Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-9

9

“ஆக நீதான் அந்த கல்யாணப்பெண். எல்லாமே உனக்கு முன்பே தெரிந்திருக்கிறது. உன் வழியிருருந்து என்னை விலக்கி வைக்கத்தான் அந்த அளவு புத்திமதிகளை பொழிந்திருக்கிறாய்?” கண்களை உருட்டி நின்று கேட்ட புவனா தாரணிக்கு அரக்கவதை காலத்து அம்மனை நினைவு படுத்தினாள்.

“புவி இல்லம்மா, எனக்கே இந்த விவரம் தெரியாது”

” வாயை மூடு என்னை அடி முட்டாள் என்று நினைத்தாயா நீ?  அது எப்படி… கல்யாணமென்று தெரியும், ஆனால் நீ தான் மணப்பெண் என்று தெரியாதோ?”

 அப்படித்தானே… ஆனால் அதனை புவனாவிற்கு எப்படி விளக்குவாள்? எனக்கு பார்த்த மாப்பிள்ளையை என் அக்காவிற்கு பார்த்ததாய் நினைத்தேன் என்று வெளியே கூற முடியுமா? தாரணி தலைகுனிந்து நின்றாள்.

” நம்முடைய மூன்று வருட நட்பிற்கு நீ சமாதி கட்டி விட்டாய். இனி நீ யாரோ… நான் யாரோ! குட் பை” விலகிச் சென்ற புவனாவை மனம் வலிக்க பார்த்திருந்தாள். அவளது திருமணம் இப்படியா ஒரு நல்ல நட்பை இழக்க வைக்க வேண்டும்? இதுபோல் ஒரு வருத்தத்தில் ஆரம்பிக்கும் அவள் வாழ்வு எப்படித்தான் இருக்கப் போகிறது? 

“நாம் எல்லோரும் ஒன்றாகத்தான் அந்த ஆளை சைட் அடித்தோம். ஆனால் தாரணியை பார்த்தாயா, நேக்காக அவனை தட்டிக் கொண்டு போய் விட்டாள்”

“ஏண்டி நமக்குத் தெரிய புவனாதான் அவன் மேல் அம்பு விட்டுக் கொண்டிருந்தாள். நிச்சயம் ஒரு நாள் அவன் வீட்டு வாசலில் போய் நிற்கப் போகிறாள் என்று நாம் கூட பேசிக் கொண்டிருந்தோமே, இப்போதானால் இவள் திருமணம் என்று வந்து நிற்கிறாள். என்னதான்டி நடக்கிறது?”

” புவனாவும் ,தாரணியும் மரம் ஏறி குதித்து அவன் ஹோட்டலுக்கு போனார்கள் தெரியுமா?”

” அது தெரியும்டி, ஆனால் அது புவனாவிற்காகத்தானே? அப்படித்தான் தாரணி நம் எல்லோரையும் நம்ப வைத்திருந்தாள்”

 “புவனாவை சாக்கிட்டு போய், கண்ணி வைத்து மானை தாரணி பிடித்து விட்டாள்”

“தாரணி அப்படிப்பட்ட பெண் இல்லை “

“என்றால் எதற்காக இந்த அவசர திருமணம்? மூன்றாவது வருடம் படித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென ஏன் திருமணம்?”

 தாங்களாகவே ஒன்று நினைத்து, தங்களுக்குள்ளாகவே பேசி, இதுதான் என்று முடிவு செய்து கொண்டிருந்த, அவர்களை இயலாமையுடன் பார்த்தாள் தாரணி. அவள் மரத்திற்கு பின் அமர்ந்திருப்பதை அறியாமல் பேசிக் கொண்டிருந்தனர்.

 என்று இந்த திருமண பேச்சு ஆரம்பமானதோ அன்றிலிருந்து எல்லா இடத்திலும் தாரணிக்கு மனக்கசப்புதான். தேவையற்ற கெட்ட பெயர்தான். அப்படியாவது பாதி படிப்பிலேயே இவனை திருமணம் முடிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?

 மீண்டும் ஒரு முறை பெரியப்பாவிடம் நேரில் நின்று பேசி விடுவோமா என்று 48வது தடவையாக யோசிக்க தொடங்கினாள். இந்த யோசனைகளின் பெரும்பாலான முடிவுகள் மௌனமாகவே இருக்கும். இந்த முறையும் அப்படியே ஆனது.

ஒரே ஒரு முறை தனது மனப்போராட்டத்தை அப்பாவிடம் கலந்து கொள்வோமா என்று நினைத்து விட்டு உடனே அதனை அழித்தாள். மகளுக்கு திருமணம் என்ற விஷயம் தெரிந்ததும் பணத்தையும் நகையையும் கொண்டு வந்து கொடுத்ததோடு தன் வேலை முடிந்தது என்று ஒதுங்கிக் கொண்டிருப்பவர், மகளின் மென் உணர்வுகளை புரிந்து கொள்ளவா போகிறார்? அப்பா என்று மணமேடையில் பெயருக்கு ஒரு ஆள் அவ்வளவே!

