Serial Stories தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ-10

10

“என்ன மாமா?” சாஹித்யாவின் குரல் கேட்க, தன் கையில் இருந்த பொட்டலங்களை நீட்டினான்.

“சோன்பப்படி,வழியில் வந்தது வாங்கினேன்.”

எழுந்து வந்து பொட்டலத்தை வாங்கும் போதுதான் கவனித்தான்… அவள் அஞ்சனா. இருவருமாக பேசிக்கொண்டு சாஹித்யாவின் நைட் பேண்ட் டி-ஷர்ட்டை அணிந்து கொண்டிருப்பார்கள் போலும்.

சாஹித்யா தந்தையைப் போல் நெடுநெடுவென்று உயரமான உடல்வாகு கொண்டவள். அஞ்சனாவோ சராசரியான இந்திய பெண்களின் சற்றே குள்ள உருவம்.ஆக இப்போது இருவரும் ஒரே உடலமைப்பில் இருக்க, சாஹித்யாவின் உடை அஞ்சனாவிற்கும் பொருந்திப் போனது.

 முன்வராண்டா ஓரத்தில் வெளிப்புறமாக அமைந்திருந்த ஜன்னல் வழியாக உள்ளே வந்து விழுந்த நிலவு ஒளியில் இரவு உடையில் வடிவாகத் தெரிந்த

மனைவியை விழிகளால் விழுங்கினான் சத்யநாதன்.

“சின்னப் பெண் என்ற நினைப்போ?” சீண்டிய கணவனின் குரலில் நக்கல் இல்லாமல் தாபம் தெரிய,

சோன்பப்படியை வாங்கிய அஞ்சனாவில் கை மெலிதாய் நடுங்கியது.

“விடுங்க” பொட்டலத்தோடு கையையும் இறுக்கிப்பிடித்த கணவனை அதட்டியபடி அறைக்குள் திரும்பி பார்த்தாள். சாஹித்யா  போனில் ஆழ்ந்து கிடக்க, “சாஹியிடம் என்ன சொன்னீர்கள்? வாயை ஒட்டுவீர்களா?” கோபமாக கேட்டாள்.

“அது சும்மா விளையாட்டுக்காக…”

“எதில் விளையாடுவது? சாஹித்யா ஒன்றுமே புரியாத சின்ன குழந்தை இல்லை. வயதுப் பெண். உங்கள் பேச்சு அவளுக்கு புரிந்திருந்தால்…?”

மிக மெலிதாய் “உஷ்” என்று சீட்டியடித்தான் சத்யநாதன். “நான் சாதாரணமாக அதிகம் பேசினால் வாயை ஒட்டுவதாக சொன்னேன். இதில் அவளுக்கு புரிவதற்கு என்ன இருக்கிறது? நான் சொன்னதில் வேறு ஏதும் அர்த்தம் இருக்கிறதா அஞ்சு?”

அவன் விஷமமாக கேட்க இப்போது அஞ்சனா விழித்தாள்.

சாதாரண பேச்சை நான்தான் வில்லங்கமாக நினைத்துக் கொண்டேனோ?

“நீ என்ன நினைத்தாய் அஞ்சு? எப்படி வாயை ஒட்டுவேன் என்று நினைத்துப் பார்த்தாய்?” இதழ்களை குவித்து அவன் கேட்க அஞ்சனாவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது.

திருட்டுப் பயல்! வேறு ஏதோ எண்ணத்தில் சொல்லிவிட்டு இப்போது கதையையே என் பக்கம் மாற்றப் பார்க்கிறான்! அவன் கேலியில் இருந்து மீள முடியாதவள் அவனை திசை திருப்ப இனிப்பை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு கை உயர்த்தி வைதாள் “போடா”

சத்யநாதன் சட்டென அவள் இடை பற்றி அறைக்கு வெளியே இழுத்த கையோடு அறை கதவையும் வெளியிழுத்து பூட்டினான். குரல் உயர்த்தி கத்த திறந்தவளின் வாயை தன் இதழ்களால் அடைத்தான்.

சில நொடிகளே நீடித்தாலும் பெரும் வேதியியல் மாற்றத்தை அஞ்சனாவினுள் கடத்தியது அந்த இதழ் முத்தம்.

