Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-4

 4

மாலைச்சூரிய அஸ்தமிப்பில் அந்த இடமே தகதகத்தது. கிருபா சங்கர் விழிவிரியப் பார்த்தான். மஞ்சள் பூம்படுக்கை தங்கத்தகடு விரித்தாற்போல்… மரங்களும் இலைகளும் கூட… ‘என்ன ஒரு விசித்திரம்!’

“கோதை! இதைப் பார்த்தாயா?”

கோதையின் மனம் அந்த அழகில் பதியவில்லை.

“கிருபா …இதிருக்கட்டும்! யாரோ நம்மை பின்  தொடர்வது போலத் தோனுது.”

“இந்த மஞ்சள் காட்டில் நம்மிருவரைத் தவிர யாருமில்லை கோதை. இந்தக் காட்சியைப் பார். மஞ்சள் வெயிலில் வீசும் காற்றில் இந்தப் பூக்களைப்பார். தங்கத்தகட்டை வெட்டித் தூவி விட்டாற் போலில்லை?”

மெய்ம்மறந்து தன் அலைபேசியில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தவனின் பேச்சில் மனம் பதியவில்லை அவளுக்கு. யாரோ நடந்து வருவதும் சருகுகள் மிதிபடுவதுமாய் செவியில் துல்லியமாய்க் கேட்டது. விழிகளைச் சுழற்றினாள். தலையைத் திருப்பி பின்னாலும் பார்த்தாள். கண்ணிலேதும் சிக்கத்தானில்லை. எதிரே கண்களில் கனவுகளோடு நிற்கிற கிருபாசங்கர் விழுந்தான். கொஞ்சம் பொருளாதாரத்தில் கீழேதான் அவன் குடும்பம். அண்ணன் ஒருவன் தலையெடுத்தப் பின்பே ஆசுவாசமான குடும்பப் பின்னணி அவனுடையது. எதையாவது சாதித்துக் காட்ட வேண்டுமென்ற துடிப்பு அவனிடம் மின்னலாய் ஓடிக் கொண்டேயிருக்கும். 

இந்த இடத்தையும் இங்கு பூத்துச் சொரியும் மஞ்சள் பூவையும் கேள்விப்பட்டதுமே இதுவே தன் புரோஜெக்ட் என்று கிளம்ப, கோதையுடன் சேர்த்து இன்னும் மூவரும் இணைய, பஞ்சபாண்டவர் அணி முஸ்தீபாய்க் கிளம்பி இந்த அரண்மனைக்கும் வந்தே விட்டது. மூவர் பயணக்களைப்பில் ஓய்வெடுக்க, இவன் தனியே புறப்படுவதைப் பார்த்த கோதையும் இவனுடன் சேர்ந்து கொண்டாள்.

முதல்நாள் கல்லூரியில் அடியெடுத்து வைக்கையிலேயே இருவரும் ஒன்றாகத்தான் நுழைந்தார்கள். என்ன… இவள் காரிலிருந்து இறங்கினாள். இவன் பேருந்திலிருந்து இறங்கினான். 

எதிர்பார்ப்பும் பயமும் கனவுகளை பின்னுக்குத் தள்ள இவனுக்குப் பின்னே இவள் நடந்தாள். 

“ஏய்! இங்கே வா”

யாரோ கூப்பிட்டார்கள். தலைநிமிர்ந்த இருவருமே ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள…

“உங்களைத்தான்! ரெண்டுபேரும் வாங்க.”

“இந்தக் கல்லூரியில் ராகிங் இல்லைன்னு சொன்னாங்களே” – அவளின் முணுமுணுப்பு கேட்டது அவனுக்கு.

“ஆமாம். ஆனா… இருக்கு போலிருக்கே!”

“இப்போ என்ன பண்றது?” – அவனிடமே நேரடியாகக் கேட்டாள்.

“நீங்க ஃபர்ஸ்ட் இயரா?” 

“ஆமாம். நீங்க?”

“நானும் தான்.”

“ஏய்! கூப்பிட்டு எவ்ளோ நேரமாச்சு… என்னவோ தேர் போல அசைஞ்சு வரிங்க? டேய்… இவங்களை செமயா கவனிக்கனும்டா.”

அடுத்தவன் வந்தான். மேலும் கீழுமாய் இருவர் மீதும் பார்வையை ஓட்டியவன், குறுந்தாடியை தடவியபடி “”ம்… இப்போ நீ என்ன பண்றே… ரோஜாப்பூவை நீட்டி இவகிட்டே புரோபோஸ் பண்றே. அவ பதிலுக்கு ஐ லவ் யூ சொல்றா… ரெடி… ஆக்ஷன்” என்றான்.

