Serial Stories ஜில்லுன்னு ஒரு நெருப்பு

ஜில்லுன்னு ஒரு நெருப்பு-2

 2

1944.

இந்திய சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது.  இந்தியர்களைக் கலந்தாலோசிக்காமல் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவைக் காலனிய அரசு ஈடுபடுத்திய காரணத்தால் இந்தியா முழுவதும் பதவியிலிருந்த காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின.  இதன் பின்னர் சென்னை மாகாணம், சென்னை ஆளுனரால் நேரடியாக நிர்வாகம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. 

இரவு 11.45.

சென்னையின் புறநகர்ப் பகுதியிலிருந்த “கிளைவ் அனாதைகள் காப்பகம்” இருளில் மூழ்கியிருந்தது.

சுப்புரத்தினம் தன் பக்கத்தில் படுத்திருந்த சிறுமியை உசுப்பினாள்.  அது தூக்கத்தில் சிணுங்கியபடி புரண்டு படுத்ததேயொழிய கண் விழிக்கவில்லை.  அதைப் பார்க்கப் பார்க்க பரிதாபமாயிருந்தது சுப்புவுக்கு.  “ஹும்… இந்த ஒன்பது வயசுல இது பெரிய மனுஷி ஆகலைன்னு யாரு அழுதாங்க?” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள்.

“கிருபை… எலேய் கிருபை” பலமாக உசுப்பியும் பலனில்லாததால் காதைப் பிடித்துத் திருகினாள் சுப்பு.

“திடுக்”கென்று விழித்து, “ப்பே……”என்று அலறினாள் கிருபை என்னும் அச்சிறுமி.

அரண்டு போன சுப்பு, “அடியேய்… அடியேய்… அலறாதடி… யாராவது கண்ணு முழிச்சுக்கப் போறாங்கடி” என்று சன்னக் குரலில் சொல்லியவாறே அவள் வாயைப் பொத்தினாள்.

“ஹூம்… ஹூம்… ஹூம்” திமிறினாள் கிருபை.

தன் கண்களைப் பெரிதாக்கியவாறே அவள் வாயிலிருந்து கையை எடுத்தாள் சுப்பு. 

அந்தக் கண்களைப் பார்த்த மாத்திரத்தில் அமைதியானாள் கிருபை.

“இங்க பாரு… நான் சொல்றதைத் தெளிவாய்க் கேட்டுக்கோ…. நான் உன் கூடவே வந்து அந்த மதில் சுவற்று மேலே உன்னை ஏத்தி விடறேன்!… நீ சட்டுன்னு அந்தப் பக்கமா குதிச்சு ஓடிப் போயிடு… என்ன புரிஞ்சுதா?” என்றாள் சுப்பு கிசுகிசுப்பாய்.

“ம்ஹும்… எனக்கு பயமாயிருக்கு… நான் போக மாட்டேன்!… நான் இங்கியே உன் கூடவே இருந்துக்கறேன்” பலமாய் மறுத்தாள் சிறுமி.

“அடிக் கேடு கெட்டவளே!… நீ இத்தனை நாளு சின்னப் பொண்ணு!… நீ பெரிய மனுஷியான விஷயம் இன்னும் அந்தப் பாவிகளுக்குத் தெரியாது!… தெரிஞ்சிருந்தா நேத்திக்கே உன்னைக் குளிப்பாட்டி… ஒரு வெள்ளைக்கார துரை கூட அனுப்பியிருப்பானுக!… ஹும்… இதுக்குப் பேருதான் அனாதைகள் காப்பகம்… ஆனா இங்க நடக்கறது அத்தனையும் அநியாயம்!… அக்கிரமம்” பற்களைக் கடித்துக் கொண்டு சொன்னாள் சுப்பு.

