Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-17

17

“முத்துவேல்! யார்… பேசினது?”

“ஏன் பயப்படுற ஸ்வேதா கண்ணு? நான் தான் பேசினேன். உன் பிரபிதாமகாள் வம்சம் – ரகுநாத உடையார்!”

புன்னகை மாறாமல் கூறிய முத்துவேல் ஹரியின் பக்கம் திரும்பினான் – “பார்த்துக்கோ ஹரி! என்னிடம் ஏதாவது தளர்வு தெரியுதா? முதுமை தலைகாட்டுதா?”

ஹரி அதிர்ந்து போனவனாக, மெலிதாகத் தலையசைத்தான்.

“சரி, இவ்வளவு தூரம் என்னைத் தேடிக்கிட்டு – நான் உங்க பக்கத்திலேயே இருக்கறது தெரியாமல் – வந்திருக்கீங்க! வாங்க உட்கார்ந்து பேசுவோம்!” என்ற முத்துவேல் – ரகுநாத உடையார் – கம்பீரமாய் நடந்து ஹாலில் இருந்த அரியணை போன்ற நாற்காலியில் அமர்ந்தார்.

எல்லோரும் சுற்றியிருந்த நாற்காலிகளில் நிலைகொள்ளாமல் அமர்ந்தார்கள்.

“எத்தனையோ கேள்விகள் உங்க மனசில் இருக்கறது தெரியும். இப்போ அதுக்கெல்லாம் பதில் சொல்றேன்” என்று ஆரம்பித்தார் ரகுநாத உடையார்.

******

நூற்றி ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி இந்தப் பகுதிக்கு நான் வந்து செட்டில் ஆனதுக்கு நான் பாரிவள்ளல் பரம்பரையைச் சேர்ந்தவன் என்பது மட்டும் காரணம் இல்லை, இங்கே இருக்கற அபூர்வச் செடிகள்தான் காரணம்! அபூர்வம்னா, அபூர்வ வகைன்னு சொல்லலை நான்! சாதாரணச் செடிகளே இங்கே அபூர்வமா மாறியிருந்தது!

இது பாரிவள்ளலுடைய அரண்மனைன்னு உங்களுக்குத் தெரியும். இங்கே பாரியுடைய பெரும் பொக்கிஷம் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கு. அந்தத் தங்கம் காலப்போக்கில் சிறிதுசிறிதாக வேரடி நீரில் கலந்து ஏறி, இந்தச் செடிகளுடைய ரசாயன அமைப்பையே மாற்றியது. அதாவது, தங்க பஸ்பத்துக்கு நிகரான மருந்தா, இல்லை, அமுதமா மாறிப் போச்சு இந்தச் செடிகள்!

இந்தச் செடிகளின் இலைகளை ஒருவிதமா ஸ்புடம் பண்ணி, உயிரையும் உடலையும் கட்டுகிற சித்தவைத்திய வித்தை ஒண்ணு எனக்குத் தெரியும். அதை விடாமப் பயன்படுத்தி, என் ஆயுளை அதிகப்படுத்தி, ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக்கிட்டேன். 

எழுபது வயசிலும் நான் முப்பது வயதுக்காரன் மாதிரி இருக்கறதைப் பார்த்த என் மூத்த மகன் என்னைக் கொல்ல வந்தான்! அவனுக்குச் சொத்து வேணும், அதுக்காக! அவனிடமிருந்து தப்பிச்சு, அவன் ஏற்படுத்தியிருந்த விபத்தில் ஒரு பண்ணையாளை மாட்ட வெச்சு, நான் நிலவறையில் வந்து பதுங்கிட்டேன். அப்பப்போ முத்துவேலா வெளியிலும் வந்துக்கிட்டேன்!

என்னைப் பற்றிய விஷயங்கள் எதுவுமே தெரியாம என் குடும்பம் வளர்ந்தது, இங்கேயே செழிச்சு வாழ்ந்தது. என் மூத்த மகனை மட்டும் நான் சும்மா விடலை! எனக்குத் தெரிஞ்ச மனோவசிய வித்தையால் அவனே தற்கொலை பண்ணிக்கும்படியா பண்ணினேன்.

