Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-10

10

“என்னங்க மோதிரம் இது? ரெண்டு விரல் வைத்து  அழுத்தினாலே உடைஞ்சிடும் போலவே!” கற்பகம் திவ்யாவின் நிச்சயதார்த்த மோதிரத்தை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இதெல்லாம் சின்ன விஷயம்,இதை பெரிதாக எடுத்துக் கொள்வாயா?” கனகலிங்கம் அதட்ட “அம்மா இப்போலாம் இதுதான் ஃபேஷன். உங்களை மாதிரி பட்டையா மோதிரம் போட்டுக் கொள்ளச் சொல்கிறீர்களா?” திவ்யா இரண்டு இதயங்கள் ஒன்றுக்குள் ஒன்று பின்னிக்கொண்டிருந்த தனது நிச்சய மோதிரத்தை பெருமையாய் பார்த்துக் கொண்டாள்.

பட்டையான மோதிரம் என்றபோது அவள் பார்வை தாரணி பக்கம் கேலியாக பாய்ந்து மீண்டது. ஏனெனில் தாரணியின் நிச்சயமோதிரம் சற்று தடிமனாகத் தான் இருந்தது. ஆனால் அதிலிருந்த ஒற்றை பருக்கை வெண்கல் வைரம் என்று எல்லோரும் பேசிக் கொண்டனர்.

“எங்கே வாங்கிய கடனோ?” என்று அந்த வைரத்தையும் கிண்டல் பேசினாள் திவ்யா.ஹோட்டலுக்காக பேங்க் லோன் வாங்கியிருப்பதாக பூரணசந்திரன் சொன்னதிலிருந்து எல்லாவற்றிற்குமே கடன்தான் என்பது போல் பேசுகிறாள்.  தொடர்ந்து காட்டான் பட்டிக்காடு போன்ற வார்த்தைகளும் தகுந்த இடத்தில் சொருகப்பட்டன.

 இதோ நான்கே மாதங்களுக்கு முன்பு ஒரு ரோட்டோர குட்டி ஹோட்டல் தொழிலை லோன் வாங்கி தொடங்கியிருப்பவனுக்கு நிச்சயதார்த்தத்திற்கு வைரம் என்பது கொஞ்சம் அதிகப்படி தானே என்றே தாரணிக்கும் தோன்றியது.

 அவளது நிச்சயதார்த்தத்தில் ஆச்சி அம்மத்தா, அப்பத்தா, வளத்தையா, மதினி போன்ற அவர்கள் கேள்விப்பட்டே இராத உறவு முறைகளுடன் “பொண்ணு ரொம்ப அழகு” என்று மேலே வந்து அப்பிய கூட்டம் தாரணிக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.

 இவர்களையெல்லாம் சமாளித்து எப்படி வாழ போகிறேன்? தாரணி பெருமூச்சு விட, “என்ன விஷயம்?” கேட்டபடி அவள் அருகில் நின்றிருந்தான் பூரணசந்திரன்.

திடுமென அருகாமையில் அவனை எதிர்பார்க்காமல் விழித்தாள். கல்யாண மாப்பிள்ளையாதலால் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் இருந்தவனின் கருநிறம் இன்னமும் அதிக தூக்கலாக வெளித் தெரிந்தது.நெற்றியில் சந்தனமும் குங்குமமும்.

அன்று தாரணியின் பாட்டியின் கேள்விக்கு பெயரை சொன்னவனை நிமிர்ந்து பார்த்த அவர் சிரித்து விட்டார். “என்ன பாட்டி சிரிக்கிறீங்க? கரேர்னு இருக்கிறவனுக்கு பெயர் பூரணசந்திரனா என்றா? நான் பிறந்த உடனே அம்மாவுக்கு பிரசவம் பார்த்த தாதி கறேர்னு அப்படியே உன் வீட்டுக்காரரை உரித்து வைத்து குறுங்கட்டில நிறைய படுத்து கிடக்கிறான் உன் மகன், என்று சொன்னார்களாம். கண் திறந்து பார்த்த அம்மாவிற்கு நான் சந்திரனாக மின்னுவது போல் தெரிந்த்தாம். அந்த நொடியே எனக்கு இந்த பெயரை வைத்து விட்டார்களாம் “

தனக்கு பெயர் வைத்த கதையை சிறு நகைப்போடு பகிர்ந்து கொண்டான்.” நீ நல்லா இருக்கணும் ராசா” பாட்டி அவன் கன்னம் வழித்து திருஷ்டி கழிக்க, தாரணி சிரமப்பட்டு ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு நகர்ந்துவிட்டாள்.

