Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-16

16

பூரணசந்திரனின் கறுத்த முகம் லேசாக சிவந்து, எதிர் கண்ணாடியில் தெரிய அதனை ஆசையாக பார்த்தாள் தாரணி. இவள் விழிகளை சந்திக்க மறுத்து பார்வையை லிப்டுக்குள் அலைய விட்டு ஒவ்வொரு தளத்திலும் ஏறி இறங்குபவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன பதிலையே காணோம்?” தனது தோளால அவன் தோளில் இடித்தாள்.

” ஏய் சும்மா இருடி” அடிக்குரலில் மென்மையாய் அதட்டினான்.

சில நேரங்களில் பெயர் சொல்லியும் கண்ணு, புள்ள என்றும் அவன் அழைக்கும் மற்ற முறைகளை விட இந்த டி ல் கணவன் உரிமை அதிக அளவு தெறிப்பதை உணர்ந்தவள், “முடியாது போடா” என்றாள் அவனைப் போன்றே மென்மையான குரலில்.

“டா சொல்ற?” அவள் கையோடு கைகோர்த்துக்கொண்டு அழுத்தினான். “சுற்றிலும் ஆட்கள் இருப்பதால் தப்பித்தாய்”

பூரணசந்திரன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, லிப்ட் உயரம் குறைந்து இறங்க இறங்க ஒவ்வொரு தளத்திலும் ஆட்கள் குறைந்து கொண்டே வந்தனர். பூரண சந்திரனின் கைப்பிடியின் அழுத்தம் அதிகரித்துக் கொண்டே போனது.

முதல் தளத்திற்கு லிப்ட் பயணித்தபோது அதில் அவர்கள் இருவரையும் தவிர வேறு யாரும் இல்லை. இறுக்கமாக ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி அவர்கள் நின்றிருக்க, லிப்ட் நின்று அதன் கதவு திறக்கும் இடைவெளியில், சட்டென்று அவன் பக்கம் திரும்பிய தாரணி, தன் இதழ்களை அவன் கன்னத்தில் அழுத்தமாக ஒற்றி எடுத்தாள். கதவு திறக்க வேகமாக வெளியே ஓடிவிட்டாள்.

காரில் இருவரும் திரும்பி வரும்போது ஒருவர் முகம் பார்க்க ஒருவர் தயங்கி ரோட்டை பார்த்தபடி வந்தனர்.மெல்ல தொண்டையை செருமிக்கொண்ட பூரணசந்திரன் “பாரு கண்ணு, உனக்கு படிப்பு முக்கியம். இந்த வருடம் முடியும் வரை நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக…” என இழுக்க தாரணிக்கு அடப்போடா என்றிருந்தது.

இதை சொல்வதற்குத்தான் அந்த செருமலும்,உறுமலுமா? சரிதான் ஜாக்கிரதையாகவே இருப்போம். தினமும் இப்படி ஒரு முத்தம் மட்டும் கொடுத்து கொள்ளட்டுமா, என்று கேட்கலாமா? குறும்புடன் எண்ணமிட்டவளின் முகத்தில் முறுவல் தாமரையாய் மலர்ந்திருந்தது.

தன்னையே பார்த்த மனைவியை உணர்ந்து அவள் பக்கம் 

பூரணசந்திரன் திரும்பிய ஒரு நொடியில் காருக்கு நடுவே யாரோ தடுமாறியபடி வந்து விழுந்தார்கள்.

 தாரணி “ஆ” என்று கத்த பிரேக்கை அழுத்தி மிதித்து காரை நிறுத்திவிட்டவன் வேகமாக கீழே இறங்கினான்.

அந்த ஆள் நன்றாக குடித்திருப்பான் போலும், முழுபோதையில் தரையில் கிடந்து புலம்பிக் கொண்டிருந்தான். கார் அவனுக்கு மிக அருகிலேயே நின்று விட்டிருந்ததால் காயம் எதுவும் இல்லை.

