Serial Stories எனை ஆளும் நிரந்தரா

எனை ஆளும் நிரந்தரா-1

1

ஆரஞ்சும்,மஞ்சளும்,சிகப்பும் கலந்த அழகான வண்ணத்தில் ஒரே கிளையில் கொத்தாக பூத்திருந்த பட்டன் ரோஜாக்களை ஆசையுடன் பார்த்தாள் மானசி.

காய்கறி கழிவுகள் ,அரிசி பருப்பு, கழுவிய தண்ணீர்,டீத்தூள் சக்கை  என்று முழுக்க முழுக்க இயற்கை உரங்களை விட்டு வளர்த்த செடிகள், உண்ட ஊட்டச்சத்திற்கு வஞ்சனையின்றி வளமாக பூத்திருந்தன. பறித்தெடுத்து எண்ணெய் தயாரிக்க வேண்டும் மனதிற்குள் நினைத்தபடி மென்மையாக அவற்றை வருடிவிட்டாள்.

கால்களில் குறுக்கும் நெடுக்குமாக கோழிகள் ஓட, அவற்றை லேசாக ஒதுக்கி விட்டு காம்பவுண்ட் சுவர் ஓரமாக நட்டு வைத்திருந்த மஞ்சள் கலர் செம்பருத்தி புதிதாக தளிர் வந்திருப்பதை ஆராய்ந்தாள். ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்திருந்த கோழிகளின் கழிவில் சிறிது அள்ளி செம்பருத்தி செடியின் கீழிருந்த மண்ணை லேசாக கொத்தி உள்ளே போட்டாள். தொடர்ந்து எல்லா செடிகளுக்கும் தண்ணீர் விட துவங்கினாள்.

 சுவரோரமாக நடக்கும் போது அந்த கிசுகிசு சத்தத்தை கேட்டாள்.

“டிரஸ் சூப்பர்ல”

“ம்..அன்னைக்கு போட்டிருந்தாரே அந்த எல்லோ சர்ட் அவரு கலருக்கு வெளியவே தெரியல, இந்த ஆலிவ் க்ரீன் அப்படியே பொருந்துது பாரேன்”

“ஆமாம், அந்த மீசையும் தாடியும்…ஹைய்யோ கையசைத்து பேசுறத பாரேன்! என்ன ஒரு மேனரிசம்!”

” இந்த மாதிரி ஹேர் ஸ்டைல்லாம் நம்ம ஊர்ல கட் பண்ணி விடுறாங்களா என்ன?”

” ஒருவேளை இவர் ஹேர் கட் பண்றதுக்குன்னு நம்ம விருதுநகர்ல இருந்து சென்னை போயிட்டு வருவாரோ?”

” ஏய் இதுக்கெல்லாமா சென்னை போவாங்க?”

” ஏன் இவர்தான் மதுரை போயி ப்ளைட்டேறி சும்மா சென்னை மும்பை,டெல்லி, பெங்களூர்னு பறந்துட்டு இருக்காரே! அப்படி போற இடத்துல ஏதாவது ஒரு ஊர்ல ஹேர் கட் பண்ணியிருப்பாராயிருக்கும்”

“ம்…இருக்கும்…இருக்கும்” பேச்சு குரல்கள் சுவருக்கு அந்தப் பக்கம் அடுத்த வீட்டில் இருந்து வந்தன. அவர்கள் பேசிக் கொண்டிருந்த அவனைப் பற்றியும் மானசியால் யூகிக்க முடிந்தது. ஒரு பெருமூச்சி அவளுள்.இவளுகளுக்கு வேற வேலையே இல்லை, எப்போதும் போனை கையில் வைத்துக் கொண்டு யாரையாவது… இல்லை அவனையே பார்த்து ஜொள் விட்டுக் கொண்டிருப்பது.

