Serial Stories ஜில்லுன்னு ஒரு நெருப்பு

ஜில்லுன்னு ஒரு நெருப்பு-3

 3

மாநகராட்சி கலை அரங்கிற்குள் டாக்டர்.கிருபாகரனின் கார் நுழையும் போது மணி காலை 8.15.

அரங்கின் முன் பகுதியில் போலீஸ் தலைகள் ஏராளமாய்க் குவிந்திருக்க, மெட்டல் டிடெக்டரால் சோதனை செய்யப்பட்ட பிறகே மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். பொதுமக்கள் மட்டுமல்லாது சில வி.ஐ.பி.க்களும் சோதனை செய்யப்படுவதால் அவ்வப்போது சின்னச் சின்ன வாக்குவாதம் வேகமாய்க் கிளம்பி, அதே வேகத்தில் அணைந்தும் போயின.

மீடியாக்காரர்களுக்கென்று தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்க, அவர்கள் தங்கள் காமிராக்களுடன் அங்கே காத்திருந்தனர்.

சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டிருந்த உயரக் கோபுரங்களில் நின்று கொண்டு நாலாப்புறமும் பார்வையை வீசிக் கொண்டிருந்தனர் காவல் அதிகாரிகள்.

காரிலிருந்து இறங்கிய டாக்டர் கிருபாகரனை ஏ.கே.47 ரக துப்பாக்கி ஏய்ந்திய காவல் பூனைகள் சூழ்ந்து நின்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

அதைப் பார்க்கப் பார்க்க சிரிப்பாயிருந்தது டாக்டருக்கு, “அடப் பாவிகளா… போர் முனைல துப்பாக்கிச் சத்தங்களுக்கும், பீரங்கிச் சத்தங்களுக்கும் நடுவே சர்வ சாதாரணமாய் உலவிய எனக்கு இப்படியொரு பாதுகாப்பா?”

கமிஷனரின் வெள்ளை நிற அம்பாஸிடர் சரேலென்று வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய கமிஷனருக்கு ஏகப்பட்ட சல்யூட்டுகள் வினியோகிக்கப்பட்டன.

“வேர் ஈஸ் ஸ்பெஷல் ஆபீஸர் வர்மா?” வந்ததும் வராததுமாய் கமிஷனர் கேட்டார்.  அவர் குரலில் வழக்கத்தை விட அதிகப் பதட்டம்.

“டாக்டர் கிருபாகரன் கூட மேடையை நோக்கிப் போயிட்டிருக்கார்” செக்யூரிட்டி ஒருத்தன் விறைப்போடு சொல்ல,

“ஓ.கே…. டாக்டரை மேடையில் உட்கார வெச்சிட்டு உடனே என் கிட்டே வரச் சொல்லு” ஆணையிட்டார் கமிஷனர்.

அடுத்த விநாடியே மின்னல் வேகத்தில் சென்ற அந்த செக்யூரிட்டி, மேடையில் டாக்டருக்கு அருகில் நின்றிருந்த ஸ்பெஷல் ஆபீஸரிடம் தகவல் சொல்லி விட்டு உடனே இறங்கினான்.

அவனுடனேயே இறங்கி அவனையும் முந்திக் கொண்டு கமிஷனர் முன் ஆஜரானார் ஸ்பெஷல் ஆபீஸர் வர்மா.

“மிஸ்டர் வர்மா!… கிட்டத்தட்ட மூணு இன்ஃபார்மர்ஸ் ஒரே மாதிரி க்ளூ குடுத்திருக்காங்க!… எனக்கென்னமோ இன்னிக்கு இங்கே ஏதோ கன்ஃபர்மா நடக்கப் போகுது!ன்னு பட்சி சொல்லுது!… ஸோ… செக்யூரிட்டியை இன்னும் நல்லா டைட் பண்ணுங்க!… எல்லோரையும் அலர்ட்டா இருக்கா சொல்லுங்க!… சந்தேகப்படும்படியா யார் வந்தாலும் உடனே விசாரிக்கச் சொல்லுங்க!…” விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு சொன்னார் கமிஷனர்.




“ஓ.கே.சார்” விறைப்பான சல்யூட்டுடன் விலகிச் சென்றார் வர்மா தன் பாதுகாப்புப் பணியை இன்னும் தீவிரப்படுத்த.

அரங்கினுள்ளே யார் யாரோ மேடையேறி டாக்டர் கிருபாகரனின் தலையில் தங்கள் வாழ்த்துரைகளின் மூலம் டன் கணக்கில் ஐஸ் கட்டியை வைத்துக் கொண்டிருந்தனர்.