கீழே இறங்கி வந்த தாரணி அவனை பார்த்த நொடி அலறினாள் “அப்பா”




பூரணசந்திரன் டார்ச்சை முகத்தின் மீது செலுத்தி அடையாளம் தெரிந்து கொண்டு “அந்தப் பக்கம் பிடி தாரு. காருக்குள் உட்கார வைக்கலாம்” என்றான்.

இருவருமாக தசரதனை பற்றித் தூக்க, கண்விழித்துப் பார்த்தவர் இமைகளை தேய்த்துக்கொண்டு தாரணியை மீண்டும் உற்றுப் பார்த்து “மகளே! என் மகளே!” என புலம்பினார். “தப்பு பண்ணிட்டேன். உன்னை நான் விட்டிருக்க கூடாது” மீண்டும் மீண்டும் புலம்பியவரை கண்ணீர் வடிய தாங்கி காரில் ஏற்றினாள்.

பின் சீட்டில் உட்கார வைக்க முயன்ற போது திடீரென்று கீழே குனிந்து தாரணியின் கால்களை பற்றினார். “என்னை மன்னிச்சிடும்மா” தாரணி பதறி விலக, பூரணசந்திரன் முழு பலத்துடன் அவரை காருக்குள் தள்ளினான்.

“மாமா பேசாமல் தூங்குங்க, காலையில் பேசிக் கொள்ளலாம்”

விம்மியபடியே அருகில் அமர்ந்து வந்தவளின் தோளில் ஒரு கையை ஆறுதலாக போட்டுக்கொண்டு மெல்ல கார் ஓட்டினான்.

———

சாந்தா முகத்தில் மட்டும் சாந்தம் இல்லை .குணத்திலும் சாந்தமானவள். நான் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு பொறுமையாக இருப்பாள். இரண்டு வருடங்கள் யாரும் இது போல் வாழ முடியாது எனும்படி ஒரு அருமையான வாழ்க்கை வாழ்ந்தோம். ஒருவருக்கொருவர் என நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையில் இந்த சமுதாயத்திற்கு பயந்தே அந்த முடிவெடுத்தோம். இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னமும் குழந்தை இல்லாததால், கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் இருவரும் டிரீட்மென்ட் எடுத்துக்கொண்டோம்.ஆறு மாதத்தில் சாந்தா கர்ப்பமானாள். அவளை நன்றாகவே கவனித்தேன். ஆனாலும் பிரசவ நேரத்தில் பிள்ளையை பெற்று என் கையில் கொடுத்துவிட்டு அவள்…”

 என்றோ இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த சாவிற்கு நேற்றுதான் போல் குலுங்கி அழுதார் தசரதன். ஆண்பிள்ளை அழக்கூடாது என்பது போன்ற எண்ணங்கள் அவரிடம் இல்லை. “என் மனைவி என்னை விட்டு போன பிறகு இந்த உலகமே எனக்கு சூனியமாக தெரிந்தது.

கையில் இருந்த என் மகள் என் மனைவியை என்னிடமிருந்து  பிரிக்கவே வந்த பிறப்பாக தோன்றினாள். அவளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு வெறுப்பு வந்தது. அதனால் இவள் எனக்கு வேண்டாம் என்ற முடிவெடுத்து பிள்ளையை தூக்கிப் போய் கோவில் ஒன்றின் வாசலில் போட்டுவிட்டு வந்துவிட்டேன். தெரிந்தவர்கள் பார்த்து என் மாமியார் வீட்டில் சொல்ல அவர்கள் பதறி ஓடி வந்தனர்.




 எனக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று அவர்களிடம் நான் உறுதியாகச் சொல்ல, கனகலிங்கமும்,கற்பகமும் என்னை திட்டி குழந்தையை தாங்களே வளர்த்துக் கொள்வதாக சொல்லி எடுத்து போய்விட்டார்கள். அப்போதெல்லாம் ஒரு பாரம் விலகியதாகவே உணர்ந்த நான் என் மனம் போன போக்கில் சில காலம் சுற்றினேன். சாந்தாவை மறக்க அடிக்கடி குடித்தேன்.

