Serial Stories தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ-9

9

எப்போதும் போல் வீட்டினர் அனைவரும் தூங்கிய பிறகு வீடு திரும்பினான் சத்யநாதன். தன்னிடமிருந்த சாவியால் கதவை திறந்து கொண்டு வந்தவன், உள் விளக்குகளை போட்டுக் கொள்ளாமல் இருளிலேயே உத்தேசமாக நடந்து மாடியேறி தன் அறைக்குள் வந்தான்.

வழக்கமாக அஞ்சனா படுக்கும் தரை வெறுமையாக இருக்க, இவள் எங்கே போனாள்? அன்று போல் சொல்லாமல் அம்மா வீட்டிற்கு போய் விட்டாளா? அப்போதே போய் தலைமுடியைப் பிடித்து இழுத்து வரும் வேகம் தோன்ற கடிகாரம் காட்டிய பதினொன்றரை மணியில் தயங்கினான்.

சோர்வுடன் கட்டிலில் சரிந்தவனின் கண்களில் அஞ்சனாவின் ஹேண்ட் பேக், பர்ஸ், போன் போன்ற சாமான்கள் பட இவைகள் இல்லாமல் அவள் வெளியே போக மாட்டாளே! யோசனையுடன் எழுந்து அமர்ந்தான்.

எந்த அறைக்குள் போய் பதுங்கி கொண்டிருக்கிறாள்… அறையை விட்டு வெளியே வந்தான். பக்கத்து அறையில் மெலிதான ஏசியின் உர்ர் கேட்டது. அது கெஸ்ட் ரூம். கோபத்துடன் அந்த அறைக் கதவை தொட ,அது திறந்து கொண்டது. உள்ளே கட்டிலில் அஞ்சனா இருந்தாள். படுத்தபடி கையில் போனை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏய்” சத்யநாதன் கோபமாக கத்த, அவள் வேகமாக போனை தலையணைகடியில் வைத்துவிட்டு எழுந்து அமர்ந்தாள்.

“இங்கே என்னடி செய்து கொண்டிருக்கிறாய்? எழுந்து வாடி”

உதடுகளில் விரல் வைத்து “உஸ்” என்றாள்.

“என்னடி மிரட்டுகிறாய்?”  உஸ் சொன்ன உதடுகளை இரு விரல்களால் கொத்தாக பற்றினான்.

“அத்தனையும் அடம், திமிர் ,அகம்பாவம்” உதடுகளைப் பற்றி அழுத்தியவனை உதறித் தள்ளியவள், “தள்ளி நில்லுடா” அடிக்குரலில் சீறினாள்.

“அந்த அறையை விட இந்த அறை வசதியாக இருக்கிறது என்று நினைக்கிறாயா? எனக்கு ஓகேதான்” என்றபடி கட்டிலில் அமர்ந்து கொள்ள போனவன், அவளது மிரண்ட பார்வையில் புருவம் சுருக்கினான்.

அஞ்சனாவின் பார்வை பாத்ரூம் பக்கம் செல்ல உள்ளே விளக்கின் வெளிச்சம் தெரிந்தது, “யார்?”

பாத்ரூம் கதவை திறந்து வெளியே வந்தவள் சாஹித்யா” ஹாய் மாமா! இப்போதுதான் வந்தீர்களா?”

“சாஹித்யா, நீ இங்கே… என்ன… எப்படி…?”

வார்த்தைகளில் தந்தி அடிப்பவனை அஞ்சனா சுவாரஸ்யமாக வேடிக்கை பார்ப்பதை உணர்ந்தவன் அவள் உச்சந்தலையில் நச்சென்று கொட்டும் ஆவலை சூழ்நிலை கருதி அடக்கிக் கொண்டான்.

“அம்மாவிற்கும் ,அப்பாவிற்கும் டெல்லியில் செமினார் மாமா. எனக்கு எக்ஸாம் டைம். அதனால் பத்து நாட்களுக்கு நான் இங்கேதான்” சொல்லிவிட்டு சிறு குதியுடன் கட்டிலில் ஏறி சரிந்து படுத்தாள் சாஹித்யா.