மானசி ஓரமாகக் கிடந்த கல் ஒன்றின் மேல் ஏறி மெல்ல மறுபக்கம் எட்டிப் பார்த்தாள். பக்கத்து வீட்டு ரூபாவும், எதிர் வீட்டு ஷாலினியும் கையில் போனை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர்.

“இந்த வீடியோ எப்போ அப்லோட் பண்ணியிருக்காரு?”

” நேற்று நைட் 11 மணி இருக்கும். எனக்கென்னமோ இவர் வீடியோ போடுவாருன்னு தோணுச்சு. போர்வைக்குள்ள போனை மறைத்து வைத்து பார்த்துக்கொண்டு இருந்தேனா, அப்பவே போடவும் பாத்துட்டேன்”

“ம்… இப்போ இரண்டாவது தடவையாக்கும்?”

” பத்தாவது தடவைடி, நைட் 11 மணியிலிருந்து இப்போ எட்டு மணி வரைக்கும் பத்து தடவ பாத்திருக்கேன் இந்த வீடியோவை”

“சரிதான்.அப்போ அவர் சொன்ன தகவல்களை மனப்பாடம் பண்ணிட்டேன்னு சொல்லு “

” என்ன தகவல் சொல்றாரா? யாருக்கு வேணும் அந்த விபரங்கள்.அவர் மரச்செக்கில் ஆட்டினாலென்ன,இரும்பு உலக்கையில் அரைத்தாலென்ன? நமக்கு தேவை அவரைப் பார்க்கனும் அவ்வளவுதான்.எத்தனை தடவை பார்த்தாலும் அவர் பேச்செல்லாம் மண்டையில் ஏறாது”

மானசி தலையில் அடித்துக் கொண்டாள். பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்குள் நுழைய இருக்கும் இளம் சிட்டுக்கள். ஆக்கப்பூர்வமான விஷயங்களில் மனதை செலுத்தாமல் இப்படியா ஒரு குறுகிய வட்டத்திற்குள் முடங்கிக் கிடப்பார்கள்?

“சாப்பிட வர்றியம்மா” அம்மா சகுந்தலா குரல் கொடுத்தாள்.

“என்ன சமையல் சக்கு?” குரல் உயர்த்தி கேட்டாள் மானசி.

முறைத்தபடி “எண்ணெய்யும் புண்ணாக்கும்” என்றாள்.

“ம்க்கும் சமைக்க சோம்பல் பட்டு  உன் புருசன் கம்பெனியில் போய் சாக்கு மூட்டையில் அள்ளிக் கொண்டு வந்து விட்டாயாக்கும்? எனக்கு வேண்டாம். நீயும் உன் துஷ்யந்தனும் அந்த ரோசாமணியும் கொட்டிக்கோங்க”




“அடியே…” சகுந்தலா கையுயர்த்தியபடி வேகத்துடன் அடுப்படியை விட்டு வெளியே வர உடலை வளைத்து நழுவி அடுப்படிக்குள் நுழைந்தவள் அம்மா சமைத்து வைத்திருந்த பாத்திரங்கள் ஒவ்வொன்றாக திறந்து பார்த்தாள்.

“அடைக்கு தக்காளி தொக்கா? காம்பினேஷன் சரியில்லையே சக்கு”

“ஏண்டி யாரையும் மரியாதையாகவே பேச மாட்டாயா? என்னடி எல்லோரையும் பெயர் சொல்லிக்கொண்டு…”

“உன்னை பெயர் சொல்வது கஷ்டமாக இருக்கிறதா? இல்லை உன் புருஷனை பேர் சொல்லி கூப்பிடுகிறேன் என்று கவலையா? இல்லை உன் அம்மாவை பேர் சொல்கிறேனென்ற வருத்தமா?”

“மூன்று பேரில் யார் உன்னை விட வயது குறைந்தவர்கள்?”