“அடுத்து… சென்ற ஆண்டு மருத்துவத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறிய திரு. ஹரிபாஸ்கர் அவர்களுக்கு நமது டாக்டர் கிருபாகரன் தனது பொற்கரங்களால் நினைவுப் பரிசினை வழங்குவார்” நிகழ்ச்சித் தொகுப்பாளினி தேன் குரலில் சொல்ல,

முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஹரிபாஸ்கர் கோட்சூட்டில் எழுந்து மேடையை நோக்கி நடந்தான்.  மிகவும் ஏழ்மையான வீட்டுப் பையன் என்பதை அவன் உடல் மொழி அப்பட்டமாய் தெரிவிக்க, அவன் அணிந்திருந்த கோட்சூட் அவன் தோற்றத்திற்கு சிறிதும் ஒட்டாமல் தனித்திருந்தது. 

கூட்டத்தினர் சம்பிரதாயமாய்க் கை தட்டினர்.

அவனுக்கு வழங்கவிருக்கும் நினைவுப் பரிசினை ஒரு டிரேயில் வைத்து, அதை டாக்டரிடம் கொடுக்க, வடக்கத்தி ஸ்டைலில் மாராப்பை மாற்றிப் போட்டிருந்த அந்தப் பெண் டாக்டரை நெருங்கினாள்.

மேடையேறிய ஹரிபாஸ்கர் டாக்டருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு பரிசுக்காகக் காத்திருக்க,

மீடியாக்காரர்கள் மொத்தமாய் அனுமதிக்கப்பட்டு மேடையின் கீழே குழுமி நின்று தங்கள் வீடியோ மற்றும் ஸ்டில் காமிராக்களை ஆன் செய்து தயாராக நிற்க,

பார்வையாளர்கள் தங்கள் கை தட்டலை அதிகப்படுத்த,

பரிசு பெறும் ஹரிபாஸ்கர் குடும்பத்தினர் மேடையின் கீழே முதல் வரிசையில் அமர்ந்து, அந்தக் கண் கொள்ளாக் காட்சியினைக் காண ஆவலோடு பார்த்திருக்க,

அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.

தன்னருகே நின்றிருந்த ஹரிபாஸ்கரின் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டு, தனக்கு இடப்புறம் நின்றிருந்த அந்தப் பெண் பக்கம் திரும்பி, டிரேயிலிருந்த பரிசுக் கோப்பையை எடுக்க டாக்டர் கை நீட்டிய போது….

யாரும் எதிர்பாராத விதமாய் அந்தப் பெண், டிரேயின் அடியில் தான் மறைத்து வைத்துக் கொண்டு வந்திருந்த குறுங்கத்தியை வெளியிலெடுத்து டாக்டரின் இருதயப் பகுதியில் ஆழமாய் இறக்க முயன்றாள்.

அந்த விபரீதத்தைப் புரிந்து கொண்ட டாக்டர் சட்டென்று வலப்புறம் திரும்ப, அந்தக் குறுங்கத்தி இருதயப்பகுதியிலிருந்து இடம் மாறி அவரது இடது தோளில் இறங்கியது.

காலையிலிருந்து வகுப்பறையில் அடைபட்டுக் கிடக்கும் குழந்தைகள், பள்ளி மணியடித்ததும், பாய்ந்து வெளியேறுவதைப் போல், குருதி அவர் தோள் பட்டையிலிருந்து பீறிட்டது.




ஆனாலும் அந்தப் பெண் சற்றும் தளராமல் டாக்டர் மீது அடுத்த குத்துக்களை இறக்க எத்தனிக்க, பாய்ந்து வந்த காவலர்கள் அந்தப் பெண்ணை அமுக்கிப் பிடித்து, அவள் கையிலிருந்த கத்தியைப் பறிக்க, தொடர்ந்து விழ இருந்த குத்துக்களிலிருந்து தப்பினார் டாக்டர்.

காவலர் பிடியில் திமிறியவள், உருது பாஷையில் ஏதோ கோஷமிட, அவளை பலவந்தமாய்த் தள்ளிக் கொண்டு, மேடையிலிருந்து கீழே இறக்கி, அரங்கிற்கு வெளியே கொண்டு சென்று போலீஸ் வேனில் ஏற்றினர்.

விழா அமைப்பாளர்கள், பீறிடும் ரத்தத்திற்குத் தன் கையால் அணை போட்டுக் கொண்டிருந்த டாக்டர் கிருபாகரனைச் சூழ்ந்து கொண்டு, அவரை மேடையின் இன்னொரு மூலைக்குத் தள்ளிச் சென்றனர்.  

கமிஷனரும், ஸ்பெஷல் ஆபீஸர் வர்மாவும் பாய்ந்து வந்து மேடையேறி, டாக்டர் கிருபாகரனை பத்திரமாக அழைத்துச் சென்று காத்திருந்த காரினுள் நுழைக்க, 




அந்தக் கார் டாக்டர் கிருபாகரனையும், விழா ஏற்பாட்டாளர் ஒருவரையும், மேலும் இரண்டு துப்பாக்கி ஏந்திய செக்யூரிட்டிகளையும் சுமந்து கொண்டு மருத்துவமனை நோக்கிப் பறந்தது.

அதைத் தொடர்ந்து சென்ற போலீஸ் ஜீப்பில் கமிஷனரும், ஸ்பெஷல் ஆபீஸர் வர்மாவும் சென்றனர்.