மரணம் இல்லாமல் நான் வாழறதுக்கு என் ஜாதகம் மட்டும் காரணமில்லை, ஹரி! என் படிப்பு, என் அறிவு, என் புத்தி சாதுரியம், என் உழைப்பு! ஏன்னா, என் உயிரைப் போக்கக் கூடிய ஆபத்து சிலது வந்தது, அதிலிருந்தெல்லாம் நான் சாமர்த்தியமா தப்பிச்சேன்.

எனக்கு நூற்றி இருபது வயசு ஆனபோது, என் ஜாதகத்தில் ராகுதசை வந்தது. அது மாரகதசை இல்லேன்னாலும், பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதுன்னு புரிஞ்சது. என் குடும்பத்தைச் சேர்ந்த கன்னி ஒருத்தியை ராகுவுக்கு அதிதேவதையான துர்க்கைக்குப் பலிகொடுக்கறதன் மூலம் அந்த ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்னு புரிஞ்சது. தகுந்த கன்னிபலி கிடைச்சது – அமுதவல்லி!

நான் உயிரோடு இருக்கறதை என் குடும்பத்தினர் எல்லார்கிட்டருந்தும் என்னால் மறைக்க முடியலை – என் இரண்டாவது மகன் அதைக் கண்டுபிடிச்சுட்டான். அவன் மூலம் குடும்பத் தலைவர்கள் வழிவழியா அதைத் தெரிஞ்சிக்கிட்டாங்க. எனக்கு உதவிக்காக ஒரு பண்ணையாளையும் ஏற்படுத்தித் தருவாங்க. அமுதவல்லியைப் பலிகொடுக்கறதுக்காக நான் என் ஆள் செந்தாமரைகிட்டப் பேசிட்டிருந்ததை அவ அப்பன் கேட்டுட்டான்! அமுதவல்லி காதலிச்சிட்டிருந்த வெற்றிங்கற பையனுக்கு அவளை உடனே கட்டிவெச்சு, இந்த இடத்தைவிட்டே அனுப்பிடறதுன்னு திட்டம் போட்டான்!

நானா விடுவேன்? அவள் ஓடிப் போகப் பார்த்தப்போ அவளைப் பிடிச்சு, அவளை ரணபத்ரகாளிக்குப் பலிகொடுத்துட்டேன்! அதன்மூலமா, என் உயிர் இறுகியதை உணர்ந்தேன். 




அப்போ வெற்றி என்னைத் தாக்கவந்து படுகாயம் அடைஞ்சு கிடந்தான். அவன் இறந்துட்டதா நினைச்சு, பண்ணையாளுங்க எல்லாரும் அரண்மனைக்கு எதிரா கிளம்பினாங்க. அவங்க வீடுகள் எல்லாத்திற்கும் தீ வெச்சு, விவகாரத்தை முடிச்சேன். ஆனா என் குடும்பத்தைச் சேர்ந்தவங்க எதிர்க்க ஆரம்பிச்சாங்க. என்னை வெளிப்படுத்திடுவேன், கொன்னுடுவேன் – என்னெல்லாமோ மிரட்டறான் அந்தப் பூச்சி, விஜய சேதுபதி! ஒரு பூச்சியை அடிக்கற மாதிரியே அவனை முடிச்சேன். இது பண்ணையாளுங்க வேலைன்னு காட்டறதுக்காக, அரண்மனையில் அங்கங்கே தீ வெச்சேன். அங்கேதான் என் கணக்குத் தப்பிடுச்சு.

நான் வெச்ச தீ, காட்டிலும் பரவிடுச்சு. என்னுடைய மூலிகைச் செடிகள் எல்லாம் அநேகமா எரிஞ்சு போச்சு. என் கையிருப்புத் தீர்ந்ததும் என்ன செய்யறதுன்னு தவிச்சேன். காட்டில் மறுபடி செடிகள் முளைத்தன. ஆனால் நெருப்பில் அதனுடைய ரசாயனத்தில் மாறுதல் ஏற்பட்டு, மஞ்சள் நிறமா மாறின. அவற்றை வைத்து நான் தயாரிச்ச ஸ்புடம் அவ்வளவு சக்திவாய்ந்ததா இல்லை. முன் மாதிரி மாதத்துக்கு ஒருமுறைன்னு இல்லாம, நான் வாரத்துக்கு ஒருமுறை மருந்து தயாரிக்க வேண்டியதா போச்சு.