______

இப்போதெல்லாம் திவ்யா மிகவும் சந்தோசமாக இருக்கிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை குடும்பமே படித்தவர்களாம். மிகவும் வசதியானவர்களாம். நகரின் மையத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள அப்பார்ட்மெண்டில் குடியிருக்கிறார்களாம். வீட்டின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகவே லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்களாம்.




 இனி தன் வாழ்க்கை செட்டில்டு… இப்படியாக தோழிகள் உறவுகள் மட்டுமின்றி பார்ப்பவர்களிடமெல்லாம் கூட பெருமை பேசிக்கொண்டிருந்தாள். அவளுடைய ஒவ்வொரு பெருமை பீத்தலின் முடிவிலும் கண்கள் தாரணியின் மேல் தானாகவே வந்து நிற்கும். பார்த்தாயா என்னை… எனும் பெருமிதம் மின்னும்.

 சிறுவயதிலிருந்தே தாரணியை தனது போட்டியாக நினைத்து வளர்ந்தவள். தாயும் தந்தையும் தனக்கு ஈடாக அவளிடம் உணவு உடை அணிகலன் படிப்பு என்று சமமாக பாவிப்பதில் புழுங்கிக் கொண்டிருந்தவள். இப்போது தாரணியை விட உயர்ந்த மாப்பிள்ளையை பெற்றோர் பார்த்து விட்டார்கள் என மிகுந்த சந்தோஷத்தில் இருந்தாள்.

இருவருக்கும் ஒரு வாரம் முன் பின்னாக நிச்சயதார்த்தமும், இரண்டு மாதங்கள் கழித்து ஒரே நாளில் ஒரே மேடையில் திருமணமும் என இரு பக்கத்து வீட்டினரிடமும் பேசி முடிவு செய்யப்பட்டது.

“எனக்கு அஸ்வின் நிச்சயத்தன்று  ஐபோன் வாங்கி தரப் போகிறார். உனக்கு எப்படி? ” திவ்யா தலையை உயர்த்திக் கொண்டு கேட்க, தாரணி புன்னகையுடன் ஒதுங்கிக் கொண்டாள்.

 இந்த ஐபோனுக்காக இரண்டு நாள் முன்பு இரவு ஃபோனில் அவள் அஸ்வினுடன் சண்டை போட்டதை அறிவாள்.

“நீங்கள் இரண்டு பேரும் போனில் பேசுகிறீர்களா இல்லையா?” ஒரு மாதிரி பார்த்தபடி கேட்டாள்.

 கனகலிங்கம் அவளுடைய போன் நம்பரை மாப்பிள்ளையிடம் கொடுத்து விட்டதாக சொல்லி அவனுடைய நம்பரை இவளுக்கு கொடுக்கத்தான் செய்தார்.அதனை போனில் சேவ் செய்ததோடு சரி அழைத்துப் பேசும் எண்ணம் அவளுக்கும் வரவில்லை அங்கே அவனுக்கும் இல்லை போலும்.

“டீ ஆத்துபவரிடம் ஐபோன் எதிர்பார்த்தால்…” மீதி வார்த்தைகளை வாய்க்குள் சொல்லியபடி நக்கல் சிரிப்புடன் நகர்ந்தாள் திவ்யா.

முதலில் திவ்யாவின் நிச்சயதார்த்தம் நடக்க, படித்துக் கொண்டிருக்கும் பெண்கள் என்பதால் கல்லூரியே திரண்டு வந்திருந்தது. தோழிகள் முன்னிலையில் பெருமையாய் அஸ்வினிடமிருந்து ஐபோனை பெற்றுக் கொண்ட திவ்யாவின் முகம் தாமரையாய் மலர்ந்திருந்தது.

“என்னம்மா தாரணி அடுத்து உன் நிச்சயம்தான். மாப்பிள்ளை பெயர் என்ன? என்ன செய்கிறார்?” உறவுக்கார பெண்களில் வயதான ஒருவர் கேட்க, தாரணி விழித்தாள்.

 ஹோட்டல் வைத்திருக்கிறான் தெரியும், அவன் பெயர் என்ன? கரியன் என்று நாக்கு வரை வந்துவிட்ட பெயரை மடித்து வாய்க்குள் அடக்கினாள்.

“என்னம்மா முழிக்கிற? உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை பெயர் என்ன?”

“பூரணசந்திரன்” இருவரும் திரும்பிப்பார்க்க புன்னகையோடு தன் பெயரை சொன்னபடி நின்றிருந்தான் அவன்.

நல்லா பெயர் வைத்தார்கள் இவனுக்கு,அமாவாசைக்கு பெயர் முழு நிலவா? நினைத்தபடி தலை குனிந்து கொண்டாள் தாரணி.




What’s your Reaction?
+1
38
+1
25
+1
2
+1
3
+1
1
+1
1
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!