கிருபாவுக்கு சர்வாங்கமும் நடுங்கியது. கோதையோ முகமெல்லாம் வியர்த்து வடிந்தாள்.

“அ..அ..அண்ணே! இது…இது வேணாம்ணே!”

“ஓகே… அப்போ…”

கோதை அவன் முகம் பார்க்க…

“ஒன்னு செய்! இவனுக்கு ஒரு உம்மா கொடுத்திடு கன்னத்திலே, விட்டுடலாம்…”

‘ஹாங்… உம்மாவா… அடப்பாவி! என்னை என்ன நினைச்சுட்டுருக்கான்?’ திரும்பித் தன்னுடன் வந்தவனைப் பார்த்தாள்.

‘இந்தp பலியாட்டை வச்சே சமாளிப்போம். மூணு வார்த்தை தானே சொல்லிட்டு எஸ்ஸாகிடுவோம்.’




“இல்லேன்னா நான் இவர் புரோபோஸலையே அக்ஸப்ட் பண்ணிக்கறேன். ஆனா… ரோஜாப்பூ இல்லியே.”

உலக மகாக் கவலையாகச் சொல்ல முதலில் பேசியவன் பூவை நீட்டினான்.

‘அடப்பாவிகளா! எல்லாம் தயாராத்தான் வந்திருக்கானுங்க பக்கிங்க’ என்று மனதுக்குள் தாளித்தவள் முகத்தில் புன்சிரிப்பை ஏந்திக் கொண்டாள்.

கிருபாசங்கர் மண்டியிட்டுப் பூவை ஏந்தி அவளிடம்  “ஐ லவ் யூ” சொல்ல இவளும்  “மீ ட்டூ ” என்று சொல்லவும் அந்தப்பக்கம் ஒரு பேராசிரியை வரவும் சரியாக இருந்தது. 

“என்ன நடக்குது இங்கே?”

“நத்திங் மேம்.  ஃப்ரெஷர்ஸ்க்கு பூவும் ஆண்களுக்கு கீசெயினும் கொடுத்து வரவேற்கிறோம் மேம்” என்றவன் கையில் விதவிதமான கீசெயின்களும் இன்னொருவன் நீட்டிய நெகிழிப்பையில் ரோஜாப்பூக்களும் இருந்தன. 

“ம்! வாங்கியாச்சா …கிளாஸ்க்கு போங்க” என்று விரட்ட ஓடியே போனார்கள் இருவரும்.

அதன்பிறகு… 

இருவரும் ஒரே வகுப்பு எனவும் நெகிழ்வான நட்பு தோன்றியது. முதுகலைவரைக்கும் தொடர்ந்த நட்பு எல்லைமீறி காதல் கோட்டையை தட்டுவதற்கு ஏதுவான நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. கோதை இந்த மஞ்சள் பூ புரோஜெக்ட் காலத்திலேயே தன் காதலை சொல்லிவிடுவது என்ற உறுதியிலிருந்தாள். படிப்பு முடிந்ததுமே திருமணம் என்பதில் அவளின் வீட்டார் முடிவெடுத்திருக்க இன்னும் காலந்தாழ்த்தினால் முதலுக்கே மோசம் என்றெண்ணித்தான் அவளும் வந்திருந்தாள். அவளுக்கும் கிருபாவின் லட்சியம் தெரியும். ஆனால் சொல்லாத காதலுக்கு மதிப்பில்லையே! அவன் லட்சியம் எதையாவது சாதிக்கவேண்டும், பேரும் புகழும் பெறவேண்டும். இது சரிதான், ஆனால் அதேசமயம் கோதைக்கு தன் காதலும் அதிமுக்கியமாகப் பட்டது. 

மீண்டும் சருகுகள் மிதிபடும் ஓசை… திடுக்கிட்டுச் சுற்றும்முற்றும் பார்த்தாள். 

இப்போது தகததத்துக் கொண்டிருந்த பூக்காடு அந்தியின் கருமையைப் பூசிக்கொண்டுவிட இடமே ஒருவித அச்சத்தைத் தந்தது. 




