தனியே போர் தொடுக்க மாட்டான். அவனுக்குப் பக்கபலமாக வாணர்களும், வைதும்பர்களும், வரப் போகும் கங்க மன்னன் பூதுகனும் கட்டாயம் இருப்பான். ஏனெனில் பூதுகன் மூன்றாம் கிருஷ்ணனின் மச்சினன். உதவி புரியாமல் இருப்பானா?

இத்தனை தாக்குதலையும் நீ ஒருவனாகச் சமாளிக்க இயலாது. ஆகையால் பலம் கொண்டு படை பிரி. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைமையை வை. அத்தலைமைக்கு பல சேனாதிபதிகளையும் தளபதிகளையும் வை. அவர்களின் தலைவனாக நீ இரு. ஆனையாட்கள் அல்லது  குஞ்சர மல்லர்கள் என்ற யானைப் படையும்  குதிரைச் சேவகர் என்ற குதிரைப் படையும், நமது பிரதானப் படையான நெசவாளர்களைக் கொண்ட  கைக்கோளப் படையும் வில்லிகளாம்
வில்லேந்திய வீரர்களும்  வலங்கை வகுப்பைச் சேர்ந்த வேளைக்காரர் என்போரும் நம்மிடம் பெரும் எண்ணிக்கையில் இருக்க என்ன குறை வந்து விடப் போகிறது? சைவப் பெரியோர்களைக் கண்ட   திருநாவலூரில் உன் புகழ் கற்றளி நாதனால் நிலைக்கட்டும். அவ்வூருக்கு இராசாதித்தபுரம் என்ற உன் பெயர் பூக்கட்டும்.  படை திரட்டிப் புறப்படு என் மைந்தா! பகைவரை வெற்றி கொள் என் மைந்தா!”

பராந்தகர் சொல்லி முடித்த வேளை உத்திரப் பல்லியொன்று உதிர்ந்தது இராஜாதித்தன் தலை மேல்.

சகுனத் தடை என்று தடுத்து விடுவார்களோ என அச்சம்பவத்தை மற்றவர் அறியாது மறைத்தெழுந்த இராஜாதித்தன் குனிந்து பெற்றவர்களின் பாதம் தொட்டு எழுந்தான்.

கோக்கிழானடிகளின் விழிகள் நீரால் நிறைந்தன. போர் என்று முரசு கொட்டும் அரச குடும்பம் தானெனினும் தந்தை உரைத்தவுடன்  புயலாய்க் கிளம்பும் மகனின் முன் புத்திரபாசம் எடுபடாது தோற்றுப் போய் நின்றாள் பெற்றவள்.

இராஜாதித்தன் என்னும் புயலை வெள்ளையங்குமரன் என்ற சூறைக் காற்று அணைவாய்ப் பின் தொடர்ந்தது.

சபைக்கு வெளியே வெள்ளையங்குமரன் வரவழைத்திருந்த சக்கரவானன் தன் மைத்துனன் சுயம்பிரகாச வல்லானுடன் கை கூப்பி நின்றிருந்தான்.

இளவல் இராஜாதித்தரையும், சேனைத் தளபதி வெள்ளையங்குமரனையும் முதன்முதலில் நேரில் இத்துணை அருகில் கண் நிறைக்கக் காண்கிறான். காணும் போதே உடலெங்கும் பெரும் சிலிர்ப்போடிப் பரவுவதை உணர்ந்தான். இறைவனைக் கண்ட பரவசம் அவனிடம்.




கொண்டு வந்த வேள்விப் பிரசாதத்தை இளவலிடம் பவ்யமாகத் தலை குனிந்து அளித்தான்.

“தாழைமேட்டில் தலை உருளப் பார்த்தது எனக் கேள்வியுற்றேன்! தலை தப்பியதா?” இராஜாதித்தன் குறும்புடன் வினவினான்.

“பல தலைகள் தப்பின உருள வேண்டிய தலையையும் சேர்த்து!” சக்கரம் கூப்பிய கரத்தை இறக்காது வினயமாகப் பதிலளித்தான்.

“இவர் யார்? இவரும் நம் போர்க்காவல் படை வீரரா?” வெள்ளையங்குமரன் சற்றே ஓங்குதாங்காக இருந்த சுயம்பிரகாச வல்லானைக் கண்டு விசாரிக்க..

“என் மைத்துனன் தளபதியாரே. என் சகோதரி அக்கண்மங்கையைத் திருமணம் செய்யப் போகும் அதிர்ஷ்டசாலி. வாணன் ஊடுருவியதில் நானும் என் வீரமும் இவன் மனதில் ஊடுருவி விட்டமையால் என் பின்னோடு நம் படையில் சேருவதற்காய் வந்து விட்டான். நான் இதுவரை அளித்த பயிற்சியின்காண் இவன் குதிரையேற்றத்தில் மின்னல் வீரன். வாளும் கேடயமும் இவன் கைப்பிள்ளைகள். நமது கடுமையான பயிற்சி இவனை இன்னும் செம்மைப் படுத்தி விடும்.”

சுயம்பிரகாச வல்லான் சேனைத் தளபதியின் வாய்ச்சொல்லுக்காக ஆர்வத்துடன் காத்து நின்றான்.

