Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-17

17

“இப்படி சரியாக விசாரிக்காமல் ஆகாத இடத்தில் என்னை திருமணம் முடித்துக் கொடுத்து விட்டீர்களே?” குற்றச்சாட்டுகளை பெற்றோர் மீது வீசிக் கொண்டிருந்தாள்.

“திவ்யா வார்த்தைகளை விடாதே இது நீ தேர்ந்தெடுத்த வாழ்க்கை மறந்து விடாதே” கனகலிங்கம் கண்டிப்பாக பேசினார்.

 தாரணிக்கு ஒன்றும் புரியவில்லை கற்பகத்திடம் “என்ன விஷயம் பெரியம்மா?” என்றாள்.

” திவ்யா மாப்பிள்ளைக்கு வேலை போய்விட்டது” 

” ஐயோ! ஏன்?”

” வேறொன்றுமில்லைம்மா. இப்போ ஐடி ஃபீல்டே டவுனா இருக்கில்ல! நிறைய பேரை வேலையை விட்டு எடுத்திருக்காங்க .அதுல மாப்பிள்ளையும் ஒருத்தர்” கனகலிங்கம் சொல்ல திவ்யாவின் அழுகை அதிகமானது.

” இனிமேல் நாங்கள் என்ன செய்வோம் ?”

“என்ன திவ்யா இதெல்லாம் ஒரு பிரச்சனையா? இது நிரந்தரம் இல்லை உனக்கும் தெரியும்தானே?அத்தானுக்கு வேலை போனால் என்ன? நீ படித்தவள் தானே !உனக்கான வேலையை தேடிக் கொள்ளேன்” தாரணி சொல்ல அவளை முறைத்தாள் திவ்யா.

” வேலைக்கு போய் சம்பாதித்துதான் சாப்பிட வேண்டும் என்று என் தலையெழுத்தா?”

 “இதென்ன பேச்சு திவ்யா?. படித்த பெண் எதற்காக வீட்டிற்குள் சும்மா உட்கார வேண்டும்? நீ உன் வேலையை பார், அத்தானும் வேறு இடத்தில் வேலைக்கு முயற்சிக்கட்டும்”

” அப்படியெல்லாம் வீடு ஆபீஸ் என்று அல்லாட என்னால் முடியாது”

 தாரணிக்கு சீ என்றிருந்தது. என்ன பெண் இவள்?

கனகலிங்கம் உட்கார்ந்திருந்த நாற்காலியை தள்ளிவிட்டு எழுந்தார். “இவள் சரிப்பட்டு வர மாட்டாள். இரண்டே வேலை சோறு போட்டுவிட்டு,  அவள் வீட்டிற்கு அனுப்பி விடு” போய்விட்டார்.

 ” அம்மா, அப்பாவிற்கு என் மீது பாசமே இல்லாமல் போய்விட்டது. நான் கஷ்டப்பட வேண்டும் என்றே நினைக்கிறார்”

” எப்போதுமே சிறு கஷ்டமும் இல்லாமல் வாழ்ந்து முடித்து விட வேண்டுமென்று நீ நினைக்கிறாய் திவ்யா. இது யாருக்கும் நடக்காது. இரண்டு நாட்கள் இங்கிருந்து மனதை சமாதானப்படுத்தி விட்டு கிளம்பு .தாரணி இவளுக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லம்மா” கற்பகமும் எழுந்து போய்விட்டாள்.

இவள் எல்லாம் புத்தி சொல்லும் நிலைமையிலா நான் இருக்கிறேன்… ஆத்திரத்தில் நெஞ்சம் ஏறியிறங்க பார்த்தாள் திவ்யா.




“உன் அப்பா திரும்பி வந்து விட்டாராமே ?உன்னிடம் தானே தஞ்சம் புகுந்திருக்கிறாராம்!”

தாரணியை காயப்படுத்தும் நோக்கத்துடன் கேட்ட கேள்விக்கு அவள் முகம் வாடாமல் பூவாய் மலர்ந்தது. “ஆமாம் அப்பா இப்போது எங்களுடன்தான் இருக்கிறார்.  நாங்கள் மிகவும் சந்தோசமாக இருக்கிறோம்”

தாரணியின் இந்த மாற்றத்தில் திவ்யா அதிர்ந்தாள். தொட்டதற்கெல்லாம் மூஞ்சை சுண்ட வைத்துக் கொள்ளும் பழைய தாரணியா இவள்? அது என்ன இப்படி எப்போதும் ஒரு ஒளிவட்டம் இவள் முகத்தைச் சுற்றி.