அடுத்த சோதனை, பத்து வருஷத்துக்கு முன்னால் இந்த மாளிகை கைமாறியபோது நடந்தது. எங்கே என்னை, என் நிலவறை இருப்பிடத்தைக் கண்டுபிடிச்சுடப் போறாங்களேன்னு, இங்கே இன்னொரு பலி கொடுத்தேன். அதுக்கப்புறம் பயத்தினால் யாரும் இங்கே வரலை.

******

“இப்போ மருந்து வேலை செய்யறது இன்னும் குறையுது, இல்லை? அதோட ஜாதகத்திலும் சனிதசை வருது” என்றான் ஹரி.

“ஆமாம்ப்பா, அதுக்காக ஆலயத்லிருந்த ரணபத்ரகாளியின் சக்தியை எடுத்து இங்கே பிரதிஷ்டை பண்ணி, ஹோமங்கள் செஞ்சு, ஏதேதோ முயற்சி பண்ணினேன். முன் போல ரத்தபலி இல்லாம நான் நினைக்கறது நடக்காதுன்னு புரிஞ்சது.

“என் அதிர்ஷ்டம் பாரு, எனக்குத் தேவையான பலி என் வீட்டுக்கே வந்தது, ஒரு வருஷம் முன்னாடி! முத்துவேலா அவளைப் பார்த்தேன். பார்த்ததுமே யாருன்னு புரிஞ்சுக்கிட்டேன். அவளைக் கடத்த நான் முயற்சி பண்றதுக்குள்ளே அவங்க கிளம்பிட்டாங்க. ஆனா அவளை அதுக்குள்ளே என் மனோவசியக் கட்டுக்குள் கொண்டு வந்துட்டேன். அதன் மூலம் அவ கணவன் யார், அவன் அலுவலகத்தில் என்ன திட்டம் நடக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். அவன் இங்கே கிளம்பி வரான்னு புரிஞ்சதும், ஸ்வேதாவும் அவனோடு வருகிற மாதிரி கனவுகள் மூலமா அவளை மிரட்டினேன். அவளும் என் பிடிக்குள் வந்து சேர்ந்தா.

“இங்கே இவங்களை வரவேற்க முத்துவேலா நான் காத்திருந்ததால, பல விஷயங்கள் புரிபட்டது. இங்கே வந்திருக்கற ஒருத்தன் போலீஸால் தேடப்படறவன், இன்னொருத்தன் அவனுக்கு உதவி செய்யறவன் எல்லாம் புரிஞ்சது.

“ஸ்வேதாவை நான் கடத்தறது ரொம்பச் சுலபம். ஒரு மனக் கட்டளை இட்டேன்னா, அவளே என்னைத் தேடி வந்துடுவா! அதுக்கு முன்னாடி, இந்த அரண்மனையைக் கையகப்படுத்த நினைச்ச இன்னொரு கம்பெனிக்கு உதவ வந்த ஆனந்தனை முடிச்சேன். தேவையில்லாம என் நிலவறைக்குள் நுழையப் பார்த்த அந்த புரொபஸர் உயிரை வாங்கினேன்… அவன் எங்க வீட்டுப் பிச்சையைத் தின்ன அடிமை நாய்ன்னு நீங்க பேசிக்கறதிலேர்ந்துதான் தெரிஞ்சது…”

“கொஞ்சம் இருங்க! புரொபஸர் தேள் கடிச்சு… அப்புறம் ஆனந்தன் தேனீ கொட்டி… நீங்க… கொன்னதா சொல்றீங்க?” என்று குழறினான் ஆதி.

பழைய கதவு திறப்பதைப் போல் விநோதமான சப்தத்துடன் சிரித்தார் ரகுநாத உடையார். “புரொபஸர் ஒரு தேளைப் பார்த்ததா நினைச்சுக்கிட்டார், அவ்வளவுதான்! மிச்சபடி அவரைக் கொன்னது என்னுடைய மன அலைத் தாக்கம்!” என்றார்.