“இங்கே பாரு கோதை! இதனுடைய கிளைகள்கூட மஞ்சளும் லேசான பசுமையுமாயிருக்கு. இலைகளைக் கவனி… பச்சையாய் இல்லாமல் பச்சை விரவிய மஞ்சளாயிருக்கு. இதைப்பிடி…. கொஞ்சம் காய்ந்த சருகுப் பூக்களை இதில் சேகரிப்போம். கொஞ்சம் ஃப்ரெஷ் பூங்கொத்து கிளை இலைன்னு ஒடிச்சுக் கொள்ளலாம். திரும்ப காலையில் வரலாம் அவங்களையும் அழைச்சுக்கிட்டு…. விதை உதிர்ந்து கிடக்கான்னு பார்க்கனும்” என்றவனின் செவிகளில் பாதங்கள் வேகமாகவும் அழுத்தமாகவும் பதிவதால் சருகு நெரிபடும் ஓசை துல்லியமாக விழுந்தது.

இருவருமே திரும்பிப் பார்க்க அங்கே…….

*****

ஆதித்யா பயண முஸ்தீபுகளிலிருக்க மனைவி ஸ்வேதாவோ முரண்டுக் கொண்டிருந்தாள்.

அவன் அரண்மனைக்கு போகப் போகிறேன் என்று சொன்னதுமே தன் மாமியாரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு தானும் புறப்படப் போவதாகச் சொல்ல ஆதித்யா எகிறினான். 

“நான் வேலை விஷயமாப் போறேன், நீ எதுக்கு?”

“ஏண்டா! இதுவரை வேலை விஷயமா வெளிநாடெல்லாம் போயிருக்க, அவ வரேன்னு சொன்னாளா? ஏதோ ஆசைப்படுறா. கூட்டிட்டுத்தான் போயேன்.”

“நான் வேலை விஷயமா அங்கே இங்கே போவேன். இவ தனியா என்னம்மா செய்வா?”

“அதான் காரணமா? நான் வரேன் துணைக்கு. உங்கப்பாவும் வெளிநாடு போயிருக்கார், வர பத்துநாளாகும். ரெண்டு பேரும் கிளம்புறோம். என்ன ஸ்வேதா …”

“சூப்பர் அத்தை” இருவரும் ஹைபை கொடுத்துக் கொள்ள ஆதித்யா பல்லைக் கடித்தான். தலையை இருகரங்களால் முட்டுக் கொடுத்தபடி உட்கார்ந்தான். 

ஸ்வேதாவுக்கு உள்ளுக்குள் அந்தக் கனவே துரத்திக் கொண்டிருந்தது. அவனுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சியே வம்பு பண்ணிக் கிளம்பினாள். குலதெய்வத்துக்கு மனதிற்குள்ளாகவே வேண்டுதல் வைத்துவிட்டு சிரித்த முகமாகவே புறப்பட ஆதித்யா முகத்தை முழநீளம் தூக்கிக் கொண்டு எரிச்சலோடு  இருவருடனும் பயணிக்க ஆரம்பித்தான். 

அங்கே சிலவேலைகள் இருந்தன. சரி பார்த்தபின்பு அதைத் தன்னுடைய வெப்சைட்டில் லோட் பண்ணி வெளியிட்டால்தான் ரிசார்ட்டுக்கு மவுசு கிடைக்கும். இன்னும் என்னென்ன மாற்றங்களை கொண்டு வந்தால் நன்றாக இருக்குமெனத் திட்டமிட்டபடி யோசனையில் உழல…. 

மலையடிவாரத்திலிருந்து மேலே நகர ஆரம்பித்தது கார். மூவருமே அவரவர் எண்ணச் சுழலில் திணறினர். ஆதி தன் வேலையில் உழல, ஸ்வேதா தினம் வந்து மிரட்டும் கனவில் உளைந்தாள். ஆதித்யாவின் தாயோ மகனுக்குத் திருமணமாகி மூன்று நான்கு வருடமாகியும் குழந்தையில்லாததை நினைத்து ஆதி வர்ணித்த ரணபத்ர காளிக்கு  வேண்டுதல் வைத்தால் பலன் கிடைக்குமோ என்ற நம்பிக்கையோடு புறப்பட்டிருந்தார். 

கார் குலுங்கி நின்றது. 

 

அந்திக் கருக்கல் இன்னும் கவியாத நேரம். வழியில் பெரிய மரம் ஒன்று சாய்ந்து கிடந்தது. 

ஆதித்யா கோபத்துடன் காரிலிருந்து இறங்கி கோபத்துடன் காரை உதைத்தான்.  சுற்றிலும் வனாந்தரமாயிருக்க கண்ணுக்கெட்டிய தூரம் யாரையும் காணோம். ஆனால்…. சலங்கை சத்தம் மட்டும் கேட்டது. ஆதிக்குள் குளிரடித்தது.




What’s your Reaction?
+1
7
+1
13
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!