 தான் மிகவும் கீழிறங்கி விட்டதான குன்றலில் இருந்த திவ்யாவிற்கு தாரணியின் நிமிர்வை சந்தோஷத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“அவர் இப்போது சென்னையில் கூட ஒரு தொழில் தொடங்க போகிறார் திவ்யா.அங்கேயும் நிறைய காண்டாக்ட்ஸ் இருக்கிறார்கள். அத்தானின் வேலை விஷயமாக அவரிடமும் சொல்லி வைக்கிறேன். கூடவே உனக்கும் வேலைக்கு சொல்லச் சொல்கிறேன். கவலைப்படாதே இரண்டு பேருக்குமே சீக்கிரமே வேலை கிடைத்து விடும்”

“சென்னையில் தொழில் தொடர்பா? எந்த ஐடி கம்பெனியை ஆரம்பிக்கப் போகிறீர்கள்?” திவ்யா தன் வழக்கமான நக்கலுடன் கேட்க தாரணிக்கு கோபம் வந்தது.

“எங்கள் ஹோட்டலின்  பிரான்ஞ் ஒன்று சென்னையில் தொடங்கப் போகிறோம்.இங்கேயே இன்னொரு பிரான்ஞ் ஆரம்பித்திருக்கிறோம் தெரியும் தானே?”

“ஆஹா பெரிய தொழிலதிபர்கள்தான். ஏய் தாரணி ரொம்ப பெருமை பீத்திக் கொள்ளாதே. இந்த வாழ்வே உனக்கு நான் விட்டுக்கொடுத்த பிச்சை” தன்னை மறந்து கத்தினாள்.

தாரணி அதிர்ச்சியுடன் அவளை பார்த்தாள். “என்ன சொன்னாய்? நீ விட்டுக் கொடுத்தாயா?”

முதலில் நாக்கை கடித்துக் கொண்ட திவ்யா பிறகு வருவது வரட்டும் என்று தலையை நிமிர்த்தி “ஆமாம் அந்த பூரணசந்திரனை முதலில் எனக்குத்தான் அப்பா பார்த்து வைத்திருந்தார்.வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும் உனக்கு மனதிற்குள் அப்பா ஏக்கம் இருக்கிறதாம்.அதனால் திருமணத்திற்கு பிறகு நீ சென்னையில் வேலை பார்க்கும் உன் அப்பா அருகில் இருந்து கொள்வாயாம்.நான் இவர்கள் அருகில் இந்த பட்டிக்காட்டில் குப்பை கொட்ட வேண்டுமாம். உனக்கு சிட்டியில் மாப்பிள்ளை எனக்கு இந்த பட்டிக்காட்டானா? இடையில் புகுந்து இடம் மாற்றி விட்டேனே!”

“சீச்சி எவ்வளவு மோசமானவள் நீ! இனி என் முகத்திலேயே விழிக்காதே” காறித் துப்பாத குறையாக பேசிவிட்டு வெளியே வந்த தாரணியின் மனம் தீப்பந்தமாய் எரிந்து கொண்டிருந்தது.

—–

“என்ன கண்ணு வெளியில் அதிக வெயிலா? முகமெல்லாம் கறுத்துப் போய் கிடக்கிறது” வீட்டிற்குள் நுழைந்தவளின்  முகத்தை பார்த்து கேட்ட பூரணசந்திரனிடம் ஒரு தலையசைப்புடன்  அறைக்குள் நுழைந்து கொண்டாள். பின்னேயே வந்தவன் “தாரு அஸ்வின் வந்திருந்தார்”என்றார்.

“என்ன இங்கேயா?”

” ஆமாம் அவருக்கு வேலை போய்விட்டதாமே! வருத்தப்பட்டார். நம்முடைய ஹோட்டலின் சென்னை பிரான்ஞை எடுத்து நடத்த விரும்புவதாக சொன்னார். அவருக்கே கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்”

“இல்லை முடியாது, அவர்களுக்கு நாம் எந்த உதவியும் செய்யக்கூடாது” தன்னை மறந்து கத்தினாள்.

புருவம் சுருக்கி அவளை பார்த்தவன் “ஏண்டா?” என்றான். 