“சாஹிக்கு துணையாக நான் இங்கேயே படுத்துக் கொள்கிறேன்” உதடு தாண்டி வரத் துடித்த சிரிப்பை அடக்கியபடி சொன்ன அஞ்சனாவை முறைப்பாய் பார்த்தான்.

₹நான் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார்கள் மாமா, உங்கள் பொண்டாட்டியை நீங்களே கூட்டிப் போய் விடுங்கள்.பக்கத்தில் படுத்து கொண்டு நை நையென்று தொல்லை தாங்க முடியவில்லை” சாஹித்யா அலுத்தாள்.

“சும்மா இரு சாஹி, புது இடம். தனியாக எப்படி படுப்பாய்? நான் உன்னுடன்தான் படுக்கப் போகிறேன். என்னங்க நான் சொல்வது சரிதானே?”

கண்கள் முறைக்க வாய் ஆமாம் என்றது சத்யநாதனுக்கு. “ராட்சசி” என்ற முனங்கலோடு அறைக்கதவை அழுத்தி மூடிவிட்டு தன் அறைக்குள் புகுந்து வெறுப்பாய் கட்டிலில் விழுந்தான்.

மறுநாள் காலை மொறுமொறுப்பான தோசையை அவன் தட்டில் வைத்த அஞ்சனா “நீங்கள் ஆபீஸ் கிளம்பும்போது சாஹித்யாவை அவளுடைய ஸ்கூலில் விட்டுவிட்டு போங்க” என்றாள்.குரல் உத்தரவு தொனியில் இருந்தது.




” எனக்கு வேறு வேலை இருக்கிறது”

“இருக்கட்டுமே நம் வீட்டு குழந்தை, அவள் இங்கு இருக்கும் வரை நாம் தானே பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்”

“அஞ்சு சொல்வது சரிதான் சத்யா. நீயே சாஹியை கொண்டு போய் ஸ்கூலில் விட்டுவிடு” சொன்ன தாயாரை நம்ப முடியாமல் பார்த்தான் சத்யநாதன்.

“அம்மா…”

“எதற்கடா இழுக்கிறாய்? நம் வீட்டில் இருக்கும் வரை அவள் நம் பொறுப்புதான். சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு அவளை கூட்டிக்கொண்டு கிளம்பு”

“ஜெராக்ஸ் மிஷின்…” சொன்ன மகனை புரியாமல் பார்த்தாள் தாய்.” எந்த ஜெராக்ஸ் மிஷின்டா?”

” நடந்த ப்ரோகிராமே திரும்ப நடந்தால்…”

” அது மறு ஒளிபரப்புடா…”

“அதேதான்.மறுஒளிபரப்பு…

ஜெராக்ஸ் அடிப்பதெல்லாம் உங்களுக்கு ஏன்மா?”

 ” டேய்…சம்பந்தமில்லாமல் உளறாதடா…”மகனை பைத்தியம் போல் பார்த்துவிட்டு சுகுணா போய்விட்டாள்.

முந்தானையை பற்களுக்கிடையே கடித்து சிரிப்பை அடக்கி நின்றிருந்தாள் அஞ்சனா.அடக்கிய சிரிப்பில் குவிந்திருந்த கன்னங்கள் சிவந்திருக்க,பார்வையை அவளிடமிருந்து திருப்ப முடியாமல் தடுமாறினான் சத்யநாதன்.

“மாமியாரும் மருமகளும் ஒரே அலைவரிசையா ? இது எப்போதிருந்து?” முணுமுணுக்க “நீங்கள் குடித்துவிட்டு வர ஆரம்பித்த நாளிலிருந்து” பதில் கொடுத்தாள்.

“ஏன் மாமா இந்த அஞ்சுகிட்ட எப்படி குடும்பம் நடத்துறீங்க?” பைக்கில் போகும்போது சாஹித்யா கேட்க, ஆச்சரியப்பட்டான். “என்ன அஞ்சுவா?”

” ஹி… ஹி… அது வந்து நாங்க ரெண்டு பேரும் ரொம்ப ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்,அதனால இப்படி கூப்பிட்டுக்கலாம்னு அத்தை சொல்லிட்டாங்க”

” சரிதான் இப்போ உன் பிரண்டுக்கு என்ன?”

