Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம்-9

( 9 )

அன்று இறுதித்தேர்வு முகிலினிக்கு .அன்றோடு தனது கல்லூரி வாழ்வு முடியப்போகின்றது என்ற சிறிய சோகத்துடன் பரீட்சை அறைக்குள் நுழைந்தாள் .அவள் எதிர்பார்த்ததற்கு மேலாகவே அன்றைய கடினமான தேர்வில் மிக எளிதாகவே கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது .

ஒருமுறை முழுவதும் கேள்வித்தாளை வாசித்தவள் சிறு நிம்மதி பெருமூச்சுடன் பதில்களை எழுத தொடங்கினாள் .இது போன்ற எளிய கேள்விகளுக்காக அவள் துள்ளி குதித்திருக்க வேண்டும் .ஆனால் இதோ கடகடவென கேள்விகளை எழுதி தள்ளிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் ஏனோ மனதில் சிறு வெறுமையே சூழ்ந்திருந்தது.

என்னவோ ஒரு விருப்பமற்ற சம்பவம் நடக்க போவதற்கான அறிகுறி மனதில் .தற்செயலாக நிமிர்ந்த போது …அதோ ..அங்கே தூரத்தில் அந்த வேப்ப மரத்தடியில் நிற்பது யார் …? யதுநந்தன் போல் தெரிகிறதே .சந்தேகமில்லை அவனேதான் .யாரைப் பார்க்க வந்திருக்கிறான் ? பாடங்கள் முடிந்த பின் அவன் கல்லூரிக்கு வரவில்லையே …இன்று என்ன வேலை இருக்கும் ? படித்த பதில்களை கை தன் போக்கில் எழுதிக்கொண்டிருக்க மனம் வேறு போக்கில் சிந்தித்தது .

திடீரென யதுநந்தன் தனக்காகவே வந்து காத்திருப்பதாக தோன்றி விட , அதன் பின் பாடம் ஓடவில்லை முகிலினிக்கு .பேனாவை கீழே வைத்துவிட்டு கண்களை மூடி ஆழமான மூச்செடுத்து தன் மனதை ஒரு நிலைப்படுத்தியவள் நிமிர்ந்து பார்க்காமல் குனிந்து கடகடவென எழுத தொடங்கினாள் .

அரை மணி நேரத்தில் முடித்துவிட்டு நிமிர்ந்தவள் யதுநந்தன் இன்னும் அங்கேயே காத்திருப்பதை காணவும் தனது விடைத்தாளை கொடுத்து விட்டு வேகமாக வெளியே வந்தாள் .

அவளைக்கண்டதும் ” வந்து விட்டாயா …வா …”, என்று முன்னால் வேகமாக நடந்தான் .

” எனக்காகவா நின்று கொண்டிருந்தீர்கள் ? எங்கே போகிறோம் ? “என்றாள்

” ஆமாம் ….உங்கள் வீட்டிற்குத்தான் …” சுருக்கமாக பதிலளித்தான் .

ஆட்டோ ஒன்றை அழைத்து அதில் அவளை ஏற்றி தானும் ஏறினான் .முகிலினி புரியாமல் அவனை பார்த்தாள் .அவனோ அவள் கண் பார்க்க மறுத்தான் .இப்போதுதான் பாதை அடையாளம் பார்ப்பவன் போல் வெளியே திரும்பிக்கொண்டான் .

ஆட்டோ இருக்கை அமுங்கும் வகையில் அதன்  மேல் அழுத்தமாக பற்றியிருந்த அவன் கைகளை மென்மையாக ஆட்காட்டி விரலால் வருடி ” என்னாச்சுப்பா ? “, என்றாள் முகிலினி .

தனது கைகளை எடுத்து அவள் தோள்களை சுற்றி போட்டு அவளை தனக்கு மிக அருகே இழுத்துக்கொண்டான் யதுநந்தன் .ஒன்றுமில்லை என்பது போல் தலையை மட்டும் ஆட்டினான் .அவன் கைகள் தோளில் அழுந்தியதில் லேசாக வலித்தது .அவன் கைகளின் மேல் மெல்ல தன் கைகளை பதித்த முகிலினி ” ஏன் உங்கள் கைகள் இப்படி சில்லென்று இருக்கிறது ? “, என்றாள் .