“வீரம் படிக்கும் முன் மனிதர்களைப் படிக்க வேண்டும். இவன் யார்? இவன் எப்படிப் பட்டவனெனப் பார்வையாலயே எடையிடல் வேண்டும். அதன் பின் தான் அவனிடம் ஒரு வேலையை ஒப்படைக்க வேண்டும்!” வெள்ளையங்குமரன் வல்லானைக் கூர்ந்து நோக்கி உரைத்தான்.

“மன்னியுங்கள் தளபதியாரே. அடி சறுக்கி விட்டது. வந்தவனை கிராமத்தாள் என நினைத்து பொங்கல் அண்டாவை நகர்த்தக் கூறினேன். விஷம் கலப்பானென்று அறிந்திருக்க வில்லை. பெரும் பிழை ஆயினும் அவசரமாய் நிலைமையைக் கையாண்டு அவற்றை அப்புறப் படுத்தி விட்டேன்.”

“கூர் நோக்கு பழகு முதலில். தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போர்க்களத்தில் ஆகி வராத செயல். செயலைச் செய்யும் முன் ஆயிரம் யோசனை வேண்டும். செய்தபின் மடை மாற்றலாகாது.”

“ஆகட்டும் தளபதியாரே! அப்படியே செய்கிறேன்!”

“சக்கரவானா! உன் மைத்துனனை படையில் சேர்த்துக் கொள். விரைவில் போர் முரசு கொட்டலாம். அப்போது வல்லானும் வர வேண்டும். இல்லாள் விடுவிப்பாள் தானே!”

“தளபதியாரே! என் சகோதரி அக்கண்மங்கையும் நம் படையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளச் சித்தமாய் இருக்கிறாள். படை வீரர்களுக்கான உணவு தயாரிக்கும் பணியில் அவளையொத்த இளம் பெண்கள் படை தயாராய் உள்ளது.”

“நல்லது! சப்தமில்லாமல் அணி அணியாய்த் திரளுங்கள். ஒவ்வொரு பிரிவாக யாருக்கும் எந்த வித சந்தேகமும் வந்து விடாத படி பெண்ணையாற்றங்கரையில் குடிலமைத்துத் தங்குங்கள். தங்கும் வீரர்கள் அனைவருமே திருநாவலூர் ஆடல்வல்லான் கோவிலைக் கற்றளிக் கோவிலாக்க வந்தவர்கள் என ஞாபகம் இருக்கட்டும். என்ன சொல்கிறீர்கள் இளவரசே?”

“ஆம்  குமரா! திட்டம் தீட்டுவதில் நீ புலியாயிற்றே. எய்த அம்பு நோகாது எதிரியைப் பதம் பார்க்கும் கலையைத் தெளிவுற அறிந்தவனாயிற்றே. ஆகவே  தான் நான் வாளாதிருந்தேன். சக்கரவானா! உமது போர்க்காவல் படை திரட்டி திருநாவலூர் வந்துவிடும். அப்படியே ஒவ்வொரு பகுதிக்கும் தகவல் அனுப்பி விடும். நீர் சிறைபிடித்து வந்த வாணன் போர் முடியும் வரை சிறையில் இருக்கட்டும். வெற்றி முரசு கொட்டும் வேளை விடைபெறும் அவன் தலை.” இராஜாதித்தன் உத்தரவிட்டான்.

இருவரும் விடைபெற்றுச் செல்கையில் இராஜாதித்தனைக் காணவென்று உள்ளே வந்தாள் ஒருவள். அவள் தலைக்கோலி இளமயிலாள்.

“திருநாவலூர் சிவனைத்  தொழ கணிகையரும் களம் இறங்குகிறோம். சக்கரவர்த்திப் பெருமான் ஓலை அனுப்பினார். ஆடல் வல்லானுக்கு பதிகம் பாட ஆடல் மகளிர் வாராது இருப்பதா? அனுமதி அளியுங்கள் இளவரசே!”

தலை பணிந்து நின்றாள்.

சோழ நாட்டில் ஆடல்மகளிருக்கு மதிப்பு இருந்தது. அவர்கள் யார் வேண்டுமானாலும் ஆட்டுவிக்கும் கைப்பாவைகள் அல்லர். பரதக் கலையிலும் பாட்டிலும் தேர்ச்சி பெற்றவராய் விளங்கினர். ஆடல்வல்லானுக்காய் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டு கோவிலோடு உறவு கொண்டவராய் இருப்பினும் அரசியல் களத்தில் அவர்களும் காய்களாக நிறுத்தப் பட்டனர். பாட்டும் பரதமும் வீரர்களின் போர்க் களைப்பைப் போக்க உதவியது.

மாமன்னர் பராந்தக சக்கரவர்த்தியின் வியூகம் பற்றி இராஜாதித்தன் வியந்தான். போர்க்களம் புகு என்று கூறியதோடு இல்லாமல் பின்னோடு களத்தில் ஒவ்வொருவராய் இறங்கச்செய்யும் திறமை தன் தந்தைக்கு அன்றி யாருக்கும் வராது என இறுமாப்பு கொண்டவன் தலைக்கோலி இளமயிலாளைத் தன் பரிவாரங்களுடன் வந்து சேருமாறு ஆணையிட்டுக் குமரன்  மற்றும் படையினருடன் திருநாவலூர் அடைந்தான்.  போரா? இல்லை புண்ணியம் பேணும் கோவில் கட்டுதலா? யாரறிவார்?

(தொடரும்)




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!