Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-25

25

 வீடு இருந்த தெருவிற்குள் நுழையும் போதுதான் தாரிகாவிற்கு அம்மாவின் நினைவு வந்தது .அதுவரை மயில்வாகனனின் அருகாமை அவளுக்கு ஏதோ ஒரு மயக்கத்தை கொடுத்துக் கொண்டிருந்தது .இரவு முழுவதும் விழித்திருந்த கிறக்கமா  ?  கண்களைச் சுழற்றும் தூக்கமா ?  எனத் தெரியாமல் ஏதோ ஒருவித மயக்கம் போல் கண்கள் சொருக காரில்  அமர்ந்திருந்தாள் . அவர்கள் தெருவுக்குள் கார் நுழைந்ததும் தான் அம்மாவின் நினைவு வர கதறினாள்.

”  ஐயோ அம்மாவுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே.  உங்கள் வீட்டில் எல்லோரும் அவர்களை வீட்டை விட்டு விரட்டி கொண்டிருந்தனரே “

” அப்படி எதுவும் நடந்திருக்காது. அத்தை பத்திரமாக வீட்டிற்குள் இருப்பார் ”  மயில்வாகனன் சொன்னது போன்று தான் நடந்திருந்தது.

 சாந்தாமணி ஹால் சோபாவில் உட்கார்ந்துகொண்டு நிதானமாக காபியை ஆற்றிக்  குடித்துக் கொண்டிருந்தாள்.

 ”  அம்மா …” வேகமான அழைப்புடன் தாரிகா அவளருகே போய் அமர்ந்தாள் .

” தாரும்மா போன வேலை முடிந்ததா  ?  புன்னகைத்து கேட்டு மயில்வாகனனை பார்த்தாள்.

” நல்லபடியாக முடிந்தது அத்தை. நீங்கள் நன்றாகத் தூங்கினீர்களா ? ”  மயில்வாகனம் விசாரித்தான் .

”  ரொம்ப வருடங்களுக்கு பிறகு மிகவும் நன்றாக நிம்மதியாக நேற்றுத்தான் தூங்கினேன் ”  சாந்தாமணியின் பதிலில் மகனுக்கும் மருமகளுக்கும் காபி எடுத்துக்கொண்டு வந்த தமயந்தி ஒரு நிமிடம் தேங்கி நின்று பின் நடந்தாள் .

”  இதே நிம்மதி இனி எப்போதும் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அத்தை ”  மயில்வாகனன உறுதி போல் கூறினான்.

”  அதற்கு அவள் அந்த ராஜவேலு வீட்டிற்கு போகாமல் இருக்க வேண்டும் ” சொல்லிக் கொண்டே வந்தார் தர்மராஜா.

ராஜவேலு…?  அவள் அப்பாவையா  சொல்கிறார்  ?  அம்மாவை அப்பா வீட்டிற்கு போகாதே என்று சொன்னால் என்ன அர்த்தம்…?  தாரிகா புரியாமல் தாயைப் பார்க்க சாந்தாமணி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் .

தமயந்தி பதட்டமாக நின்றிருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது.

”  அம்மா.. என்னம்மா அப்பாவிற்க்கும் உங்களுக்கும் சண்டையா ? “

”  உன் அப்பன் என்றுதான் சண்டை போடாமல் இருந்திருக்கிறான் ? ”  தர்மராஜா சொல்ல சாந்தாமணி இன்னும் அதிகம் தலை குனிகிறாள் .




“இனிமேலும் இப்படியே தலைகுனிந்து இருக்க வேண்டாம் அத்தை. நிமிர்ந்து நில்லுங்கள் .மாமாவிடம் தைரியமாகப் பேசுங்கள் .நாங்கள் எல்லோரும் உங்கள் பக்கம் இருக்கிறோம்.”   மயில்வாகனன் சொன்னதும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் சாந்தாமணி .அவள் கண்கள் கலங்கி இருந்தது .

”  உங்கள் முடிவு தான் எனக்கும் மாப்பிள்ளை .நானும் இந்த போராட்ட வாழ்விற்கு ஒரு முடிவு வர வேண்டும் என்று தான் உங்களுடன் கிளம்பி வந்தேன் .”

”  அம்மா அப்பா  திரும்பவும் உங்களுடன் சண்டை போடுகிறார் என்றால் இது நல்ல ஐடியா . இனிமேல் எங்களுடனேயே இருந்து விடுங்கள் நான் உங்களை பார்த்துக் கொள்கிறேன் “தாரிகா தாயை அணைத்துக் கொண்டாள்.

” சபாஷ்…”   என்ற போற்றல் வார்த்தையுடன் படபடவென கைதட்டலும் சேர்ந்து கேட்க  உள்ளே நுழைந்தார் ராஜவேலு .

“நான் நினைத்தபடியே நடந்து விட்டது .

முதலில் என் மகள்..  பிறகு என் மனைவி .இருவரையுமே ஏதேதோ பேசி உன் கட்டுக்குள் வைத்துக் கொண்டாயா ?  சீ சீ நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷன் தூ …ராஜவேலு நிஜமாகவே கீழே காறி உமிழ அனைவரும் அதிர்ந்தனர்.