” காரணமெல்லாம் கேட்காதீர்கள். திவ்யாவிற்கு எந்த உதவியும் செய்ய நான் தயாராக இல்லை. என்னை மீறி நீங்கள் அவர்களுக்கு எதுவும் செய்யக்கூடாது. இப்போதே அஸ்வினுக்கு போன் போட்டு சொல்லுங்கள். உடனே… இப்போதே…”

அடம் பிடித்தவளை வினோதமாக பார்த்தபடி போனை எடுத்தான். நான்கைந்து வார்த்தைகளில் சிக்கனமாக இப்போதைக்கு அங்கே பிரான்ச் ஆரம்பிக்கும் யோசனை இல்லை பிறகு பார்க்கலாம் என்று கூறி வைத்தான்.

“அதென்ன பிறகு? எப்போதுமே அவருக்கு எந்த ஹெல்ப்பும் பண்ணக் கூடாது” சொல்லிவிட்டு தாரணி திரும்பி படுத்து கொண்டாள்.

 தாரணியின் இந்த பிடிவாதத்தின் காரணத்தை தெரிந்து கொள்ள வீட்டினர் அனைவரும் முயற்சித்தும் முடியவில்லை.யாரிடமும் வாயை திறப்பதாக இல்லை அவள். இறுகிய முகத்துடன் கல்லூரிக்கு செல்வதும் வருவதுமாக இருந்தாள்.

 சுந்தராம்பாளும் பூரணசந்திரனும் வீட்டில் இல்லாமல் இருந்த நேரம், தசரதன் மகளருகே அமர்ந்து மெல்ல அவள் கையை பற்றினார். “தாரெ என்னடாம்மா? ஏன் நான்கைந்து நாட்களாக ஒரு மாதிரி இருக்கிறாய்? எதற்காக திவ்யாவை அவ்வளவு வெறுக்கிறாய்? அப்பாவிடம் சொல்லுடாம்மா. அப்பாவிற்கு தீர்வு கொடுக்க முடியவில்லை என்றாலும் ஆறுதலாக நாலு வார்த்தை பேச முடியும் .சொல்லுடாம்மா”

 பரிவாக கேட்ட தந்தையின் சொற்களில் உடைந்து அழுதாள் தாரணி. அவள் திருமணத்தில் திவ்யா செய்த திருகு வேலையை அப்பாவிடம் சொன்னவள் “எவ்வளவு பெரிய திருட்டுத்தனம் செய்திருக்கிறாள் பாருங்கள் அப்பா. இவளை நான் எவ்வளவு நம்பினேன்” அழுதபடி அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

” சரிடாம்மா விடு. அவளது புத்தி அவ்வளவுதான்” தசரதன் மகளை தலையை வருடி ஆறுதல் சொன்னார்.

“மாமா ஹோட்டலுக்கு மளிகை சாமான்கள் வருகிறது. கொஞ்சம் போய் பக்கத்தில் இருந்து பார்த்து இறக்குகிறீர்களா?” என்றபடி வந்தான் பூரணசந்திரன்.

 தாரணி அவசரமாக முகத்தை துடைத்துக்கொண்டாள். தசரதன் கிளம்பி போக,ஒரு நிமிடம் அவளை பார்த்தபடி நின்றவன் பிறகு வெளியே போய் விட்டான்.அப்பாவிடம் தன் மனக்குமுறலை கொட்டி விட்டதினாலோ என்னவோ தாரணிக்கு அதன் பிறகு மனச்சுமை குறைந்தாற் போலிருந்தது. 

மறுநாள் காலை “போகலாமா?” என்றபடி பூரணசந்திரனுடன் கிளம்ப ஆயத்தமானவளை திரும்பியும் பார்க்காமல் “உனக்கு ஆட்டோ ஏற்பாடு செய்திருக்கிறேன். அதில் போய் வா. எனக்கு நிறைய வேலைகள்  இருக்கிறது” அவள் முகத்தை  பார்க்காமலேயே கிளம்பி போனான்.

 தாரணிக்கு முதலில் அது வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால் அடுத்து வரும் நாட்களிலும் இதே போல் பூரணசந்திரன் அவளை தவிர்க்க தாரணி யோசிக்க தொடங்கினாள்.




What’s your Reaction?
+1
43
+1
25
+1
4
+1
0
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!