“நான் எதிர்பார்த்தேன். ஃபிஸிகலா உடலைக் காயப்படுத்தக் கூடிய மெண்ட்டல் வேவ்ஸ் ஏற்படுத்த முடியும்னு கேள்விப்பட்டிருக்கேன். இதயத்தையே நிறுத்தற அளவுக்கு, மை காட்!” என்று வியந்தான் ஹரி.




“இது மனோசக்திதான்னு நீங்க எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்க, ஹரி?” ஆச்சரியமாகக் கேட்டான் ஆதி.

“தொழில் சார். நாங்க பாராஸைக்காலஜி படிச்சவங்க. பல கேஸ்களில் ஆவி, பேய் எதுவும் இல்லை, மனித வேலைதான்னு தெளிவிச்சிருக்கோம். சில சமயம் அமானுஷ்யத்தோடும் மோத வேண்டியிருக்கும்” என்றாள் ஹரிணி.

“அந்த ஆள் பேரென்ன? ஆனந்தன் தானே? அந்த ராஸ்கல் இன்னொரு கம்பெனி இந்த மாளிகையைக் கையகப்படுத்தற சதியில் சம்பந்தப்பட்டவன்! விவரம் தெரிஞ்சதும் செங்காளையைவிட்டு அவனைத் துரத்தவிட்டுத் தேனடையில் தள்ளிவிடப் பண்ணினேன். பூநாக விஷம் வேற தாக்கி, தேனியும் கொட்டி அவன் செத்துப் போனான்!” – தன்னுடைய சாதுரியத்தைத் தானே ரசித்துச் சொன்னார் ரகுநாத உடையார்.

“விஷயத்துக்கு வந்துட்டீங்க. செங்காளை எப்படி நீங்க சொல்றதை எல்லாம் கேட்கறது? இந்த வனமங்கை, அப்புறம் அங்கே கிடக்கிறது இவங்கல்லாம் யாரு?” என்று கேட்டான் ஹரி.

“மரியாதையா பேசு! அட்ரஸ் மீ யுவர் ஹைனஸ்! ஏன், உன் பாராஸைகாலஜி படிப்பை வெச்சு அவங்கல்லாம் யாருன்னு கண்டுபிடிக்க முடியலியா?” கோபச்சிரிப்புடன் கேட்டார் உடையார்.

“உங்களால் அடிமைப்படுத்தப்பட்ட ஒரு மோகினிதான் வனமங்கை என்ற அளவிற்குப் புரிஞ்சுக்கிட்டேன், ஹைனஸ்” என்றான் ஹரி சாந்தமாக.

“ஒரு மோகினியா? ரிடிகுலஸ்! அவதான் அமுதவல்லி! அவளை நான் பலி கொடுத்துட்டாலும், அவ ஆத்மா இங்கே சுத்திக்கிட்டே இருக்கு, அவ காதலனுக்காக!”

“அவளைத்தானே படிக்கட்டில் அடக்கி வெச்சிருந்தீங்க, ஹைனஸ்?”

“ஆமா! நீங்க எல்லோரும் வந்ததும் அவளை வெளியே விட்டேன், உங்க எல்லாரையும் பற்றித் தெரிஞ்சுக்க. இந்த ஆள் தான் அவ சபலத்துக்கு மயங்குவான்னு தெரிஞ்சது. இந்த ஆளை அவ மூலமா கொன்னுடணும்னு எவ்வளவோ முயற்சி பண்ணினேன், நடக்கலை” – சந்தானபாண்டியனைக் காட்டி வருத்தத்துடன் சொன்னார் உடையார்.

“ஒரு நிமிஷம், ஏன் அவளைப் பயன்படுத்திக் கொல்லணும்? உங்க மன அலை வொர்க் பண்ணலியா?” – கேலியாகக் கேட்டான் ஆதி.

“புரியாம பேசாதீங்க ஆதி! இங்கே அமானுஷ்ய சக்தி இருக்குன்னு அப்புறம் எப்படி எஸ்டாப்ளிஷ் ஆகும்? எப்படி வேறு யாரும் இங்கே வராமல் தடுக்க முடியும்? அது ஆவியா, தெய்வமான்னு வேற நம்மைக் குழம்ப விட்டார் ஹைனஸ். முதலில் அவர் ப்ளான், இங்கு நடக்கிற அசம்பாவிதங்களுக்குக் காரணம் அம்மன்னு நிலைநாட்டறது! அதுக்காகத்தான் நமக்கு அந்தக் காட்சி காட்டப்பட்டது, ஹரிணி!”