அதே பாட்டிதான் இன்று பூரண சந்திரன் தங்கமான மாப்பிள்ளை என்று மண்டபத்திற்குள் எல்லோரிடமும் பரப்பிக் கொண்டு திரிகிறார்.




“எதற்கு இந்த பெருமூச்சு? எதுவும் வேண்டுமா?” பூரணசந்திரன் மீண்டும் கேட்க நூறு பேர் சுற்றி நிற்க மேடையில் நின்று கொண்டு இது என்ன கேள்வி வேண்டுமா? வேண்டாமா? என்று எரிச்சல் வர, தாரணி பட்டென்று சொன்னாள்.

” எனக்கு படிக்கணும். கல்யாணத்தை ஒரு வருடத்திற்கு தள்ளி வையுங்கள்”

 மிக லேசாக அவனது புருவம் மட்டுமே சுருங்கியது. மெல்ல தலையசைத்து விட்டு மேடையை விட்டு இறங்கி போய்விட்டான். பெரிய இவன் என்ன குறை என்று கேட்டு தீர்க்க வந்துட்டான்… எங்கே கேட்டதை செய்யட்டுமே! எள்ளலாக நினைத்தாள்.

———

“தாரு நானும் அஸ்வினும் இன்றைக்கு சினிமாவுக்கு போகிறோம்” திவ்யா சொல்ல தாரிணி திகைத்தாள்.”திவ்யா எப்படி ?அம்மாவிடம் கேட்டாயா?”

“ஆமாம் என்னை அனுப்பி வைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் பார், நம்ம காலேஜ் மரம் வழியாகத்தான் போகப் போகிறேன். அஸ்வின் எனக்காக சென்னையிலிருந்து வந்து வெளியே காத்துக் கொண்டிருப்பார். அவரோட சேர்ந்து போய் சினிமா பார்த்துவிட்டு திரும்பவும் அதே வழியில் உள்ளே வந்து விடுவேன்” திவ்யாவின் திட்டத்தை வெறுமையாய் கேட்டாள்.

” இதையெல்லாம் எதற்கு என்னிடம் சொல்கிறாய்?” 

 இரு கண்களையும் சிமிட்டிய திவ்யா “சும்மா” என்று விட்டு போனாள்.

இளம் பருவத்திற்கே உரிய பொறுப்பற்ற சேட்டைகள்தான் இவைகள்.இதனை எல்லோரும் கடந்துதான் வர வேண்டும். ஆனால் திவ்யாவின் இந்த செயல்களெல்லாம் தன்னை பாதிக்கும், ஏங்க வைக்கும் என்று அவள் நினைப்பதுதான் தாரணிக்கு சிரிப்பாக இருந்தது.

 என்னவோ பண்ணிக்கொள். இதுபோல் ஏக்கங்களோ, எதிர்பார்ப்போ எனக்கு இல்லை தலையை திருப்பிக் கொண்ட தாரணியின் பார்வை அவளை விட்டு மிகவும் தள்ளி அடுத்த வரிசையில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த புவனாவை தொட்டது.

இப்போதெல்லாம் புவனா தாரணி பக்கம் திரும்புவது கூட கிடையாது. இவளுக்கு என் நிலைமையை எப்படி புரிய வைப்பது? நெற்றிபொட்டை அழுத்தி விட்டுக் கொண்டாள்.காலையிலிருநரது லேசாக இருந்த தலைவலி இப்போது  அதிகமாக  துவங்கியது

 எழுந்து பாடம் எடுத்துக் கொண்டிருந்த லெக்சரரிடம் சொல்லிவிட்டு முறையாக ஆபீஸ் ரூம் போய் அவுட்பாஸ் வாங்கிகொண்டு கல்லூரியை விட்டு வெளியே வந்தாள். ஹோட்டல் பக்கம் தலையைக் கூட திருப்பாது ஆட்டோ ஒன்றை அழைத்து உள்ளே அமர்ந்து கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். வீட்டின் வாசல் படியில் கால் வைக்கும் போது வீட்டிற்குள் இருந்து சுந்தராம்பாளின் ஆவேசமான குரல் கேட்டது.