“இப்படித்தான் உன் வாயை ஓட்ட ஆசைப்பட்டேன்” சொல்லிவிட்டு  தன்னறைக்குள் நுழைந்து கதவை பூட்டிக் கொண்டான். மீண்டும் அறைக்குள் போக அஞ்சனாவிற்கு சுத்தமாக ஐந்து நிமிட ஆசுவாசம் தேவைப்பட்டது.

———

இட்லி தட்டில் நனைத்த வெள்ளைத் துணியை விரித்து மாவை பாதி குழிக்கு ஊற்றினாள் அஞ்சனா. பிறகு வெங்காயம், தக்காளி, கரம் மசாலா இஞ்சி பூண்டு இவற்றோடு கொஞ்சம் கறியையும் கொத்தி போட்டு வதக்கி வைத்திருந்த கலவையிலிருந்து இரண்டு ஸ்பூன் எடுத்து மாவிற்குள் வைத்தாள். மீண்டும் அரைக்கரண்டி மாவு ஊற்றி இட்லியை முழுமையாக்கினாள்.




 இப்படி இருபது கறி இட்லிகளை ஊற்றி வைத்துவிட்டு அருகில் இருந்த அடுப்பில் காய்ந்து கொண்டிருந்த எண்ணெய்குள் சீவி வைத்திருந்த வாழைக்காயை கடலை மாவில் தோய்த்து போட துவங்கினாள்.

பழக்கமான வேலைகளை கைகள் செய்தாலும்,அவள் மனம் மட்டும் இன்னமும் முன் தின இரவு கணவனின் முத்தத்திலேயே ஆழ்ந்து கிடந்தது.

நேற்று இரவும் குடித்து விட்டுத்தான் வந்திருந்தான். பக்கத்தில் வரும்போதே குப்பென்ற நாற்றம் அடித்ததே ஆனால்….?

“சை என்ன கொஞ்சம் கூட டீசன்சி இல்லாமல்…”அறைக்குள் போய்க்கொண்டவனின் மூடிய கதவின் முன் கேட்டாள்.

“கட்டின மனைவிக்கு முத்தமிடுவது நாகரிகத்தோடு சேர்ந்ததுதான். ஆனால் அடுத்தவரின் போனை அவருக்குத் தெரியாமல் நோண்டுவதுதான் எந்த வகை  நாகரிகமென்று எனக்கு புரியவில்லை. குட் நைட்”

சத்யநாதனின் குரல் கதவுக்கு பின்னால் கேட்க மெலிதாய் நாக்கை கடித்துக் கொண்டாள். அதையும் இவன் கவனித்திருக்கிறான். அது…. தவறுதான், ஆனாலும் இவன் என்ன பெரிய உத்தமன்! என் தவறை  சொல்லிக் காட்டுவதற்கு?

இந்த வீம்பு இப்போதும் தலை தூக்க, சாப்பிட்டுவிட்டு போனை டேபிளில் வைத்து விட்டு கை கழுவ போயிருந்த சாஹித்யாவின் போனை தன் கையில் எடுத்துக் கொண்டாள்.  அவள் பார்வை அப்போது உணவுண்ண அடுப்படிக்குள் நுழைந்த சத்யநாதன் மேல் சவாலாய் இருந்தது.

அவள் செயலை சிறு முறைப்புடன் பார்த்தபடி வந்தவன் வேண்டாம் கீழே வை என்றான் கண்களாலேயே அதட்டலாக.

“போடா” உதடுகளை மட்டும் அசைத்த போது வெடுக்கென அவள் போன் பிடுங்கப்பட்டது. சாஹித்யா கோபத்துடன் நின்றிருந்தாள். “என் போனை எதற்காக தொடுகிறீர்கள்?”

“இல்லைம்மா சும்மா பார்த்தேன்” அஞ்சனா தடுமாற, “அடுத்தவர் போனை அவர் இல்லாத போது எடுத்து பார்ப்பது இண்டீசன்ட்”

வயதில் சிறிய பெண்ணிடம் வார்த்தைகள் வாங்குவது அஞ்சனாவிற்கு வருத்தத்தை தர தலை குனிந்து நின்றாள் “சாரிம்மா”

“சாஹி நீ பைக் கிட்ட போய் நில்லு. மாமா பைவ் மினிட்ஸ்ல வந்துடுறேன்” அவளை வெளியே அனுப்பிய சத்யநாதன் “இது தேவையா உனக்கு?” கடிந்தான்.