” அப்பா என்ன காரியம் செய்கிறீர்கள் ? தாரிகா அதட்ட ராஜவேலு இன்னமும் எகிறினார் .

“அடப்பாவிகளா என் செல்ல மகளையே  எனக்கு எதிராக பேச வைத்து விட்டீர்களே ..”

“அப்பா நான் உங்களுக்கு எதிராகப் பேசவில்லை .நியாயத்தை பேசுகிறேன் .அம்மா கொஞ்ச நாட்கள் என்னுடன் இங்கே இருந்துவிட்டு வரட்டும். நீங்கள் சென்னைக்கு கிளம்புங்கள்”

” நான் ஏன் போக வேண்டும் ?  என் மனைவியும் மகளும் இல்லாமல் இங்கிருந்து போகமாட்டேன்.” ராஜவேலு சூளுரை போல் சொல்லிவிட்டு அடமாக சோபாவில் அமர்ந்து கொண்டார் .

” மனைவியும் மகளும் இப்போதுதான் உங்கள் கண்களுக்குத் தெரிகிறோமா ? ” சாந்தாமணி ஆத்திரமாக கேட்டாள் .

“எனக்கு அடுத்தவர் குடும்பத்தை கலைத்து அதில் மகிழ்ச்சி அடையும் புத்தி கிடையாது. அதனால் என் மனைவியும் மகளும் எனக்கு எப்போதுமே பொக்கிஷங்கள் தான் .” ராஜவேலுவின் வார்த்தைகள் சாந்தாமணியின் மனதை லேசாக அசைத்தது .

” மிகவும் அழகாக நடிக்கிறாய் ராஜு.  இன்னமும் நீ மாறவில்லை .அன்று கண்ட அதே பசப்பு வார்த்தை ராஜு தான்.  இன்னமுமா இவனை நம்புகிறாய் சாந்தா?  தர்மராஜா சாந்தாமணியை எச்சரிக்க முயன்றார் .

“போதும் வாயை மூடுடா ”  கத்திய ராஜவேலு மகள் பக்கம் திரும்பினார் .

“தாருமா இந்த பட்டிக்காட்டு கூட்டம் உன்னை ஏமாற்றி இங்கே அழைத்து வந்துவிட்டார்கள். இவர்களை நம்பாதே .நீ இப்போது என்னுடன் கிளம்பி வா.  அங்கே கௌசிக் இன்னமும் உன் நினைவிலேயே இருக்கிறான். உனக்காகவே காத்துக் கொண்டிருக்கிறான் .திரும்பவும் உன்னை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறான் .வா போய்விடலாம் ” மகளுக்காக கை நீட்டினார்.




” நிச்சயம் பா தாரிகா உடனடியாக ஒத்துக் கொள்ள அனைவரும் அதிர்ந்தனர்.

”  தாரிகா என்ன இது ? ” முதலில் மறுத்தவள்  தமயந்தி தான்.

” அப்பா என் நன்மைக்காக சொல்கிறார் அத்தை.  ஒரு தந்தையின் இடத்திலிருந்து அவர் பேசுகிறார் .அதில் தவறு ஏதும் எனக்கு தெரியவில்லை . “

” உன் தந்தை ஒரு கணவனாக ஒழுங்காக நடந்து கொண்டாரா ?  நீயே கேளு …” தர்மராஜா வரண்ட குரலில் கேட்டார்.

”  உங்கள் பேச்சுக்கள் எனக்கு முழுவதுமாக புரியவில்லை மாமா. அப்பாவின் முன் வாழ்விற்கும் உங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என புரிகிறது .அது என்ன மாமா  ? “

” நான் சொல்கிறேன் ”  ராஜவேலு வேகமாக முன்னால் வந்தார்.

”   உன் அம்மாவை எனக்கு திருமணம் செய்ய நிச்சயம் பேசியிருந்தார்கள் .இதோ இந்த ஏமாற்றுக்காரன் ஏதேதோ பேசி உன் அம்மா வீட்டினரின் மனதை கலைத்து அவளை தானே திருமணம் செய்ய நினைத்தான் .நான் விழித்துக் கொண்டு அவளை காப்பாற்றி நானே திருமணம் செய்து கொண்டேன். அந்த கோபத்தில்தான் இன்னமும் இவன் எனக்கு எதிரியாகவே இருக்கிறான். தொழிலிலும் வாழ்விலும். ஊர் ஜனங்களை ஏதேதோ பேசி மனதை மாற்றி எனக்கு ஜவுளி கடைக்கு துணிகள் கிடைக்க விடாமல் செய்து விட்டான். மேலும் நிறைய திட்டங்கள் போட்டு அவன் மகனை அனுப்பி வைத்து உன் திருமணத்தை நிறுத்தி உன்னையே திருமணம் செய்ய வைத்து இங்கே அழைத்துக் கொண்டு வந்து விட்டான் “

” இல்லைமா மருமகளே அவனை நம்பாதே. அவன் அப்படியே மாற்றி  சொல்கிறான் ”  தர்மதுரை பதறியபடி வர அவரை கையுயர்த்தி  நிறுத்தினாள் தாரிகா.