“அது எப்படிங்க நிச்சயம் முடிந்த பிறகு,வருடக் கணக்கில் கல்யாணத்தை தள்ளி போட முடியும்?” தாரணியின் கால்கள் வாசலில் திக்கித்தது.

“நாங்கள் எதுவும் சொல்லவில்லையே சம்மந்திம்மா.” கனகலிங்கத்தின் குரல் மெலிதாய் கேட்க, “அம்மா அவளுடைய படிப்பு இருக்கிறது. அதற்காகத்தான் சொல்கிறேன்” என்று பூரணசந்திரனின் குரல் கேட்டது.

 காதில் விழுந்த பேச்சுக்களை நம்ப முடியாமல் தாரணி ஓரமாக ஒதுங்கி நின்றாள்.

“தாரணியின் படிப்பை நிறுத்தாமல் தொடர வைப்பேன் என்று சொன்னதால்தானே இந்த திருமண விஷயத்தை தொடர்ந்து பேசினோம் தம்பி” கனகலிங்கம் சொல்ல,

 “ஆமாம் மாமா அப்போதும் இப்போதும் அவள் படிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்கு. ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால் திடீரென்று திருமணம் குடும்ப வாழ்வு, உறவுகள் என்று அவளது படிப்பு பாதிக்கப்படுமோ என்று நினைத்தேன். நடந்த நிச்சயம் நிச்சயமாகவே இருக்கட்டும். திருமணத்தை மட்டும் ஒரு வருடம் தள்ளி வைத்துக் கொள்ளலாம்”

“அதெல்லாம் நான் சம்மதிக்க மாட்டேன்.குறித்த தேதியில் கல்யாணம் நடக்கலைன்னா நிச்சயத்தை முறிச்சுட்டு வேறு பொண்ணப் பாத்து போய் கொண்டே இருப்போம் “

” அம்மா.நீங்க பேசாமல் இருங்க.பேச்சை மாற்றுவது நான்தான்.அவரில்லை”

“இருக்கட்டும் சாமி.இது மாதிரி கல்யாண விசயத்துல பெரியவுங்களுக்குன்னு ஒரு பொறுப்பு இருக்குதுல்ல.சின்னஞ் சிறுசுக ஏதோ ஆர்வக் கோளாறுல பேசினாலும் அவுங்க தலையில் தட்டி உட்கார வைக்க வேணாமா?எதிலும் ஒரு சொல்லில் நிக்கனும்”

கனகலிங்கம் அமைதியாக இருப்பதிலிருந்தே அவர் செய்வதறியாமல் அமர்ந்திருப்பது புரிந்தது. இந்த விஷயத்தை பேசுவதற்கு இவன் எதற்கு அம்மா பின்னால் ஒளிந்து கொண்டு வருகிறான்? தைரியமாக தனியாக பெண்பார்க்க வந்தவன்தானே? இப்போது மட்டும் அம்மாவின் முந்தானை தேவைப்படுகிறதாக்கும்?

 இப்படி தோன்றிய மறுநிமிடமே கதவை தள்ளித் திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் தாரணி. திடீரென்று அவளை எதிர்பார்க்காத அனைவருமே விழித்தனர். “தலைவலி பெரியப்பா! அதனால்தான் லீவ் சொல்லிவிட்டு வந்து விட்டேன். படித்துக்கொண்டே திருமணம் செய்வதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை” 

கனகலிங்கத்தை பார்த்தபடி பேசினாலும், கடைசி ஒரு வினாடி பூர்ணசந்திரன் பக்கம் விழிகளை திருப்பி விட்டு உள்ளே போய்விட்டாள்.




அன்று இரவு தாரணியின் போன்  கரியன் என்ற பெயரோடு அழைத்து மின்னியது.அஸ்வினுடன் பேசிக் கொண்டிருந்த திவ்யா இவளது போன் ஒலிக்கு புருவங்கள் முடிச்சிட திரும்பிப் பார்த்தாள். யார் என சைகையில் கேட்டாள்.

அவர், என்று உதடசைத்து சைகை காட்டிய தாரணி போனை ஆன் செய்து காதில் வைத்தபடி அறைக்கு வெளியே போனாள். விருப்பமற்று இதனை பார்த்திருந்தாள் திவ்யா.




What’s your Reaction?
+1
36
+1
28
+1
6
+1
2
+1
1
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!