 அந்த போதையில் அவளுடன் மீண்டும் வாழ ஆரம்பித்தேன். கொஞ்ச நாட்கள் கழித்து நான் இருக்கும் நிலைமைக்கு  பைத்தியமாகி விடுவோமோ என்ற பயம் வந்து நானாகவே கவுன்சிலிங் போய் என்னை நானே கொஞ்சம் சரிப்படுத்திக் கொண்டேன். அதன் பிறகு மகளின் நினைப்பு வர அவளை தேடி வந்தேன்.அங்கே தாரணி அவள் பெரியம்மா வீட்டினருடன் குடும்பமாக வாழ ஆரம்பித்திருந்தாள்.

 அந்த சுமூகமான சூழ்நிலையை விட்டு, எனது வறண்ட வாழ்விற்கு அவளை அழைத்துப் போக விரும்பாமல், அங்கேயே விட்டுவிட்டேன். அடிக்கடி அவளை போய் பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டேன். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்ற பொறுப்பு வர மீண்டும் வேலைக்கு போக ஆரம்பித்தேன். முழுக்க முழுக்க என் மனைவியின் நினைவுகளோடு தான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்”

 தசரதன் சுந்தராம்பாளிடம்  கூறிய விளக்கங்களை  பக்கத்து அறையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த தாரணியின் கண்கள் தானாகவே நீரை உதிர்த்தன.

“உங்கள பொறுத்த வரை நீங்க சரிதாண்ணாச்சி. ஆனாக்க அந்த குழந்தையோட நெலமய  நெனச்சி பாத்தீகளா? என்னயே எடுத்துக்கோங்க. என் புருசன் என்னய விட்டு போனப்போ  ஆறு வயசு இரண்டு வயசுமா ரண்டு புள்ளைங்க. என் மன உறுதியில்தான் நிமிந்து நின்று அவர்களை இவ்வளவு தூரம் வளர்த்திருக்கிறேன்.”

“எனக்கு வேறு பிரச்சனை தங்கச்சிம்மா. நான் என் மனைவியின் சாவுக்கு தாரணிதான் காரணம் என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருந்தேன்”

சுந்தராம்பாள் மெலிதாக சிரித்தாள்.

” என் புருசன் எப்படி செத்தாருன்னு தெரியுமா அண்ணாச்சி.அவர் சாவுக்கு காரணம்  உங்க மருமகன் பூரணச்சந்திரன்தான். என்ன பாக்குறீங்க? வேலை முடிச்சி ராப்போது வீட்டிக்கு வந்தவர்ட  அழுது அடம்பிடித்து இப்போதே சாக்லேட் வேணும்க புள்ளைக்காக வெளியே போனவருதான். விபத்தில் போயிட்டார். அந்த மகனை வெறுத்து ஒதுக்கவா செய்துட்டேன்?”

தசரதன் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.”உங்கள் அளவு எனக்கு மன திடம் கிடையாது தங்கச்சிம்மா. நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன். ரொம்ப வருடங்களாகவே மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கு. ஆனால் கனகலிங்கம் கற்பகத்திடம் போய் என் மகளை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்க தயக்கம். என் மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட போது… தாரை வார்த்து கொடுத்தல் போன்ற சடங்குகளின் பின் என் இழப்பை மிகப்பெரியதாக உணர்ந்தேன். இப்போது இன்னொரு வீட்டிற்கு வாழப் போய்விட்ட மகளுடன் இனி நான் எப்படி இருக்க முடியும்? நான் இழந்திருக்கும் வாழ்வின் அளவு இப்போதுதான் தெரிய மீண்டும் குடிக்க ஆரம்பித்தேன்”