” இருக்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது மாமா.”   தாரிகா சொல்லிவிட வீட்டிற்குள் அமைதி நிலவியது .

” வாம்மா போகலாம்  ”  கை நீட்டிய தந்தையின் கையை தயக்கமின்றி பற்றிக்கொண்டாள்  தாரிகா. கூடவே வெளியேறவும் முயன்றாள் .மயில்வாகனன் இப்போது அவள் முன் வந்து நின்றான் .

”  தாரிகா நன்றாக யோசித்து முடிவு எடு .உணர்ச்சிகளை கேட்டு முடிவெடுக்காதே .உள்ளத்தை கேட்டு முடிவெடு  “




தலை நிமிர்ந்து தீர்க்கமாக அவனை பார்த்தாள். பின்  நிதானமாகச் சொன்னாள்  ”  சரி தான் போடா ” அவ்வளவுதான் தந்தையுடன் வெளியேறிவிட்டாள் . அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர்.

” மிகவும் நல்ல முடிவு எடுத்திருக்கிறாய் தாரும்மா .  உன்னை எப்படி மீட்பது என்று தான் நான் குழம்பிக்கொண்டிருந்தேன். உன் புத்திசாலித்தனத்தினால் அது மிகவும் எளிதாகவே முடிந்து விட்டது.” உற்சாகம் பொங்க பேசியபடி ராஜவேலு தாரிகா வை அழைத்துச் சென்ற இடம் அதே மர வீடு தான்

” இது எந்த இடம் அப்பா ? “

”  இது தேக்கு மரக்காடும்மா .இதனை நான்தான் இங்கே உருவாக்கி வளர்த்து வருகிறேன் .இந்த மரங்களில் நமக்கு நல்ல லாபம் “

”  ஓ …அப்படியா அப்பா .இதெல்லாம்  ஐ மீன் …இங்கே பரமக்குடியில் இது போல் எப்போதிருந்து பிசினஸ்  செய்து கொண்டிருக்கிறீர்கள் ? “

”  இருபத்தியைந்து வருடங்களுக்கும் மேலாக .முதன் முதலாக சென்னையில்  ஒரு ஜவுளிக்கடையில் சேல்ஸ் மேனாக வேலை செய்த போது இங்கே துணிகள் வாங்க தறிக்கு அனுப்பினார்கள் .அப்படி இந்த ஊர் பழக்கமானது .இங்கே சில தறி நெசவாளிகளின் நட்பும் கிடைத்தது .”

” தர்மராஜா மாமாவுடைய நட்பா அப்பா ?”

” ஆமாம் …” சிறு தயக்கத்தின் பின் ஒப்புக் கொண்டார் ராஜவேலு .

” அம்மாவையும் இங்கேதான் சந்தித்தீர்கள் போலவே ? “

” ஆமாம் .அவளுடைய அப்பா சொந்த தறி வைத்திருந்தார்.  துணிகள் வாங்க வரும் போது அவளுக்கும் , எனக்கும் பழக்கம் …”

” பழக்கமென்றால் காதலா அப்பா ? “

மகளின் நேரடிக் கேள்வியில் திகைத்து பிறகு ஒரு மாதிரி தலையசைத்தார் ராஜவேலு. ” அது போலத்தான் “

” தர்மராஜா மாமாவும் அம்மாவிடம்தான் துணி வாங்கினார்களா ? “

”  அது …தர்மராஜா நிறைய தறிகள் வைத்திருந்தான் .பெரிய அளவில்துணிகளை உற்பத்தி செய்தான் .சில நேரம் பெரிய ஆர்டர்களை சாந்தாமணி போன்ற சின்ன சொந்த தறிக்காரர்களிடம் கொடுத்து வாங்குவான்”

” ஓ …”  அப்பா கூறிய விபரங்களை உள் வாங்கிய தாரிகாவின் மனது சில கணக்குகளை போட்டது .

” சுகந்தியை ஏன்பா இங்கே கடத்தி வந்தீர்கள் ? ”  மகளின் நேரடிக் கேள்வியில் ராஜவேலு அதிர்ந்தார் . இப்போது தாரிகாவின் கேள்வியில் பாசம் இல்லை .குற்றவாளியை விசாரிக்கும் காவல்காரன் தோற்றம் அவளிடம் வந்திருந்தது .

பதில் சொல்லியே ஆகவேண்டுமெனும் வலியுறுத்தலுடன் அவள் நின்றாலும் , அதற்கான நேரத்தை காலம் ராஜவேலுவுக்கு கிடைக்கவில்லை .கையில் கம்பு , கத்தி , அரிவாளுடன் ஒரு கும்பல் தேக்கு மரக் காட்டிற்குள் நுழைந்து நொடியில் அந்த மர வீட்டை சுற்றி வளைத்தது .

 




What’s your Reaction?
+1
21
+1
13
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!