கீழுதட்டை அழுந்த கடித்த யதுநந்தன் அவளை மேலும் தன்னருகே இழுத்துக்கொண்டு இன்னொரு கையால் அவள் கன்னத்தை வருடியபடி ” முகில் தாங்க முடியாத சோகம் என்று இந்த உலகில் ஒன்றும் கிடையாது .எந்த நிலையிலும் உனக்கு நான் இருக்கிறேன் என்பதை நீ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் ” என்றான் .குரல் லேசாக கரகரத்தது .

ஒன்றும் புரியாவிட்டாலும் அவனது ஆறுதல் இதமாக இருக்க தலையசைத்தாள் முகிலினி .இப்படி ஆறுதல் சொல்ல ஆளிருந்தால் காலம் முழுவதும் அழுது கொண்டிருக்கலாமே என்ற அவளது வேடிக்கை எண்ணம் வீட்டை அடைந்ததும் சுக்கல் சுக்கலானது .

சொட்டு நீரில்லா பாலைவன பகுதியில் தாகத்தோடு அலையும் அற்ப பிராணி போல் ஆனாள் .

அவளது அருமை தந்தை அவர்கள் இல்ல தூண் , அம்மாவின் உயிர் துடிப்பு ….. அவர்களை விட்டு ,இந்த  உலகத்தை விட்டே பிரிந்து சென்றிருந்தார் .

வீட்டு வாசலை நெருங்கும்போதே ” ஐயோ முகி அப்பா நம்மளை விட்டுட்டு போயிட்டாரே “, என்ற தமிழினியின் அலறல் அவள் அடிவயிற்றில் கத்தி சொருகியது .

விக்கித்து நின்றவளை ” முகில் கொஞ்சம் பொறுத்துக்கொள் …போய் உங்கள் அம்மாவை சமாதானப்படுத்து ” என்றான் யதுநந்தன் வெளியே கேட்காமல் .

அம்மாவை சமாதானப்படுத்தவா ?அவளா …? அவளே உள்ளே …உள்ளே எங்கோ அறியாத குழிக்குள் போய் கொண்டிருக்கிறாளே .யாரை கை கொடுத்து காப்பாற்ற முடியும் அவளால் .

உயிரை பிடுங்கி வெளியே போட்டு காலால் மிதித்தது போன்ற வேதனையில் கதறும் முகிலினியை செய்வதறியா நிலையில் வெறித்து பார்த்தபடி நின்ற யதுநந்தன் வெளியேறினான் .

விபத்தாம் …திடீரென நிகழ்ந்து விட்டதாம் .எளிதாக கூறிவிட்டு தூக்கி கொண்டு போய் எரித்துவிட்டு வந்துவிட்டார்கள் .

வீடு முழுவதும் உறவினர் கூட்டம் .
அப்பாவின் போட்டோவிற்கு மாலை போடப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டிருந்தது .அதன் கீழ் சிறு மூட்டையாக சுருண்டிருந்தாள் சரஸ்வதி .

ஏன்ப்பா ..இப்படி எங்களை விட்டுட்டு போனீங்க ? தூங்கும்போது கூட எங்களை தானேப்பா நினைத்துக்கொண்டு இருப்பீர்கள் .இப்போது விட்டுட்டு போக எப்படிப்பா மனது வந்தது ? மனதால் தந்தையிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் முகிலினி .

பதிலாக இதோ எப்போது வேண்டுமானாலும் இறங்கி வந்துவிடுவேன் என்பது போல் புன்னகைத்துக்கொண்டிருந்தார் அவள் தந்தை .