” நைட் முழுக்க நை நைன்னு ஒரே பேச்சு, எதையாவது இழுத்துக் கொண்டு, என்னவாவது பேசிக்கொண்டு… எப்படி மாமா இவங்க கூட நைட் முழுக்க படுக்கிறீர்கள்?”

 சத்யநாதனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அஞ்சனா அவ்வளவு பேசுவாளா? அவன் அறிந்தவரை அவர்கள் திருமணம் முடிந்த இந்த நான்கு மாதங்களாக அவள் அதிகம் பேசியதில்லை. அவனிடம் மட்டுமல்ல, வீட்டிற்குள் யாரிடமும்… கேட்கும் கேள்விக்கு அளந்தார் போல் நான்கு வார்த்தைகளில் பதில் சொல்லிவிட்டு அமைதியாகிவிடுவாள்.

“என்ன மாமா பேசாமல் இருக்கிறீர்கள்?”

“இன்றைக்கு நைட்டும் உன் பிரண்ட் வாயைத் திறந்தாளென்றால் பேச்சை குறைக்கவில்லை என்றால் மாமாவிடம் சொல்லி வாயை ஒட்டி விடுவேன் என்று சொல். பயந்து போய் தூங்கி விடுவாள்”

“கரெக்ட் மாமா, நீங்கள் இப்படி அஞ்சுவிடம் ஸ்ட்ரிக்ட் ஆக இருந்தால்தான் அவர்கள் கொஞ்சம் பயப்படுவார்கள்”

சாஹித்யா சொல்ல சத்யநாதனுக்குள் குழப்பம் வந்துவிட்டது.நான் அஞ்சனாவிடம் கண்டிப்பாக இருக்கிறேனா ?இல்லையா? அவள் எனக்கு பயப்படுகிறாளா? இல்லையா ?

அவனது குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தியது அன்று மாலை அஞ்சனாவிடமிருந்து வந்த போன். “ஐந்தரை மணிக்கு சாஹித்யாவை ஸ்கூலில் இருந்து கூட்டிக்கொண்டு வந்து விடுங்கள்”




“ஏய் இங்கே நிறைய வேலைகள் இருக்கிறதுடி.இப்போது என்னால் நகரக்கூட முடியாது”

“எல்லாம் முடியும்,போங்க” போனை வைத்து விட்டாள்.

பெருமூச்சுடன் கையில் இருந்த வேலையை பணியாளர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினான். வாசலிலேயே காத்திருந்த தாய்மாமனை திகைப்பாக பார்த்தாள் சாஹித்யா. “மாமா நீங்கள் எதற்கு? நானே வந்து விடுவேனே…”

“உன் அத்தைதான்…” ஆரம்பித்துவிட்டு அவள் சொல்லி நான் வந்ததாக இருப்பதா என்றெண்ணியவன் “ஏன்டாம்மா மாமா வந்தால் என்ன? நீ பாட்டி வீட்டில் இருக்கும் வரை மாமாதான் உன்னை ஸ்கூலில் விட்டு கூப்பிட போகிறேன் வா”

“எல்லாம் அந்த அஞ்சுவோட வேலையாகத்தான் இருக்கும். அவர்கள் சொன்னதும் பயந்து கொண்டு நீங்களும் ஓடி வந்திருப்பீர்கள். எல்லோருமாக என்னை குழந்தையாகவே நடத்துகிறீர்களே!” புலம்பியபடி பைக்கில் ஏறி அமர்ந்தாள்.

அவள் சொல்லி வந்தது, இந்த பிள்ளையே உணருமளவு  வெளிப்படையாகவா தெரிகிறது? யோசித்தபடி பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

அன்று இரவு வழக்கம்போல் பின்னிரவில் வீடு திரும்பியவன் தன் அறைக்குள் போகாமல் பக்கத்து அறைக் கதவை லேசாக தட்டி விட்டு கதவை தள்ளி திறந்தான்.

விடிவிளக்கின் வார்ம் ஒயிட் ஒளியில் அறை ஒருவகை மனோரம்யமான சூழலில் இருந்தது.




What’s your Reaction?
+1
53
+1
33
+1
4
+1
1
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!