“என்னக்கா சொல்றே?…எனக்கு ஒண்ணுமே புரியலை!..” என்று அந்தச் சிறுமி சொல்ல,

அனாதைகளின் காப்பகம் என்று சொல்லிக் கொண்டு, வெள்ளைக்காரத் துரைகளுக்கு சின்ன வயசுப் பொண்ணுகளை அனுப்பிக் கொண்டிருக்கும் அந்தக் காப்பகத்தில் சின்ன வயதிலேயே வந்து சிக்கிக் கொண்டு. வயதுக்கு வந்தபின் பல துரைமார்களின் படுக்கையில் சின்னாபின்னமாகி மீண்டு வந்த சுப்புரத்தினம் தலையிலடித்துக் கொண்டாள். “என்ன சொல்லி இவளுக்கு நான் புரிய வைப்பேன்.. ஆண்டவரே”

“ஏய்… எனக்கு விவரம் சொல்லி என்னைக் காப்பாத்த அன்னிக்கு யாருமே இல்லாததினால்தான் நான் இன்னிக்கு வரைக்கும் இங்கே சீரழிஞ்சிட்டிருக்கேன்!.. பாவம் நீ யாரு பெத்த பிள்ளையோ?… நான் பட்ட கஷ்டங்களையும்… சீரழிகளையும் நீயும் படக் கூடாதுன்னுதான் உன்னைய தப்பிச்சுப் போகச் சொல்றேன்… புரிஞ்சுக்கடி என் செல்லமே” கண்களில் நீர் வழியச் சொன்னாள் சுப்பு.

“அக்கா எனக்கு விவரம் தெரிஞ்சதிலிருந்து இதுவரைக்கும் யாருமே என் கிட்ட அன்பா பேசினதில்லை… நீ ஒருத்திதான் அக்கா என் மேல் உண்மையான அன்பும் பாசமும் வெச்சிருக்கே!… அதனாலதான்க்கா… நான் இந்த இடத்தை விட்டுப் போக மாட்டேன்!னு அடம்பிடிக்கறேன்!…” அவளும் அழுதபடியே சொன்னாள்.

“ஏய்… இந்த அக்கா… உனக்கு எப்பவுமே நல்லதைத்தான் செய்வாள்!ன்னு உனக்கு என் மேலே நம்பிக்கை இருக்குதல்ல?”




“நிறைய இருக்குக்கா”

“அப்படின்னா… நான் சொல்றபடி கேளு… முதல்ல இங்கிருந்து தப்பிச்சுப் போ!” கட்டளையிடுவது போல் சுப்புரத்தினம் சொல்ல,

“சரிக்கா… நீ சொல்ற மாதிரியே ஓடிடறேன்… நீ அழாதக்கா” சுப்புவின் கன்னத்தில் வழிந்த கண்ணீரை அந்தச் சிறுமி அன்பொழுகத் துடைத்து விட, நெகிழ்ந்து போன சுப்பு அவளை அப்படியே தூக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.

காவல்காரர்கள் யாருமே அங்கு இல்லை என்பது தெரிந்ததும் இருட்டில் பதுங்கிப் பதுங்கி மதில் சுவற்றை நோக்கி பூனை போல் நடந்து சென்றாள்.

வானில் அரை நிலா அழுது வடிந்து கொண்டிருந்தது.  ஏதோவொரு மரத்திலிருந்து ஒரு ஆந்தை எதற்கோ அலறியது.

“அக்கா என்னைத் தூக்கிட்டு நடக்க உனக்குக் கஷ்டமாயிருந்தா … என்னைய இறக்கி விட்டுடுக்கா நான் நடந்தே வர்றேன்” என்றாள் கிருபை.

“ப்ச்… கொஞ்ச நேரம் வாய் பேசாம வர்றியா?… நானே யாராவது எந்திரிச்சிடுவாங்களோ… பார்த்திடுவாங்களோ?ன்னு பயந்து கிடக்கறேன்… இவ வேற சும்மா தொண தொணக்கறா”முணுமுணுப்பாய்த் திட்டினாள் சுப்பு.