மீடியாக்காரர்கள் தங்களுக்கு மிகவும் சீரியஸான செய்தி கிடைத்த மகிழ்ச்சியில் மேடையில் அந்தக் காட்சியை மிக அருகில் பார்த்த நபர்களைத் தேடித் தேடி பேட்டியெடுத்துத் தள்ளினர்.

ஹரிபாஸ்கரையும், அவர் குடும்பத்தாரையும் மீடியாக்காரர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு வேறொரு காரில் ஏற்றி அங்கிருந்து அகற்றினர் விழா ஏற்பாட்டாளர்கள்

****

காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் அனல் பறந்தது.

மேலிடத்திலிருந்து வந்திருந்த கடும் கண்டனங்களாலும், அதீத அழுத்தங்களாலும் கமிஷனர் டென்ஷனின் உச்சத்திலிருந்தார்.

“ஸ்பெஷல் ஆபீஸர்”ன்னு நீயெல்லாம் எதுக்குய்யா இருக்கே?… சும்மா கிழக்கேயும் மேற்கேயும் நடை பழகவா?” வர்மாவைத் தாளித்துக் கொண்டிருந்தார்.

வர்மாவோ பயங்கர மூட்அவுட்டில் அமைதி காத்து அமர்ந்திருந்தார்.

“மெட்டல் டிடெக்டர் வெச்சு… ஒவ்வொரு ஆளாய் செக் பண்ணித்தானே உள்ளே அனுப்பினீங்க?… அப்புறம் எப்படி அந்தக் கத்தி உள்ளே போச்சு?… அந்த லேடியைச் செக் பண்ணியிருந்தா கத்தி இருப்பதைக் காட்டிக் குடுத்திருக்குமே?… அப்படி மிஸ்ஸாச்சு?.. அவளை மெட்டல் டிடெக்டர்ல செக் பண்ணலையா?… அவ கண்ணடிச்சாளா?.. இல்லை… வேற ஏதாவது ரொமான்ஸ் சிக்னல் காட்டினாளா?” கமிஷனர் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் கத்தினார். 

“இல்லை சார்… அந்தப் பெண் விழாக்கமிட்டில இருக்கற பெண்!… அவங்க மேலே யாருக்குமே… எந்தவித சந்தேகமும் வரலை”

“நோ… நோ… இந்த ஜஸ்டிபிகேஷனை ஏத்துக்க முடியாது!… மேலிடத்தில் எனக்கு மெமோ ரெடியாயிட்டிருக்கு… இன்னும் கொஞ்ச நேரத்தில் மெயிலில் வந்திடும்!… ஆளுக்கொரு காப்பி தர்றேன்… வாங்கிட்டு… ரெண்டே நாள்ல உங்க பதிலைக் குடுங்க!… அதை அப்படியே சென்னைக்கு ஃபார்வேர்டு பண்ணிடறேன்!”

கமிஷனர் மொத்தக் குற்றத்தையும் மற்றவர்கள் மீதே திணிக்கப் பார்க்க, வர்மா பற்களை “நற…நற”வென்று கடித்தார்.

நாட்டில் எது நடந்தாலும் அதைத் தங்களுக்குச் சாதகமாய் மாற்றிக் கொள்ளும் சில மாண்புமிகுக்கள் கறை வேஷ்டி சகிதம் மீடியாக்கள் மூலம் காயம்பட்ட டாக்டருக்கு தங்கள் ஆறுதலைத் தெரிவித்து விட்டு, அதன் மூலம் அந்தப் பிரச்சினையை அரசியலாக்கி அதில் ஆதாயம் காண முயன்று கொண்டிருந்தனர்.

“மாநிலத்துல லா அண்ட் ஆர்டரே இல்லை!… என்ன ஆட்சி நடக்குதுன்னு தெரியலை!… பெரிய பெரிய வி.ஐ.பி.க்களுக்கே பாதுகாப்பு இல்லை என்கிற போது சாதாரணக் குடிமகன் நிலைமை என்ன?” எதிர்க்கட்சிக்காரர் அடுத்த தேர்தலுக்காக இப்போதிருந்தே பேச ஆரம்பித்தார்.




“ஆளும் மாநில அரசுக்கு தொடர்ந்து இடர்பாடுகளை ஏற்படுத்தி, ஒரு கறையை உருவாக்கி, அதைக் கொண்டு இந்த ஆட்சியைக் கலைக்கத் திட்டமிடும் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள்… எல்லா நிகழ்வுகளையும் அரசியலாக்க முயற்சி செய்யாதீர்கள்.. அது பிற்காலத்தில் உங்களையே பாதிக்கும்” இது ஆளும் கட்சிக்காரர்களின் சமாளிப்பு.

செய்தித்தாள் இன்னமும் ஒரு அடி மேலே போய், “அடுத்த குறி யாருக்கு?” என்று கேள்வி கேட்டு, மக்கள் மத்தியில் பீதியைப் பரப்பிக் கொண்டிருந்தன.




What’s your Reaction?
+1
6
+1
8
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!