ஹரிணி புரிந்ததாகத் தலையசைத்தாள். “பாவம், அந்த நாடகத்தில் அம்மனுடைய சூலத்தால் குத்தப்பட்ட மாதிரிக் காட்டப்பட்டவர் யாரு?”

“இங்கே என்ன நடக்குதுன்னு ஆராய வந்த போலீஸ் நாய்! அவனை மயக்கப்படுத்தி வெச்சிருந்தேன். சந்தானபாண்டியனுக்கு முன்னாடி அவனை ரிலீஸ் பண்ணினேன். உடனே அவன் இந்தாள் மேல பாய்ஞ்சுட்டான்! இந்தப் பொண்ணு நடுவில் குறுக்கிட்டதால குன்றிலிருந்து கீழே விழுந்துட்டான்! இந்தாளுன்னு நினைச்சு அமுதவல்லி அவனைக் காவு வாங்கிட்டாள்!”

“அமுதவல்லியைக் கொன்னதே நீங்க! உங்களுக்காக அவ ஏன் வேலை செய்யணும்? நீங்க சொன்னதை எல்லாம் கேட்கணும்?” என்று நடுக்கம் தீராமல் கேட்டாள் ஸ்வேதா.

“இதுகூடப் புரியலையா ஸ்வேதா? அங்கே கோமாவில் கிடக்கறது யாருன்னு நினைச்சே? அது வெற்றிச் செல்வன் தானே, ஹைனஸ்? அவனை வெச்சுத்தானே அமுதவல்லியுடைய ஆத்மாவை ப்ளாக்மெயில் செய்துட்டிருக்கார்! அவன் உடலை முடக்கிட்டார். அவன் மனத்தைத் தன் கண்ட்ரோலில் வெச்சிருக்கார்! அதைச் செங்காளை உடலில் இயங்க வெச்சிருக்கார். சரிதானே ஹைனஸ்?” 

ஹரிணி பேசப் பேச அவளை வியப்பாகப் பார்த்தார் உடையார். “பேஷ்! நீ என் சின்ன வயசில் பிறக்காமப் போயிட்டியே! உன்னை என் பட்டத்துராணி ஆக்கியிருப்பேன்! இப்ப மட்டும் என்ன கெட்டுப் போச்சு? என்னைக் கல்யாணம் பண்ணிக்கறியா? இந்தக் காடு முழுக்க நம் சாம்ராஜ்யம். நீ அணிஞ்சு விளையாட பூமி முழுக்கத் தங்கம். தவிர நீ எது கேட்டாலும் கிடைக்கும்” என்றார் ஆர்வமாக.

“செய்துக்கலாமே! எனக்கும் இந்த ஹரி மேல ஆசை அத்துப் போச்சு! ஆனா தாத்தா, எங்க கிரகக் கணக்குப்படி உங்க உயிரே இன்னும் சில நாட்கள்தான் நிலைக்கும்ங்கற போது எப்படிக் கல்யாணம் செய்துக்கறது?” என்றாள் ஹரிணி சிரிப்புடன்.

“முட்டாள்! இன்றைக்குப் பஞ்சமி. அம்மனுக்கு நிறைஞ்ச நாள். அம்பாளுக்கு ஸ்வேதாவைப் பலி கொடுத்துட்டேன்னா, இன்னும் முப்பது வருஷம் உயிரோடு இருப்பேன்! பௌர்ணமி அன்னிக்குப் பலியிடலாம்னு இருந்தேன், பரவாயில்லை, இன்றைக்கே செய்துடலாம்! என்னை மாதிரி ஒருத்தன் முப்பது வருஷத்தில் எவ்வளவோ சாதிப்பேன்! ஒரு புது மருந்து கண்டுபிடிக்க முயற்சி பண்ணறேன்! ஒரே டோஸ்ல, அல்லது சில டோஸ்கள்ள அமரத்துவம்! அப்புறம் இந்தக் காட்டிலேயே நான் கிடக்கணும்னு அவசியம் இல்லை! இந்தப் பூமியையே பிடிப்பேன், ஆளுவேன்! உன் அதிர்ஷ்டம், இப்போ உன்மேல் என் ஆசை விழுந்திருக்கிறது, நீ மாட்டேன்னு சொன்னா உனக்குதான் நஷ்டம் – உயிர் நஷ்டம்!” என்ற உடையார் சரேலென்று கையை ஸ்வேதாவை நோக்கி வீசினார். பளீரென்று தீக்கங்குபோல் ஒளி அவர் கண்ணிலிருந்து புறப்பட்டது.