பெரிய மதில் சுவற்றை நெருங்கியதும் சுவர்க்கோழிகளின் ரீங்காரம் காது ஜவ்வையே கிழித்து விடும் போல் ஒலிக்க, “என்னக்கா… இவ்வளவு சத்தமாயிருக்கு” அப்பாவியாய்க் கேட்டாள் கிருபை.

“ஸ்ஸ்ஸ்” என்று ஓசையெழுப்பி அவளை அடக்கிய சுப்பு, சுவற்றின் அருகில் கிடந்த அந்தப் பெரிய கல்லின் மேல் சிறுமியைச் சுமந்தபடியே மிகவும் சிரமப்பட்டு ஏறி நின்றாள்.

மூச்சு வாங்கியது.

சில விநாடி ஆசுவாசத்திற்குப் பிறகு, கிருபையை அப்படியே தூக்கி தன் தோளில் அமர வைத்தாள்.  “ஏய்… உனக்கு சுவரோட மேல் பகுதி கைக்கு எட்டுதா?” கேட்டாள்.

“ம்… எட்டுதே”

“அப்ப அப்படியே சுவற்று மேலே ஏறி உட்காரு” 

“இருக்கா… உடனே ஏற முடியாது… கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் ஏற முடியும்”

அவள் ஏறுவதற்குள் சுப்புவை மார்பில் உதைத்து, மூஞ்சியில் உதைத்து, மூக்கைப் பெயர்த்து, தலையை ஆட்டி, ஒரு வழியாய் ஏறி, மதில் மேல் பூனை போல் அமர்ந்து கொண்டு, சுற்றும்முற்றும் வேடிக்கை பார்த்தாள் கிருபை.

“ஏய்… என்ன அங்க உட்கார்ந்து வேடிக்கை பார்த்திட்டிருக்கே?…. அப்படியே அந்தப்பக்கமா குதிச்சு… உடனே எந்திரிச்சு… எவ்வளவு வேகமா ஓட முடியுமோ அவ்வளவு வேகமா ஓடிடு” பரபரத்தாள் சுப்பு.

“அக்கா… இந்தப்பக்கம் ரொம்ப ஆழமா இருக்குக்கா”

“ப்ச்… அதையெல்லாம் பார்க்காதே குதிச்சு ஓடு” அவசரப்படுத்தினாள் சுப்பு.

அப்போது பெயர் தெரியாத ஒரு பறவையொன்று “பட…பட”வென இறக்கையடித்துக் கொண்டு வந்து சுவற்றின் மீது அமர,  “அய்யோ… பயமா இருக்குக்கா… கழுகு வந்து உட்கார்ந்திடுச்சுக்கா!… என்னைக் கொத்தினாலும் கொத்திடும்க்கா… என்னைக் கீழே இறக்கி விடுக்கா… நான் உன் கூடவே வந்திடறேன்க்கா…” பயத்தில் கத்தினாள்.

கீழே குனிந்து ஒரு சிறிய கல்லை எடுத்து அந்தப் பறவை நோக்கி எறிந்தாள் சுப்பு.  அது “பட…பட”வென்று தன் பெரிய இறக்கையை அடித்துக் கொண்டு பறந்து போனது.  “ஏய்… அது போயிடுச்சு… தைரியமாக் குதி”

இதற்கு மேலும் குதிக்காமல் இருந்தா அக்காவே தன்னைத் தள்ளி விடுவாள் என்பதைப் புரிந்து கொண்ட கிருபை, கண்களை மூடிக் கொண்டு “தொப்”பென்று குதித்தாள்.

“அப்பாடா… எப்படியோ ஒரு சின்னப் பொண்ணைக் காப்பாத்திட்டோம்!… “ என்கிற திருப்தியோடு தன் இருப்பிடத்திற்குத் திரும்பினாள் சுப்பு.  அதிகாரம் படைத்த பல வெள்ளை அதிகாரிகளின் வெறிக்கு இரையாகி… இரையாகி… இற்றுப் போன அவள் உடம்பும் மனமும்,  தான் பட்ட வேதனைகளை அன்றலர்ந்த மலரான அந்தக் கிருபையும் அனுபவிக்கக் கூடாது என்று எண்ணியதில் ஆச்சரியமெதுவுமில்லையே.