“வயதை வைத்தெல்லாம் மரியாதை கொடுக்க முடியாது. அதற்கெல்லாம் இங்கே வேலை செய்யணும்” தலையைத் தட்டி காண்பித்தாள்.

“ஆமாண்டி உன்னையெல்லாம் பெத்தெடுத்து இவ்வளவு உயரத்திற்கு வளர்த்து விட்டிருக்கிறேனே!மூளை வேலை செய்தால் இதெல்லாம் செய்திருப்பேனா?”

“ஐயோ சக்கு அந்த ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான் உனக்கு மூளை வேலை செய்திருக்கிறது. எனக்கு முன்னால் ஒன்றை பெற்றெடுத்து விட்டாயே? அது எப்படி திரிகிறது பார்த்தாய்தானே?”

சகுந்தலாவின் முகம் வாடியது. “அவனை ஏண்டி வம்பிழுக்கிறாய்?” உடன் தாயின் குரல் தழுதழுப்பதை பார்த்து உதட்டை பிதுக்கினாள். “உன் மகனைச் சொன்னாலே கண்ணில் கரை கட்டுகிறதாக்கும்”

“அது யாரது என் பொண்டாட்டியை அழ வைப்பது?” உயர்ந்த குரலில் பேசியபடி உள்ளே நுழைந்தார் மணிவண்ணன்.

“ஆஹா கொட்டப்பாக்கம் வகையறா தலை… இல்லை தளபதி…இல்லையில்லை தல தளபதி அவர்களே வருக வருக “குனிந்து நிமிர்ந்தாள் மானசி.

” ம்…”மணிவண்ணன் முறுக்கு மீசையை நீவிகொள்ள சகுந்தலா இருவரையும் கீழ்பார்வை பார்த்தாள்.

“இதென்ன கண்றாவி அறிமுகம்?”

“இப்படி சொன்னால்தான் அப்பாவிற்கு பிடிக்கும் மம்மி”

“அப்படியா என்ன ?” சகுந்தலா ஓரக் கண்ணால் கணவனை பார்க்க, மணிவண்ணன் ஒரு மாதிரி திரு

திருத்து விட்டு பிறகு தலையை அசைத்து “ஆமாம்” என்றார் உறுதியாக.

“கொட்டை பாக்கேதான்” கணவனின் உருண்ட கண்களை பார்த்து சொன்ன சகுந்தலா “சரியான பெருமை பீத்தல்” சிரித்தாள்.

“மானு கண்ணா! உன் அம்மாவிற்கு பொறாமைடா” மணிவண்ணன் மகளின் தோளில் கை போட்டு தன்னோடு கூட்டு சேர்த்துக் கொண்டார்.

“உங்க வகையறாவிற்கு ஒரு பெருமை இருக்கும்போது, அம்மா வகையறா மட்டும் லேசுபட்டதா டாடி?அதுவும் பெத்த பரம்பரைதான். என்ன வெண்ணத்தி வகையறா சகுந்தலாதேவி அவர்களே சரிதானே?”

“சரியான பச்சோந்தி” செல்லமாய் மகள் தலையில் கொட்டினார்.




” பச்சோந்தியா? இங்க பாருங்க மணி உங்க புருஷன் பொண்டாட்டி, வகையறா தகராறுக்குள்ள என்னை இழுக்காதீங்க நானெல்லாம் படிச்ச டீசன்டான குடும்பத்தை சேர்ந்தவ. இந்த மாதிரி வகையறா தொகையறானு பழசுலையே கிடந்து உருண்டுகிட்டு கிடக்கிறவா கிடையாது” எகிறினாள் மானசி.

“அது எந்த டீசண்டான குடும்பம் மேடம்?”வாய் பொத்தி பணிவு போல் காட்டிக்கொண்டார் மணிவண்ணன்.

” அடுத்தவர்களுக்கெல்லாம் என் குடும்ப விவரத்தை சொல்வதில்லை. சாரி மணி” மானசி கர்வமாய் தோள்களை ஏற்றியிறக்க பட்டென்று அந்த தோள்களை தட்டினாள் சகுந்தலா.