எவ்வளவு அழகான புன்னகை .இந்த புன்னகை முகத்தை ரோட்டோடு சேர்த்து தேய்க்க அந்த லாரிக்கு எப்படி மனது வந்தது .காரை ஓரிடத்தில் சிறிது மெதுவாக்கி ஓரமாக பிரிந்த சாலையினுள் செல்ல காரை மெதுவாகத்தான் திருப்பியபடி சென்று கொண்டிருந்திருக்கிறார் .. எமனாய் வந்த அந்த வாகனம் எறும்பாக அவரை தேய்த்து போயிருக்கிறது .

.காரை விட்டு வெளியே தூக்கி எறியப்பட்டிருக்கிறார் .தலையை தூக்கி “சரசு ” என்றாராம் .தலை சாய்ந்ததும் ” என் குட்டிம்மா ” என்றாராம் .அவ்வளவுதான் அந்த இடத்திலேயே உயிர். பிரிந்து விட்டதாம் .அருகிலிருந்து விபத்தை பார்த்தவர் கூறியது .மூட்டையாக கட்டி கொண்டு வரப்பட்ட தந்தையின் உடல் நினைவுக்கு வர , விம்மல் வெடித்தது முகிலினிக்கு .

அவளது அழுகை சத்தத்தில் சுருண்டிருந்த சரஸ்வதி எழுந்து , தானும் மகளை கட்டிக்கொண்டு அழத்துவங்கினாள் .அடுப்படியினுள் இருந்த தமிழினியும் , அடுத்த அறையிலிருந்த பூங்காவனமும் ( தமிழ்செல்வனின் அக்கா ) அவர்களை சமாதானப்படுத்த வந்து முடியாமல் தாங்களும் உடன் சேர்ந்து அழத்துவங்கினர் .

” தமிழ்…” கதிரவனின் அதட்டல் குரல் .” உன்னை என்ன பண்ண சொன்னால் நீ என்ன செய்கிறாய் ? போ …போய் அத்தைக்கும் முகிலினிக்கும் சாப்பிட ஏதாவது எடுத்து வா “

“முகிலினி நீயே இப்படி அழுதால் அம்மாவை யார் சமாதானப்படுத்துறது ? போம்மா போய் முகத்தை கழுவிட்டு வா “முகிலினியையும் எழுப்பி அனுப்பியவன் , பூங்காவனத்தை ” சித்தி சித்தப்பா கூப்பிடுறார் .போய் பாருங்க ” என வெளியே அனுப்பினான்

சரஸ்வதியின் அருகே அமர்ந்தவன் தன் கைகளில் இருந்த அபர்ணாவை அவள் மடியில் வைத்தான் .”, அத்தை உங்கள் பேத்தி அழுது கொண்டே இருக்கிறாள் .என்னவென்று பாருங்கள் .”, என்றுவிட்டு எழுந்து கொண்டான் .

பத்து நிமிடங்கள் கழித்து முகிலினி எட்டிப்பார்த்தபோது கண்களில் நீர் திரையிட்டிருந்த போதும் , சரஸ்வதி அப்புக்குட்டியின் பேச்சினை ரசித்துக்கொண்டிருந்தாள் .இதழின் ஓரம் மெல்லிய புன்னகை கூட இருந்தது .

எப்பேர்பட்ட ரணத்தையும் ஆற்றும் வல்லமை ஒரு மழலைக்கு உண்டென்பதை அறிந்தாள் முகிலினி .அம்மாவின் அருகே போக போனவளை கையை பிடித்து இழுத்து வெளியே வரும்படி அழைத்தாள் பூங்காவனம் .

” என்ன அத்தை ? ” அவளுடன் வெளியே வந்து கேட்டாள் முகிலினி .

” முகி பார்த்தியா ? உங்கள் அம்மாவை .காலையில் வரை பச்சைத்தண்ணீர் பல்லில்லைநா படாமல் கிடந்தாள் .இப்போ பார் ….” என காட்டினாள் .