இதை யாருமே எதிர்பாராததால் திகைத்தார்கள். ஆனால் அவர்களுக்கு அடுத்த அதிர்ச்சியும் காத்திருந்தது. அந்த ஒளி ஸ்வேதாவைத் தாக்கவில்லை. அவள் நெற்றிப் பொட்டை நெருங்கி, அடிபட்டதுபோல் திரும்பி, உடையாரின் கண்களையே தாக்கியது!

“ஆ!!” என்று அலறி, சுருண்டு விழுந்தார் உடையார்.

“நீ நினைச்சாலும் அவளை நெருங்க முடியாது! அவள் நெற்றியில் உஜ்ஜயின்ல நடு இரவு மஹாகாலருக்கு அபிஷேகம் பண்ணின விபூதியை இட்டிருக்கேன்! அவள் ஆக்ஞா சக்கரத்தை உன் மன அலை தொடவே முடியாது!” என்றான் ஹரி, ஹைனஸ் மரியாதைகளை அறவே தொலைத்து. (காரணம் தெரியும்தானே?)

உடையார் சமாளித்து எழுந்தார். “அவளை மனதால் தானே நெருங்க முடியாது? உங்க எல்லாரையும் உறைய வெச்சிட்டு, அவ கையைப் பிடிச்சு இழுக்க முடியாதா?” என்றார் வீறாப்பாக.

“ட்ரை பண்ணிப் பாருங்க, மஹாராஜாதி ராஜ உடையார் அவர்களே! கல்கத்தா காளி சந்நிதியில் ஒரு மாதம் வெச்சுப் பூஜிச்ச தந்த வளையல் போட்டிருக்கா! உங்களை மாதிரி தீய சக்திகள் அவளைத் தொடவே முடியாது!” என்றாள் ஹரிணி.

“அதையும் பார்க்கலாம்!” என்று அவர்கள் அத்தனை பேரையும் பார்வையால் உறைய வைத்து நிறுத்தி, ஸ்வேதாவை நெருங்க, அவள் பீதி கொண்டு வெளியே ஓடினாள்.

“இப்போ என்ன பண்றது? அவளை அவர் பிடிச்சிட்டார்னா?” என்று பதறினான் ஆதி.

ஹரி-ஹரிணி பரபரவென்று யோசித்தார்கள். “அமுதவல்லி! நீ இங்கேதான் இருக்க, எனக்குத் தெரியும்! எங்களுக்கு ஹெல்ப் பண்ணு அமுதவல்லி! உன் காதலன் உயிரை நான் காப்பாத்தறேன். அவனைக் கோமாவிலேர்ந்து வெளியே கொண்டுவந்து இருக்கற காலம் க்வாலிட்டி லைஃப் வாழ வைக்கறேன்! எங்களுக்கு உதவு அமுதவல்லி!” என்று கத்தினான் ஹரி.

அங்கிருந்த ஒரு மோகினிச் சிற்பத்திலிருந்து தீனமாக அழுகுரல் எழுந்தது. “இங்கே என்னைச் சிறைப்படுத்தி வெச்சிருக்கான்! என்னால் வெளியே போக முடியாது” என்று கேவல் கேட்டது.

ஹரிணி ஒரே விநாடி யோசித்தாள். “அமுதவல்லி! உன்னால் வெற்றியைத் தொடர்புகொள்ள முடியுமா? செங்காளையா அவனால் உடையாருக்குப் பின்னால் போக முடியுமா?” என்று கேட்டாள்.

மௌனம்.




What’s your Reaction?
+1
13
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!