மௌனமாய் அவனது தட்டில் இட்லிகளை வைத்தவளை “நீ சாப்பிட்டாயா?” மென்மையாக விசாரித்தான்.




அஞ்சனாவின் கண்களில் குபுக்கென்று நீர் திரண்டு விட்டது. இந்த வீட்டில் இதுவரை யாரும் அவளிடம் கேட்காத அக்கறையான கேள்வி.இதோ தாலி கட்டிய புருஷன் கூட இந்நாள் வரை கேட்டதில்லை.

நான் சொன்னேன் கேட்டாயா என்ற குத்தல் பேச்சை எதிர்பார்த்திருந்தவள்,இந்த  அக்கறை காட்டியவன்பால் வீழ்ந்த மனதை அடக்கி தன் பக்கம் இழுத்துக் கொண்டு விருட்டென்று பின்பக்கம் போய் நின்று கொண்டாள்.

சாப்பிட்டு கை கழுவ பின்னால் வந்த சத்யநாதன் “எப்போதும் கையில் போனோடு சுற்றிக் கொண்டிருந்தால் படிப்பு மண்டையில் எப்படி ஏறும்? இதையெல்லாம் நீங்கள் கேட்க மாட்டீர்களா அத்தை?” என்று சுகுணாவிடம் வத்தி வைத்துக் கொண்டிருந்த அஞ்சனாவை நம்ப முடியாமல் பார்த்தான்.

“இல்லம்மா சாஹி ரொம்ப சூட்டிகையான பொண்ணு. நல்லா படிப்பா. அப்படி விளையாட்டுத்தனமெல்லாம்  கிடையாது”

“அதெல்லாம் இல்லை அத்தை எந்நேரமும் போன்தான். படிப்பெல்லாம் அவளுக்கு இரண்டாம் பட்சம்தான். இன்று பள்ளியிருந்து வரவும் நீங்களே விசாரியுங்கள்” தூண்டிவிட்டாள்.

“இது என்ன வேலை அஞ்சனா?” அம்மா நகர்ந்ததும் மனைவியை கண்டிப்பாக கேட்டான்.

 அஞ்சனா அலட்சியமாய் தோள் குலுக்கினாள். “என்னை நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா? உங்கள் அக்கா மகள் சாயந்தரம் வந்து என்னைப் பற்றி சொல்வதற்கு முன்னால் என்னை நானே காப்பாற்றிக் கொள்கிறேன். அவ்வளவுதான் “

இவளை எந்த கணக்கில் சேர்க்க யோசனையுடன் பைக்கை செலுத்திக் கொண்டிருந்தவனின் பின்னால் அமர்ந்திருந்த சாஹித்யாவும் வரிசையாக குற்ற பத்திரிக்கையை அஞ்சனா மேல் வாசித்தாள். என் ஃபிரண்ட்ஸ் ,ஸ்கூல் டீச்சர் இவர்களைப் பற்றி எல்லாம் எதற்காக அஞ்சு நோண்டி கேட்க வேண்டும் மாமா? எனக்கு கோபமாக வருகிறது. அவர்களிடம் சொல்லி வையுங்கள்”

சமாதான வார்த்தைகளை அக்கா மகளுக்கு சொல்லி அவளை பள்ளியில் விட்டவன் பைக்கை அவர்கள் வீட்டு தெருமுனை பெருமாள் கோவிலுக்கு செலுத்தினான். வாரந்தோறும் சனிக்கிழமை அங்கே அஞ்சனா வருவது வழக்கம்.

கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த போதும் மனம் விட்டு பத்து நிமிடம் பேசுவதற்கான சூழல் இல்லாத தங்கள் வினோத வாழ்வை நினைத்தபடி பார்க்கிங்கில் பைக்கை விட்டுவிட்டு கோவிலுக்குள் நுழைந்தவன் அதிர்ந்தான்.

சிரிக்க சிரிக்க பேசியபடி கோவில் பிரகாரத்தை கோகுலுடன் வலம் வந்து கொண்டிருந்தாள் அஞ்சனா.




What’s your Reaction?
+1
48
+1
32
+1
3
+1
3
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!