தமிழினி அப்புக்குட்டிக்காக என கூறி தட்டில் சோறு வைத்து கொண்டு வந்து கொடுக்க , அப்பு அதனை தன் பிஞ்சுக்கரங்களால் தன் அம்மம்மாவிற்கு அள்ளி ஊட்டிக்கொண்டிருந்தாள் .ஆளுக்கு ஒரு வாய் என மாற்றி மாற்றி ஊட்டிக்கொண்டிருந்தனர் .இடையிடையே சிரிப்பு வேறு .கண்கள் கலங்கியது முகிலினிக்கு .

“, முகி உங்கள் அம்மாவும் அப்பாவும் வாழ்ந்த வாழ்க்கை எங்களுக்கெல்லாம் தெரியும் .முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவேளை எனக்கு முன் அவர் போய்விட்டால் பின்னாலேயே நானும் போய்விடுவேன் .” என்று கூறியிருக்கிறாள் .




அதை நினைத்தே நான்கு நாட்களாக நான் தவித்துக்கொண்டிருக்கிறேன்
.ஆனால் கடவுள் அதற்கு ஒரு வழி காட்டிவிட்டார் .கதிரவன் சரியாக கணித்துவிட்டான் .இனி நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான் .உங்கள் அக்காவையும் , மச்சானையும் இனி உங்களுடனேயே தங்க வைத்துவிடு .அப்போதுதான் உங்கள் அம்மா இன்னும் சிறிது நாட்கள் இங்கே நடமாடுவாள் ” என்றாள் .

சரியாகவே பட்டது முகிலினிக்கு .” அத்தை இப்போதே மச்சானிடம் பேசி விடுகிறேன் .” என்றாள் .

”  ம் ..பேசிப்பாரு ” என இழுத்தபடி சென்றாள் பூங்காவனம் .ஏன் அத்தை ஒரு மாதிரி …இது நடக்காதது மாதிரி பேசுகிறார்கள் .என்று எண்ணியபடி கதிரவனை தேடி சென்றாள் முகிலினி .

” இதெல்லாம் என் கையில் இல்லை முகிலினி .இந்த விசயத்தில் என் அம்மாதான் முடிவெடுக்க வேண்டும் .எனக்கு சம்மதம்தான் .நீ எதற்கும் என் அம்மாவிடம் பேசி விடு ” என அம்பினை  அங்கே எறிந்து விட்டு போய்விட்டான் .

கதிரவனின் அம்மா வனக்கொடி ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் என எப்போதுமே தோன்றும் முகிலினிக்கு .எப்போதும் அவர்கள் வீட்டிற்குள் வந்து ஒரு டம்ளர் காபி குடிப்பதற்குள் ராணி மங்கம்மா பாவனை ஒன்றை முகத்தில் ஒட்ட வைத்துக்கொண்டு வருவாள் .நானெல்லாம் உன் வீட்டினுள் பாதம் பதித்ததே உன் முன் ஜென்ம தவம் தெரியுமா ? என சொல்லிக்கொண்டே இருக்கும் அவள் பார்வை .

அப்படிப்பட்டவள் முகிலினியின் அப்பா மரணசெய்தி கேட்டதும் , மகன் மருமகளுடன் வீட்டிற்கு ஓடிவந்ததுமின்றி , மரண வீட்டினுள் சுற்றி சுழன்று வேலை பார்த்தாள் .வீட்டை ஒதுங்க வைத்து , அது இதுவென சாமான்கள் கேட்டவர்கள் சரஸ்வதியையோ , முகிலினியையோ தொந்தரவு செய்யாமல் தானே அவற்றை பார்த்து , அப்பப்போ காபி போட்டு மற்றவர்களுக்கு கொடுத்து , சரஸ்வதிக்கும் , முகிலினிக்கும் வலுக்கட்டாயமாக இரண்டு மடக்கு ஊற்றி விட்டு ….ஏன் முதல் நாள் காலை பாத்திரம் கழுவும் இடத்தில் தண்ணீர் வெளியேறும் இடத்தில் அடைத்துக்கொண்டிருந்த கசடுகளை கூட சுத்தம் பண்ணிக்கொண்டிருந்தாள்.