“இதென்னடி  வரிசையா எல்லோரையும் பெயர் சொல்லிக் கொண்டு…?”

” அடடா இந்த கர்நாடகங்கள் கூடெல்லாம் எப்படித்தான் குடும்பம் நடத்த போறேனோ? “மானசி தலையில் கை வைக்க…

” சக்கு…என்னம்மா ?”ரோஜா மணியின் சத்தம் கேட்ட, உடன் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தவர்களிடம் ஒருவகை அமைதி வந்தது.

“ஏன் டாடி உங்க மாமியாருக்கு வேற வேலை இல்லையா? எப்போது பார்த்தாலும் நம்மை வேவு பார்த்துக் கொண்டே இருப்பார்களா?” மானசி குரல் குறைத்து மணிவண்ணனிடம் கிசுகிசுக்க அவர் உதட்டின் மேல் விரல் வைத்து அமைதி சைகை காட்டினார்.

 “சக்கு சமையல் முடிந்ததா?” கேட்டபடி ரோஜாமணி அடுக்களையை நெருங்கி வர மணிவண்ணன்  சட்டென்று அங்கிருந்து வெளியேறினார்.

” முடிந்ததும்மா. சாப்பிடுறீங்களா?” சகுந்தலா தாயை உபசரிக்க மானசி இடுப்பில் கைகளை வைத்து பாட்டியை முறைத்தாள்.

“என்னத்துக்குடி முட்டைக் கண்ண உருட்டுற?”

“அப்பாவை விரட்டியாச்சு, ஏன் பாட்டி?”

“உன் அப்பா என்னை பார்த்து பயந்து போனால் நான் என்னடி செய்வேன்?” கிண்டலாய் கேட்டாலும் ரோஜாமணி தனது மருமகனின் எதிராக இப்படி பேசுவதில்லை. அனேகமாக மணிவண்ணன் எதிரில் கூட வருவதில்லை. மானசி அறிய இருவரும் எதிர் எதிராக இருந்து பேசிக் கொண்டதில்லை.

 தொழிலிலோ குடும்பத்திலோ ஏதாவது விபரங்கள் சொல்ல வேண்டியிருந்தாலும் மணிவண்ணன் அமர்ந்திருக்கும் போது அவருக்கு பின்புறம் அறைக்குள் இருந்து கொண்டே சகுந்தலாவிடம் சொல்வது போல் ரோஜாமணி விபரங்கள் சொல்வார்.

 அவர் பேசப் பேச மணிவண்ணன் மரியாதையாக எழுந்து நின்று கவனித்து கேட்டு விட்டு “சரி சகுந்தலா அப்படியே செய்து விடலாம்” என்று மனைவியிடம் பதில் சொல்லிவிட்டு போய்விடுவார்.

 மகளை திருமணம் முடித்துக் கொடுத்த சில வருடங்களிலேயே பாட்டி ரோஜாமணியும் இங்கே மகளுடன் தங்க வந்துவிட்டது மானசிக்கு தெரியும். ஆனாலும் இன்று வரை மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையில் உள்ள உறவின் மரியாதையை மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடிந்ததே இல்லை.

“என்ன சக்கு நம்ம வகையறா பத்தி ஏதோ பேச்சு நடந்தது போல?” ரோஜாமணி விசாரிக்க மானசிக்கு கோபம் வந்தது. இந்த வகையறா, கூட்டம் என்று ஒரே ஜாதிக்குள் பிரிவினையை கொண்டு வரும் பழக்கம் இந்த பழம் பஞ்சாங்க பாட்டியினால் தானே வந்தது… கோபத்தோடு பாட்டியை பார்த்தாள்.




What’s your Reaction?
+1
48
+1
22
+1
1
+1
1
+1
1
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!