அதே நேரம், முட்புதருக்குள் விழுந்து எழுந்த கிருபைக்கு இரண்டு கால்களிலும் ஏகப்பட்ட ரத்தக் கீறல்கள்.  எரிச்சல் தாங்க முடியாமல் கைகளால் தேய்த்தபடியே மெல்ல எழுந்து, நிதானமாய் நடந்து, சற்றுத் தொலைவில் தெரிந்த மண் பாதையைத் தொட்டாள்.

மையிருட்டு அந்த சூழ்நிலையையே திகிலாக்கிக் காட்ட, ஊதக் காற்று அந்த திகிலின் வீரியத்தை மேலும் கூட்டிக் கொண்டிருந்தது.

மண் பாதையில் தன் ஓட்டத்தைத் துவங்கிய கிருபை எந்த திசையில் ஓடுகிறோம், எந்த இலக்கை நோக்கி ஓடுகிறோம் என்பது தெரியாமல் கால் போன போக்கில் ஓடினாள்.

மிகச் சமீபத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு, அப்படியே நின்றாள்.

அந்தக் குரைப்புச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் அமிழ்ந்து தூரத்திற்குப் போய் விட, மீண்டும் ஓட்டத்தைத் தொடர்ந்தாள்.  

அவளுக்கு இன்னமும் புரியவேயில்லை.  “ஏன் இந்த சுப்பக்கா என்னை அங்கிருந்து துரத்தி விட்டாங்க?… காப்பகத்துல சோறெல்லாம் நல்லாத்தானே போடறாங்க?… துணிமணி கூட நல்லாத்தான் குடுக்கறாங்க!… அப்பப்ப பாடமும் சொல்லிக் குடுக்கறாங்க!… என்ன?… ஓய்வே குடுக்காம வேலை வாங்கறாங்க!… அதான் கொஞ்சம் கஷ்டம்”

மண் ரோடு முடிந்து தார் ரோடு வந்ததும் நின்று இரண்டு பக்கமும் பார்த்தாள்.  

தூரத்தில் வெள்ளையர்களின் கூண்டு போட்ட ராணுவ வேன் இருளில் நின்று கொண்டிருக்க, பார்வையைக் கூராக்கிக் கொண்டு ஆட்கள் யாராவது அதில் இருக்கிறார்களா? என்று பார்த்தாள்.  யாருமே கண்களுக்குத் தென்படவில்லை.  “வேனை நிறுத்திட்டு எங்காவது தூங்கப் போயிருப்பானுக” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, மெதுவாய் ஊர்ந்து, அந்த வேனின் முன் பக்கம் சென்று மேலே ஏறி கேபினுக்குள் எட்டிப் பார்த்தாள்

இரண்டு சிப்பாய்கள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்படியே மெல்லக் கீழிறங்கி, பின் புறமாய் நகர்ந்து, டயர் மேல் ஏறி, வேனின் பின்பகுதியில் காலியாயிருந்த இடத்தில் குதித்தாள்.  மெல்ல மூலைக்குச் சென்று, அங்கிருந்த ஒரு துணி மூட்டை மேல் படுத்துக் கொண்டாள்.

கால்களிலிருந்த ரத்தக் கீறல்களின் எரிச்சல் அவளை உறங்க விடாமல் தடுத்த போது, நெடுந்தூரம் ஓடி வந்த களைப்பு அவளை உறக்கத்தில் தள்ளியது.

அந்த உறக்கத்தின் முடிவில் ஏற்படப் போகும் பேரிழப்பை உணராத அந்தச் சிறுமி கனவில் சுப்புவுடன் உப்பு மூட்டை தூக்கி விளையாடிக் கொண்டிருந்தாள். 




What’s your Reaction?
+1
7
+1
11
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!