தமிழினி சும்மா ஒன்றும் தன் மாமியாரை கொண்டாடவில்லை என எண்ணிக்கொண்டாள் முகிலினி .இதுபோல் அவசியமான நேரத்தில் உதவும் உறவுகள்தானே வாழ்க்கையை வாழும் ஆசையை கொடுக்கின்றனர் .

முகிலினி வனக்கொடியிடம் தன் கோரிக்கையுடன் சென்று நின்றபோது அவள் ” இங்கே பாரும்மா முதல்ல உங்கள் அப்பாவுக்கு நாற்பதாம் நாள் சாமி கும்பிட்டு முடித்து கொள்வோம் .அதன் பிறகு இதெல்லாம் பேசலாம் .அதுவரை என் மகனும் , மருமகளும் இங்கே இருக்கட்டும் ” என்றுவிட்டு போய்விட்டாள் .

இதை முகிலினி எதிர்பார்க்கவில்லை . இதில் மறுக்க ஒன்றுமில்லை என எண்ணியிருந்தவள் ஏன் இந்த தள்ளி போடல் என குழம்பினாள் .தனக்கு ஒன்றும் தெரியாது என கையை விரித்து விட்டாள் தமிழினி .

உறவினர்கள் சூழ நாற்பதாம் நாள் சாமி கும்பிட்டு முடித்ததும் , முகிலினியை சிதறடிக்கும் பத்தாயிரம் வாலாவின் திரியை பற்ற வைத்தாள் வனக்கொடி .துக்கம் நடந்த வீட்டில் உடனே ஒரு நல்லது நடக்க வேண்டுமென முதலில் ஒரு சொற்பொழிவாற்றினாள் .பின்பு ஒரு தாளினை நீட்டினாள் .

” இது என் ஒன்னு விட்ட தங்கச்சி மகன் வினோத் ஜாதகம் . அவுங்க பாத்துட்டாங்க .பத்து பொருத்தம் இருக்கிறதாம் .நீங்களும் பார்த்துட்டு சொன்னீங்கன்னா பொண்ணை பார்க்க வர சொல்லலாம் .” என்றாள் .

” இல்லை முடியாது …வேண்டாம் ” தன்னை மறந்து கத்தி விட்டாள் முகிலினி .

ஒரு நிமிடம் வீடே அமைதியில் ஆழ்ந்தது .அனைவரும் முகிலினியையே பார்த்தனர் .தனது பதட்டத்தை உணர்ந்து சிறிது நிதானித்துக்கொண்டாள் முகிலினி .

” அ…அப்பா …இப்போதுதான் எங்களை விட்டுட்டு போயிருக்கிறார் .இப்போது போய் இதெல்லாம் வேண்டாமே ….” குரல் நடுங்கியது முகிலினிக்கு .

” முகிலினி …” அதட்டினாள் தமிழினி .
” அத்தை ஒன்று சொன்னால் சரியாகத்தான் இருக்கும் .நாங்கள் பெரியவர்கள் பேசிக்கொள்கிறோம் .நீ சின்னப்பிள்ளை பேசாமல் இரு ” என்றாள் .

தவிப்புடன் அம்மாவை திரும்பி பார்த்தாள் முகிலினி .அப்பாவின் மறைவிற்குப்பின் அமாவாசை இருளப்பி கிடந்த அம்மாவின் முகத்தில் முழு பூர்ணமையின் பிரசவ ஆரம்பங்கள் .

பெருப்பாலான நம் நாட்டு தாய்பமார்களின் கவலை மகளின் திருமணமாகத்தானே இருக்கிறது .அம்மாவின் உதவி கிடைக்காதென்பது தெரிந்து விட , வேறு வழி யோசிக்க தொடங்கினாள் முகிலினி .

அவளுக்கிருந்த சோகத்தில் யதுநந்தனை நினைக்கவேயில்லை .
நினைவில்லை என்றில்லை .முகிலினியின் மனக்குளத்தில் அப்பாவின் மறைவு சோக வட்டங்களை வரைந்து கொண்டிருக்க , ஆழ்குளத்தில் மூழ்கியிருந்தான் யதுநந்தன்  .