” நல்ல நியாயம் அண்ணாச்சி உங்களுக்கு, மகளோட இருக்க ஆசப்பட்டா அவளை தேடி வராம குடிச்சிட்டு கண்டபடி ரோட்டில் கிடப்பீர்களா?” சுந்தராம்பாளின் கோபமான பேச்சு கேட்க அறைக்குள் அமர்ந்திருந்த தாரணி முகத்தை மூடிக்கொண்டு அழத் தொடங்கினாள். அவளுக்கு எதிரே அமர்ந்திருந்த பூரணசந்திரன் வேகமாக அவள் அருகே அமர்ந்து தோளில் சாய்த்து கொண்டான்




“அங்கே பெரியப்பாவும் பெரியம்மாவும் என்னை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டார்கள். ஆனாலும் அங்கே எனக்கு ஏதோ ஒரு குறை. திவ்யாவும் சர்வேஷும் உரிமையாக கேட்பது போல் ஒரு சிறு விஷயத்தை கூட என்னால் அங்கே கேட்க முடியாது. என் மன எண்ணங்களை சொல்ல முடியாது. எத்தனையோ முறை அப்பாவுடன் நாம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்திருக்கிறேன். அப்பாவும் அதே யோசனையில்தான் இருந்திருக்கிறார்.ஆனால் எங்களுக்கு சேர்ந்து இருக்க விதி இல்லாமல் போய்விட்டது”

” விடு கண்ணு எல்லாவற்றையும் சரி செய்து விடலாம்” அவள் தோள் வருடி சமாதானப்படுத்தினான்.

————

” காஞ்சிபுரத்தின் மெயின் பஜாரில் ஒரு நல்ல கடை வாடகைக்கு வருகிறது மாமா. ஹோட்டலின் இன்னொரு கிளையை அங்கே ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். காலேஜுக்கு அருகில் இருக்கும் ஹோட்டலை கவனிக்க ஆள் தேவை இருக்கிறது. நீங்கள் அதனை கவனிக்கிறீர்களா?” பூரணசந்திரன் கேட்க தசரதன் ஆச்சரியமாக பார்த்தார்.

” ஹோட்டல் தொழிலா? எனக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது மாப்பிள்ளை”

” ஒன்றும் தெரிய வேண்டியதில்லை மாமா. அததற்கு ஆட்களை போட்டு நன்றாக பழக்கி வைத்திருக்கிறேன்.  தினமும் ஒரு மணி நேரம் நானும் வந்து போவேன். சொல்கிற வேலையை ஆட்கள் செய்கிறார்களா என்று மேற்பார்வை பார்ப்பது மட்டும்தான் உங்கள் வேலை”

“இதோ இப்படி உங்கள் மகள் கையால் இங்கே சாப்பிட்டு தினமும் ஹோட்டலுக்கு போய் கவனித்து விட்டு வாருங்கள்”

தசரதனின் பார்வை சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்த மகளின் மேல் பாசத்துடன் படிந்தது. எத்தனையோ வருடங்கள் கழித்து அவர் மகளுடன் மீண்டும் வசிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு. “கண்டிப்பாக செய்கிறேன் மாப்பிள்ளை” உடனே சம்மதம் கொடுத்துவிட்டார்.

தாரணி மனநிறைவுடன் கணவனை பார்த்தாள்.பெரியவர்களின் பாசமும்,கணவனின் காதலுமாக ஓர் பிரகாசமான வாழ்வு அவள் முன் விரிந்தது. கணவனுடன் தாம்பத்தியத்தில் இணையும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.

தன் அருகிலேயே வர யோசிக்கும் கணவனை இன்று எப்படி சீண்டலாமென்ற இனிய கற்பனையோடு வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தவளின் போனிற்கு கற்பகம் அழைத்தாள்.

 உடனே வீட்டிற்கு கிளம்பி வருமாறு பேசினாள். என்னவோ ஏதோ என்று பதறியபடி தாரணி பெரியம்மா வீட்டிற்கு போய் நிற்க,அங்கே திவ்யா அழுதபடி உட்கார்ந்திருந்தாள்.

” என் வாழ்க்கையே போச்சு” மூக்குறுஞ்சியபடி கத்திக் கொண்டிருந்தாள்.




What’s your Reaction?
+1
39
+1
23
+1
2
+1
1
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!