மூழ்கியிருந்த முத்தை அள்ளியெடுத்த முகிலினி அதன் ஆதாரம் அறிய முயன்றாள் .

தமிழ்செல்வனின் செல்போனில் யதுநந்தன் நம்பர் இல்லை .அவருடைய அலுவலக அறையில் யதுநந்தனுக்கான எந்த ஆதாரமும் இல்லை .அவன் தங்கியிருந்த மாடி அறையின் அலமாரிகளில் அவன் உபயோகித்த உடைகள் தவிர வேறில்லை .

என்ன செய்வதென விழித்தாள் முகிலினி .எப்போது அவனை கடைசியாக பார்த்தேன் ?….

அன்று என்னை அழைத்து வந்து இங்கே விட்டு விட்டு ….பிறகும் இருந்தானே ….மருத்துவமனையிலிருந்து அப்பாவை கொண்டு வர, பிறகும் மற்ற சடங்குகளிலும் கூட ….அவனில்லாவிட்டால் மிக கடினமென யாரோ பேசிக்கொண்டிருந்தது அரைகுறையாக என் காதில் கூட விழுந்ததே ….

அப்புறம் …எங்கே போனான் ? இந்த திடீர் திருமண விபரம் எப்படி அவனுக்கு தெரிவிப்பது ?

முகிலினியின் ஆரம்ப தவிப்பு கோபமாக மாறியது .என்ன மனிதன் இவன் ? ஒரு பெண் ணின் மனதை கெடுத்து விட்டு இப்படியா காற்றில் இட்ட கற்பூரமாக மறைவான் .இதில் அன்று ஆட்டோவில் என்ன நடந்தாலும் உனக்கு நானிருக்கிறேன்னு வசனம் வேறு …மனதிற்குள்ளாக அவனை திட்டி தீர்த்தாள் .

அந்த ஆட்டோ சம்பவம் மீண்டும் அவள் தந்தையை நினைவுபடுத்த அலைக்குள் மாட்டிய துரும்பாக தத்தளித்தது அந்த பேதை உள்ளம் .

அப்பாவின் மடியென நினைத்து தலையணையில் முகம் பதித்தபோது அது யதுநந்தனின் மார்பாக மாறியிருந்தது .அப்பாவின் இழப்பிற்கு பின் தனக்கு யாருமில்லை என தன்னிரக்கத்தோடு முகிலினி நினைத்து கொண்டாலும் எங்கோ , எப்படியோ தான் யதுநந்தனருகேதான் இருப்பதாக ~அவள் உள்ளுணர்வு கூறியது .

அதோ அங்கே இருக்கிறாய்
என்னை விட்டு தள்ளி
தூரமாக ,
என் விருப்பத்தின் ஆரம்பமாக
வெறுப்பின் முடிவாக ,
என் உள்ளங்கை வெப்பம்
தர முடியா தொலைவில் ,
பரிவான பார்வையோடு கூடிய  மன்னிப்பிற்கு எட்டாமல் ,
கோபம் தீர ஒரு சண்டைக்கு
வாய்ப்பளிக்காமல் ,
சாதுர்யமான சமாதானங்களுக்கு
சாத்தியமற்ற நிலையில் ,
அதோ ……இருக்கிறாய் ….
தள்ளி ….தூரமாக …தொலைவாக
இருந்தும் ,
கை நீட்டினால் உன்னை
தொட்டுவிடுவேனெனதான்
சில சமிக்ஞைகள்
எனக்கு உரைக்கின்றன ,
இடை தூர நிலங்களை
நிரப்பட்டும் உன்
விருப்( ப )பூக்கள் ,
கண்ணால் காண முடியாதது
இந்த அன்பு ,
கடவுளை போல …
நிறுத்தவே முடியாதது காதல்
இந்த கவிதையை போல .




What’s your Reaction?
+1
20
+1
17
+1
1
+1
0
+1
0
+1
1
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!